கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 11, 2025
பார்வையிட்டோர்: 150 
 
 

(2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘ஐயா சாமி, கருணை காட்டுங்கள். பசியால் துடிக்கும் இந்த ஏழையைக் கொஞ்சம் பாருங்கள். மூன்று நாட்களாச் சாப்பிட எதுவும் கிடைக்க வில்லை. 

கடவுள் சத்தியமாக…. ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியராக எட்டு வருடங்கள் வேலை பார்த்தேன். சில சூழ்ச்சிகளால் என் வேலை பறிபோனது. 

ஒரு வருடமாக எந்த வேலையும் இல்லாமல் சுற்றி வருகிறேன்….’ 

அந்த பிச்சைக்காரனை வழக்கறிஞர் ஸ்கோர் சோவ் பார்த்தார். சாயம் போன நிறத்தில் கிழிந்திருந்த அவனது ஓவர்கோட், ஓடுங்கிப் போயிருந்த போதையேறிய அவன் கண்கள். அவன் கன்னங்க ளில் இருபுறமும் சிவப்பு நிறப்புள்ளிகள்….இதற்கு முன் அவனை வேறு எங்கேயோ பார்த்தது போல் தோன்றியது. 

”காலுகா பகுதியில் எனக்கு ஒரு வேலை கிடைத்திருக்கிறது. ஆனால், அங்கு போக என்னிடம் பணம் இல்லை. தயவு செய்து எனக்கு உதவுங்கள். கேட்க எனக்கு வெட்கமாகத்தான் இருக்கிறது, ஆனால் என் சூழ்நிலை அப்படி…”

ஸ்கோர்சோவின் பார்வை அவன் அணிந்தி ருந்த காலணிகளின் பக்கம் சென்றது. ஒன்று உயர்ந்து மற்றது தாழ்ந்தும் இருந்தது. உடனடியாக அவருக்கு ஏதோ ஞபாகத்துக்கு வந்தது. 

”இங்கே பார். நேற்றைய முன்தினம் உன்னை சடோவயா வீதியில் பார்த்த மாதிரி இருக்கிறதே. ஆனால், அப்பொழுது என்னிடம் பேசியபோது, நீ ஒரு மாணவன் என்றும் உன்னைப் பள்ளியிலிருந்து நீக்கிவிட்டதாகவும் சொன்னாய். பள்ளி ஆசிரியரென்று சொல்லவில்லை. ஞாபகம் இருக்கிறதா?” 

“இல்லை….இருக்காது.” அதிர்ச்சியடையந்த பிச்சைக்காரனின் பேச்சு குழறியது. “நான் கிராமத்தில் பள்ளி ஆசிரியர்தான். வேண்டுமானால், என் சான்றிதழ்களைக் காட்டுகிறேன்.” 

“நீ ஒரு மாணவன் என்றும் உன்னை நீக்கி விட்டதாகச், சொன்னாய். உனக்கு ஞாபகமே இல்லையா?” 

“அய்யா, இது பித்தலாட்டம். இது மோசடி”. 

”நான் போலீசைக் கூப்பிடுவேன். ராஸ்கல்! நீ ஏழையாக இருக்கலாம். பசியோடு இருக்கலாம். அதற்காக இப்படி வெட்கமில்லாமல் அப்பட்டமாகப் பொய் சொல்ல முடியாது.” கோபமாக கத்தினார் வழக்கறிஞர். 

“நான்…வந்து….நான் பொய் சொல்லவில்லை. என்னிடமுள்ள சான்றிதழ்களைக் காட்டுகிறேன்” என முனகினான் அவன். 

“உன்னை யார் நம்புவார்கள்? கிராமப் பள்ளி ஆசிரியர்கள் மீதும் மாணவர்கள் மீதும் சமுதாயத்துக்குள்ள பரிவைத் தவறாகப் பயன்படுத்தும் கீழ்த்தரமான நடவடிக்கை இது என்று உனக்குத் தெரியாதா? எனக்கு கடுங்கோபம் வருகிறது.” 

ஸ்கோர்சோ கோபம் கட்டுக்கடங்கவில்லை. பிச்சைக்காரனை தயவு தாட்சன்யமின்றித் திட்டத் தொடங்கினார். ஸ்கோர்சோவிடமிருந்த கருணை, இளகிய மனம், துயரத்திலுள்ள எல்லா உயிர்களிடமும் அவர் காட்டும் பரிவு என அவரிடம் இருந்த நல்லியல்புகள் அனைத்தையும் அந்த பித்தலாட்டக்காரன் சொன்ன அப்பட்டமான பொய் காயப்படுத்திவிட்டது. ஆரம்பத்தில், தான் ஒரு அப்பாவி எனத் தொடர்ந்து வாதம் செய்து கொண்டிருந்த பிச்சைக்காரன் பிறகு அமைதியானான். குழப்பத்தில் தலையைத் தொங்கப்போட்டபடி நின்றிருந்தான். 

“சார்…..” என்று இழுத்த பிச்சைக்காரன், தன் கையை மார்பின் மீது வைத்தபடி, ”உண்மை என்னவென்றால், நான் பொய் சொன்னேன்! நான் மாணவனும் இல்லை. பள்ளி ஆசிரியரும் இல்லை. எல்லாமே கதை தான். முதலில் ரஷ்யப் பாடல் குழுவில் சேர்ந்து பாடிக்கொண்டிருந்தேன். குடித்திருந்ததால் என்னை வெளியே அனுப்பிவிட்டார்கள். வேறு என்னதான் செய்வது? என்னால் பொய் சொல்லாமல் காலம் தள்ள முடியவில்லை. நான் உண்மையைப் பேசும்போது யாரும் எனக்கு எதுவும் தரமாட்டார்கள். உண்மையை வைத்துக் கொண்டிருப்பவன் பட்டினியால் வாடுவான் அல்லது குடியிருக்க வீடு கிடைக்காமல் குளிரில் செத்துப் போவான். நீங்கள் நியாயத்தைத் தான் பேசுகிறீர்கள். உங்களை எனக்கு புரிகிறது. ஆனால் நான் என்ன செய்வது?” 

”என்ன செய்வது? என்ன செய்வது? என்றா கேட்கிறாய்?” என்று கத்தினார் ஸ்கோர்சோவ் அவனிடம் நெருங்கிவந்து, ”போய் வேலை செய்! அதுதான் நீ செய்யக்கூடியது! நீ வேலை பார்க்க வேண்டும்!” என்று சத்தம் போட்டார். 

”வேலை.. ஆமாம் அது எனக்கே தெரியும். ஆனால் எனக்கு எங்கே வேலை கிடைக்கும்? சத்தியமாக உழைத்துச் சம்பாதிக்க எனக்கு எங்கே வேலைகிடைக்கும்? நான் ஒரு கிளார்க் ஆகவேண்டுமென்றால் காலம் கடந்துவிட்டது. அதற்கு ஏதாவது ஒரு தொழிலில் எடுபிடியாளராக ஆரம்பித்து முன்னேறியிருக்க வேண்டும். என்னை ஒரு போர்ட்டராக யாரும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். காரணம் என்னை வேலை வாங்க முடியாது. எந்தத் தொழிற்சாலையிலும் என்னை வைத்துக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அங்கு வேலை செய்ய ஏதாவது தொழில் தெரிந்திருக்க வேண்டும். எனக்கோ எதுவும் தெரியாது”. என்று காரணங்களை அடுக்கிப் புலம்பினான். 

“போதும் நிறுத்து. உங்களுக்கெல்லாம் எதாவது சாக்கு கிடைத்துக் கொண்டே இருக்குமே. எனக்காக விறகு வெட்டிக்கொடுப்பாயா?” 

“அந்த வேலை செய்ய எனக்கு பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால், இந்தக் காலத்தில் திறமையான விறகு வெட்டிகள் கூட சாப்பிட ஒன்றும் கிடைக்காமல் பட்டினி கிடக்கிறார்கள்…” 

“உங்களைப் போன்ற சோம்பேறிகள் எல்லோரும் இப்படிதான் பேசுவீர்கள். ஏதாவது வேலை தருகிறேன் என யாராவது முன் வந்தால் வேண்டாம் என்று தட்டிக்கழிப்பீர்கள். என் வீட்டுக்கு வந்து விறகு வெட்டிக் கொடுக்கிறாயா?” 

“சரி அய்யா..செய்கிறேன்.” 

“நல்லது. சீக்கிரம் ஏற்பாடு செய்துவிடலாம். பார்க்கலாம்”. 

ஸ்கோர்சோவ் கைகளைத் தேய்த்துக் கொண்டே வேகமாகச் சென்றார். (யாருக்கும் துன்பம் தரவேண்டும் என்ற எண்ணம் உள்ளவராக அவர் இல்லை) சமையலைறையில் இருந்த பெண்மணியைக் கூப்பிட்டார். 

“ஓல்கா. இங்கேவா.. இந்த ஆளை விறகுக் கிடங்குக்குக் கூட்டிச் செல். அங்கு இருக்கும் விறகை வெட்டட்டும்.” 

ஏதோ குழப்பத்தில் உள்ளவன் போல், தோள்களை உலுக்கியபடி நோஞ்சானாக இருந்த அந்த ஆள் சமையல்காரியைப் பின்தொடர்ந்து சென்றான். அவன் போகும் விதமே அவன் பட்டினி கிடப்பதாலோ, வேலை வேண்டும் என்றோ விறகு வெட்ட ஒப்புக்கொண்டது போல் தெரியவில்லை. தன் பெருமையைக் காப்பற்றிக் கொள்ளவும் அவமானப்படாமல் இருக்கவும் தான் ஒப்புக்கொண்டுள்ளான். வாயாலேயே அவன் மாட்டிக் கொண்டான் என்றுதான் நினைக்கத் தோன்றியது. மேலும் வோட்கா, அவன் பலத்தையும் ஆரோக்கியத்தையும் குறைத்திருந்தது தெரிந்தது. வேலை செய்வதற்கு அவனது உடல் சிறிதும் வளையாது என்பதும் தெளிவாகத் தெரிந்தது. 

ஸ்கோர்சோவ் வேகமாகச் சாப்பாட்டு அறைக் குச் சென்றார். அங்கிருந்தபடியே சன்னல் வழியாக விறகுக் கிடங்கையும் அங்கு என்ன நடக்கிறது என்பதையும் பார்க்க முடியும். சன்னல் அருகே நின்றிருந்த ஸ்கோர்சோவ், சமையல்காரியும் அந்த பிச்சைக்காரனும் பின் வாசல் வழியாக முற்றத்துக்கு வந்து அங்கு தேங்கியிருந்த பனிக்கட்டிகளைத் தாண்டி கிடங்கை நோக்கிச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார். 

ஓல்கா தன்னுடன் வேலை செய்பவனைக் கோபமானப் பார்த்தாள். கிடங்கைத் திறந்துவிட்டு அதன் பிறகு கதவைக் கோபமான அடித்துச் சாத்தினாள். 

”அந்த பெண் காப்பி குடித்துக் கொண்டிருந்த போது தொந்திரவு செய்துவிட்டோமா? என்ன ஒரு மோசமான ஜென்மம்!” என்று ஸ்கோட்சோவ் நினைத்தார். 

ஆசிரியர் என்று சொல்லிக்கொண்டே அந்த ஆள், மாணவன் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட அந்த ஆள், விறகுக்குவியல் மீது உட்கார்ந்து இருந்ததையும், சிவப்பு முகவாயைக் கைகளின்மீது வைத்தபடி நினைவில் மூழ்கிப் போய் இருந்ததையும் அவரால் பார்க்க முடிந் தது. குழப்பத்துடன் ஒரு விறகுக்கட்டையை தன் பக்கம் அந்தப் பிச்சைக்காரன் இழுத்துப் போட்டான். தன் கால்களுக்கு இடையில் அதை வைத்துக் கோடாரியால் சிரத்தையன்றித் தட்டினான். விறகு அசைந்து கொடுத்து விழுந்தது. மீண்டும் பிச்சைக்காரன் அதைத் தன் பக்கம் இழுத்தான். உறைந்து போகும் தன் கைகளில் வைத்து அதை ஊதிவிட்டு அதைக் கவனமாக வெட்ட ஆரம்பித்தான். தன் காலணியோ அல்லது தன் விரலையோ வெட்டிக்கொண்டு விடக்கூடாது என்ற பயத்தில் வெட்டுவது போல் இருந்தது. மறுபடியும் அந்த விறகுத்துண்டு நிலத்தில் விழுந்தது. 

ஸ்கோர்சோவின் கோபம் காணாமல் போயிருந்தது. குடித்து வீணாய்ப் போய்விட்ட ஒரு நோயாளியை இப்படிக் குளிரில் வேலை செய்ய வைத்து விட்டதற்கு ஒரு வித அவமானம் ஏற்பட்டது. 

“போகட்டும். இதை நான் அவனுடைய நல்ல தற்காகத்தான் செய்தேன்” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு தன் அலுவலகத்திலிருந்து சாப்பாட்டு அறைக்குச் சென்றான். 

ஒரு மணி நேரம் கழிந்ததும் ஓல்கா உள்ளே வந்தாள். விறகுகள் எல்லாம் வெட்டி முடித்தாகி விட்டது என்று சொன்னாள். 

“நல்லது அவனுக்கு ஒரு ரூபிள் கொடு..” என்றார் ஸ்கோர்சோவ். “அவனுக்கு விருப்பம் இருந்தால் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி இங்கு வந்து விறகு வெட்டலாம். நம்மிடம் ஏதாவது வேலை இருக்கும்” என்று சொன்னார். 

அடுத்த மாதம் முதல் தேதி அந்த ஆள் தலை காட்டினான். நிற்கக் கூட முடியாத நிலையிலும் அரை ரூபிள் சம்பாதித்துச் சென்றான். அன்று முதல் அவனை அடிக்கடி அந்த முற்றத்தில் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு முறையும் அவனுக்கு வேலை இருந்தது. பனிக்கட்டிகளை கூட்டுவது, விறகுக் கிடங்கை ஒழுங்கு செய்வது, மெத்தை, தலையணைகளைத் தூசித்தட்டி சுத்தம் செய்வது என ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டான். ஒவ்வொரு முறையும் இருபது முதல் நாற்பது கோபெக்ஸ்வரை ஊதியமாகப் பெற்றான். ஒரு முறை, பழைய கால்சட்டையைக் கூட அவனுக்கு தந்துனுப்பினார்கள். 

“நல்லது. நான் பேசியதுக்குப் பலன் கிடைத்திருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே அவனி டம் ஒரு ரூபளைக் கொடுத்தார். “இந்தப் பணம் நீ பட்ட கஷ்டத்திற்கு. உனக்கு வேலை செய்ய எந்தத் தயக்கமும் இல்லை. ஆர்வமானவன் தான் என்பது புரிகிறது. உன் பெயர் என்ன?” 

“லஷ்கோவ்” 

“நல்லது லஷ்கோவ். இப்பொழுது உனக்கு வேறு ஏதாவது முறையான வேலை கொடுக்கலாம். நீ எழுதுவாயா?” 

“எழுதுவேன்” 

”அப்படியானால் நாளைக்கு இந்தக் கடிதத்தைக் கொண்டு போய் என் நண்பனிடம் கொடு. அவன் உனக்கு ஏதாவது எழுதும் வேலை தருவார். நன்றாக கஷ்டப்பட்டு வேலைப்பார். குடிக்காதே. நான் சொன்னதை ஞாபகத்தில் வைத்துக் கொள். போய்வா”. 

ஒரு மனிதனை சரியான பாதைக்கு கொண்டு வந்த திருப்தியில் லஷ்கோவை வாஞ்சையாக தட் டிக்கொடுத்ததோடு கை கொடுத்தும் வழி அனுப் பிவைத்தார். ஸ்கோர்சோவ். லஷ்கோவ் கடிதத்தை எடுத்துக் கொண்டு போனான். அன்றிலிருந்து வீட்டு முற்றத்தில் வேலைப் பார்க்க வருவதில்லை. 

இரண்டு வருடம் ஓடியது. ஒரு நாள் மாலை, ஒரு நாடக அரங்கில் நுழைவுச் சீட்டு வாங்க பணம் செலுத்திக் கொண்டிருந்தபோது, ஸ்கோர் சோவ் பக்கத்தில் இருந்த ஆளைக் கவனித்தார். சீட்டுத் தருபவரிடம் கேலரியில் இடம் வேண்டும் என்று சொல்லிச் செப்புக் காசுகளாக் செலுத்துவதைப் பார்த்தார். 

“அட, லஷ்கோவ் தானே நீ!” என்று ஸ்கோர் சோவ் கத்தினார். அவருடைய பழைய விறகுவெட்டியை அடையாளம் கண்டு கொண்டவர், ”எப்படி இருக்கிறாய்? இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாய், எல்லாம் எப்படி போகிறது?” என்று விசாரிக்க ஆரம்பித்தார். 

“எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கி றது. நான் இப்பொழுது ஒரு நோட்டரியாக இருக்கிறேன். மாதம் முப்பத்தைந்து ரூபள் சம்பாதிக்கிறேன்” என்றான் அவன். 

”எல்லாம் ஆண்டவன் செயல்! ரொம்ப சந்தோ ஷம் உன்னைப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஒரு வகையில், நீ எனக்கு ஒரு மகன் மாதிரி, சரியான பாதையில் உன்னைத் தள்ளிவிட்டேன். புரிகிறதா? உன்னை எப்படித் திட்டினேன் ஞாபகம் இருக்கிறதா? என் காலடியில் விழும் அளவு அன்றைய தினம் உன்னை ஆக்கியிருக்கியிருந்தேன். நான் சொன்ன வார்த்தைகளை மறக்காமல் இருந்ததற்கு நன்றி”. 

“நானும் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்றான் லஷ்கோவ். ”நான் உங்களிடம் அன்றைக்கு வராமல் போயிருந்தால், இன்று வரை என்னை ஒரு ஆசிரியராகவோ மாணவராகவோ தான் சொல்லிக் கொண்டு திரிந்திருப்பேன், உண்மைதான். உங்கள் ஆதரவு கிடைத்ததால் பாழும் கிணற்றில் விழாமல் தப்பினேன்” என்று கலங்கினான். 

“உண்மையிலேயே எனக்குக் கேட்க சந்தோஷமாக இருக்கிறது” என்று மீண்டும் சொன்னார் ஸ்கோர்சோவ். 

“உங்களுடைய பரிவான வார்த்தைகளுக்கும் நடவடிக்கைக்கும் நன்றி அய்யா. அப்பொழுது நீங்கள் அருமையாக என்னிடம் பேசினீர்களா. உங்களுக்கும் உங்கள் சமையல்கார அம்மாவுக்கும் நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன். அந்த புண்ணியவதிக்கு கோடி புண்ணியம். ஆமாம். அன்றைய தினம் அற்புதமாகப் பேசினீர்கள். நான் சாகும் வரை உங்களுக்குக் கடன்பட்டிருப்பேன். ஆனால், சரியாகச் சொல்லவேண்டும் என்றால், உங்களுடைய சமையல்காரப் பெண் ஓல்காதான் என்னை காப்பாற்றியவர்” 

“எப்படி?” 

“இப்படித்தான். அதாவது, உங்கள் வீட்டுக்கு விறகு வெட்ட வரும்போது, அந்த அம்மா இப்படி ஆரம்பிப்பார்கள். “என்ன முண்டம் நீ! பாழாய் போனவனே. நீ அவ்வளவு தான். பாவம்!” இப்படிச் சொல்லிவிட்டு எனக்கு எதிரில் சோகமாக உட்கார்ந்து கொள்வார். என் முகத்தைப் பார்த்தபடி அழுவார். “உண்மையிலேயே பாவப்பட்ட ஆளப்பா நீ. உனக்கு எந்த சந்தோஷமும் இந்த உலகத்தில் இல்லை. நீ அடுத்த போகவிருக்கும் உலகத்திலும் எதுவும் இருக்காது, குடிகாரா! நீ நரகத்தில் போய் வெந்து மடியப்போகிறாய். என்ன பாவப்பட்ட ஜென்மம் நீ.” என்று இந்த தொனியில் புலம்பிக் கொண்டே இருப்பார். எனக்காக எவ்வளவு துன்பத்தை அனுபவித்திருப்பார் ; எவ்வளவு கண்ணீர் விட்டிருப்பார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், முக்கியமான விஷயம் என்னவென்றால், எனக்கு பதில் விறகுகளை வெட்டி விடுவார். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியமா சார்? உங்களுக்காக நான் ஒற்றை விறகைக் கூட வெட்டியது கிடையாது. எல்லாவற்றையும் அவர்தான் செய்தார். ஏன் இந்த செயல் என்னை காப்பாற்றியது, ஏன் நான் மாறினேன், அவரைப் பார்த்ததிலிருந்து குடிப்பதை நான் ஏன் நிறுத்தினேன். எதற்கும் என்னிடம் விளக்கம் இல்லை. எனக்கு தெரிந்ததெல்லாம் இதுதான். அவருடைய வார்த்தைகளும் நடவடிக்கைகளும் என் உள்ளத்தில் ஒரு மாற்றத்தை உண்டாக்கக் காரணமாயிருந்தன. என்னை நல்ல பாதையில் கொண்டு சென்றார். அவரை ஒரு போதும் என்னால் மறக்க முடியாது. சரி சரி. நான் புறப்பட வேண்டிய நேரம் இது. மணி அடித்துவிட் டது” என்று சொன்ன லஷ்கோவ் குனிந்து வணங்கி விட்டு கேலரியை நோக்கிக் கிளம்பினான். 

– நிஷ்ஷிலி எனும் செய்தித்தாளில், ஜனவரி 19, 1889 இல் இக்கதை முதலில் வெளிவந்தது.

– ஆன்டன் செக்காவ் ஆகச்சிறந்த கதைகள், தமிழில்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர், முதற் பதிப்பு: 2019, தடாகம் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *