மண்ணில் தெரியுதொரு தோற்றம்
கதையாசிரியர்: எஸ்.அகஸ்தியர்
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 21, 2026
பார்வையிட்டோர்: 6,551
(1978ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4
அத்தியாயம் – 1
மாலைப் பொழுது, பூமிக்குள் உறைந்து கொண்டு போகின்ற வேளை.
மீளாத மையல் கொண்ட இளங் குமரிகளின் முகங் கள் போல் பூமி எங்கும் இருள் கவிந்து கறுத்து வருகிறது.
ஊருக்குள்ளே சந்தடி ஓயவில்லை; சமர்க்களம் போல் அப்பலோதிப்பட்டுக் கொண்டிருக்கிறது கிராமம்.
எங்கோ தொலை தூரத்துக்கப்பால் ஜன சந்தடியின் இரைச்சல் ஆர்ப்பரித்துக் கேட்டது.
ஜானகி எட்டிப் பார்த்தாள்.
ஜனந் திரண்ட பெரு நீள ஓர் ஊர்வல அணி.
அண்ட கோளங்களும் பூமண்டலமும் அதிர்ந்து நாறுங்குவனபோல், அந்த ஊர்வலம் சுலோகங்களை ஏந் க் கோஷித்துக் கொண்டு, ஜானகி வீட்டுக்கு எதிர் கொண்ட வீதி வழியே வந்து கொண்டிருந்தது.
கொடிகள் வானளாவ அசைந்தாடி முன்னேறிக் காண்டிருக்க. ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கிய வண் ணம் வந்து கொண்டிருந்தான் பொன்ராசா.
அவன் வீராவேசமாக முஷ்டிகளை உயர்த்திக் கொண்டு சுலோகங்களைப் பிரகடனஞ் செய்ய, அவனைத்தொடர்ந்து தொழிலாளர்களும் விவசாயிகளும் வீறாக அந்தச் சுலோ கங்களைக் கோஷித்தபடி வந்தார்கள்.
ஊர்வலம் வீதியை அடைத்துக் கொண்டு சமீபித்து விட்டது. கோஷத்தின் எதிரொலிகள் நிலமதிர்ந்து தெறிக்கின்றன:
“பொது மக்சுள் போரணி?”
“பொங்கி எழுந்தது!”
‘சீர் திருத்த வாதம்?”
“சுரண்டுவோனின் கீதம்!”
“தரிசு நிலங்களை?*
‘பகிர்ந்து கொடு!”
“வேலையற்றோருக்கு?”
“வேலை கொடு!”
“ஜாதி பேதச் சகுனிகள்?”
“நாசமாகி ஒழிக!”
வீதியை நெருக்கி அடைத்துக் கொண்டு ஜனத்திரள் விரைகின்றது. அந்த வேளையிலே…
ஒரு சந்தியின் வேலி மறைப்பிற்குள்ளிருந்து எறி குண்டுகள், ‘திடீரென அந்த ஊர்வலத்தில் வந்து விழு கின்ற அதிர்த்தொனிகள் ‘டோம் டோம்’ என்று கேட்டன.
ஊர்வலம் சிதறுண்டு அல்லோல கல்லோலப்பட்டு நாற் திசையும் கலைந்தது.
ஒரு பெண் அபயக் குரல் எழுப்பினாள்.
“ஐயோ, அம்மா!”
பொன்ராசாவின் மார்பு ரணகளமாகப் பிளந்து விட்டது.
அவன் மார்பை அழுத்திப் பிடித்துக் கொண்டு நிலத்தில் அடிசாய்ந்து குற்றுயிராக விழுந்தான்.
“ஆ, ஐயோ!”
அறை அதிர, வீரிட்டுக் கத்திக்கொண்டு துடித்து எழுந்தாள் ஜானகி.
நெஞ்சு திடுக்கிட்ட பொன்னையர் ‘சடா’ ரென்று எழுந்து சென்று கதவைத் திறந்து, நடுங்குங் கரங்களால் கதவு நிலையைத் தாவிப் பிடித்தபடி, ஜானகியின் படுக்கையை எட்டிப் பார்த்தார். அறை ஏகலும் ஒரே ‘கும்’ மிருட்டாகக் கிடந்தது.
“பிள்ளை ஜானகி, என்னது சத்தம்: வாய் புலம்பினியா?” என்று கேட்டுக்கொண்டே, – சுவரைத் தடவிச் ‘சுவிற்’சைத் தட்டினார்.
ஜானகி நெஞ்சு துடிக்க, தேகம் பதற. கண்கள் மிரண்டு விழிக்க, கட்டிலிலிருந்து அழுது கொண்டிருந்தாள்.
“ஏன் சத்தம் போட்டாய்; ஏதும் கெட்ட கனவு கண்டியா?”
அவரின் உடற் பதட்டம் தீரவில்லை.
ஜானகி ‘திக்’கிட்டுப்போய், வாய் பேசாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.
அவருக்கு ‘விஷயம்’ புரிந்து விட்டது.
‘கனவு என்பது நினைவின் பிரதிபலிப்பு’ என்று ஜானகி ஒரு தடவை சொன்னது அவருக்கு நினைவு வந்தது. ஆனால், அவர் அதை இன்னும் ஒப்புவதாகவில்லை. தந் தைக்கும் மகளுக்கும் இந்த விவகாரத்தில் பெரிய வாக்கு வாதமே மூண்டுவிட்டது. அவள் ஒரு தத்துவ ஆசான் போல் பொன்னையருக்கு எடுத்துச் சொன்ன அழகையும், நயத்தையும் நினைத்துப் புளகித்து ஒரு கணம் வியக்கலானார்.
‘புத்திர பாக்கியங்கள் அறிவின் சிகரத்தை எட்டிப் பீடிக்கும் போது பெற்றவர்களுக்கு அழியாத சித்திரங் களாய்த் தெரிகின்றன. என் ஜானகியும் என் அழியாத ஓவியம். அவள் கண் கலங்குவதென்றால், என் நெஞ்சின் ஊனம் குமுறுவது போலத்தான்’ என்று தனக்குள் சொல் லிக் கொண்டு ஜானகியை வாஞ்சையோடு பார்த்தார்.
“புள்ள ஜானகி, கனவு கண்டு பயந்திட்டியா?”
“ஓம்”
“என்ன கனவு”
அதற்கு அவள் மௌனமாயிருந்தாள். ஒருபெருமூச்சு அவள் நெஞ்சைக் குதறி எழுந்தது.
‘திருமணம் புரிந்த காலத்தில் இளங் கன்னிகள், தமது கணவர்களைப் பற்றிய நினைவுகளில்தான் மூழ்கியிருப்பார்கள். அப்படித்தான் அவளும் தனது கணவனைப் பற்றி ஏதோ கனவு கண்டிருப்பாள். கெட்ட கனவுகள் நல்ல சகுனம் தானே?’
பொன்னையர் முகத்தில் புன் சிரிப்பு மலர்ந்தது.
”புள்ள ஜானகி, அவருக்கு இன்று என்ன டியூட்டி?”
“நைட் டியூட்டி’
அவர் உடனே சுவரைப் பார்த்தார். கட்டிலுக்குப் பக்கத்தே புதுமணத் தம்பதிகளாக, சிவலிங்கமும் ஜானகியும் நின்று எடுத்த படம், சுவரிலே கம்பீரித்துக் கொண்டு கிடந்தது.
ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டரின் மனைவியான ஜானகிக்கு. இவ்வளவு பயந்தாங் கொள்ளித்தனம் இன்னும் இருக்கிறதா? வீரம் இருந்தென்ன, நெப்போலியன் கூட பயங்கரக் கனவு கண்டு பதறித்துடித்தவன் தானே?
“ஜானகி, நல்லாப் பயந்திட்டியா?”
அவள் ஒன்றும் பேசாமல் அப்பாவைப் பார்த்தாள். அவளின் கண்கள் அப்பவும் தேம்பிக் கிடந்தன.
அவர் சிரித்துக் கொண்டு, ‘பாவாடை சட்டை போட்டுத் திரிந்து நாட்களிலே புலிபோல் துள்ளித் திரிந்த நீ ஊரையே உலுப்பி வைக்கிற ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு மனைவியான பிறகும் பூனைபோல் பதுங்கி நடுநடு’ங்கிறியே, இது உன்கணவருக்கே அவமானமல்லவா?’ என்று அவளைக் கிண்டல் பண்ண நினைத்தார். மனசு ஏவவில்லை. கேலிப் பேச்சை அதிகம் ரசிக்கிற பெண்கள், அதைப் புரியாவிட்டால் அதுவே அவர்கள் இதயங்களை ரணகளமாக்கி விடாதா?
ஜானகிக்கு இன்னும் பயம் தெளியவில்லை என்பது அவருக்குப் புலனாயிற்று. அவர் மெதுவாகப் போய் ஜானகியின் முகத்தில் துப்’-துப்-துப்’ என்று மூன்று தடவை துப்பிவிட்டு, “எழுந்து போய், முகத்தை அலம்பிப் போட்டு வந்து தூங்கு” என்று அவள் தோளில் மெல்லத் தட்டினார்.
ஜானகி எழுந்து குசினிப் பக்கம் சென்று முகங் கழுவி வருமட்டும் பொன்னையர் வாசலில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் மனசில் ஒரு சம்பவம் கிளர்ந்தது.
பொன்ராசா தொழிலாளர் விவசாயிகளைத் திரட்டி, நாடு பரவ அடிக்கடி கிளர்ச்சிப் போராட்டங்கள் புரிந்து வருகின்றான். அவை யாழ்ப்பாணப் பிரதேசத்திலும் தலை நீட்டிவிட்டன. இதனால் ‘பொலிஸ் டிப்பாட்மென்ட்’டுக்கு ஓயாத வேலை. ஊரோ ஒரே கொந்தளிப்பாகவிருக்கின்றது. கிளர்ச்சி செய்கின்ற இந்த இயக்கம் தடை செய்யப் படலாம். அதில் முக்கிய பங்கு வகிக்கின்ற பொன்ராசன் எந்த நேரத்திலும் பொலிஸாரால் கைது செய்யப்படலாம். பொலிஸ் வலை போட்டுத் தேடும் படலம் ஆரம்பித்துவிட்டது…
பொன்னையர் மனக்கண்ணில் பூதாகாரமாக விரிந்த ந்தக் கற்பனைகள் இத்துடன் தரித்துக் கொண்டன.
நாட்டில் உண்டான கிளர்ச்சிகளால் தமது ஜானகியின் கணவர் -இன்ஸ்பெக்டர் சிவலிங்கத்துக்கு ஓயாத சோலிகளும் ஆபத்துக்களும் நேர்வது சாதாரண விஷயம் தான்,
‘பிரிட்டிஷ்காரன் இலங்கையை ஆண்ட போது இலங்கை எவ்வளவு ‘அமைதி’ யாயிருந்தது. அவன் என்று சுதந்திரம் கொடுத்துப்போனானோ, அன்றே அமைதியும் குலைந்து விட்டது’ என்று மனஞ்சலித்தவர், “வெள்ளை காரனுக்குத்தான் ‘டிஸிபிளின்’ தெரியும்” என்று வாய் விட்டே முணுமுணுத்தார்.
பொன்னையர் சிங்கப்பூரில் உத்தியோகம் புரிந்த காலத்தில் அவர் வெள்ளைக்காரன் கீழ் டிஸிபிளினாக வாழ்ந்தவர். ஜானகி அங்கேதான் பிறந்தாள். அவள் பிறந்து ஐந்து வருஷத்துக்குள்ளே உள்ளூர் விடுதலைப் போராட்டவாதிகளின் ‘தொல்லைகள் தாங்காமல் ‘பென்சன்’ எழுதிக் கொடுத்துவிட்டு ஊரோடு-யாழ்ப்பாணம் வந்துவிட்டார். அந்தத் ‘தொல்லைக்காரர்’ இங்கேயும் விட்டபாடாயில்லை.
சிங்கப்பூர் மலேசியாவில் பிரிட்டிஷ் அதிகாரத்தை எதிர்த்து ஜனங்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்ட அணிகளுக்குத் தலைமை தாங்கிய கம்யூனிஸ்டுகளை வெள்ளைக்காரன் நாய்களைச் சுடுவது போல் சுட்டுத் தள்ளிய காட்சிகள் — அந்த நிகழ்ச்சிகள் பொன்னையரின் மனசில் நிழலாடின. அவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்த பொன்னையருக்கு இந்த இலங்கை அரசாங்கத்தின் கையாலாகாத்தனம், ‘சட்’டென்று பளிச்சிட்டது.
இந்த நேரம் அந்த வெள்ளைக்காரன் ஆட்சி நிலைத்திருக்குமானால், பொன்ராசனையும் அவன் கட்சிக்காரன்களையும் ஒழித்துக்கட்டி அமைதியை நிலைநாட்டியிருக்கும். இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் பொலிஸ் டிப்பாட்மெண்டுக்குத்தான் தொல்லையாய்விட்டது’
பொன்னையர் ஜானகியைப் பார்த்தார்.
‘நாட்டிலே அமைதி குலைந்தால் சனங்கள் தூங்க மாட்டார்கள். இதனால்தான் ஜானகியும் பயத்தில் விழித்துக் கொண்டே கூச்சல் போட்டிருப்பாள்’
பொன்னையரின் இந்தக் கற்பனைகள் பின்பு அவருக்கே நகைப்பிற்கிடமாயின.
“கெட்ட கனவு என்று சொன்னியே, அது என்ன?” என்று மகளைக் கேட்டார்.
“நாட்டில் இப்போ நடந்து கொண்டிருக்குதே, அது” என்றாள் அவள்.
பொன்னையா வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்ற கிணற்றுத் தவளையல்லர். புதினத்தாள்களும் அரசியல் செய்திகளுமே அவரின் ஆத்ம சாதனங்கள். காலை எழுந் தவுடன் பத்திரிகை விரிப்பது நித்திய கடன். அப்பேர்ப் பட்டவருக்கு ஊரின் சமாச்சாரங்களை வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் ஜானகியா விஸ்தரிக்க வேண்டும்? இப்போது கிராமங்கள் தோறும் நகரங்கள் ஈறாக இலங்கையடங்கலும் என்ன போராட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று அவருக்குத் தெரியும்.
அந்நிய வங்கிகள், கம்பனிகள், தோட்டங்களைத் தேச உடைமையாக்கு, இலங்கையைக் குடியரசாக்கிச் சுயராஜ் யம் நடத்து என்று பொதுவுடைமை வாதிகள் கிளர்ச்சி பண்ணுகிறார்கள் என்பதை அவர் சிங்கப்பூரில் வாழ்ந்த காலத்திலேயே அறிந்தவர். இதனால் எழுந்த போராட் டம் உச்சக்கட்டத்தையடைந்து, நாடு பூராவும் பரவிக் கொண்டது. புரட்சிப் போராட்டம் எந்த வேளையிலும் வெடிக்கலாம்.
பொன்னையருக்கு இதுகூடக் கவலையில்லை. யாழ்ப்பாணம், மலைநாடு, மட்டக்களப்பு, மன்னார் ஆகிய தமிழ்ப் பிரதேசங்களில் பொதுவுடமை இயக்கத்தினரின் அரசியற் போராட்டம் புதுக்கோஷங்களை உள்ளடக்கியிருப்பது தான் அவருக்குப் பிடிக்காத சங்கதி.
நிலமற்றோர்க்கு நிலங்களைப் பகிர்தல், தோட்டங்களைத் தேச உடமையாக்கி அவற்றைத் தொழிலாளர்களுக்குக் கொடுத்தல், தீண்டாமை ஒழிப்பு, தேசிய மொழிகளுக்குச் சமத்துவம்-இவைபோன்ற கோரிக்கைகளை வைத்தே பொன்ராசா போராட்டத்தில் குதித்திருக்கிறான். இது பொலிஸ் டிப்பாட்மெண்டுக்கு மட்டுமல்ல, அரசாங்கத்துக்கே ‘பெருந்தலையிடி’யைக் கொடுத்து வருகிறது.
‘பழைய அமைப்புகள், ஜாதிமுறைகள் ஒழிந்தால். அனுபவித்த சம்பிரதாய மரபுகள் என்னாவது? வேணுமா ல் சீர்திருத்தம்’ செய்யட்டுமே. அதைவிட்டு ஏதோ ‘புதிய மாற்று அமைப்பு’ வேண்டும் என்று கத்துகிறானே. இதெல்லாம் வெறும் சுண்டங்காய்ப் போராட்டம். வெள் ளைக்காரனைப் போல் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டினால் எல்லாம் தானாக அடங்கிவிடும்’
பொன்னையர் மனசு உண்மையில் கொதித்தது. இருந்தும் அவர் சிரித்துக் கொண்டே, “நாட்டிலே நடக்கிற கிளர்ச்சிகளைப் பற்றித்தானே சொன்னாய்?” என்று ஜானகி யிடம் அமைதியாகக் கேட்டார்.
“அது வெறுங் கிளர்ச்சியல்ல; பெரும் போர்க்களம்” என்று சொல்ல வாயெடுத்த ஜானகி, அதே கருத்தைவேறு ஒரு தினுசாக ஒப்புவித்தாள்:
‘கிளர்ச்சி என்பது மணப்பந்தலில் வாசிக்கும் மேளமல்ல; கத்தி விளிம்பில் நடக்கும் பந்தய வேள்வி”
ஜானகியின் அரசியல் ஞான வியூகங் கண்டு அவர்நெஞ்சு பெருமையில் பூரித்தது. ஆனால், அவளின் அழுத்தமான வார்த்தைகள் அவள் கிளர்ச்சிகளை வரவேற்பதாகப்பட்டதைக் கண்டபோது அவருக்கு வியப்பு மேலிட்டது. கோபம் கூட எழுந்தது.
அதை அவர் அவளுக்குக் காண்பியாமல், “அது உண்மைதான். இதைத் தெரியாதவர்களே முட்டாள்தனமாகக் கிளர்ச்சிகளில் இறங்கிவிடுகின்றார்கள். பொன்ராசன் நடத்துகின்ற கிளர்ச்சியால் நமது இன்ஸ்பெக்டருக்கே ஓய்வற்ற வேலைப் பளுவாய்விட்டது. அவருக்கு மட்டுமா? உனக்குக் கூட உன் பஞ்சுமெத்தை நெருப்புக் கோளமாகிவிட்டது. பார்த்தாயா?” என்றார்.
அவள் முகம் அதைத்து விம்மிற்று அதை அவர் கவனிக்கவேயில்லை.
‘பயங்காக் கனவு கண்டு ஜானகி தியங்கியிருக்கிற போது, போராட்டம்-கிளர்ச்சி பற்றி அவளுக்கு நினைவூட்டி யிருக்கக்கூடாது’ என்பதை அவர் பின் சிந்திக்கலானார்.
புரியாத விஷயங்களில் மனிதனுக்கு அடிமைத்தனம் உண்டாகி அவன் பலவீனப்படுவதால் அவன் கற்பனைகள் அதீதமாகி அர்த்தமற்று விடுகின்றனவா?
பொன்னையர் தனக்குள் குமுறிக் கொண்டே சுவர் மணிக் கூண்டைப் பார்த்தார்.
மணி ஐந்தே முக்கால்.
மெல்ல வெளியே நகர்ந்தார்.
காகங்கள் கோலாகலித்துஇரைந்து வானத்தில் பறந்து கொண்டிருந்தன.
‘பறவைகள் எவ்வளவு சுதந்திரமாக வாழ்கின்றன. ‘புத்தி’ படைத்த மனிதனால் முடியவில்லையே? விபர புத்தி சர்வ நாசம்’–
மனசுள் சலித்தவாறு அடுத்த அறைக்குள் பிரவேசித்தார்.
‘சடா’ரென்று பல்லி ஒன்று எச்சமிட்டது.
‘திடுக்’கிட்டு நின்று அண்ணாந்து பார்த்தார்.
‘சிறு பூச்சியின் சத்தத்திற்கே காரணம் புரியாமல் வாகடம் பார்க்கின்ற ‘மேதை’கள், சுதந்திரப் பறவைகளை பார்த்துப் பெருமூச்சு விடுவதில் அர்த்தமுண்டா?’ என்று அவரிடம் அது கேட்பது போலிருந்தது.
அப்போது தெருவிலே ஒரு கூச்சல் கேட்டது:
“பொன்ராசாவைப் பொலிஸார் கைது செய்து விட்டார்கள்!”
பொன்னையரின் நெஞ்சு ஒரு கணம் அதிருண்டது. அவர் தரிக்கவில்லை. சால்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டு, ஜானகியின் அறையை மெதுவாக எட்டிப் பார்த்தார்.
அவள் கோழி உறக்கத்தில் கண்ணயர்ந்து கிடந்தாள். அவர் உடனே வெளியேறி, வீதியினூடாக ‘விறுவிறு’வென்று நடக்கலானார்.
‘இனி ஏதோ பிரளயம்தான் நடக்கப்போகிறது. நல்லவனாயிருந்தவன் வேண்டாத கிளர்ச்சிகளில் இறங்கி வீணாக மாட்டிக் கொண்டானே. இந்தப் போக்கு இவனுக்கு ஏன் வந்தது?’
மனந்தாளாமல் நொந்து தனக்குள் குமைந்து கொண்டார் பொன்னையர்.
அத்தியாயம் – 2
பொன்னையர் திரும்பி வரும் போது ஜானகியின் அறைக் கதவுகள் திறந்து கிடந்தன.
‘டியூட்டி முடிந்து அவர் வந்திருப்பார்’ என்ற நினைப்பில் விறாந்தையில் நின்று யன்னலுக்கூடாக மெல்ல எட்டிப் பார்த்தார். அசுமாற்றத்தைக் காணவில்லை. வளியே வந்து கதவோரமாக நிலை குத்தி நின்று லையை உள்ளே நீட்டிக் கண்களை அகலத் திறந்து துளாவினார்.
ஜானகியைக் காணவில்லை.
அவர் நெஞ்சு துருத்திற்று. படுக்கையில் துணிமணி கள் அலங்கோலமாகக் கிடந்தன. அவருக்கு ஒன்றுமாகப் பிடிபடவில்லை.
‘கிணற்றடிப் பக்கம் போயிருப்பாளோ?’
சற்றுச் சினந்து கொண்டார்.
‘குளிக்க வென்று கிளம்பியவள் கதவுகளை ‘ஓ’ வென்று திறந்து விட்டா போக வேண்டும்? இளம் பண்கள் வாழ்க்கை நடைமுறைகளைத் தெரியாமலே புதுமை நாகரிகம் பற்றி மணிக்கணக்காக வெளுத்து, வாங்குவார்கள். அதனால் அவர்கள் புரிகின்ற புது நாகரிகங்கூட ஆபாசமாகி விடுகின்றது. இல்லாவிட்டால் வெளியே சென்ற ஜானகி கதவுகளைத் திறந்து விட்டு அசட்டுத்தனமாகக் கிளம்பியிருப்பாளா?’
தடுமாற்றத்தின் போதும் அவளை நினைக்க அவருக்குச் சிரிப்பே வந்தது. சிறு பெண்ணாயிருக்கும் போது ஒரு தடவை அவர் ஜானகிமேல் இப்படித்தான் குற்றம் சுமத்தியிருந்தார்.
குசினிக்குள் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜானகி உணவு ஆனதும் கதவைச் சாத்தாமலே போய் விட்டாள். அன்று நாயும் பூனையும் தோழமைபூண்டு ஒன்றையும் விட்டு வைக்காமல் தீர்த்துவிட்டன.
தாய் சின்னம்மாவுக்குத் தலைகால் தெரியாமல் கோபம் பொங்கிவிட்டது. அகப்பைக் காம்பை நெரிடிப் பிடித்து,உதடுகளைக் கடித்துக் கொண்டு, *புத்தியறிகிற வயசாகப் போகுது. இன்னும் குழந்தை யாட்டம் பாருள் பண்டத்தில் கவனமில்லாமலிருக்கே. கழுதைக்கு ரண்டு குடுத்தால்தான் அறிவு வரும்” என்று கூறி விளாச ஓடினாள்.
ஜானகியிடம் தாயின் வாலாட்டம் கொஞ்சமும் பலிக்கவில்லை. அவள் ‘குடுகுடு’த் தோடிப்போய் அப்பாவின் நெஞ்சோடு அணைந்து அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, ‘அப்பா, அம்மா அடிக்க வாரு’ என்று கூவி அடைக்கலம் தேடிக் கொண்டாள்.
பொன்னையர் சிரித்துக் கொண்டு, “நீ என்ன குழப்படி செய்தாய்?” என்று செல்லமாகக் கேட்டார்.
ஜானகி நிகழ்ந்ததைச் சொன்னாள்.
“குசினிக் கதவைத் திறந்து விட்டது உனது குற்றம் தானே?”
“அது சரிதானப்பா. அப்படித்திறந்திருக்காவிட்டால் நாய்க்கும் பூனைக்கும் எங்கிருந்து வயிறு நிறையச் சாப்பாடு கிடைக்கும்?”
தான் செய்த தவறை மழுப்பி, சுட்டித்தனமாகச் சாட்டுச் சொன்ன புத்திரியை அவர் வாஞ்சையுடன் தூக்கி அணைத்துக் கொண்டு, “சரியான கள்ளக் குஞ்சு. அம்மா வையும் என்னையும் சேர்த்து நன்றாக வெருட்டுறியே?” என்றார் கொஞ்சலாக.
அந்தக் காட்சியைக் கண்ட தாயின் இதயம் ஒரு தடவை ஆனந்த பரவசத்தில் திணறியது. அதை வெளிக்குக் காண்பியாமல் பொன்னையரைப் பார்த்துச் செல்லமாகக் கண்டித்தாள்.
”அவ இன்னும் சின்னக் கிளிக்குஞ்சு. இப்பவும்மடிக்கை தூக்கி வைச்சுச் செல்லங் குடுங்கோ”
“ஓ, ஜானகி எந்தக் காலமும் என் செல்லக் கிளி தான்.”
அவர் தன்னை மறந்த லாகிரியில் அப்படிச் சொல்லிக் காண்டே ஜானகியைத் தூக்கி அரவணைத்துக் கொஞ்சினார்.
அதைப் பார்த்த சின்னம்மா ஆவேசமாக எடுத்துக் கொண்டுவந்த அகப்பை, அவளை அறியாமலே அவளின் கையைவிட்டு நழுவிக் கீழே விழுந்தது.
‘தாயின் பாசம் சகல குற்றத்தையும் மன்னிக்கும் ஊற்றுக்கண்: அவளின் அன்புச் சுரங்கம் என்றுமே வற்றாத ஜீவநதி’
பொன்னையரின் நினைவலைகள் நூல் அறுந்தமாதிரி ‘டக்’ கென்று விடுபட்டன. கண்கள் கலங்கின. சின்னம்மாவின் நினைவில் மனசு குலுங்குண்டுவிட்டது. சற்று வேளையால் சுய நினைவிற்கு வந்தார்.
அலங்கோலமாகக் கிடந்த ஜானகியின் புடவைகளை எடுத்து ஒரு பக்கத்தே வைத்து விட்டு வெளியே வந்தார்.
கிணற்றடிக்குப் போன உனக்கு கதவைத் தாழிடாமல்விட, அப்படி என்ன கெடுபிடி வந்தது? என்று கேட்டால், அவள், அன்று நிகழ்ந்த அந்த நாய் பூனைக் கதை போலவே அளந்து கொட்டுவாள்…
கிணற்றடிப் பக்கம் எட்டிப் பார்த்தார். அங்கேயும் ஜானகியின் தலைக்கறுப்புத் தெரியவில்லை.
‘இரவு ஜானகியின் கண்கள் ஏன் அப்படிக் கலங்கி இருந்தன?’ என்ற ஓர் விசித்திரமான கேள்வி அப்போது அவர் மனசைக் குடைந்தது. அதற்கு விடைகாண முடியா மல் சற்று வேளை தவித்துக் கொண்டிருந்த பொன்னையரின் மனசில் ‘தற்கொலை’ நிகழ்ச்சிகள் பாம்புபோல் தலைவிரித் தாடின.
‘ஜானகி தற்கொலை செய்து கொள்ள, அவளுக்கு வாழ்க்கையில் அப்படி என்ன குறை நேர்ந்தது?’
அவர் மனசைச் சமாளித்துக் காண்டபோதும், தயம் அந்த நெகிழ்விலிருந்து மீளாமல் அடித்துக் கொண்டது.
எத்தனையோ இளங் கன்னிகள் தாயின் சிறு கண்டிப் புகளைக் கூடத் தாங்காமல் ரகளைப்பட்டுக் கொண்டு, தற் கொலை புரிந்து வாழ்வை அநியாயமாக நாசப்படுத்து கின்ற பரிதாப நிகழ்ச்சிகளை அன்றாடம் பத்திரிகைகளில் வாசித்திருக்கிறார். ‘அப்படி ஏதாவது மன விரக்தி —பல வீனம் ஜானகியைப் பீடித்திருக்குமோ?’ என்று யோசித்த போது, அந்த அதிகாலையிலே கூட அவர் உடல்வியர்த்துக் கொண்டு வந்தது.
அவரின் தொண்டை கரகரத்தது. அவரால் அமைதி யாக நிற்க முடியவில்லை. ஆயிரம் யோசனைகள் சிரசு முட்ட வந்து போயின. கிணற்றுப்பக்கம் கற்பனை தாவிற்று. அந்தகாரித்த மனசை அடக்கி, நடுங்கும் தேகத் தில் வலுவையூட்டி, இதயத்துள் அழுது கொண்டு கிணற்றை மெதுவாக எட்டிப் பார்த்தார்.
கிணற்று நீர் தளம்பாமல் அமைதியாகவே கிடந்தது.
நெஞ்சு குல்லிட ஒரு பெரு மூச்சு விட்டார். அவர் மனசு தளம்பி ஆட்டங்கண்டது.
‘ஐயோ, நான் இனி என்ன செய்ய. அவர் டியூட்டியால் வந்து, ‘ஜானகி எங்கே?’ என்று கேட்டால் பதில் சொல்வது?’
இவற்றையெல்லாம் நினைக்க அவருக்கு குளறி அழ வேண்டும் போல் தோன்றியது.
‘ஒருவேளை இவளே அவரைத் தேடி பொலிஸ் ரேஷ னுக்குப் போயிருப்பாளோ?’
சந்தேகம் புதுசாக தலையெடுக்க, விறாந்தையில் ஏறி நின்று கதவுகளை இழுத்துச் சாத்தினார்.
அறைக்குள்ளே அகஸ் மாத்தாகச் சிணுங்கல் ஒலி கேட்டது.
மலாரடித்து, நின்று, தாழிட்ட கதவுகளை மெல்ல நீக்கிப் பார்த்தார்.
அறையின் மூலைப்பாடாக, அலுமாரி மறைவிலே குந்தியிருந்து, ஜானகி முனகி அழுது கொண்டிருந்தாள்.
ஒரு கணம் பொன்னையர் சிலையாக நின்றார்.
“புள்ள ஜானகி, ஏன் ராசாத்தி அழுகிறாய்?”
தாண்டை கரகரக்க, கேருந் தொனியில், அன்பு ததும்பக் கேட்டார் பொன்னையர். கேட்கும்போதே மகளின் கோலங்கண்டு அவரின் இதயம் சிறு குழந்தைபோல் தேம்பியது. ஜானகி இப்படி அழுத்தை அவர் ஒரு போதும் பார்த்ததில்லை. அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. குடும்பத்தில் ஏதோ பூகம்பம் அடித்திருக்க வேண்டும்?
“ஜானகி, உனக்கு இப்போ என்ன குறை வந்து விட் டது? ஏன் இப்படி அர்த்தமில்லாமல் அழுகிறாய்? உனக்கும் அவருக்கும் ஏதும் தகராறு உண்டா?”
கேள்விமேல் கேள்வி கேட்டுத் தன்னுள் திணறி அவளைப் பார்த்தார்.
ஜானகியிடமிருந்து பதில் வரவில்லை.
“சரி இப்படி எழுந்து வா”
கைத்தாவாகத் தூக்கிவிட்டு ஜானகியை ஏற இறங்கப் பார்த்தார். அவள் துவண்டு போயிருந்தாள்.
“ஏதோ உன் மனசுக்குள் இருக்கு. என்ன வந்தாலும் பாதகமில்லை. துணிந்து உள்ளதைச் சொல்லு”
அப்பவும் ஜானகி வாய் திறக்கவில்லை.
‘குடும்பத்துக்குள்தான் ஏதோ பிணக்கு முளைத்திருக் கிறது. தந்தையென்றாலும் தன் புருஷனைப்பற்றி எந்தப் பெண் முறையிடுவாள்?’
“யோசியாமல் உள்ளதைச் சொல்லு; அவர் ஏதும் ‘முரண்டு’த்தனமாக நடந்தாரா?”
‘இல்லை’ என்று தலையசைத்தாள் ஜானகி.
“அவருக்கு ஏதும் தகராறு உண்டா?”
“இல்லை”
ஜானகி இப்போதுதான் வாய் திறந்தாள்.
“அப்ப, ஏன் அழுதனி?”
‘காலைப் பத்திரிகையில் வந்ததே செய்தி, அது தான்”
“ஓ, அது வா?”
பொன்னையர் அவளின் பேதமையை நினைத்துக் கலகலத்துச் சிரித்தார்.
‘பொன்ராசன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டால் சிவலிங்கத்துக்கு என்ன பங்கம்? அவர் அரசாங்கத் தின் சட்டத்துக்குள்ளே பாதுகாப்பாக இருந்து காண்டு நச்சுப் பாம்புகளைக் கொல்லும் ஓர் அதிகாரி. அவருக்கு ஆபத்து விளையுமென்று இந்தப் பேதைப் பெண் நினைத்துப் புலம்புகிறாளே’
இப்போது ஜானகியின் சுட்டித்தனத்’திலும் பொன்னையருக்கு சந்தேகம் கிளம்பியது. இருந்தும் தனது புதல்வி தன் கணவரில் கொண்ட பாசத்தையும், பண்பையும் கண்ட போது, அவர் தனக்குள்ளே இனங்காணாத பெருமிதத்தில் திளைத்தார்.
“அது பொன்ராசனைப் பற்றி வந்த செய்தி: உன் கணவரைப் பற்றியல்ல”
“அதுதான் எனக்கும்…”
“அடி பயித்தியக்காரப் பிள்ளை. சட்டமும் அதிகாரமும் அவர் கையிலிருக்கும் போது நீ ஏன் அவரை நினைத்து மனசை அலட்டிக் கொள்கிறாய்? வேண்டுமானால் சொல்லு, ‘போன்’ பண்ணி அடுத்த நிமிஷமே அவரை வீட்டுக்கு வரச் சொல்கிறேன். என்ன, வரவழைப்பதா?”
“அதெல்லாம் வேண்டாம். நான் சொல்வது இவரைப் பற்றியல்ல”
“அப்போ, யாரைப்பற்றி?”
”பாவம், அந்தப் பொன்ராசாவைப் பற்றித்தான்!”
மின்சாரம் அடித்த நிலை. பொன்னையரின் தலை று கிறு’த்தது.
பெண்கள் எப்போதும் இளகிய மனசுள்ளவர்கள் என்று பொன்னையர் கேள்விப்பட்டிருக்கிறார். அவர்கள் இதயம் சிலவேளை இரும்புத் துண்டு என்பதை இப்போது தான் நேரில் கண்டார். சற்று வேளைக்குமுன் ஜானகியை நினைத்துப் பெருமைப் பட்டுக் கொண்டிருந்த அவரின் நெஞ்சு அவள் கூறிய வார்த்தைகளால் நொடிக்குள் சுக்கு நூறாக வெடித்தது. அவள் வாயில் துணிவாக வந்த அசிங்கமான வார்த்தைகள்…?
‘பாவம், அந்தப் பொன்ராசா…’
ஊருக்குள்ளே பிரளயம் நடக்கப்போகிறது’ என்று காலையில் தான் வாய்விட்டுக் கூறியிருந்தார். அது இப்போ அவர் வீட்டுக்குள்ளேயே நிகழ்ந்து கொண்டிருக்கிறது இவளுக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா?
ஒரு பாட்டம் தன்னுள் திட்டிக் கொண்டு அவளைத் தின்று கக்குவதுபோல் கோபாவேசமாக பார்வையை வீசினார்.
“நீ ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டரின் மனைவி. அப்படி இருக்க, கேவலம் ஒரு பஞ்சத்தாண்டிப் பரதேசியின் பெயர் சொல்ல உனக்கு வெட்கமில்லையா?”
அவர் உரத்துக் கேட்ட தொனி அவளுக்குக் கடுகடுப் பாக உறைத்தது. ஆனால், தாய்க்குத் தாயாக தன்னைக் கண்மணிபோல் பேணி வளர்த்த அப்பாவின் மனம்நோகப் பேச அவள் விரும்பவில்லை. மௌனமாயிருந்தாள். தனது மனச் சுமை இங்கே இறக்கப்பட்டால் வீடே போர்க்கள மாகிவிடும் என்று அவள் உணர்ந்தபோதும், மனசில் தோன்றியதை அவள் அழுத்திச் சொன்னாள்.
“வெட்கம் என்பது மனசுகற்பிக்கிற மாயவார்த்தை. இதை வைத்துக் கொண்டு அப்பாவிகள் மீது அதிகார ஆணவம் புரிகின்ற கொடுமை இருக்கிறதே, அதுதான் வெட்கம்: அதுதான் மானக்கேடு”
உடைப் பெடுத்த வெள்ளம் போல் எதிர்பாராமல் அவள் வாயில் வெடித்த இந்த வார்த்தைகளைக் கேட்ட பொன்னையர் அப்படியே சமைந்து போய் நின்றார். அவரின் சிந்தனை அடம்பன் கொடிபோல் சிக்கிவிட்டது.
வெறித்த கண்களை அவர் எடுக்கவில்லை.
அப்போது இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் அவசரமாக வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதை அவளும் தந்தையும் அந்தகார மெளனத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
பொன்னையரின் தேகம் பதறத் தொடங்கியது.
– தொடரும்…
– மண்ணில் தெரியுதொரு தோற்றம் (நாவல்), முதல் பதிப்பு: பெப்ரவரி 1978, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.