புதிய வாசல்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 5, 2026
பார்வையிட்டோர்: 80 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘என்னங்க நான் பக்கத்து வீட்டு ஜமீலாவோட புதுத்தெரு பாத்திமா வீட்டுக்கு போய்ட்டு வர்றேன், சபீனா உரிமையுடன் கணவன் மாலிக்கிடம் அனுமதி கோரினாள்.

‘அதெல்லாம் நீ போகக்கூடாது, பேசாம வீட்டிலேயே இரு!’ காரணமில்லாமல் தடை போட்டான் மாலிக்.

அவர்களுக்கு திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் பூரண மனம் ஒத்த வாழ்க்கை வாழ்ந்ததில்லை.

எல்லாவற்றிற்கும் காரணம் மாலிக்காகவே இருந்தான். தான் வைத்தது தான் சட்டம் என்ற ரீதியில் மற்றவர்களிடம் நடந்து கொள்வான். அதை சபீனா மீதும் பிரயோகப்படுத்தத் தவறவில்லை.

சபீனா எந்தவொரு கருத்தும், யோசனையும் சொன்னாலும் அதையெல்லாம் அவன் புறக்கணித்து விடுவான். தன் மனம் போன போக்கில் என்ன தோன்றுகிறதோ, அதைத் தான் சரியென அவன் செய்து விடுவான்.

கணவனின் குணம் தெரிந்து எல்லாவற்றையும் பொறுத்து, ஒறுத்து வாழ்ந்து கொண்டிருந்தாள் சபீனா.

இவ்வாறு ஒத்த இயல்பில்லாமல் இருப்பது, தனிக்குடித்தனம் வந்துவிட்ட அவர்கள் இருவரையும் சிறிதளவு பாதிக்கத் தான் செய்தது.

‘என்னங்க நம்ம குடும்ப வருமானம் ரொம்பவும் குறைஞ்சு போய்ட்டதாலே ஏதாவது வியாபாரம் செய்தீங்கன்னா கொஞ்சம் நல்லா பவ்யமாக மாலிக்கிடம் இருக்கும்!’ சபீனா சொன்னாள்.

‘அதெல்லாம் எனக்குத் தெரியும். நீ ஒண்ணும் சொல்லத் தேவையில்லை. நான் என்ன செய்யறேன்னு பார்த்துக்கிட்டு இரு, அதுபோதும்!’ காரணமில்லாமல் சபீனா மீது எரிந்து விழுந்தான் மாலிக்.

கணவனை விடுவதாக இல்லை. சபீனா திரும்ப திரும்ப கேட்டதும், மாலிக் விஷயத்தை சொன்னான்.

‘சபீனா, நான் நம்ம ஜப்பாரோட சேர்ந்து கூட்டு வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன். அதுக்கு நீ கொஞ்சம் உன் நகையை தந்தீன்னா அதை அடைமானம் வெச்சோ, விற்றோ பணம் புரட்டி வியாபாரத்தை தொடங்கலாம்னு யோசனை வந்திருக்கு. நீ என்ன சொல்றே?’ என மாலிக் விளம்பினான்.

‘நீங்க வியாபாரம் பண்ணப் போறது சரிதாங்க, ஆனா கூட்டு வியாபாரம் வேணாம். அதிலும் அந்த ஜப்பார் அத்தனை உண்மையானவரில்லை. நான் அவரைப்பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். அதனால நீங்க தனியா வியாபாரம் பண்ணுங்க, அதுதான் நமக்கு ரொம்ப நல்லது!’ சபீனா சொல்லி முடித்தாள்.

‘எனக்கு அப்பவே தெரியும். நான் இந்தத் திட்டத்தை சொன்னா அதுக்கு நீ ஏதாவது தடை சொல்லுவேன்னு, நான் உங்கிட்டே சொன்னதே தப்பு. பேசாம நகையெ மட்டும் கொடுன்னு வாங்கிட்டுப் போயிருக்கணும்’ பொரிந்து தள்ளினான் மாலிக்.

‘இல்லேங்க, நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க ஜப்பார் அத்தனை நல்லவர் இல்லேங்கிறதுனாலேதான் சொல்ல வர்றேன் கூட்டு வேணாம்னு!’

‘யார் நல்லவங்க. கெட்டவங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும். நீ சொல்லி நான் கேட்கணுங்கிற அவசியம் இல்லே! பேசாம நான் சொல்றதே செய்!’ ஆக்ரோஷமாகக் கத்தினான் மாலிக்.

எவ்வளவோ கணவனிடம் மன்றாடிப் பார்த்து அதில் தோல்வியே கண்டாள் சபீனா.

வேறு வழியில்லாமல் கையில் கிடந்த இரண்டு ஜோடி வளையல்களை மாலிக்கிடம் கழற்றிக் கொடுத்தாள் சபீனா.

வளையல்களை வாங்கிச் சென்ற மாலிக், அதை விற்று விட்டு பணம் புரட்டி தன் இஷ்டம் போல் ஜப்பாரையும் கூட்டு சேர்த்துக் கொண்டு வியாபாரத்தைத் தொடங்கி நடத்தினான்.

மாதங்கள் ஓடிப் போய் அரை ஆண்டைத் தொட்டது. மாலிக் வியாபாரக் கணக்கை அப்போது சரி செய்த போது, அதில் ரூபாய் இரண்டாயிரம் குறைவதைக் கண்டு திடுக்கிட்டான்.

ஜப்பாரிடம் குறையும் அந்த ரூபாய் இரண்டாயிரத்தைப் பற்றி கேட்டபோது, அதற்கு ஜப்பார் அதைப் பற்றித் தனக்குத் தெரியாது என கூறிவிட்டான்.

கவலையோடு வீட்டுக்கு வந்த மாலிக்கிடம் ‘என்னங்க இன்னிக்கு ஏன் ரொம்ப முகவாட்டத்தோட வர்றீங்க?’ சபீனா கேட்டாள்.

‘நான் மோசம் போய்ட்டேன் சபீனா, மோசம் போய்ட்டேன். உன் பேச்சைக் கேட்காம நான் வியாபாரம் தொடங்கியதாலே, நீ நினைச்ச மாதிரியே அந்த ஜப்பார் ரெண்டாயிரத்தை களவாடிட்டான். என்னை மன்னிச்சுடு!’ மாலிக் தேம்பி அழ ஆரம்பித்து விட்டான்.

‘என்னங்க இதுக்குப் போய் சின்னக் குழந்தை மாதிரி அழுதுகிட்டு, போனா போகட்டும் விடுங்க. அல்லாஹ் நமக்கு நல்ல வழி காமிப்பான்.’ சபீனா தேறுதல் சொன்னாள்.

சபீனாவின் உயர்ந்த குணத்தைக் கண்டு மிகவும் நெகிழ்ந்து போன மாலிக், அதிலிருந்து எதையும் சபீனாவின் யோசனைகளைக் கேட்டு கலந்து பேசி முடிவு செய்தான். அவனது குணங்களும் மிகவும் இனிய இயல்புடையதாக மாறிவிட்டது!

அதோ அவர்களுக்கு புதிய வாசல் தெரிகிறது!

– நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள்!, முதற் பதிப்பு: 2005, மல்டி ஆர்ட்ஸ் கிரேஷன்ஸ், சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *