கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 1, 2026
பார்வையிட்டோர்: 1,310 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆறுமுகம் இரவீந்திரன் 03-03-1963இல் பிறந்தவர். திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் ஒரு கலைப் பட்டதாரி. யாஃ கனகரத்தின மத்திய மகா வித்தியாலய ஆசிரியர். சிறுகதை, சங்கீதம் நாடகப் பிரதி போன்றவற்றில் ஈடுபாடுள்ளவர். சஞ்சீவி, தினகரன், நான் ஆகியவற்றில் எழுதியுள்ளார். எள்ளல் நகைகள் இவர் கதை முழுவதும் விரவி நிற்கும்.


சைக்கிளை மெதுவாய் நிறுத்திவிட்டு ‘என்ன ஒரு சத்தத்தையும் காணேல்லை’என்று தனக்குள்ளேயே எண்ணியவாறு வீட்டினுள் நுழைந்தார் தீனதயாளன். 

” சினிமாத் தியேட்டர் மாதிரி வீடெல்லாம் ஒரே கும்மிருட்டாகிக் கிடக்குது. வீட்டுக்கு விளக்குக் கொளுத்தாமல் கதவுகளையும் திறந்து விட்டிட்டு இவள் எங்கை போட்டாள்?” என்று தனக்குத்தானே வினா எழுப்பியவாறு “கனகம், எங்கையப்பா நிக்கிறாய்? என்று கத்தினார் தனது வழக்கமான பலத்த தொனியில். 

“நான் இஞ்சை நிக்கிறன்…இப்ப ஏனப்பா ஊரைக் கூட்டிற மாதிரிக் கத்திறீங்கள்? என்றவாறு வீட்டின் பின் புறமாயிருந்து மெதுவாய் வந்து கொண்டிருந்தாள் கனகம். 

“என்ன, கத்திறனோ? வீடு முழுக்க ஒரே மையிருட்டா யிருக்கிது. ஒரு விளக்குக் கொளுத்த நேரமில்லாமல் நீ அங்கை என்ன வெட்டிப் பிடுங்கிக் கொண்டு நிண்டனி?” என்றார் தீனதயாளன் மிகவும் காட்டமாக. 

“இப்ப ஏனப்பா வந்ததும் வராததுமாய் சத்தம் போடுறீங்கள்? இண்டைக்கு கரண்டு வாற நாளெல்லே? அதுதான் விளக்குக் கொளுத்தாமல் பார்த்துக் கொண்டிருக்கிறன்” என்றாள் கனகம். 

“அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்டது மாதிரி இந்த அநியாயப்பட்ட கரண்டை நம்பி விளக்குக் கொளுத்தாமல் இருக்கி றியே விசர்ப்பிறவி” என்று நிறுத்தினார் தீனதயாளன். 

”மண்ணெண்ணையையும் சிலவழிச்சு அதோடை லயிற் பில்லும் கட்டிறதெண்டால் இஞ்சையென்ன கொட்டிக் கிடக்குதே? நீங்கள் இப்ப விளக்கைக் கொளுத்து அடுப்பைக் கொளுத்து எண்டு துள்ளிக் குதிப்பீங்கள். பிறகு நான்தான் ஊதாரித்தனமாய்க் காசெல்லாத்தையும் சிலவழிக்கிறன் எண்டும் குற்றம் சொல்லுவீங்கள். நானெதுக்குத் தப்பிறது.” என்று பெரிதாய் ஒரு வினாக்குறியுடன் கனகம் நிறுத்தவும் அதுவரை சலனமேதுமின்றித் தொங்கிக் கொண்டிருந்த மின்குமிழ்களெல்லாம் சடுதியாய்ப் பளிச்சென்று சிரிக்கவும் சரியாயிருந்தது. 

“அந்தா வந்திட்டுது” என்றவாறு நிமிர்ந்தாள் கனகம். தீனதயாளனும் ஏதோ அதுவரை காணாத ஒரு காட்சியைப் பார்ப்பது போல ஒரு கணம் சற்றும் முற்றும் பார்த்தார். 

“எனக்கு குசினுக்குள்ளை எக்கச்செக்கமான வேலை கிடக்குது. புட்டவிக்க வேணும்.தோசைக்கு உழுந்தரைக்க வேணும். என்றவாறு அடுக்களையை நோக்கி நடந்தாள் கனகம். 

தீனதயாளனும் அவளின் பின்னால் சென்று கிணற்றடிப் பக்கமாக இருந்த வெளிலயிற்றைப் போட்டுவிட்டு அந்தப் பக்கமாக இருந்த கதவைத் திறந்துகொண்டு மெதுவாய் வெளியே வந்தார். அப்போது தான் எங்கோ இருந்து விரைந்து வந்த அவரது இரண்டாவது மகன் மனோகரன் அவரையும் விலத்திக் கொண்டு உள்ளே சென்று “அம்மா இண்டைக்கு அன்னலிங்கம் அண்ணை வீட்டை முத்து போடுகினமாம். இஞ்சை நானும் போய்ப் பாத்திட்டு வரட்டேயணை?’ என்றான் கெஞ்சலாக. 

தீனதயாளன் அப்படியே நின்று அவனைச் சுட்டெரிப்பது போலப் பார்த்தார். 

“ஓமோம் அவை முத்தைப் போடட்டும். நீ போய் முழங்காலிலை நிண்டு பொறுக்கு. அடுத்த மாதம் சோதினை வருகுது. அதுக்கு ஏதாவது படிப்பமே எண்டு யோசிக்காமல் முத்தும் ரத்தினமும் எண்டுகொண்டு நிக்கிறியே? மூதேசி உன்னைப் பெத்தநேரம் ஒரு எருத்துமாட்டை வாங்கி வளத்திருக்கலாம்.” என்று பொரிந்து தள்ளினார் தீனதயாளன். 

“ஆசையருமாய் ஒரு ஆம்பிளைப்பிள்ளையைப் பெத்து வைச்சுக்கொண்டு பேசிற பேச்சைப்பார்? ஒரு நாளைக்கு அவன் படம் பார்த்தால் என்ன குடியே முழுகிப்போம்? அவனின்ரை வயதுப் பெடியளெல்லாம் வீட்டிலையிருந்து சொந்த ரீ.வீ.யிலை படம் பாக்குதுகள். என்ரை பிள்ளைதான் இரவல் ரீ.வி.யிலை ஒரு படம் பாக்கிறதுக்கும் இப்பிடிக் கெஞ்சவேண்டியிருக்கிறது” என்று ஒருவித ஆதங்கத்தோடு நிறுத்தினாள் கனகம். 

“சரி சரி இந்த வீட்டிலை நான் சொல்லி என்ன நடக்கிறது? எக்கேடாவது கெட்டுப் போங்கோ ” என்றவாறு வெடுக்கென்று திரும்பிக் கிணற்றடியை நோக்கி நடந்தார். தீனதயாளன் கால்முகம் கழுவிவிட்டு சாவகாசமாய் வந்து தன் வழமையான சாய்வு நாற்காலியிலே வசதியாய் சாய்ந்து கொண்டார். இந்த நேரத்தில்தான் அவர் அன்றைய பத்திரிகையை எழுத்தெண்ணிப் படிப்பது வழக்கம். பத்திரிகையை எடுத்துப் பிரித்துச் சற்றே தொலைவில் பிடித்தவாறே அவர் தன் வாசிப்பை ஆரம்பித்தார். 

“இந்த லயிற்று வெளிச்சத்திலையே ஒழுங்காய் வாசிக்க முடியேல்லை. கெதியிலை ஒரு கண்ணாடி எடுக்க வேணும். என்று தனக்குள்ளே முடிவொன்றை மேற்கொண்டுவிட்டு மீண்டும் தன் பார்வையைப் பத்திரிகைமீது பதித்தார். அதுவரை ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சிக் கொண்டிருந்த மின்குமுழ்களெல்லாம் சட்டென எங்கோ மறைந்து போயின. 

“சீ ஒரு கொஞ்சம் படிக்கிறதுக்கிடையில லயிற் போட்டுது. என்று அலுத்துக் கொண்டாள். தீனதயாளனின் மூத்தமகள் சுமதி. 

கனகம் குசினியிலிருந்த வாறே சுமதி நெருப்பெட்டி யெடுத்தனியே? என்று கத்தினாள். கத்தினாள். சுமதி தன் அறையிலிருந்தவாறே நானேனம்மா நெருப்பெட்டியெடுக்கிறன். நீங்கள் தானே அப்போதை குப்பை கொளுத்த எடுத்தனீங்கள் உந்தத் தட்டிலைதான் வைச்சி ருப்பியள். பாருங்கோ என்று பலமாய்க் குரல் கொடுத்தாள். 

“இஞ்சை என்னத்தைப் பார்க்கிறது. ஒரே இருட்டாய்க் கிடக்கிறது. உந்த டோச்சையொருக்கா எடுத்துக் கொண்டுவா கெதியாய் என்று மீண்டுமகத்தனாள் கனகம்.” 

“பொறுங்கோ அம்மா அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறன் என்று மீண்டும் குரல் கொடுத்தாள் சுமதி.” 

“ஒரு விளக்கையும் நெருப்பெட்டியையும் ஆயித்தமாய் வைச்சிருக்கத் தெரியாமல் உந்த விழல்கரண்டை நம்பி வெள்ளி பார்த்துக் கொண்டிருந்துவிட்டு இப்ப நிண்டு குதியங்குத்துதுகள்”: விசர்ப்பிறவியள். என்று தன் மனைவியையும் மகளையும் நெஞ்சார வைதவாறே தன் சாய்மனைக் கதிரையில் அசையாமல் அமர்ந்திருந்தார் தீதயாளன். தன் புகைத்தல் தேவைக்காக எப்போதும் இடுப்பில் சொருகி வைத்திருக்கின்ற நெருப்புப் பெட்டியின் நினைவு சடுதியாய் அவருக்கு வந்தது. கூடவே அந்த நெருப்புப் பெட்டியை எடுத்துக் கொண்டு கனகத்தின் முன் ஓர் ஆபத்பாந்தகனாய்ப் போய் நிற்கவேண்டும். என்ற ஒருவித நப்பாசையும் தலைதூக்கியது. தன் இடுப்பில் சொருகியிருந்த நெருப்புப் பெட்டியை எடுத்துக் கொண்டு மெதுவாய் இருக்கையை விட்டு எழுந்தார். தன் இரு கைகளையும் பின்புறமாய் மடித்து ஒரு தடவை நெடிதாய் சோம்பல் முறித்துக் கொண்டபோது அவரின் கை பின்புறமாயிருந்த சுவர்மீது படவே கையிலிருந்த நெருப்புப் பெட்டி சடக் கெனக் கீழே விழுந்தது. 

“அட சனியன் விழுந்து போச்சிது” என்றவாறு அதை எடுப்பதற்காகச் சடுதியாய்க் குனிந்தார். தீனதயாளன். அவ்வளவுதான். கதிரைச் சட்டமொன்று அவரின் மூக்கை ‘நச்’ சென்று பதம்பார்த்தது. “ஆத்தே யாத்தே யாத்தே யாத்தே” என்றவாறு தன் மூக்கைப் பொத்தியபடி வலியால் முனகினார்.பொய்மூக்கு உடைந்திருக்குமோ என்ற சந்தேகம் கூட அவருக்கு ஏற்பட்டது. மூக்கைப் பிடித்தவாறே தட்டுத் தடுமாறி ஒரு விதமாய் மீண்டும் தன் பழைய சாய்மனைக் கதிரையிலே அமர்ந்து கொண்டார். அவர் கதிரையில் அமரவும் குசினியிலிருந்து கலீர் என்ற பேரொலி கிளம்பவும் சரியாயிருந்தது. 

“எடியே சுமதி அங்கை நிண்டு என்னடி செய்யிறாய். ஐயோ கடவுளே இந்தக் கண்கடை தெரியாத இருட்டுக்குள்ளை நானொருத்தி தனிய நிண்டு தடுதாளிப்பட்டுக்கொண்டு நிக்கிறனே யெண்டு ஆருக்காவது இரக்கம் வந்திதே? எல்லாருக்கும் தங்கடை தங்கடை வேலையள் தான் முக்கியம். நான் போனதற்குப் பிறகு தான் என்ரை அருமை எல்லாருக்கும் விளங்கும்.” நீட்டி முழக்கிக் கொண்டி ருந்தாள் கனகம். 

“அம்மா ரோச் இஞ்சையிருக்குது. கத்தாதேங்கோ. என்றவாறு ரோச்சுடன் குசினியை நோக்கி விரைந்தாள். சுமதி. ”இதென்னம்மா……” என்றுதன் வாயை அகலவிரித்து ஏதோ சொல்ல முற்பட்ட சுமதியை “சத்தம் போடாமல் அங்காலைபோ.” என்று அதட்டினாள் கனகம்.”

“அம்மா இஞ்சை பாருங்கோ நெருப்பெட்டி தண்ணி வாளிக் குள்ள நீந்திது.” என்றவாறு குசினியை விட்டு வெளியே வந்த சுமதி. ”ஐயா உங்கடை நெருப்பெட்டி எங்கை.” என்று கேட்டுக் கொண்டே தீனதயாளன் இருந்த இடத்தை நோக்கி வந்தாள். தீனதயாளன் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள் “அம்மா இஞ்சை பாத்தீங்களே ஐயா கதிரைக்குக் கீழை நெருப்பெட்டியை ஒளிச்சு வைச்சிட்டு ஹாயாய் இருக்கிறார் என்றவாறு கலகல என்று சிரித்தாள் சுமதி. 

“காயும் பழமும், எனக்கிப்ப வாற விசருக்கு எழும்பின னெண்டால்” என்றவர் தன் பேச்சை அப்படியே நிறுத்திக் கொண்டு தன் முகத்தை அப்பால் திருப்பி மூக்கை மெதுவாய்த் தடவிக் கொண்டார்.” 

சற்று நேரத்திற்கெல்லாம் நிலைமை ஒருவிதமாய் சீரடைந்தது. “வாங்கோ சாப்பிட என்று தன் வழக்கமான தொனியில் அழைத்தாள் கனகம். அந்த அழைப்புக்காகவே காத்திருந்தவர் போல சடக்கென எழுந்து சாப்பாட்டறையை நோக்கி நடந்தார்.தீனதயாளன். அங்கே பரப்பிப் போட்டிருந்த சாக்குகள் அவர் கண்ணில் படவே இதென்னப்பா எல்லா இடமும் நிலபாவாடை விரிச்சிருக்கிறீர்? என்றார். 

கனகம் சற்று அருகே வந்து “கோவிக்காதேங்கோ அப்பா இருட்டுக்குள்ளை நெருப்பெட்டி தேடேக்கை மேலை கிடந்த நல்லெண்ணைப் போத்தல் தட்டுப்பட்டு மேசை லாம்புக்கு மேலை விழுந்து சிமிலியும் போத்தலும் உருண்டு வந்து கீழை கிடந்த ஆட்டுக்கல்லிலை விழுந்துபோச்சுது ஆனால் நல்லகாலம் விளக்குத் தப்பீட்டுது.” என்று நிறுத்தினாள் கனகம். 

“அப்ப எண்ணெய்ப் போத்தலும் சிமிலியும் சரியே? நாசமாய்ப்போக ஆறுமாதக் கரண்டுக் காசு அரை நிமிசத்தில சரி. உந்த லயிற்றை நம்பிக்கொண்டு இருக்கவேண்டாம். ஒரு விளக்கைக் கொளுத்தி வையுங்கோ எண்டு எத்தினை தரம் கத்தினான். ஆருக் காவது கேட்டுதே.? இந்த வீட்டிலை என்ரை சொல்லை ஆர் கேக்கினம்.” என்று நிறுத்தியவர் “அப்பனே கதிர்காமக்கந்தா இண்டைக்கு வெள்ளிக்கிழமையும் நாளுமாய் நல்லெண்ணைப் போத்தலை நாசமறுத்திருக்கிறாள். இந்த வீட்டிலை என்ன வெள்ளியடி விழப்போகிறதோ? நீதானப்பா துணை’ என்றவாறு வெளியே எட்டிப் பார்த்தார். 

மனோகரன் பரபரப்பாய் வந்து கொண்டிருந்தான். “அம்மா இண்டைக்கு எங்கட லயினுக்கு இனிக்கரண்டு வராதாம்.” என்ற மனோகரனை “ஏன் தம்பி” என்றவாறு நிமிர்ந்து பார்த்தாள் கனகம்”. “ஜெனறேற்றரிலை ஏதோ மிஸ்ரேக்கெண்டு கதைக்கினம். அதுதான் போட்ட கொப்பியை டெக்கிலையிருந்து என்னெண்டு கழட்டிறதெண்டு அன்னலிங்கமண்ணை தலையை உடைச்சுக் கொண்டிருக்கிறார்” என்ற மனோகரனை இடைமறித்த தீனதயாளன் “நல்லாய் உடைக்கட்டும். அவன்ரை தேங்காய்த்தலை உடைஞ்சால் தான் ஊருக்கு நிம்மதி.” என்று ஏளனமாய்ச் சிரித்தார். 

மனோகரன் தொடர்ந்தான். “உந்த முச்சந்தி தவலோகன் வீட்டுப்பக்கம் கரண்டிருக்குதாம். அவைக்கு குளத்தடி ஜெனறேற்றர் தானே சப்ளை. அதுதான் அன்னலிங்கமண்ணை டெக்கை அங்கை கொண்டுபோய்ப் போட்டுக் கழட்டப்போறாராம். என்னையும் வரச்சொல்லிக் கேக்கிறார். போகட்டே?” என்று நிறுத்தினான் மனோகரன். 

“எடே அவன் போட்டுக் கழட்டட்டும். கழட்டிப் போடட்டும். உனக்கென்ன வந்தது. பேசாமல் வந்து வயித்துக்குப் போடவேண்டி யதைப் போட்டிட்டுப் போய்ச் சரிஞ்சு நித்திரையைக் கொள். இஞ்சையெல்லாம் ஒரே சகுனப் பிழையாயிருக்கிது. கண்டபடி ரா இருட்டிலை றோட்டிலை திரியாதை” என்றார் தீனதயாளன். 

“என்னப்பா நீங்கள் அண்டை அயல் சனம் ஒரு உதவியெண்டு கேக்கேக்கை செய்யாமல் விட்டால் நாளைக்கு அதுகள் எங்களைப்பற்றி என்ன நினைக்குங்கள்? நீ கவனமாய்ப் போட்டுவா ராசா” என்றாள் கனகம். தீனதயாளன் விருட்டென் கழுத்தைத்திருப்பிக் கொண்டு சாப்பாட்டு மேசையை நோக்கி நடந்தார். 

மேசையிலே கோப்பைக்குள் கிடந்த பிட்டுக் கட்டியைப் பார்த்தபோது அவருக்கு வயிற்றில் என்னவோ செய்தது. வழமையாக இரவு நேரங்களில் சோறு சாப்பிடுவது தான் அவரின் வழக்கம். அப்படியிருக்க இன்று மட்டும் ஏன் பிட்டு? வினாக்குறியோடு “கனகம்” என்றார். 

“இஞ்சை உண்ணாணைக் கோவிக்காதைங்கோ’ கரண்டு போன பதகளிப்பில நான் உந்தக் கதவு திறந்திருந்ததைக் கவனிக் கேல்லை. அன்னம்மாக்கா வீட்டு நாய் வந்து சோத்துச் சட்டீக்கை வாய் வைச்சிட்டுதப்பா. அதுதான் தூக்கிக் கொட்டிப்போட்டன்.” என்று கனகம் கூறி முடிப்பதற்குள் தான் அமர்ந்திருந்த வாங்கைத் தடார் என்று பின்புறமாகத் தள்ளியவாறு எழுந்தார் தீனதயாளன். 

“இந்தா இதையும் கொண்டுபோய் அந்த நாய்க்கே வை. இந்த நாய் இண்டைக்குப் பட்டினி கிடக்கட்டும்” என்று கத்தியவாறு பதிலுக்குக் காத்திராமல் விரைவாய் நடந்து தன் படுக்கையறையை அடைந்தார். 

இனியும் அவருடன் கதைத்தால் என்ன ஆகும் என்று கனகத்துக்கு நன்கு தெரியும். அதனால் அவள் மௌனமாய் இருந்தாள். 

நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. தீனதயாளனுக்குத் தூக்கம் வரவில்லை.பசி வயிற்றைக் கிள்ளியது. மெதுவாய் எழுந்து வந்து செம்பிலே இருந்த நீரையெடுத்து மடக்கு மடக்கென்று குடித்துவிட்டுத் திரும்பினார். ஏதோ அற்புதம் நிகழ்ந்தது போல வீடு ஒளிவெள்ளத்தில் மிதந்தது. செத்த பாம்பாய்ச் சுவரில் கிடந்த ரியூப்லைற் கூட உயிர்பெற்றுப் பிரகாசித்தது. “இதென்னடா இது பிசாசு மாதிரி நேரங்கெட்ட நேரத்தில வந்து நிண்டு கூத்தாடுது. இனி என்னத்துக்கு உந்தச்சனியனை” என்றவாறு விரைவாய்ப் போய் எல்லா மின்குமிழ் களையும் அணைத்துவிட்டு “அப்பனே கதிர்காமக்கந்தா” என்றவாறு மீண்டும் தன் படுக்கையில் தொப் என்று விழுந்தார்.

– இங்கிருந்து… பன்னிரண்டு சிறுகதைகள், முதற் பதிப்பு: 2001, நண்பர்கள் வெளியீடுபதிப்பகம், நல்லூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *