கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 24, 2025
பார்வையிட்டோர்: 163 
 
 

(1943ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6

5. மூவங்க நாடகம் 

அந்தச் சொற்களைப் படித்தவுடனே எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. நான் வக்கீல் ஆயிற்றே என்பது அப்புறந் தான் ஞாபகம் வந்தது. 

சில நாட்களுக்கு முன்பு நான் ஒரு கொலைவழக்கை நடத்தினேன். அந்தச் சமயத்தில்தான் மனித சுபாவத்தின் கன்னங்கரிய கொடிய தன்மைகளை நான் பார்க்க நேர்ந்தது. கட வுளுக்கு, மனிதனைப் படைக்க வேண்டுமென்ற ஊக்கம் அமாவாசை இரவிலிருந்துதான் பிறந்திருக்கும் என்ற விசித்திரமான கற்பனை அப்போது என் மனத்தைத் தீண்டிச் சென்றது. ஆரம்பத்தில் அந்த வழக்குச் சம்பந்தமான நிகழ்ச்சிகளைக் கேட்டதும் எனக்கு ஒரே வெறுப்பாக இருந்தது. ‘மனிதனுடைய உடலும் மனமும் – இரண்டும் வெளிப்பார்வைக்கு அழகாகவே தோற்றுகின்றன; ஆனால் அவனுடைய உடலைக் கீறிக் கிழித்துப் பார்க்கும் வேலை மிகுந்த வெறுப்பை யூட்டுவது போலவே, அவனுடைய மனத்துக்குச் சிகிச்சை செய்யும் வேலையும் அருவருப்பைத் தருவதாகும். மனித வாழ்க்கை என்பது காமக் குரோதங்களின் – லோப மாச்சரியங்களின் தாண்டவ நிருத்தியமேயன்றி வேறல்ல என்ற எண்ணம் அடிக்கடி உதித்தது. 

ஆனால், பழக்கத்தினால் மனிதன் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறான். காக்கை வலி வந்து மரத்துப் போன காலைக் கிள்ளினால்கூடத் தெரியாது. அந்த வழக்கை நடத்தி நடத்தி என் மனமும் அப்படித்தான் மரத்துப் போயிற்று; செயலற்றுப் போயிற்று. எந்தக் கேள்வியைக் கேட்கும்போதும் எனக்கு வெட்கமே தோன்றவில்லை; எவ்வளவு அருவருப்பான, பயங்கரமான சம்பவத்தைக் கேட்டாலும் எனக்கு வியப்பே உண்டாகவில்லை. 

வக்கீல் தொழிலினால் மனிதன் சமநிலையை அடைகிறான் என்பது உண்மையே. 

இந்தக் காரணத்தினால்தான், கல்லூரியிலிருந்து ஓடிவிட்ட ஒரு மாணவனுடைய நோட்டில் ‘என் தற்கொலை’ என்ற இரண்டு சொற்களைப் படித்ததும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டதைக் கண்டு கணப்பொழுது வியந்தேன். 

ஆனால் உடனே மனத்துக்குள்ளேயே சிந்திக்கலானேன்: ‘காதலினால் மெய் சிலிர்ப்பதைக் கவிகள் எவ்வளவுதான் வர்ணித்திருந்தபோதிலும், பயத்தினால் மெய்சிலிர்ப்பதுதான் மனிதத்தன்மையின் உண்மையான அடையாளம். சுமார் இருபது வயதுள்ள பிரபாகரன் போன்ற ஓர் இளைஞன் தற் கொலை செய்துகொள்ள நேர்வது எவ்வளவு விபரீதமான சம் பவம்! இந்தத் தற்கொலைக்கு வேர், வேலையில்லாத் திண்டாட் டமா? அல்லவே அல்ல; காதல்தான் இதற்கு வேர்! 

‘சோறு – மனிதனுடைய முதற் பசி! 
‘காதல் – மனிதனுடைய இரண்டாவது பசி! 

‘இந்த இரண்டு பசிகளுக்கும் அற்புதமான ஒற்றுமை இருக்கிறது. ஆனால் முதற் பசியைத் தீர்க்கும்போது, வேண்டிய அளவு சோறு கிடைக்கவில்லை என்று மனிதன் உயிர்விடுகிறானா? ஹல்வாவும் பூரியும் கிடைக்காவிட்டாலும், உப்புக் கஞ்சி குடித்து வாழும் லட்சக்கணக்கான பேர் உலகத்தில் இல்லையா? சில பணக்காரர்கள் பேஷான ஒட்டு மாம்பழங்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கலாம். அதற்காக மற்ற ஏழைகள் நாருள்ள நாட்டு மாம்பழங்கள் தின்பதை விட்டுவிடுகிறார்களா? திராட்சைக் கனிகளைக் கண்டு வாயில் நீரூறாத மனிதன் உலகத்திலேயே இருக்கமாட்டான். ஆனால் திராட்சை கிடைக்கவில்லை என்பதனால், நாவற் பழங்களையும், களாக் கனி களையும் வீசி எறிந்துவிடுவதா? அவற்றிலுங்கூட ஒரு சலிப்பில்லா இனிமை இல்லையா? 

‘அப்படியிருக்க, சுலபா கிடைக்கமாட்டாள் என்று தோற்றியவுடனே, பிரபாகரன் அடியோடு நம்பிக்கையை இழப்பானேன்? இந்தக் காலத்துப் பையன்களே இப்படித் தான்; பலவீனர்கள்!’ 

என் மனம் இக்காலத்துப் பையன்களைப் பின்னும் பல வாறு நிந்தித்திருக்கும். ஆனால் அதற்குள் எனக்குக் கருணாவின் நினைவு வந்தது. அவளுடைய கல்யாணச் செய்தியைப் பத்திரிகையில் படித்தவுடனே, என் முதற் காதலை நினைவுபடுத்திக் கொண்டு நான் ஒரு நாழிகைப் பொழுது பைத்தியக்காரனாகி விட்டிருந்தேன் அல்லவா? அவள் அந்தக் கடிதத்தில் மிகவும் தெளிவாகத் தன் அநுபவங்களைத் தெரிவித்திருந்த போதிலும் அவள் விஷயத்தில் எனக்குச் சந்தேகம் வந்தே தீர்ந்ததே! அப்படியிருக்க, பிரபாகரனைக் குற்றம் கூறுவதில்- 

‘சாலை ரிப்பேரில் இருக்கிறது’ என்பது இருண்ட இரவில் செல்லும் வழிப்போக்கர்களுக்குத் தெரிவதற்காக இரண்டு சிவப்பு ராந்தல்கள் போடுகிறார்களல்லவா? பிரபாகரனுடைய முதல் நோட்டில் இருந்த அந்த இரு சொற்களையும் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அந்தச் சிவப்பு ராந்தல்களின் நினைவு வந்து கொண்டிருந்தது. புத்தகத்தைப் பிரித்துப் படித்ததும் என்ன என்ன விஷயங்கள் தெரியப் போகின்றனவோ என்ற ஆவலால் மனம் இழுப்புண்ட போதிலும், பீதி அதைப் பின்னுக்கு இழுத்தது. ‘ஒரு விஷயத்தைப்பற்றி முடிவு செய்வதைவிடச் சந்தேகத்தில் இருப்பதே நல்லது’ என்ற கொள்கையை அநுபவித்துக்கொண்டே, மனம் சிந்தனைத் தரங்கங்களில் மூழ்கி மிதப்பதற்குத் தயாராக இருந்தது. ஆனால்-

மருந்து எவ்வளவுதான் கசப்பாக இருந்தாலும், மனத்தைக் கெட்டிப்படுத்திக்கொண்டு அதைக் குடிக்கத்தான் வேண்டியிருக்கிறது. பட்டருக்காகவும் அவர் மனைவிக்குமாக வாவது பிரபாகரன் எழுதி வைத்திருந்த அந்தச் செய்தியை நான் படிக்கத்தான் வேண்டியிருந்தது. 

முதற் பக்கத்தைப் பிரித்துப் படிக்கலானேன்: 

கல்லூரியில் நான் படித்த அந்த மூன்று ஆண்டுகள்! அவை ஒரு நாடகத்தின் மூன்று அங்கங்களே போலும்! இந்த நாடகம் சோகத்தில் முடியும் என்பது கல்லூரியில் கால் வைத்த அன்றே தெரிந்திருந்தால், அப்போது நான் வந்த வழியே வீட்டுக்குத் திரும்பியிருந்திருப்பேன்; அப்பாவுடன் உஞ்சவிருத்தி செய்ய ஆரம்பித்திருப்பேன்; அம்மா இரவில் சமையலறையைச் சாணத்தால் மெழுகிவிட்டுப் படுக்கையில் வந்து படுத்ததும், அவள் காலை வருடுவதில் எவ்வளவு ஆனந்தம் இருக்கிறது என்பதை இந்நேரத்திலும் அநுபவித்துக் கொண்டு இருந்திருப்பேன். 

ஆனால்-

இறக்கை முளைத்தவுடனே பறவைக் குஞ்சு பறக்க ஆரம்பிக்கிறது. வானத்தில் வெகு உயரத்தில் பறக்க வேண்டு மென்று அது ஆசைப்படுவதில் இயற்கைக்கு மாறானது ஏதும் இல்லையே? நானும் அப்படித்தான் உயரப் பறக்க வேண்டும் என்ற ஆசையோடு கல்லூரிக்கு வந்தேன். 

‘எந்த முயற்சியாவது செய்து உபகாரச் சம்பளம் பெறுவேன்; அல்லது பரம ஏழை என்று சொல்லிப் பிச்சை எடுத்தாவது சம்பளம் கட்டுவேன். நான்கு ஆண்டுகளுக் கெல்லாம் பி.ஏ.யில் தேர்ச்சி பெற்று, ஏதாவது ஒரு பள்ளிக் கூடத்தில் உபாத்தியாயராவேன். அப்பொழுது அப்பாவிடம், “இனி நீங்கள் புரோகிதம் செய்துகொண்டு இரவில் கண்ட வேளைகளிலும் வெளியூர்களுக்குப் போகாதீர்கள், அப்பா! மாதமாதம் இருபத்தைந்து ரூபாய் மணியார்டர் வரும்போது, இனிமேல் உங்களுக்கு என்ன குறை?” என்பேன். 

தயிர் கடைந்துகொண்டே என் பேச்சைக் கேட்கும் அன்னை, உடனே தன் கையிலிருக்கும் கயிற்றை விட்டு என்னைப் பார்த்துச் சிரிப்பாள். அவளுடைய சிரிப்பின் நோக்கத்தை அறிந்த அப்பா, “இதோ பார், பிரபாகரா! பிள்ளை சம்பாதிக்க ஆரம்பித்ததும் என்னைப் போன்ற தகப்பனுக்கு ஒரு குறையும் இல்லை. ஆனால் இவள் போன்ற தாய்க்கு மட்டும், அந்தமட்டிலே குறை தீர்ந்து போகாது. உன் இரண்டு கைகளை நான்கு கைகளாக்கினாலன்றி – அப்புறம் சீக்கிரமே அந்த நான்கு கைகள் ஆறு கைகளானாலன்றி – என்பார்……” இப்படி எண்ணங்கள் எழுந்தன. 

தன் பெற்றோருக்கு இரை தேடிக்கொடுக்கக் கற்க வேண்டு மென்று இளம்பறவை வீட்டை விட்டு வெளியே வந்தது. ஆனால், இரை கிடைப்பதற்கு முன்பே அதன்மீது அம்பு பட்டது. அதன் உடல் இரத்தத்தில் தோய்ந்தது. வீட்டுக்குத் திரும்பிச் சென்று, தாயின் இறகில் புகுந்து, அந்த இரத்த காயத்தின் வேதனைகளைப் பொறுத்துக்கொள்ளலாம் என்று அது பெரிதும் விரும்பியது. 

ஆனால், அதன் மார்பில் பாய்ந்த அந்த விஷபாணத்தின் நுண்ணிய முனை! பாவம்! அதன் பெற்றோர் அந்த முனையை எப்படி எடுக்க முடியும்? உள்ளே உறுத்தும் அந்த முனையினால் உயிர் துடிதுடிக்கும்போது எங்காவது ஓர் ஓரமாகச் சென்று உயிரை விடுவதைத் தவிர, இந்தப் பறவைக்கு வேறு வழி ஏது? 

கடந்த மூன்று ஆண்டுகளை நினைத்தால் எனக்கே சிரிப்பு வருகிறது. மனிதனுடைய மனத்தைவிடக் காற்றே நல்லது. அதை வேய்ங்குழலுக்குள் அடைத்தால் இன்னிசைப் பண்கள் கிளம்புகின்றன. ‘சஞ்சலமானது, சஞ்சலமானது’ என்று இடித்துக் கூறுகிறார்களே, இந்தப் பாதரசங்கூட மனிதனுடைய மனத்தைப் போல இல்லாமல் ஒரு நிலையில் நிற்கிறது என்று சொல்லலாம். வெப்பமானிக்குள் அடைத்துவிட்டால், அது பாவம், மௌனமாக ஜுரக்காரனுடைய வேதனையை டாக்டருக்குக் காதோடு சொல்லிவிடுகிறது. ஆனால் மனிதனின் மனமோ? அதை அடக்க முடியாது; கட்ட முடியாது; துண்டு துண்டாக்க முடியாது; அதை எரித்துச் சாம்பலாக்கவும் முடியாது. உயர்தரப் பள்ளியில் படித்த காலத்தில் கீதா ஜயந்தியின் போது பரிசு வாங்குவதற்காக நான் கீதை முழுவதையும் பாடம் செய்தேன். அதிலுள்ள, ‘இந்த ஆன்மாவை ஆயுதங்களால் வெட்ட முடியாது…’ என்ற வர்ணனை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. 

‘இந்த ஆன்மசக்தியின் பலத்தினால்தானே மனிதன் தேவனாகிறான்? அற்புதமான இந்த ஆன்மசக்தி இராவிட்டால், அரண்மனையில் மஞ்சத்தில் படுத்திருந்த அழகிய மனைவியின் அணைப்புத் தளையிலிருந்து விடுபட்டுப் புத்தர்பிரான் காட்டை மேனியில் நோக்கிப் போயிருக்கமாட்டார்; தம் மெல்லிய அறைந்த ஆணிகளால் துடிதுடித்துக்கொண்டு இருக்கும் போதும், ஏசு கிறிஸ்து நகைமுகத்தோடு, “ஆண்டவா, இவர்களை மன்னிப்பாய். தாங்கள் என்ன செய்கிறார்கள் என்பதே இவர்களுக்குத் தெரியவில்லை” என்று கூறியிருக்கமாட்டார்; சிவாஜி மன்னர் ஔரங்கஜேபின் தர்பாரில் ஐயாயிரமும் பத் தாயிரமுமான படைவீரர்களுக்கு நடுவே தலைவராகி வீற்றிருக்கும் மரியாதையை வெறுமே ஒரு கழுத்தசைப்பினால் மறுத்திருக்க மாட்டார்; தத்தாஜி சிந்தே என்பவர் போர்க்களத்தில் காயமுற்று வீழ்ந்த பின்பும், “பிழைத்திருந்தால் மறுபடியும். போரிடுவோம்” என்று எதிரிக்குக் கடுமையான பதில் கொடுத்திருக்க மாட்டார்; கொலம்பஸ் என்பவன் பொன்னாடான அமெரிக்காவைத் தேடிக் கண்டுபிடிக்கும்பொருட்டு அகாத மான பரந்த கடலிலே தன் வாழ்க்கைப் படகை மிதக்க விட்டிருக்க மாட்டான்; நோய்க்கிருமிகளை ஆராய்வதற்காக விஞ்ஞானிகள் தம் உயிரைப் பொருட்படுத்தா திருக்கமாட்டார்கள்; திலகர் தம் தாய்நாட்டைக் கடந்து சென்ற போது, “பூமி” யிலுள்ள நியாயத்தை விட மிகவும் உயர்ந்த நியாயத்தை வழங்கும் சக்தியொன்று உலகத்திலே இருக்கிறது” என்று கூறியிருக்கமாட்டார்; அறுபது வயதை எட்டிய மகாத்மா காந்தி ஒரு பிடி உப்பினால் ஒரு ஸாம்ராஜ்ய ஆட்சியை வெல்ல முயன்றிருக்கமாட்டார்’ என்றெல்லாம் நான் அப்போது நினைத்தது உண்டு. 

ஆன்மசக்தியைப்பற்றிய இத்தகைய எவ்வளவோ உதா ரணங்கள் என் கண்முன்பு நிற்கின்றன. ஆனால், குருடனுக்குப் பிறருடைய பார்வையினால் என்ன பயன்? கடவுள் எனக்கு. ஆன்மாவைக் கொடுத்தது, என் கையால் அதை ஹத்தி செய்யவேண்டும் என்பதற்காகத்தானே! 

நான் முதல்முதலில் கோல்ஹாபூருக்கு வந்தபோது, புது உலகமாகிய கல்லூரியின் கவர்ச்சி இருந்துங்கூட, முதல் ஆறு மாதங்களில் பெற்றோர்களின் நினைவு ஒரு நாளாவது வராமல் இருந்ததில்லை. நாள்தோறும் அதிகாலையில் முதலில் கண் -விழிக்கும்போது, ‘பூபாள ராகத்தில் பாடிக்கொண்டே மாட்டுத் தொழுவத்தில் வேலை செய்யும் அம்மாவின் குரல் இன்னும் ஏனோ காதில் விழவில்லையே?’ என்று தோன்றும். சிறிது நேரம். தூங்கி எழுந்ததும், ‘பூஜை செய்யும் அப்பாவினுடைய சாந்தமும் கம்பீரமுமான குரல் ஏனோ இன்னும் கேட்கலே இல்லையே?’ என்று தோன்றும். பின்பு நான் கண்ணைத் திறந்து பார்ப்பேன். எனக்குத் தேநீர் நான்தான் தயாரிக்க வேண்டும் என்பதை அறிந்து பேசாமல் படுக்கையிலிருந்து எழுந்திருப்பேன். 

ஆனால் மீண்டும் சாப்பாட்டு நேரத்தில் எனக்கு வீட்டு நினைவு கட்டாயமாக வரும். நாங்கள் இரண்டு நண்பர்கள் எடுப்புச் சாப்பாடு கொண்டு வந்து எங்கள் அறைக்குள்ளேயே சாப்பிட்டு வந்தோம். ஆனால் அதுவும் ஒரு சாப்பாடா! யாரும் ‘இன்னும் கொஞ்சம்’ என்று வற்புறுத்திப் போட மாட்டார்கள்; ‘ஏன்டா வேண்டாம்?’ என்று யாரும் கேள்வி யும் கேட்க மாட்டார்கள்! 

நாலு கவளம் வயிற்றில் சென்றதும் எனக்குச் சாப்பிடவே வெறுப்பாக இருக்கும். அம்மா வீட்டுப் புழைக் கடையிலுள்ள பொன்னாங்காணிக் கீரையையோ மணத்தக்காளிக் கீரையையோ கொண்டு வந்து கறி சமைத்துப் போட்டால், அதை நான் நொட்டை போட்டுக் கொண்டு சாப்பிடுவது வழக்கம். ஆனால் இங்கே ஹோட்டலில் சமைத்த உருளைக்கிழங்குக் கறியை உண்ணும் போது கூட ஒவ்வொரு கவளத்தையும் சிரமப்பட்டு விழுங்கினாலன்றி அது என் தொண்டைக்குள் இறங்குவதே இல்லை.

கோழி நெல்லைக் கொறிப்பதுபோல நான் பாதிச் சோற்றைத் தின்றுவிட்டுப் பாதிச் சோற்றை இலையிலேயே வைத்துவிட்டு எழுந்திருக்கும் போதெல்லாம், ‘அப்பா இந்த நிலையைப் பார்த்தால் என்ன செய்வாரோ? வீட்டில் என்றைக் காவது ஒரு நாள் என் இலையில் ஏதாவது எறிந்து கிடந்தால், அவர் அம்மாவிடம், “பிரபாகரன் இன்று சரியாகச் சாப்பிடவே இல்லை போலிருக்கிறதே? அவனுக்கு உடம்புக்கு. ஒன்றும் இல்லையே?” என்று கேட்பாரே!’ என்று நினைப்பேன் 

சாயங்காலமும் வீட்டு நினைவினால் என் மனத்தில்” இப்படித்தான் குறுகுறுப்பு உண்டாகும். அம்மா விளக்கேற்றிக். கடவுளை வணங்குவது, பிறகு கன்றை அவிழ்த்துவிட்டுப் பசும் பால் கறப்பது, அப்பா வேறு வேஷ்டி உடுத்துக்கொண்டு வந்து கடவுளுக்கு ஆரத்தி செய்ய உட்காருவது, பூனைக்குட்டி. வந்து அவர் மடியில் முகத்தைத் தேய்த்தால், “இதற்குக் கொஞ்சம் பால் ஊற்றுடீ!” என்று அவர் சொல்வது, கடவுளுக்கு நைவேத்தியம் செய்த மலை வாழைப்பழத்தை அவர் எனக்குக் கொண்டு வந்து கொடுப்பது, இத்தகைய ஒவ்வோர் அநுபவத்திலும் எவ்வளவு இன்பம் பொங்கிச் சிரித்துக் கொண்டிருந்தது! அந்த இன்பத்தை இழந்தமையால் என் மனம் தவித்த தவிப்பு- 

கவி மாதவரை என் குருவாகக் கொண்டுவிட்டேனாதலால், அவர் கவிதைகளை நான் மிகவும் பிரியத்தோடு படிப்பது வழக்கம். ஆனால் அவருடைய காதற் கவிதைகளைப் படிக்கும் போதுகூட இடையிடையே நான் கையிலிருக்கும் புத்தகத்தை மூடிவைத்து, ‘அம்மா இப்போது என்ன செய்துகொண்டிருப்பாள்?’, ‘அப்பா இப்போது அவளிடத்தில் என்னைப் பற்றித் தான் பேசிக்கொண்டு இருப்பாரோ?’ என்ற கேள்விகளைச் சிந்திக்க ஆரம்பித்துவிடுவேன். 

இரவு பதினொரு மணிக்குப் படித்தானதும் படுக்கும் போது ஒரு குறை என் மனத்தில் அடிக்கடி உறுத்தும். என் பெற்றோர்களின் போட்டோ ஒன்றாவது யாரும் எடுத்ததில்லை. நான் மெட்றிகுலேஷனில் இருந்தபோது போட்டோ எடுக்கும் ஒருவனை ஊருக்கு அழைத்துச் செல்ல எண்ணியிருந்தேன். அந்தச் சமயத்தில் அம்மா உடுத்திருந்த புடைவை ஒரே கந்தலாக இருந்தது. அதற்குப் பின்பு நான் அவளிடம் போட்டோவைப் பற்றிப் பேச்செடுக்கும் போதெல்லாம் அவள் சிரித்துக் கொண்டே, “போட்டோ பிடித்துக்கொள்ள நான் சினிமா நடிகையல்ல, பிரபாகரா! நாளைக்கு உனக்குப் பெண்டாட்டி வந்ததும் உங்கள் இருவரையும் போட்டோப் பிடிப்போம். இருவரையா? அல்ல; மூவரை, நான்கு பேர்களைப் படமெடுப்போம்” என்பாள். 

பீரங்கிக் குண்டுகளுக்கு முன்பு ஒருவேளை மனிதன் அசையாமல் நிற்கவும் கூடும்; ஆனால் அன்பு கனிந்த சொற்களின் முன்பு அவன் பின்னடையத்தான் வேண்டியிருக்கிறது. அம்மாவின் அந்தப் பேச்சினால் நான் சும்மா இருக்க நேர்ந்தது. ஆனால் கோல்ஹாபூருக்கு வந்ததும் தூங்கப் போகு முன்பு, ‘அவளையும் அப்பாவையும் சேர்த்து ஒரு படம் பிடித்திருந்தால், அதை என் மேஜைமேல் ரவீந்திரரின் படத்துக்கு அருகிலேயே வைத்திருப்பேனே. இரவு விளக்கணைப்பதற்கு முன் அந்தப் படத்தை வணங்கிவிட்டு…’ என்று நினையாத நாளே இல்லை. 

முதல்முதலில் கண்ட கனவுகள் யாவும் வீட்டைப் பற்றி யனவே: அம்மா தொழுவத்தில் பால் கறக்கிறாள்; கிண்ணத்தில் விழும் பாலின் தாரை நிலவில் பொழியும் மெல்லிய மழை போல வெகு வேடிக்கையாகத் தோற்றுகிறது; மெல்ல மெல்ல அந்தக் கிண்ணம் நிரம்பப் பால் பொங்குகிறது; நிறையத் தேங்காய் சாப்பிட்ட சிறு குழந்தையின் வாயைப் போல அந்தக் கிண்ணத்தின் வழியே நுரை வழிகிறது; அம்மா என்னைப் பார்த்து, “பிரபாகரா, இப்போதெல்லாம் ஏன் உன் உடம்பு இளைத்துக்கொண்டே வருகிறது? இந்தா, சூடான இந்தக் கறவைப் பாலில் கொஞ்சம் குடி” என்கிறாள். 

சிள் வண்டுகளின் ‘கிர்ர் கிர்ர்’ என்ற பின்னணிச் சங்கீதம் வயல்களில் தொடங்கியிருக்கிறது. எங்கள் வீட்டுப் பக்கத்து தவளைகள் ‘டிர்ர் டிர்ர்’ என்று பாடுகின்றன. ‘ஹூம் ஹும், ஹும் ஹும்’ என்று சுமைதூக்கிச் செல்லும் குடியானவனைப் போல இடையிடையே காற்றுச் சுழன்று வீசுகிறது. அப்பா உள்ளே படுக்கையில் உட்கார்ந்து என்னவோ சுலோகங்கள் சொல்லுகிறார்; பிறகு ‘கிருஷ்ணா, கிருஷ்ணா’ என்று கை தட்டிக் கூறிக்கொண்டே கால்மாட்டிலுள்ள போர்வையை மெதுவாக மேலே இழுத்துக்கொள்கிறார். 

தாழ்வாரத்து நடுவில் சிறு குழந்தையை அருகில் விட்டுக் கொண்டு அக்கா தூங்குகிறாள். அவள் பிறந்தகம் வந்திருக் கிறாள். சிறுவயதில் அவள் என்னை இடுப்பில் தூக்கிக்கொண்டு புழைக்கடையில் விளையாட்டுக் காட்டுவாள். யாராவது ஏதா வது சாப்பிடக்கொடுத்தால் அதைத் தான் தின்னாமல் எனக்குக் கொடுப்பாள். அவள் கழுத்தில் பொன்னால் கோத்த ஒரு பவழ மாலை கூட இல்லை. நாளைக்கு நான் சம்பாதிக்க ஆரம்பித்ததும் அவளுக்கு நல்ல தங்க நகையொன்று செய்து கொடுப்பேன். 

அம்மா பூஜையறையிலேயே ஒரு கம்பளத்தை விரித்துப் போட்டுப் படுத்துக் கொண்டிருக்கிறாள். அவள் வதனந்தான் எவ்வளவு சாத்துவிகமாக இருக்கிறது! எவ்வளவு சாந்தமாக இருக்கிறது! கோயிலிலுள்ள தெய்வங்களுக்குக் கூட அவளுடைய பாததூளியைச் சிரத்தில் தரிக்க வேண்டும் என்று தோன்றலாம்! நாளைக்குப் பி.ஏ. பரீட்சையில் தேர்ச்சி பெற்ற தும் நான் அம்மாவின் ஆசைகளையெல்லாம் நிறைவேற்றுவேன்; அவளைப் பண்டர்பூருக்கு அழைத்துச் செல்வேன்; ரெயில் வண்டியில் உட்கார வைப்பேன்; விமானம் எப்படிப் பறக்கிறது என்பதைக் காட்டுவேன்; வீட்டின் பின்புறத்திலுள்ள அத்திமரத்தின் அடியில் தத்தாத்திரேயரின் சிறு கோயி லொன்றும் கட்டிக் கொடுப்பேன். இன்று நான் இதைப்பற்றி அவளிடம் ஒன்றும் சொல்லவே மாட்டேன். நான்கு வருஷம் கழித்துத் திடீரென்று அவளைப் பிரமிக்க வைப்பேன். 

மனிதனுடைய மனக்கோட்டைகளைக் கண்டு எதிர்காலத்துக்கு மனத்துக்குள்ளேயே சிரிப்பு வராமல் இராது. நான்கு. வருஷம் கழித்து அன்னைக்காக உயிர் விடத் தயாராக இருந்த பிரபாகரன் மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே அவளை மறந்து. விட்டான்; ஒரு பெண்ணின் மீதிருந்த மோகத்தினால் உயிர் விடத் தயாராகிவிட்டான்! மூன்று வருஷங்களுக்கு முந்திய பிரபாகரன், இளநீர் நிரம்பிய பசுமையான தென்ன மரத்தைப் போல வானத்தை அளாவப் பார்த்தான். இன்றைப் பிரபாகரன்? பட்டுப்போன, வேரோடு கிளர்ந்து விழுந்த தென்னையைப் போன்றவன் இவன்! 


“இன்னுமா அவன் போன இடம் தெரியவில்லை?” என்று யாரோ பேசியது என் காதில் விழுந்தது. அந்தக் கேள்வியில் இரக்கமும் பரிவும் நிரம்பியிருந்தன. 

கையிலிருத்த புத்தகத்தைப் பெட்டிக்குள் வைத்துவிட்டு நான் திரும்பிப் பார்த்தேன். பிரபாகரனுடைய நண்பன் வாசலில் நின்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தான். மிகவும் உயரமும் மிகவும் குள்ளமும் இல்லாத அந்த மனிதரை நான் எங்கோ பார்த்தாற்போல் இருந்தது. பழுப்பு நிறத்திலிருந்து” வெண்ணிறமாக மாறும் நிலையிலுள்ள தலைமயிர், உருண்ட முகம், அந்த வதனத்தில் ஆழ்ந்த வீரப் புன்னகை 

‘இவர் மாதவராவ் படவர்த்தன் அல்லவா?’ என்று நினைத்தேன். சட்டென்று அருகில் சென்றேன். 

“ஸார், உள்ளே வந்தாவது கொஞ்சநேரம் உட்காருங்கள்.. உங்களுக்கோ இப்போது உடம்பு சரியில்லை; அத்துடன்-” மாதவராவ் உள்ளே வந்து உட்கார்ந்தார். பிரபாகரன் நண்பன் எங்கள் இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தான்.. 

அவர் பிரபாகரனைப்பற்றியே பேசலானார். தழுதழுத்த குரலில் அவர் பேசியதைக் கேட்ட யாரும், அவருடைய தம்பியே ஓடிப் போய்விட்டதாக நினைத்திருப்பார்கள். அவர் பேச்சில் இரக்கமும் ஆவேசமும் விசித்திரமாகக் கலந்திருந்தன. பிரபாகரன் விஷயத்தில், அவர் மனம் தவியாகத் தவித்துக் கொண்டிருந்தது! ஆனால், நம் நாட்டு இளைஞர்கள் இத்தனை பலவீனர்களாக இருக்கிறார்களே என்று அவர் சலிப்புற்றிருந்தார். 

எழுந்திருந்த போது அவர் சொன்ன வார்த்தை இன்றும் என் காதில் சுழன்று கொண்டிருக்கிறது: 

“காதல் என்பது மரநிழலைப் போன்றது. வெயிலில் செல்லும் வழிப்போக்கனுக்கு மரநிழல் கிடைத்தால் வேண்டித்தான் இருக்கிறது. ஆனால் சாலையோரத்தில் மரங்கள் இல்லை என்பதனால் யாராவது தம் பயணத்தை நிறுத்திவிடு கிறார்களா? அப்படி மரநிழல் இல்லாவிட்டால், கையில் இருக்கும் குடையைத் திறந்தால் வெயிலின் கடுமை தானே குறைந்துபோகிறது.” 

தம் கையிலிருந்த குடையைப் பார்த்துக்கொண்டே,. மிகவும் இனிமையான சிரிப்போடு அவர் இந்தக் கடைசி வாக்கியத்தைச் சொன்னார். அவரோடு சேர்ந்து நாங்கள் இருவரும் சிரித்தோம். 

அவருடைய உருவம் மறையும் வரையில் நான் அவரைப் பார்த்த வண்ணம் நின்றிருந்தேன். அவருடைய வாழ்க்கையில் எவ்வளவு பயங்கரமான புயல்கள் வீசி மறைந்தன என்பதை நான் கேட்டு அறிந்திருந்தேன். இவ்வளவு தீரமும் நம்பிக் கையும்உள்ளக் கனிவுமுள்ள ஒருவர் எதிரே குருவாக நின்றுங்கூட, அவரிடமிருந்து பிரபாகரன் வாழ்க்கையில் ஒரு. பாடமாவது கற்றுக்கொள்ளவில்லையே? 

பெட்டியில் இன்னும் இரண்டு புத்தகங்கள் படிப்பதற்குக் கிடந்தன. வெளியே இருள் கவிய ஆரம்பித்ததனால், நான் விளக்கேற்றிவிட்டுப் பிரபாகரனுடைய மேஜையருகில் படிக்க உட்கார்ந்தேன். அவனுடைய நண்பன் மற்றொரு மேஜை யண்டை வாசிக்க அமர்ந்தான். 

முதற் புத்தகத்தில் இன்னும் பல பக்கங்கள் படிப்பதற்கு இருந்தன. ஆனால் என் மனம் பரபரப்புற்றதனால் ஒரேயடி யாக இரண்டாவது புத்தகத்தைப் பிரித்துப் படிக்கலானேன். 


நாடகத்தின் இரண்டாவது அங்கம் ஆரம்பமாயிற்று. கல்லூரியில் முதலாண்டுத் தேர்வில் ஏழெட்டு மார்க்குகளில் முதல் வகுப்புக் கிடைக்காமற் போயிற்று. என்ன ஆனாலும் ‘இன்டரி’ல் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுத்தான் ஆக வேண்டும் என்ற உறுதியுடன் படிக்க ஆரம்பித்தேன். 

அந்தச் சமயத்தில்தான் எங்கள் வகுப்பு மாணவர்கள் சிலர், ஒரு பயிற்சிச் சங்கம் நிறுவ எண்ணினார்கள். இருபது இருபத்தைந்து சிறந்த மாணவ மாணவிகள் சேர்ந்து ஒரு சங்கம் ஏற்படுத்துவதென்றும், ஞாயிற்றுக்கிழமைதோறும் அரசியல் விஷயங்கள், சமூகப் பிரச்னைகள், இலக்கியம் முதலியவை பற்றி வாத விவாதங்கள் நடத்திக் கடைசியில் தேநீர் அருந்துவதென்றும் தீர்மானமாயிற்று. படிக்கும் நேரம் போக எனக்கும் ஏதாவது பொழுது போக்கு வேண்டுமே என்று இந்தச் சங்கத்தில் உறுப்பினனாகச் சேர்ந்தேன். 

ஆனால், விதி மனிதனுக்கு மிட்டாயில் விஷத்தை வைத்து ஊட்டுகிறது. நாலு நண்பர்களுடன் மிகவும் ஆனந்தமாகப் பொழுது போக்கலாம் என்ற எண்ணத்தோடு நான் சங்கத்துக்குச் சென்றேன். முதற் கூட்டத்தில் சங்கத்துக்குக் காரியதரிசிகளைத் தேர்ந்தெடுத்தார்கள். நான் ஒரு காரியதரிசி; மற்றொரு காரியதரிசி இன்டர் முதல் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த சுலபா. ஒரு பெண்ணோடு வேலை செய்வதென்றால்- 

காரியதரிசியாக இருக்க எனக்கு விருப்பமில்லை என்று சொல்ல நினைத்தேன்; ஆனால் அப்படிச் சொல்லியிருந்தால் எல்லா மாணவர்களுமாகச் சேர்ந்து பரிகாசம் செய்து என் உயிரை வாங்கியிருப்பார்கள். 

‘நம்மோடு வேலை செய்பவர் யாராக இருந்தால் நமக்கு என்ன? அவர் ஆணாக இருந்தால் என்ன, பெண்ணாக இருந்தால் என்ன? இளைஞராயிருந்தால் என்ன, கிழவராயிருந்தால் என்ன? அழகாக இருந்தால் என்ன, குரூபியாக இருந்தால் என்ன? இதையெல்லாம் பார்த்து நமக்கு என்ன ஆகவேண்டும்?’ கணிதத்தில் க, ங, ச, ஞ முதலியவர்கள் ஒருவர் மற்றவரைத் துளியேனும் சட்டை செய்யாமல் ஒரே இடத்தில் வேலை செய்து கொண்டு அவரவர் அந்த அந்த வேலையை அவ்வப்பொழுது முடிக்கிறார்கள் அல்லவா? நாமும் அப்படியே செய்யலாமே. நான் க; சுலபா ங. க என்பவன் ஞாயிற்றுக்கிழமைதோறும் எந்த எந்தப் புஸ்தகத்தைப்பற்றி விவாதம் செய்வதென்பதைத் தீர்மானிக்க வேண்டியது; ங என்பவள் கூட்டத்தின் நடவடிக்கைகளைக் குறித்து வைத்துக் கொண்டு கவின் வீட்டுக்குப் போய்- 

‘ஆனால் ங பணக்காரி; க ஏழை. பணக்காரியான ங, கவின் வீட்டுக்குப் போனதும் என்ன நினைப்பாள்? அதைக்காட்டிலும் கவே ஙவிடம் போவதுதான் நல்லது. அத்துடன் பெண்ணிடம் இரக்கம் காட்டியதாகவும் இருக்கும்!’ என்று நினைத்தேன். 

க ஙவின் வீட்டுக்கு-பொய் சொல்வதில் பயனென்ன? பிரபாகரன் என்ற இளைஞனான மாணவன், இளவயது மங்கையான சுலபா என்ற மாணவியின் வீட்டுக்குப் பயிற்சிச் சங்கத்தின் வேலைக்காகப் போய்வரத் தலைப்பட்டான். 

சுலபாவை மனத்துக்குள்ளேயே ங என்று சொல்லிக் கொள்வதும், ஓர் அழகிய பாட்டைக் கேட்டுவிட்டு விளக்கெண்ணெய் குடித்தாற் போல முகத்தை வைத்துக் கொள்வதும் என்றும் முடியாத காரியங்கள். 

சனிக்கிழமைதோறும் மாலையில் அவள் வீட்டுக்குப் போவேன். முதல் சனிக்கிழமையன்று பகல் மூன்று மணிக்கே எனக்கு இந்த விஷயத்தைப்பற்றி ஞாபகம் வந்துவிட்டது. இரண்டாம் சனிக்கிழமை கல்லூரியில் வகுப்பு ஆரம்பித்தவுடனே, ‘இன்று நாம் சுலபாவிடம் போகவேண்டும்’ என்ற நினைவு மனத்தில் சுழல ஆரம்பித்தது. மூன்றாம் சனிக்கிழமை காலையில் எழுந்தவுடனே முதல்முதலில் எனக்கு இந்த விஷயந்தான் ஞாபகத்துக்கு வந்தது. நான்காம் சனிக்கிழமை- 

சனிக்கிழமை என்று சொல்வதே பிசகு. வெள்ளிக்கிழமை இரவு படுக்கையில் படுக்கும்போதே, ‘நாளைக்கு நாம் சுலபாவிடம் போகவேண்டும்’ என்ற ஆனந்தத்தினால் என் மனம் களி நடம் புரிய ஆரம்பித்தது. அன்றிரவு வெகு நேரம் வரையில் எனக்குத் தூக்கமே வரவில்லை. 

பார்க்கப் போனால், வாரத்தில் சுமார் இரண்டு மணி நேரந்தான் சுலபாவும் நானும் ஒன்றாகப் பழகி வந்தோம். ஆனால், ஒரு பெண்மணி எவ்வளவு தங்க நகைகள் அணிந்திருந்தாலும், பளிச்சென்று மின்னும் வைரத்தோடுகளின் முன்பு அவையாவும் மங்குவன போலவே, சனிக்கிழமைக்கு இருந்த கவர்ச்சி வாரத்திலுள்ள மீதி ஆறு நாட்களுக்கு இல்லை என்பதையும், சனிக்கிழமையன்றுகூட அந்த இரண்டு மணி நேரத்துக்கு இருந்த கவர்ச்சி மீதியுள்ள இருபத்திரண்டு மணி நேரத்துக்கு இல்லை என்பதையும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் தீர்மானமாக அறிந்துகொண்டேன். 

ஒரு சாதாரண அறையில் யாராவது ஓர் அழகிய படத்தைக் கொணர்ந்து மாட்டிவைப்பதுபோல, சுலபா என் வாழ்க்கையில் பிரவேசித்திருந்தாள். 

 அழகிய போட்டோக்களாலும், சித்திரங்களாலும், சிற்ப வேலைகளாலும் அலங்கரித்த அவளுடைய அறையில் கால் வைத்ததுமே, யட்சலோகத்தில் புகுந்ததுபோல எனக்குத் தோற்றும். அந்த யட்சலோகத்தின் ராணி, அப்ஸரஸ் என்று சொல்லும்படியே இருந்தது சுலபாவின் எழில். 

அவளுடைய அறையில் உட்கார்ந்து அவளோடு பேசுகையில் பொழுது நிமிஷமாகக் கழிந்துவிடும். ‘எதிரே உள்ள கடிகாரம் வீணுக்குப் பைத்தியம்போல ஓடுகிறது. சுலபாவின் அழகைக் கண்டும், அவளுடைய இன்மொழிகளைக் கேட்டும், அது நின்ற இடத்திலேயே நிற்காமல் எப்படித்தான் ஓடுகிறதோ?’ என்று நினைப்பேன். 

எந்த விஷயங்களில் எங்களுக்கு ஒன்றுபட்ட அபிப்பிராயம் இருந்ததோ அவற்றைவிட அபிப்பிராய பேதமுள்ள விஷயங்களைத் தேர்ந்தெடுப்பதே எனக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. சுலபாவைக் கொஞ்சம் சீண்டி விட்டால் போதும், ஆவேசத்தோடு பேச ஆரம்பித்துவிடுவாள். அத்தகைய சந்தர்ப்பங்களில் அவளுடைய யுக்திவாதங்கள் சரியா இல்லையா என்பதைக் கவனிப்பதை விட அவள் அழகைப் பார்ப்பது தான் எனக்கு ஆனந்தமாக இருக்கும். காதுகளின் மேல் வளைந்து செல்லும் அவளுடைய வாரிய கூந்தல் என் நெஞ்சை அள்ளும். அத்துடன், அவள் கோபத்தோடு பேச ஆரம்பித்துவிட்டாலோ வலக் கையால் தன் நீண்ட பின்னலை எடுத்து இடக் கையில் அதை அடித்துக் கொண்டே பேசுவாள். அதைக் கண்டு என் நெஞ்சம் மகிழ்ந்து பொங்கும். அவள் கூந்தலில் சூடிய மலரைக் கண்டு, ‘நாகத்துக்குத் தலையில் மணி இருக்கும் என்கிறார்களே; அது வெறும் கற்பனையல்ல!’ என்று நினைப்பேன். அவள் கண்களைப் பார்க்கும்போதெல்லாம் பரந்த கடலின் நீலநிறம் என் ஞாபகத்துக்கு வரும். அவள் வேக மாகப் பேசும்போது அவள் கண்களில் அலைகள் பொங்கியெழு வதுபோல எனக்குத் தோற்றும். நான் அவளை எப்போதும் மறதியாகக்கூடத் தொட்டதில்லை. ஆனால் நான் அப்படிச் செய்யாதது தூய்மை நினைப்பினால் அல்ல; அவளிடம் உள்ள பயத்தினால்தான். சுலபாவுக்கு அத்தகைய அதிகப்பிரங்கித் தனம் பிடிக்காவிட்டால்? – போட்டிப் பரிசில் இருபத்தையாயிரம் ரூபாய் பெறவேண்டுமென்ற வெறியில், கையிலுள்ள நூறு ரூபாயையும் போக்கடிப்பவனுடைய நிலையைப்போல அல்லவா அப்போது என் நிலைமை ஆகிவிடும்? 

என் வாழ்க்கையில், மனத்துக்கும் உடலுக்குமிடையே விசித்திரமான போராட்டமே தொடங்கிவிட்டது. உயரத் தொங்க விட்டிருக்கும் அழகிய பொம்மையைக் கண்டு அதைக் கையில் எடுத்துக்கொள்ள ஆத்திரப்படும் சிறு குழந்தைபோல, நானும் சுலபாவை ஸ்பரிசிக்க ஆவல் கொண்டிருந்தேன். ஒவ்வொரு சமயமும் அந்த ஸ்பரிச சுகத்துக்காக உடல் விரைவுறும்; ஆனால் ஒவ்வொரு சமயத்திலும் மனம், அந்த விரையும் உடலைத் தடுத்து நிறுத்தும். 

‘கோயில்களில் தெய்வத்தைத் தொலைவிலிருந்தே தொழ வேண்டியிருக்கிறது அல்லவா? அது போலவே நம் காதலும் ஒரு கோயில்; சுலபா அந்தக் கோயிலில் வீற்றிருக்கும் தெய்வம்; அவளுடைய தரிசனம் நமக்கு இடைவிடாமல் கிடைத்துக் கொண்டிருக்கிறது; ஏழைப் பக்தனுக்கு இதுவே போதும்’ என்று நினைப்பேன். 

அந்தத் தரிசனத்தைப் பின்னும் அழகுறச்செய்வதற்காகச் சனிக்கிழமைதோறும் தர்க்கிப்பதற்கு ஏதாவது ஒரு விஷயத்தைத் தேர்ந்தெடுப்பேன். 

“மிருச்சகடிகத்தைப் போன்ற அழகிய நாடகம் ஸம்ஸ் கிருதத்தில் வேறு இல்லை. முதல் அங்கத்தில், சாருதத்தன் வசந்தசேனையை ரதனிகை என்று எண்ணி, அவள் உடல்மீது தன் சால்வையைப் போர்த்துகிறானே அந்தச் சம்பவமென்ன; பின்பு மழையில் நனைந்து வருகிற வசந்தசேனையும் சாருதத்தனும் சந்திக்கும் நிகழ்ச்சி என்ன – இப்படி எத்தனையோ அழகான சித்திரங்கள் அந்த நாடகத்தில் இருக்கின்றன. சாகுந்தலங்கூட அதற்கு முன்பு சப்பைதான். அப்படியிருக்க அந்த வறண்ட கதையான உத்தரராம சரிதத்தைப்பற்றிப் பேச்சே வேண்டாமே!” என்பாள் அவள். 

காதற் சம்பவங்களை நினைவில் வைத்துக்கொண்டு பார்த் தால், அவள் சொல்வது சரியே. ஆனால் அவளைச் சீண்டுவதற்கு நான் வேண்டுமென்றே பவபூதியின் சார்பாக வாதப் போர் நிகழ்த்துவேன்; உத்தரராம சரிதத்திலுள்ள மிகவும் அழகிய கட்டங்கள் என்று இரு காதற் சம்பவங்களை எப்போதும் வர்ணிப்பேன்; ஒன்று, சீதைக்குத் தூக்கம் வரும்போது, ராமன் தன் தோளையே தலையணையாக்கி அவள் தலையைத் தோள்மீது தாங்கிக்கொள்கிறானே, அந்தச் சம்பவம்! மற்றொன்று, நிழலுருவங்கொண்ட சீதை, மூர்ச்சையுற்ற ராமனைத் தன் ஸ்பரிசத்தால் தெளிவிப்பது! 

தர்க்கம் செய்யும் சமயத்தில், இந்த நிகழ்ச்சிகளில் காவியம் இருப்பதாக அவள் ஒப்புக்கொள்ளமாட்டாள். ஆனால் இந்த இரு நிகழ்ச்சிகளும் காதலர்களுடைய மனத்தின் உருவெளித் தோற்றங்கள் என்ற காரணத்தினால் அவளுக்குப் பிடித்திருக்க வேண்டும் என்பதை விரைவிலேயே அறிந்து கொண்டேன். 

ஒரு தடவை எனக்கு மலேரியா ஜுரம் வந்துவிட்டது. அந்தச் சனிக்கிழமை தவறிப்போயிற்று! அன்று மாலையில், ஜுரம் நூற்றுநான்கு டிகிரிக்கு மேல் போய்விடவே, நான் திவாகரனை – என் நண்பனை – டாக்டரை அழைத்துவர அனுப்பினேன். அவன் சென்றதும் நான் ஜுர மயக்கத்தில் எவ்வளவு நேரம் கிடந்தேனோ, தெரியவில்லை. நான் எழுந்தது வளையல்களின் ஓசையினால் தான்! 

கண்ணில் ஒரே பாரமாக இருந்தது. ஆனால் உடலின் அசதியைவிட மனக் குதூகலம் எப்போதுமே அதிக வன்மை வாய்ந்ததாக இருக்கும். 

கண்ணைத் திறந்து பார்த்தேன்: சுலபா என் படுக்கை யருகில் உட்கார்ந்திருந்தாள். நான் கண்ணைத் திறந்தவுடனே, அவள் கட்டிலிலிருந்து கீழே விழுந்து கிடந்த தலையணையைக் கையில் எடுத்துக்கொண்டே, “இந்தத் தலையணையை எறிந்து விட்டீர்களே? சீதைக்கு ராமன் தந்த தலையணை உங்களுக்கு வேண்டும் போல இருக்கிறது?” என்று கேட்டாள். 

அவளுக்கு வேடிக்கையாகப் பதில் சொல்ல எண்ணினேன்; ஆனால் தலையில் யாரோ கனத்த பாறையை வைத்தாற்போல இருந்தது. நான் வெறுமே நகைத்தேன். 

மறுநாள் மாலையில் அவள் என் உடல்நிலையை விசாரிப்பதற்காக எப்போது வந்தாளோ, தெரியாது. நான் கண்ணைத் திறந்து பார்க்கையில், அருகில் திவாகரன் ஆரஞ்சு ரசத்தைப் பிழிந்து கொண்டிருந்தான்; சுலபா ‘கோலன் வாடரி’ல் நனைத்த துணியை என் தலையில் வைத்துக்கொண்டிருந்தாள். அவளுடைய அந்தத் தண்மையான ஸ்பரிசம்- 

நான் கண்ணைத் திறந்தவுடனே, அவள் கழுத்தை வளைத்து மெதுவாக, “மூர்ச்சையடைந்த ராமன் சீதையின் ஸ்பரிசத்தினால் தெளிவு பெறுகிறானே, அது பவபூதியின் வெறுங் கற்பனையன்று; தெரிகிறதா!” என்றாள். 

அந்த ஒரு வாக்கியத்தினால், எங்கள் இருவருக்குமிடையே இருந்த இடைவெளி மிகவும் குறைந்து போயிற்று. 

ஆனால் நான் அந்த இடைவெளியைப் பூர்ணமாக மறந்து விடவில்லை. பயிற்சிச் சங்கத்தில் மட்டுமின்றிக் கல்லூரி யிலுங்கூடப் பல பேர், எங்கள் நட்பாகிய வாசலில் ‘காதல்’ என்று தீட்டிய பலகையை மாட்டியிருந்தார்கள். ஆனால் நான் மட்டும் சில சமயம் நினைப்பேன்: ‘சுலபாவும் நானும் மிகவும் அருகில் வந்துவிட்டோம் என்பது உண்மையே. ஆனால் எங்களுடைய இந்த நட்பு இரண்டு கைதிகள் வார்டருடைய கடுங்காவலின் கீழ் வேலை செய்து கொண்டே அரட்டையடிப்பதைப் போன்றது தான். சுலபாவின் தாய் என்னைப் பார்க்கிலும் எவ்வளவோ பணக்காரி; போதாக்குறைக்கு, சுலபாவின் அப்பாவைப் பெற்ற பாட்டி ஒரு பெரிய ஜமீன்தாருக்கு அத்தையாம்! கல்லூரி யுலகத்தில் பணக்காரர் ஏழை என்ற வேறுபாடு தென்படுவதில்லை; ஆனால் இந்தப் புத்தக உலகத்துக்கு வெளியே- ‘ 

இம்மாதிரியான எண்ணங்கள் உதிக்கும்போதெல்லாம், என்ன காரணத்தினாலோ, சுலபாவின் நகைமுகம் என் கண் முன்பு தோன்றும். அந்தக் குறுநகை, ‘பிரபாகரரே, நீங்கள் வெளியுலகத்தைக் கண்டு வீணுக்கு ஏனோ பயப்படுகிறீர்களே! இரண்டே பேர் அடங்கியதுதான் காதலுலகம்!’ என்று
சொல்லும். 

‘ஒரே ஆசாமியைக் கொண்டதுதான் காதலுலகம்!’ என்கிறேன் நான். சுலபாவின் சிந்தனையில் நான் என்னைக்கூட மறந்துவிட்டேன் அல்லவா? அப்பாவிடமிருந்து கடிதம் வந்து பல நாட்களாயினவே, வீட்டில் அம்மாவுக்கு உடம்பு சரியில்லையே, நான் இப்போதெல்லாம் சரியாகப் படிப்ப தில்லையே – என்ற இவ்வித விஷயம் எதுவும் என் மனத்தை உறுத்தவில்லை. சுலபாவை உள்ளே வீற்றிருக்கச் செய்வதற் காக, என் மனத்திலிருந்த தடைகளை வெளியே தூக்கி எறிந்து விட்டேன் போலும்! 

படிப்பில் எனக்கு மிகுந்த சுவை இருந்தும் நான் இதுவரை ஒரு கவிதைகூட எழுதியதில்லை. ஆனால் இன்டரில் படித்த இந்த ஒரு வருஷத்துக்குள் நான் ஐம்பது பாடல்கள் வரைந்தேன். அந்த ஐம்பதில் நாற்பத்தொன்பது பாடல்கள் காதற் கவிதைகளாக இருந்தன. 

பின்னர், எங்கள் சங்கத்தின் ஆண்டுக் கொண்டாட்டத்துக்குப் புகழ்பெற்ற ஓர் இலக்கிய நிபுணரைத் தலைமை வகிக்க வேண்டினோம். அவர் வேறு யாருடைய மனைவியையோ தம் சிநேகிதி என்று கூறிக்கொண்டு தம்மோடு கொண்டாட்டத் துக்கு அழைத்து வந்திருந்தார். அவர் தம் தலைமையுரை யிலும், “காதலென்பது எந்தச் சமயத்திலும் பாவமாக இருக்க முடியாது. உயர்ந்த இலக்கியத்தைப் படைக்க விரும்பு கிறவன் தன் இச்சைப்படியே காதல் செய்யவேண்டும். சிருங்காரந்தான் ரசங்களுக்குள் தலையாக விளங்குவது. மற்ற எட்டு ரசங்கள் எவ்விதத்திலும் எப்போதும் அதனுடைய சீர்மைக்கு ஈடாகா. இளைஞர்களான என் நண்பர்களே, இளம் சிநேகிதிகளே, சமூகத்திலுள்ள வறுமையைப்பற்றியும் அநியாயங்களைப்பற்றியும் அழுமூஞ்சிக் கதைகளைக் கதைத்துக் கொண்டு சில பைத்தியக்கார எழுத்தாளர்கள் உங்கள் வாழ்க்கையிலுள்ள ஆனந்தத்தைக் கெடுக்கப் பார்க்கிறார்கள்; அவர் களை அடியோடு கண்ணெடுத்துக்கூடப் பார்க்காதீர்கள்! தொழிலாளர்களைப் பார்க்க வேண்டுமாம்! அவர்களிடத்தில் என்ன ஐயா இருக்கிறது பார்ப்பதற்கு? உயர்வகுப்பினரை விட மிகவும் விரைவிலேயே அவர்கள் மணம் செய்துகொள் வதனால், நம்மைக்காட்டிலும் அவர்கள்தாம் அதிக சுகத் தோடு வாழ்கிறார்கள். நான் உங்களுக்குத் தரும் செய்தி ஒன்றே ஒன்றுதான்: பித்தராகுங்கள்; காதற் பித்தராகுங்கள்!” என்று கூறினார். 

இந்த இலக்கிய நிபுணருடைய முன்னேற்றமான இந்தச் சிந்தனைப் போக்கு எல்லாருக்கும் ஜீரணமாவது சாத்தியம் அல்ல. ஆனால், தான்தோன்றித்தனத்துக்கு மனத்தை மயக் கும் சக்தி இயல்பாகவே உண்டு. பந்தாட்டத்தில் மெதுவாக விளையாடுபவர்களைவிட எல்லையை மீறி விளையாடும் ஆட்டக் காரர்களையே பொது மக்கள் பெரிதும் விரும்புகிறார்களே! அது ஏன் என்பதை அன்று அறிந்துகொண்டேன். கட்டுக்கு மீறிப் பேசுவதும், கட்டுக்கு மீறி நடந்துகொள்வதும் பிறர் மனத்தை அற்புதமாக மாற்றிவிடுகின்றன. மின்சார வெளிச் சத்தின் பேரொளியால் கண்கள் கூசுவதுபோலவே, இத்தகைய பேச்சுக்களைக் கேட்டு, இன்பத்தை நுகர ஆவல்கொண்ட மன மும் உள்ளூற எக்களிக்கிறது. என் நிலை அன்று அப்படித் தான் ஆயிற்று. எங்களுக்கு நன்றி கூறிக்கொண்டே அவர் எல்லாரையும் சிரிப்பு மூட்டுவதற்காகப் பேசிய பேச்சு அந்த ஆனந்தத்தைப் பின்னும் வளர்த்தது. “உங்கள் சங்கத்துக் காரியதரிசிகள் ஒரு நல்ல ஜோடிதான். இந்த ஜோடி சீக் கிரமே இணைய வேண்டும்!” என்றார் அவர். 

அவரை ரெயிலில் ஏற்றி வழியனுப்பிய பின்பு நானும் சுலபாவும் வெகு தூரம் உலாவச் சென்றோம். 

வழியில் நாங்கள் இருவரும் ஒரு வார்த்தைகூடப் பேச வில்லை. ஆனால் இடையிடையே எங்கள் கண்கள் சந்திக்கும்; உடனே இதழ்க்கடையில் குறுநகை அரும்பும். ‘சுருங்கிச் சுருங்கி மொட்டு மலர்கிறதே, அது இயற்கையின் வெறும் விளையாட்டல்ல’ என்று நினைக்கலானேன். 

சற்று நேரத்துக்கு முன்பு ரெயிலில் இரண்டாம் வகுப்பில் அமர்ந்திருந்த எங்கள் கொண்டாட்ட அதிதிகளின் காட்சி என் கண்முன்பு அடிக்கடி தோன்றியது. என் கையைக் குலுக் கியபோது அவர் தும்மிய அந்தத் தும்மல்-எனக்கு ஒரு கணம் வெறுப்புச் சகிக்க முடியவில்லை. பெருவியாதிக்காரனுடைய கையைப் பிடித்தாற்போல இருந்தது எனக்கு. ஆனால் என் கையை விடுவித்துக்கொள்ள என்னால் முடியவில்லை; என் மனத்திலுள்ள வெறுப்பை வெளிக்காட்டவும் முடியவில்லை. என் முன்னால் ஒரு பெரிய மனிதன் நின்றுகொண்டிருந்தான். அவனுடைய அறிவின் முன்பும், புகழின் முன்பும், பெருந்தன் மையின் முன்பும் என் மனம் பின்னடைய வேண்டியிருந்தது; என் தூய்மையெண்ணம் தலைகவிழ்ந்து நிற்கவேண்டியிருந்தது. 

அந்தப் பெரியவரும் அவரோடு வந்த சிநேகிதியும் கண வனும் மனைவியும்போல அந்தரங்கமாகப் பேசிக்கொண்ட தென்ன, அவ்வப்போது ஒருவர்மீது மற்றொருவர் சாய்ந்து கொண்டு அநுபவித்த காதற் காட்சிகளென்ன, சாயங்காலம், நாங்கள் இருவரும் அவர்களைக் கூப்பிடச் சென்றபோது ஹோட்டலிலுள்ள அறையில் அவர்கள் செய்துகொண்டிருந்த. சிருங்கார சேஷ்டைகளென்ன-இவற்றில் ஒவ்வொன்றையும் நினைத்தபோது என் உடல் வெறி கொண்டது; மனத்தில் இனிய குழைவு உண்டாயிற்று. சாலையில் சென்றபோது சுலபாவை நான் பார்த்த பார்வையில்- 

அதை எழுதுவானேன்? திருப்தியுறாத உடற்பசி என் கண்ணில் உருவாகியிருந்தது; அதன் நிழலைச் சுலபாவின் கண்ணிலும் கண்டேன். 

முதல்முதலில் நாங்கள் மலையடிவாரத்தில் போய் உட் கார எண்ணியிருந்தோம். ஆனால் சுலபா அருகிலுள்ள பூங் காவுக்குப் போகலாமென்று குறிப்பிட்டாள். எனக்கும் அது பிடித்தது. இளங் காதலர்களின் குளுகுளுவென்ற பேச்சுக்குப்” பூங்காவாகிய நிலைக்களந்தான் பொருத்தமானது. 

கோயில்? கிழவயதில்தான் நாள் தவறாமல் கோயிலுக்குப் போவது அவசியமாயிற்றே! 

நாங்கள் இருவரும் பூங்காவிற்குள் சென்று,நீரூற்றைச் சுற்றியுள்ள தொட்டிமேல் உட்கார்ந்தோம். சுற்றுப்புறத்தில் சின்னஞ்சிறு பூஞ்செடிகள் காற்றோடு அசைந்தாடிக்கொண் டிருந்தன. அந்தியொளி மறைந்து, சல்லடைவழியே ‘புரு, புரெ’ன்று விழும் மாவைப் போல, நிலவு எங்களை நோக்கிக் கூத்தாடிக்கொண்டே வந்தது. தொட்டியில் விழும் திவலை களின் மெல்லிய இனிய நாதம் செவிக்கு ஆனந்தமாக இருந் தது. என்னிடமிருந்து இரண்டு சாண் தொலைவுக்குள்ளேயே அமர்ந்திருந்த சுலபா சில சமயம் சேலைத்தலைப்பை விரலில் சுற்றிக்கொள்வாள்; சில சமயம் நகத்தால் தரையைக் கீறிய வண்ணம் இடையே என்னைப் பார்த்துவிட்டு உடனே வேறு புறமாக முகத்தைத் திருப்பிக்கொள்வாள். 

சுற்றுமுற்றும் பார்த்தேன்; அக்கம்பக்கத்தில் யாரும் இல்லை. என் உடலில் ஓடிக்கொண்டிருந்த ரத்தத்தின் ஒவ் வொரு துளியிலும் வெறி நிரம்பியிருந்தது. அன்றைப் பிர சங்கத்தில் கேட்ட, “இளைஞர்களே, பித்தராகுங்கள், காதற் பித்தராகுங்கள்!” என்ற சொற்கள் காதில் சுழல ஆரம்பித்தன. 

சுலபா இருந்த இடத்திலேயே சிறிது அசைந்தாள். எங்கள் இருவருக்கும் இடையே இருந்த இடைவெளி சற்றுக் குறைந்துபோனதைக் கவனித்தேன். சொர்க்கம் என்னிட மிருந்து இரண்டு விரற்கடைத் தூரத்தில்தான் இருந்தது. 

நான் மேலே பார்த்தேன்: ‘காதல் செய்வது பாவமல்ல!’ என்று சந்திரன் பாடிக்கொண்டிருந்தான். 

முன்னால் பார்த்தேன்: ‘காதல் செய்வது பாவமல்ல!’ என்று பூஞ்செடிகள் கூத்தாடின. 

சுலபாவைப் பார்த்தேன்; நாணமுற்ற அவள் கண்கள், ‘காதல் செய்வது பாவமல்ல!’ என்றன. 

“சுலபா!” என்ற கூக்குரல் என் வாயினின்றும் வெளி வந்தது; அது என் குரல்தான் என்ற நம்பிக்கை எனக்கு இன்னமும் உண்டாகவில்லை. சுலபாவின் வாயிலிருந்தும், “பிரபாகரரே!” என்ற குரல் வந்தது. அவள் குரலில்தான் எவ்வளவு வேறுபாடு! 

நான் அவளைச் சட்டென்று அருகில் இழுத்தேன். அவள் என் மடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். அவள் கூந்தலில் பல தடவை முத்தமிட்டேன்; ஆனால் என் இதழ்கள் திருப்தியடையவில்லை. நான் சடக்கென்று அவள் முகத்தை மேலே தூக்கி, என் இதழ்களை- 

அந்த ஆனந்தம் – முத்தத்தின் அந்த ஆனந்தம் – எவ்வளவு தெய்விகமானது! எத்தகைய சொர்க்க சுகம் அது! ‘மனிதனுக்குக் காற்றில் மேலே போகப்போக மிக இன்பமாயிருக்கும் என்று எங்கோ படித்திருந்தேன். அப்போதுதான் அதை உணர்ந்தேன். பல நாட்களாக நான் பூமியை விட்டுச் சென்று இடைவெளியில் திரிவதாக எனக்குத் தோன்றியது. அப்போது நான் வான் மஞ்சத்தில் தூங்கிக் கொண்டிருந்தேன். நட்சத்திரங்களாலான மலர்மாலைகள் அந்த மஞ்சத்தை அலங்கரித்தன. வெள்ளைவெளேரென்ற மேகத்துணுக்காகிய தலையணை மீது தலை வைத்த வண்ணம், மூலையில் வைத்திருந்த பிறையாகிய குத்துவிளக்கை உற்றுப் பார்த்தவாறே நான் சுலபாவை நினைத்துக் கொண்டிருந்தேன். அவள் அந்தப்புரத்துக்குள் வந்ததுமே தன் சேலைத் தலைப்பினால் பிறையாகிய விளக்கை அணைத்துவிட்டு- 

அன்று சோலையில் நான் அநுபவித்த அந்த ஒரு கணம், என்றும் அழியாத ஓர் உணர்ச்சிப் பாடலாகும். அதற்குப் பின்பு கழிந்த ஏழெட்டு மாதங்கள் – ஓர் அழகிய மகாகாவி யத்தின் ஏழெட்டு ஸர்க்கங்களே அவை! அவற்றில் ஒவ்வொரு ஸர்க்கத்திலும் முப்பது முப்பத்தொரு சுலோகங்கள் இருந்தன. ஒவ்வொரு சுலோகத்தின் அடியும் மிக இனிதாக மட்டுமல்ல; ஒவ்வோர் அடியிலுள்ள ஒவ்வொரு சொல்லிலும் திராட்சையின் இனிமை சொட்டியது. 

அன்றிரவு படுக்கையில் படுத்ததும் எனக்குத் தூக்கமே வரவில்லை. தாய் தந்தையரைப்பற்றிய நினைவோ படிப்பைப் பற்றிய கவலையோ அதற்குக் காரணமல்ல. இரண்டு மணி நேரத்துக்கு முன்பு சோலையில் நிகழ்ந்த சம்பவத்தைப் பற்றிய நினைவு தான் காரணம். ‘காலதேவன் சிறையதிகாரியைப் போலவே மிகவும் கடுமையானவன். ஆனந்தப் பொழுதை ஒரு கணநேரம் பரிமாறுவதற்குக் கூட அவன் விரும்புவதில்லை’ என்று அடிக்கடி எனக்குத் தோன்றிற்று. 

குளிர்நாட்களில் விரல்கள் மட்டும் படுக்கைக்கு வெளியே இருந்து மரத்துப் போவதுபோல, என் மனத்தின் ஒரு மூலை இந்த அநுபவத்தினால் செய்கையற்றுக் கிடந்தது. இடை யிடையே என் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. ‘நான் மனத்தை வசப்படுத்தி வைத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். இன்று நான் சுலபாவை முத்தமிடாமல் இருந்திருந்தால்?’ 

‘அப்போது என்ன ஆகியிருக்கும்?’ 

என் உடலின் ஒவ்வோர் அணுவும், ‘அப்போது நீ உன் வாழ்க்கையில் மிகப் பெரிய இன்பத்தை இழந்திருப்பாய். அட பைத்தியமே, உன் மனத்தில் இன்னமும் பழைய பண்பாடுகள் அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. தூய்மை, நீதி, திருமணம் என்பவை வெறும் சொற்களே! அவற்றின் பொருள் பழைய அகராதிக்காரர்களுக்குத் தெரிந்திருக்கலாம்! இருபதா வது நூற்றாண்டின் நடுப்பகுதியை அணுகிவிட்ட இளைஞர்களின் அகராதியில் இத்தகைய பழங்காலச் சொற்கள் இருக் கவே முடியாது. இன்று நிகழ்ந்த கொண்டாட்டத்தின் தலை வரை நீ பார்த்தாய் அல்லவா? பழங்காலத்தில் மகாபாதகம் என்று எண்ணி வந்த ஒவ்வொரு பாவத்தையும் அந்த மனிதன் சிரித்துக் கொண்டே விளையாட்டாகச் செய்கிறான்; ஆனால் அதனால் அவனுக்கு ஏதாவது நஷ்டம் உண்டா? பணமும் புகழும் அவன் முன்பு கைகட்டி நிற்கின்றன. அவனுடைய மதுபானம் வேதியர்களுக்குச் சம்மதமானது. அவனுடைய விபசாரமோ? அதுதானே அவனுடைய பெரும் வீரச் செயல்! போடா, பைத்தியக்காரா! உலகம் என்பது கடைத்தெரு; அது கோயிலல்ல. தூய்மைப் புராணம் கோயிலோடு சரி; கடைத் தெருவில் பணம் இல்லாமல் ஒன்றும் அசையாது!’ என்று கூறியது. 

எனக்கும் அது சரியென்றே பட்டது. அப்படிப் படாமலே இருந்தாலும் சுலபாவை விட்டு விலகுவது என்னால் அடி யோடு இயலாத காரியம்; இதுவரையில் கவிகள் காதலை எத்தனையோ பொருள்களோடு ஒப்பிட்டிருக்கிறார்கள். என் புது உவமையைக் கேட்டு அவர்களுக்குக் கோபம் வரலாம். ஆனால் இன்று எனக்கு, ‘காதல் மலைப்பாம்பைப் போன்றது. மலைப்பாம்பு ஆவென்று வாயை விரித்தால் அக்கம் பக்கத்திலுள்ள பிராணிகள் தாமாக அதற்குள் போய் விழுமாம். பாம்பின் வயிற்றுக்குள் அரைக்கணத்தில் நாம் பொடிசூர்ணமாகி விடுவோம் என்பது அவற்றுக்குத் தெரியாது என்பதில்லை; ஆனால் அந்தக் கவர்ச்சியினின்றும் விடுபட அவற்றினால் முடிவதில்லை. என் நிலையும் அப்படித்தான் இருக்கிறது’ என்று தோற்றுகிறது. 

ஆனால் இந்த உவமை இன்றுதானே எனக்குத் தோன் றிற்று! அந்தச் சமயத்திலோ, காதல் ஒரு தெய்வ மங்கையாக இருந்தது. 

அன்றையிலிருந்து என் மனம் ஒரு காரணமும் இன்றியே சஞ்சலமும் கலக்கமும் கொண்டதாகிவிட்டது. 

“முடிமரண வேதனையும் எளிதாய்த் தோற்றும் 
முதல்முத்தக் களியின்பம் பருகி னோர்க்கே” 

என்ற அடிகளின் முழுப் பொருளையும் நான் ஒரே நாளில் தெரிந்துகொண்டேன். இருபத்துநான்கு மணி நேரத்தையும் சுலபாவின் சகவாசத்திலேயே கழிக்க வேண்டும் என்று நினைக்கலானேன். என் தியானத்திலும் மனத்திலும் கனவிலும் சுலபாதான் இருந்தாள். 

இதற்கு முன்பெல்லாம் நான் விடுமுறையை மிகவும் ஆவ லோடு எதிர்பார்த்துக் கொண்டு இருப்பேன்; ஆனால் இந்தத் தடவை மட்டும்-இன்டர் பரீட்சை முடிந்த அன்று எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. நாங்கள் இருவரும் அன்று மாலை வெகு தூரம் உலாவச் சென்றோம்; பிரிவை நினைந்து சிறு குழந்தைகளைப் போல அழுதோம். 

ஜூன் மாத ஆரம்பத்திலேயே நான் ஊரிலிருந்து திரும்பி வந்துவிட்டேன். இன்டரில் தேர்ச்சி பெற்றேன்; ஆனால் முதல் வகுப்பில் அல்ல. ஏதோ ஒரு வகையாக இரண்டாம் வகுப்பில் என் பெயர் வந்தது. பரீட்சை முடிவு தெரிந்ததும் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இனி எனக்காக அப்பா அதிகக் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதையும் உணர்ந்தேன். இனிமேல் சுலபாவிடம் போகக்கூடாது என்று நான் தீர்மா னிப்பதற்கு முன்பே அவளே வந்து என்னை அழைத்துச் சென்றாள். சூடு பட்டதும் வெப்பமானியிலுள்ள பாதரசம் ஏறாமல் இருப்பதில்லை. என் மனநிலையும் அப்படித்தான் ஆயிற்று. 

மீண்டும் பயிற்சிச் சங்கம் ஆரம்பித்தது. நான் சனிக் கிழமைகளில் மட்டுமன்றி நாள்தோறும் சுலபாவின் வீட்டுக்குப் போகலானேன். அவளைத் தவிர வேறு எதுவும் எனக்கு உலகில் தென்படவில்லை. அவளுடன் பேசுவதும், அவளையே பார்த்துக்கொண் டிருப்பதும், அவளோடு எங்கா வது வெகு தொலைவில் உலாவப் போவதும், அவள் கையைக் கோத்துக்கொண்டு அந்த வெறியில் என்னை நானே மறந்து விடுவதும்- 

ஜூனியர் வருஷம் இப்படிக் கழிந்தது. பிறகு ஸீனிய ருக்குப் படிக்க வேண்டுமென்று சாக்கிட்டு நான் கோல்ஹாபூரிலேயே தங்கிவிட்டேன். 

கல்லூரி திறந்து ஒரு வாரம் பத்து நாள் ஆகியிருக்குமோ என்னவோ; ஒரு நாள் இரவு சுலபாவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் இருந்த செய்தி இவ்வளவுதான்: 

வானத்தில் வெகு உயரத்தில் இரண்டு பட்டங்கள் அருகருகே வந்தன. ஒன்று நல்ல வெளுப்பு: மற்றொன்று ரோஜா நிறம். 

ஆகாயவிமானம் போலப் பறப்பது அவற்றுக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. அவை இரண்டும் காற்றில் ஒன்று சேரும்போது, ‘நாம் வாழ்நாள் முழுவதும் இப்படியே சேர்ந்திருப்போம். சந்திரப்பிறை தோன்றி மறையும்; சுக்கிரதாரகை உதிக்கும், அஸ்தமிக்கும்; ஆனால் நம் இருவருடைய காதல் இவ்விதமே என்றும் இருக்கும்’ என்று நினைத்தன. 

ஆனால் அவ்விரு பட்டங்களும் வானத்தில் கட்டிய காதற் கோட்டையில் வசித்துவந்தன. 

அந்த ரோஜா நிறப் பட்டம் திடீரென்று கீழே சாய்ந்தது. அதன் கயிற்றை வைத்துக்கொண் டிருந்தவனுக்குத் தன் பட்டத்தை வேறு இடத்தில் கொண்டுபோய் விடவேண்டும் என்று தோன்றியது. 

வெள்ளைப் பட்டம் அதன் மேல் கோபித்துக்கொண்டது. 

பிரபாகரரே, கோபித்துக் கொள்ளாதீர்கள். சுலபா மிகவும் கெட்ட பெண்! 

இந்தக் கடிதத்தின் கருத்து எனக்கு விளங்கவே இல்லை. 

மறுநாள் நான் கல்லூரிக்குப் போனபோது மாணவர்களிடையே எங்கும் ஒரே பேச்சு; ஏதோ ஒரு சம்ஸ்தானத்து யுவராஜாவுக்கும் சுலபாவுக்கும் விவாகம் நிச்சயமாகிவிட்டதாம்! 

கல்லூரியிலிருந்து அப்படியே திரும்பினேன்; சுலபாவின் வீட்டுக்குப் போனேன். 

அங்கே வாசலில் பூட்டியிருந்த பூட்டு என்னை வரவேற்றது. அவள் கல்யாணத்துக்குப் போயிருந்தாள். 


வெளியே மோட்டார் காரின் ஹார்ன் சத்தம் கேட்டதனால் நான் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். ஓர் இள நங்கை உள்ளே வந்துகொண்டிருந்தாள். திவாகரன் அவளுடன் பேச எழுந்தான். 

அவளுடைய செல்வ நிலைக்கும் அவள் அணிந்திருந்த துணிமணிகளுக்கும் சம்பந்தமே இராமற் செய்த ஒரு விஷயத்தை நான் கண்டேன். அதுதான் அவள் கண்களில் தென் பட்ட இரக்கம். “ஏதாவது தெரிந்ததா?” என்று அவள் பிரபாகரனுடைய நண்பனைக் கேட்டாள். 

அவன் இல்லை என்று தலையசைத்தான்.

கைதேர்ந்த சிற்பியொருவன் நிர்மித்த ஏமாற்றச்சிலையை யாரோ வாசற்படியண்டை வைத்திருப்பதுபோல எனக்கு ஒரு கணம் தோற்றியது. 

அவள் ஒன்றுமே பேசாமற் போய்விட்டாள். பிரபாகரனின் நண்பன் அவள் பின்னால் கார் வரையில் சென்றான். 

திரும்பி வந்ததும், மணம் வீசிய ஒரு கவரை அவன் என் முன்னால் வைத்தான். அதன்மீது, “பிரபாகரருக்கு” என்ற எழுத்துக்கள் மட்டுமே இருந்தன. மேற்புறத்துக் கோடியில் “சொந்த விஷயம்” என்று எழுதியிருந்தது. 

நான் கேள்வியைக் குறிக்கும் பார்வையோடு அவனைப் பார்த்தேன். “சுலபா!” என்றான் அவன். 

முன்னாலிருந்த அந்தக் கடிதத்தைக் கண்டு, ‘இதை உடைக்கலாமா?’ என்ற விந்தையான ஆவல் எனக்கு உண்டாயிற்று. 

பிரபாகரனுடைய மூன்றாம் நோட்டுப் புத்தகத்தை நான் இன்னும் தொடவேயில்லை; ஆதலால் அதைப் பிரித்துப் படிக்கலானேன். 


நாடகத்துக்கு மூன்றாவது அங்கம் ஆரம்பமாயிற்று.

‘சுலபா உன்னை ஏமாற்றிவிட்டாள்’ என்று ஒரு மனம் கூறும். 

மற்றொன்று, ‘அத்தையும் அம்மாவும் வற்புறுத்தும்போது அவள் என்ன செய்ய முடியும்? அடிவானத்தில் வானமும் பூமியும் சந்திப்பதுபோலத் தோற்றுகிறது அல்லவா? உங்கள் காதலும் அத்தகையதே. அடிவானம் என்பது வெறும் தோற்றம். ஆகாயத்துக்கும் பூமிக்கும் உள்ள வித்தியாசத் தைப்போல மாறுபட்ட நிலைமைகளில் இருப்பவர்களின் காத லும் இப்படித்தான் ஒரு தோற்றமாகும்; கனவாகும்’ என்றது. 

அன்றிரவு நான் சாப்பாட்டைத் தொடவேயில்லை. படுக் கையில் படுத்ததும், யாரோ என்னை அக்கினி ஜ்வாலை களிடையே இழுத்துச் செல்வதுபோலத் தோற்றியது. என் சுலபா இனி மற்றொருவனுக்கு மனைவி ஆகப்போகிறாளா? அந்த நிலவில் எந்த இதழ்கள் மீது என் இதழ்களைப் பொருத் தினேனோ அவை இனி அந்த யுவராஜாவின்- 

தவிதவித்துக்கொண்டே படுக்கையிலிருந்து குதித்து எழுந்தேன். மனத்தைச் சிறிது நேரமாவது வேறு வழியில் திருப்பலாமென்று, திவாகரனோடு சினிமாப் பார்க்கப் போனேன். அன்று ‘தேவதாஸ்’ படம் போட்டிருந்தார்கள். இரண்டு தடவை அதை ஆனந்தமாகப் பார்த்ததுண்டு. ஆனால் இன்று அதைப் பார்த்தபோது என் மனம் மிகவும் வருந்தியது. 

படத்தில் தேவதாஸின் சிதையைப் பார்க்கும்போது, ‘நாமும் சீக்கிரமே இவ்விதப் படுக்கையில் தூங்கத்தான் போகிறோம்!’ என்று தோன்றிற்று. 

வீட்டுக்கு வந்தவுடனே திவாகரன் தூங்கிவிட்டான். ஆனால் என் மனமோ, விஷம் வயிற்றில் சென்றதும் பரிதவிக் கும் மனிதனுடைய நிலையில் இருந்தது. அடிக்கடி தேவதாஸ் என் கண்முன்பு நின்றான். “முதற் காதல்தான் மனிதனுடைய உண்மையான காதல்; அது கிடைக்காவிட்டால் சாவைத் தவிர அவனுக்கு வேறு வழியே இல்லை” என்று அவன் என் னிடம் கூறிக்கொண்டிருந்தான். சந்திரா அவனை எவ்வளவு உயர்வாகவும், பலனை எதிர்பாராமலும் காதலித்திருந்தாள்! ஆனால் பாருவின்மீது அவனுக்கு இருந்த முதற் காதலின் குறையை அவளால் தீர்க்க முடியவில்லை. 

‘முறிந்த காதலால் உண்டாகும் காயத்தை எதைக் கொண்டும் ஆற்றிக்கொள்ள முடியாது என்பது உண்மை. ஆகவே இவ்விதம் பலவீனமானதும் துன்பம் நிரம்பியதுமான வாழ்க்கையைக் கழிப்பதைவிட ஒரேயடியாக நம்மை நாமே விடுவித்துக்கொள்வதில் கெடுதல் என்ன இருக்கிறது?’ என்று நினைக்கலானேன். 

தற்கொலை எண்ணத்தினால் நான் திடுக்கிட்டேன். ஆனால் எவ்விதத்திலும் அந்த எண்ணத்தை என்னால் விலக்க முடியவில்லை. 

ஏதாவது படித்தால் மனம் சற்று நிம்மதியடையுமோ என்று கருதி விளக்கை ஏற்றினேன். 

திவாகரனுடைய மேஜையருகில் சென்றபோது அவனுடைய நோட்டுப் புத்தகம் திறந்தே யிருந்தது. அவன் என்ன எழுதியிருக்கிறான் என்று பார்ப்பதற்காக, அதிலிருந்த கடைசி வாக்கியத்தைப் படித்தேன். அது கதே எழுதிய மேற் கோள். “முதற் காதல்தான் உண்மையான காதல்” என்று அதில் எழுதியிருந்தது. 

காயம் பட்ட இடத்தில் மீண்டும் ஒருவர் காயப்படுத்து வதுபோல இருந்தது அந்த வாக்கியம். 

திவாகரனுடைய மேஜையிலிருந்த புத்தகங்களைப் புரட்டினேன். அதில் ஒரு கதைத் தொகுதி இருந்தது. ‘நெருப்புடன் விளையாட்டு’ என்ற கதைப் பெயர் என் மனத்தைக் கவர்ந்தது. மிகவும் உல்லாசத்துடன் அந்தக் கதையைப் படிக்கலானேன். 

ஆனால் அதைப் படித்து முடித்ததுமே என் இருதயப் புண்ணிலிருந்து மளமளவென்று ரத்தம் பெருக ஆரம்பித்தது. அந்தக் கதாசிரியரும் இந்தக் கசப்பான உண்மையைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார். ஓர் இளநங்கை ஓர் இளைஞனை விளையாட வைத்தாள். முதற் காதல் முறிந்த கணத்திலேயே அவன் ஏமாற்றமுற்றுக் கல்லூரியை விட்டுவிட்டான். 

விளக்கை அணைத்துவிட்டு நான் படுக்கையில் போய்ப் படுத்தேன். யாரோ ஓயாமல் என் மண்டையில் அறைவது போல இருந்தது. இம்மாதிரியான வேதனைகளை வாழ்நாள் முழுவதும் பொறுத்துக் கொண்டிருப்பதைவிட- 

வெள்ளம் பொங்கியோடும் பஞ்ச கங்கை – ரெயில் தண்ட வாளம் – கிராமாந்தரங்களில் அசட்டையாக ஓடும் பஸ்கள் – தாம்புக்கயிற்றின் வளையம் – அபின் – பொட்டாஷியம்- 

ஆனால் கோல்ஹாபூரில் தற்கொலை செய்துகொள்வதனால் பயனில்லை. வீண் களேபரமாகி, சுலபாவுக்கும் கெட்ட பெயர் உண்டாகும். 

நம் இருதயத்தில் எரிமலை ஜ்வாலை விடுவதை இரண்டு மூன்று நாளைக்கு யாரிடமும் சொல்லாமல் இருப்பது – இங்குள்ள வேலைகளை முடித்துக்கொள்வது-அப்பாவுக்குக் கடைசிக் கடிதம் எழுதுவது. கடைசியில் ஒரு நாளிரவு யாருக்கும் சொல்லாமல். 

வெளியில் யாரோ வரும் காலடிச் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். 

“சாப்பாடு கொண்டுவரும் பையனாக இருப்பான்!” என்றான் திவாகரன். 

அதற்குள் வாசற்படியில் ஒரு மனிதனுடைய நிழல் தெரிந்தது. உடனே அவன் அருகில் வந்தான். அவனைப் பார்த்ததும் திகைத்துப் போனேன். 

ஆனால், அவன் சொன்ன செய்தியைக் கேட்டு உண்டான ஆச்சரியத்துக்கு முன்பு அவனைப் பார்த்ததனால் உண்டான ஆச்சரியம் ஒன்றுமே இல்லை என்று சொல்லலாம். அவன் சொன்ன செய்தி இதுதான்: “எந்தப் பெண்மணியின் கதையைக் கேட்பதற்காக உங்களைப் பட்டருடைய கிராமத்துக்கு, அழைத்துச் சென்றிருந்தேனோ அவள் இன்று இவ்வூருக்கு வந்திருக்கிறாள். நாம் அந்தக் கிராமத்துக்குப் போயிருந்த அன்றிரவு பத்து மணிக்கு அவள் ஆற்றங்கரைக்குச் சென்றவள் திரும்பி வரவேயில்லை. ஊர் முழுவதும் தேடினேன். அக்கம் பக்கத்து நாலைந்து கிராமங்களிலும் விசாரித்தேன்; அவள் போன இடத்தைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. 

“அவள் உயிர் விட்டிருப்பாள் என்று நினைத்து ஏமாற்றம் கொண்டிருந்தேன். அதற்குள் எனக்கு ஒரு புது யோசனை தோன்றிற்று.அநாதைப் பெண்களையும் சாதுவான ஸ்திரீகளையும் இனிமையாகப் பேசி ஏமாற்றி அவர்களை வெகு தூரத்திலுள்ள ஊர்களுக்கு இழுத்துச் சென்று வேசிகளென்று கூறி விலைக்கு விற்றுவிடும் ராக்ஷஸனொருவன் அன்று அந்தக் கிராமத்துக்கு வந்திருந்தான். பத்து மணிக்கு அவன் ஆற்றங்கரையோரமாகப் போய்க் கொண்டிருந்ததை இரண்டொருவர் பார்த்ததாகவும் சொன்னார்கள். எனக்கு அந்த ராக்ஷஸனை மிகவும் நன்றாகத் தெரியும். உங்கள் ஊர்தான் சமீபத்திலுள்ள பட்டணமாகையால் அவன் அங்கேதான் சென்றிருக்க வேண்டுமென்று ஓடினேன். அவனைப்பற்றி எங்கும் விசாரித்தேன். இரண்டு பெண்மணிகளை இழுத்துக் கொண்டு அவன் கோல்ஹாபூருக்குப் போயிருப்பதாக வெகு சிரமப்பட்டு அறிந்து கொண்டேன். ‘இவ்விஷயத்தில் இனி என்ன செய்வது?’ என்பதைக் கேட்பதற்காக உங்கள் வீட்டுக்குப் போனேன். நீங்கள் இங்கே கோல்ஹாபூருக்கு வந்துவிட்டதை அறிந்ததுமே என் தைரியம் போய்விட்டது. ஆனால் உடனே, ‘வக்கீல் ஐயா அங்கே போயிருப்பதும் நல்லதுதான். அங்கே அவளைத் தேடிக் கண்டு பிடிக்க வசதியாக இருக்கும்’ என்று நினைத்து, அவசர அவசரமாக உங்கள் முகவரியைக் குமாஸ்தாவிடமிருந்து குறித்துக் கொண்டு எப்படியோ கடைசிப் பஸ்ஸில் ஏறி வந்துவிட்டேன்” என்றான் சகாராமன். 

நான் அந்தப் பெண்மணியின் அடையாளங்களைக் கேட்டேன். 

பஸ்ஸில் என் முன்னால் உட்கார்ந்திருந்த பொய்யான அந்த இரு சகோதரிகளில் ஒருத்திதான் சகாராமனுக்கு வேண்டியவள் என்பதில் எனக்குச் சந்தேகமே இருக்கவில்லை. 

ஆனால் இனி அவளை எங்கே தேடுவது? அவளோடு வந்த ஸ்திரீகளை அடிமைகளாக விற்கும் அந்த வியாபாரி நரஸோபா தோட்டத்துக்கு அல்லவா போவதாகச் சொன்னான்? அது ஒரு வேளை பொய்யாக இருக்குமோ, அல்லது-? 

அப்படியானால் அந்த மற்றொரு பெண்மணி யார்? எந்த ஊரைச் சேர்ந்தவள்? 

அவள் உருவம் என் கண்முன்னால் நின்றது. இரக்கம் ததும்பும் அந்தக் கண்கள்! அந்தப் படுபாவி அவளை எங்காவது விற்றுவிடுவானே! 

நான் பிரபாகரனைத் தேடுவதற்காகக் கோல்ஹாபூருக்கு வந்தேன் என்பது உண்மையே; ஆனால் இப்போது அந்தப் பெண்ணைத் தேடுவதும் அதைப் போலவே அவசியமாயிற்று. 

ஆனால் அவளை எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது? அவள் பெயர், ஊர் ஒன்றுமே எனக்குத் தெரியாதே! 

– தொடரும்…

– புயலும் படகும், கதை மூலம்: வி.ஸ.காண்டேகர், தமிழாக்கம்: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: டிசம்பர் 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.

கா.ஸ்ரீ.ஸ்ரீ. கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *