பூர்த்தியான தேடல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 10, 2025
பார்வையிட்டோர்: 51 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கொதித்து வந்த குருமாவை நான்காவது முறையாக ருசி பார்த்தாள் பிரியா… 

ம்..அளவான மசாலாவும், கிழங்கும் பட்டாணியுமாக குருமா, ருசியாகத் தானிருந்தது. அதைக் கேஸரோலில் ஊற்றி மூடியவள், பால் ஊற்றிப் பிசைந்து வைத்திருந்த சப்பாத்தி மாவைக் கிள்ளியெடுத்து உருட்டித் தேய்க்கலானாள். 

மணி நான்கை நெருங்க, கணவனின் நினைப்பில் பிரியாவின் முகத்தில் ஒரு முறுவல் படர்ந்தது. 

குளித்து, உடுத்தி… பளிச்சென நிற்கப் பரபரத்தாள்.

அவளுக்குத் திருமணமாகி 3 மாதங்களே பூர்த்தியாகியிருந்தன. 2 கொழுந்தன்மார், மாமனார், மாமியார் என்று அனைவரும் ஒன்றாக இருந்தாலும் தம்பதிகளுக்கு வேண்டிய தனிமையும் கிடைத்தது. தினம் சிநேகிதர் வீடு, சினிமாஅல்லது காலார நடந்து வருவதையோ பழக்கமாக்கிக் கொண்டிருந்தனர். 

பள்ளியிலிருந்து மாமியார் வந்த பிள், சாதம் மட்டும் வடித்து, மீந்ததை அவர் சூடாக்கி விட அவளுக்கு வேலை இதோடு முடிந்தது. 

மாமியாரின் நினைப்பு வரவே பிரியாவில் புருவங்கள் முடிச்சிட்டன!. 

நீங்கள் நினைப்பது போல கொடுமை, பொறாமை, அகங்கார, ஆங்கார, பாசமில்லா மாமியாரெல்லாமல்ல ராஜம்மா! – அங்கு தான் குழப்பமே! 

பல வருடங்களாக, நகரின் பெரிய பள்ளியொன்றில் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் ராஜம்மாளைப் பார்க்கும் எவருக்கும் சற்று பயங்கலந்த மரியாதை எழும். 

கஞ்சியில் விறைத்து நிற்கும் இளவண்ண வாயில் புடவையில் ஒரு போதும் கலையாத கேசம். 

மெல்லிய தங்க பிரேம் கண்ணாடி.

மெலிந்த தேகம், மிக சொற்ப நகைகள், கூரிய பார்வையுமாயிருக்கும் மாமியாரைப் பார்க்கையில் பிரியாவும் ஒடுங்கிப் போவாள். 

பாசம் எழும் வகையில் அவர்கள் உறவு இதுவரை அமையவில்லை. கரிசனையும் புன்முறுவலுமிருந்தாலும் அத்தையின் ஊடுருவும் பார்வை பிரியாவிற்குப் புதிராக இருந்தது. அவர் கணீரெனப் பேச, பிரியா ஆசிரியை முன் நிற்கும் ஆறு வயது குழந்தையைப் போலாவாள்! 

“ஆமாங்க அத்தை” 

‘சரிங்க அத்தை’ என்று மென்று விழுங்குவாள். இத்தனைக்கும் பிரியா பாசத்திற்கு ஏங்கியவள். இளவயதிலேயே தாயை இழந்து அந்த அன்பிற்காக மறுகியவள். 

‘நீ போற வீட்ல மூணும் பையனுங்க. அதனால் சம்பந்தியம்மா உன்னைத் தன் மகளாத்தான் பாவிப்பாங்க. நான் எனக்குத் தெரிஞ்சவரை உன்னை வளர்த்தாலும் தாய் போல வருமா? 

இனி உனக்கந்த குறையிருக்காதம்மா’ என்று அப்பா, மேலும் அவளிடம் பாசக் கனவுகளை உருவாக்கி விட்டிருந்தார். 

இந்த 3 மாதங்களில், மாமியார் அவளுக்குப் பல சேலை, ரவிக்கை, புது தினுசு வளையல்கள் என்று வாங்கிப் பரிசளித்தாலும் பிரியா ஏங்கிய அந்நியோன்யம், ஒட்டுறவு, உரிமையான நெருக்கம் இல்லை. 

அழைப்பு மணி ‘ஹிர்….’ என அவள் நினைவுகளை அலறிக் கலைத்தது. சப்பாத்திகளை மூடி வைத்துக் கதவைத் திறக்க ஓடினாள். 

‘அத்…தை சீக்கிரமா வந்திட்டீங்களே?” குழந்தை போல் கலைந்திருந்த தன் முடியை ஒதுக்கி முகத்தைத் துடைத்தாள் பிரியா. 

“ம்ம், யார்ன்னு பார்க்காம கதவைத் திறக்காதே பிரியா. காலம் சரியில்லை” 

“சரிங்கத்தை” 

“நாளைக்குச் சுதந்திர தினம் – காலையிலேயே வரணும்னு எங்களை மூணரை மணிக்கே விட்டாச்சு.” 

“தோ, காபி போடறேன்’ என்ற பிரியா, இருவருக்குமாக காபி கலக்கி, அருந்திய பின் குளிக்கப் போனாள். கருநீல வாயில் சேலையில் முடியைச் சிக்கெடுத்தவாறு வந்தவள், மாமி தன்னைக் கண்ணெடுக்காது பார்க்கச் சற்றே கூசினாள், “வந்து உட்காரும்மா, நான் தலை பின்னி விடறேன்.” தான் சற்று முன் யோசித்தவை அத்தைக்குத் தெரித்திருக்குமோ என்ற அசட்டு அச்சத்தையும் மீறிப் பிரியாவிற்குச் சந்தோஷமாய் இருந்தது. 

“என்ன இத்தனை சிக்கு?” – என்றவாறு ராஜம்மாளின் விரல்கள் மருமகளின் கூந்தலைக் கோதிச் சிக்கெடுத்தன. 

”எனக்கு 2 பெண் குழந்தைங்க பிறந்தாங்கன்றது உனக்குத் தெரியுமா பிரியா?” 

அத்தையின் ‘திடீர்’ கேள்வியில் குழம்பியவள்,

“இவர் ஒண்ணும் சொல்லலேத்தை” என்றாள்.

“எனக்கு முதலில் பிறந்தது இரட்டைக்குழந்தைங்க – இரண்டும் பொண்ணுங்க. பிறந்த ஆறாம் மாசமே தவறிட்டாங்க.” 

“ஓ…”

“பிறகு 3 பையனுங்க பிறந்தும் கூட எனக்கென்னவோ அந்த அதிர்ச்சி முழுசா நீங்கலையம்மா.” 

இழப்பின் துக்கம், பிரியா அறியாததில்லையே! 

“என்ன இருந்தாலும் ஒரு பொண்ணு மாதிரி வரதில்லை பிரியா.” 

“இப்ப நான் வந்தாச்சே” பிரியா உண்மையும், மென்மையுமாய்ச் சொன்னாள். 

“எங்கே என் மகளுங்க எனக்குத் தங்காதது போல, நீயும் போயிடுவியோன்னு எனக்கொரு பயம். நா அவங்களை ரொம்ப நேசிச்சேன் அவங்க இழப்புக்குப் பிறகு எனக்கு யார் மீதும் அதிக பாசம் வைக்க பயம்.” 

*எனக்கு அப்படியில்லைத்தை. எனக்குப் பாசம் காட்ட ஒரு தாய் ரொம்ப தேவையாயிருந்தது.’ 

“என்னைப் பார்த்துப் பயந்தாற் போல தெரிஞ்சுது?” 

“ம்… கொஞ்சம் நீங்க என்னை உறுத்துப் பார்ப்பீங்களா..” பிரியா சிரித்தாள். 

“இத்தனை வருஷமா முரட்டுக் குரலும், இடிச் சிரிப்புமா தடிப்பயலுங்க 3 பேரே சுத்தி வந்த பிறகு உன்னைப் பார்க்கறதே ரொம்ப இன்பமாயிருந்தது. உன் சின்ன கொலுசுப் பாதம், வளையல் சத்தம், சிரிப்பு, நறுவிசான வேலை… பார்க்கப் பார்க்க எனக்குத் தொண்டை அடைச்சிக்கும். 

ஏதோ ஒரு சின்ன தேவதை எங்க நடுவில நடமாடுவது போல… நாங்க நெருங்கித் தொட்டா நீ புகையா மறைஞ்சிடுவியோன்னு கூட ஒரு அசட்டுப் பயம் எனக்கு!” 

இத்தனை நாட்கள் மனதுள் குமைந்த எண்ணங்கள், உருப்பெற்று வெளியான கூச்சத்தில் மௌனமானாள் ராஜம்மாள்.

“புரியுது அத்தை” – மெள்ள திரும்பித் தன் புதிய அன்னையின் மடியில் முகம் புதைக்க, அந்தப் புதிய அந்நியோன்யத்தில் நேசம் பொங்கியது. 

இருவரின் தேடல்களையுமே அத்தனை அழகாகக் கோர்த்துப் பூர்த்தி செய்த இறைவனை இருவரின் மனங்களும் வியந்து நன்றி கூறின. 

– உயிர்நாடி, நவம்பர் 1992.

– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *