பெண் ஜென்மம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 3, 2026
பார்வையிட்டோர்: 511 
 
 

அவள் கரம் பிடித்த நாள் முதல் அவளை வார்த்தைகளால் சீண்டி மகிழ்வது அவனுக்கு பழக்கமாக இருந்தது.

அன்று வார விடுமுறை, அவள் சமையலறையில் இருந்தாள். விஜய் சோபாவில் அமர்ந்து அவனுக்குப் பிடித்த எண்பதுகளின் தமிழ் திரைப்பட பாடல்களை யூடியூபில் கேட்டுக் கொண்டிருந்தான்.

“நான் அடிமை இல்லை” என்ற படத்தில் வரும் “ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது” என்ற பாடல், அதில் அனு பல்லவியின் முதல் வரி, “ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனை சேருவேன்” அதே வரிகளை இரண்டு மூன்று தடவை ரீவைண்ட் செய்து அவளை சீண்டி கொண்டிருந்தான்.

திரும்பிப் பார்த்த அவள், ஏன் இந்த கொலைவெறி? இந்த ஜென்மமே முடியல, இதுல ஏழு ஜென்மம் வேறயா? நான் கும்பிடுகிற தெய்வத்துக்கு கொஞ்சமாவது இரக்கமுன்னு ஒன்னு இருந்தா இனி எனக்கு ஜென்மமே வேண்டாம். அப்படியே ஜென்மம் இருந்தாலும் இந்த பெண் ஜென்மம் வேண்டவே வேண்டாம் என்று இரு கையையும் உயர்த்தி கூப்பியவாறு கூறினாள்.

அவர்கள் இருவரும் காதலித்து பல தடைகளை கடந்து கரம் பிடித்தவர்கள். அழகாக இரண்டு பெண் பிள்ளைகள், சொந்தமாக வீடு, கார், சிறிது சேமிப்பு என்று வாழ்க்கை அழகாக போய்க் கொண்டிருந்தாலும், அவள் சொற்களில் இருந்த அந்த வேதனை அவனுக்கு புரிந்தது. அவள் ஏன் அவ்வாறு கூறினாள் என்று அவன் சிந்திக்க தொடங்கினான்.

70களின் கடைசியில் திருவாரூரில் ஒரு தம்பதிக்கு ஐவரில் இரண்டாவது பெண் மகளாக பிறந்தவள் அவள். அவளுக்கு ஒரு அக்கா, ஒரு தங்கை, இரட்டை சகோதரர்கள் . இரண்டாவதும் பெண் பிள்ளை என்பதால் அவளுடைய பிறப்பு பெரியதாக வரவேற்கப்படவில்லை. நிறைமாத கர்ப்பிணியான அவளது தாயை அவள் புகுந்த வீட்டார் அவளது தாய் வீட்டுக்கு பிரசவத்துக்கு அனுப்பாததால் பிரசவம் திருவாரூரில் ஏற்பட்டது.

பிரசவம் பார்த்தது அவளுடைய தாய் வழி பாட்டி. ஒரு மருத்துவச்சியோ, மருத்துவரோ சரியான சமயத்தில் கிடைக்காததால் பல மணி நேரம் தொப்புள் கொடி அறுக்கப்படாமல் கிடந்திருக்கிறது குழந்தை. இதை அவள் தாய் பலமுறை கூற கேட்டிருந்த அவளுக்கு இந்த நிகழ்வு கல்லில் எழுத்து போல் பதிந்திருந்தது. திருமணத்துக்கு பின் இதை என்னிடம் பலமுறை கூறியிருக்கிறாள். இப்படி தொடங்கியது அவள் வாழ்க்கை.

அவளுடைய தந்தை மத்திய அரசு வங்கி ஊழியர் என்பதால் பலமுறை பணி மாற்றம் நிமித்தம் வடமாநிலங்களில் பணி புரிந்து இருக்கிறார். இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை திருவாரூருக்கு அருகில் இருந்த அம்மையப்பன் என்ற கிராமத்தில் இருந்த அவளுடைய தாய் வழி பாட்டி வீட்டில் வளர்ந்தாள். இந்த ஏழு வருடங்கள் அவருடைய வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. வருடத்தில் ஓரிரு முறையே பெற்றோரை சந்திக்கும் வாய்ப்பு. பல ஆண்டுகளாக பெற்றோரை பிரிந்து அவர்களது அரவணைப்பில் வாழ முடியாத ஒரு தன்மை. அந்தக் குழந்தை ஏக்கத்தில் விழுந்து விடாமல் பார்த்துக் கொண்டவர்கள் அவளது தாய் வழி பாட்டியும் தாத்தாவும். இந்த ஜென்மத்தில் அவள் மனதுக்கு மிகவும் பிடித்த இரு உயிர்கள். திருமணமான புதிதில் இந்த அம்மையப்பனில் அவள்

வாழ்க்கையில் நடந்த சில சுவாரசியமான விஷயங்களை என்னுடன் அவள் கதை போல் பகிர்ந்து கொள்வான் அப்போதெல்லாம் நான் கூறி இருக்கிறேன் இதை ஏன் கதை வடிவில் எழுதக்கூடாது என்று. பல ஆண்டுகளாக பெற்றோரை பிரிந்து இருந்ததாலோ என்னவோ அவள் மனிதர்களை படிக்க கற்றுக் கொண்டிருந்தாள்.

அவள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது அவளுடைய குடும்பம் திருச்சிக்கு குடி பெயர்ந்தது. பள்ளிப்படிப்பை சாவித்திரி வித்யா சாலா என்ற பெண்களுக்கான பள்ளியில் முடித்த அவள், கல்லூரி படிப்பை இந்திரா காந்தி பெண்களுக்கான கல்லூரியில் முடித்தாள். தினமும் திருச்சி தென்னூரில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை பஸ்ஸில் பயணம்.

அவள் பூப்பெய்திய போது சொல்லொனா துயரங்களை சந்திக்க வேண்டி இருந்தது. வெள்ளித்திரையின் மாய வலையில் சிக்கித் தவித்த பல சிறுவர்களும் இளைஞர்களும் தங்களை கதாநாயகர்களாகவே நினைத்துக் கொண்டார்கள். அவர்களது கண்களுக்கு சிறு வயது பெண்கள் கூட கதாநாயகிகளாகவே தெரிந்தார்கள்.

அப்பொழுது திருச்சியில் பல தனியார் பேருந்து நிறுவனங்கள் பேருந்து இயக்கிக் கொண்டிருந்தன. அவர்களுக்குள் தொழில் போட்டி வேறு ஒவ்வொரு பேருந்திலும் திரைப்பட பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். படியில் தொங்கும் பல ரோமியோக்கள், பெண்களை உரசுவதும் சீண்டுவதுமாக இருக்கும் சில வாலிபர்கள், இதில் சிறு வயது நடத்துனர்கள் வேறு அவர்கள் தங்களை ரஜினியாகவோ கமலாகவோ பாவித்து கொள்வார்கள்.

இப்படி போய்க்கொண்டிருந்த அவள் வாழ்க்கையில் அவள் அவனை சந்தித்தது 98ல். நன்றாக போய்க் கொண்டிருந்த அவர்களது காதல் பயணத்தில் அவள் கூறிய ஒன்றை தவறாக புரிந்து கொண்டதால் தானும் அவளை தண்டித்ததை நினைவு கூர்ந்தான். அவளுடைய வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து இருந்தார்கள். அதனால் துயர் உற்ற அவள் அவனிடம், தன் தந்தையிடம் வந்து பெண் கேட்குமாறு பலமுறை கூறியிருந்தால் ஆனாலும் அவன் செவி சாய்க்கவில்லை. அதில் வந்த ஒரு சிறிய சச்சரவில் அவன் அவளிடம் ஒரு வருடம் பேசவே இல்லை. அது அவளை மன ரீதியாக வெகுவாக பாதித்திருந்தது. ஒரு வருடம் கழித்து அவன் அவளை சந்தித்த பொழுது அவள் மனதளவிலும் உடலளவிலும் சோர்ந்து இருந்தாள் . அதைப் பற்றி அவன் விசாரித்ததற்கு தனக்கு தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை என்பதால் அதற்கான மாத்திரைகளை உட்கொள்வதாகவும் அதனால் இருக்கலாம் என்றும் கூறினாள்.

அவர்களுக்குள் இருந்த காதல் அவளுடைய குடும்பத்தாருக்கு தெரிந்த பொழுது ஒரே நாளில் பெற்ற தாயும், உடன்பிறந்த சகோதர சகோதரிகளும், உற்றார் உறவினரும் விரோதிகளாக மாறியிருந்தார்கள். அவர்கள் எல்லோரும் அவளை வெகுவாக வெறுத்தார்கள். காதல் என்ற மாய வலையில் இருந்து அவளை மீட்க தண்டனை தான் ஒரே வழி என்று ஆலோசனை கூறினர் பல உறவினர்கள். இன்னும் சிலர் ஆலோசனை என்ற பெயரில் அவளை வார்த்தைகளால் காயப்படுத்தி கொண்டே இருந்தார்கள். அவளுடைய வாழ்க்கையின் இந்தப் பகுதி அவளுக்கு மிக மன அழுத்தத்தையும் உடல் சோர்வையும் கொடுத்திருந்தது.

இப்படி ஒரு வழியாக அவர்களுக்கு திருமணம் ஆகி இருந்தது. திருமணமான புதிதில் இருவரும் ஒரு சுகாதார பரிசோதனை செய்து கொண்டதில் அவளுக்கு சர்க்கரை நோய் இருப்பதாக கூறினார்கள் அவர்களுடைய உலகமே தகர்ந்தது.

இதற்குப் பின் பணி நிமித்தமாக அவன் பிரித்தானியா சென்ற பொழுது அவர்களுடைய முதல் குழந்தையை கருவுற்று மூன்று மாத முடிவில் அவள் இழக்க நேரிட்டது இதுவும் அவளை மனதளவில் புரட்டிப் போட்டது.

மூத்த மகள் பிறந்த பொழுது குழந்தை தலை திரும்பாததால் சிசேரியன் முறையில் குழந்தை பெற வேண்டி இருந்தது. முதல் பிரசவம் சிசேரியன் என்பதால் இரண்டாவது குழந்தையும் சிசேரியன் முறையிலேயே பெற்றெடுத்தாள். சிசேரியன் அறுவை சிகிச்சை முடிந்த அவளால் பல மாதங்கள் எழுந்து நிற்க முடியவில்லை.

தரையில் சம்மணம் போட்டு அமர முடியவில்லை. தொடர்ந்து 30 நிமிடம் கூட நிற்க முடியவில்லை. பயணங்கள் பழையது போல் இருக்கவில்லை. பேருந்திலோ காரிலோ பயணம் செய்யும் பொழுது அது நிற்கும் பொழுது ஏற்படும் இன்ஜினின் அதிர்வுகள் கூட அவளுக்குள் எதையோ செய்தது.

இரண்டாவது குழந்தைக்கு மூன்று வயது இருக்கும் பொழுது அவளுக்கு அடிக்கடி தலைவலி வந்தது. மருத்துவரிடம் விசாரித்த பொழுது அவளுடைய பிட்யூட்டரி சுரப்பி சிறிது வீங்கி இருப்பதாகவும் அதற்கு ஒரு ஆபரேஷன் தேவைப்படுவதாகவும் கூறினார்கள். மருத்துவர்கள் அவளுக்கு ஸ்டெராய்டு மாத்திரைகளை பரிந்துரைத்தார்கள்.

ஸ்டெராய்டு மாத்திரைகளை சில வருடங்கள் எடுத்ததன் விளைவு, அவளுடைய தசைகள் வலுவிழந்து இருந்தன. மாதவிடாய் குருதிப் போக்கு அதிகமாக இருந்தது. பரவால்லப்பா! ஆம்பளைங்களா பொறந்த உங்களுக்கு இந்த மாதிரி பிரச்சனைகள் எதுவும் தெரிய வேண்டாம். இல்லையா? என்று பலமுறை பல மாதவிடாய் காலங்களில் அவள் கூற நான் கேட்டிருக்கிறேன்.

இப்படி இந்த ஜென்மத்தில் பல ஆண்டுகள் வலியிலேயே வாழ்ந்த ஒருத்திக்கு எப்படி இன்னொரு ஜென்மமும் பெண்ணாக பிறக்க வேண்டும் என்ற ஆசை வரும்.

தன் தலையை முடியை யாரோ கோதுவதைப் போன்ற உணர்ந்த அவன் திடுக்கிட்டு எழுந்த பொழுது அவள் சிரித்துக் கொண்டு சூடாக காபியை நீட்டினாள். என்ன ரொம்ப யோசனையா என்றாள். அப்பொழுதுதான் அவன் உணர்ந்தான

அந்தப் பாடல் முடிந்து வெகு நேரமாகி இருந்தது.

அவள் தொடர்ந்தாள், ஏம்பா கோவிச்சுக்கிட்டியா? நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா? ஐ டின்ட் மீன் இட் என்றாள். மீண்டும் தொடர்ந்தாள், திரைப்படங்களில் அந்தப் பாடல்களை எழுதியது ஆண்களாக இருக்கலாம். இந்த ஜென்மத்தில் ஆணாக இருக்கும் ஒருவன் அடுத்த ஜென்மத்தில் பெண்ணாகத்தான் பிறப்பான் என்று ஒரு இயற்கை விதி இருந்திருந்தால் எந்த ஆணாவது இப்படி பாட்டு எழுதி இருப்பானா என்று கூறி சிரித்தாள்.

அது அவனுக்கு சரி என்று பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *