கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 10, 2025
பார்வையிட்டோர்: 571 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புதிய பங்களா. மேலே மங்களூர் ஓடு மிகவும் சிவப்பாகவும் அழகாகவும் தோற்றியது. 

மாலைவேளையில் உலாவிவிட்டுத் திரும்பும் பொழு தெல்லாம் தொலைவிலிருந்து அந்தப் பங்களா தென் படும்; என் பார்வை அந்த ஓட்டின்மீதே நிலைத்து விடும். 

காதலின் நிறம் சிவப்பாக இருக்கும் என்பார்களே!  

அக்கம்பக்கத்திலுள்ள எல்லா வீட்டு ஓடுகளும் கறுப்பாக இருக்கின்றன. 

என் பங்களாவின் ஓடுகள்! உலகத்தில் ஒட்டிக் கொள்ளாமல் விலகியிருக்கும் துறவியின் மனத்தைக் கொண்டோ அல்லது கவியின் • உள்ளத்தைக் கொண்டோ அவற்றைப் படைத்திருக்க வேண்டும்! 

வெகு நாள் வரையில் அவை என் பார்வையில் படும்போதெல்லாம், விழிகள் பிதுங்கிப்போவது போல நான் அவற்றைப் பார்ப்பேன். 

இரண்டு மூன்று மழைக் காலங்கள் கடந்தன. இரண்டு வருஷங்கள் கழித்து, நான் ஊருக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். 

கோயில் தென்பட்டது; ஆலமரம் வந்தது; தென்னை மரங்கள் பின்னால் சென்றன. இன்னும் சற்று முன்னே சென்றால், என் பங்களாவின் சிவப்பு ஓடுகள் தென்படும். 

நான் முன்னால் ஓடிச் சென்றேன். 

கண்களை விழித்து விழித்துப் பார்த்தேன். ஆனால் சிவப்பு ஓடுகளை எங்கும் காணவில்லை. என் பார்வை மங்கிவிட்டதோ என்ற சந்தேகம் எனக்கு உண்டாயிற்று. 

இதுதான் அந்தப் பங்களா. பார்வை சட்டென்று மேலே சென்றது; அடங்கிய ஆவலோடு உடனே கீழே தாழ்ந்தது. 

அந்தச் சிவப்பு ஓடுகள் கறுப்பாகி யிருந்தன. மற்றப் பழைய பங்களாக்களைப்போலவே என் பங்களாவும் தோற்றியது. 

ஏதோ இனிய மெல்லிய நாதத்தைக் கேட்டு என் பார்வை திரும்பியது. ஒரு புறா அங்கே உல்லாச மாக உட்கார்ந்திருந்தது. அதன் நிறந்தான் என்ன வெண்மை! அது குழந்தையுள்ளந்தான் போலும்! அந்தப் புறாவைப் பார்த்துக்கொண்டே, நிறம் மாறிய ஓடுகளைப்பற்றிய துன்பத்தை மறந்துவிட்டேன். 

மறுநாள் காலையில் உலாவிவிட்டு வருகையில், பங்களா தொலைவிலிருந்தே தெரிந்தது. சிவப்பு மங்க ளூர் ஓடு-. 

புறா அந்த மூலையிலேயே இருக்குமா? 

வீட்டு வாசலிலிருந்து பார்த்தேன். புறா ஒரு பாடகனைப் போல உல்லாசமாக மார்பை விரித்துக் கொண்டு கூவியது. அது கூவியதன் கருத்து எனக் குப் புரியவில்லை. ஆனால் அதைக் கேட்டு என் மனத் துக்கு ஆறுதல் மட்டும் உண்டாயிற்று. 

– அரும்பு (உருவகக் கதைகள்), மூலம்: வி.ஸ.காண்டேகர், மராட்டியிலிருந்து மொழிபெயர்ப்பு: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: 1945, கலைமகள் காரியாலயம், சென்னை.

கா.ஸ்ரீ.ஸ்ரீ. கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *