கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: June 1, 2025
பார்வையிட்டோர்: 2,200 
 
 

(1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

4. ராஜன் நம்பூதிரியின் கலக்கம்

மாலையில் மாமல்லபுரம் போய்ச்சேர வேண்டிய கப்பல் மறுநாள் நண்பகலில்தான் போய்ச் சேர்ந்தது. ஒரு கப்பல் கரை சேரும்போது வழக்கமாக இருக்கும் உற்சாகமும் ஆரவாரமும் அந்தக் கப்பலில் இல்லை. கப்பலிலிருந்து இறங்கிய எல்லாருடைய முகங்களிலும் சோகமும், சோர்வும் மண்டியிருந்தன.

மாமல்லபுரத்து துறைமுகம் எப்போதும்போல் கல கலப்பாயிருந்தது. துறைமுகத்துக்கு ஒரு கப்பல் வந்து சேரும் போது வணிகர்களும், அவர்களைச் சார்ந்த சிப்பந் திகளும் கரையில் கூடிவிடுவார்கள். அவர்களைத் தவிர ஊராரும் வேடிக்கைப் பார்க்க வருவார்கள். 

அன்றும் அப்படித்தான் கடற்கரையில் திருவிழாப் போல மக்கள் மொய்த்துக் கொண்டிருந்தனர். சுங்க அதிகாரி களும், துறைமுகப் பாதுகாவலாளர்களும் சுறுசுறுப்பா யிருந்தனர். அன்று சுங்க அதிகாரிகள் தங்களுடைய வழக்க மான கெடுபிடிகளைத் தளர்த்தியிருந்தனர். கொள்ளையர் களால் தாக்குண்டு மிகுந்த துயரத்தைத் தாங்கிவந்த பயணி களைக் கண்டு அதிகாரிகளின் நெஞ்சங்களில் கூட ஈரம் கசிந்துவிட்டது. சரக்குகளுக்கு சுங்க வரியில் பாதியை மட்டும் வசூலித்தால் போதுமென்று சுங்கத் தலைவர் ஆணையிட்டு விட்டார். தனிநபர்களை சுங்கச் சாவடியில் சோதனை போடவேண்டாமென்றும், பயணிகள் தாமத மின்றி நகரத்திற்குள் போவதற்கான உதவிகளைச் செய்து கொடுக்கும்படியும் உத்தரவிட்டார். 

சுங்கச் சாவடியைக் கடந்து உதயசந்திரனும், லீனாவும் வெளியே வந்தார்கள். “ஏதாவது சாப்பிடேன். மிகவும் களைத்திருக்கிறாய்” என்றான் உதயசந்திரன். 

லீனா மறுத்துத் தலையை அசைத்தாள். அளவு மீறிய சோகத்தால், பொன்னிறமாயிருந்த அவளுடைய வதனம், களை இழந்து சாம்பியிருந்தது. அவளுடைய கண்களில் தென்பட்ட துயரத்தின் சாயல் உதயசந்திரனை மிகவும் நெகிழ வைத்து விட்டது. மிகுந்த சங்கடத்துடன் தன் கண்ணீரை மறைத்துக்கொண்டான். 

சுற்றும் முற்றும் பார்த்தான். தன்னுடன் கப்பலிலிருந்து இறங்கியவர்களைத் தேடினான். சற்று தூரத்தில் தேவ சோமாவும் மற்றவர்களும் அவனை நோக்கி வந்து கொண்டி ருந்தார்கள். அவர்களுடன் கொள்ளைக் கப்பலில் இருந்த மொட்டைத்தலை இளைஞனும் வந்து கொண்டிருந்தான். அவர்கள் பிரிந்து செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. உதயசந்திரன் விடைபெற்றான். 

“நண்பர்களை நாம் பிரியும் நேரம் வந்து விட்டது. கடவுளருளால் நாம் மீண்டும் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்படலாம்” என்றான் உதயசந்திரன். பிறகு சொன்னான்: 

“கப்பலில் நாம் பேசி முடிவு செய்தபடியே இந்தப் பெண்ணை இங்குள்ள சீனச்சேரியில் இவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறேன்.” 

அருகில் நின்ற மொட்டைத் தலை இளைஞனைச் சுட்டிக்காட்டி தேவசோமா, “இந்த இளைஞன் ஸ்ரீராஜன் நம்பூதிரி என்ன செய்யப்போகிறான் ?” என்று கேட்டான். 

“இவன் என்னோடு வருவதாக முடிவு செய்திருக் கிறான். இவனையும் என்னோடு அழைத்துச் செல்கிறேன். நண்பர்களே !நாங்கள் போய்வருகிறோம். தக்க சமயத்தில் நீங்கள் காட்டிய துணிவிற்கும், செய்த உதவிக்கும் நன்றி” என்றான் உதயசந்திரன். 

அவனுடைய கையைப் பரிவுடன் தேவசோமா பற்றிக் கொண்டு, “தம்பி, உன்னுடைய வீரத்திற்கும், சாகசத்திற்கும் முன்னால் எங்கள் செயல் எம்மாத்திரம். ஓ…! ஆயுதமின் றியே நீ நிகழ்த்திய புதுமையான போரை என் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன். இந்தப் பெண்ணின் மானத் தைக்காக்க நீ ஆற்றிய தீரச் செயலுக்காக சீன நாடே தமிழகத் திற்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறது. தம்பி, தமிழ் மண்ணின் பண்பும், பெருமையும் உன்னால் மிகவும் உயர்ந்துவிட்டன. இந்தப் பெண்ணிற்குத் தான் எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறேன் என்றான். பிறகு, “முடிந்தால் நாம் மீண்டும் காஞ்சியில் சந்திக்கலாம்” என்றான். 

இலங்கை வீரர்கள் மூவரும் விடைபெற்றுச் சென்றனர். ஒரு வண்டியில் லீனாவையும், ஸ்ரீராஜன் நம்பூதிரி என்ற இளைஞனையும் அழைத்துக்கொண்டு சீனச் சேரியை நோக்கிப் புறப்பட்டான், உதயசந்திரன். 

“சீனச்சேரியில் யாருடைய வீட்டிற்குப் போக வேண்டும்?” என்று வண்டிக்காரன் கேட்டான். 

“டெங்லீ என்று ஒரு வணிகர் இருக்கிறார். அவர் வீடு எங்கே என்று தேட வேண்டும்” என்றான் உதயசந்திரன். 

“அந்தக் கிழவரா? தெரியும். அவர் வீடே எனக்குத் தெரியும்” என்று கூறியவாறே மாடுகளை முடுக்கி விரட்டினான் வண்டிக்காரன். 

சீனச்சேரியை நெருங்கியபோதே, அது செல்வமிக்கவர் களின் குடியிருப்புப் பகுதி என்பது தெரிந்து விட்டது. செல்வச் செழிப்பின் அறிகுறி, பார்த்த இடமெல்லாம் தெரிந்தது. தெருக்களின் சுத்தமும், வீடுகளின் ஒழுங்கான அமைப்பும், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த கொழுகொழுத்த குழந்தைகளின் மலர்ச்சியும் மனத்திற்குத் தெம்பூட்டின. லீனா ஒரு பத்திரமான இடத்தில்தான் இருக்கப்போகிறாள் என்ற நம்பிக்கையில் உதயசந்திரன் திருப்தியடைந்தான். 

ஒரு விசாலமான தெருவிற்குள் வண்டி சென்றபோது, வீட்டுவாசல்களில் நின்று கொண்டிருந்த சீனர்கள் வியப்புடன் வண்டியை நோக்கினார்கள். சீனச் சிறுவர்கள், வண்டியின் பின்னால் வண்டியைப் பிடித்துக் கொண்டு ஓடி வந்தனர். மாளிகை போன்ற ஒரு பெரிய வீட்டின் எதிரே வண்டி நின்றது. வாசல் திண்ணையில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த வயோதிகர் ஒருவர் பரபரப்புடன் எழுந்தார். அவர் வண்டியை நெருங்கி வருவதற்குள் வண்டியிலிருந்து மூவரும் இறங்கி விட்டனர். 

லீனாவிடம், “எனக்குச் சீனமொழி தெரியாது. நீயே பேசு” என்றான் உதயசந்திரன். 

“தாத்தாவிற்கு தமிழ் தெரியும்” என்றாள் லீனா. 

ஒரு சீனப் பெண்ணுடன், வேற்று இனத்து இளைஞர்கள் இருவர் நின்று கொண்டிருந்ததைக் கண்ட சீனக் கிழவர், வியப்புடன் அவர்களைக் கூர்ந்து பார்த்தார். 

“டெங்லீ இருக்கிறாரா?” என்று உதயசந்திரன் கேட்டான்.  

சீனக் கிழவர், தம்முடைய வெற்றிலைக் காவி ஏறிய பற்கள் தெரியும்படியாகச் சிரித்தவண்ணம், “நான்தான் டெங்லீ. நீங்கள் யார் ? எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார். 

வீட்டு வாசலில் வண்டி வந்து நின்றதைக் கண்டு, வீட்டுக்குள்ளிருந்த பெண்கள் ஆவலுடன் வாசலுக்கு வந்தனர். 

“உங்களுக்கு கியோசங் தெரியுமல்லவா?” என்று கேட்டான் உதயசந்திரன். 

கிழவர் உற்சாகமடைந்தவராய், “ஓ…. தெரியுமே, எனக்குத் தூரத்து உறவு. அவனுடைய தந்தையும் நானும் நண்பர்கள். வாணிபம் நிமித்தமாக அவன் இங்கே வரும் போதெல்லாம் என்னைப் பார்க்காமல் போகமாட்டான். அவனிடமிருந்து ஏதாவது செய்தி உண்டா?” என்று மிக்க ஆவலுடன் கேட்டார். 

உதயசந்திரன் லீனாவைச் சுட்டிக் காட்டி, “இவள் கியோசங்கின் மகள்” என்றான். 

கிழவர் திகைப்புற்று லீனாவை வெறிக்கப் பார்த்தார். பிறகு பெருமகிழ்ச்சியுடன் கீச்சுக்குரலில், “ஓ….! கியோசங்கின் மகளா. வாருங்கள், உள்ளே வாருங்கள்” என்று அழைத்தார். 

டெங்லியின் மனைவி, வண்டியின் அருகே சோகமே உருவாக நின்ற லீனாவின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள். 

கிழவர் சட்டென்று திரும்பி, “கியோசங் எங்கே?” என்று கேட்டார். 

“உள்ளே போய் விவரமாகச் சொல்கிறேன்” என்றான் உதயசந்திரன். அருகே நின்ற ஸ்ரீராஜன் நம்பூதிரியிடம், “ராஜன், வண்டியில் உள்ள சாமான்களை எல்லாம் இறக்கு. மருக்கொழுந்து செடி இருக்கும் பானைகளைப் பத்திரமாக இறக்க வேண்டும்” என்று கூறிவிட்டுக் கிழவரைத் தொடர்ந்து வீட்டிற்குள் சென்றான். 

கியோசங்கிற்கு நேர்ந்த முடிவைக் கேட்டதும், கிழவர் டெங்லீ அதிர்ந்து போனார். சற்று நேரம் அவரால் எதுவும் பேச முடியவில்லை. அவருடைய மனைவி, லீனாவை ஆதரவாக அணைத்துக் கொண்டாள். 

“கியோசங் இங்கு வந்து நிரந்தரமாகத் தங்கி விடுவதற்காகத்தான் புறப்பட்டு வந்தார். இவளுடைய தாயார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டாள். இங்கு வரும் வழியில் இப்படி ஒரு துன்பம் நேர்ந்துவிட்டது. இனி இவளுக்கு நீங்கள்தாம் ஆதரவு” என்றான் உதயசந்திரன். 

“இவள் என் பேத்தி….என் பேத்தி” என்றார் கிழவர், உணர்ச்சி பொங்க. 

டெங்லீயின் மனைவி, “எங்களுக்குப் பேரன்கள் தானிருக்கிறார்கள். பேத்தி இல்லை. அந்தக் குறையை இவள் தீர்த்து விட்டாள்” என்று கூறியபடியே லீனாவின் தலை யைப் பரிவுடன் வருடினாள். லீனா, கிழவியின் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மினாள். 

உதயசந்திரன் எழுந்தான். “ஐயா, என் கடமை முடிந்தது. இவளை இவள் விரும்பியபடியே உங்களிடம் கொண்டு வந்து ஒப்படைத்து விட்டேன். எனக்கு விடைகொடுங்கள்” என்றான். 

டெங்லீ அவனுடைய கைகளைப் பற்றிக்கொண்டு, “உனக்கு மிக்க நன்றி. என்னுடைய வேண்டுகோளைத் தட்டாதே. நீயும் உன் நண்பனும் இன்று எங்கள் விருந்தினராக இருந்துவிட்டுச் செல்லவேண்டும்” என்றார். 

உதயசந்திரன் திரும்பி லீனாவைப் பார்த்தான். அவளுடைய பார்வை, அவனிடம் கெஞ்சுவது போலிருந் தது. அன்று இரவு அங்கு தங்கிச் செல்ல சம்மதித்தான். 

மறுநாள் டெங்லீயின் வீட்டிலிருந்து அவன் புறப்படு வதற்கு முன் லீனாவிடம் விடைபெறச் சென்றான். அவள் துயரம் தாங்காமல் அழத் தொடங்கினாள். உதயசந்திரன் ஆறுதல் சொன்னான். 

“நீங்கள் எங்கே போகிறீர்கள்? என்னை மீண்டும் பார்க்க வருவீர்களா?” – லீனா கேட்டாள். 

“பௌத்த மடத்தில் தங்குவேன். நான் இனி என்ன செய்ய வேண்டும் என்றே இன்னும் முடிவு செய்யவில்லை. இப்போதைக்குப் பௌத்த மடம். நான் இங்கிருந்து காஞ்சிக்குப் போவதற்குள் உன்னை நிச்சயமாக வந்து பார்ப்பேன். கடந்து போனவைகளை மறக்க முயற்சி செய். காலம்தான் உன் மனப்புண்ணை ஆற்றும்” என்றான், உதயசந்திரன். 

“நீங்கள் செய்த உதவிகளுக்கு நன்றி” என்றாள் லீனா. 

உதயசந்திரன் அவளை இரக்கத்தோடு பார்த்தான். “எனக்கு நீ நன்றி சொல்ல வேண்டுமா? இந்த மாதிரியான நாகரிகம் வாய்ந்த சம்பிரதாய வார்த்தைகள் நமக்குள் எதற்கு?” என்றான். 

அவள் கண் கலங்கியபடி அவனை வழியனுப்பினாள். ராஜன் நம்பூதிரியையும் அழைத்துக்கொண்டு மாமல்ல புரத்துக் கல் இரதங்களுக்கு அருகில் இருந்த பௌத்த மடத்தை உதயசந்திரன் அடைந்தான். பிக்ஷ சாந்தி தேவர் கொடுத்து அனுப்பியிருந்த அறிமுக ஓலையைப் பௌத்த மடத் தலைவரிடம் கொடுத்தான். தலைவர் அவனையும் ராஜன் நம்பூதிரியையும் வரவேற்று, அவர்கள் தங்குவதற்கு ஓர் அறையையும் கொடுத்தார். 

அன்று இரவு, உதயசந்திரனும், ராஜன் நம்பூதிரியும் பௌத்த மடத்தின் மேல் மாடத்தில் படுத்திருந்தபோது உதய சந்திரன் கேட்டான்: “ராஜன், உன்னோடு மனம் விட்டுப் பேச இப்போது தான் சந்தர்ப்பமே கிடைத்திருக்கிறது. நீ எப்படி அந்த மிலேச்சர்களிடம் அகப்பட்டுக் கொண்டாய்? உன்னுடைய பூர்வீகம் என்ன?” 

ஸ்ரீராஜன் நம்பூதிரி எழுந்து உட்கார்ந்து ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். “நீ மட்டும் இல்லையென்றால், நான் அந்த வெறி பிடித்த மிலேச்சர்களிடம் என்ன பாடுபட்டிருப் பேனோ” என்று கூறியபோது, அவனுடைய உடல் பயத்தி னால் நடுங்கியது. தொடர்ந்து சொன்னான்: “சேர நாட்டுக் கடற்கரையை ஒட்டிய சிறு கிராமம் என்னுடைய ஊர். பிராமணக் குலத்தைச் சார்ந்தவன். நான்கு வேதங்களையும், ஆகமங்களையும் கற்றேன். புராணங்கள் பலவற்றை ஆராய்ந்தேன். கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் முழுவதும் எனக்கு மனப்பாடம் உண்டு. என்ன படித்து ஞானம் பெற்று என்ன செய்ய. கடைசியில் நாகரிகமற்ற, வெறிபிடித்த மூடர் களின் பிடியில் சிக்கிச் சீரழிந்தேன். என் ஆசாரம் சிதைந்து விட்டது. நானும் இப்போது அந்த மிலேச்சர்களைப் போல் ஒருவன் நண்பனே…” 

ராஜன் நம்பூதிரி திடீரென்று அழுததைக் கண்டதும் பதறி எழுந்த உதயசந்திரன், அவனுடைய தோளை அணைத்துக் கொண்டான். “எல்லா ஆபத்துக்களையும் கடந்து வந்தாகி விட்டது. இவ்வளவு கல்விமானான நீ, இப்படிக் கண் கலங்கலாமா?” என்றான். 

“எந்தத் துயரத்தையும் ஒருவன் தாங்கிக்கொள்ளலாம், அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியுமா? என் பெற் றோர்கள் இறந்து விட்டார்கள். பிராமணக்கடிகையின் ஆதர வில் தான் வளர்ந்தேன். கல்வி கற்றேன். நான் அநாதை தான். எனக்கு ஏற்பட்டுவிட்ட அவமானத்தை இனி எப்படித் துடைக்க முடியும்?” என்று கூறிப் பொறுமினான், ராஜன் நம்பூதிரி. 

உதயசந்திரன் பரிவுடன் அவனுடைய தோளை வருடி னான், “உனக்கு என்ன அவமானம் – நேர்ந்துவிட்டது? உன்னுடைய துயரத்தை என்னால் போக்க முடியுமானால்….” 

“இது யாராலும் தீர்த்து வைக்கக்கூடியதல்ல. நானே பொறுமிப் பொறுமி என்னைச் சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்” என்று கூறிவிட்டுச் சற்று நேரம் மௌன மாகநிலவைப்பார்த்துக் கொண்டிருந்தான், ராஜன் நம்பூதிரி. பிறகு சொன்னான், “வடமேல் திசையில் பாலைவனப் பிரதேசத்தில் ஏதோ ஒரு மதம் தோன்றிப் பரவி வருகிறதாம். அந்த மதத்தை மற்ற நாடுகளில் போரிட்டும் பலாத்கார மாகவும் பரப்புகிறார்களாம். தோல்வியடைந்த நாட்டு மக்களைக் கத்திமுனையில் பயமுறுத்தி மதம் மாற்றுகிறார் களாம். அவர்களுடைய போரைப் புனிதப்போர் என்று கூறிக்கொள்கிறார்கள். அவர்களுடைய நம்பிக்கைகளைப் பரப்புவதற்காக, கடவுளின் பெயரால் நடைபெறும் போராட்டமாம். அந்தப்போரில் மரணமடைந்தால் சொர்க்க லோகம் கிடைக்குமாம். அப்படி நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.” 

“இவ்வளவும் உனக்குயார் சொன்னார்கள்?”

“கொள்ளைக் கூட்டத்தார் பேசிக்கொண்டதிலிருந்து தெரிந்து கொண்டதுதான்.” 

“நீ எப்படி அவர்களிடம் அகப்பட்டாய்?” 

“ஒரு நாள் மாலையில் நானும் என் நண்பனும் கடற் கரை ஓரமாக நடந்து கொண்டிருந்தபோது ஓர் இடத்தில் மூன்று மிலேச்சர்கள் நின்று கொண்டிருந்தார்கள். கண்ணிய மான சில மிலேச்ச வணிகர்களோடு நான் பேசிப்பழகியிருந் ததால் எனக்கு அவர்களுடைய மொழி கொஞ்சம் தெரியும். அவர்களைக் கண்டதும் நான் மிலேச்ச மொழியில் அவர் களைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினேன். அவர்களும் முதலில் நல்ல முறையில்தான் பேசினார்கள். அவர்களில் ஒருவன், அவர்களோடு கப்பலுக்கு வந்தால் அவர்களு டைய நாட்டில் உள்ள பேரீச்சம்பழம் தருவதாக அழைத் தான். பழத்துக்குத் தீட்டில்லை என்பதால் நானும் என் நண்பனும் அவர்களைத் தொடர்ந்து கப்பலுக்குச் சென் றோம். வசமாக மாட்டிக்கொண்டோம். எங்கள் தலைகளை மொட்டையடித்தார்கள். ஆண்குறியின் நுனித்தோலை வெட்டினார்கள், பாலைவனப் புது மதத்தின் ஆசாரப்படி போலும்.”அவனை எப்படி சமாதானப்படுத்துவது என்று புரியாமல் மௌனமாக இருந்தான், உதயசந்திரன். பிறகு கேட்டான்: “அது என்ன மதம்?” 

“அந்த மதத்தின் பெயர் என்னவென்றுகூடத் தெரிய வில்லை. அந்த மதத்தவர்கள் இப்போது வடக்கே சிந்துநதிக் கரையை அடுத்த நாட்டின் மீது படையெடுத்துப் பிடித்து விட்டார்களாம். முகம்மது காசிம் என்ற மிலேச்சனின் தலைமையில் படையெடுத்து வந்தார்களாம். தாஹிர் என்ற சிந்து நதிக்கரை மன்னன் தீவிரமாக எதிர்த்தானாம். பாலை வனத்து வெறியர்களை சிந்துநதியைத் தாண்டி வரவிடாமல் தடுத்து நிறுத்தி யிருந்தானாம். ஆனால், அந்த மன்னனுக்கு எதிராகச் சில துரோகிகள் மிலேச்சர்களுக்கு உதவினார்கள். அதனால் மிலேச்சர்கள், சிந்து நதியைக் கடந்து விட்டார் ளாம். மன்னன் தாஹிர், போர்க்களத்தில் மாண்டு போனானாம். அவனுடைய ராணியும் தீரத்துடன் போரிட்டு மடிந்தாளாம். மிலேச்சர்களின் மதம் அந்தப்பகுதியில் பலாத்காரமாகப் புகுத்தப்பட்டு விட்டதாம்.” 

“பிறந்த மண்ணுக்கே துரோகமா ? அதுவும் அந்நிய நாட்டானுக்கு உதவியாகவா? சீச்சீ, கேட்கவே மனம் கொதிக்கிறதே” என்றான் உதயசந்திரன். 

“துரோகம் செய்தவர்கள் யாரென்று தெரிந்தால் உன் மனம் இன்னும் கொதிக்கும், உதயசந்திரா.” 

“யார் அந்த ஈனர்கள்?”-வெறுப்புடன் கேட்டான், உதயசந்திரன். அவனுடைய காதருகே குனிந்து இரகசியமாக “பௌத்த பிக்ஷக்கள்” என்றான், ராஜன் நம்பூதிரி. 

“ஆ…!” என்று தாளாத வியப்புடன் கூவினான் உதயசந்திரன். “சீ, இதை நம்பமாட்டேன்” என்றான். 

“கொள்ளைக் கூட்டத்தாரின் பேச்சிலிருந்து அறிந்த செய்தி இது. இந்தக் கொள்ளையர்களின் கப்பல் முகம்மது காசிமுக்கு உதவியாகத்தான் வந்ததாம். சிந்துநதிப்பகுதியில் வெற்றி கிட்டியதும், காசிமின் அனுமதி பெற்று கொள்ளையடிக்க இந்தப் பக்கமாக வந்தார்களாம்.” 

“என்னால் நம்ப முடியவில்லையே. பிக்ஷக்கள் கூடவா இப்படி நடந்துகொண்டார்கள்?” என்று முனகி னான், உதயசந்திரன். அவனுடைய நினைவில் பிக்ஷ சாந்தி தேவர் தோன்றினார். “கடவுளே, இப்படியும் நடக்குமா?” என்று அரற்றினான். 

“காவி உடை அணிந்தவர்கள் எல்லாரும் மகான்கள் என்று எண்ணுகிறாயா?” என்றான், ராஜன் நம்பூதிரி. “காவி உடைக்குள்ளும் கயமைத்தனம் இருக்கும்,” என்றான். 

உதயசந்திரன் பெருமூச்சு விட்டான். வெறுப்பினால் முகம் சுருங்கியது. அந்த நினைவை அகற்ற எண்ணிய வனாய், “சரி, உன்னைப்பற்றிச் சொல். உன் நண்பனும் உன்னோடு வந்தான் என்றாயே; இப்போது அவன் எங்கே?” என்று கேட்டான். 

ராஜன் நம்பூதிரியின் கண்கள் கலங்கின. குரல் தழு தழுத்தது. “அவன் மடிந்து விட்டான். அந்த மிலேச்சர்கள் அவனைக் கொடுமைப்படுத்திக் கொன்று விட்டார்கள்” என்று கூறிக்கண்ணீர் சிந்தினான். 

“உன் நண்பன் அவர்களை எதிர்த்தானா?” 

“அது ஒரு வெட்கக்கேடான சம்பவம். நினைத்துக் கூடப் பார்க்க இயலவில்லை. ஒ…. எவ்வளவு ஈனத்தனமான காட்டுமிராண்டிகள் அந்த மிலேச்சர்கள். அழகான ஆண்களையும் பெண்களாகப் பாவித்துத் தங்கள் காமத்தைத் தணித்துக் கொள்கிறார்கள்! என் நண்பன் நல்ல அழகன். என்னையும் அவனையும் சிறைப்படுத்தியதே அந்த ஈனச் செயலுக்காகத் தான் என்று நினைக்கிறேன். அவர்களுடைய காமவெறிக்கு அவன் பலியாகிவிட்டான். அத்தனை பேரும் அவனைப் பயன்படுத்த முனைந்தார்கள். ஐயோ, அவன் வேதனையால் துடித்த கதறல் இன்னும் என் காதில் ஒலிக்கிறதே….” – ராஜன் நம்பூதிரி குலுங்கிக் குலுங்கி அழுதான். 

உதயசந்திரன் அவனை ஆதரவாக அணைத்துக் கொண்டான். “மிருகங்கள்” என்று கோபத்தினால் பற்களைக் கடித்தான். 

அழுகை சற்று நின்றதும் ராஜன் நம்பூதிரி சொன்னான். “நானும் அவனைப் போல் சாக வேண்டியவன் தான். நேற்று வரை நான் ஜுரத்தினால் வருந்தினேன். என் உடல் மட்டும் ஆரோக்கியமாயிருந்திருந்தால், அந்தக் கயவர்கள் என் உடலையும் பயன்படுத்தி விட்டுக் கடலில் தூக்கி எறிந்திருப்பார்கள்!” – ராஜன் நம்பூதிரியின் உடல் சிலிர்த்தது. 

சற்று நேரம் இருவரும் பேசாமல் நிலவை வெறித்தபடி இருந்தார்கள். ராஜன் நம்பூதிரியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. திடீரென்று உதயசந்திரனின் கால்களைப் பற்றியவாறு, “நானும் அப்படி ஓர் இழிந்த அவமானத்துக்குள்ளாகிக் கடலில் எறியப்படுவதற்குள் நீதான் தெய்வம் போல் வந்து காப்பாற்றினாய்” என்றான். 

உதயசந்திரன் பதறிப்போய் கால்களை இழுத்துக் கொண்டு, ராஜன் நம்பூதிரியின் தோள்களை அணைத்த வாறு, “ராஜன், அதையெல்லாம் ஒரு கனவு மாதிரி எண்ணி மறந்து விடு. அதற்குப் பழி வாங்குவது போல் கொள்ளையர்களின் கப்பலுக்குத் தீ வைத்துக் கொளுத்தினார்களே தேவசோமாவும், அவனுடைய கூட்டாளிகளும்” என்று ஆறுதல் சொன்னான். 

“அந்தக் கப்பல் எரிந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கடலுக்குள் மூழ்கியதைப் பார்த்துத்தான் என் மனம் சற்று சாந்தியடைந்தது. கப்பலில் நடைபெற்ற சண்டையில் தோற்றிருந்தால் உங்கள் எல்லாரையும் மொட்டையடித்து ஆண் குறியையும் வெட்டி மதம் மாற்றியிருப்பார்கள். கடவுள்தான் காப்பாற்றினார்” என்றான் ராஜன் நம்பூதிரி. 

நிலவு உச்சியைத் தாண்டி மேல் திசையில் சற்று சரியும் வரை பேசிக் கொண்டிருந்தனர். இருவரும் காஞ்சிக்குச் செல்வதென்றும், ராஜன் நம்பூதிரி, காஞ்சியில் உள்ள வடமொழிக் கடிகையில் சேர்வதென்றும், உதயசந்திரன் காஞ்சி பெளத்த கடிகையில் பணிபுரிவதென்றும் முடிவு செய்தனர். 

அப்போது ராஜன் நம்பூதிரி, உதயசந்திரனிடம், “உன்னுடைய லட்சியந்தான் என்ன? எதை உத்தேசித்துப் பல்லவ நாட்டிற்கு வந்தாய்?” என்று கேட்டான். 

“நானும் உன்னைப் போல் அநாதைதான். என் பாட்டனார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாராம். என்னை இங்கு எதிர்பார்த்து யாரும் காத்திருக்கவில்லை. உறவினர் சிலர் உண்டு. அவர்களைப் போய்க் காண எனக்கு விருப்பம் இல்லை. தாய் நாட்டிற்குப் போய்விட வேண்டும் என்னும் தவிப்பால் இங்கே திரும்பி வந்து விட்டேன். காஞ்சியில் பெளத்த கடிகையில் இருந்து கொண்டு தான் வருங்காலத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். உனக்கு நீ கற்ற வேதங்களும், ஆகமங்களும் பயன்படும். என்னைப் பொறுத்தவரை தாய்நாடு என்னைக் கைவிடாது என்னும் நம்பிக்கை மட்டும் இருக்கிறது. சரி, இந்த நம்பிக்கையிலேயே தூங்குவோம். வெகு நேரமாகி விட்டது” என்றான் உதயசந்திரன். 

5. காஞ்சிப் பயணம் 

கிட்ட டத்தட்ட ஆயிரத்து இருநூற்று எழுபது ஆண்டு களுக்கு முன்பு *இக்கதையில் வரும் சம்பவங்கள் நடைபெற்ற காலத்தில், பல்லவ சாம்ராஜ்யம் மிக உன்னத நிலையில் இருந்தது. மகாபலிபுரத்தில் கற்பாறைகளில் இரதங்களை அமைத்த நரசிம்ம வர்மன் என்ற பல்லவ அரசன் காலத்திலிருந்து, காஞ்சியில் கைலாசநாதர் கோயிலைக் கட்டிய இராச சிம்ம பல்லவன் காலம் வரை கொஞ்சம் கொஞ்சமாகப் பலம் பெற்று, ஒரு மாபெரும் சாம்ராஜ்யமாக வளர்ந்திருந்தது, பல்லவப் பேரரசு. 

பல்லவ நாட்டின் தலைநகரமான காஞ்சிபுரம், உலகப் புகழ் பெற்றிருந்தது. சகல கலைகளுக்கும் அந்நகரம் இருப்பிடமாயிருந்தது. பலநாடுகளிலிருந்து பலர் கல்விகற்க அங்கு வந்து கொண்டிருந்தனர். பல கல்லூரிகள் அங்கு இயங்கி வந்தன. அந்தக் கல்லூரிகள் கடிகைகள் என்று அழைக்கப்பட்டன. காஞ்சிமாநகர், அந்தக் காலத்தில் ஓர் அறிவுப்பட்டறையாக விளங்கியது. திருநாவுக்கரசர், “கல்வியிற் கரையிலாக் காஞ்சிமா நகர்” என்று புகழ்ந்தார். 

காஞ்சியின் மீது காதல் கொண்டு படையெடுத்த மன்னர்கள் பலர் உண்டு. சாளுக்கியர்களும், கடம்பர்களும், கங்க நாட்டவரும் காஞ்சியின் மீது காதல் கொண்டு அதைத் தங்களுக்கு உடமையாக்கிக் கொள்ள பல்லவப் படை யோடு பல முறை மோதித் தோல்வியடைந்தனர். எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்துக்கொண்டு பல்லவ சாம்ராஜ் யம், தலை நிமிர்ந்து நின்றது. 

*இக்கதை 1982இல் எழுதப்பட்டது. 

இக்கதையில் கூறப்பட்டிருக்கும் சம்பவங்கள் நடை பெற்ற காலத்தில் பல்லவ நாட்டை இரண்டாம் பரமேஸ்வர வர்மன் என்பவர் ஆண்டு வந்தார். இவர், காஞ்சியில் கைலாச நாதர் கோயிலைக் கட்டிய இராசசிம்ம பல்லவனின் மைந்தன். அப்போது கங்க நாட்டின் மீது படையெடுத்துச் சென்றிருந்தார். 

போர்க்களத்திற்குப் புறப்பட்டபோது, தம்முடைய இளையராணி பிரேமவர்த்தினி என்பவளிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துச் சென்றார். அவருடைய முதல் ராணி மூலம் அவருக்கு சித்திர மாயன் என்று ஒரு மகன் இருந்தான். அவன்தான் பல்லவநாட்டின் இளவரசன். அப்போது அவனுக்கு இருபது வயது இருக்கும். அவன் ஒழுக்கமற்றிருந்ததால் ஆட்சிப் பொறுப்பை அவனிடம் ஒப்படைக்க மன்னர் விரும்பவில்லை. பட்டமகிஷியான மூத்த ராணி இறந்து விட்டதால், இளைய ராணி பிரேமவர்த் தினியிடம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்திருந்தார். 

அந்தக் காலகட்டத்தில்தான் உதயசந்திரன், கப்பலில் மாமல்லபுரத்திற்கு வந்து சேர்ந்தான். அவனும் ஸ்ரீராஜன் நம்பூதிரியும் மாமல்லபுரத்து பெளத்த மடத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள். காஞ்சிக்குப் புறப்படுவதற்கு முந்தின நாள் மாலையில் லீனாவைக் காண்பதற்காக உதயசந்திரன் சென்றான். டெங்லீயின் வீட்டை நெருங்கிய போது, வீட்டுத்திண்ணையில் மண்பானைகளிலிருந்த மருக்கொழுந்து செடிகளுக்கு லீனா தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள். 

துக்கத்தை ஓரளவு மறந்திருக்கிறாள் என்பதை அறிந்து உதயசந்திரன் மன அமைதியடைந்தான். வாசலில் அவனைக் கண்டதும் லீனா பரபரப்புடன் ஓடி வந்தாள். அவளுடைய கண்களில் இன்னும் சோகம் படர்ந்திருந்தது. 

“உங்களை நேற்றே எதிர்பார்த்தேன்” என்றாள்.

“காஞ்சிப் பயணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருந்தது” என்றான் உதயசந்திரன். 

“நானும் காஞ்சி நகருக்கு வரவேண்டியிருக்கும்.”

“நீயும் வருகிறாயா?” என்று மிக்க ஆவலுடன் கேட்டான்.  

“ஆமாம். தாத்தாவிற்கு வாணிபம் நிமித்தமாகச் சில மாதங்கள் காஞ்சியில் தங்க வேண்டியிருக்கிறதாம். குடும்பத்துடன் போகப்போகிறார். காஞ்சியில் தாத்தா விற்கு ஒரு பெரிய தோட்டமும் வீடும் இருக்கின்றன.” 

“எப்போது புறப்படப் போகிறீர்கள்?” 

“இன்னும் முடிவாகவில்லை. காஞ்சியில் வீரப் போட்டி நடைபெறப்போகிறதாமே. அதையொட்டிப்புறப் படலாம்” என்றாள், லீனா. பிறகு, “காஞ்சியில் நீங்கள் எங்கே இருப்பீர்கள்?” என்று கேட்டாள். 

“புத்தர் தெருவில் பௌத்த கடிகை ஒன்றிருக்கிறது. அங்கே நான் தங்குவேன்.” 

“கடிகையிலா? இன்னும் கல்வி கற்கப் போகிறீர்களா?” 

“அங்கே என் குருவிற்குத் தெரிந்த பிக்ஷு இருக்கிறார். ஆகையால் அவருடன் தங்கி கடிகையில் பணிபுரியலாம் என்று நினைக்கிறேன். எனக்கும் உணவிற்கு வழி வேண்டுமே?” 

இதைக் கேட்டு அவனை மிகுந்த ஆதங்கத்துடன் பார்த்தாள், லீனா. “உணவிற்குத்தானா வழி கிடையாது…” என்று கூறியவள் மேற்கொண்டு சொல்ல நினைத்ததைச் சொல்லாமல் நிறுத்தினாள். 

“ஏதோ சொல்ல நினைக்கிறாயே. சும்மா சொல்” என்று தூண்டினான் உதயசந்திரன். 

“நீங்களும் எங்களோடு தங்கி விடலாமே. இங்கே செல்வத்திற்குக் குறைவில்லை” என்றாள் லீனா. 

“முன் பின் தெரியாத இடத்திலா? டெங்லீயை எனக்குப் பழக்கமில்லை.” 

“நானில்லையா?” என்று கேட்டுவிட்டுத் தரையை நோக்கினாள். 

அந்த உரிமைச் சொல்லில் உதயசந்திரன் நெகிழ்ந்து போனான். “நீ இருப்பதோ இன்னொருவர் வீட்டில்” என்றான். 

“என்னிடம் நிறையச் செல்வம் இருக்கிறது. என் தந்தை கொண்டு வந்த தங்கங்கள் அனைத்தும் என்னுடையவை தானே. நீங்கள் உங்கள் தேவைக்கு அவைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.” 

“எனக்கு அதெல்லாம் தேவை இல்லை.” 

“நீங்கள் எனக்கு செய்திருக்கும் உதவிக்கு நான் ஏதாவது கைமாறு செய்ய வேண்டாமா?” என்று லீனா கேட்டதும் உதயசந்திரனின் முகம் வாடிவிட்டது. அதைக் கண்ட லீனா துணுக்குற்றாள். 

“உன்னுடைய செல்வத்தை எதிர்பார்த்தா உதவி செய்தேன்? என்னுடைய செயலுக்கு நீ விலை போடுவதா யிருந்தால் நான் உன்னைப் பார்க்கவே வந்திருக்கமாட்டேன்.” 

உதயசந்திரனின் பேச்சில் வருத்தமும் கோபமும் தொனித்தன. லீனா, பதறிப் போனாள். 

“நான் தவறாக ஏதும் கூறிவிட்டேனா?” என்று பயத்துடன் கேட்டாள். அவளுடைய கண்களில் தென்பட்ட சோகம் கலந்த பயத்தைக் கண்டு உதயசந்திரன் இரக்கம் கொண்டான்- 

மனத்தில் களங்கம் இல்லாமல் ஒரு குழந்தையைப் போல் பேசியவளிடம் கோபம் கொண்டேனே. அவளுக்குச் செய்திருக்கும் உதவியை எண்ணி அவள் மருகுகிறாள். பதிலுக்கு ஏதாவது கைமாறு செய்யவேண்டும் என்று நினைக்கிறாள். உணவிற்கு வழிதேட வேண்டியவனிடம் தன் செல்வங்களைத் தருவதாக அவள் கூறியதில் தான் என்ன தவறு…? 

அவளைக் கனிவோடு பார்த்தவாறு சொன்னான். 

“லீனா! பதிலுக்கு நீ ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதுதான் எனக்குப் பிடிக்கவில்லை.” 

“மன்னியுங்கள். இனி நான் அதுபற்றிப் பேசமாட் டேன். உள்ளே வாருங்கள். தாத்தா இருக்கிறார்” என்று அழைத்தாள். 

அன்று டெங்லீயின் வீட்டிலிருந்து விடைபெற்றுக் கிளம்பிய போது உதயசந்திரன் உற்சாகமாயிருந்தான். லீனாவும் சில நாட்களில் காஞ்சிக்கு வந்துவிடுவாள் என்ற செய்தி அவனை உற்சாகப்படுத்தி இருந்தது. 

சீனச் சேரியிலிருந்து வட திசையில் திரும்பி, பார்ப்பனர்கள் வசித்த அக்கிரகாரத்திற்குப் பக்கத்தில் வந்தபோது சில பார்ப்பனச் சிறுவர்கள் தூரத்தில் சென்று கொண்டிருந்த ஒரு சமணத்துறவியின் மீது கற்களை வீசியதைக் கண்டான். 

“தம்பி, துறவிகளைத் துன்புறுத்தலாமா?” என்றான். “அதோ போகிறாரே அவர் சமண முண்டராக்கும்” என்றான், ஒரு சிறுவன். 

“யாராயிருந்தாலும் துன்புறுத்தக் கூடாது” என்றான், உதயசந்திரன். 

“கொலையே செய்யலாம்” என்றான் இன்னொரு சிறுவன், உரத்த குரலில். 

உதயசந்திரன் திகைப்புற்றான். “கொலை செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா?” என்று மிரட்டினான். 

“ஒரு தண்டனையும் கிடைக்காது. பல்லவ நாட்டில் சமணர்களுக்கு என்ன வேலை? இவர்களைத் துரத்தினால் அரசு ஒன்றும் செய்யாது” என்றான் ஒரு சிறுவன். 

அந்தச் சிறுவரிடம் பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்த உதயசந்திரன் அவ்விடம் விட்டகன்றான். கப்பலில் தேவ சோமா, பெளத்தர்களுக்கும் தமிழகத்தில் எதிர்ப்பு இருக்கிறது என்று சொன்னது நினைவில் வந்தது. 

மறுநாள் அதிகாலையில் உதயசந்திரனும், ராஜன் நம்பூதிரியும் காஞ்சிக்குப் பயணமானார்கள். உதயசந்தி ரனுக்கு குதிரை ஏறத் தெரியும். ஒரு நல்ல குதிரை கிடைத்தால் அதில் ராஜன் நம்பூதிரியையும் ஏற்றிக்கொண்டு செல்ல லாம் என்ற எண்ணத்தில் குதிரைக்காக அலைந்தபோது, மாமல்லபுரத்து துறைமுகத்திலிருந்து காஞ்சிப் பாதையில் சென்று கொண்டிருந்த ஒரு பாரவண்டியில் இருவருக்கும் இடம் கிடைத்தது. 

வண்டிக்காரன் ஏதோ முணுமுணுத்துக்கொண்டே வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தான். “என்ன வண்டிக்காரரே, வெகு நேரமாக முணுமுணுக்கிறீரே? என்ன விஷயம்? உமக்கு ஏதாவது சங்கடமா?” என்று உதய சந்திரன் கேட்டான். 

“மகாராசா எப்போது போர்க்களம் போனாரோ அப்போதே சங்கடம் தோன்றிவிட்டதே” என்றான், வண்டிக்காரன். 

“இப்போது தான் மகாராணி ஆள்கிறாளே.” 

“மகாராணி…. பெரிய மகாராணி….” என்று வண்டிக் காரன் கோபத்துடன் கைகளை விரித்துக் காட்டினான். 

“உமக்கு என்ன சங்கடம்?” 

“ராணி ஆளத் தொடங்கிய பிறகு இந்த நாட்டில் கெடுபிடிதான் அதிகமாயிருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு சட்டம். அதிகாரிகளின் உபத்திரவம் தாங்கமுடியவில்லை. எந்தக் காரியத்திற்கும் கையூட்டாகக் காசு கொடுக்க வேண்டியிருக்கிறது. பேசினால் கூடச் சிறையில் தள்ளி விடுவார்கள் போலிருக்கிறது.” 

“உமக்கு என்ன கஷ்டம்? உம்முடைய பாடு கழிகிற தல்லவா?” 

“ராணி ஆட்சிக்கு வரப்போய் எல்லாவற்றிற்கும் வரி உயர்ந்து விட்டது. விலைவாசி உயர்ந்துவிட்டது. மருந்துச் செடிகளுக்குக்கூட வரி போடுகிறார்கள். அதனால் வைத்தியம் பார்க்க எங்கள் ஊர் வைத்தியர் காசு கேட்கிறார். வைத்தியத்திற்குக் காசு பெறுவது மகாபாவம். அந்த பாவத்திற்கு வைத்தியர்களை ஆளாக்கி விட்டாள், மகாராணி. இந்தப் பாவம் அவளைச் சும்மாவிடாது.” 

“போர்க் காலத்தில் பணம் தேவைப்படும். வரி போட்டுத்தானே பணம் சேர்க்க முடியும்.” 

“போருக்கு யார் போகச் சொன்னார்கள்? திமிர் பிடித்துப் போய் போர் செய்தால் அதற்கு மக்களா பழி ? என்னத்துக்கய்யா போர் செய்ய வேண்டும்? ஆள்கிறவர்கள் மடத்தனமாக வெறிபிடித்துப் போர் செய்கிறார்கள்; மக்கள் அவதிப்படுகிறார்கள். போர் வெறி கொண்டவர்களை நடுச் சந்தியில் கழுவேற்ற வேண்டும்” என்று வண்டிக்காரன் கோபத்துடன் பேசினான். உடனே பதறிப் போய் வாயைப் பொத்திக் கொண்டு, பாதையில் யாராவது வருகிறார்களா என்று பார்த்தான். 

“ஜாக்கிரதையாகப் பேச வேண்டும். எதையாவது பேசினால் சிறையில் தள்ளி விடுவார்கள்” என்று முணு முணுத்தான். 

அவ்வளவு தூரம் பயந்து நடுங்கும்படியாகச் சுதந்திரம் பாதிக்கப்பட்டிருந்ததை அறிந்து உதயசந்திரன் வியப்படைந்தான். 

“காஞ்சியில் கெடுபிடி அதிகமாயிருக்கும் போலிருக்கிறது” என்றான். 

“இவர் கூறுவதைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது” என்றான், ராஜன் நம்பூதிரி. 

“வண்டிக்காரரே, குறைகளை மகாராணியிடம் போய் மக்கள் முறையிடுவதுதானே?” என்றான் உதயசந்திரன். 

“மகாராசா இருந்தபோது ஒவ்வொரு பௌர்ணமியிலும் ராச சபையில் மக்களுடைய குறைகளை நேரடியாகவே விசாரித்து வந்தார். இப்போது ராணியம்மாவை யாரும் பார்க்க முடியாது. பெரிய மந்திரி தரணிகொண்ட போசரிடம் முறையிட நாலைந்து நாட்களுக்கு முன்பு ஊர் மன்றத்திலிருந்து ஆளும் கணத்தார் போனாராம். என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. பெண் பிள்ளை நாட்டை ஆண்டால் உருப்படுமா? எந்தெந்த வேலைக்கு யார் யார் தான் தகுதி என்பதில்லையா” என்றான், வண்டிக்காரன். 

உதயசந்திரன் சிரித்தான். “வீட்டைப் பெண் பிள்ளை தானே ஆள்கிறாள்” என்றான். 

“வீட்டுக்குத்தான் அவர்கள் ராணியாக இருக்க முடியும். கடவுள் பெண்களைப் படைத்ததே பிள்ளைகளைப் பெற்றெடுத்துப் பாலூட்டி வளர்க்கவும், குடும்பத்தைப் பேணவும்தாம். பெண்கள், வீட்டுக்குத் தான் ராணிகள். நாட்டை ஆள வந்தால் குழப்பந்தான்” என்றான் வண்டிக்காரன். 

உதயசந்திரன் வண்டிக்காரனிடம் திரும்பி, “இளவரசன் ஒருவன் உண்டே. அவனுக்கு முடி சூடியிருக்கலாமே” என்றான். 

“நல்ல வேளையாக மகாராசா இளவரசனை சிம்மாசனத்தில் ஏற்றவில்லை. அவன் ஆள வந்துவிட்டால், பல்லவ நாட்டுப் பெண் ஒருத்தி கூடக் கற்புடனிருக்க முடியாது. அவனுக்கு வாய்த்திருக்கும் பெண்டாட்டி ஒரு ராட்சசி. பார்க்க ரதி மாதிரி இருப்பாள். ஆனால் குணம் பாம்பு மாதிரி” என்றான் வண்டிக்காரன். 

“அவளால் என்ன சங்கடம்? எந்த நாட்டு ராஜகுமாரி?” என்று கேட்டான், ராஜன் நம்பூதிரி. 

“நாடாவது மண்ணாவது. நல்ல இனத்தைச் சேர்ந்தவளாயிருந்தால் பண்பாடு இருக்குமே. இது எந்தச் சாக்கடையில் ஊறிய மட்டையோ?” 

“இனம் தெரியாதவளா?” 

“நாட்டியக்காரி. பூர்வீகம் தெரியவில்லை. தான் தான் ராணி என்ற நினைப்பு. அவளே உத்தரவிடுவதும் உண்டு. இளவரசன் அவளுக்குத் தலையாட்டுவான். இங்கே ஆட்சியா நடக்கிறது? தூ…த்தூ” என்று காரித் துப்பினான், வண்டிக்காரன். கோபத்தில் மாடுகளைச் சாட்டையால் அடித்தான். வண்டி விரைந்தது. 

வண்டி ஒரு கல் தூரம் போயிருக்கும். வழியில் இரண்டு பிக்ஷக்கள் நின்று கொண்டிருந்தனர். வண்டிக் காரன் மாடுகளை முடுக்கி விரட்டினான். “புத்த துறவிகள் என்று தான் ஒழிவார்களோ” என்று முணுமுணுத்தான். 

உதயசந்திரன் சிரித்தான். “பிக்ஷுக்கள் வண்டியில் ஏறி விடுவார்களோ என்று பயந்து வண்டியை விரட்டுகிறீரோ?” என்றான். 

“ஆமாம்; அவர்களைப் பார்த்தால் காஞ்சிக்குப் போகிறவர்களாகத்தான் தோன்றுகிறது. நான் சம்மதித்தாலும் என் மாடுகள் சம்மதிக்காது.” 

“ஏன்?” 

“என் மாடுகள் சைவமாடுகள். நந்தி சிவபெருமானின் வாகனமாயிற்றே” என்று கூறிச் சிரித்தபடியே மாடுகளை முடுக்கினான். 

பிக்ஷுக்களின் அருகே வண்டி சென்றபோது, இரு பிக்ஷுக்களும் கைகளை நீட்டி வண்டியை மறித்தார்கள். வண்டிக்காரன் முணுமுணுத்தபடியே வண்டியை நிறுத்தினான். 

“இருவருக்கு இடம் இருக்குமா?” என்று ஒரு பிக்ஷு கேட்டார். 

“ஏற்கனவே வண்டியில் இருவர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இடைஞ்சலாய் இருக்குமே” என்றான் வண்டிக்காரன். 

பிக்ஷுக்களில் இளைஞராயிருந்தவர் வண்டியின் பின் பக்கம் வந்து, “எங்கள் இருவருக்கும் இடமளிக்க முடியுமா? காஞ்சி வரை போகிறோம்” என்று கேட்டார். 

உதயசந்திரன் உடனே சமாளித்துக் கொண்டு, “வாருங்கள். சமாளித்துக் கொள்ளலாம்” என்றான். வண்டிக்காரன் முணுமுணுத்ததைக் கேட்டு, சிரித்துக் கொண்டான். 

பிக்ஷுக்கள் வண்டிக்குள் ஏறி அமர்ந்ததும் வண்டிக்காரன் மாடுகளை ஓங்கி அடித்து முடுக்கினான். பிக்ஷுக்களின் மொட்டைத் தலைகளில் ஓங்கி அடிப்பதாக அவனுடைய கற்பனை. ராஜன் நம்பூதிரிக்கு சிரிப்பு வந்தது. சற்று தூரம் சென்றதும் பிக்ஷக்களைச் சீண்டுவதற்காக வண்டிக்காரன் பேசத் தொடங்கினான். 

“சாமிகளுக்கு விவரம் தெரியுமா? நாகப்பட்டினத்து மடத்தில் ஏதோ விசேஷமாமே?” என்றான். 

பிக்ஷுக்கள் விவரம் புரியாமல் வண்டிக்காரனைப் பார்த்தார்கள். வண்டிக்காரன் குறும்பாகச் சிரித்தான். “சாமிகளுக்கு இன்னும் செய்தி எட்டவில்லையா? நாகப்பட்டனத்திலிருந்து கப்பல் வந்ததே, விசாரிக்க வில்லையா?” என்றான். 

“நாகப்பட்டினத்து மகாவிஹாரத்திலிருந்து செய்தியா?” என்று வயோதிகப் பிக்ஷ ஆவலுடன் கேட்டார். 

“ஆமாம். நீங்கள் நாகப்பட்டினத்து மடத்திலிருந்து தான் இங்கு ஓடி வந்திருக்கிறீர்கள் என்று நினைத்தேன். அப்படியானால் உங்களுக்கு விவரமே தெரியாதா?” 

பிக்ஷுக்கள் பதறியபடி வண்டிக்காரனைப் பார்த்தனர். அவனோ பரபரப்பின்றி வெற்றிலையைச் சுவைத்தபடி அலட்சியமாக மாடுகளைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான். 

“நீ என்ன சொல்கிறாய்? விவரமாகச் சொல்லேன்” என்றார் இளம் பிக்ஷு, பொறுமை இழந்தவராய். 

“நாகப்பட்டினத்து பௌத்தமடத்தைக் கொள்ளை யடித்து விட்டார்கள்…. ஹை….ஹை….” என்று மாடுகளை விரட்டினான். 

“ஆ…!” என்று இரண்டு பிக்ஷுக்களும் கூவினார்கள். 

உதயசந்திரன் பதற்றமடைந்தவனாய், “சூறையாடி விட்டார்களா? பௌத்த விஹாரத்தையா?” என்று கேட்டான். 

“ஆமாம். அங்கே பொன்னால் ஆன பெரிய புத்தர் சிலை இருந்ததாமே; அதையும் எடுத்துக் கொண்டு போய் விட்டார்களாம்” என்றான் வண்டிக்காரன். 

“ஐயோ, சிலையும் கொள்ளை போய்விட்டதா?”- பிக்ஷுக்கள் பதறினார்கள். 

“ஆனால் பிக்ஷக்களை யாரும் கொலை செய்யவில்லை” என்று கூறிச் சிரித்தான் வண்டிக்காரன். அவனுடைய சிரிப்பில் கேலியும் குறும்பும் கலந்திருந்தன. பிக்ஷுக்கள், முகம் வாடித் தலையைக் குனிந்த வண்ணம் பிரார்த்தனையில் இருந்தனர். 

“யார் திருடர்களா?” என்று ராஜன் நம்பூதிரி கேட்டான்.

“யாரோ ஆலி நாட்டு ராசாவாம்.”* 

“ஆலி நாடு ஒரு சிற்றரசு. சோழ நாட்டிலிருக்கிறது” என்றான் உதயசந்திரன். “ஒரு குறு நில மன்னனா கொள்ளையடித்தான்?” என்று வியந்தான். 

*இவர்தாம் திருமங்கையாழ்வார் என்று பிற்காலத்தில் அழைக்கப்படுகிறார்.

“அந்த ராசா தீவிரமான வைணவராம். வைணவக் கோயில்களைப் புதுப்பிப்பதற்குப் பணம் தேவையாம். அதற்காக அந்த மடத்தைக் கொள்ளையடித்தாராம். சிலையிலிருக்கிற தங்கத்தைக் கொண்டு பத்துக் கோயில்களைக் கட்டலாம்!” என்றான் வண்டிக்காரன்; திரும்பிப் பிக்ஷுக்களைப் பார்த்துச் சிரித்தான். 

பிக்ஷுக்களைப்பார்த்து உதயசந்திரனும், நம்பூதிரியும் பரிதாபப்பட்டனர். வண்டிக்காரனின் கேலிச் சிரிப்பு மன வேதனையைக் கொடுத்தது. வண்டிக்குள் யாரும் பேச வில்லை. வண்டிக்காரன் உற்சாகம் மேலிட்டுப் பாடத் தொடங்கினான். 

“பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா….” என்று அவன் போக்கில் முழங்கினான். அவ்வேளையில் அவனுடைய பாட்டு, இழவு வீட்டில் சிரிப்பொலி கேட்பது போலிருந்தது. பாட்டை இடையில் நிறுத்தி விட்டு வண்டிக்காரன் திரும்பி வண்டிக்குள்ளே பார்த்துப் பேசினான். 

“அந்தச் சிலையில் கால்வாசி கிடைத்தாலும் காஞ்சி கைலாசநாதர் கோயிலை இன்னும் பெரிதாகக் கட்டி விடலாம். இருந்திருந்து அவ்வளவு தங்கமும் ஒரு வைணவ னிடம் போய்ச் சிக்கி விட்டதே” என்று ஆற்றாமை கொண்டான். 

“மதச் சண்டைகளுக்கு முடிவே கிடையாது போலிருக்கிறது” என்றான் உதயசந்திரன். 

மாலையில், இருட்டுகிற நேரத்தில் வழியில் வல்லம் என்ற கிராமத்திலிருந்த சத்திரத்தின் வாசலில் வண்டி நின்றது. தெருக்களில் மக்கள் கும்பல் கும்பலாக நின்றவாறு விவா தித்துக் கொண்டிருந்தனர். உதயசந்திரன் வண்டியிலிருந்து இறங்கி விசாரித்தான். 

அந்த ஊர் மன்றத் தலைவரை பதவியிலிருந்து நீக்க மகாராணி ஆணை பிறப்பித்திருப்பதாக ஒருவர் கூறினார். “தலைவர் ஏதாவது தவறு இழைத்து விட்டாரா?” என்று உதயசந்திரன் கேட்டான். 

“அவர் ஒரு தவறும் செய்யாமலிருந்ததுதான் காரணம்” என்று வயிற்றெரிச்சலுடன் பதில் வந்தது. பிறகு அவர் சொன்னார்: “ராணியம்மாள் தான்தோன்றித்தனமாக நடக்க ஆரம்பித்து விட்டாள். அவளிஷ்டம் போல் ஒருவரைத் தலைவராக நியமித்து இங்கே அனுப்பி வைக்கப்போவதாகத் தகவல் வந்திருக்கிறது.” 

“ஊர் மக்கள்தாமே தலைவரைத் தேர்ந்தெடுப்பது வழக்கம்?” 

“ஆமாம், கோயிலில் சந்நிதிக்கு எதிரே கடவுள் சாட்சியாக ஊர்த்தலைவரைத் தேர்ந்தெடுத்தோம்.” 

“இப்போதுள்ள உங்கள் தலைவர் மீது ராணிக்கு என்ன கோபம்?” 

“இந்த முறை மழையில்லை. காடு கழனிகளில் அரை விளைச்சல் கூட இல்லை. ஆனால் மகாராணி, என்ன காரணமாயிருந்தாலும் வரியைக் குறைக்கக் கூடாது என்று நாடு முழுவதும் கட்டளை பிறப்பித்திருக்கிறாளாம். எங்கள் ஊர்த் தலைவர் அதற்கு மாறாக, விளைந்த அளவிற்குத் தகுந்தபடி வரி வசூலித்தார். இதுதான் காரணம்.” 

“நியாயந்தானே? தலைவர் குற்றம் ஏதும் புரியவில்லையே.” 

“இந்த நியாயம் ராணியம்மாளுக்குத் தெரியவில்லையே! முழு வரியையும் முப்பது நாட்களுக்குள் செலுத்தி விட வேண்டுமாம்” என்று அங்கலாய்ப்புடன் கூறினார். 

வாசலில் வண்டி நின்றதைக் கண்டதும், சத்திரத்து முற்றத்துத் திண்ணையில் அமர்ந்திருந்த ஒரு கிழவர், எழுந்து வண்டியை நோக்கி வந்தார். 

“பெரியவரே, ஐந்து பேர் இருக்கிறோம். இன்று இரவு மட்டும் தங்க வேண்டும்” என்றான் வண்டிக்காரன். 

கிழவர் கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தார். “தங்கலாம்… ஆனால்…” என்று தயங்கினார். 

“காசு கொடுத்து விடுகிறோம்” என்றான் உதயசந்திரன். “அதற்கில்லை. காஞ்சியிலிருந்து ஒரு அதிகாரியும், இரண்டு காவல் வீரர்களும் வந்திருக்கிறார்கள்.” சத்திரத்து கிழவர் சொன்னார். 

“அதனால் என்ன?” 

“அவர்களுக்கு உள்ளே அறைகள் கொடுத்திருக் கிறேன்; மற்றவர்கள் தங்குவதை ஆட்சேபிப்பார்களோ என்று தான்….” 

“சத்திரம் முழுவதிலுமா தங்கப் போகிறார்கள்? நாங்கள் வெளியே உள்ள அறைகளில் தங்கிவிட்டுக் காலையில் போய்விடுகிறோம்” என்றான் வண்டிக்காரன். 

“சரி, அவர்கள் நதிக்கரைக்குப் போயிருக்கிறார்கள். நீங்கள் எல்லாரும் இந்த முன் பக்கத்து அறைகளில் தங்கிக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டுக்கிழவர், பயணிகளுக்கு உணவு தயாரிக்க அடுக்களைப் பக்கம் சென்றார். 

“ஊர் மன்றத் தலைவரை நீக்கிய கட்டளையை அறிவிக்க வந்த அதிகாரிதாம் இங்கே தங்கியிருக்கிறார் போலிருக்கிறது” என்றான் ராஜன் நம்பூதிரி. 

“யாராக இருந்தால் நமக்கென்ன,” என்று உதயசந்திரன் முனகியவாறே அறைக்குள் சென்று பயணச் சுமையைக் கீழே இறக்கினான். அறைக்குள் புழுக்கமாயிருக்கவே, மண்டபம் போல் அமைந்திருந்த முன் பகுதிக்கு வந்தான். 

வாசலில் குதிரைகளின் குளம்பொலி கேட்டது. உதய சந்திரன் எட்டிப் பார்த்தான். மூன்று பேர் குதிரைகளிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தனர். சத்திரத்துக் கிழவர் குறிப்பிட்ட அதிகாரியும், காவல் வீரர்களும் அவர்களாகத்தானிருக்கும் என்று எண்ணியபடி திண்ணையில் சாய்ந்தான், உதய சந்திரன். 

6. காஞ்சியில் கிடைத்த வரவேற்பு

சத்திரத்தினுள் வந்தவன் ஓர் அதிகாரிதான் என்பது அவன் நடந்து வந்த தோரணையிலேயே தெரிந்தது. உதயசந்திரன் அவனைப் பற்றி அக்கறை ஏதுமின்றிக் கண்களை மூடியபடி திண்ணையில் சாய்ந்திருந்தான். ராஜன் நம்பூதிரியும், பிக்ஷக்களும் சற்று தள்ளியிருந்த ஒரு கல் திண்டின் மீது அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். வண்டிக்காரன், வாசலில் மாடுகளுக்குத் தீனி போடுவதில் முனைந்திருந்தான். 

உள்ளே நுழைந்த அதிகாரி, தான் அமர்வதற்கு இடம் பார்த்தான். திண்ணையிலிருந்த உதயசந்திரனைக் கண்டதும் காவல் வீரனிடம், “அவனைக் கிளப்பு” என்றான். 

காவல் வீரன், உதயசந்திரனை நெருங்கி, அவன் தோளைப் பலமாகத் தட்டினான். “இந்தாப்பா, எழுந்திரு” என்றான். 

கண்களை விழித்த உதயசந்திரன், நிமிர்ந்து உட்கார்ந் தான். “என்ன வேண்டும்?” என்று காவல் வீரனிடம் கேட்டான். 

“வேறு எங்காவது போய் உட்கார். சீக்கிரம் எழுந்திரு.” 

“ஏன்?” 

“அதிகாரி உட்கார வேண்டும்.” 

“அவரை வேறு எங்காவது போய் உட்காரச் சொல்” என்று கூறிவிட்டு மீண்டும் சாய்ந்து சொண்டான், உதயசந்திரன். 

“அவனை இழுத்து வெளியே தள்ளு” என்று இரைந் தான், அதிகாரி. அவன் வாயிலிருந்து மதுவின் நெடி வீசியது. அதிகாரியின் இரைச்சலைக் கேட்டு ஓடிவந்தான், ராஜன் நம்பூதிரி. “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான். 

“நீ யாரடா கேட்பதற்கு, மொட்டைத் தலையா?” என்றான் அதிகாரி. 

“மரியாதை தவறிப் பேச வேண்டியதில்லையே” என்றான், ராஜன் நம்பூதிரி. 

“யாருக்கடா நான் மரியாதை கொடுக்க வேண்டும் ? நீ என்ன ஜாதி? பிராமணனா? மூஞ்சியைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது” என்று கூறிவிட்டு உரக்கச் சிரித் தான், அதிகாரி. அவன் வாயிலிருந்து வீசிய மதுவின் நெடியைப்பொறுக்காமல் ராஜன் நம்பூதிரி, அருவருப்புடன் மூக்கைப் பொத்திக் கொண்டான். 

உதயசந்திரன் கோபத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்தான். ‘இதென்ன உம்முடைய சொந்த வீடா? அரசாங்கத்தின் சத்திரத்தில் வந்து கலாட்டாவா செய்கிறீர்” என்றான். 

“நான் அரசாங்க அதிகாரி.” 

“அதிகாரி என்றால், அரசாங்கத்தின் கூலியாள். அவ்வ ளவுதானே? அதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்?” 

“திமிராகவா பேசுகிறாய்?” 

“அரசாங்கத்தில் கூலி வாங்கிப் பிழைக்கும் உமக்கே திமிர் இருக்கும்போது, யாரிடமும் கூலி வாங்கிப் பிழைக்காத எனக்குத் திமிர் இருக்காதா?” 

“மரியாதையாக எழுந்து: அப்பால் போ” என்று இரைந்தான் அதிகாரி. 

“காசு கொடுத்துத்தான் சத்திரத்தில் தங்குகிறோம்.” 

“ஏய், இந்தத் திமிர் பிடித்தவனை இழுத்துத் தெருவிலே தள்ளு” என்று காவல் வீரனைப் பார்த்து இரைந்தான் அதிகாரி. 

சத்திரத்திலிருந்து எழுந்த இரைச்சலைக் கேட்டுத் தெருவில் நின்று கொண்டிருந்த சிலர், உள்ளே வந்து வேடிக்கை பார்த்தனர். கூட்டத்தில் ஒருவன், “என்ன சிக்கல்?” என்று கேட்டான். 

“இவர் அதிகாரியாம். ஆதலால், நாங்கள் இங்கே அமரக்கூடாதாம். வம்பு செய்கிறார்” என்றான், ராஜன் நம்பூதிரி. 

“சத்திரம் எல்லாருக்கும் பொதுதானே” என்றான் கூட்டத்தில் ஒருவன். 

“அதிகாரி என்றால் கொம்பா முளைத்திருக்கிறது?” என்றான்,இன்னொருவன். 

“அதிகாரியும் மனிதன்தானே?” என்று ஒரு குரல் கேட்டது. 

“சோறுதானே சாப்பிடுகிறார்?” என்ற மற்றொரு குரல், இரைந்து கேட்டது. 

அதிகாரியின் கண்கள் கோபத்தினால் பிதுங்கிக் கொண்டிருந்தன. “இதென்ன இங்கே கூட்டம்? எல்லாரும் வெளியே போங்கள்” என்று இரைந்தான். உடனே காவல் வீரர்கள் இருவரும் உள்ளே நுழைந்த கூட்டத்தைக் கலைக்க முனைந்தனர். ஆனால், கூட்டம், உள்ளே பெருகிக் கொண்டே இருந்தது. இதற்குள் ராஜன் நம்பூதிரி, வாச லுக்குச் சென்று தெருவில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தினரிடம், “உங்கள் ஊர் மன்றத் தலைவரின் பதவி நீக்கத்தை அறிவிக்க வந்த அதிகாரி, குடித்துவிட்டு உள்ளே வம்பு செய்கிறார்” என்றான். உடனே, தெருவில் குழுமியிருந்த கூட்டமும் சத்திரத்துக்குள் புகுந்தது. காவல் வீரர்களால் சமாளிக்க முடியவில்லை. அதிகாரி, கூட்டத்தினரைப் பார்த்துக் கூச்சலிட்டான். 

“உள்ளே என்ன கூட்டம் ? வெளியே போங்கள். உங்களுக்கு இதில் சம்பந்தம் ஒன்றுமில்லை. போங்கள் வெளியே.” 

கூட்டம் கலையவில்லை. கூட்டத்திலிருந்த ஒருவன், “மது அருந்தி வம்பு செய்யும்படியும் உத்தரவு அனுப்பியிருக் கிறாரோ, மகாராணியார்” என்றான். 

அதிகாரி கோபத்துடன் திரும்பி, அவனை முறைத்துப் பார்த்தார். 

“அடே, முறைக்கிறாரே. ராணியம்மா முறைக்கவும் உத்தரவு கொடுத்தாளோ?” என்றான் ஒருவன். அதே சமயம், கூட்டத்தின் நடுவிலிருந்து யாரோ ஒருவன் “அவன் தலையில் ஒரு போடு போடுங்களடா” என்றான். 

“அவன் திமிரை அடக்க வேண்டும்” என்று ஒரு குரல் வீறிட்டது. திடீரென்று கூட்டத்தில் சலசலப்புத் தோன்றியது. நெரிசல் ஏற்பட்டு, கூட்டம் அதிகாரியைச் சூழ்ந்து கொண்டது. காவல் வீரர்கள் செய்வதறியாது திகைத்தனர். கூட்டத்தில் அதிகாரியின் பின்னாலிருந்த ஒருவன், அதிகாரி யின் பிடறியில் தட்டினான். அதிகாரி அதிர்ச்சியடைந்தவனாய்த் திரும்பிய போது, இன்னொரு கை அதிகாரியின் வயிற்றில் குத்தியது. மறுகணம், படபடவென்று அதிகாரியின் உடல்மீது அடிகளும், குத்துக்களும் விழத்தொடங்கின. அவன் வலி பொறுக்காமல் அலறினான். கூட்டம் அவனையும், இரு காவல் வீரர்களையும் நெட்டித் தள்ளிக் கொண்டு சத்திரத்துக்கு வெளியே சென்றது. சத்திரத்து வாசலில் அதிகாரிக்குப் பலத்த அடிகள் விழத் தொடங்கின. 

“ஊர்த் தலைவரை விலக்கிய கட்டளையா கொண்டு வந்தாய்? எங்களுடைய பதில் கட்டளையை வாங்கிக் கொள்; ராணியாரிடம் போய்ச் சொல்” என்று இரைந்து கொண்டே யாரோ ஒருவன் அதிகாரியின் முகத்தில் குத்தினான். 

“இந்தா வாங்கிக்கொள் நாங்கள் கொடுக்கும் வரியை” என்று கூறிக்கொண்டே ஒருவன் முதுகில் படபடவென்று அறைந்தான். 

கூட்டம் அதிகாரியையும் காவல் வீரர்களையும் அடித்து இழுத்துக் கொண்டு ஊர் எல்லையை நோக்கி நகர்ந்தது. உதயசந்திரனும் மற்றவர்களும் சத்திரத்தின் வாசலில் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டு நின்றனர். 

“ஐயோ, கூட்டம் அவர்களை அடித்தே கொன்று விடும் போலிருக்கிறதே” என்றான், ராஜன் நம்பூதிரி. 

பிக்ஷுக்கள் இருவரும் பதற்றமடைந்திருந்தார்கள். கூட்டத்துடன் சற்று தூரம் போய் தன் பங்குக்கு அதிகாரியை இரண்டு முறை அடித்துவிட்டுத் திருப்தியுடன் திரும்பிய வண்டிக்காரன், “செம்மையாக உதைத்துவிட்டார் கள்.நானும் இரண்டு போட்டேன். வேண்டியதுதான், இந்த அடி. திமிர் பிடித்த அதிகாரி” என்றான். 

“எங்கே கொண்டு போகிறார்கள்?” என்று இளம் பிக்ஷு கேட்டார். 

“இரவு, ஊருக்கு வெளியே உள்ள காளி கோயிலில் கட்டிப் போடப் போகிறார்களாம். காலையில் முகத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, காஞ்சிக்கு அனுப்பப் போகிறார்களாம்.” 

“ஆத்திரத்தில் மக்கள் இப்படிச் செய்கிறார்கள். இதற்குப் பழி வாங்குவதற்காக நாளை இந்த அதிகாரி படை வீரர்களோடு வந்து இந்த ஊர் மக்களை வேட்டை யாடினால் என்னவாகும் ? மகாராணியே இந்த ஊரைத் தண்டிக்க ஒரு சிறு படையை அனுப்பி வைக்கலாம்” என்றார், சத்திரத்துக் கிழவர். 

“மக்கள் கொதித்தெழுந்தால் இப்படித்தான் கண் மூடித்தனமாக ஏதாவது நடக்கும். கூட்டத்துக்கு முன் யோசனை ஏது?” என்றான் ராஜன் நம்பூதிரி. 

மறுநாள் அதிகாலையில், வல்லத்து சத்திரத்திலிருந்து வண்டி, காஞ்சியை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியது. பிக்ஷுக்கள் இருவரும் முகம் வாடிப் போயிருந்தனர். இரவு நடந்த கலவரம் அவர்களுடைய உள்ளத்தில் வேதனை யைக் கொடுத்திருந்தது. வண்டிக்காரன் மட்டும் உற்சாகமா யிருந்தான். அவனுக்கு ஒரு அதிகாரியை அடித்துவிட்ட பெருமை. ஊருக்குப் போன உடன் இந்தப் பெருமையை மனைவியிடம் சொல்லவேண்டுமென்ற ஆசையில் மாடு களை முடுக்கி விரட்டினான். 

மாலையில், காஞ்சியிலிருந்து மூன்று கல் தொலைவில் இருந்த ஒரு சிற்றூரில் வண்டியை நிறுத்தினான். “இதுதான் என்னுடைய ஊர். காஞ்சி, இன்னும் மூன்று கல் தொலைவு தான். கொஞ்சம் விரைவாக நடந்தால் அஸ்தமனத்துக்குள் போய்ச் சேர்ந்துவிடலாம்” என்றான். 

அவனுக்கு நன்றி கூறிவிட்டு மற்ற நால்வரும் காஞ்சிப் பாதையில் நடக்கத் தொடங்கினர். அந்தப் பாதை, காஞ்சிக் குச் செல்லும் முக்கியமான பாதையாதலால், வண்டிகளும் அதிகம் தென்பட்டன. பாதசாரிகளும் அதிகமாயிருந்தனர். 

“சுவாமிகளே,நீங்கள் வேண்டுமானால் ஏதாவது ஒரு வண்டியில் ஏறிக்கொண்டு செல்லலாமே?” என்றான் உதய சந்திரன். 

வயோதிகப் பிக்ஷ மறுத்து, “கொஞ்சந் தொலைவு தானே? நடந்துவிடலாம். வண்டிக்குள் கால்களை மடக்கி அமர்ந்து மரத்துவிட்டன” என்றார். 

காஞ்சிக் கோட்டையின் மதில், தூரத்தில் ஒரு கல் தொலைவிலேயே தெரிந்தது. உதயசந்திரன், சிறுவனா யிருந்தபோது ஒரு முறை பாட்டனாருடன் காஞ்சிக்குச் சென்றிருக்கிறான். இப்போதுதன்னுடைய எதிர்காலத்துக்கு அவன் நம்பி வந்திருந்த காஞ்சிநகர் நெருங்கிவிட்டதை அறிந்து பரபரப்படைந்தான். 

‘கஞ்சிக்கு இல்லையென்றால் காஞ்சிக்குப் போ’ என்று ஒரு பழமொழி அந்தக் காலத்தில் கூறப்பட்டு வந்தது. 

‘வந்தவனை வாழ வைக்கும் வற்றாத காஞ்சி’ என்று ஒரு புலவர் பாடியிருந்ததும் அவன் நினைவுக்கு வந்தது. காஞ்சியை நெருங்க நெருங்க அவன் மனத்தில் ஒருவிதப் பயம்கூடத் தோன்றியது. 

“அடேயப்பா! எவ்வளவு பெரிய கோட்டை ! ஒரு கல் தொலைவிலேயே தெரிகிறதே!” என்று வியந்தான், ராஜன் நம்பூதிரி. 

“கோட்டைக்குள் போய்விட்டால் இன்னும் பிரமித்துப் போய் விடுவாய். வீதிகளின் அழகும் கட்டடங்களின் அமைப்பும், தோப்பும் துரவும் பிரமாதமாயிருக்கும்’ என்றார் இளம் பிக்ஷ. 

ராஜன் நம்பூதிரி மிகுந்த உற்சாகமடைந்தவனாய், “எனக்கு நேர்ந்த துன்பத்தினால் கடைசியில் நன்மையும் கிட்டியிருக்கிறது. முந்திய ஜென்மப் பயன்தான். இல்லை யென்றால்,விதி என்னை இப்படி இந்த மாபெரும் நகரத்துக்கு இழுத்து வந்திருக்குமா?” என்றான். 

அப்போது வயோதிகப் பிக்ஷ சொன்னார்: “தம்பி, காஞ்சி நகர் எவ்வளவு அழகாகவும், பெரிதாகவும் இருக்கிறதோ அவ்வளவுக்கு ஆபத்தும் நிறைந்தது. ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இப்போது நகரில் மன்னரும் இல்லை. ராணி தான் ஆள்கிறாள். ஏதாவது அநியாயம் நடந்தால் கூட முறையிட மன்னர் இல்லை”. 

“ஓ…!”-ராஜன் நம்பூதிரிக்கு உள்ளூரப் பயம் தோன்றியது.  

“அரசன் இல்லை என்ற தைரியத்தில்தானே நாகப்பட்டினத்துப் பௌத்த விஹாரத்தில் கொள்ளை யடித்திருக்கிறார்கள். நகரங்களில்தான் விழிப்பாக இருக்கவேண்டும். செல்வமும், நாகரிகமும் சூழ்ந்திருக்கும் இடங்களில்தான் தீமைகள் அதிகம் நடைபெறும்” என்றார் பிக்ஷ. 


சூரிய அஸ்தமன சமயத்தில் கோட்டை வாயிலை நெருங்கினார்கள். கோட்டையைச் சுற்றிப் பெரிய அகழி இருந்தது. அகழியைக் கடந்து கோட்டை வாயிலை அடைவதற்கான பிருமாண்டமான மரப்பாலம், பெரிய சங்கிலிகளால் உயரே தூக்கப்பட்டிருந்தது. அப்போது போர்க்கால மாதலால் கோட்டையை இணைக்கும் பாலத்தை உயரே தூக்கியிருந்தார்கள். தினமும் நான்கு முறை, ஒரு நாழிகை நேரத்துக்குப் பாலத்தைக் கீழே இறக்கிப் போக்குவரத்துக்கு வகை செய்தார்கள். 

கோட்டைக்குள் செல்லவேண்டியவர்கள், அகழியின் மறுகரையை ஒட்டியிருந்த பெரிய மைதானத்தில் காத்திருந் தனர். மைதானத்தில், பல வண்டிகளும், குதிரை மீதிருந்தவர் களும், பாதசாரிகளுமாகப் பெருங்கூட்டம், பாலம் இறக்கப் படுவதை எதிர்பார்த்துக் காத்திருந்தது. உதயசந்திரனும் மற்றவர்களும் கூட்டத்தோடு நின்றவாறு ஆவலுடன் கோட்டை வாயிலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். 

சற்று நேரத்தில் கோட்டை மதிலின் மீது ஒருவன் தோன்றினான். தோளில் தொங்கிய கொம்பை எடுத்து ஊதினான். பிறகு மைதானத்தில் காத்து நின்ற மக்களை நோக்கி இரைந்து பேசினான் : “பாலம் ஒரு நாழிகைக்கு இறக்கப்படும். நகரத்துக்குள் வரவேண்டியவர்கள் வரலாம். வீரப் போட்டிக்கு வீரர்கள் யாராவது வந்திருந்தால், உள்ளே கோட்டை வாயில் சதுக்கத்தில் பெயரைப் பதிந்து கொள்ளலாம். போட்டி வீரர்களுக்கு அரசாங்கச் சத்திரத்தில் தங்குவதற்கு வசதியளிக்கப்படும்”. 

அறிவித்து முடிந்ததும், உட்பக்கமாகத் திரும்பிக் கையை அசைக்கவே மறுகணம் பாலம், கடகடவென்று பேரிரைச்சலுடன் உயரே இருந்து அகழிக்குக் குறுக்காகக் கீழே இறங்கியது. காத்திருந்தவர்கள் முண்டியடித்துக் கொண்டு ஓடினார்கள். பாலம் தடதடவென அதிர்ந்தது. “விலகு, விலகு, ஓரம் போ…” என்று இரைந்துகொண்டே குதிரை வீரர்கள் சிலர், பாலத்தின் மீது குதிரைகளை விரைந்து செலுத்தினர். கூட்டம் பயந்து போய், பாலத்தின் இரு விளிம்புகளுக்கும் ஒதுங்கி விலகியது. ஒரு கிழவி, அகழிக் குள் விழ இருந்தாள். நல்லவேளையாகப் பக்கத்திலிருந்த வன் அவளைப் பிடித்துக் கொண்டான். 

“என்ன, கொள்ளையா போகிறது? மெதுவாகப்போ னால் என்ன? குதிரையில் போகிற திமிர்” என்றாள் கிழவி. 

ஒரு குதிரை வீரன், “ஏய், கிழவி, நீ அகழிக்குள் விழுந்தால் முதலைகளுக்கு லாபந்தான்” என்றான். 

பின்னால் வந்த ஒரு குதிரை வீரன், “கிழவியின் உடலில் சதைப்பற்றே இல்லையே. பாவம், முதலைகளுக்கு வெறும் எலும்புதானே கிடைக்கும்” என்றான். சிலர் சிரித்தனர். கிழவி முணுமுணுத்தவாறே ஏதோ ஏசிக் கொண்டே நடந்தாள். 

கோட்டை மதில் வாயிலைத் தாண்டி உட்பக்கம் சென்றதும், பிக்ஷக்கள் இருவரும் விடைபெற்றனர். “நாங்கள் போதிதர்ம மடத்துக்குப் போகிறோம். நீ போக வேண்டிய பௌத்த கடிகை, புத்தர் சேரித் தெருவிலிருக்கிறது. இப்படியே இடது பக்கமாகப் போனால் கைலாச நாதர் கோயில் தென்படும். அதைக் கடந்து ஒரு பெரிய தெரு வரும். அதில் போய் இடது பக்கத்திலுள்ள முதல் முடுக்குத் தெரு வழியாகச் சென்றால் புத்தர் சேரித் தெருவுக்குப் போய்ச் சேரலாம்” என்று வழி சொல்லிவிட்டுப் பிக்ஷுக்கள் இருவரும் சென்றனர். 

உதயசந்திரனும், ராஜன் நம்பூதிரியும் சற்று நேரம் அங்கேயே நின்று வருவோரையும் போவோரையும் பார்த்துக்கொண்டிருந்தனர். சூரியன் அஸ்தமனமாகி விட்ட போதிலும், நல்ல வெளிச்சம் இருந்தது. வீதியில் ஆங் காங்கே மக்கள் கும்பலாக நின்று பேசிக் கொண்டிருந்ததை குதிரை வீரன் ஒருவன், விலகிச் செல்லும்படி அறிவித்துக் கலைத்துக் கொண்டிருந்தான். உதயசந்திரனைப் பார்த்து ஒரு குதிரை வீரன், “ஏய், நீ எங்கே போகவேண்டும்? வீதி யில் இப்படி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. போ, போ” என்றான். 

உதயசந்திரனும், ராஜன் நம்பூதிரியும் பிக்ஷுக்கள் சொன்ன திசையில் நடக்கத் தொடங்கினர். கைலாசநாதர் கோயிலை அடுத்திருந்த நந்தவனத்தின் அருகில் சென்று கொண்டிருந்தபோது, உதயசந்திரன் திடீரென்று பரபரப் படைந்தான். நடையின் வேகம் குறைந்தது. 

ஓ….! அந்த நறுமணம்! மருக்கொழுந்தின் மணம் !

உதயசந்திரன் பேச்செடுக்கு முன்பேராஜன் நம்பூதிரி, “சீனப்பெண்ணின் செடி இங்கே நந்தவனத்திலிருக்கிறதே?” என்றான். மூச்சை இழுத்து வாசனையை ரசித்தான். உதய சந்திரனின் நினைவு, மாமல்லபுரத்துக்கு ஓடிவிட்டது…. 

லீனா, செடிகளுக்கு இப்போது தண்ணீர் ஊற்றிக் கொண்டிருப்பாள். என்னை நினைப்பாளா….? பாவம், எவ்வளவு துன்பம் அவளுக்கு நேர்ந்துவிட்டது. சில வினாடிகள் நான் முந்தியிருந்தால் அவள் தந்தையையும் காப்பாற்றி யிருந்திருக்கலாம். அந்தத் துன்பம் அவளை வெகுவாகப் பாதித்துவிட்டதே…. 

ஒரு தும்மல் வந்தது. தன்னை லீனா நினைப்பதாக எண்ணினான். 

அவள்தான் நினைக்கிறாள். இந்த உலகத்தில் என்னை வேறு யார் நினைக்கப் போகிறார்கள்…. 

கைலாசநாதர் கோயில் வாசலில் கூட்டத்தின் நெருக் கடி அதிகம் இருந்தது. வசதியாக நடந்து செல்ல இயலாதபடி வீதியின் இருபுறமும் பல கடைகளிருந்தன. கடைகளில் பொருட்களை வாங்கிய கூட்டம், பாதையை மறித்தவாறு அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தது. கோயிலுக்குச் செல்பவர்கள் நெருக்கியடித்துக் கொண்டு நடக்க வேண்டி யிருந்தது. உதயசந்திரனும், ராஜன் நம்பூதிரியும் கோயில் வாசல் கடைகளை வேடிக்கை பார்த்தவாறே கூட்டத்தில் இடிபட்டபடி நடந்து கொண்டிருந்தனர். அந்த வீதியின் திருப்பத்தில் அவர்கள் வந்ததும் எதிரே ஏழெட்டுக் குதிரை வீரர்கள் வேகமாக வரவே, அவர்கள், பதறியபடி விலகி ஒதுங்கி நின்றார்கள். அப்போது எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. 

வேகமாக வந்த வீரர்கள், தங்கள் கைகளிலிருந்த இரும்புத் தடிகளால் கோயில் வாசலில் இருந்த எல்லாக் கடைகளையும் இடித்து நொறுக்கத் தொடங்கினர். மக்கள், பீதியடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். கடைக் காரர்கள் பரிதாபமாக அலறினார்கள். கடைக்குள்ளிருந்த பொருட்கள் அனைத்தும் தெருவில் வீசப்பட்டன. தெரு வில் விழுந்த பொருட்களைப் பலர் அள்ளிக்கொண்டு ஓடினார்கள். கோயில் சந்நிதிக்கு எதிரே இருந்த அந்த வீதி முழுவதும் ஒரே குழப்பம். 

கொஞ்ச நேரத்துக்குள் அந்த வீதி வெறிச்சோடி விட்டது. கடைக்காரர்கள் மட்டும் வீதியில் நின்றுகொண்டு வாயிலும் வயிற்றிலும் அடித்து அழுதுகொண்டு நின்றனர். வீரர்கள், கோயில் வாசலிலிருந்த கடைகள் அனைத்தையும் தரைமட்டமாக்கிவிட்டார்கள். சிறுவர்கள், தெருவில் சிதறிக் கிடந்த பொருட்களைப் பொறுக்குவதில் மும்முரமாயிருந்தனர். 

“இதென்ன? கேட்பார் கிடையாதா ? இப்படியா கடைகளை நாசமாக்குவார்கள்?” என்று முணுமுணுத்தான் உதய சந்திரன். 


ராஜன் நம்பூதிரி பயத்துடன் பார்த்துக்கொண்டு நின்றான். சற்று தள்ளி நின்றபடி பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஓர் அழகிய வெள்ளைக் குதிரையும், கறுப்புக் குதிரையும் விரைந்து வந்து அவர் களைக்கடந்துசென்றன. கூட்டத்தினரிடையே, “இளவரசர், இளவரசர்….” என்று முணுமுணுப்புக் கேட்டது. 

உதயசந்திரன், பக்கத்தில் நின்று கொண்டிருந்தவனிடம், “யார் இவர்கள்?” என்று விசாரித்தான். 

வெண்புரவி மீதிருந்தவன் இளவரசன் சித்திரமாயன் என்றும், உடன் வந்தவன் அவனுடைய மெய்க்காப்பாளன் வாணராயன் என்றும் தகவல் கிடைத்தது. 

உதயசந்திரன், இளவரசனைக் கூர்ந்து பார்த்தான். இளவரசனுக்கு வயது இருபத்தைந்து இருக்கும். முகத்தில் ராஜகளை இருந்தது. ஆனால்கண்களில் கனிவில்லை. ஒரு கொடிய நாகத்தின் பார்வையைப் போலிருந்தது. அவனு டைய அடர்ந்த புருவங்களும், தடித்த உதடுகளும் பிறரை அச்சுறுத்துவது போலிருந்தன. அவனுடைய குதிரையும், பின்னே சென்ற கறுப்புக் குதிரையும் கடைகள் இடிக்கப் பட்ட இடத்தில் போய் நின்றன. இடித்துக் கொண்டிருந்தவர் களுக்கு இளவரசன் ஏதோ கட்டளை இட்டான். பிறகு தெருவில் அழுது கொண்டிருந்த கடைக்காரர்களை அலட்சி யமாகப்பார்த்தான். “மீண்டும் கோயில் வாசலை அசுத்தம் செய்தீர்களானால், சிறைச்சாலைக்குப் போக வேண்டி வரும்” என்று எச்சரித்துவிட்டுக் குதிரையில் விரைந்தான். 

உதயசந்திரன் நின்று கொண்டிருந்த இடத்துக்கு வந்ததும், குதிரையை நிறுத்தினான். அவன் பின்னே வந்த கறுப்புக் குதிரையும் நின்றது. அந்த இடத்தில் கூடி நின்றவர் களை இளவரசன் முறைத்துப் பார்த்தான். “அஸ்தமனத் துக்குப் பிறகு தெருவில் கூடி நிற்கக்கூடாது என்றுகட்டளை இருப்பது தெரியுமல்லவா? போங்கள், சீக்கிரம் விலகிப் போங்கள்” என்றான். 

மக்கள் பரபரப்புடன் கலையத் தொடங்கினர். உதய சந்திரன் சற்றுத் தயங்கியபடி நின்றான். “ஏய் ஓடு. ஏன் நிற்கிறாய்?” என்று இரைந்து கொண்டே இளவரசன், தன் கையிலிருந்த குதிரைச் சவுக்கால் சுளீரென்று உதயசந்திரனை அடித்தான். 

“ஆ…” – உதயசந்திரன், இடது தோளைப் பற்றியபடி அலறினான். வலி பொறுக்க முடியாமல் ஒருகணம் கண் களை மூடினான். கண்களைத் திறந்தபோது இளவரசன், சிரித்தபடியே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான். உதயசந்திரனின் தோளில் இரத்தம் கசிந்தது. கோபத்தினால் பற்களைக் கடித்தான். அவனுடைய இரு கரங்களும் இறுகின. தோள்கள் புடைத்தன. கால்களைச் சற்று அகற்றி நின்றவாறு, இளவரசனை உற்று நோக்கினான். கறுப்புக் குதிரையின் மீதிருந்த மெய்க்காப்பாளன் வாணராயன் விரைந்து உதயசந்திரனை நெருங்கினான். நிலைமையைப் புரிந்துகொண்ட ராஜன் நம்பூதிரி, சட்டென்று உதயசந்திர னின் கையைப் பற்றி மெல்ல இழுத்தான். இளவரசனைப் பார்த்து, ”இளவரசே, நாங்கள் நகரத்துக்குப் புதிது. இப்போதுதான் உள்ளே வருகிறோம். அதனால் விவரம் தெரியாமல் நின்று விட்டோம்” என்றான். பிறகு, உதய சந்திரனைப் பலமாகப் பற்றி இழுத்தவாறு விரைந்து விலகிச் சென்றான். 

ராஜன் நம்பூதிரியின் இழுப்புக்கு ஆட்பட்டு விலகிச் சென்று கொண்டிருந்த உதயசந்திரன், திரும்பி இளவரசனைப் பார்த்து, “காஞ்சி நகருக்குள் நான் வந்ததுமே எனக்கு வீர வரவேற்பு கிடைத்திருக்கிறது” என்று கூறினான். சில வினாடிகள் உதயசந்திரனின் கூரிய பார்வை, இளவரசனின் கண்களோடு மோதிவிட்டு மீண்டது. பிறகுராஜன் நம்பூதிரி யைத் தொடர்ந்து சென்றான். 

பின்னால் இளவரசன் உரக்கச் சிரித்தது கேட்டது. பிறகு, குதிரைகள் இரண்டும் உதயசந்திரனைக் கடந்து பாய்ந்து சென்று மறைந்தன. 

– தொடரும்…

– 1985, தினமணி கதிரில் தொடர்கதையாக வெளிவந்தது.

– மருக்கொழுந்து மங்கை (சரித்திர நாவல்), முதற் பதிப்பு: மே 1995, திருவரசு புத்தக நிலையம், சென்னை.

ர.சு.நல்லபெருமாள் ர.சு.நல்லபெருமாள் (ரவணசமுத்திரம் சுப்பையா பிள்ளை நல்லபெருமாள்) (நவம்பர் 1930 - ஏப்ரல் 20, 2011) தமிழ் நாவலாசிரியர். திருநெல்வேலியில் வாழ்ந்தவர். காந்தியக் கொள்கைகளையும் சைவசித்தாந்த நோக்கையும் கொண்டு எழுதியவர். மார்க்ஸியத்துக்கு எதிரான வலதுசாரி பொருளியல் சிந்தனைகளும் ஃப்ராய்டிய உளவியல் ஆய்வுமுறைமையும் கொண்டவர். வழக்கறிஞராகப் பணியாற்றினார். சிந்தனைகளை நேரடியாக வெளிப்படுத்தும் பொதுவாசிப்புக்குரிய நூல்களை எழுதியவர். 1945-ல் தன் 15 வயதில் எழுதிய வீண்வேதனை அவருடைய முதல் படைப்பு. கல்கி இதழில் இரு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *