மனமும் மணமும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 20, 2025
பார்வையிட்டோர்: 514 
 
 

(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஜயராமன் இருக்கிறானா?” என்று வாசலில் நின்ற கீதாவைக் கேட்டுக் கொண்டே வந்தான் ரங்கநாதன்.

“இருக்கிறான்” என்று கீதா சொன்னதும் மாடிக்குச் சென்றான் ரங்கநாதன்.

பத்திரிகையைப் படித்துக் கொண்டு அங்கே உட்கார்ந்திருந்த ஜயராமனிடம் நெருங்கி அவன் கையிலிருந்த பத்திரிகையை எடுத்துக் கொண்டு, ஜோபியிலிருந்த கடிதத்தை எடுத்து அவனிடம் கொடுத்தான். கடித உரையை ஒரு தரத்துக்கு இரண்டு தரமாகத் திருப்பிப் பார்த்தான் ஜயராமன்.

ரேவதியின் கையெழுத்து! ரங்கநாதன் விலாசத்துக்கு எழுதுவானேன் என்று கலவரத்துடன் கடிதத்தை உடைத்துப் பார்த்தான். கடிதத்தின் மீது இன்னொரு முறை ஏறி இறங்கியது அவன் பார்வை. முகம் பொலிவிழந்து சுண்டி விட்டதைக் கண்ட ரங்கநாதன் “என்ன எழுதி இருக்கிறாள்?” என்று கேட்டான்.

கடிதத்தை நண்பன் கையில் கொடுத்து விட்டுச் சிந்தனையில் ஆழ்ந்தான் ஜயராமன். கடிதத்தின் வாசகத்தை எழுதிய ரேவதியின் எழிலுருவம் அவன் கண் முன் நின்றது!

கடிதத்தைப் படித்து முடித்த ரங்கநாதன், “வீட்டு விலாசத்துக்கு எழுதினால் உன் தாயார் கையில் அகப்படக் கூடும்; அகப்பட்டால் உனக்குக் கிடைக்காது என்று தான் என் விலாசத்துக்கு எழுதி இருக்கிறாள். இப்பொழுது என்ன செய்யப் போகிறாய் ஐயராம்?”

“இனிமேல்தான் யோசிக்க வேண்டும்.”

“எனக்குத் தோன்றிய யோசனையைச் சொல்லி விட்டுப் போகிறேன். அதையும் ஆலோசனை பண்ணி முடிவு செய். அம்மாவிடம் நயமாகக் கேட்டுப் பார். சம்மதிக்க வில்லையானால் இருக்கவே இருக்கிறது பதிவுத் திருமணம்! கொஞ்சம் நாள் போனால் தன்னாலே சரியாக வந்துவிடுவார்கள்! நான் வரட்டுமா? அவசர வேலை கொஞ்சமிருக்கிறது; மாலை சந்திப்போம்” என்று கூறி நண்பனிடம் விடை பெற்றுச் சென்றான் ரங்கநாதன்.

சாய்மானத்தில் சாய்ந்து கொண்டு யோசனையில் ஆழ்ந்தான் ஜயராமன்.

“ஏண்டா, விடுமுறை நாளானால் காலாகாலத்தில் சாப்பிடக் கூடாதா…?” என்று கேட்டவாறு அங்கே வந்தாள் அவன் அம்மா ஜானகி அம்மாள். பிள்ளை எங்கேயோ நிலைத்த நினைவில் தான் சொன்னதைக் காதில் வாங்காம லிருந்ததைக் கண்டு “ஏனிப்படி பிரம்மமாக உட்கார்ந்திருக்கிறாய்?” என்று அருகில் வந்து கேட்டாள். அவன் கையில் கடிதம் இருப்பதைக் கண்டு “யாருடைய கடிதாசி?” என்று அதைக் கையிலெடுத்தாள்.

“ரேவதி எழுதி யிருக்கிறாள் ” என்று சொன்னான் ஜயராமன்.

கடிதம் முழுவதையும் படித்துவிட்டு, “நன்றாக இருக்கிறது” என்று கடிதத்தை அவன் மடியில் போட்டாள் ஜானகி அம்மாள்.

“எது நன்றாக இருக்கிறது என்கிறாய்?”

“அவர்களுடைய கேவலமான பிழைப்பைத்தான் சொல்லுகிறேன்…”

“அவர்கள் பிழைப்பு கிடந்து விட்டுப் போகட்டும்; ரேவதி விஷயமாக உன் அபிப்பிராயம் என்ன?”

“எதுக்கு, உனக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக்கவா?”

“ஏன், கூடாதா?”

“ஐயோ, போதுமடா அப்பா! உங்கள் அத்தைகள் வகையறா சம்பந்தமே நமக்கு வேண்டாம், வேண்டாம்!…”

“காரணம்?”

“அதெல்லாம் வெளிப்படையாகச் சொல்லப் படாது. நான் பொல்லாதவள், என் பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டு…”

“இந்த உதவாக்கரை சமாசாரங்களையும், மனஸ்தாபங்களையும் தூர விலக்கி விட்டு மனுஷத்தனமாக நடந்து கொண்டால் எல்லாருக்கும் நல்லது…”

“இந்த உபதேசத்தை உன் அத்தைக்குப் போய்ப் பண்ணு!”

“அவள் யதார்த்தவாதி. அதனால் அவளைக் கண்டால் உனக்குப் பிடிக்காது. அது இப்பொழுதைய சமாசாரத்துக்குப் பிரதான மில்லை. பெண் நல்லமாதிரி. என் மனசுக்குப் பிடித்திருக்கிறது.”

“ஏண்டா வரவர உன் புத்தி இப்படி…”

வெற்றிலைப் பொட்டலத்துடன் அங்கே வந்த வரதய்யர் ” என்ன, என்ன சமாசாரம்?” என்று விசாரித்தார்.

“ஒன்றுமில்லை. உங்கள் மருமாள் ரேவதி கடிதாசு எழுதி இருக்கிறாள்.”

“என்ன?”

“ரேவதியின் படிப்புக்காக அவள் தகப்பனார் அனந்த கிருஷ்ணய்யரிடம் நிலத்தை அடமானம் வைத்துப் பணம் வாங்கினாராம். அது இப்பொழுது வட்டிக்கு மேல் வட்டியாக வளர்ந்து சொத்தின் பெறுமானத்துக்கு மேலே போய்விட்டதாம். நிலத்தை வாங்கு வாரில்லை. பணம் கொடுக்க முடியவில்லை. அனந்த கிருஷ்ணய்யரிடம் வந்து ‘உம் பெண்ணைக் கொடு’ என்கிறாராம்.”

” அட பாவமே!”

“பாவமாவது புண்ணியமாவது! தன் ஸ்திதி தெரியாமல் நிலத்தை வைத்து, அப்படியாவது படிக்க வைக்காவிட்டால் என்ன?”

“அதையெல்லாம் நாம் எதற்கு இப்பொழுது கேட்க வேண்டும்?”

“முழுக்கக் கேளுங்கள். நம் குழந்தைக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேணுமென்று இருக்கு…”

“அது அவன்பாடு, உன்பாடு, அவர்கள் பாடு. ஆனால் ஒன்று நிச்சயம். பணம் இல்லாவிட்டால் ‘பெண்ணைக் கொடு’ என்கிற அந்தக் கிழக்கோட்டானுக்கு அந்தக் குழந்தையைப் பலி கொடுக்க முடியாது. என் வயிற்றில் பிறந்தால் என்ன, என் தங்கை வயிற்றில் பிறந்தால் என்ன?” என்று மனம் குமுறினார் வரதய்யர்.

“சொல்லுவது புரியவே இல்லை எனக்கு!” என்று விழித்தாள் ஜானகி அம்மாள்.

“புரியும்படியாகச் சொல்லுகிறேன். அந்த நாலாயிரம் ரூபாய் சொச்சத்தைக் கொடுத்துக் கடனை ஒருமாதிரி அடைத்து…”

அவர் வார்த்தையை முடிக்கு முன்பே, ஜானகி அம்மாள் ஆத்திரம்பொங்க, “அதைத் திருப்பி அவர்களிடமிருந்து எப்படி வாங்குகிறது?” என்று கடுமையாகச் சீறினாள்.

“அந்த யோசனை இருக்கட்டும், அப்புறம்.”

“எக்கேடும் கெட்டு ஒழியுங்கள். வீடு உருப்படப் போறதில்லை” என்று இரைந்து விட்டுக் கோபா வேசத்துடன் கீழே சென்றாள் ஜானகி அம்மாள்.

அவள் அங்கிருந்து நகர்ந்ததும் வரதய்யர் மகனிடம் வந்து, “என்னடா அது? கடிதத்தை இங்கே கொண்டு வா, பார்க்கலாம்!” என்று கடிதத்தை வாங்கிப் படித்து, சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்து விட்டு, “சரி, உங்கம்மா குணம் தெரிந்தது தான். வாயால் ‘லொட லொட லொட’வென்று வார்த்தைகளைக் கொட்டி விடுவாளே தவிர மனத்தில் ஒன்றும் களங்கம் கிடையாது, அதனாலே ஒன்று செய்…” என்று கூறிவிட்டுக் கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்தார்.

“என்ன?” என்பது போல ஆச்சரியத்துடன் பார்த்தான் ஜயராமன்.

“இன்றைக் கென்ன தேதி பதினேழா. இருபத்திரெண்டாம் தேதி தொகையை அவருக்குக் கொடுத்து விடலாம். அதைப் பற்றி நான் விவரம் கேட்டு நாணாவுக்கு எழுது கிறேன் இன்று. இருபத்தோராம் தேதி ராத்திரி புறப்பட்டு விளாங்குடிக்குப் போ. நாணாவிடம் சொல்லி – நானும் எழுதுகிறேன் – கோபு சாஸ்திரிகளிடம் ஒரு முகூர்த்தம் பார்க்கச் சொல்லு. நாணா, ஜகதம், ரேவதி மூவரை மாத்திரம் அழைத்துக் கொண்டு ரங்கநாதன் வீட்டில் இறங்கு. இங்கே நான் ஏற்பாடெல்லாம் பண்ணி வைக்கிறேன். சரியாக முகூர்த்த நேரத்துக்கு ரிஜிஸ்டர் ஆபீஸுக்குப் போறது, பதிவு செய்து கொண்டு லட்சணமாக அகத்துக்கு வந்து விடுகிறது. அம்மா மனசிலே ஆயிரமிருந்தாலும், மாலையும் கழுத்துமாகப் பிள்ளை நாட்டுப் பெண்ணுடன் உள்ளே நுழைந்ததும் பறக்கப் பறக்க ஆரத்தி சுத்திக் கொட்டி அழைத்து விட்டு ஒரு மூச்சு சண்டை பிடிப்பாள். அதோடு சரி! ரேவதியோ ‘தக்காருக்கு தக்கபடி’ நடந்து கொள்ளும் பெண். இந்தக் கடிதாசு எழுதி நம்மைக் கவர்ந்தது போல, மாமியாருக்கு கல்லதனமாக நடந்து கொண்டு அவளை நல்லவளாக்கி விடுவாள். இதுதான் சரி!” என்று அநாயாசமாக யோசனை செய்து முடித்து விட்டு வெற்றிலைக் கட்டைப் பிரித்து வெற்றிலை போட்டுக் கொண்டார் வரதய்யர்!


இருபத்திரண்டாம் தேதி ஓடி வந்து நின்றது!

விளாங்குடியில் தன் அத்தை வீட்டில் ஜயராமன் ரேவதியுடன் பேசிக் கொண்டிருந்தான். “உன் யோசனை எனக்கு உசிதமாகப் படவில்லை, ரேவதி!” என்று கலவரத்துடன் கூறினான் ஜயராமன்.

“நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். அப்புறம் அவர் மனசை இளக்குவதை விட முன்னாடி இளக்கி விடுவது தான் உசிதம், அதுதான் நியாயம். என் வாழ்வைப் பரிமளிக்க வைக்கும் அன்புக்குரிய தங்களைப் பெற்ற தாயில்லையோ அவர்?”

“ரேவதி…!”

“தாங்கள் கூறப் போவதை நான் அறிவேன். மாமாவின் ஆக்ஞைப்படி செய்யலாம். அம்மா மனசில் கபடு இல்லை என்பதெல்லாம் சரி. ஆனால்… சமயம் நேர்ந்த போதெல்லாம்… ‘திருட்டுத் தாலி கட்டிக் கொண்டு வந்தவள் தானே, நீ?’ என்று படக்கென்று கேட்பார். அது எதற்கு? நல்லதைச் செய்து நடு வழியில் செல்ல வேண்டும். நம் விருப்பத்தை மாமா அங்கீகரிப்பது போல, அம்மாமியும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்ளும் வகையில் கடிதம் எழுதுகிறேன். பார்ப்போம். நான் பாக்கியசாலியானால் அவர் மனம் மாறட்டும்.”

“இல்லாவிட்டால்?” என்று இடைமறித்துக் கேட்டான்.

“அதை இப்பொழுது நினைப்பானேன்?”

” உயிருக்குத் துணிந்து விட்டாய்! அது தானே?” என்று ரேவதியைக் கேட்டான்.

ரேவதியின் கண்கள் ஜயராமனை நெடு நோக்காக நோக்கின. கண்ணீர் மல்க, “ரேவதி…!” என்ற தொனியுடன் ஜயராமன் நிறுத்தினான். கண்கள் பேசின. உள்ளங்கள் உறவாடின. உடல்கள் விதிர்த்தன.

அந்த விதித்திர வேதனையிலிருந்து முன்னதாக உதறிக் கொண்ட ரேவதி, “கலங்காதீர்கள். நம் அன்பு சத்தியமா யிருக்கும் பட்சத்தில் உங்கள் தாயார் மனம் மலர்ந்து என்னைத் தம் குமாரனுக்குப் பெற்றுக் கொள்ளட்டும் என்று ஈசுவரன் மீது பாரத்தைப் போட்டு எழுதுகிறேன்” என்று கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

இருபத்திரண்டாம் தேதி பொழுது விடிந்தது. வரதய்யர் தாம் நிச்சயித்தபடி நாராயண சுவாமி அய்யர் வாங்கின கடன் தொகை முழுவதற்கும் ‘செக்’ அனுப்பி விவரமான கடிதமும் எழுதினார்.

சந்தோஷ மிகுதியால் நாராயணஸ்வாமி அய்யர் கண்களில் நீர் நிரம்பியது. சங்கதி தெரிந்த ஜகதாம்பாளும், “எல்லாருக்கும் தமையன், எனக்கும் தமையனா என்ன? நான்தான் அப்பவே கேளுங்கள், கேளுங்கள் என்று படித்துப் படித்துச் சொன்னேன். ஒருத்தரும் கேட்கவில்லை!”

“சரிதாண்டி, எல்லாம் இப்பொழுது சொல்லுவாய், நீ!” என்று சமாளித்துக் கொண்டு உள்ளே சென்றார் அய்யர்.

“பழிகாரன் கொஞ்சம்கூட ஈவு இரக்கமில்லாமல், மனம் துணிந்து எப்படித்தான் கேட்டானோ, பெண்ணை…”

“பணக் கொழுப்பு கொழுத்துக் கிடக்கிற போது, அங்கே, ஈவு ஏது, இரக்கமேதடீ!” என்று கூறிக்கொண்டே ‘செக்’கைப் பெட்டியில் வைத்தார் அய்யர்.

“முன்னாடி அவன் மூஞ்சியில் எறிந்து விட்டு வாருங்கள் பணத்தை” என்று சொன்னாள் ஜகதாம்பாள்.

“அப்பா” என்று அழைத்தாள் ரேவதி.

“என்னம்மா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே சென்றார் அய்யர்.

“பணம் இருக்கட்டும் அப்பா, நான் அம் மாமிக்குக் கடிதாசு எழுதி இருக்கிறேன். பதில் வரட்டும். அப்புறம் கொடுக்கலாம். கெடுதான் முப்பத்தொரு தேதி வரைக்கும் இருக்கிறதே?” என்று தணிந்த குரலில் சொன்னாள் ரேவதி.

அய்யர் திடுக்கிட்டார். திகிலுடன், “என்ன எழுதி இருக்கிறாய்?” என்று கேட்டார்.

“அப்பா, நான் காலமெல்லாம் அம்மாமியிடம் காலம் தள்ள வேண்டும். அதுவே இல்லை என்றாலும், அவள் பெற்ற பிள்ளையை அவளறியாமல் கல்யாணம் செய்து கொள்ள எனக்கு இஷ்டமில்லை. அவள் ‘சம்மதம்’ என்று எழுதட்டும்.”

“அடி அதிகப் பிரசங்கி, உன்னை யார் எழுதச் சொன்னார்கள்?”

ரேவதி நிமிர்ந்து பார்த்து “யாரா? அந்தக் கடிதம் யார் எழுதச் சொல்லி எழுதினேன்? அது நல்லதாக மாறினபடி இது மாறினால் சந்தோஷம். இல்லை, கிழவன் தான் பிராப்தி யென்று வாழ்க்கைப் படுகிறேன்…”

தலையிலடித்துக் கொண்டார் அய்யர்.

ரேவதியின் மனம் வேதனைப்பட்டது. “அப்பா, நேர்மையும், கௌரவமும்தான் மனுஷனுடைய தன்மைக்குப் பூஷணம். இது உங்களுக்குத் தெரியாத தன்று…” என்று ஆரம்பித்தாள் ரேவதி.

கோப மேலீட்டால் அங்கிருந்து வெளியே சென்றார் அய்யர். கோபம் அடங்கிய பிறகு எது சரி என்று ஆராயத் தொடங்கினார்.

ரேவதியும் அதைத் தான் நினைத்தாள்!


நடந்தது ஒன்றுமே அவளுக்குத் தெரியாது. அவள் பாட்டில் பொழுதைப் போக்கிக் கொண்டு ஒரு கவலையுமின்றி நிம்மதியாகத் தன் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தாள் ஜானகி அம்மாள்!

வாசலில் தயிர் வாங்கச் சென்ற கீதா, தபால்காரன் கொடுத்த கடிதத்துடன் உள்ளே வந்தாள். பிரித்துப் படித்துவிட்டு, சந்தோஷத்தால் குரல் தழு தழுக்க “அம்மா, ரேவதி உனக்குக் கடிதம் எழுதி இருக்கிறாள்” என்று சொன்னாள்.

கவலையில்லாமல் காராப்பூந்தியை மென்று கொண்டு, “என்ன வாம்? படி பார்ப்போம்” என்றாள் ஜானகி அம்மாள்.

அம்மாமி அவர்களுக்கு, அனேக நமஸ்காரம்.

நான் அம்மாஞ்சிக்கு எழுதிய கடிதத்தை நீங்கள், மாமா, எல்லாரும் பார்த்து யோசித்தீர்கள் என்றும், என்னை மருமகளாக ஏற்பதில் தாங்கள் சம்மதப்படவில்லை என்றும் தெரிகிறது. நான் தங்களிடம் நாலு வருஷங்களாக இருந்து பழகி இருக்கிறேன். தங்கள் மனம் எனக்குத் தெரியும். மாமா அவர்கள் வேறுவிதமாக யோசனை சொன்னார். என்னையும், என் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு அங்கு வந்து, சத்தப்படாமல் பதிவுக் காரியாலயத்தில் பதிவுத் திருமணம் செய்வித்து வீட்டுக்கழைத்து வந்து விட்டால் அப்புறம் தாங்கள் மனம் திரும்பி விடுவீர்களாம்! இந்த உத்தேசத்துடன் அம்மாஞ்சி இங்கு வந்து நாலு நாட்களாகின்றன.

அம்மாமி, நான் கைப்பிடிக்கப்போகும் கணவன் தங்கள் மகன், அவரைப் பெற்ற தாய் தாங்கள். தாங்களறியாமல் தங்கள் குமாரனை மணக்க நான் இஷ்டப்படவில்லை. இஷ்டப் பட்டாலும் அது தர்மமன்று, மாமி, அவர்கள் சொல்வது ஒரு வகையில் நியாயமாக இருந்தாலும், நான் அதை விரும்பவில்லை. தங்கள் விருப்பத்துக்கு மாறாகத் தங்கள் குமாரனை மணந்து நான் அடையும் சந்தோஷத்தை விட, ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட இடத்தில் வாழ்க்கைப்பட்டுப் பெற்றோர்களுடைய கௌரவத்தை நிலை நிறுத்திவிட்டு, வாழ்விலிருந்து தப்பிச் சென்று விடுவேன்!

அம்மாமி, நான் நல்ல பெண் என்று தங்கள் மனம் ஒப்பி, சந்தோஷத்தோடு என்னை மருமகளாக ஏற்றுக் கொண்டால், ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையானால் – அடுத்த ஜன்மத்திலாவது தங்கள் குமாரனை அடையப் பிரார்த்தனை செய்து கொண்டு இவ்வாழ்க்கையைத் துறப்பேன்.

இது என் அபிலாஷை.

நமஸ்காரம்,
ரேவதி.

கண்ணீர் மல்க அந்தக் கடிதத்தைப் படித்து முடித்துவிட்டுத் தலைநிமிர்ந்தாள் கீதா.

“‘உன் கடிதாசு கிடைத்தது. கவலைப்பட வேண்டாம். எல்லாருமாகப் புறப்பட்டு வரும்படி அம்மா எழுதச் சொன்னாள்’ என்று ஒரு கடிதம் எழுதிப் போடு, அவளுக்கு” என்று உணர்ச்சி பொங்கக் கூறி விட்டுக் கண்களைத் துடைத்து விட்டுக் கொண்டாள் ஜானகி அம்மாள்.

கடிதத்தைப் படித்ததும் நொடி நேரத்தில் தன் தாயின் மனம் இளகிய விசித்திரத்தைக் கண்டு ஸ்தம்பித்து நின்றாள் கீதா!

– கல்கி, 1954-08-01.

கு.ப.சேது அம்மாள் கு.ப.சேது அம்மாள் (1908 - நவம்பர் 5, 2002) ஒரு தமிழ் எழுத்தாளர். புகழ்பெற்ற எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் தங்கை. வாழ்க்கைக் குறிப்புசேது அம்மாளின் முதல் சிறுகதை “செவ்வாய் தோஷம்” 1939 இல் காந்தி இதழில் வெளியானது. பின் அவரது சிறுகதைகள் பல தமிழ் இதழ்களில் வெளியாகத் தொடங்கின. 1940களில் சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் குழுவிலும் சேது அம்மாள் பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டு இவரது நூல்களை தமிழக அரசு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *