கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி திராவிடநாடு
கதைப்பதிவு: December 3, 2025
பார்வையிட்டோர்: 2,040 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“என்ன போங்க சார்! எந்த வேலை செய்தாலும் செய்யலாம்; வீடு கட்டுகிற வேலையிலே மட்டும் தெரிந்தவர்கள் இறங்கக்கூடாது. பத்துக் கலியாணம்கூடச் செய்து விடலாம். சிரமம் இல்லை; ஒரு வீடுகட்டி முடிப்பதென்றால், உயிர் போய் உயிர் வருகிறது. ஒரு சாமான் கிடைக்க வேண்டுமானால், என்ன பாடுபடவேண்டி இருக்கு. எவ்வளவு அலைச்சல் எங்கெங்கே திரிவது! எவனெவனைக் கெஞ்சுவது! ஒன்றுக்கு மூன்றாகக் கொடுத்துவிட்டு, அவன் செய்கிற ஒய்யாரத்தைச் சகித்துக் கொண்டு. “ஒன்பதாம் தேதி வாங்க பார்க்கலாம்! உங்க வேளை சரியில்லைப் போலிருக்கு போன இடத்திலே கிடைக்கலை. இன்னொருவரிடம் கேட்டு இருக்கிறேன். பார்ப்போம் நாளை பகல் பனிரண்டு மணிக்கு வாங்க.” என்று மரக்கடை, இரும்புக்கடை, ஒவ்வொரு சாமான் விற்பவனும் சொல்கிறபடி எல்லாம் ஆடி, போதும் போதும்னு ஆகிவிட்டது சார், எனக்கு இந்தச் சள்ளை எப்போது முடியும்னு இருந்தது. முடிந்த பிறகுதான், நிம்மதியாக மூச்சுவிட முடியுது. ஆச்சி! நாளை காலை இருந்து ஆரம்பமாகி விடும், அந்தக் கடை இந்தக் கடை பாக்கிக்கு ஆள்வர ஆரம்பிக்கும், போதாக்குறைக்கு, இது என்ன வலைக்கு வாங்கினது? இது என்ன தேக்கா, செம்மரமா, கள்ளியா, மாமரமான்னு, ஒவ்வொரு சரத்துக்கும் ஒவ்வொரு கேள்வி கேட்க வருகிறவர்கள் வேறு உண்டு. முனிசிபாலிடிக்காரன் வேறே மோப்பம் கொண்டே இருப்பான். மகா தொல்லை சார். மகா தொந்தரவு. என்னமோ, வெளியே இருக்கிறவர் மகாதேவ முதலிக்கு என்ன, மாடிவீடு கட்டி விட்டான் என்று சொல்வார்கள், எனக்கல்லவா தெரியும் இதிலே இருக்கிற கஷ்டமெல்லாம்.”

அந்தப் புதிய மாடிவீடு கட்டுவதற்கா மகாதேவ முதலியார் உண்மையிலேயே, அதிகமாகத்தான் கஷ்டப்பட்டார். ஆகையால் கட்டி முடித்த பிறகு அவருக்கு அலுப்பு இருக்கத்தான் செய்யும். ஆனால், கட்டுவதற்காக அவர் பட்ட சிரமத்தைவிட ஆயிரமடங்கு அதிகச் சிரமம் கட்ட வேண்டுமென்ற ஆசை அவர் மனதைக் குடைந்து இரவிலே துக்கமே வராதபடி செய்தபோது. உள்ளூரச் சந்தோஷந்தான். வீடும் அழகாக அமைந்து விட்டது. அதிக இனிப்பு கூடாது என்று, அத்துடன் கொஞ்சம் புளிப்பும் சேர்த்துப் பண்டம் செய்வார்களே, அதுபோல, அந்தச் சந்தோஷத்தை அப்பட்டமாக அனுபவிப்பதைவிட, கொஞ்சம் சஞ்சலத்தையும் கூட்டிக் கலந்து சாப்பிட்டார்.

எந்த வேலை செய்தாலும் செய்யலாம். இந்த வீடு கட்டுகிற வேலையிலே மட்டும் தெரிந்தவர்கள் இறங்கக்கூடாது சார்! என்று கூறினாரே! அது, வீட்டுக்கு அவர் குடி புகுந்ததை விழாவாக்கி, வேண்டியவர்கட்கு விருந்தளித்துவிட்டு, அவர்கள், வீடு இலட் சணமாக அமைந்திருக்கிறது என்பதைப் பாராட்டிப் பேசினதைக் காதாரக் கேட்டுக் களித்தான். பிறகு கூறின கருத்து. முதலிலே, பெருமையாகத்தான் இருந்தார். சாஜர்தானே! மாடிவீடு கட்ட வேண்டுமானால், மரக்கடை, இரும்புக் கடைக்காரர்களிட மெல்லாம் நடையாக நடந்தாக வேண்டும் என்பது, தெரியாமலா, அந்த வேலையிலே இறங்கினார்? அதெல்லாம் இல்லை. அவருக்கு அதிலே உள்ள கஷ்டமத்தனையும் தெரியும் சிலர் எடுத்துக் காட்டினபோது, ‘அதைப் பார்த்தா முடியுமா? சிரமம் இருக்கத்தான் செய்யும் அதையே எண்ணிக் கொண்டு, வீட்டை இப்படியே விட்டுவிட்டா, ஆறு மாதத்திலே குட்டிச் சுவராயிடுமே’ என்று வாதாடியுமிருக்கிறார். புதியமாடி வீடு கட்டி முடித்து, களித்தான பிறகே. கவலையைக் கூறலானார்” தனக்கு நெருங்கிய நண்பரொருவரிடம் மேலே குறிப்பிட்டுள்ளபடி பேசினார் மாடி மாகதேவர்!


மாடி வீட்டிலே இருக்கறதாலேயே மண்டைக்கர்வம் வரணுமா என்ன! என்ன மகா மாடி வீடு கட்டிவிட்டான் ஊரிலே உலகிலே இல்லாதமாதிரி, மாட மாளிகை கூடகோபுரம் கட்டி மகாராஜனா வாழ்ந்தவனெல்லாம்கூட, காலம் வந்தா, கட் டத் துணிகூட இல்லாமல், கஞ்சிக்கு அலையறான். இவனென்னமோ ‘மூணடுக்கு’ கட்டி விட்டவன் மாதிரி, ஒரே முடுக்கிலே இருக்கிறான். கட்டி விட்டானேல்லோ, மாடி! குருவி கூடத்தாண்டா, மரத்து உச்சியிலே கூண்டு கட்டிக் கொண்டிருக்குது. கோவணமாட்டம் இடம் இது. ஒரு தோட்டம் துரவு, ஒண்ணு கிடையாது. கடைக்கால் மகா மோசம். வெறும் கள்ளியும் சுள்ளியும் போட்டு, மார்க்கட்லே கிடைக்கிற பழைய சாமானை எல்லாம் பூசிகீசி போட்டு, புது மாடிடான்னு காட் டறான் ஊராருக்கு, இந்த இலட்சணத்துக்கு அங்கே நூறு, இங்கே இருநூறுன்னு கடன் வேறேபட்டிருக்கிறான். இப்படி இருக்கு விஷயம்.என்னடான்னா, பெரிய பங்களா கட்டிவிட்டவன் போலே, கெர்வம் பிடிச்சி அலையறான். பக்கத்துத் தெருவிலே பச்சைக் கலர் கொடுத்து இருக்கு பார் புதுமாடி, யாருது தெரியுமா! பட்டணத்திலே பலகாரக்கடை, காலணா காப்பித்தண்ணி விற்கிறவன் கட்டினான். உலகத்திலே, யாராருக்கோ அதிர்ஷ்டம் வருவதும் போவதும் சகஜம். இவனென்னடான்னா, புதிசா மாடி வீடு கட்டி விட்டானாம். இதற்கு மண்டைக் கர்வம் பிடித்து அலையறான்.


இவ்வளவு கோபம் வந்து விட்டது இரும்பலியூராருக்கு, மகாதேவ முதலி கட்டின மாடிவீட்டைப் பற்றி பால்காரர் சொன்ன உடனே, பால்காரருக்கும், மகாதேவ முதலியார் மீது பிரமாதமான அன்பு கிடையாது. புதுவீடு குடி போனதற்காக நடத்திய விருந்தின்போது, பால்காரப் பண்டாரத்திடம் (பண்டாரம் என்பது செல்லப்பெயர்). ஆறுபடி பால் வாங்கினார் முதலியார். அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தவே பால்காரர், ‘நம்ம மகாதேவ முதலியார் மாடிவீடு கட்டிக் குடிபோனாரு. வீடுஅழகா இருக்கு” என்று சொன்னான் இரும்புலியாரிடம். வேலை மிகுதியாலே. மகாதேவர் இரும்புலியாருக்கு அழைப்பு அனுப்ப வில்லை, விழாவுக்கு. காரணமே இல்லாவிட்டாலும் கோபம் வரும் இரும்புலியாருக்கு. சொல்ல வேண்டுமா இந்தச் சமயத்திலே எப்படி இருந்திருக்கும் அவருக்கு என்பதை! பிடித்தார் ஒரு பிடி! சுடச்சுட! மகாதேவ முதலிக்கு மட்டுமல்ல, அந்த மாடி வீட்டுக்கும் சேர்த்துக் கொடுத்தார் சவுக்கடி!


மாமன் வாழ்கிறான் மாடி வீட்டிலே மாப்பிள்ளை போல. விலைவாசி இவ்வளவு அதிகமாக இருக்கிற நேரத்திலே, எவ்வளவு ‘ஜோரா’ கட்டியிருக்கிறான் வீட்டை. நல்ல பார்வையா இருக்கு வீடு. அருமையான சாமான் போட்டிருக்கு. கல்பலகை போலே இருக்கு மரச்சாமான்களெல்லாம். கர்டர் கொடுத்துக் கூடம் அமைத்து இருக்கிறான். மாடிமேலே கொஞ்ச நேரம் மாலை நேரத்திலே உலாவினாலே போதும். பீச்சு கெட்டுதுன்னு இருக்கும். இப்படி மாமன் மாடி வீட்டிலே மகிழ்ந்து கொண் டிருக்கிறான். இங்கே நம்ம சோணாசலம், மகாதேவமுதலிக்கு மருமகன் என்ற பேர் மட்டும் சுமந்து கொண்டு கிடக்கிறான். நேற்று இராத்திரி மழையிலே அவன் வீட்டுக் கொல்லைச் சுவர் இடிஞ்சு, கரைஞ்சி போயிட்டுது!

புதுமனை புகுவிழாவுக்கு விடியும் போதே வந்திருந்து விருந்து முடியும் வரை இருந்து விட்டுப்போன வில்வநாதசாமி. இப்படி விசாரப்பட்டார். காவி கிடையாது வில்வநாதருக்கு, பெயர் சாமி என்று இருப்பதற்குக் காரணம், அவருக்குக் குடும்பம் என்பது கிடையாது. நல்லவர் என்று, சகலரும் சொல்ல வேண்டும் என்பதற்காக, வில்வநாதசாமி, விடிந்ததிலிருந்து பொழுது சாய்கிற வரையிலே பலருடைய வீடுகளுக்குச் சென்று அவரவர்கள் கூறும் குறைகளைக் கேட்டு, அவர்களுக்கெல்லாம் சமாதானம் கூறிவிட்டு, அப்படியே கையோடு எடுத்துக் கொண்டு போன, கட்டுமாத்திரை, சூரணம், தைலம், இவைகளையும் சமயத்துக்கும் இடத்துக்கும் ஏற்ற அளவு ‘இறக்குமதி’ செய்து விட்டு, வருகிற வழக்கம். மாடி வீடு. அழகாக இருக்கிறது என்று மட்டுந்தான் மற்றவர்கள் சொன்னார்கள். “மகாதேவி மனதுக்கு, இதெல்லாம் ஒரு பிரமாதம்னு நான் சொல்லமாட்டேன். அவன் மகராஜனா. தீர்க்காயுசாக வாழவேணும். இது என்ன வீடு! தள்ளுங்க. இதைவிட பெரிய பெரிய வீடு, தோட்டம், வயல், சகல சம்பத்தும் நம்ம மகாதேவிக்குக் கிடைக்கும்.” என்று வில்வநாத சாமி மட்டுந்தான் சொன்னார். எல்லோருந்தான் மகாதேவ முதலியாருக்குச் சந்தோஷம் ஊட்டுவதற்காகப் பலப்பல உபகாரம் பேசினார்கள். சாமி சொன்னதுபோல வேறே யாருக்குச் சொல்லத் தெரிந்தது! சகலருக்கும் ஒரே முறைதான். கூட்டோ, குழம்போ, பொரியலோ செய்வதிலே. இருந்தாலும் ‘கைபாகம்’ இருக்கிற தல்லவா! அதுபோல, எல்லா உபசாரமும், சாமியாருடைய உபசாரம் போல இருக்க முடியுமா? ‘வாய்பாகம்’ இருக்கே!! மகாதேவ முதலியாரின் மூத்த மனைவியின் ஒரே பெண் சோணாசலத்தைக் கலியாணம் செய்து கொண்ட மூன்றாம் வருஷம் மாமனாருக்கும் மருமகனுக்கும் பிரமாதமான சண்டை வந்தது. இதே சமயம் மூத்த மனைவியும் இறந்து விடவே, விரோதம் முற்றி விட்டது. சோணாசலத்தின் முகத்திலேயே விழிக்கக் கூடாது என்று இருந்துவிட்டார் மகாதேவமுதலியார். புதுமனை புகுவிழாவுக்குச் சோணாசலமும் வரவில்லை, சொக்கியும் வரவில்லை. அவர்கள் மனம் வேதனைப்படும் என்பது, பலருக்கும் தெரியும். என்ன செய்வது அதற்கு? என்று இருந்துவிட்டனர் அவர்களெல்லாம். வில்வநாதசாமி இருப்பாரா? விழா முடிந்தபிறகு நேரே சோணாசலத்தின் வீட்டுக்குச் சென்று, தெருத் திண்ணையிலே உட்கார்ந்துகொண்டு அன்புரை வழங்கினார். விழாவிலே அவரைக் கண்டவரொருவர், “சாமி! காலையிலே அங்கே இருந்துசே!” என்று சொன்னார். போயிருந்தேனே, நானுந்தான். பார்த்துவிட்டு வந்தேன். வைபவமாகத்தான் இருந்தது” என்ற முன்னுரையுடன் சோணாசலத்தின் மனக் கொதிப்பு அடங்க பேச்சு மருந்து தந்தார். சாமியார்.


படுத்த படுக்கையாகக் கிடக்கறேன், பாவி மனுஷன் ஒரு பேச்சு, ‘என்னடாப்பா செத்தியா பிழைச்சியான்னு?” கேட்கவே இல்லைப்பா. எப்படி இருக்குப்பா காலம்? ஊரெல்லாம் சொன்னாங்க, இந்த நாளிலே ஒரு சாமான் கிடைக்காதே, இப்பவா வீடு கட்டறதுன்னு. முதலியாரே! கண்டவங்க பேச்சைக் கேட்க வேணாமுங்க. நான் இருக்கறேன், உங்களுக்குச் சாமானைப் பத்தின கவலையே வேணாம். எங்கே இருந்தாலும் எல்லாச் சாமானையும் கொண்டு வந்து சேர்க்கிறது என் பொறுப்பு. நாலுபேரு நாலுவிதமாகத்தான் சொல்வாங்க. நீங்க பேசாம ஆரம்பிங்கோன்னு தைரியம் சொல்லி, நாயா அலைஞ்சி திரிஞ்சி, வேளா வேளைக்குச் சோறு உண்டா, சுகம் உண்டா? செத்துச் சுண்ணாம்பானேன். மழைக்காலம் வருவதற்குள்ளே வீட்டைக் கட்டி முடிச்சேன். எல்லோரும் மூக்கு மேலே விரலை வைத்தாங்க; பூச்சு வேலை மட்டுந்தான் பாக்கி அலைஞ்சி திரிந்ததிலே, கைகால் பிடிப்பும் காச்சலும் வந்தது. படுத்த படுக்கையாக் கிடக்கறேன். நேத்து, கிரஹப்பிரவேசமாம். ஒரு வெத்திலை பாக்கு கிடையாதய்யா! இவ்வளவு கஷ்டப்பட்டுக் கட்டி முடிச்சனே, இந்தான்னு சொல்லி ஒரு துணி மணி கிடையாது. எப்படி இருக்கு மனஷனுடைய யோக்யதை. மாடா உழைச்சேன்; மாடியிலே ஏறிகிட்டு உலவுறான் மனுஷன்; இங்கே நான் துடியாத் துடிக்கறேன், திரும்பிக்கூடப் பார்க்கலே, ஒரு பேச்சு கேட்கலே, இப்படி இருக்கு யோக்யதை. அவனை எல்லாம் குறை சொல்லி என்ன பிரயோஜனம். இருபது ரூபா தாளிக்கை யுள்ள சாமானை, கடைக்காரனிடம் வாயாடி வல்லடி செய்து, பத்து பதினைந்துக்கு வாங்கிக் கொடுத்தேன். இந்தக் கைக்கு அந்தக் கை சாமான்களை நான் வாங்கி விற்றிருந்தாக்கூட, இன்னேரம் ஆயிரம் ஐந்நூறு மிச்சம் பிடிச்சிருப்பேன். என்னமோ மனுஷன் நம்மை நம்பி காரியததிலே இறங்கி விட்டான். நாம்ப இந்தச் சில்லறைச் சில்லுண்டிக்கெல்லாம் ஆசைப்படக் கூடாதுன்னு நினைச்சி சத்யதுக்குப் பொதுவா பாடுபட்டேன். என்னமோ, நான்தான் ஏறி உலாத்த போறவன் மாதிரி இராத்திரிக்கெல்லாம் பிளான் போடறது, இப்படிக் கட்டலாம இத்தனை அடி வைக்கலாமா. இன்ன சாமான் போடலாமான்னு, இப்ப ஏன்னு கேட்க ஆள் இல்லைய்யா மருந்துக்குப் பணமில்லை போயேன் உங்கிட்ட மனம் திறந்து பேசறேன். நான் வாய்திறந்து அவனை ஒண்ணும் சொல்லக் கூடாது. அவன் சுகமாக இருக்கட்டும்யா ரொம்பா சுகமாத்தான் இருப்பான் போறான்போ. ஆண்டவன் அவனவன் செய்யற காரியத்தைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கறாரு. மகராஜனா இருக்கட்டும் மாடி வீட்டிலே, என்னைத் துரோகம் செய்யறவன் எவனும் வாழமாட்டான்யா.

பல வீடுகளைக் கட்டத் துவக்கி, கால் வாசி முடிவதற் குள்ளே உள்ள கூலி பெற்றுக் கொண்டதோடு இராமல் கடன் கேட்டு, அதைக் கொடுக்க மறுத்துவிடும் காரணத்துக்காக சண்டை போட்டுக் கொண்டு, வேறே எவனையாவது அழைச்சிக் கட்டிக் கொள்ளய்யா! நமக்குப் பிடிக்காது இந்த மாதிரி ஆசாமி.

கர்மிகளுக்கு வேலை செய்வது, பெரிய பாபம். மனுஷன் என்னடா, இவ்வளவு பாடுபடறானே. அவன் இவ்வளவு கஷ்டப்பட்டு வீட்டை ஒழுங்கா கட்டி முடிச்சபிறகு, நாம்பதானே அதிலே சுகமாக வாழப் போகிறோம். அவன் வயிறு எரியச் செய்தா, நம்ம குடும்பம் விருத்திக்கு வருமா என்கிற எண்ணம் இருக்க வேணாமா? ஒண்ணுமில்லை, ஒரு நூறு ரூபா கடன் கேட்டேன், அடுத்தமாதம் செங்கல் சூளைக்காரனுக்கு நான் தருகிறேன்யா, இப்ப ஒரு நெருக்கடி கடனாக் கொடு நூறு ரூபாயன்னு, கெஞ்சினேன், முடியவே முடியாதுன்னு சொல்லி விட்டான். செ! இனி அவனிடம் போய் வேலை செய்யறதை விட நாலு வீடு பிச்சைகூட எடுக்கலாம்னு தீற்மானித்து விட் டேன். எவனையாவது கொண்டுவந்து. எப்படியாவது கட்டிக் கொள்ளட்டும் வீடு” என்று வம்பு பேசிவிட்டு, வேலைக்கு வராமல் நின்று விடுவது கட்டட மேஸ்திரி குட்டப்பன் வழக்கம்.

மகாதேவர் கட்டிய மாடி வீட்டுக்கும் குட்டப்பன்தான் கடைக்கால் போட்டான் கட்டி முடிகிறபோது, இல்லை! வழக்கப்படிதான். என்றாலும் ஊரிலே எவனெவனையோ கூப்பிட்டு, விருந்து செய்கிற மகாதேவமுதலி, தன்னையும் கூப்பிட் டு. ‘இனாம்’ தரவேண்டியதே முறை என்று குட்டப்பன் எண்ணினான். தவறான எண்ணந்தான்! ஆனால் யார் அதை அவனிடம் சொல்ல முடியும்! யாருக்குக் காது உறுதியாக இருக்கும், அவன் போடும் கூச்சலைக் கேட்க! எனவே, யாரும் அவனை மறுத்துப் பேசுவதில்லை. மாடி வீட்டுக்கு மகாதேவ முதலி குடிபோனதற்காக நடத்தப்பட்ட விழாவிலே தச்சுவேலை தங்கவேல் கலந்து கொண்டான். அவனிடம், குட்டப்பன், கொட் டினான் தன் கோபத்தை முன்னாலே குறித்துள்ள முறையிலே.


மகாதேவ முதலியாரிடம் மட்டுமல்ல, கொஞ்சம் பச்சென்று யாராவது வாழ ஆரம்பித்தாலே, அவர்களைத் தனக்கு எதிரி எண்ணிக் கொள்ளும், வரட்டு வாழ்க்கைக்காரர் வீராசாமிப்பிள்ளை, தப்புக் கண்டு பிடிப்பதும், தகறாருகளைக் கிளப்புவதும், மொட்டை பெட்டிஷன் விடுவதும் அவருக்குப் பிரியமான பொழுதுபோக்கு, அவர் கிரஹப்பிரவேசத்துக்குச் சென்றிருந்தார். மகாதேவ முதலியார், எல்லோரையும் உபசரித்தது போலத்தான் வீராசாமி அவரையும் உபசரித்தார். ஆனால் வெள்ளி தாம்பாளத்திலே வெற்றிலை வைத்துக் கொடுத்தார் ஜில்லா முனிசீபுக்கு; இவருக்குப் பித்தளைத் தாம்பளத்திலே வைத்துக் கொடுத்தார். வேண்டுமென்றே தன்னை அலட்சியமாக நடத்தினார் என்று பெட்டிஷன்காரர் கோபம் கொண்டார். கோபத்தைக் காட்டிக்கொண்டாரா? இல்லை! வெற்றிலை எடுத்துக் கொண்டார். வீடு வந்தபிறகு, தன் நண்பர் ஒருவரிடம் கொட்டுகிறார் கோபத்தையும், பொறாமையையும்.

மாடிவீடு, நிலைக்கறதை நான் பார்க்கிறேன் ஒரு கை! என்னமோ எண்ணிக்கிட்டான். இவன் மாடிவீடு கட்டிவிட்ட தாலேயே, நாமெல்லாம், இவனைக் கண்டா எழுந்து நின்று கைகட்டிச் சேவகம் செய்யோணும்னு எண்ணிக் கொண்டான். விஷயம் உன் மனதோடு இருக்கட்டும். இன்னும் ஒரு வாரத்திலே பாரு, இந்த மாடிவீடு என்ன கதியாகுதுன்னு. பய, ஊரிலே, யாருக்கும் விஷயம் தெரியாதுன்னு எண்ணிகிட்டு ஒருவேலை செய்திருக்கிறான். முனிசிபாலிடி நிலத்திலே. மூணு அடி சேத்துக்கிட்டு இருக்கிறான், தெரியுமா? போயிருக்குது ‘பெட்டிஷன்’ முனிசிபாலிடிக்கு; அடுத்த வாரம் வந்து விடப் போறான். வாடா மாதம்பி! வந்து அளந்து காட்டுடா, மனை என்னன்னு கேட்டுக்கிட்டு. அப்ப இல்ல தெரியப்போவுது. ஆசாமி கதை. மாடிவீட்டுக் கொறடும் மாடிக்கு முன்பக்கமும். இடித்து ஆகணும் இப்ப, தெருவிலேபோய் நின்றுகொண்டு பார்க்கிறான், எதிர் வீட்டிலேபோய் நின்றுகொண்டு பார்க்கிறான், மாடி வீட்டு அழகை! முனிசிபாலிடிகாரன் வருகிற போது தெரியப் போவுது இந்த மாடி வீட்டு இலட்சணம். கொஞ்சம் பொறு. போயிருக்குது இவனுக்கு மண்டை ஓலை. மாடி கட்டிவிட்டான், மாடி!


பக்கத்து வீட்டுக்காரர் பாட்சா முதலி, மகாதேவ முதலியாருக்குத் தூரபந்து. தன் சுகம் எந்த விதத்திலும், யாராலும் கெடக்கூடாது என்ற நோக்கம். கொஞ்சம் கனத்த சரீரம். ஆகவே காற்றுத் தாராளமாக இருக்கவேண்டும் அவருக்கு மாடிவீடு மகாதேவ முதலியாருக்கு, அவர்தான் கிரஹப்பிரவேசத்துக்கு நாள் வைத்துக் கொடுத்தார். இருந்தாலும், காற்று இல்லாத குறையைத் தாங்கிக் கொள்ள முடியா? அவர் பேசுகிறார் யாரிடமுமல்ல தானாகவே பேசிக் கொள்கிறார்.

துளி காற்றுக்கூட வருவதில்லை இப்போ. முன்னே எல்லாம்.போர்வைகூடத் தேவைப்படும், அவ்வளவு காற்று அடிக்கும். இந்தப் பக்கத்து வீட்டுக்கார பாவிகிட்ட பணம் சேர்ந்து போச்சி, மாடி வீடாக்கிவிட்டான். மாடி எழும்பி விடவே, நம்ம வீட்டுக்குக் காற்று வருவதில்லை, குகைபோல ஆகி விட்டது. அவன் ஏறி உலாத்தறான் மாடிமேலே! இங்கே வேகறோம் நாமெல்லாம். எனக்கு அப்பவே தெரியும் இந்தப் பாவி மாடி வீடு கட்டிவிட்டா, நமக்குத்தான் சனியனா வந்து சேரும்னு அதுபோலவே ஆச்சி!


வீதியிலே போகிறார்கள் மூன்று நண்பர்கள். ஒருவர் வியாபாரி-ஆனால் வளமில்லாத வியாபாரம் – மற்றொருவர் ஆபீசர், வரி வசூல் செய்பவர் – மூன்றாமவர் தரகுத் தொழிலில் இருப்பவர், தக்க காலம் வரவில்லை என்று தவித்தபடி. அவர்கள் மூவரும் மாடி வீட்டைக் கண்டு விட்டுத் தங்கள் அபிப்பிராயத்தைக் கூறுகிறார்கள். யாரும் கேட்கவில்லை தாங்களாகவே கூறுகிறார்கள்.

எவனோ புண்யவான்! பகவான் அருள் கொடுத்தார், அழகான மாடிவீடு கட்டிவிட்டான்.

பாரப்பா! நாம்ப, ஆபீசர், நமக்கு வீடு குடக்கூலிக்குக் கிடைக்காமே திண்டாட வேண்டி இருக்கு. இங்கே பார், ப்ளாக் மார்க்கட் செய்யற வேலையை! புதுசா மாடிவீடு!

மாடி வீடும் கட்டுவான், மாளிகை கூடத்தான் கட்டுவான். நானுந்தான் கட்டுவேன் நீயுங்கூடத்தான் கட்டமுடியும். நமக்கும் அகப்பட வேணுமே, அவனுக்கு அகப்பட்ட மாதிரியா ஏமாளி எவனாவது! ஒரு அடி முட்டாள். இவனிடம் கொடுத்து விற்கச் சொல்லி இருக்கிறான் நூல் பேல். இவன், அதிலே தட்டி கிட்டான் சரியா, கட்டிகிட்டான் மாடிவீடு.

வாழ்ந்து கெட்ட கோபாலநாயுடுவும் வந்திருந்தார் கிரஹப் பிரவேசத்துக்கு. மரியாதை தெரிந்தவர். மரியாதையுடன் நடப்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்ப திலேயும் விருப்பமுடையவர். எனவே மற்றவர்கள்போல, ஒப்புக்கு ஒருமுறை மேலும் கீழும் பார்த்துவிட்டு, உபசாரமாக, வீடு ரொம்ப ஜோர்! என்று கூறிவிட்டு வந்து விடவில்லை. வீடு பூராவையும் ஒழுங்காகப் பார்த்துவிட்டு வந்தார், வந்தவர் தன் சினேகரிடம் சோகம் கலந்த குரலில் ஆனால் பொறாமையற்றும், பேசுகிறார்.

தேடித் தேடி ஆளைக் கொண்டு வந்து, கடை கடையா அலைந்து அலைந்து, செம்மரமாக வாங்கி, பக்கத்திலே உட்கார்ந்து செதுக்கச் சொல்லி, வாசக்கால் செய்தேன். தசாவதாரம் இருக்கு அதிலே அவனும் பாவம்,சும்மா சொல்லக் கூடாது. ரொம்பக் கஷ்டப்பட்டு, ஊரிலே எவனும் செய்யாத மாதிரியா இருக்க வேணும்னு, சாமார்த்தியமாத்தான் செய்து கொடுத்தான். அந்தப் புதுவாசக்காலை பார்த்து, புகழாதவங்க கிடையாது, அவ்வளவு அருமையாக இருக்கும். நான் கொடுத்து வைக்காத பாவி! நமக்கு எப்படி அதெல்லாம் தக்கும்? வீட்டு மேலே கடன் வாங்கினப்போ, நினைச்சி இருப்பனா, கடன் காரனிடம் வீடுபோய்ச் சேர்ந்து விடும்னு. ஊர்லே உலகத்திலே கடன் வாங்காமலா இருக்கிறாங்க. நான் அதிர்ஷ்டம் பிடித்த பாவி. கடன்காரனிடம் கொடுக்க வேண்டியதாச்சி வீட்டை அவள் அந்த வீட்டைப் பிரிச்சி, சாமான்களை எல்லாம். தனித்தனியாக விற்று ஒன்றுக்கு இரண்டா சம்பாதிச்சான். யாருக்கிட்டக் கொடுத்தானோ தெரியவில்லை அந்தச் செம்மரச் சித்திரவாசற்காலை. அது எத்தனை கைமாறி வந்ததோ, இன்று காலையிலே பார்க்கறேன், நம்ம மகாதேவ முதலி புதுமாடிவீடு கட்டினாரே அதிலே இருக்கு, அந்த வாசக்காலு தெருப்பக்கம் வேறெதையோ வைத்திருக்கறா, நம்ம வாசக்காலை, தோட்டத்துப் பக்கம் வைச்சிருக்கு. காலையிலே போயிருந்தேன், தாம்பூலம் வாங்கிகிட்டு வருவதற்கு நிஜமாகச் சொல்றேன். எங்கே மகாதேவமுதலியார் பார்த்து விடுறாரோன்னு கூட நினைச்சி கிட் டேன், நம்ம வாசக்காலைப் பார்த்ததும், எனக்கு என்னமோ கண் கலங்கி போச்சி. எவ்வளவு ஆசையோடே கஷ்டப்பட்டு அருமையாகச் செய்தது, அதைப் பார்த்துப் பார்த்து எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பேன், அப்படிப்பட்ட வாசக்காலு கடைசியிலே, மகாதேவ முதலி வீட்டுப் புழக்கடைக்கு வாசக் காலா அமைந்தது பார்த்தயான்னு நினைச்சி மனசு ரொம்ப வேதனையாப் போச்சு. என்ன செய்யறது? நாம்ப அவ்வளவு தான் கொடுத்து வைச்சது. நம்ம வீட்டுத் தெருவாசக்காலு, மகாதேவ முதலி வீட்டுக்குப் புறக்கடை வாசக்காலாச்சி!


கொழந்தையும், பெரியண்ணணும் கூட்டுத் தோழர்கன் ஜெயிலிலே சந்தித்ததிலிருந்து இருவருக்கும் சினேகம் ஏற்பட்டு விட்டது. வெளியே வந்தபிறகு, இருவரும் சேர்ந்தே தொழிலை நடத்தி வந்தனர் – என்ன தொழில் என்கிறீர்களா? அவர்கள் மாடி வீட்டைக் கண்டுவிட்டுப் பேசுவதிலிருந்து தெரிந்துவிடும். பாருங்கள் அவர்கள் பேசுவதை!

கொழந்தே! வீடு புதிசு.

ஆமாம்.

எவனோ புதுசாப் பணம் சேத்தவன் கட்டி இருக்கிறான் மாடிவீடு. என்ன சொல்கிறே? ராத்திரி, நாம்ப கிரஹப்பிரவேசம் செய்வமா?

புத்தியில்லைண்ணேன் உனக்கு; சுத்தமா இல்லை, அவன்தான் கையிலே கொஞ்சம் நஞ்சம் இருக்கற காசை எல்லாம் போட்டு வீடு கட்டிவிட்டானே, பூசின சுண்ணாம்புகூட உரைலே சரியா, இப்பத்தானா இவன் வீட்டிலே பணம் காசு இருக்கும். போண்ணேன்போ. உள்ளே குப்பையும் கூளமும் மூலையிலே கிடக்கும். சுண்ணாம்புச் சட்டியும், பொடிச் செங்கல்லும் கொட்டிக் கிடக்கும்.

ஆமாண்டா கொழந்தே! வீடு இவ்வளவு ஜோரா கட்டி இருக்கிறான், மாடிவீடு. இப்படிப்பட்டவனா வறட்டுப்பயலா இருப்பான். போப்பா. இருக்கும் எதாச்சும் எண்ணேன், இப்படி நாம்ப கிண்டி குதிரைப் பந்தயம்போல இருக்கற காரியத்துக்குப் பாதி ராத்திரியிலே பாடுபடணும்? சும்மா வாண்ணேன்,மாடி வீடுன்னு மயங்காதே. ரொம்பப்பேரு மாடிவீட்டுக்காரனுங்க எனக்குத் தெரியும். சும்மா ஜம்பம் வெளிவேஷம். கொழந்தே! என் பேச்சைக் கேளடா! இன்னக்கிக் காலையிலே இருந்து, ஒரே அமக்களமா இருந்திருக்கும். ராத்திரிக்கு அது அதுங்க, அடிச்சிப் போட்ட மாதிரியாத் தூங்கிக்கிட்டுக் கிடக்கும். சுலபமாயிருக்கும் நம்ம வேலைக்கு. சரி அண்ணே போய்ப் பார்ப்போம் வா. அன்றிரவு அவர்களுக்கு முகூர்த்த நேரம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் அமைந்திருந்தது. கொழந்தை சொன்னபடி, புதுமாடி வீட்டிலே, பெட்டி பேழை அதிகம் இல்லை. இருந்த ஒன்றி ரண்டிலும், கதவுக்கு வேண்டிய தாழ்ப்பாள், பல தினுசான ஆணிகள், கைப்பிடிகள், வளையங்கள், வர்ண டப்பாக்கள் இவை தான் இருந்தன. மகாதேவ முதலியார், வேறோர், வீட் டில் குடி இருந்து கொண்டு, மாடி வீடு கட்டட வேலையைக் கவனித்து வந்தார். ஆகவே அந்த வீட்டிலே இருந்தது அவருடைய ‘ரொக்கம்’ இங்கே, இளையாள் மேலே நகைகள், இவர் கைவிரலிலே மோதிரம், சமயல் ஆள் மடியிலே வெற்றிலைப் பாக்குப் பை, வீடு கூட்டு பவள் முந்தானையில் ஒரு சிறு முடிப்பு, இவ்வளவுதான்! கொழந்தை பெரியண்ணனை கேலியாகப் பார்த்தான்.

திடீரென்று, வீடு கூட்டுபவள், தும்மினாள்! இரண்டு மூன்று முறை தும்மிக் கொண்டே, ‘சனியன்! புது வீட்டுச் சுண்ணாம்பு நெடி, நமக்கு ஆகலே” என்று சொன்னாள். சமயலாள், விழித்துக் கொண்டு,”என்! தூக்கம் பிடிக்கலையோ?” என்று கேட்டாள். கொழந்தையும் பெரியண்ணனும், ஒரு அறைக்குள் பதுங்கிக் கொண்டனர். சமயலாளும் அவளும், பேசலாயினர்.

“புதுசா மாடி வீடு கட்டிக்கிட்டாரு அவரு. அவனை இனிக் கையாலே பிடிக்க முடியாது.”

“யாரை?”

“அவதான், ஆந்தைக் கண்ணி, முதலியாருக்கு இளையா.”

“மூத்தா, ஒருத்தி இருந்தாளோ?”

“ஆமா. நீ வெளி ஊர். உனக்குத் தெரியாது, விஷயம். மூத்தா ரொம்ப நல்லவ. இலட்சுமி களையா இருக்கும், அவ உலாத்தினா இந்த வீட்டுக்குப் பொருத்தமா இருக்கும். தங்கமான மனசு அவளுக்கு இருக்கிறபோது இவ்வளவு அந்தஸ்து கிடையாது. இந்த மூஞ்சி வந்த பிறகு, மாடி கட்டிவிட்டாரு..” “இதெல்லாம் அதிர்ஷ்டம்.”

“அதிர்ஷ்டமுமில்லே, ஒண்ணுமில்லே, வேடிக்கையா இருக்கும் இவருக்குப் பணம் வந்த விதம் தெரிந்தா.”

“சுவாரஸ்யமா இருக்கும் போலிருக்கே, சொல்லு கதையை, பணம் பல பேருக்குக் கிடைச்ச விதம் வேடிக்கை வேடிக்கையாத் தான் இருக்கும்.”

“ஆனா, இதைப்போலே வேடிக்கையை நீ வேறே எங்கேயும் கேட்டிருக்க முடியாது. பல பேருக்குக் காளி அருளாலே கிடைச்சுது, ஏழுமலையான் தயவாலே கிடைச்சுதுன்னு சொல்வாங்க. இவனுக்கு, ஒரு குரங்காலே கிடைச்சுது சொத்து.”

“அனுமாரு அருளா?”

“கோயிலிலே இருக்கிற அனுமாரு இல்லை, போ. குதிக்குதே வீட்டு மேலே குரங்கு அதுவேதான். ஒருநாள் சாயந்திரம், பொழுது சாயுது, முன்னிருட்டு, ஒரு குரங்கு, ஒட்டு மேலே ஏறிக்கிட்டு அதம் செய்யுது. அப்பல்லாம் ஒட்டு வீடுதான். இந்த ஒய்யாரக் கொண்டைக்காரி இருக்காளே இளையா, அவ வீட்டுக்கு வந்து ஒரு ஆறுமாதமிருக்கும். குரங்கு கூத்தாட கூத்தாட, இவருக்குக் கோபம் கொதிக்குது, என்னமோ, கணக்கு எழுதிக் கிட்டு இருந்தாரு, குப்பி, குப்பி, அந்தச் சனியனைத் துரத்துன்னு சொன்னாரு என்னைக் கூப்பிட்டு. அது, நான் விரட்டினா போகுதா,உர் உர்ங்குது. கணக்குப் புத்தகத்தை வீசி எறிந்து விட்டு, அவரே வாசலுக்கு வந்தாரு, குரங்கை விரட்ட விரட்ட றதுக்கு ஒரே ஒரு தடவைதான் குரல் கொடுத்தாரு, உடனே, அடடேன்னு ஒரு தடவை ஆச்சரியமாகக் கூவினாரு. குப்பி! குப்பி! குப்பி! தேங்காமுடி இருக்கான்னு கேட்டாரு. இருந்தது. எடுத்து வந்து கொடுத்தேன். குப்பி! போயி தெருக்கதவை தாள் போடுன்னாரு.இதென்னடா வேடிக்கையா இருக்கேன்னு, நான் போனேன் கதவைத் தாள்போட, இவர் வாசலிலே நின்று கொண்டு தேங்கா முடியைக் காட்டி, குரங்கைக் கூப்பிடறாரு. ரொம்ப அன்போடு. ராமா! வா! இந்தா. தேங்கான்னு என்னென்னமோ சொல்லி கூப்பிட்டாரு. அந்தத் திம்மானா வரும்! தேங்கா முடியிலே கொஞ்சம் எடுத்து ஒட்டு மேலே வைத்தாரு, மெள்ள கிட்ட வந்து எடுத்தது, தேங்கா முடியைக் காட் டினாரு. வாங்கிக் கிட்டுது. அப்பத்தான் பார்த்தேன், பெரிய தங்கச் செயின் பதக்கம் வைச்சது, ஒட்டு மேலே கிடக்குது.”

“குரங்கு…”

“ஆமாம். குரங்கு கையிலேதான் இருந்திருக்குது செயின். குரங்கைத் துரத்தப் போனவர், இதைப் பார்த்துவிட்டுத்தான் தேங்கா முடியைக் கொடுத்து, ரொம்ப சாமர்த்தியம் செய்து செயினை ஒட்டுமேலே போடுகிற மாதிரியாச் செய்துட்டாரு. அந்த முண்டத்துக்குத் தெரியுமா, சவரன் விற்கற விலை. அந்தச் செயின் விலைக்கு தென்னந்தோப்பு வாங்கலாம். பாதி தேங்கா முடிக்கே, குரங்கு, செயினை வித்துட்டு, ஒடிப் போச்சி. மெள்ள ஒட்டு மேலே ஏறி, செயினை எடுத்துக்கிட்டு வந்தாரு. வந்ததும் வெங்கடா! வெங்கடான்னு இளையாளைக் கூப்பிட்டுச் சந்தோஷ மாகக் காட்டினார். அவளும் கையிலே வாங்கிப் பார்த்தா. கழுத்திலே போட்டுப் பார்த்தா, ஆனந்தப்படறாங்க, ஆனந்தம் கொஞ்சம் அடங்கின பிறகுதான், நான் ஒருத்தி இருக்கிற கவனமே வந்துது இரண்டு பேருக்கும் குப்பி! குப்பி! வெளியே எங்கேயும் சொல்லிப் போடாதே உனக்குப் புதுப் புடவை எடுத்துத் தாரேன் என்றாரு. சரிதான்னு சொன்னேன், அந்தச் செயினாலே ஆயிரம் ரூபாய்க்கு மேலே கிடைச்சுதாம். என்னிடம் கணக்கா சொல்வாங்க? ஒரு சேலை எடுத்துக் கொடுத்தாரு. மூணாமாசம் அது சாயம் போச்சி செயினிலே இருந்து தே பதக்கம், அதிலே இருந்த வைரக் கல்லைத்தான் வெங்கட்டா, மூக்குத்தி கட்டி போட்டுகிட்டா குரங்கு கொடுத்த பணத்தாலே தான், வியாபாரத்தை பெரிசாக்கினாரு. இலாபம் வந்துது புதிசா மாடிவீடு கட்டிக்கிட்டு மகிழறாரு. எனக்குத்தானே இரகசியம் தெரியும்னு, என்னை இங்கேயே வேலைக்கு வைத்துக் கொண் டாரு, நானும் யாரிடமும் சொன்னது கிடையாது. இன்னக்கி அவ நடந்து கொண்ட ராங்கி, இருக்கே, அது பார்த்ததிலே இருந்து எனக்கு ஒரே எரிச்சல், அந்தக் கோவத்திலே சொல்லி விட்டேன்”

“என்னா ஆச்சரியமா இருக்கு. எப்படி எப்படி எல்லாம் பணம் சேருது பார். இந்த ஆளுக்கு குரங்கு செயினைக் கொடுத்து என்னை ஒருதடவை ஒரு குரங்கு, கடிச்சி ஆஸ்பத்திரிக்குப் போய் மருந்து போட்டுக் கொண்டேன். ஆமாம், செயின் யாருது!”

“குரங்கு என்னா அதன் சம்சாரத்தின் கழுத்திலே இருந்தா எடுத்துக் கொண்டுவரும். எவளோ ஏமாந்தவ, எங்கே கழற்றி வைத்தாளோ தெரியல்லே; தூக்கிகிட்டு வந்துட்டுது”

“அடப்பாதகா!” தன்னையும் அறியாமல் கூவி விட்டான் பெரியண்ணன்! கொழந்தை உடனே, அவன் வாயை மூடி விட் டான். ஆனால் குப்பி காதிலே சத்தம் விழுந்து விட்டது. யாரு? யாரது? என்று கூவிக் கொண்டே எழுந்தாள். சமயலாளும் எழுந்து விட்டாள்.

கொழந்தை தலை தலை என்று அடித்துக் கொண்டான். பெரியண்ணன் விழிக்கிறான். என்ன செய்வார்கள். திருடன் திருடன் என்று குப்பி கூச்சலைக் கிளப்பி விட்டாள். மகாதேவமுதலியார், கைவிளக்கோடு, ஒடிவந்தார், குப்பி! குப்பி! என்று கூப்பிட்டபடி. தெருக்கதவை வெங்கட்டா திறந்து விட்டாள். மாடிவீட்டிலே திருடன் பூந்து விட்டான் என்று பலர் கூவினார்கள், சிலர் தைரியமாக உள்ளே நுழைந்தனர்.

மூடி இருக்கிற அறைக் கதவைத் திறந்தார் மகாதேவர். விளக்கு ஒளியிலே, இரண்டு திருடரும் தெரிந்தனர்.

ஐயயோ! என்று கூவினார். கொழந்தை பதறினான் பெரியண்ணன், துணிச்சலாக ஒரு காரியம் செய்தான். பாய்ந்து சென்று, மகாதேவமுதலியாரை, அறைக்குள்ளே இழுத்துக் கொண்டு கதவை, உட்பக்கம் தாளிட்டுக் கொண்டான். அறைக்கு உள்ளேயும் அலறல், வெளியேயும் கூச்சல், வீதியிலும் சத்தம். மகாதேவர், பெரியண்ணன் பிடியிலே சிக்கித் தவித்தார்.

பெரியண்ணனுடைய துணிச்சலைக் கொழந்தை பலதடவை இதற்கு முன்பு பார்த்திருந்த போதிலும், அன்றிரவு போல, என்றுமே கண்டதில்லை, ஆகவே அவன் திகைத்துப் போனான்.

“மாடிவீடு, நிலைக்க வேணும்னா, உன் மானம் தப்ப வேணும்னா மரியாதையா, ஒரு காரியம் செய்ய வேணும்” என்று பெரியண்ணன், கட்டளையிடத் தொடங்கினான். பதிலை எதிர்பார்க்காமல் பேசினான் பெரியண்ணன்.

“மாடி வீடு கட்டிவிட்டே இல்லே, மாடிவீடு. கொரங்கு கொடுத்த செயின்தானே உனக்கு மாடிவீடாக மாறிற்று. பதக்கம் இருக்குதா? பெண்டாட்டிக்கு மூக்குத்தி செய்துபோட்டு விட்டே இல்லே. . .”

மகாதேவர், பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்தவர், நடந்தது அவ்வளவையும் ஒப்புவிக்கும், கன்னனைப் பேயோ, பிசாசோ என்று எண்ணிவிட்டார். கும்பிட்டுக் கூத்தாடலானார்.

“என்னை இப்ப, பிடித்துக் கொடுத்தா நான் பூரா விஷயத்தையும் சொல்லிவிடுவேன் கோர்ட்டிலே” பெரியண்ணன் மிரட்டினான்.

“என்ன செய்யச் சொல்கிறே” மகாதேவ முதலி கேட்டுக் கொண்டே இருக்கிறார், உள்ளே. வெளியே இருந்தவர்கள் சும்மா இருக்க முடியுமா? கதவைப் பிளந்தே விட்டார்கள், உலக்கை கொண்டு. பாய்ந்து ஓடப் பார்த்த பெரியண்ணனும் கொழந்தையும், பிடிபட்டனர் உதைபட்டனர் போலீசுக்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.

“புதுசா, மாடிவீடாகப் பார்த்து புகுந்தீங்களாடா, திருட்டுப் பசங்களே” என்று திட்டிக்கொண்டே லாக்கப்பில் தள்ளினார். சப்-இன்ஸ்பெக்டர்.

“பாழாப்போன மாடிவீட்டைப் பார்த்து மயங்கிவிட்டயே அண்ணே!” என்றான் கொழந்தை.

சும்மாகிடடா! கொரங்கு கொண்டுவந்து இவன் வீட்டு ஒட்டு மேலே போட்ட செயின், எது தெரியுமா? குளத்தண்டை இருந்து செயினைத் திருடி விட்டேன்னு சொல்லி என்னைத் தண்டிச்சாங்களே! அந்தச் செயின் நான் திருடினேன்னு அபாண்டம் சொன்னானுங்க குரங்கு தூக்கிக்கிட்டுப் போயி இவன் வீட்டு ஓட்டு மேலே போட்டிருக்கு, இவன் ஒய்யாரமா, மாடிவீடு கட்டிக்கிட்டான்; நானு ஜெயிலிலே மண் தின்னேன்” என்றான்.

கோர்ட்டிலே கூடத்தான் சொன்னான். குரங்கு கதையை! கோர்ட்டார் கொல்லென்று சிரித்தார்கள். யார் நம்புவார்கள். இரண்டு வருஷம் தண்டனை! இதுதான் தீர்ப்பு.

“நான் மாடிவீடு கட்டினதும் போதும், அனுபவித்த கஷ்டமும் போதும்” என்று மகாதேவர் மனம் நொந்து கூறினார் கூறாமலிருக்க முடியுமா!

ஊராரும், புது மாடிவீடு ஆழகான வீடு என்று சொன்னதை எல்லாம் விட்டுவிட்டனர், திருடன் புகுந்தவீடு என்று சொல்லலாயினர். ரொம்ப நாளாயிற்று அந்தக் கெட்ட பெயர் மறைய.

– 16-3-1947, திராவிடநாடு.

Peraringnar_Anna காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *