புதிய தரிசனங்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினக்குரல்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 4, 2025
பார்வையிட்டோர்: 1,170 
 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆலய முன்றிலை ஆக்கிரமித்திருந்த வெண்மணலில் அடிபதித்தவாறே அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தான் சீலன். வெந்நீரின் வெப்பநிலையில் மணல் கொதித்துக் கொண்டிருந்தது. சொந்த மண்ணில் நிற்பதில் நிறைந்த இனம் புரியாத அமைதியில் அவனுக்குப் பாதச் சூடும் பரவசமாயிற்று. 

கடந்த இருபது வருடங்களில் ஆலய சூழலில் நிகழ்ந்த மாறுதல்களை இனங்காண்பதில் சீலனின் ஐம்புலன்களும் மூழ்கிற்று. 

கலிபோனியக் கட்டடங்களுக்கு ஈடாக கம்பீரமாக உயர்ந்து நிற்கும் ராஜகோபுரம், கோவிலின் கிழக்கே உற்சவ காலங்களில் பாத்திரக் கடைகள், வளையல் கடைகளின் ‘கொம்பிளெக்ஸ்’ ஆகத்திகழும் கொன்றை மரங்கள் நின்ற இடத்தே; அவற்றினையே ‘பங்கர்’ அரண்களாக்கி அடாவடித்தனமாய் அமைந்து தற்போது அழிந்து போகும் நிலையில் ஒரு ‘சென்ரி’. அதற்கும் அப்பால் வந்த அகதிகளைத் தங்க வைத்து வழியனுப்பி வைத்துவிட்டு வரும் அகதிகளைக் காத்திருக்குமாப் போல இரண்டோ, மூன்றோ அன்னதான மடங்கள். மட ங்களின் எல்லைகளில் தொடங்கினால் மூன்று, நான்கு கிலோமீற்றர் தூரத்திற்கு ஒரே நாவல் காடு. அதன்பின்னரே ஊர்மனைகள் தலைகாட்டும். 

மேற்கே கம்பிவேலிக்கு மறுபுறமாய் பக்தர்களின் சைக்கிள்களும் சாலிகளும் அவர்களின் வரவுக்காய் தவமியற்றிற்று. கம்பி வேலியில் தளைத்திருந்த பூவரசில் சாய்ப்பு இறக்கி அதன் கீழிருந்து ஓர் சிலர் கச்சான் கடை விரித்திருந்தார்கள். ஆசை காட்டியவாறே அதன் அருகே ஐஸ்கிறீம் வானொன்று கோணலாக நின்றது. கம்பிவேலிக்கு மேற்காக மயான பூமி வரை ஓவென்று ஒரே மணல் காடு. இடையிடையே யார் உயரம் எனப் போட்டி போட்டுக் கொண்டு காற்றிற்கு திசை கூறியபடி சவுக்கு மரங்கள். 

கம்பி வேலியோரமாக குண்டு குண்டாக நாவல் பழங்களைச் சுமந்துகொண்டு ஒன்றுக்கொன்று கதை பேசியபடி ஐந்தாறு நாவல் மரங்கள் நின்றதும்; அட்வான்ஸ் லெவல் படித்த நாட்களில் ஒரு நாள் நாலைந்து கிலோ மீற்றர்களுக்கு அப்பாலிருக்கும் கல்லூரியில் இருந்து நண்பர்களுடன் கூட்டாகச்சைக்கிளில் சுற்றுலா வந்து அதில் நின்ற நாவல் மரம் ஒன்றின் கீழ் தரித்து நின்றபோது, வீட்டுக்குத் தெரியாமல் கொம்பாஸ் பெட்டிக்குள் மறைத்து வைத்துக் கொண்டு வந்த அப்புவின் கோடாச் சுருட்டை கட்டை ரவி பற்ற வைத்து பின் சத்தி சத்தியாய் எடுத்து மயங்கி விழுந்ததும், அந்தச் சம்பவம் சடையப்பனால் செய்தியாக்கப்பட்டதில் அடுத்த நாள் கட்டை ரவிக்கு வீட்டில் நல்ல சாத்துப்படி கிடைத்ததும் அச்சம்பவத்தின் பின்னர் சடையப்பன் ‘றிப்போட்டர்’ என சில காலங்கள் அழைக்கப்பட்டதும் கூடவே சீலனின் நினைவில் மின்னிற்று. 

வடமேற்குத் திசையில் கிடுகினால் வரியப்பட்ட தேர்முட்டி, அடியில் இரண்டு வரிசைக்கு தகரமும் கட்டியிருந்தார்கள். இரண்டு தடவைகள் சித்திரத் தேருடன் எரிக்கப்பட்டாலும் ‘வெளிநாட்டுப் பக்தர்கள் இருக்கப் பயம் ஏன்?’ என்று கேட்பதைப் போல வானளாவி நின்றது. அதற்கு முண்டு கொடுத்தவாறே அமைந்த படிக்கட்டு விளிம்பில் சில சிறுவர்கள் மேலிருந்து கீழ் நோக்கி சறுக்கீஸ் விட்டவண்ணமிருந்தனர். இளமைக் கால நினைவை மீட்டும் அக்காட்சியை தனது டிஜிரல் கமராவிற்குள் சிறைப்படுத்த எண்ணியவனாக கண்ணில் வைத்து கமராவை சீலன் ஒழுங்கு செய்தான். 

மங்கிய விம்பங்கள் தெளிவானபோது தன்னை நோக்கி நகரும் அந்த உருவத்தில் சீலனின் கவனம் தரித்திற்று. 

“அது தவத்தானெல்லோ?” 

கண்ணிலிருந்து கமராவை சட்டென்று அகற்றிய சீலன் சத்தமாகக் கூப்பிட்டான். 

“டேய் தவத்தான்.”

கையில் சேர்ட்டையும் கழுத்தில் சங்கிலியையும் தொங்கப் போட்டுக் கொண்டு “சிவனே” என்று வந்து கொண்டிருந்த தவம் மாஸ்டர் “டேய்” போட்டு தன்னை யாரோ அழைப்பது கேட்டு அதிர்ந்துதான் போனார். 

அண்மைக் காலத்தில் கெமிஸ்றிப் பாடத்தில் தன்னிடம் முறையாக வாங்கிக் கட்டிக்கொண்ட மாணவன் யாரோதான் தேர்முட்டிக்குப் பின்னால் ஒளித்து நின்று பழிவாங்கும் படலத்தில் இறங்கி உள்ளான் என்று நினைத்தவராக சந்திர மண்டலத்தில் நடப்பவனைப் போல் மிதந்து கோயில் வாசலை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். 

“டேய் தவத்தான்.” 

மீண்டும் அதே குரல் மிக அண்மையில் அட்டகாசமாக ஒலித்தபோதுதான் தவம் மாஸ்டருக்கு அந்த அசாத்திய துணிவு வந்தது. 

‘ஒருக்கால் திரும்பிப் பார்த்தால் என்ன? உயிரா போகப் போகுது?’ 

மாஸ்டர் திரும்புவதற்கிடையில் சீலன் அருகில் வந்து விட்டான்.சீலனை இனங்கண்டதும் சிறுபிள்ளையாய் துள்ளிக் குதித்தார் தவம் மாஸ்டர். 

“அடே சீலன்…” 

“என்னடாப்பா… கூப்பிடக் கூப்பிட பாராமல் போறாய்?” 

“நான் கொஞ்சமும் எதிர்பார்க்கேலை மச்சான். மாஸ்டர், சேர் எண்டு கேட்டுக் கேட்டுப் பழகிப் போனதிலை சொந்தப் பெயரையே மறந்த நிலை. அதுவுமில்லாமல் இப்பிடி உரிமையோடை கூப்பிடுறதுக்கு இப்ப ஊரிலை ஆர் இருக்கிறாங்கள் எண்டு நினைச்சன். அது சரி, திடீரெண்டு இப்ப என்ன இஞ்சாலை காத்தடிச்சிருக்கு? இப்ப எந்த நாட்டிலையடாப்பா இருக்கிறாய்?”

இருவரையும் இடித்துக் கொண்டும் இடையாலும் சனங்கள் கோயிலுக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது தான் வாசலில் தாம் தடையாக நிற்பதை அவர்கள் உணர்ந்தார்கள். 

“இஞ்சாலை ஓரமா வா மச்சான் கதைப்பம். சவுதி, லண்டன் எண்டு திரிஞ்சு இப்ப ஸ்ரேற்றிலை செற்றிலாகி இருக்கிறன். ” 

“உடம்பு கொஞ்சம் ஊதி, சொக்கும் வைச்சிருக்கே தவிர மற்றபடி நீ அப்ப பார்த்த மாதிரியே இருக்கிறாய் சீலன்”- தவத்தானின் கூற்றில் ஓர் வித அங்கலாய்ப்புத் தெரிந்தது. 

சீலன் தவத்தானின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். கடந்த காலங்கள் அவன் முகத்தில் வரைந்திருந்த கோலங்கள் மனதை உறுத்திற்று. 

தவத்தானை அணைத்தவாறே அருகிருந்த மரத்தடிக்கு அழைத்துச் சென்றான் சீலன். நூறு, இரு நூறு மீற்றர் ஓட்டப் போட்டிகளில் முதலாவதாக வந்த தவத்தானை தோளில் தாங்கியவாறே தமது இல்லக் கொடியைத் தூக்கியவாறே கல்லூரி விளையாட்டு மைதானத்தை வலம் வந்த அந்த நாட்கள் சீலனின் மனத்திரையில் பின்நோக்கி ஓடின. 

“உன்னைப் பற்றி கொஞ்சம் சொல்லு மச்சான்…” தவத்தானின் வாழ்வியல் பற்றி அறிவதில் சீலன் இப்போ ஆர்வங் காட்டினான். 

மனைவி பயிற்றப்பட்ட சங்கீத ஆசிரியை. பத்திலும் எட்டிலுமாக பிள்ளைகள் இருவர். படித்த கல்லூரியிலேயே இப்போ இவன் விஞ்ஞான ஆசிரியர். 

“படிச்ச பள்ளிக்கூடத்திலேயே படிப்பிக்கிற தெண்டுறது உண்மையிலை பெரிய விசயம் மச்சான். அந்த அசெம்பிளி ஹோல், லாப்புகள், லைபிறறி, ஜிம்னீசியம், மார்க்கு மாஸ்டரின்ரை ஆட்றூம்… நாங்கள் படிச்ச கொலிச்சை சுத்திப் பார்க்க வேணும் போலை கிடக்கு மச்சான். இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே? பின்னேரம் உனக்கு நேரம் இருக்குமே?” மிகுந்த ஆர்வத்துடனும் கொஞ்சம் தயக்கத்துடனும் சீலன் கேட்டான். 

“சீலன்… நீ எதிர்பார்க்கிற கோலத்திலை எங்கடை கொலிச் இப்ப இல்லை. கிறவுண்ஸ், கொஸ்ரல் பக்கம் அறவே போகேலாது. கொலிச்சுக்கும் வெளியாக்கள் போறதெண்டால் எழுபத்திரண்டு மணித்தியாலத்திற்கு முன்பே பெமிசன் எடுத்திருக்க வேணும். ஏனெண்டால் இப்ப அந்த ஏரியாவை அதி உயர் பாதுகாப்பு வலையமாக்கி இருக்கினம்.” 

“அப்ப இந்த முறை அது சரிப்பட்டு வராது’ சீலனின் முகம் ஆர்வத்திலிருந்து ஏமாற்ற பாவத்திற்கு மாறியது. 

“அது சரி உன்ரை குடும்பத்தைப் பற்றி சொல்லன் சீலன்.”

எஞ்சினியரிங் லீட் பதவி. கலிபோர்னியா கம்பியூட்டர் கம்பனியொன்றிற்காக வேலை. ஒன்லி சண். பன்னிரு வயது நிரம்பிய அவனுக்கு எப்படியும் தமிழை எழுதப் படிக்க கற்பித்தே தீருவேன் என்ற சபதத்தை நிறைவேற்ற அல்லும் பக்கலும் அல்லாடும் மனைவி. 

அம்மாவும் தனது இறுதிக் காலத்தில் ஊரிலுள்ள தெய்வங்களின் பெயரை எல்லாம் சொல்லிக்கொண்டு சீலனுடன்தான் இருந்தா. சொந்த மண்ணிலேயே வேக வேண்டும் என்ற தனது இறுதி ஆசையை நிராசையாக்கி விட்டு சென்ற வருட வின்ரரில் ஒரு இரவு நித்திரையிலேயே போய்விட்டாள். 

“அம்மாவின்ரை நினைவா அவ கும்பிட்ட கோயில் குளமெல்லாம் போய், தான தர்மஞ் செய்யிறதுக்காகத் தான் இப்ப வந்திருக்கிறன்..” செல்லிடத் தொலைபேசியில் ஏதாவது தொலைபேசி அழைப்புகள் வந்திருக்கிறதா என்பதை ‘செக்’ பண்ணியவாறே சீலன் கூறிக் கொண்டிருந்தான். 

“அப்ப பமிலி?” 

“எல்லாக் கோயிலுக்கும் வந்ததுகள். நாளைக்கு கொழும்பு திரும்பவேணுமெண்டதிலை இண்டைக்கு விசிற்றேஸ் அது இது எண்டு வீட்டிலை ஏகப்பட்ட பிசி. அதனாலை நான் மட்டும் மாயவனைக் கும்பிட்டுட்டுப் போவமெண்டு வந்தன்.” 

“கட்டை ரவி, சடையப்பன், முத்துலிங்கன், மூத்தண்ணன் எண்டு எங்கடை பொடியள் எல்லாம் எப்பிடியிருக்கிறாங்கள்?” 

“அதை ஏன் மச்சான் பேசுவான்? இப்ப பொடியளின்ரை படிப்போடை எல்லாரும் பிசி. முந்தி இஞ்சை நாங்கள் கொலிச்சுக்கு என்ர பண்ண போட்டி போட்டுப் படிச்சது போலை, இப்ப அவங்கள் அங்கை பொடியளை கிறமர் ஸ்கூலுக்கு அனுப்புறதுக்கு போட்டுத் திணிக்கிறாங்கள். ரியூசன் அது இதுக்கெண்டு காசைக் கொட்டுறாங்கள். இனி ஈரோப்பியன் கன்றியிலை இருக்கிறவைக்கு தங்கடை பிள்ளையள் இங்கிலீசை படிக்கேல்லை எண்ட கவலை. ஆளையாள் சந்திச்சாலும் நீ பொடியனை எங்கை ரியூசனுக்கு விடுகிறாய் எண்டதுதான் முதல் கேள்வி. சோட்டச் சொல்லுறதெண்டால் நாப்பத்தைஞ்சு வயசு முடிஞ்சாலும் இன்னமும் அண்ட நயின்ரீன் மென்ராலிற்றியிலைதான் அங்கை எல்லாரும் இருக்கிறாங்கள்”. 

“மகனுக்கு யாழ்ப்பாணம் பிடிச்சுதோ?” 

“நான் பிறந்து வளர்ந்த இடத்தை அவனுக்கும் தரிசிக்கவேணுமெண்டதிலைதான் கூட்டிக்கொண்டு வந்தனான். பனங்கூடல்களைக் காணக்காண அவனுக்கு ‘சேப்பிறைஸ்’ ஆக இருக்கு. கோயில்களிலை கேணியளைப் பார்த்ததும் ‘ஸ்ற் சுவீமிங் பூல்?” எண்டு கேக்கிறான், என்ன ரடி உங்கடை ஊரிலை எல்லாருமே ‘ரமில் ஸ்பீக்கிங் பீப்பிளா’ இருக்கு எண்டும் பெரும்பாலும் எல்லாரும் ஒரேமாதிரியா ட்றெஸ் பண்ணியினம் எண்டும் விப்படைகிறான். ஊர்த் தண்ணியை வாயிலும் வைக்கிறான் இல்லை மச்சான். ஒரு நாளைக்கு மூண்டு நாலு போத்தல் மினரல் வாட்டர் வாங்க வேண்டியிருக்கு!” 

“அப்ப எப்ப இனி அமெரிக்கா பயணம்?” 

“கொழும்புக்கு போனபிறகுதான் பிளையிட் கொன்வோம் பண்ணவேணும். எப்பிடியும் மூண்டு நாலு நாளைக்கிடையிலை போயிடுவம்.” 

கனத்த சத்தத்துடன் கோயில் மணி ஒலித்தது. உள், வீதியில் சப்பாணி கொட்டி இருந்தவர்கள் ‘மாயவா, மாயவா’ என்றவாறே எழுந்து வரிசையாய் நிற்பது தெரிந்தது. 

“சீலன் பூசைக்கு நேரமாகுது. உள்ளை போவமோ?”- கையில் தொங்கப் போட்டிருந்த சேர்ட்டை இடுப்பில் வரிந்தவாறே தவம் மாஸ்டர் கேட்டார். 

“நான் அர்ச்சனை எல்லாம் முடிச்சுக் கொண்டு தான் மச்சான் வெளியிலை வந்து நிக்கிறன். நீ போய்க் கும்பிட்டுக் கொண்டு வா! பொறு மச்சான்… உன்ரை பிள்ளையளுக்கு என்ரை அன்பளிப்பா ஏதாவது வாங்கிக் குடு!” என்றவாறே தனது கைப்பையினைத் திறந்து இரண்டு பச்சை மயில்த் தாள்களை உருவி எடுத்தான் சீலன். 

“வேண்டாம் சீலன்… உன்னைக் கண்டு கதைச்சதே பெரிய தரிசனம் கிடைச்சது மாதிரி மச்சான். உண்மையிலை பால்ய சிநேகிதனை சந்திக்கிறதிலை இருக்கிற சந்தோஷமும் நிம்மதியும் வேறை எதிலையுமே இல்லை சீலன். அது ஒரு தனி உலகம்.” தவம் மாஸ்டரின் முகம் பூரித்திருந்தது. 

டொலர் கணக்கில் கைமாற்று வாங்கி பத்து வருடங்கட்கு மேலாகியும் சகுந்தலையைப் பிரிந்த துஷ்யந்தன் நிலையில் இருக்கும் வெளிநாட்டு நண்பர்கள் சிலரின் நினைவு தவிர்க்க முடியாமல் சீலனின் மனதில் தோன்றிற்று. 

எடுத்த பணத்தை மீண்டும் கைப்பையினுள் வைத்தவாறே ராஜகோபுரத்தினூடே கம்பீரமாக ஆலயத்துட் புகும் தவத்தானைப் பார்த்தவண்ணம் நின்ற சீலன், தன்னைக் கடந்து பொங்கல் பானையைப் பின் கரியரில் கட்டியவாறே சைக்கிளை உருட்டிச் செல்லும் நடுத்தர வயதைக் கடந்த மெலிந்த உயரமான ஒருவரின் இருமல் சத்தத்தில் நினைவு திரும்பினான். பொங்கல் பானையின் பாரத்தில் அதை உருட்டிச் செல்பவர் ‘பலன்ஸ்’ தவறி கவிழவிட்டுவிடுவாரோ என சீலன் பயந்து கொண்டிருந்தான். கரியரைப் பிடித்தவாறே வேறும் இரு பெடியன்கள் போய்க் கொண்டிருந்தது நிம்மதி தந்தது. 

தேர் முட்டியடிப் பக்கமாக சனங்கள் சிலர் அமர்ந்திருப்பது தெரிந்தது. அவர்கள் இரப்போரோ அல்லது இடம் பெயர்ந்து வந்தோரோ என்பதை அறுதியிட்டுக் கூறமுடியாதிருந்தது. பெண்களே பெருமளவில் இருந்தார்கள். முகத்தில் சோகத்தையும் கைகளில் குழந்தைகளையும் சுமந்தபடி, இப் பெண்களின் கணவன்மார் கடலிற்கு தொழில் செய்யச் சென்ற இடத்தில் கைது செய்யப்பட்டிருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம். 

கமராவையும் கைப்பையையும் தோளில் கொழுவியவாறே அவர்களை நோக்கிச் சென்றான் சீலன். வடக்குத் தெற்காக சுமார் ஐம்பது அறுபது பேர்வரை அதில் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். 

பெரும்பாலானோர் முன்றிலில் மூடல் ஒன்று தவங்கிடந்தது, சிலரது முன்னால் புதிய பிளாஸ்டிக் பேசினும் இருந்தது. பொங்கலும், பழங்களும் அவற்றுள் இருந்தன. அதனிடையே ஒளித்துக்கொண்டு நாணயங்களும் பாத்திரங்களின் அடியில் கிடந்தன. 

கைப்பையினைத் திறந்து அதற்குள் தயாராயிருந்த இருபது ரூபா கட்டினை எடுத்து ஒவ்வொரு ஒவ்வொரு தாளாகத் தெற்கிலிருந்து வடக்காக அணிவகுத்த வண்ணமிருந்த பாத்திரங்களில் போட்டுக்கொண்டு வந்தான் சீலன். 

இடையில் ஓரிடத்தில் பாத்திரம் மட்டுமே இருக்க, உரியவர் இடத்தினைப் பொட்டளி ஒன்று இடம் பிடித்திருந்தது. 

“இதிலை ஆரும் இருக்கினமோ?” 

“ஓம் ஐயா, ஒரு ஆச்சி இருக்கிறதா, வெளிக்குப் போட்டு வாறனெண்டுட்டு இப்பத்தான் ஐயா எழும்பி உதிலை போறா.” 

“சரி… இந்தக் காசை ஒருக்கா அவவிட்டைக் குடுங்கோ!” அருகிலிருந்த கைக்குழந்தைக்காரியிடம் சீலன் தாளை நீட்டினான். 

தானம் முடிந்ததும் எஞ்சிய பணத்தினைக் கைப்பையினுள் வைத்துக்கொண்டே சீலன் நீண்டிருந்த வரிசையை ஓர் கணம் நோட்டம் விட்டான். 

சகலரது முகங்களும் பிரகாசத்தால் மின்னிற்று. கோயில் வாசலை நோக்கி நடந்து கொண்டிருந்தான் சீலன். பொங்கல் மடத்துள் இன்னமும் புகை மண்டிச் சுழன்று கொண்டிருப்பது தெரிந்தது. 

அங்கப் பிரதட்சணையை முடித்த பருத்த உடம்புடன் கூடிய வாலிபன் ஒருவன் எழுந்து வந்து உடலில் ஒட்டியிருந்த மணல்கள் உதிரும்படியாய் தேங்காயை மாயவன் சந்நிதானத்தில் ஓங்கி அடித்தான். 

“மாயவனுக்கு அரோகரா! 
மாயக் கண்ணனுக்கு அரோகரா!” 

எனக் கூடவே நின்ற பெண், மனைவியாக இருக்கலாம், உருவராத குறையாக உரத்துச் சத்தமிட்டாள். 

மடப்பகுதியிலிருந்து நாரிப்பிரிப்புடன் கூடிய மூதாட்டி ஒருத்தி தன்னை நோக்கிக் கையினை நீட்டியவாறே வருவதைக் கண்ட சீலன் தாளொன்றை எடுத்து நீட்டினான். 

பணத்தைப் பெற்ற அம்மூதாட்டி நிமிர்ந்து சீலனைக் கனிவுடன் பார்த்தாள். பின் நாரியை சவிட்டியவாறே தாண்டித் தாண்டி தேர்முட்டிப் பக்கமாகச் சென்று கொண்டிருந்தாள். 

பூசை முடிந்து ஒருகையில் நீறும் மலர்களும் மறுகையில் சேர்ட்டுமாக ஆண்களும், ‘அப்பனே… மாயவா!’ எனப் பக்திப் பரவசத்தில் கைகளை நீட்டியபடியே ராஜகோபுரத்தை அண்ணாந்து பார்த்தபடியே பெண்களுமாக பக்தர்கள் நாமப் பொட்டு நெற்றியில் பளபளக்க ஆலயத்தை விட்டு வெளியேறிய வண்ணம் இருந்தனர். ரவுணுக்குச் செல்லும் ‘ஒண்டு பத்து’ பஸ்ஸைப் பிடித்துவிடவேண்டுமென்ற அவசரம் அவர்களில் தெரிந்தது. 

வீடு செல்வதற்கு நாவற்காடுகளையெல்லாம் தாண்டி இன்னும் நான்கு கிலோமீற்றர்கள் ஆட்டோவில் பயணம் செய்யவேண்டுமே என்ற எண்ணம் மேலிடவே, ஆலய இறுதித் தரிசனத்திற்காக கனத்த வாசல் கதவினைத் தாண்டி உட்சென்று கொண்டிருந்தான் சீலன். 

பத்தடியும் சென்றிருக்க மாட்டான். “ஐயா, ஐயா” என மூச்சிளைத்தவாறே அழைக்கும் பெண்ணின் குரல் கேட்டது. சீலன் திரும்பிப் பார்த்தான். 

வெளியே உண்டியல் பெட்டிக்கருகில் நாரிப்பிடிப்புடன் கூடிய அம்மூதாட்டி வேர்த்தொழுக நின்றவாறே சீலனை அழைப்பது தெரிந்தது. 

வெளியே வந்த சீலன் “ஏன்? என்ன?” என கண்களால் வினவினான். 

“ஐயா… எனக்குத் தர்மக்காசை பக்கத்திலை இருந்த பொடிச்சியட்டைக் குடுத்திருக்கிறியள். பிறகு இப்ப… உதிலையும் தந்திருக்கிறியள்… அது தான் ஐயா இப்ப உதிலை தந்த காசைத் திருப்பித் தந்திட்டுப் போகலாமெண்டு வந்தன்.” 

சீலன் வார்த்தைகள் எதுவுமின்றி விக்கித்துப் போய் நின்றான். 

உண்டியல் பெட்டிக்கருகில் படிக்கட்டில் கற்பூரம் புகைக் கக்கிக் கொண்டிருந்தது. 

“அதுவும் உங்களட்டையே இருக்கட்டும் ஆச்சி!” சீலனின் குரல் அசாதாரணமாய் இடறிற்று. 

சீலனைக் கையெடுத்துக் கும்பிட்ட அம்மூதாட்டி திரும்பி செங்கோணமாக முதுகை மடித்தவாறே தாண்டித் தாண்டிச் சென்றுகொண்டிருந்தாள். சீலனின் கண்கள் தற்செயலாக ராஜகோபுரம் மீது தரித்திற்று. 

ஏறிகணைகள் அகோரத்தால் சிற்பங்கள் சில உருக்குலைந்து தொங்கிக் கொண்டிருந்தாலும், அக்கோபுரம் கலிபோனியக் கட்டிடங்களைக் காட்டிலும் இப்போது கம்பீரத்தோற்றம் காட்டிற்று. 

– ஞாயிறு தினக்குரல், 05.09.2004.

– திக்கற்றவர்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் புலோலியூர் இரத்தினவேலோன், ஆறுமுகம் 1958.12.25 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், புலோலியூரில் பிறந்தார். சிறுகதை எழுத்தாளர். இவர் புற்றளை மகாவித்தியாலயம், ஹாட்லிக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார். இவர் யாழ் புற்றளை மகா வித்தியாலயம், யாழ் ஹாட்லிக் கல்லூரி மற்றும் யாழ் சென் ஜோன்ஸ் அக்கடமி ஆகியவற்றின் பழைய மாணவராவார். தினகரன் பத்திரிகையில் பிரசுரமான புரளும் அத்தியாயம் எனும் சிறுகதையூடு 1977 இல் இலக்கிய உலகத்திற்கு அறிமுகமானவர். 1977 ஆம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *