மனிதம் வாழும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 10, 2025
பார்வையிட்டோர்: 1,949 
 
 

தொலைப்பேசியில் வந்திருந்த குறுந்தகவலை மீண்டும் மீண்டும் வாசித்தாள் நஸீரா. அவளால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அந்தத் தகவல் அவளை நிலைகுலையச் செய்தது. வந்திருந்த தகவல் பொய்யாக இருக்க வேண்டும் என மனது பல முறை பிரார்த்தித்துக் கொண்டது. மீண்டும் நிதானமாக வாசித்தாள். ஆம் சந்தேகமேயில்லை. தகவல் உண்மைதான். தன்னுடன் வந்திருந்த நண்பியிடம் விடயத்தைக் கூறி தகவலை காண்பித்தாள். நஸ்ரினாவுக்கும் நம்பவே முடியவில்லை. ஆமாம் ராஸிக் மௌலவி காலம் சென்றுவிட்டார்!

நஸீராவின் மனசு துறுதுறு என்று இருந்தது. கவலையில் தோய்ந்து போனாள். கடைசியாக அவருடன் கதைத்து இரண்டு மாதங்களுக்கு மேல் இருக்கும். பெருநாளைக்குக் கூட பேச முடியாமற் போய்விட்டது. மையத்து செய்தியைப் பற்றி யாரிடமும் கேட்கும் துணிவும் நஸீராவுக்கு இல்லை. அதனால் கொழும்பில் வசிக்கும் ராஸிக் மௌலவியின் மூத்த சகோதரியிடமோ, அல்லது மச்சானிடமோ இதுபற்றி கேட்க நஸீரா விரும்பவில்லை. அந்த நேரத்தில் நஸீராவிடம் சொல்லிவிட்டுப் போகுமளவுக்கு ராஸிக் மௌலவியின் உறவினர்களுக்கு மனநிலையும் இருந்திருக்காது.

எல்லாவற்றையும் விட நஸீராவுக்கும், மௌலவிக்கும் எந்த இரத்த உறவுமில்லை. ஆனால் இரத்த உறவுகளைவிட ஓர் உன்னத பாச உறவு அவர்களுக்குள் இழையோடியருந்ததை நஸீரா மட்டுமே அறிவாள்.

அலுவலகம்விட்டு பாதை வழியாக நடந்து வருகையில் அவளுக்கு கால் சறுக்கியது. தலை சுற்றியது. உடனே நஸ்ரினாவுடன் பஸ்ஸில் ஏறி புறப்பட்டு வீட்டை அடைந்ததும் இரண்டு பெனடோலைப் போட்டுக்கொண்டு கட்டிலில் சாய்ந்திருந்தாள். அந்த படபடப்பினூடு மௌத்தாகிப்போன ராஸிக் மௌலவியின் மலர்ந்த முகம் நினைவுக்கு வந்து கவலையை அளித்தது.


நஸீரா பாடசாலையில் கற்றுக்கொண்டிருந்தபோதே ராஸிக் மௌலவியை அறிந்திருந்தாள். கேகாலைப் பள்ளிவாசலில் கடமையாற்றிய போது அவர் நிகழ்த்திய குத்பாப் பிரசங்கங்களும், அவர் மக்களுடன் பழகும் விதமும், அவரது ஆலோசனைகளும் எல்லோரையும் கவர்ந்தவை. அவர் உருகி உருகி துஆ கேட்கையில் கரையாத கல் நெஞ்சும் கரைந்து போகும். அவ்வாறு அவர் பற்றிய தகவலை அவள் அறிந்து வைத்திருந்தாள். எல்லா மக்களுடனும் அன்பாகப் பழகியும், தன்னால் முடிந்த உதவிகளை செய்தும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த ராஸிக் மௌலவி, நஸீரா குடும்பத்தினருக்கும் ஐக்கியமாகிவிட்டதற்கு ஒரு காரணமிருந்தது.

நஸீரா வறுமைப்பட்ட குடும்பத்தைச் சார்ந்தவள். அவளது தந்தை சிறுசிறு வியாபாரம் செய்து வந்தபோதும் குடும்பத்தை கவனித்துக்கொள்ளுமளவுக்கு அவருக்கு போதிய வசதி இருக்கவில்லை. தோட்டத்தில் விளையும் காய்கறிகளைக் கொண்டும், வயல் அரிசியைக் கொண்டும்தான் அவர்களது ஜீவனோபாயம் நகர்ந்தது. சில சமயங்களில் சாப்பிடுவதற்கு எதுவுமே இல்லாத பொழுதுகளில் இவர்கள் வெறும் பிளேன் டீயைக் குடித்து சமாளித்த தருணங்களும் அதிகம்.

அப்படியிருக்க திடீரென ஒருநாள் பகல் 11 மணியளவிருக்கும். யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு நஸீராவின் தந்தை வெளியே சென்று பார்த்தார். வெள்ளை ஜூப்பாவுடன் அத்தர் மணமணக்க தொப்பியணிந்த ராஸிக் மௌலவி வாசலில் இருந்து புன்னகைத்தார். எதிர்பாராத வருகை. உள்ளுக்குள் ஆயிரம் சந்தோஷம் உதித்தாலும், அதற்குள்ளும் சின்னதாக ஒரு சோகம் நஸீராவின் தாயை பிடித்துக்கொண்டது. என்னவென்றால் இதுவரை காலமும் வந்திராத மௌலவி இன்று தமது வீட்டுக்கு வந்திருக்கின்றார். ஆனால் பால் தேநீர் ஊற்றிக்கொடுப்பதற்குக் கூட நிலமை இல்லை என்பதை அவரிடம் கூற முடியுமா? நஸீராவின் தாய் சங்கடப்பட்டுக்கொண்டு இருந்தார். நஸீராவும் இதை அவதானித்துவிட்டாள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. நேரம் போய்க் கொண்டிருந்தது. எனவே தம்மால் முடிந்தவாறு பிளேன்டீயையும், பிஸ்கட்டையும் கொடுத்து உபசரித்தார்கள்.

மௌலவி தந்தையாருடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு, திடீரென நஸீராவை அழைத்தார். அவள் பணிவாக அவர் முன்னால் போய் நின்றாள். அன்றுதான் அவரை முதன்முதலில் நேராகக் கண்டாள். ஒரு ஆன்மீகப் பெரியாருக்குரிய கம்பீரமான தோற்றம். அளவான தாடி. கண்களில் பக்தி பளிச்சிட்டது.

‘மகள் வாசலில் ஏதோ ஒரு பார்சல் இருக்கு. யாரு வச்சாங்களோ தெரியல்ல. போய்ப் பாருங்க’ என்றார்.

என்ன பார்சலா? யார் அதை வைத்திருப்பார் என்று யோசித்துக் கொண்டு முன் பக்கமாகச் சென்றாள் நஸீரா. அவளுக்கு மனது திக் திக் என்றது. அப்போதெல்லாம் பஸ்களில் பார்சல் இருந்தால்கூட அதைப் பிரித்துப் பார்க்க பயந்து, பொலிஸில் அறிவிக்கும் காலம். ஆதலால் தயங்கியபடி இருந்தாள் நஸீரா. அவளது தயக்கத்தைப் பார்த்த ராஸிக் மௌலவி,

‘உள்ள கொண்டு போய் பாருங்க’ என்று கூறிவிட்டு புன்னகைத்தார்.

ஏதோ புரிந்தவளாக அவள் பார்சலைக் கொண்டு வந்து பார்க்கையில் அதில் அரிசி, மா, சீனி, தேயிலை, பருப்பு, செமன், மிளகாய்த்தூள் என்று பலசரக்குச் சாமான்கள் எல்லாம் காணப்பட்டன. அதைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த அவர்கள், மௌலவிதான் கொண்டு வந்திருக்கின்றார் என்று அறிந்ததும் நெகிழ்ந்து போனார்கள். அவர்களின் முகத்தில் மகிழ்வைக் கண்ட மௌலவி தானும் மகிழ்ச்சியுடன் வெளியேறிவிட்டார்.

அதுதான் அவருடனான முதல் சந்திப்பு. அதன் பிறகு அவர் அந்த குடும்பத்தினருடன் ஒரு உறவுக்காரர் போலவே நடந்துகொண்டார். ராஸிக் மௌலவி தனது மனைவிக்கும் இவர்களை அறிமுகம் செய்து வைத்தார். நஸீராவின் குடும்பத்தினர் ஒருநாள் ராஸிக் மௌலவியின் கேகாலை வீட்டுக்குச் சென்றிருந்தார்கள். அப்போது மௌலவியும், அவரது மனைவியும் இவர்களுடன் கண்ணியமாகவும், அன்பாகவும் நடந்து கொண்டனர். விருந்தோம்பல் என்று இஸ்லாத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சத்தை அவர்களிடம்தான் படிக்க வேண்டும் போல் இருந்தது.

இச் சந்தர்ப்பத்தில் இன்னொரு விடயம் நஸீராவுக்கு ஞாபகம் வந்தது. மௌலவியின் இளைய சகோதரர்களில் ஒருவரான ரியாழ் என்பவர் பிரபலமான பத்திரிகை ஒன்றில் கவிதைப் பக்கத்தை சிறப்பாக செய்து வந்தவர். தனது திருமண வைபவத்துக்காக நஸீராவுக்கு திருமண அழைப்பிதழை அனுப்பியிருந்தார். இப்போதும்கூட அந்த திருமண அழைப்பிதழை தனது இலக்கிய நண்பர்களுக்கு காட்டி மிகவும் மகிழ்ச்சியடைவாள் நஸீரா. அந்தத் திருமணத்துக்கு போக முடியாதிருந்த நஸீரா பிறிதொரு சந்தர்ப்பத்தில் அங்கு சென்றிருந்தபோது, ரியாழ் நானா ஒரு பன்முக ஆளுமை கொண்டவர் என்பதையும் அறிந்துகொண்டாள். ஒரு பாடகராக, கவிஞராக, மேடைப் பேச்சாளராக, ஓவியராக விளங்கிய அவர் தான் நடத்திய வானொலி கவிதை நிகழ்ச்சிகளின் கெஸட்களை ஒலிபரப்பச் செய்தார். அவர் மட்டுமல்ல.ராஸிக் மௌலவி உட்பட அவரது சகோதர, சகோதரிகள் யாவரும் ஊர் போற்றும் நல்லவர்களாகவும், திறமையானவர்களாகவும் இருக்கின்றார்கள்.

இன்னொரு நாள்ராஸிக் மௌலவியின் தந்தை காலம் சென்றிருந்தபோது அதற்காக கண்டியில் அமைந்துள்ள ராஸிக் மௌலவியின் வீட்டுக்கு நஸீராவின் குடும்பத்தினர் சென்றிருந்தனர். அப்போது மௌலவியின் சகோதரிகளும், சகோதரர்களும் எவ்வளவு அன்பாகவும், மரியாதையாகவும் அனைவருடனும் பழகுகின்றார்கள் என்பதை நஸீரா கண்டுகொண்டாள். நற்பண்புகளை கற்கும் கல்விக்கூடமாக அவர்கள் திகழ்ந்தார்கள். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று சொல்வார்களல்லவா? இதற்கு உதாரணமாகத் திகழ்ந்தது அந்தக் குடும்பம்.

அதே போல் ராஸிக் மௌலவி புதிதாக ஒரு கடையை கொழும்பில் திறந்தபோது நஸீரா தனது சகோதரியுடன் அங்கு சென்று அவருடன் பேசிவிட்டு வந்தாள். அந்தளவுக்கு அவருடன் அன்னியோன்னியமாகப் பழகிய நஸீரா, தனது சொந்த மாமா, சாச்சாமாருடன் கூட இத்தனைப் பாசமாக இருந்ததில்லை. பாசத்துக்கு உறைவிடமாகவும், மரியாதைக்கு இலக்கணமாகவும் விளங்கிய மௌலவி ராஸிக் இன்று மௌத்தாகிவிட்டார்.


அவரது ஜனாஸா செய்தி கேள்விப்படும்போது மாலை 04 மணியிருக்கும். ஆதலால் உடனே செல்ல முடியாமல் போன நஸீரா தன் குடும்பத்தினருடன் சில நாட்களுக்குப் பிறகு அங்கு சென்றாள். அவரில்லாத அந்த வீட்டில் அவரது மனைவியும், மூன்று பிள்ளைகளும் யாஸீன் ஓதிக் கொண்டிருந்தார்கள். இன்னும் பல பெண்கள் மௌலவியின் மனைவியைச் சூழ்ந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். உலகத்தையே வெறுத்து ஒதுக்கி விட்டது போல அவரது மனைவி காணப்பட்டார்.

நஸீராவுக்கு மௌலவியின் குடும்பத்தினர் சொன்ன ஒவ்வொரு தகவலும் ஆச்சரியம் பொதிந்ததாக அமைந்திருந்தது. திருமணம் முடித்து 22 வருடங்களுக்குப் பிறகு, தனது வீட்டில் கடைசிப் பெருநாளைக் கொண்டாடியதாகவும், சுற்றுலா சென்றபோது அவரை புகைப்படம் பிடிக்கச் சொல்லி ‘ஒரு காலத்துக்கு தேவைப்படும்’ என்று அவர் சொன்னதாகவும், மவுத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்பேயே அவர் தனது புத்திரிகளுக்கு அவரவர் கடமைகளைப் பற்றி தெளிவாக எடுத்துக் கூறியிருந்ததாகவும் அவரது வீட்டார் சொன்னார்கள். அத்துடன் ‘யா அல்லாஹ் எங்கள் மையத்தை அல்லாஹ்வின் நல்லடியார்கள் நிறைந்த மையத்தாக மாற்றிவிடு’ என்று அவர் கேட்ட துஆவை அல்லாஹ் கபூல் செய்துவிட்டானாம். அவ்வளவு சனத்திரள் நாட்டின் நாலா பக்கங்களில் இருந்தும் அவரது மையத்துக்காக வந்திருந்தார்களாம். தான் மௌத்தானால் தனது உடலை மக்கள் பார்வைக்காக எந்த அறையில் வைக்க வேண்டும் போன்ற சின்னச் சின்ன விடயங்களைக்கூட அவர் விளையாட்டுக்காகச் சொன்னதாக அவர்கள் கூறும்போது உடலெல்லாம் புல்லரித்துப்போனது நஸீராவுக்கு.


திருமணம் முடித்த பிறகு 22 வருடங்களாக அணிந்திருந்த மோதிரத்தை மௌலவி மவுத்தான பிறகு கழற்றியதாக அவரது மனைவி கவலையுடன் தன் விரலைக் காட்டி சொன்னார். அந்த விரலில் மோதிரம் அணிந்திருந்த அச்சு சற்று தடித்து காணப்பட்டது. அதைக் கண்ட நஸீராவுக்கும் கண்கள் கலங்கின.

ராஸிக் மௌலவி போன்று மனிதாபிமானத்துடனும், அன்புடனும் நடப்பவர்கள் மறைந்தாலும் மக்கள் மனதில் என்றும் வாழ்வார்கள். ஆனால் இந்த சொற்ப கால உலக வாழ்க்கையில் ஆழமாக மூழ்கிவிட்ட மனிதன் எல்லாவித தீமைகளையும் செய்கின்றான். உலக ஆதாயங்களுக்காக மக்களைக் காட்டிக் கொடுப்பதும், கழுத்தறுப்பதும், சம்பந்தமேயில்லாத போதும் நல்லவர்களுக்கு அவதூறு கூறுவதும், பகைமைகளை வளர்த்துக்கொள்வதும், எடுத்த காசை திருப்பிக் கொடுக்காதிருப்பதும், கொடுத்த அன்பளிப்பை திருப்பிக் கேட்பதும், பொய் சத்தியம் பண்ணுவதும், சந்தேகப்படுவதும், நம்பிக்கைக்கு துரோகம் செய்வதும் இந்தக் கலிகாலத்தில் மலிந்துவிட்டன.

இவ்வாறான தீய பழக்கங்கள் ஏதுமின்றி மக்களுடன் எவ்வாறு பண்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று ராஸிக் மௌலவியின் மரணம் நன்றாகவே நம் அனைவருக்கும் உணர்த்திவிட்டது. அதைப்போல மக்கள் வாழ்வார்களாயின் ஈருலகிலும் வெற்றி பெற்றவர்களாகி விடுவார்கள் என்று நஸீரா எண்ணிக்கொண்டாள்.

நஸீரா முதன் முதலாகக் காணும்போது மூன்று வயதுக் குழந்தையாக இருந்த ராஸிக் மௌலவியின் மூத்த மகள் தற்போது உயர்தரம் படித்துக் கொண்டிருக்கிறாள். மற்றவர்கள் சாதாரண தரத்தலும், எட்டாம் தரத்திலும் கல்வி கற்கின்றனர். மூன்று பிள்ளைகளையும் பற்றி கவலைப்பட வேண்டாம். அவர்களை நாங்கள் பொறுப்பேற்கின்றோம் என்று மௌலவியின் சகோதரர்கள் உறுதி மொழியளித்துள்ளது ஆறுதலாக இருந்தாலும் மௌலவியின் இடைவெளியை நிரப்ப யாராலும் முடியுமா? ஆனாலும் இவ்வுலகில் பிறந்த அனைவருக்கும் மரணம் நிச்சயம். அல்லாஹ் விதித்த கால நிர்ணயத்தில் ஒவ்வொருவரது வாழ்க்கையும் முடிந்துவிடுகிறது. இந்த மரணத்தை நோக்கிய பயணத்துக்கு நம்மில் எத்தனை பேர் தயாராகிவிட்டோம் என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ராஸிக் மௌலவியின் பெண் பிள்ளைகள் மூவரையும் கண்ட நஸீராவுக்கு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது நினைவுக்கு வந்தது.

”மூன்று பெண்பிள்ளைகளைப் பெற்ற ஒரு தகப்பன் அவர்களை ஒழுக்கமுள்ளவர்களாக வளர்ப்பானாயின், அவன் சுவர்க்கம் புகுவான்.” இன்ஷா அல்லாஹ் அவருக்கு ஜன்னத்துல் பிர்தவுஸ் என்னும் மேலான சுவனம் கிடைக்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்தாருக்கு அல்லாஹ் மனத் தைரியத்தையும், ரஹ்மத்தையும் வழங்க வேண்டும் என்று நஸீராவுடன் இணைந்து நாமும் துஆ கேட்போம்!!!

– மர்கூம் ரசீத் எம்.ராஸிக் மௌலவியின் நினைவாக 2013.10.10 ல் விடிவெள்ளி பத்திரிகையில் வெளிவந்த எனது சிறுகதை (மனிதம் வாழும்).

வெலிகம ரிம்ஸா முஹம்மத் ரிம்ஸா, முஹம்மத் (1978.04.20 - ) மாத்தறை, வெலிகமவைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். இவரது தந்தை முஹம்மத்; தாய் லரீபா. இவர் வரகாப்பொலை பாபுல் ஹஸன் மத்திய மகா வித்தியாலயம், வெலிகம அறபா தேசியப் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்று கணக்கீட்டுத் துறையில் MAAT, MIAB ஆகிய பட்டங்களைப் பெற்றதுடன் தனியார் கம்பனியில் உதவிக் கணக்காளராகத் தொழில் புரிந்து வந்துள்ளார். கவிதாயினி வெலிகம ரிம்ஸா, வெலிகம கவிக்குயில், வெலிகம நிலாக்குயில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *