மண்ணின் மடியில்
(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அடுத்த ‘ஷிப்ட்’டுக்காக அலுவலகத்துள் நுழைந்த பியசேனா திடுக்கிட்டுப் போனான். முதல் நாளிரவுப் பணியில் ஈடுபட்டிருந்த மனோகரன் கையும் காலும் கட்டப்பட்ட நிலையில் நிலத்தில் உருண்டு கிடந்தான்.
தொலைத்தொடர்பு கருவிகளை இயக்கும் ‘அன்டர் கிரவுண்ட்’ அறையில் எந்தவித யந்திர சாதனங்களும் இல்லை. துடைத்தெடுத்தது மாதீரி வெறிச்சோடிக் கிடந்தது.
‘ஸ்… பிய… சேனா…’ மனோகரன் கம்மிய குரலில் உதவிக்கழைப்பதையும் காதில் விழுத்தாமல் வெளியே ஓடினான் பியசேனா.
அவன் எங்கே ஓடுகிறான்? அடுத்து என்ன நடக்கப் போகின்றது? என்பதை ஊகித்துக்கொண்ட மனோகரனின் நெஞ்சில் ‘பகீர்’ரெனப் பயஉணர்வு பற்றிக் கொண்டது. “ச்சீ… பெரியவர்கள் பேச்சைத் தட்டக் கூடாது என வேலைக்கு வந்ததால் ஏற்பட்ட ஆபத்து” மனோகரன் தனக்குள் சலித்துக்கொண்டான்.
வேலைக்குச் சேர்ந்து மூன்று நாட்கள் கூட ஆகவில்லை. முதலில் இந்த நிறுவனத்தில் வேலைக்கு வரு வதையே அவன் விரும்பவில்லை. மொத்தம் பதினேழு ஊழியர்களில் இவன் தந்தை மட்டும்தான் அங்கு தனி யொரு தமிழராக இதுவரை காலமும் இருந்து வந்தார்.
அவர் அந்தக் காலத்து மனிதர். சிங்களவர்கள் என்ன சொன்னாலும் ‘யெஸ் சார்’ எனத்தலையாட்டிவிட்டு சமயம் கிடைக்கும்போது மட்டக்களப்பிலிருந்து நல்ல தயிரும் வறுத்த முந்திரிக்கொட்டைகளையும் வாங்கிக் கொண்டு வந்து சிங்கள அதிகாரிகளுக்குக் கொடுத்து அவர்களைத் திருப்திப் படுத்திக் கொண்டிருந்தார். இருந்தாலும் கூட அவருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய ‘பிரமோஷன்கள்’ கூட அவருக்குப் பின்னால் வேலையில் சேர்ந்த சிங்களவர்களுக்குத்தான் போனது. ஓய்வு பெறும் வயதாகும் வரையும் அவர் எதிர்பார்த்த பிரமோஷன் கிடைக்கவில்லை. அதற்காக அவர் அதிகம் வருத்தப்படவில்லை. தான் ஓய்வு பெறும் சமயம். அங்கேயிங்கேயென சில உபரி உபகாரங்களையெல்லாம் சிங்கள அதிகாரிக்குச் செய்து தன் மகன் மனோகரனை அந்நிறுவனத்தில் வேலைக்கு எடுக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.
இதனை மனோகரனுக்குத் தெரிவித்தபொழுதே அவன் மறுக்க ஆரம்பித்தான்.
“உங்கள் காலம் வேறு, என் காலம் வேறப்பா, இப்ப நமக்கே அவங்களைப்பார்த்தால் நம்மையுமறியாமல் ஒரு வெறுப்புணர்ச்சி நெஞ்சில் பரவுகிறது” எனச் சூழ் நிலையை விளக்கினான்.
ஆனால் அவர் விட்டுக் கொடுக்கவில்லை. நாளும் பொழுதும் வீட்டில் இதே பிரச்சனை தலைதூக்கவே வேண்டா வெறுப்பாக ‘அப்ளிக்கேஷனை’ எழுதிக்கொடுத் தான். இரண்டொரு மாதத்தில் பேசாலைக் கிராமத்தி” லுள்ள தமிழர்கள், சிங்கள இராணுவத்தினரின் மிரட்ட லுக்குப் பயந்து காடுகளில் போய்ப் பதுங்கிக் கிடந்த. சமயத்தில் அவனுக்கு வேலைக்கான உத்தரவு வந்தது.
அவன் அதனைக் கிழித்தெறிந்துவிடத் துடித்தான். “தமிழர்களுக்கு வேலை கிடைப்பதே குதிரைக்கொம்பாக-இருக்கும் சமயம் ஏதோ ஆண்டவன் புண்ணியத்தில் நமக்குக் கிடைத்திருக்கிறது. சமயத்தை நழுவவிடக் கூடாது” எனப் பெற்றவர்கள் நச்சரித்தனர்.
வேலைக்குச் சேர்ந்த முதல் வாரமே, அவனுக்காகக் காத்திருந்தவர்கள்போல் தொலைத்தொடர்பு ‘கண்ட் ‘ரோல் ரூமில்’ இரவு ‘ஷிப்ட்’டை அவனிடம் ஒப்படைத்து விட்டு சிங்களவர்கள் நழுவி விட்டனர்.
மனோகரன் கட்டப்பட்டிருந்த தன் கைகளைத் தன்னிச்சையாக அவிழ்க்க முயன்றான். முடியவில்லை. அவனது நிலையைத் தன் கண்களால் பார்த்துவிட்டுச் சென்ற பியசேனாவும் உதவ முன்வரவில்லை.
‘டக்… டக்…’கென இரும்பு பூட்ஸ்கள் சப்திக்க உள்ளே நுழைந்த ராணுவத்தினர் தரதரவென மனோகரனை வெளியே இழுத்து வந்தனர்.
“நீதானே புலிக்குத் தகவல் கொடுத்து வரவழைத்தது?” சிங்களத்தில் புயலெனச் சீறியபடி அவன் கன்னத்தில் ‘பளா’ரென அறைந்தான் ராணுவ அதிகாரி.
கன்னத்தில் விழுந்த அறையில் நிலைகலங்கிப் போன மனோகரன் ஒரு நிலைக்கு வந்ததும்,
“இல்லை சார்” என மறுத்தான். “பொறுகியனவா மகத்தயாமே கொள்ளோ ஒக்கம கொட்டியாகே யாழுவா தமாய் ஈயத் எக்கனெக் கொட்டியாவாகே ஷேர்ட்டுத் அந்தகனத் மெயாவ பளாண்ட ஆவா” பொய் கூறுகிறான். ‘ஐயா, இவனுகளெல்லாம் ரகசியக் கூட்டாளிகள். நேற்றுக்கூட ஒருவன் புலி மாதிரி ஒரு ஷேர்ட்டுப்போட்டபடி இவனைத் தேடி வந்தான் எனச் சிங்களத்தில் பியசேனா எதுவித தயக்கமுமின்றி ஒரு பெரும் பொய்யைப் பதட்டமில்லாமல் கூறினான்.
பியசேனாவுக்கு அரசின்மேலிருக்கும் விசுவாசத்தைப் பாராட்டிய அதிகாரி மனோகரனை ‘ஜீப்’பில் ஏற்றுமாறு கட்டளையிட்டார்.
”சார், நான் இந்தவாரந்தான் சார் வேலைக்குச் சேர்ந்தவன். எனக்கு எதுவுமே தெரியாது. சார், பிளீஸ் சொல்வதைக் கேளுங்கள் சார்!” ஆங்கிலத்தில் தன் நிலையை விளக்கிக் கூற முயன்றான் மனோகரன்.
“நோ நோ ‘ஜீப்’பில் போய் ஏறுடா” எவரும்.
அவன் வார்த்தைகளைச் சட்டை செய்யவில்லை.
மனோகரனைத் துப்பாக்கி முனையில் அழைத்துச் சென்று ஜீப்பில் ஏற்றினர்.
ராணுவ முகாமுக்குள் அழைத்துச் சென்றும் மீண்டும் மீண்டும் அதே கேள்விகள் தொடர்ந்தன.
“புலிகளுக்குத் தகவல் கொடுத்தது நீதானே?”
“…”
“இதற்காகத்தானே போன வாரம் வேலையில் சேர்ந்தாய்?”
“…”
”நீயும் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவன்தானே. உன்னால் அவர்கள் முகாமை அடையாளம் காட்ட முடியும்…”
“…”
அவனுக்குப் பதிலே தெரியாத பல கேள்விகளை அவனிடம் கேட்டனர்.
“இல்லை சார். அவர்களை எனக்குத் தெரியாது” மனோகரன் கூறி முடிப்பதகுள் மண் நிரப்பப்பட்டற் ‘எஸ்-லோன்’ குழாயொன்று அவன் முதுகில் ‘படீ’ரென விழுந்தது. மனோகரன் பூனைபோல் சுருண்டு ஓடுங் கினான். மீண்டும் அதே கேள்விகள். மண் நிரம்பிய குழாய் அவன் உடலில் ஓரிடம் பாக்கியில்லாமல். விழுந்து தெறித்தது.
இறுதியாக அடிவயிற்றில் வந்து தாக்கிய குழாயின் வேகத்தைத் தாங்க முடியாத மனோகரன், “எனக்குப் புலிகளைத் தெரியாது. நான் புலி…யில்லை….யில்…லை…” ஈனஸ்வரத்தில் முனகியபடியே மூர்ச்சை யடைந்து நிலத்தில் வீழ்ந்தான்.
மறுபடியும் விழிப்பு வந்த சமயம் இருண்ட தொரு அறைக்குள் தான் இழுத்து விடப்பட்டிருப் பதை உணர்ந்தான்.
பசி வயிற்றைக் குடைந்தது. இரவா பகலா? என்பது கூடச் சரியாகத் தெரியவில்லை. எழுந்து நிற்கவும். அவனால் முடியவில்லை.
முடியவில்லை. கைகளைக் கால்களுக்கிடையில் புதைத்தபடி அறையின் மூலையில் அட்டைபோல் சுருண்டு கிடந்தான்.
“அடோ மெயட்ட வாறேங்” சிறை வாசலில் நின்றிருந்த காவலாளி பக்கத்தில் வரும்படி சிங்களத்தில் இரைந்தான். அவன் கையிலிருந்த அலுமினிய ‘பிளேட் டில் இரண்டு ரொட்டித் துண்டுகள் இருந்தன.
எங்கோ மறைந்திருந்த பசி வயிற்றினுள் அகோர மாக எழுந்தது. மனதில் சற்றுத் தென்புடன் எழுந் தான். நிமிர்ந்து நிற்க முடியாமல் கால் நொண்டியது. காலினை இழுத்துக் கொண்டே வந்து நின்றவனைக் கம்பிக்குள்ளாகக் கையை நீட்டிப் ‘பளா’ரென அறைந்தான் அக்காவலாளி. நெற்றிப் பொட்டில் ‘ணங்’கென்று வலியேறியது. தள்ளாடி விழுந்தான். அவன் விழுந்ததும் கம்பிகளுக்குக் கீழே ‘பிளேட்’டைத் தள்ளி விட்டு நகர்ந்தான் காவலாளி.
அன்று முழுவதும் அந்த இரண்டு ரொட்டித் துண்டு களுடன் இருந்தவனுக்கு, அடுத்த நாள் காலை மீண்டும் விசாரணை ஆரம்பமாகியது. ஆனால் இந்தத்தடவை விசாரணையின் தோரணைமாறியிருந்தது.
“நீயும் புலிதானே?”
“இல்லை…”
‘பொறு கியாண்ட’ ஏகோபித்த குரலில் அவனைச் சுற்றி நின்ற ராணுவத்தினர் கத்தினர்.
‘இதிலே கையெழுத்துப் போடு. சிங்களத்தில் எழுதி வைத்திருந்த பத்திரமொன்றை நீட்டி; அதில் அவனைக் கையெழுத்திடும்படி வற்புறுத்தினர்.
“முடியாது சார், நான் புலியில்லை. இரண்டு நாட் களுக்கு முன்னர்தான் புதிதாக வேலைக்குவந்தவன்’ மனோ கரன் துணிச்சலாக மறுத்தான். சித்ரவதைகள் கடூரமாக ஆரம்பித்தன. வாழைக்குலையைக் கட்டித தூக்குவது போல் அவனைத் தாம்புக் கயிறொன்றில் தலைகீழாகத் தொங்கவிட்டனர். அதன் கீழே மிளகாய்வத்தல்களைக் கொட்டி, நெருப்பு மூட்டி அதன் காரத்தை அவன் நாசி யில் ஏற்றிப் பார்த்தனர்.
ம்ஹும். எந்தத் தகவலையும் அவனிடமிருந்து வர வழைக்க முடியவில்லை.
படிப்படியாக அவன் உடலில் தழும்பேறியது, மூளையே மரத்துப் போனது மாதிரி அவனது நினைவாற்றல் குறைந்து கொண்டு வந்தது.
எழச்சொல்லும்பொழுது எழுந்தான். உட்காரச் சொன்னதும் உட்கார்ந்தான். உடலில் அடி விழும் போது மட்டும் ஹோ’வெனக் கதறினான். சித்ரவதைகள் அதிகரிக்கும் போது மூர்ச்சையுற்றுக் கீழே விழுந்தான்.
அரை மயக்கத்தில் சுருண்டு கிடந்த மனோகரின் சிறைக் கதவுகள் திறக்கப் பட்டன. காவலாளி அவனை விலங்கிட்டபடி வெளியே அழைத்துச் சென்றான்.
விசாரணையறையில் அவனைப் போன்றே மேலும் ஏழெட்டு இளைஞர்களிள் கைகளில் பூட்டிய விலங்குடன் தொங்கிய முகமும் பஞ்சடைந்த கண்களுமாய் அதிகாரிகளுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்தனர்.
அதிகாரியின் உத்தரவுப்படி இளைஞர்களின் கைவிலங்குகள் அகற்றப்பட்டன.
மனோகரன் தன்கையை நிமிர்த்த முயன்றான். அவனது கைகளே அவனுக்கொரு பாரமாய்த் தொங்கியது.
“இன்னுங்… கொஞ்சங்… நேரத்தில உங்களைவிடுதலை பண்ணப்போறங்… ஒவ்வொருத்தரா வந்து இதுல கையெழுத்துப் போட்டுவிட்டு போக… லாங்” ராணுவ அதிகாரியொருவர் தனக்கு முன்னால் தடித்த தொரு புத்தகத்தை விரித்து வைத்து விட்டு அரைகுறை தமிழில் கட்டளையிட்டார்.
ஒவ்வொருத்தராக வரிசையில் சென்றனர். ‘முருகா’… நீண்ட பெருமூச்சொன்றை தனக்குள் இழுத்து விட்டபடி நகர்ந்தான் மனோகரன். அவனால் பேனாவைச் சரியாகப் பிடிக்க முடியவில்லை; விரல்கள் அசைய மறுத்தன. பெரும் சிரமப்பட்டு விரல்களை மடக்கி கோணல் மாணலாகக் கையெழுத்திட்டான்.
முகாம் வாசல்வரை முன்னும், பின்னும் ராணுவம் புடை சூழ அவர்களை அழைத்துவந்தனர்.
மறு பிறவியெடுத்தது போல் அவ்விளைஞர்கள் வெளி யுலகக் காற்றைச் சுவாசித்தனர்.
“ம்…ஓடுங்கள்… ஓரிரு நிமிடங்களில் இங்கிருந்து மறைந்துவிட வேண்டும்” ராணுவத்தினர் எச்சரித்தபடி அவர்கள் முதுகில் துப்பாக்கியை அழுத்தி வெளியே தள்ளினர்.
நடக்கவே வலுவற்றிருந்த தன் கால்களை இழுத்துக் கொண்டோடத் தொடங்கினான் மனோகரன்.
‘டுமீல்… டுமீல்… டுமீல்…’. இடியோசைபோல் துப்பாக்கி வேட்டுக்களின் சப்தம் எழும்பின.
முகாமைவிட்டு இருபதடி தூரங்கூட ஓடியிருக்க முடியாத மனோகரனின் உடலைக் கிழித்துக் கொண்டு சென்றன, துப்பாக்கி ரவைகள்.
‘டட் பட்’டென சூடுபட்ட குருவிகள் போல் விழுந்த தமிழ் இளைஞர்களின் உடல்களை வேடிக்கையாகப் பார்த்துச் சிரித்தபடி தங்கள் யந்திரத் துப்பாக்கிகளின் விசைகளை ராணுவத்தினர் இழுத்து நிறுத்தினர்.
– அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1985, தேனருவி வெளியீடு, சென்னை.
![]() |
அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள் - ஆகஸ்ட் 1985 தமிழினத் தலைவர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் அணிந்துரை தென்னிலங்கைத் தீவில் தேம்பியழும் தமிழ் இனத்தினர் படும் சித்ரவதைக் கொடுமைகளைத் 'தேவி' இதழ் 'கண்ணீர்க் கதைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டது தொடர்ச்சியாக! அதன் தொகுப்பே இந்த நூல்! நூல்அல்ல; நம் இதயத்தில் பாயும் வேல்! இலங்கைத் தமிழ்க்குலத்தில் உதித்த எழுத் தாளர் ஞானப்பூங்கோதை அவர்கள் தாய் உள்ளத் தில் பொங்கிப்…மேலும் படிக்க... |