பூங்காவில் ஒரு பொதுக் கூட்டம்
கதையாசிரியர்: கே.என்.சுவாமிநாதன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: March 7, 2026
பார்வையிட்டோர்: 68
(2024ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அன்று பூங்காவில்,தேர்தலுக்கானபொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
அன்றைய பேச்சாளர், கோபாவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
தங்களுடைய கோரிக்கையை ஏற்கும் கட்சிக்குத் தான் வாக்கு என்று முழங்கிக் கொண்டிருந்தார். சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட நபர்கள் நின்று பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர். “நாடு முன்னேறிக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், எங்களுடைய வாழ்வாதாரம் பறி போனதைப் பற்றி போனதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.கோவிட் தொற்றினால், வருமானம் இழந்து, மிகவும் அதிகமாக பாதிக்கப் பட்டவர்கள் நாங்கள். எங்களில் பலர், இந்தத் தொழிலை விட்டே சென்று விட்டார்கள்.
முன்பெல்லாம், மாதம் ஒன்றாம் தேதி அன்றே அந்த மாதச் செலவிற்கான பணம் கிடைத்து விடும். கூட்டமான பஸ், டிரெயின், மார்க்கெட் போனால் போதும். தீபாவளி போனஸ் சமயத்தில் கை நிறைய பணம் கிடைக்கும். ஆனால், கரென்ஸி நோட்டில் சம்பளம் தருவதை நிறுத்தி, காசோலையாக சம்பளம் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
காசோலையை வங்கியில் கொடுத்து பணம் எடுத்து வரும்போது, எங்கள் தொழிலை செய்தோம். இப்போது, காசோலை கொடுக்காமல் வங்கியில் பணத்தை நேராகக் கட்டி விடுகிறார்கள் அலுவலகங்களில்.
கடைத் தெருவில் தொழில் செய்து பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். இப்போது அதுவும் சரிவர செய்ய முடிவதில்லை. கடைகளில் பொருட்கள் வாங்குபவர்கள் கடன் அட்டை கொடுக்கிறார்கள், அல்லது “ஜிபே” செய்கிறார்கள். ஆக மொத்தம், மணிபர்சில் பணம் எடுத்துச் செல்வதில்லை. வாரத்தில் இரண்டு நாட்களாவது, வணிக நிறுவனங்கள், பணம் பெற்று விற்பனை செய்ய வேண்டும், நிறுவங்களில் சம்பளம் ரூபாய் நோட்டுகளாக கொடுக்க வேண்டும் என்று, சட்டம் கொண்டு வர வேண்டும்.
இதை தங்களுடைய தேர்தல் அறிக்கையில் அறிவிப்பவர்களுக்குத் தான் எங்களது வோட்டு.
எங்களைத் தொழில் செய்ய விடுங்கள். இங்கு கூடியிருப்பவர்கள் மணிபர்ஸ்களில் மொத்தம் இருநூறு ரூபாய் கூடத் தேறவில்லை, மத்திய, மாநில அரசுகள் எங்கள் நிலை பற்றி சிந்தித்துப் பார்ப்பதில்லை.”
கூடியிருந்த கூட்டம், பாக்கெட்டில் பர்ஸ் இருக்கிறதா என்று தடவிப் பார்த்தபடியே கலைந்து சென்றது.
– 18-04-2024, தமிழ்நாடு பேப்பர்.காம்
![]() |
பொறியியல் பயின்று, அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் குழுமங்களில் பணி புரிந்து, பின்பு, 15 ஆண்டுகளாக கணிதமும், தர்க்கமும் கற்பித்து வந்தேன். “யு-டியூப் – ஸ்வாமிமேடிக்ஸ்” என்ற சேனலில், சுலப கணிதம் குறித்து ஆங்கிலத்தில் விளக்கி வந்தேன். கோவிட் ஊரடங்கு என்னை கதை, கட்டுரை, எழுத ஊக்கம் அளித்தது. கதைகள், கட்டுரைகள் வெளியான இதழ்கள் - தினமலர்-வாரமலர், கலைமகள், அமுதசுரபி, தினமணி, சிறுவர்மணி, கதிர், நம் உரத்த சிந்தனை,…மேலும் படிக்க... |
