புரியாத புதிர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 1, 2025
பார்வையிட்டோர்: 287 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆலமரத்தின் இலைகள் காற்றில் சந்தோசமாக ஆடிக் கொண்டிருந்தன. மரத்தின் அடியில் மக்கள் கூட்டம் களை கட்டத் துவங்கியிருந்தது. சிறுவர்கள் ஒருபக்கம் இரு குச்சிகளை ஊன்றி மட்டைபந்து விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். மறுபக்கம் பெண்குழந்தைகள் சிலர் சுருங்கிப் போன பாவாடையுடனும் வளர்ச்சி மிறிய உடலை முழுதும் மறைக் காத சட்டையுடனும் பாண்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இன்னும் சில சிறுவர்களும் பெண்களும் ஆங்காங்கு அமர்ந்து தத்தம் குழுவினருடன் இன்னபிற விளையாட்டுகளைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

அதிலிருந்து ஒரு ஐம்பதடி தள்ளி தரையிலிருந்து முளைத்து வந்த குழாயில் வயிறு பெருத்த பெண்களில் சிலர் முந்தானை போடாத கருப்பாயிக்கிழவியிடம் ‘ஒனக்கென்ன அவசரம்? மொத ராத்திரி முடிஞ்சி குளிக்கவா தண்ணி எடுக்க வந்து நிக்கிறெ’ எனக் கிண்டலோடும் கேலியோடும் அவளின் திறந்திருந்த மார்பு பற்றியும் இரட்டை அர்த்தங்களில் பேசிக்கொண்டார்கள். கருப்பாயிக்கிழவி இந்த வயதிலும் அழகாய்த்தான் புன்னகைத்தாள்.

உச்சாணிக்கொம்பில் இருந்து ஒரு கிளி ‘கீச்கீச்’ என்று கீச்சலிட, பதிலுக்கு அணில் அதை முறைத்துக் கொண்டிருந்தது. இரண்டும் பதிலுக்குப் பதில் பேசிக்கொண்டே ஒவ்வொரு பழமாய்க் கொத்திக் கொத்தி பாதியைத் தின்று மீதியைக் கீழே போட்டுக்கொண்டிருந்தன. சிதறிய பழங்கள் கீழே விழுந்து சிகப்புப்பொட்டாய் சிரித்துக் கொண்டிருந்தன. நேற்றுப் பெய்த மழை ஆலமரத்தின் வலது கோடியில் இன்னும் ஈரமாயிருந்தது. ஈரமும் செம்மண்ணால் சிகப்பு நிறத்தில் இருந்ததால் அங்கும் கூட பெரிதாய் ஒரு அணில் கடித்த ஆலம்பழம் விழுந்திருக்குமோ என நினைக்கத் தோன்றியது பார்ப்பவர்களுக்கு.

இடது பக்கத்தில் ஊருக்கு வரும் வழி வந்து முடிந்தது. முடிவின் சரிவில் சரளைக்கற்கள் தெறித்துக் கிடந்தன. ஒருசில சரளைக்கற்கள் வழக்கத்துக்கு மாறாய் கொஞ்சம் ‘ஷேப்’ போடு இருந்தன. மழை நீர் ஓடி வடிகாலாயிருந்த சரளைக்கற்களின் பள்ளத்திற்குப் பக்கத்தில் வெளிர்த்துப்போன சிகப்பு நிறத்தில் ஆயக்குடி என்று அரசாங்க எழுத்துக்கள் பதித்த பெயர்க்கல் இருந்தது. அதில் ‘குடி’யை மறைத்து ‘ஆபரேஷன் இல்லை, பத்தியம் இல்லை. விரை வாதத்திற்கு மருந்து’ போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. நாய் ஒன்று அதில் விட்டு விட்டு எங்கோ பார்த்துக்கொண்டு காலியாக்கிக் கொண்டிருந்தது அதன் சிறுநீரகப்பையை. நாய்க்கு மேலும் கீழும் மூச்சிறைத்தது.

அன்றைய வாழ்வின் பசி தீர்க்கப் புறப்பட்டுப்போன பறவைகளின் அணிவகுப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருக்க, குழந்தை குட்டிகளைப் பார்த்த சந்தோசத்தில் தாய்க்குருவிகளும், ஒன்றாய்க் கூடி மாலைச்சிற்றுண்டி சாப்பிடும் சந்தோசத்தில் தந்தைப் பறவைகளும், சாடையாய் சோடி சேரக் கூப்பிடும் இளவயதுப் பறவைகளும், சூரியன் மறைவில் குதூகலிக்கும் வேலி தாண்டும் மன்மதப் பறவைகளும் கூட்டத்தோடு குலவிக்கொஞ்சி சத்தம் போட்டு சங்கீதம் பாடி ரசித்துக்கொண்டிருந்த அத்தருணத்தில், தொலைவில் ஏதோ ஒரு கிளி கடித்துத் துப்பிய ஆலம்பழமாய் சூரியன் கிடக்க ஏதோ ஒரு பறவை அதையும் சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும்; அதுவும் தீர்ந்துகொண்டிருந்தது.

முதலில் வந்தவர் நாச்சியப்ப முதலியார். அனாயாசமாக ஒரு பார்வையை மரத்தின் மேலே செலுத்தியவரின் முகம் திடுமென மாற, நெஞ்சின் அடியிலிருந்து அது எகிறிவந்து முகத்தில் இன்னொரு விகார முகம் தெரிய, கண் ஜுவாலைகள் பளிச்சென்று மரத்தின் மேல் பரவி அதனை எரிக்க, த்தூ என்றார் உடல் நடுங்கும் வெறுப்பில். வானளாவ எரிந்த தீ மெல்ல அணைவது போல முகம் சாந்தமாக, திண்ணையில் அமர்ந்து மேலே பார்த்தார். அவரது கோபமுகம் பார்த்து பறவைகள் பயந்திருக்கவேண்டும். பார்க்காத பறவைகள் மட்டும் கத்திக்கொண்டிருந்தன.

“என்னவோய்… மேலே பாக்குறீம்? கரகாட்டத்துலெ எதையோ பாத்தமாதிரி. அப்புடி ஏதாச்சும் இருந்தா எமக்கும் சொல்லும். சாகப் போற காலத்துலெ சந்தோசமாப் பாத்துட்டு போவோம்.”

பின்னாலிருந்து குரல் வர, நிமிடத்தில் வார்த்தையை ஜீரணித்த முதலியார் மெதுவாய்ப் புன்னகைத்தார்.

“அட! வாரும் ஓய். என்ன? நெத்தியிலெ பட்டையெல்லாம் போட்டுருக்கீம்? கோயிலுக்குப் போனீவியளா?”

சோமுத்தேவர் வயதுக்கேற்ற புன்னகை செய்தார்.

“ஒண்ணுமில்லை நானாமூனா. நம்ம பையன் ‘பைக்கு’ வாங்கி யிருக்கான். ‘டிவிஎஸ் விக்டராமே’. நல்லாத்தான் இருக்கு. பொண்டாட்டி புள்ளைங்களை ஏத்திட்டுப் போடான்னேன். அதெல்லாம் இல்லையின்னு கோயிலு வாசல்லெ வெச்சி என் கையாலெ எடுக்கச்சொன்னான். அப்புடியே என்னைய வெச்சி ஓட்டீட்டு வந்தான். அப்புறம் அவென் அம்மாவெ வெச்சிம். இப்போத்தான் புள்ளைங்களக் கூட்டிக்கிட்டு மாமனார் வீட்டுக்குப் போயிருக்கான். வளர்ற புள்ளைங்க. நல்லாயிருக்கட்டும். என்ன சொல்லுதீங்க…”

“அட. ஆமாவோய். ஒம்புள்ளங்கெ தங்கம். ஊர்லெ மத்தப்புள்ளை களை விட உம்மவன் எவ்வளவோ மேல ஓய்.”

சோவண்ணா மூனா சிரித்தார் வெளியே தெரியாமல். மீனாட்சி கேட்டிருந்தால் அவர் காலடி மண்ணெடுத்திருப்பாள் என்பதாய் இருந்தது அந்தப் புன்னகையின் அர்த்தம்.

“ஆமா, என்ன யாரையும் காணோம். நீங்களும் நானுந்தான் வந்திருக் கோம். ஐயரைக் காணோம். பொன்னையாக்கோனாரைக் காணோம். சித்தாம்பு ஆசாரியையும் காணோம்!”

“வருவாங்க. போனாக்கோனா எப்பவும் லேட்டுதான். ஆடுமாடு கெடக்கி வந்துதானெ வரணும். நம்மள மாதிரி வெட்டியா சுத்துறவரா? கூடலூர் திருவிழாவாம். தேர் செய்ய ஆசாரி போனாரு. பேரனுக்கு ஒடம்பு செரியில்லையாம். மட்டுந்தான் போனாரு. வாறது சந்தேகம்தான்.”

“பரவாயில்லை ஓய். நாம் பேசுவோம். அவுக வாற போது வரட்டும். ஆமா புஷ்பா பத்தி அடிக்கடி சொல்லுவீரெ. அதக்கொஞ்சம் இப்பொ சொல்லும். முடி நரச்சாலும் இது நரைக்கமாட்டேங்குதுவெ.’

“ம் ஆரம்பிச்சீட்டீரா? சும்மா சொல்லக்கூடாது ஓய், புஷ்பான்னா புஷ்பாதான். இத்தினி தேதி வரைக்கும் பாவாடை கொடைமாதிரி சுத்தி, உள்ளுக்கு போடுற டவுசர்காலுசட்டை தெரியறமாதிரி கரகாட்டம் ஆடுறதிலெ அவளெ அடிக்க ஆளில்லை ஓய். சந்தனத்துலெ செஞ்சி தங்கத்துலெ முலாம் பூசுன மாதிரி.. அவெ காலு இருக்கே..காலு. அடடா! அதைப் பாக்கவே அந்தக் காலத்துலெ ஒரு கூட்டம் கெடையா கெடக்குமுல்லெ. ம்க்கூம். நான் ஏதோ வௌக்கெண்ணெ மாதிரி சொல்லிக்கிட்டு இருக்கேன் உமக்கு ஒண்ணுமே தெரியாத மாதிரீ. நாமதான் ஓய் போனோம் கூடலூருக்கு. தை மாச பனியிலெ போயிக்கெடந்தமே. ஞாபகம் இருக்கா?”

“அட. அன்னிக்கி மட்டுந்தானெவெ நா பாத்தேன். அதுவும் ராத்திரி முழுக்க சீட்டாடிபுட்டு விடியும் போது வந்து பாத்துட்டு நின்னுட்டு வந்தோம். அப்புறம் எங்கெ அவளே பாத்தேன். நீரு பல சோலியா அலையிறவரு. அடிக்கடி பாத்திருப்பீரு.”

“அதுக்கப்புறம் அவெ ஆடலைன்னு நெனக்கிறேன் ஓய். முத்தாநல்லூர் பெரிய சேர்வைக்கி சின்னதா அமஞ்சிட்டதா ஒரு பேச்சி. யாரு போயிப்பாத்தா. நம்ம வேல நமக்கு. ஆனா, அச்சு அசல்லெ அப்புடியே நம்ம வாடிக்கரை வடிவு மாதிரித்தான்வெ இருப்பா அவெ.”

“என்னப்போய்… வடிவு கிடிவுன்னு பேசுறீக? அப்படியே என்னையும் இழுத்துறாதீரும். என்னையும் அவளையும் சேத்து வெச்சிப்போசுறதுன்னா உங்களுக்கெல்லாம் பேரீச்சம்பழத்தை தேனுலெ நனச்சி நக்கிச் சாப்புடுற மாதிரியாச்சே!’

சிரித்துக்கொண்டே வந்துகொண்டிருந்தார் போனாக்கோனா. கையில் நீளமான வெட்டுக்கம்பு இருந்தது. பழுப்பு நிறத்தையே சுய நிறமாய்க் கொண்டதாய் வேட்டி. துண்டை முறுக்கி முதுகுக் குறுக்கே கட்டியிருந்தார். அவற்றிலும் கருவேலக்காய்கள் இருந்தன.

“வாரும் ஓய். உம்மகிட்டே கேட்டாத்தான் வெவரமா சொல்லு வீரும். வடிவு இருக்கட்டும். அந்த கரகாட்டக்காரி புஷ்பா இருந்தாளே..என்னய்யா ஆச்சு அவ மேட்டரு? சின்ன வீடா சேர்வைக்கி அமஞ்சதா சொல்லுறாரு நம்ம நானா மூனா.”

“புஷ்பாக்குட்டியா.. அடஅடா! பொண்ணாவோய் அவ? சக்கர வள்ளிக்கெழங்காட்டம் ஒடம்பப்போய், தலையில ரெக்கை வெச்சி, மினுமினுப்பு ரவிக்கையும் குஞ்சம்வெச்ச அரைப்பாவாடையுமா அவ ரவுண்டு கட்டி ஆடுனா மயிலு தோகை விரிச்சு ஆடுறமாதிரிலவெ இருக்கும். அதயெல்லாம் ஏனப்போய் இப்போ நெனவுபடுத்தி எச்சி ஊற வெக்கிறியெ. அவள மாதிரி குட்டியளை யெல்லாம் அமுக்கிப் போடலயின்னாலும் பரவால்லெ சோனா மூனா, அங்கெ இங்கெ தொட்டு ஒரு நக்கு நக்கிப்புரணும். நம்மளும் வாழ்க்கைய வாழ்ந்தமுன்னு இருக்கட்டுமே, என்ன சொல்லுதீரு?” ‘என்னத்தவெ சொல்லுறது? கோனாரு வீட்டம்மாவுக்கு வெவெரம் தெரிஞ்சு கோட்டம் வராம பாத்துக்கிடணும், அதாம்!

“ஹ்..ஹ்..ஹெ..ஹ்..ஹே… வண்டின்னு இருந்தா கோட்டம் வரத்தானப்போய் செய்யும், இல்லெ கோட்டங்கீட்டம் வராமத்தான் வண்டியையும் ஓட்டமுடியுமா என்ன..?”

“ம்ம். வியாக்கியானம் வெவரமெல்லாம் போனாக்கோனாவுக்கு சொல்லியா தரணும்? ஆமா அது என்னவெ… என்னவெ… உமக்கும் வடிவுக்கும்?” சோவன்னாமூனா கேட்டார்.

“அதைவிடும் மீசை, சின்ன சமாச்சாரம். ஆடு மேச்சிட்டுத் திரும்பும் போது ஒரு சாயங்காலம் நல்ல மழை. ஆடெல்லாம் குளுருலெ நடுங்கி வெடவெடுத்து நிக்கிது. குட்டிபோட்ட ரெண்டு ஆடும் மேய்ச்சலுக்கு கொண்டுபோயிருந்த நேரமது. கம்மாக்கரையிலெ ஏது இருக்கு ஒதுங்குறதுக்கு? மரத்தைக்கூட வெட்டிப்புட்டானுவெ. பாத்தா தூரத்துல நம்ம வடிவோட வீடுதான் தொணையா கெடந்தது. படக்குன்னு ஆட்டை ஓட்டிக்கிட்டு ஓடினேன். அவ வீட்டுக்குப் பின்னாடி மறசல். ஆட்டை ஓட்டி உள்ளெ விட்டுட்டு மேற்கிட்டுப் போயி ஒதுங்கிக்கிட்டேன், மழை தொரத்தொரன்னு பேய்ஞ்சிக் கிட்டே கெடக்கு. நின்னபாடில்ல. அப்புறம்…”

“யோவ் இதே வேலையாப் போச்சிங்யா உமக்கு. நல்ல நேரத்துலெ கரண்டு போற மாதிரி. அப்புறம் என்னாச்சி அதச்சொல்லும்.”

“அப்புறம் என்ன? மழை நின்ன ஒடனே ஆட்டை ஓட்டிக்கிட்டுத் திரும்பி வந்துட்டேன்.”

“இதானே ஓய் வேணாங்குறது? மழ நின்னதும் பேசாம நீரு ஆட்ட ஓட்டிட்டு வந்தீருன்னு எவனாவது சவத்துமூதிப்பயகிட்டு சொல்லும். கெடையில கிடா வேணுமுன்னா கால மடக்கிக்கிட்டு கம்முன்னு கெடக்கும், கைக்கிப் பக்கத்துல கவுச்சி கெடைக்கிம் போது போனாக்கோனாரு சும்மாவிடுவாராக்கும்? வௌக்கமா சொல்லும் ஓய்…”

“அட.. அது ஒண்ணுமில்லாததுப்போய். எங்கேயோ வெளிய போயிருப்பா போல. உள்ள இருக்குற அத்தனையுந் தெரிஞ்சி தென்னம்பாள மாதிரி தெளுஞ்சி தெப்பமா நனைஞ்சி வந்தா. நா ஒதுங்கி இருக்குறது தெரியாமெ படக்குன்னு முந்தானைய எடுத்துட்டு சேலையை அவுக்க ஆரம்பிச்சிடட்ா. வேற வேலை. நா கண்ணெ மூடிக்கிட்டு மோட்டுவளையப் பாத்து உக்காந்திருந்துட்டு மழை நின்னோன்னே திரும்பி வந்திட்டேன். ஹ்..ஹெ..” ஒரு மாதிரி சிரித்தார் பொன்னையாக்கோனார்.

“ம்ம். அதுக்குத்தான் ஓய் நீரும் லாயக்கு. வெசயம் தெரிஞ்சா வீட்டம்மாதான் வெளுத்துப்புடுவாகளே.. பயம் இருக்குமுல்லெ”. சொல்லிவிட்டு அவரும் சிரித்தார்.

இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது நாச்சியப்ப முதலியார் எதுவுமே பேசாமல் வெறுமனே சிமெண்ட் தரையின் பிளவுக்குள் செருகிக்கொண்டிருந்த ஆலம்பழங்களையே எடுத்துக் கொண்டிருந்தார்.

“என்னங்குறேன் மரத்துலே ஒரே ஆர்ப்பாட்டமாய் இருக்கு?”

“வாப்போய்.. சித்தாம்பு. வந்துட்டீரா? எங்கே வரமாட்டீருன்னு நெனச்சேன். ஆமா வேலையெல்லாம் முடிஞ்சிதா? தேரு செய்யப் போனீராமே..?”

“எங்கே தேவரு தேரு செய்யுறது. செத்தாலும் சாதியெ விட மாட்டாங்கெ போல இருக்கு இந்தத் தாயோளிப்பசங்க.! வேலையை முடிச்சா எப்புடியும் பத்துப்பதினஞ்சி ரூவா தேத்தலாமுன்னு பாத்தா பயபுள்ளெகெ.. கெடுத்துப்புட்டாங்கெ. தேரு திருவிழாவுல உள்ளூரிலேயே பிரச்சனை போலயிருக்கு; ரெண்டு சாதிக்குள்ளெ. தேர் ஓட்டணும்முன்னு ஒரு கோஷ்டி. ஓட்டக்கூடாதுன்னு ஒரு கோஷ்டி. நமக்கெதுக்கு வம்புன்னு வந்துட்டேன்.”

“என்னய்யா சொல்லுறீரும்? தேரு செய்ய நீரு போனீரா? ஒமக்கெதுக்குய்யா இந்த வேண்டாத வேலை. மரக்கலப்பைக்கி கொழு வைக்கிறதே புடிபடாது உமக்கு. மண்வெட்டிகணக்கி பூணு போடுறது பெரிய சமாச்சாரம்! நீரு தேரு செய்யப்போனீரா?” நக்கலாக சிரித்துக்கொண்டே கேட்டார் பொ.கோ.

“அட. நீரு சும்மாயிரும்வோய், வெந்த புண்ணுலெ வெரலப் பாச்சிரும். பத்து ரூவா கெடச்சா கைச்செலவுக்கு வெச்சிக்கலா மேன்னு பாத்தேன். கெட்டுப்போச்சி.”

“அதுமட்டுமா? அப்படியே ஒரு ஆட்டுத்தலையும் வருமுல்லே.. அதை விட்டுட்டீரே”?

“கெடைக்காததைப்பத்தி என்ன பேசுறது. கெடச்சா பாத்திருக்கலாம்; பேசலாம்!” அதற்குமேல் அது பற்றிப் பேச அவர் விரும்பவில்லை. எனத் தெளிவாகத் தெரிந்தது.

சோமுத்தேவர் ஆரம்பித்தார்.

“என்ன? நாவன்னாமூனா.. அமைதியாவே இருக்குறீரும். என்ன ஏதும் பிரச்சனையா? சொல்லுங்க. நம்ம ஐயரு இருக்காரு. கலெக்டர் ஆப்பீஸ்லெ வேலை பாத்தவரு. பேசியே சமாளிச்சிருவாரு எல்லாரையும். ஆமா எங்க அவரு ஆளையக் காணோம்?”

“அவரு எங்க ஓய். எவனாவது அறந்தாங்கியிலெ இருந்து ‘இந்து’ பேப்பர் வாங்கிட்டு வந்திருப்பான். அதைப் பூதக்கண்ணாடி போட்டுக்குட்டு படிச்சி முடிக்கிறதுக்கெ பொழுது போயிடும்.”

நாச்சியப்ப முதலியார் சொல்லி முடித்ததும் சோவன்னமூனா தொடர்ந்தார்.

“ஏங்குரேன் போனாகோனா, நம்ம ஐயரத் தேடி அப்பப்போ ஒரு பொம்பள வந்துட்டுப்போறதா பேசிக்கிறாங்கெ, என்ன வெவரம்? சொல்லும் உமக்குத் தெரியாம இருக்காதே..!”

“ம்ம், எனக்குத் தெரியுறது இருக்கட்டும், நம்ம நானாமூனாவைக் கேளுமப்போய். அந்தி சாஞ்சி கருக்கலுலெ ஒரு நா, மேப்படியாரும் அம்மையாரும் இந்த ஆலமரத்துக் கீழே நின்னுகிட்டு பேசிக் கிடடிருந்ததைப் பயலுக பாத்ததா சேதி வந்தது. நானும் எப்பிடியும் நானாமூனா வாயைத் தெறாப்பாருன்னு பாக்குறேன் இன்னிக்கி வரைக்கும் அடைஞ்சிலெ கெடக்குறாரு, என்ன வெவரம் கேளும் மொதல்லெ.”

“வேற வெனையே வேண்டாம்வோய்! இந்த போனாக்கோனா ஒருத்தரு போதும். அவ ஐயரத் தேடி வரலை, என்னையத் தேடித்தான் வந்தான்னு எட்டு ஊருக்கும் சொல்லிப்புடுவாரப்போய். போனாக்கோனா, அது வேற வெவகாரம்.”

“என்ன மொதளியாரு வேற வெவகாரம், நாஞ் சொல்லுறேன் கேளும். வேல வெசயமா புதுக்கோட்டையில அப்பப்போ தங்கி யிருந்திருந்தாரு நம்ம அய்யரு, வீடுகீடு வாடகைக்கி எடுத்து தங்கி யிருப்பாருன்னு பாத்தா அய்யரு தங்குனது வந்துட்டுப்போன அம்மாவோட மடியிலயாம்! ஹ்..ஹெ. அப்பறம் என்ன? கலெக்டரு ஆப்பீசையே அங்கெ மாத்திட்டாங்கெலாம் நம்ம அய்யருக்காக! ஹ்..ஹெஃ.ஹெ..”

“ஹ்.ஹெ.. அந்த வயசுலெ அப்பிடியிப்படி இருக்குறதுதான், விடும் போனாக்கோனா!”

“ம்ம்.. ஏஞ்சொல்ல மாட்டீயெப்பூ? கடம்பூர்க்காரி போட்ட முடிச்சு சரியா விழலை, விழுந்திருந்தா இந்த சோவன்னாமூனா இந்நேரம் இப்பிடியா இருந்து இங்கெ பேசிக்கிட்டிருப்பீயெ.. ஹெ.ஹெ. ஹெ..”

“ஹ்..ஹெ..ஹே..ஞப்போய்..அத அத்தோடு விட்டுடும். எந்தலையை உருட்ட நீரு ஆரம்பிச்சா அங்கெயிருந்துதான் ஆரம்பிச்சு வருவீருன்னு எனக்குத் தெரியும். இந்த அய்யரு மேட்டரை என்ன பாதியோட விட்டுட்டீரு?”

“ம்ம், தேவரே, நாஞ்சொன்னது மொதப்படம், அதே பொம்பள நடுச்ச ரெண்டாவது படமும் இதே ஊருல இருக்கப்போய். அதை…ம், வேணாம்.விடும்!”

“செரி விடும். ஏன் ஓய் போனா, இந்த ராயன் பொண்டாட்டி ஏதோ உம்மகிட்டே சத்தம் போட்டாளாமே. என்ன பிரச்சனை? மழையிலெ இங்கேயும் ஒதுங்கினீரா?”

“ஹெ..ஹே.. உமக்கு கொழுப்பு அதிகம் ஓய். அது பெரிய கதை. நாந்தான் அவனைக் கெடுத்துப் புட்டேனாம். ஊரு முழுக்க சொல்லிக்கிட்டுத் திரியிறா அவ. வெட்டியாச் சுத்திக்கிட்டு திரிஞ்சவனைக் கூப்பிட்டு ரெண்டு மாடு வாங்க லோன் ஏற்பாடு செஞ்சிக்கொடுத்து பாத்துக்கச்சொன்னா… அவ இப்புடிச் சொல்றா! நேரத்தப்பாரும்’

“என்ன லோன் வாங்கினீரும். நீருதான் உம்ம கெழட்டுமாட்டை அவென் தலையிலெ தள்ளிவிட்டுட்டீராமே. அதாவது பரவாயில்லை. நல்ல எளவயசுப்பயலை கெட்ட கெட்ட வார்த்தை யெல்லாம் சொல்லிக்குடுத்துக் கெடுத்து இப்போ அவென் மாடு மேக்கெப் போகவே மாட்டேங்குறானாம். சேரிலெ இருக்காளே பாக்கியம் அவ வீட்லெ போயிக்கெடக்குறானாமே…”

“அந்தக் கதையும் உம்ம காதுக்கு வந்துருச்சா? பெரிய ஆளு ஓய் நீரு. பய ஒருநாளு மாடு மேய்க்க வந்தான். என்னடா எப்புடிடா போகுது, மாடுல்லாம் ஒழுங்கா மேக்கிறியான்னு கேட்டேன். பயகிட்டேத் தான் நா அப்புடிப் பேசுனாவே சும்மா கெறங்கிருவானே. நம்ம விசயத்துக்கு படக்குன்னு வந்துட்டான். போன வாரம் பெரிய வீட்டுக்கு நாத்து அள்ளிப்போடப்போயிருக்கான். நாத்து ஏற்கனவே பறிச்சிக்கெடந்ததாலே வேலை ஒண்ணும் கஷ்டமில்லாமெ ஆயிருச்சாம். செரின்னு வீட்டுக்கு கௌம்பப் போகும்போதுதான் பாத்துருக்கான். பாக்கியம் வந்துருக்கா நடவுக்கு. காலை வேலைக்கி இவ்வளவு சொணங்கி வாராலேன்னு பாத்துக்கிட்டு நின்னுருக்கான். அவ வீட்டுக்காரன் மிலிட்டரியிலே இருந்து வந்தது தெரியாது போல அவனுக்கு.”

படக்கென்று சிரித்தார் சோனாமூனா.

“அதானே பாத்தேன். விஷயத்தை நெருங்கி வந்தும் போனாக்கோனா இன்னும் நிறுத்தலையேன்னு.”

“ஹா..ஹா. நிறுத்தியாச்சி. போதுமாப்பூ. கேளும் கதையெ. வயல்லெ வந்து எறங்குனவள பாத்து பக்குன்னு ஆயிருச்சாம் அவனுக்கு. என்னாச்சி தெரியுமா? சேலையத் தூக்கி சொருவியிருக்கா பாரும். காலுக்கெடையிலெ பாம்பு மாதிரி முடி.!” ஓஹோ..சடையா. இதுக்குத்தான் இந்த சோடிப்பா.”

“இதுதான் ஓய் சித்தாம்பு நீரும்! அது என்னன்னு இதுவரைக்கும் அவனுக்குத் தெரியல்லையாம். அதுக்குத்தான் அங்கே போயிக் கெடக்குறானாம். கண்டு பிடிக்காமெ வரமாட்டேன்னு தலை முடியப் பிச்சிக்கிட்டு இருட்டுப் பூனை விட்டத்தைப் பாக்குறமாதிரி கண்ணைவெச்சிக்கிட்டு பாத்துக்குட்டு இருக்கானாம்.”

கலகலவென எல்லோரும் சிரித்தார்கள். மேலே பறவைகளும் சிறகடித்தன.

ஒரு அரைமணி நேரம் அப்படி இப்படிப் பேசி சிரித்துவிட்டு எல்லோரும் கிளம்பிப்போனார்கள்.

ஆலமரம் மிகுந்த உற்சாகத்தில் இருந்தது.

நான் பின்னால் படுத்துக்கொண்டிருந்தேன். ஒரு விஷயம் மட்டும் எனக்குப் புரியவே இல்லை. நானாமூனாவிற்கென்ன அப்படி ஒரு கோபம், அதுவும் ஆலமரத்தின்மீது? முகமே பற்றியெரியும் அளவு விசனத்தை ஏன் ஒரு மரத்தைப் பார்த்து வீசவேண்டும்? குடும்பப் பிரச்சனையோ? கணவன்-மனைவி, மகன்களால், ஐயரைத் தேடி வந்த பெண்ணால்? என்னதான் பிரச்சனை? அல்லது வேறேதும்? எனக்கெதுக்கு அந்த வேலை, ராத்திரி சாப்பாட்டுக்கு வழியைப் பாக்கணும். இப்போவே பசிக்க ஆரம்பிச்சிருச்சி. பிச்சைக் காரனுக்கும் வேளா வேளைக்கிப் பசிக்குதுப்பூ!

– மருதம், முதற் பதிப்பு: டிசம்பர் 2006, எம்.கே.குமார் வெளியீடு, சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *