மாடிப்படி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 2, 2025
பார்வையிட்டோர்: 129 
 
 

1980 ஆம் ஆண்டு . மழைக் கால நாள் ஒன்று. ஞாயிற்றுக் கிழமை. கதிரவன் வராமல் பகலில் இருள் சூழ்ந்திருந்தது. காலை பத்து மணி . விழுப்புரம் வ.உ.சி. தெருவில் இருந்த ஒரு மாளிகையின் வாசற்கதவுக்கு முன்னால் இருந்த திண்ணையில் , வளவனூரிலிருந்து வந்திருந்த இளம்பெண் பொன்னியும் அவளுடைய பெரிய மாமா கிருஷ்ணசாமியும் அமர்ந்து இருந்தார்கள். அழகான இளம்பெண் பொன்னி , கிளிப்பச்சை நிற ரவிக்கை , பாவாடை தாவணி அணிந்து இளங்கிளியாகவே காட்சி அளித்தாள். கனமான உடல்வாகு , மழித்த முகம் கொண்ட அவளுடைய மாமா வெள்ளை நிற வேட்டி சட்டை அணிந்து இருந்தார். சற்று நேரத்தில் நீல நிற சபாரி உடை அணிந்த முகத்தில் பெரிய மீசை உடைய வாட்ட சட்டமான உருவம் கொண்ட நடுத்தர வயது நபர் பைக்கில் மாளிகைக்குள் நுழைந்தார். பைக்கை மேற்கூரை உள்ள பகுதியில் நிறுத்தி விட்டு இவர்கள் அருகில் வந்தார் அவர். கிருஷ்ணசாமியும் பொன்னியும் எழுந்து நின்றனர். . அவர் , பொன்னியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார். பொன்னியின் மேல் அவரது பார்வையைக் கலைக்க , கிருஷ்ணசாமி ‘ ஐயா ‘ என்றார்.

அவர் ‘வாங்க யார் நீங்க ? ‘ என்றார்.

கிருஷ்ணசாமி , ‘ முத்து ஐயா ‘ …

‘நான்தான் ‘ என்றார் அவர்.

‘வளவனூர்லேந்து வரோம் … அந்த ஊர் பெரிய புள்ளி வாசு ஐயா ஒங்கள பார்க்க சொல்லி இருக்காருங்க ‘

‘அப்படியா வாங்க மாடில என் ஆபீஸ் ரூம் ல போய் பேசலாம் .. நீங்க வரும் போது எங்க ஆளுங்க யாரும் இல்லையா ? ‘

‘இல்லீங்க ஐயா ‘

‘பக்கத்துல எங்கேயாவது போயிருப்பாங்க ‘ என்று கூறியபடியே முத்து , மாடிப்படிகளில் ஏறினார். கிருஷ்ணசாமி , பொன்னியை அங்கேயே இருக்கச் சொல்லி சைகை காட்டி விட்டு முத்துவைப் பின்தொடர்ந்தார்.

முத்து , தமது அலுவலக அறையில் தம்முடைய இருக்கையில் அமர்ந்தார். முத்து ‘ உட்காருங்க’ என்று சொன்ன பின் , கிருஷ்ணசாமி அவருக்கு எதிராக இருந்த சிறிய நாற்காலியில் அமர்ந்தார்.

‘ சொல்லுங்க .. என்ன வேணும் ? ‘

‘நான் கேசவ பூபதியோட மகன் கிருஷ்ணசாமி … ‘

‘ஒங்க அப்பா பத்தி கேள்விப்பட்டிருக்கேன் … அந்தப் பொண்ணு யாரு ‘

‘அது என் தங்கை மரகதத்தோட பொண்ணு பொன்னி ‘

முத்து , பொன்னி பொன்னி என்று இரண்டு முறை அவளது பெயரை உச்சரித்தார்.

‘ என் தம்பி நவநீதத்தோட மகன் சிவாவோட பெயரை விழுப்புரம் காலேஜ்ல நடந்த கலவரத்துக்காக கைது பண்ண வேண்டியவங்க பட்டியல்ல சேர்த்து இருக்காங்க .. ‘

‘மிகப் பெரிய கலவரமாச்சே … பாண்டி ரோட்ல ஒரு பஸ் , கார் போக முடியலையே தமிழ்நாடு பூரா செய்தி ஆயிடுச்சே ஆனா இது வரைக்கும் யாரையும் அரெஸ்ட் பண்ணல .. அடுத்த வாரம் அசெம்ப்ளி கூடுது எதிர்க்கட்சி கேட்பாங்க .. அதுக்குள்ள அரெஸ்ட் பண்ணிடுவாங்க … ஒங்க தம்பி பையன் முழு பெயரை சொல்லுங்க .. ‘

‘சிவக்குமார் பூபதி … ‘

‘அவரு ஸ்டூடன்டா ? ‘

‘இல்லீங்க ஐயா , முன்னாள் மாணவரு அங்கதான் படிச்சாரு .. அவரு , அவரோட நண்பரோட பிரின்ட்டிங் ப்ரெஸ் சார்பாக கல்லூரி மலர் விஷயமா பேராசிரயர் ரவி

பிரகாஷ பார்த்துட்டு வா ன்னு அவர் நண்பர் அனுப்பி இருக்காரு.. ஏன்னா அந்த நண்பருக்கு உடம்பு சுகமில்லே இவரோட நேரம் அப்ப கலவரம் வெடிச்சிடுச்சு .. சிவாவோட பேர முன்னாள் மாணவர்ன்னு , சேர்த்து இருக்காங்கன்னு சொல்றாங்கா நீங்க மனசு வைச்சா எடுத்துடுவீங்கன்னு வாசு ஐயா ஒங்கள பார்க்க அனுப்பி வெச்சிருக்காங்க …ஐயா தயவு வைக்கணும் ‘

‘அப்படியா … அந்த பொண்ணு … ஒங்க தம்பி பிள்ளைக்கு முறைப் பொண்ணு அப்படித்தானே … ரெண்டு பேருக்கும் மனசு ஒத்துப் போயிருக்குமே … ‘

‘ஆமாங்க ஐயா ‘

‘ஒங்க பிள்ளை எங்கே இப்ப ‘

முத்து எழுந்து நடந்தபடியே பேசினார். கிருஷ்ணசாமி அவரைப் பின்தொடர்ந்தார். இருவரும் மாடிப்படி அருகில் நின்றனர்.

‘அது வந்து மெட்ராஸ்ல எங்க பங்காளி வீட்ல இருக்காருங்க ‘

‘நான் என்ன சொல்றேன் … மழை விடற மாதிரி தெரியல… நீங்க திரும்பி போக கஷ்டப்படணும் இன்னிக்கு ராத்திரி இங்க தங்குங்க … உங்களுக்கு உணவு , வசதி எல்லாம் கிடைக்கும்…. ஒங்க பிள்ளையை லிஸ்ட்லேந்து எடுத்துவிட்டு விடுவேன் .. அதுக்கு …. ஒங்க தங்கச்சி பொண்ணு … ‘

முத்து தடதடவென படிகளில் உருண்டு ஓடினார். ஓடிய அவர் தரையில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார். நிதானமாக படிகளில் இறங்கிய கிருஷ்ணசாமி அவர் அருகில் வந்து நின்றார்.

வாட்டசாட்டமான தலைப்பாகை ,வேட்டி வெள்ளை சட்டை அணிந்த மீசைக்காரர்கள் , முத்து விழுந்த சத்தத்தைக் கேட்டு ஓடி வந்தனர்.

‘எஜமான் எஜமான் ‘ .. முத்துவின் முகத்தில் தண்ணீர் தெளித்துப் பார்த்தனர். ஒரு ஆள் அவரை அப்படியே தூக்கிக் கொண்டு போய் முதல் அறையில் இருந்த கட்டிலில் கிடத்தி விட்டு வந்தான்.

‘டேய் .. நான் மூணாவது வீட்ல இருக்கிற டாக்டரை அழைச்சுகிட்டு வரேன் … இவனை விட்டுடாதே டா .. ‘ என்று அவன் வாசலை நோக்கி விரைந்தான்.

மற்றொரு ஆள் கிருஷ்ணசாமியிடம் ‘ யோவ் யாருய்யா நீ ஐயா எப்படி விழுந்தாரு ‘ கேட்டான்.

‘இறங்கும் போது படில கால் மாத்தி வெச்சு இடறி விழுந்துட்டாருங்க ‘

‘ஐயோ .. இந்த நேரம் பார்த்து எனக்கு வயித்தை கலக்குது …யோவ் இங்கேயே இரு ஓடிடாதே உன் மேல சந்தேகமா இருக்கு .. ‘ என்று சொன்ன அவன் மாளிகையின் பின் பக்கத்தை நோக்கி ஓடினான்.

கிருஷ்ணசாமி எந்த வித சலனமும் இல்லாமல் ‘ வாம்மா பொன்னி ‘ என்று கூறினார். இருவரும் மாளிகையை விட்டு வெளியே வந்து பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தனர். மழை தூறிக் கொண்டிருந்தது. அந்த தெருவைத் தாண்டி வெகு தூரம் வந்த பின்னர் , பொன்னி பேசினாள்.

‘ என்ன பெரிய மாமா .. அவர் ஏன் படிலேந்து விழுந்துட்டாரு .. நீ பாட்டுக்கு வந்துட்டே … ‘

‘ அது ஒண்ணும் இல்ல விடு .. சிவா உள்ளே போகட்டும் விடு நாம நல்ல வக்கீலா வெச்சு வெளியே கொண்டு வருவோம் .. ‘

‘உள்ளே போக வேணாம்ங்கறதுக்காக தானே இவரைப் பார்க்க வந்தோம்.. என்ன ஆச்சுன்னு சொல்லுன்னா … ‘

‘எல்லாம் உன்னால தான் … கூட வராதேன்னு சொன்னேன் நீ கேட்கல ஒங்க அப்பா அம்மாவுக்கு தெரியாம நானும் உன் கூட வருவேன்னு அடம் பிடிச்சு என் கூட வந்தே … ‘

‘அதுக்கு என்ன ?’

‘அவன் உன் சிவா பேரை நீக்கணும்னா … வேணாம் விடு .. ‘

‘சொல்லு நான் சின்ன மாமா , சிவா , அப்பா அம்மா யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் .. ‘

‘இன்னிக்கு ராத்திரி நீ அவனோட …. அந்த வார்த்தைய சொன்னதால தான் … ‘

பொன்னி புரிந்து கொண்டாள். அவள் தன்னுடைய பெரிய மாமாவின் கைகளை அன்புடன் பற்றிக் கொண்டாள். வளவனூர் செல்லும் பேருந்து வந்து நின்றது. மழையில் நனைந்தபடியே இருவரும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர்.

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *