மனத்தவறு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 16, 2024
பார்வையிட்டோர்: 2,297 
 
 

“ஏங்க…” கட்டிலில் அருகில் படுத்திருந்த கணவனை அணைத்தபடி பேசினாள் சமிகா.

“சொல்லு….” அவளை விட்டு விலகியபடி பேசினான் விமின்.

“என்னை உங்களுக்குப்பிடிச்சிருக்கா…?”

“பிடிக்காமையா  கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சு ஒரு குழந்தைக்கு அப்பாவாயிருப்பேன்…?” அலைபேசியில் கவனம் செலுத்தியபடி பதில் சொன்னான்.

“அப்புறம் எதுக்கு கூட வேலை பார்க்கிற காம்யா கூட வீட்டுக்கு வந்ததுக்கப்புறமும் போன்ல ரொம்ப நேரம் பேசிட்டே இருக்கீங்க…? நைட் ஒரு மணிக்கு ‘குட் நைட்’ னு மெஸேஜ்  அனுப்பியிருக்காளே…?”

இந்தக்கேள்வி மனைவி சமிகாவிடமிருந்து எப்போதாவது வருமென விமின் எதிர்பார்த்திருந்தான். சமிகா அவனுக்கு உறவுக்காரப்பெண். சிறு வயதிலிருந்தே பழக்கம் இருந்ததாலும் அவளது வெள்ளந்தியான, யதார்த்தமான குணத்தால் ஈர்க்கப்பட்டதாலும், பெற்றோரும் விரும்பியதாலும் திருமணம் செய்துகொண்டான்.

மனைவியின் தாய் சந்தி கடந்த ஒரு வாரமாக வீட்டிற்கு வந்து தங்கி சென்ற பின்தான் இந்தக்கேள்வி சமிகாவின் மனக்கருவிலிருந்து பிரசவமாகியிப்பதாகவே சந்தேகித்தான். 

காம்யாவுடன் இரண்டு வருடகாலமாகவே பேசி வரும் நிலையில் இதுவரை இல்லாத கேள்வி தற்போது வர முக்கிய காரணம் மாமியார்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டான்.

“ஏன் நான் உன்னத்தவிர வேற பொண்ணுங்க கூட பேசினாலே உம்மேல இருக்கிற விருப்பம் போயிரும்னு நினைக்கிறையா….?”

“அப்படியில்ல…. ஆபீஸ்ல நேர்லயே பேசிட வேண்டியது தானே….. வீட்டுக்கு வந்ததுக்கப்புறமும் பேசிட்டே இருந்தா நம்ம பிரைவசி பாதிக்காதா…?” போர்வையை நன்றாக போர்த்தியபடி கேட்டாள்.

“நமக்கு நல்லபடியா சாப்பிட, ஸ்கூல் பீஸ் கட்ட, வீட்டு வாடகை கட்ட, கார் பெட்ரோல் மத்த செலவுன்னு பண்ணறதுக்கு என்னோட வேலையால கெடைக்கிற சம்பளம் மட்டும் தானே….? உன்னோட வீட்ல இருந்து ஏதாச்சும் ஹெல்ப் கெடைக்குதா….? அதனால ஆபீஸ்லிருந்து யாரு மெஸேஜ் எந்த நேரம் வந்தாலும் பதில் சொல்லித்தான் ஆகோணும்” என்றான் கட்டிலிலிருந்து கோபமாக எழுந்தபடி.

“இல்லே…அதுக்காக… என்னோட சந்தோசத்த விட்டுக்கொடுக்க முடியுமா? இத விட சம்பளம் குறைவான வேலைன்னாலும் பரவாயில்லை. வீட்டுக்கு வந்ததுக்கப்பறம், லீவு நாள்ல நம்ம குடும்பத்தப்பத்தி மட்டும் தான் நீங்க நினைக்கனம். தேவையில்லாம யாரும் மெஸேஜ் அனுப்பீட்டே இருக்கக்கூடாது, நீங்களும் யாருக்கும் அனுப்பக்கூடாது. அவ்வளவு தான்…” கூறியவள் அழத்தொடங்கி விட்டாள்.

“நீ என்ற போன எதுக்காக பார்த்தே….? உன்ற போன நான் எப்பவாவது பார்த்தனா…? “

“அப்ப என்னையும் சந்தேகப்படறீங்களா…? ஒரு பொண்ணுக்கு அவ புருசன் அவளுக்காக மட்டுமே இருக்கனம்னு தானே தாலி கட்டி கல்யாணம் பண்ணிக்கிறோம். அவளும் தன்னோட பெத்தவங்க வீட்டை விட்டுட்டு வந்து மனசுல தோனற ஆசைகளை ஒழுக்கத்தக்காப்பாத்தனம்னு கட்டுப்படுத்தி வாழும் போது அவளக்கட்டிகிட்டவனும் அவளப்போல இருக்கறது தானே சரி. அத விட்டிட்டு… ” வார்த்தைகள் கிடைக்காமல் விசும்பினாள் சமிகா.

“ஒன்னுந்தெரியாத பாப்பா போட்டுகிட்டாளாம் தாழ்பா ன்னு சொல்லற மாதிரி வெகுளியா இருந்த நீ இவ்வளவு விவரமா பேசறே….? என்னை எதிர்த்து கேள்வி கேட்காம இருக்கனம்னுதான் அளவா படிச்ச, வசதியில்லாத உன்னை பெரிய நிறுவனத்துல, நல்ல சம்பளத்துல வேலைல இருக்கிற நான் வரதட்சணை வாங்காம கல்யாணம் பண்ணிகிட்டேன். ஆனா நான் நினைச்சது வேற இப்ப நடக்கிறது வேற. உன்னோட அம்மாவோட பேச்சக்கேட்டுட்டு இப்படி தேவையில்லாம சந்தேகப்பட்டு கேள்வி கேட்டீன்னா இப்ப போன்ல பேசீட்டிருக்கிற காம்யாவ நேர்ல பேச வீட்டுக்கே கூட்டீட்டு வந்திருவேன்….” என கோபமாகவே பேசினான் விமின்.

இப்படித்துணிந்து தன் கணவன் பேசுவான் என நினைத்திராத சமிகா, அதிர்ச்சியில் உறைந்து போனாள். அவளையறியாமல் கண்ணீர் கரை புரண்டு ஓட, கட்டிலில் குப்புறப்படுத்தபடி குமுறிக்குமுறி அழுதாள்.

அழுத மனைவியை ஆறுதல் கூறி அணைக்கவோ,மன்னிப்பு கேட்கவோ விரும்பாத விமின் தனது அறைக்குச்சென்று தாழிட்டது சமிகாவுக்கு வேதனையை மேலும் கூட்டியது. இரவு முழுவதும் உறக்கம் தொலைத்தாள். பொழுது விடிந்ததும் ஐந்து வயது மகன் கெவினை அழைத்துக்கொண்டு தனது ஸ்கூட்டியில் தாய் வீட்டிற்கு கணவனிடம் சொல்லாமலேயே கிளம்பிய போதும் கணவன் பார்த்துக்கொண்டே எதுவும் பேசாமல் இருந்தான்.

விமினின் மனதுக்கு மனைவி சமிகாவை விட காம்யாவையே அதிகம் பிடித்திருந்தது. இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள். காம்யாவிற்கும் திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். அவள் மீது அன்பு மழையைப்பொழியும் கணவன் இருந்தாலும் விமினுடன் பேசிக்கொண்டே வேலைபார்ப்பதை மகிழ்ச்சியான தருணமாகக்கருதுவாள். எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும் முகமலர்ச்சியுடனே செய்து முடிப்பாள். வேறு நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை கிடைத்தும் விமினுக்காகவே போகாமல் இருப்பதையறிந்த பின் அவளுடனான நட்பு ஆழமானது.

சில நாட்கள் அலுவலக வேலை அதிகமிருப்பின் கடைசி பேருந்தும் சென்ற பின் டாக்ஸி வசதி இருப்பினும் அதைத்தவிர்த்து அலுவலகத்திலிருந்து விமின் செல்லும் வழியில் அவள் வீடு இருப்பதால் அவனது காரிலேயே பயணிக்க வேண்டும் என விரும்புவாள். அதை அவளது கணவன் நிகிலனும் தவறாக எடுத்துக்கொள்ளாததால் இவர்களது நட்பு விருட்சம் மேலும் ஆழமாக வேரூன்றி வளர ஆரம்பித்திருந்தது. இன்று மனைவி சமிகா தவறாகப்புரிந்து கொண்டதால் கவலை கொண்டான்.

‘சமிகாவா? காம்யாவா?’ எனக்கேட்டால் ‘காம்யா…’ என்பது அவனது பதிலாக இருக்குமளவுக்கு இருவருக்குள்ளும் மன நெருக்கம் அதிகமாகியிருந்தது.

‘இந்த விசயத்தை காம்யா கேள்விப்பட்டால் மிகவும் வருத்தப்படுவதோடு தன்னால் இன்னொரு பெண்ணுக்கு பாதகம் வந்து வாழ்க்கை வீணாகி விடக்கூடாது என நினைத்து தன்னை விட்டு விலகி விடுவாளோ?’ என அச்சம் கொண்டதால் வீட்டில் நடந்த பிரச்சினைகளை மறைத்தபடி விமின் நடந்து கொண்டாலும், அவனது அன்றாட மன நிலைக்கு மாற்றான மனநிலையைக்கண்டு பிடித்தவள் காரணம் கேட்டாள்.

“ஒன்னும் பிரச்சினையில்லை. நல்லாத்தானே இருக்கே…” என்றவனை முதுகில் தட்டிக்கொடுத்து “கவலைப்படாதே…. நான் உனக்கு சப்போர்ட்டா எப்பவும் இருப்பேன்” என கூறியதைக்கேட்டு முதலாகப்பூரித்துப்போனான்.

‘அழகு, பணம், பதவி, உணவு, வசதி என்பதைத் தாண்டி தனக்கென ஆதரவாகப்பேச, உண்மையான நட்புடன் ஒருவர் இருந்து விட்டால்… அதுவும் எதிர்பாலினமாக இருந்து விட்டால் உலகமே மறந்து போகும். அது நட்பு, காதல் என்பதைத்தாண்டி ஒருவித மன மகிழ்ச்சி, அதனால் ஏற்படும் ஈர்ப்பு எனலாம். கவலைகளும் ஓடிப்போவதால் தினமும் சந்திக்கத்தோன்றுகிறது. அவ்வளவுதான். இதை திருமணமாகதவர்கள் செய்தால் காதல் என்றும், திருமணமானவர்கள் செய்தால் கள்ளக்காதல் என்றும் உலகம் சொல்கிறது’ சிந்தனை இவ்வாறு ஓடியது.

இன்று அவளது வார்த்தைகளில் ஆனந்த நிலையைக்கண்டதாலேயே அவனது மனம் அவள்பால் ஈர்க்கப்பட்டதாக உணர்ந்தான். அவளருகிலேயே நாட்கணக்கில் அமர்ந்திருக்க வேண்டுமென்று கூடத் தோன்றியது. நாட்களையும், நேரத்தையும் கடத்தவே இப்பிறப்பு எனும்போது அது பிடித்தவர்களுடன் கடத்துவது தான் சிறந்தது என உறுதியாக இருந்ததால் காம்யாவை மேலும் பிடித்தது.

“உன்னப்பெத்தவளுக்கு வீணா சந்தேகப்பட மட்டுந்தாந்தெரியும். தாஞ்சந்தோசப்படவும், கூட இருக்கறவங்களை சந்தோசப்படுத்தவுந்தெரியாது. உன்ற வீட்டுக்கு வந்து ஒரு வார இருந்தவ, இப்ப உன்னை நம்ம வீட்ல வந்து ஒரு வாரம் இருக்க வெச்சிட்டா. அவளப்புடிச்ச சந்தேகப்பேய் இப்ப உன்னையும் புடிச்சிருச்சு. மாப்பிள்ளை என் கூட சித்த முன்னால பேசினார்…”

“அவரு பேசினாரா…? என்ன பேசினார்….?” ஆவலாகக்கேட்டாள்.

“நீ சந்தேகப்பட்டு சொல்லாம வீட்டை விட்டு வந்ததைப்பேசினார். கல்யாணமாகி ஏழு வருசத்துல குழந்தை பிரசவத்துக்கு கூட பிறந்த வீட்டுக்கு அனுப்பாம சொந்த, பந்த விசேசத்துக்கு மட்டும் வந்து தங்காம போனதால சமிகாவுக்கும் ஒரு ஏக்கம் இருக்கும். அதனாலதான் ஒரு வாரமா எதுவும் பேசாம விட்டுட்டேன். இல்லறத்துக்கு ஒருத்தி இருந்தாலும் இணக்கமா பேச நாலு பேரு இருந்தாத்தான் வாழ்க்கைங்கிற வண்டிய ஓட்ட முடியும். அதுலயும் ஆபீஸ்ல வேலை பார்க்கிறவங்களோட நட்பா இருந்தாத்தான் வேலை செய்ய ஈசியா இருக்கும். அந்த வகைல காம்யா எனக்குப்பிடிச்சவளே தவிர என்னைப்பிடிச்சிகிட்டவ இல்லே. நைட்ல போன் பண்ணினா கூட ஆபீஸ் விசயமாத்தான் பேசியிருக்கோமே தவிர சமிகா நினைக்கிற மாதிரி எதுவும் இல்லைன்னு சொல்லி அழுதார்”

என தன் தந்தை ராகவன் சொல்லச்சொல்ல கணவர் மீதிருந்த சந்தேகம் குறைவதை உணர்ந்தவளாய் குழந்தையை அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்கு புறப்பட்டாள்.

“ஏங்க உண்மையிலேயே மாப்பிள்ளை போன் பண்ணி உங்க கூட பேசினாரா?” மனைவி சந்தி சந்தேகத்துடன் கேட்க ராகவன் திணறினார்.

“அ..‌அது….வந்து நீ சும்மா இருக்க மாட்டியா..‌? நீ தணல் போட்டு பத்த வெச்சத நாந்தானே மணல் போட்டு அணைக்கனம். இப்படியே விட்டோம்னா மாப்பிள்ளை போன்ல பேசற பொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு வந்து குடும்பம் நடத்த ஆரம்பிச்சிடுவார். காலம் ரொம்ப கெட்டுக்கெடக்குது. வெளிநாடு மாதர ஆ ஊன்னா டைவர்ஸ்னுதான் வாயில வருது. அது வேற மாதிரியான நிலைக்கு கொண்டு போயிரும். மனைவின்னு ஒருத்தி வீட்ல இருந்தா போன்ல பேச்சோட நிறுத்திக்குவாரு. அவ தலைல அவளையே மண்ண வாரிப்போட்டுக்கச்சொல்லறியா.‌‌..? நம்ம மனசு எதுலயும் திருப்திப்படாது. ஏதாவது ஒரு வகைல சந்தோசம் தேடவே பார்க்கும். ஒரு விவசாயி தன்னோட காளைய கொஞ்ச தூரம் கயிற விட்டுத்தாங்கட்டுவாரு. அது நாலெட்டு நடந்து சுத்தி வந்து ஓஞ்சு படுத்துக்கும். ரொம்ப இறுக்கமா கட்டி வெச்சா கட்டவந்துச்சுன்னா கட்டுத்தரைய விட்டு ஓடத்தான் பார்க்கும். அப்படித்தான் நம்ம மனசும். நீயும் என்னத்தவிர மத்த ஆம்பளைகளோட பேசாம இருந்திருக்க மாட்டே. நானும் மத்த பொண்ணுங்களோட பேசாம இருந்திருக்க மாட்டேன். ஆனா ஒரு எல்லையைத் தாண்டி பேசியிருக்க மாட்டோம். அதுக்கு நம்ம ஒற்றுமை தான் காரணம். நீ என்னை விட்டு போயிருந்தீன்னா ஒரு வேளை எல்லை தாண்டியிருக்கவும் வாய்ப்பிருக்கு. அதுபோலத்தான் சமிகா மாப்பிள்ளையும். அவரு கோபத்துல கூப்பிடாம இருக்காருன்னு ஈகோவுல நாம நம்ம பொண்ண இங்கயே இருக்க விட்டோம்னா அவருக்கு எல்லை தாண்ட வாய்ப்பு கொடுத்த மாதிரி ஆயிடும். அதுதான் அவரு கூப்பிட்டதா பொய் சொல்லி அனுப்பி வெச்சேன்” எனக்கூறிய போது அவரது கண்களிலிருந்து கண்ணீர் சாரை, சாரையாக வடிந்தது.

அடுத்த நாள் மகளுக்கு கணவனிடமிருந்து டைவர்ஸ் நோட்டீஸ் தன் வீட்டிற்கு வந்தது கண்டு அதிர்ந்து போனார் பரந்தாமன். ஒரு வேளை நாளை பெண்ணை புகுந்த வீட்டிற்கு அனுப்பியிருந்தால் டைவர்ஸ் நோட்டீஸைப்பார்த்து பயந்து வந்ததாக மாப்பிள்ளை நினைத்திருப்பார். மேலும் அவளை மதிக்க மாட்டார். பெண்ணுக்கும் தெரிந்து அவரை மேலும் வெறுத்திருப்பாள். எல்லாம் கடவுள் சித்தம் என நினைத்து நோட்டீஸை மனைவிக்குத்தெரியாமல் கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டார்.

அடுத்த நாள் பெண் வீட்டிற்குப்போன போது இயல்பாக மகளும், மருமகனும் பேசிக்கொண்டிருந்தனர். மருமகன் மாமனாரைக்கண்டவுடன் ஒரு வித படபடப்புடன் காணப்பட்டதற்கு காரணம் டைவர்ஸ் நோட்டீஸ் கிடைத்ததால் அதைப்பற்றிக்கேட்க வந்துள்ளாரோ..‌? எனும் பதட்டம் தான் எனப்புரிந்து கொண்டவர் எப்போதும் போல் ஊர், உறவு, உலக விசயங்கள் பேசிக்கொண்டு கிளம்பியபோது மருமகன் முகத்தில் படபடப்பு குறைந்திருந்தது. ஏதோ ஒரு வேகத்தில் நோட்டீஸ் அனுப்பி விட்டாரே தவிர மனைவியைப்பார்த்ததும் மனம் மாறியதால், தான் செய்தது தவறு என உணர்ந்துள்ளார் என்பது மட்டும் பரந்தாமனுக்கு புரிந்திருந்தது. 

‘ஒருவர் செய்யும் தவறைத்தவறென்று சொல்லிப்பெரிது படுத்தினால் அத்தவறை அவர்களால் துணிந்து மறுபடியும் செய்து விட முடிகிறது. அதைக்கண்டு கொள்ளாமல் போகும் போது, நாளைடைவில் அதைத்தவறென அவர்களே உணரும்போது அத்தவறிலிருந்து வெளிவர வாய்ப்புள்ளது. இதை உடனிருப்பவர்கள், உறவுகள், குடும்பத்தினர் முக்கியமாகத்தம்பதிகள், அவர்களது பெற்றோர் புரிந்து கொண்டால் இரண்டு பக்கமும் நன்மையுண்டு. அதை ஒரு மகளின் தந்தை எனும் முறையில் தான் சிறப்பாகச்செய்து விட்டதாகக்கருதி மகிழ்ச்சியுடன் மகள் வீட்டை விட்டு வெளியேறினார் பரந்தாமன்.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *