பாவத்தைக் கட்டிக்கொள்கிறாள்!
கதையாசிரியர்: தெ.பொ.மீனாட்சிசுந்தரம்
கதைத்தொகுப்பு:
குடும்பம் நாடகம்
கதைப்பதிவு: November 9, 2025
பார்வையிட்டோர்: 72
(1954ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தோழி : என்ன நல்ல நறுமணம் வீசுகிறது? என்றும் இல்லாத இந்தப் புதுமணம் எங்கிருந்து வருகிறது?
தலைவி : அந்தச் சோலையில் இருந்து வருகிறதா?- உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் புத்துயிர் பெற்றுப்- புத்தொளி வீசிப் புதுமணம் கமழ்கின்றது. நான்மட்டும் மணம் போய், ஒளி போய், உயிரும் போக நிற்கின்றேன்; பழங்கண்ணிற் புழுங்குகின்றேன். அதோ பார்த்தாயா அந்த அழகிய சோலையை!
தோழி : நாமும் தழைப்போம். மாந்தோப்பு எப்படித் தழைத்துவிட்டது! நம்பமுடியவில்லையே! கிளை எல்லாம் தளிர்கள்! கிளைகளும் பந்தரிட்டாற்போல நெருங்கிப் படர்ந்துள்ளன. பச்சைக் கற்களிடையிடையே கெம்பினை இழைத்தாற்போல என்ன அழகு! நெய் தடவிவிட்டாற் போன்ற தளிர்களின் மினுமினுப்பு ! மனத்தை உருக்கும் துவளல்! இந்த மென்மையும், மணமும், நிறமும், வடிவும், இனிமையும் எப்படிப் பரந்தனவோ ! வியத்தகு அழகு ! என்ன குளிர்ச்சி ! என்ன புதுமணம் !
தலைவி : ஆற்றங்கரைப் படுகையில் உள்ள மரங்கள் அல்லவா? ஆற்றின் ஊட்டம் உள்ளூறப் பொலிகிறது. கொண்டான் வலமிருந்தால் கூரை ஏறிச் சண்
சண்டை போடலாம். வானத்தையும் இம் மரங்கள் எட்டப் பார்க்- கின்றன. உள்ளே உள்ளது வெளியே தோன்றுகிறது. நாம் எங்கே தழைப்பது? நாமோ வேரற்ற, நீரற்ற வற்றல் மரம்.
தோழி: தழைக்கவேண்டும் நாளில், வாடி வதங்குவானேன் ? பாடி மகிழ வேண்டும் நாளில்,பழித்து வருந்துவானேன்? இத்தகைய இளவேனிற் காலமே ஓரறி வுயிரையும் உள்ளூற ஆற்று நீரோடு கூட்டுவித்துத்- தழைக்கச் செய்கின்றது. காலத்தின் கோலம்- கேட்டாயா அப் பாட்டை! இதுவரையில் நம்மைப் போலவே வாயடைபட்ட குயில் இதோ பாடுகிறது! குயில் எங்கே எனப் பார்க்கிறாயா? பச்சையின் நடுவே தெரியவில்லை! அதோ! அதோ! காற்றசைந்ததும் அந்தத் தளிரின் இடையே கருமணிக் கொத்துப்போலக் கருங்குயில் தோன்றுகிறது பார்! என்ன கறுப்பு! கறுப்பிலும் ஓர் அழகு காட்டுகிறது இந்தக் காலம்! உன்னைத்தான் இதோ அது பார்க்கிறது! செக்கச் சிவந்திருக்கும் கண்கள், கருமைக்கிடையே பளிச்சென்று தோன்றுகின்றன. கரும் பச்சையிடையே செந்தளிர் – கருமையிடையே செங்கண் – எங்கும் இதே காட்சி 1 இருளில் ஒளி- காதற்- பொலிவு! காதற் பொலிவு ! பொலிக நின் காதல்!
தலைவி: அங்கே ஆற்றின் இறுமாப்பு: இங்கே சேவலின் செம்மாப்பு! எல்லாம் கொண்டான் வலம், வலம், வலம் ! எதிரே உள்ள சேவலைப் பார்த்தாயா? இவற்றின் சேர்த்தியின் பொலிவே காதலின் கீர்த்தி! இன்பப் பாட்டு ! பிரிந்து எதிர்எதிர் இருந்தாலும், இரண்- டுள்ளமும் இரண்டுயிரும் ஒன்றாகிய நிலை அந்தப் பாட்டின் ஒற்றுமையாக முழங்குகிறது. நாமறியோமா இந்தச். செழிப்பும் பாட்டும்! அஃது ஒரு காலம் ! இஃது ஒரு காலம்!
தோழி: காதற் காலம்! நம்மையும் அறியாமல் களிப்பு வரும் காலம் ! குயிலின் பாட்டு ஒரு களியாட்டம்; பந்தாட்டம்போல ஓர் ஒலியாட்டம் ! மாலை மாற்றிக் கொள்வதுபோலச் சேவல் கூவ, அதன் எதிரே பெடை -இவ்வாறு மாறி மாறி மாமர மணப்பந்தரில் மகிழ்ந்து மலிகின்றன.
தலைவி : காதற் பாட்டு ! காதற் பாட்டு : இருதலைக் – காமம். சாதற் பாட்டு! சாதற் பாட்டு: ஒருதலைக் காமம்.
தோழி: நல்ல நாளில் கெட்ட பேச்சு-ஆ என்ன இஃது? அந்தப் புது மணம் மறுபடியும் வீசுகிறதே! மாமரத்தின் மணமா ? இல்லை, இல்லை!
தலைவி : எல்லாப் பூவுமே மலரும் காலம்! குயில் பாடப் பாட, மனமும் முகமும் மகிழ்ந்து அலர்கின்றன. துன்பத்தின் ஆழம் நம்மிடம்; இன்பத்தின் ஏற்றம் அவற்றினிடம்.
தோழி: நிலைத் திணையுயிரையும் இயங்கு திணை – யுயிரையும் இப்படி ஒரு புரட்சி செய்து இன்பமூட்டும் இளவேனிற் காலம் நமக்குமட்டும் இன்பமூட்டாது ஒழியுமா?
தலைவி: கொண்டான் வலமிருந்தால் அன்றோ?
தோழி: கேட்டேன் உன் பல்லவியை! அவருக்கும் இன்ப இளவேனிற் காலம் நம்மை நினைப்பூட்டாதா? அவர்மட்டும் தனியிருப்பாரா ? வருவார்.
தலைவி : வருவார்! வருவார்! மனப்பால் குடி! தம்மைவிட்டுப் பிரியாத நம் இயல்பு அறிந்திருந்தும் பிரிந்திருப்பாரா? பிரியேன் என்ற சொல்லும் தவறினர். முதற் கோணல் முற்றுங் கோணல் – பிரிந்தாலும் அகன்று போவாரா? அகன்றவர் அகன்றேவிட்டார்.
தோழி: அப்படிச் சொல்லலாமா?
தலைவி: பின்னே என்ன? பழமையை நினைக்கிறாயோ? என் உயிரே” என்று பேசியது ஒரு காலத்துப் பேச்சு. பொருளே அவருக்கு இன்று உயிர்… பெண்ணாயிருந்த உயிர், அன்று அன்பாய்க் குழைந்தது. பொன்னாயிருக்கும் உயிர் அன்பாய்க் குழையுமா ? இன்று தீயாகவே உருகும்.
தோழி: மரந் தழைய நீர் வேண்டும் என இந்த இளமரப் பூங்காவே எடுத்துரைக்கவில்லையா? குடி தழைக்கப் பொருள் வேண்டாவா? பொருளில் பூப்பதே இன்பம்.
தலைவி : வெறும் பொருள் வெந்துருகும்; பூவாது. அருளாய் மாறினால்மட்டும் பொன் பூத்த மரமாய்ப் புகழ் மணங் கமழ்ந்து இன்பம் கனியும்.
தோழி : பொன் காத்த பூதமாகவா பொருள் நாடினார்? குடி வாழக் கிளை வாழக் குன்றி வந்து இரப்பார் வாழ உன் குறைமனம் நிறையவே அன்றோ பொருள் தேடச் சென்றார்?
தலைவி: அதனாலேயே பொறுத்திருந்தேன். அருள் உலர்ந்தது. தொலைவில் உள்ளார் என்பதன்று துன்பம். நீர்ப்பசை நெடுந் தூரத்திருந்தும் வரவில்லையா இதோ அந்த மரத்திற்கு? நமக்கெங்கே நீர்ப்பசை? அன்புறவே அற்றுப் போயிற்று.
தோழி: இளவேனிற் காலத்தின் பெருமையைக் கண்டு உணர்ந்தும் இப்படிக் கதறலாமா?
தலைவி : இளவேனிற் காலத்தின் பெருமையை உணர்ந்தே பேசுகிறேன். வேங்கொம்பைப் பூங்கொம்பாக்கி, அதில் பூங்குயில்கள் புகுந்து பாடச் செய்யும் இளவேனில் – தெய்வத்தின் பெருமையை எண்ணவும் முடியாது காதற் கடவுளின் கருணை பொழியும் கை அது.
தோழி: பின் ஏன் கவலை?
தலைவி: வருவார் வருவார் என்று நானும் எண்ணினேன். எண்ணாததெல்லாம் எண்ணியது என் நெஞ்சம்: கோடியும் அல்ல பல. கொத்துக் கொத்- தாய் மலர்ந்தன இன்ப எண்ணங்கள். அவர் வருவது- போல, வந்தணைப்பது போல, நான் ஊடுவது போல. ஊடலைத் தணிப்பது போல, இல்லறம் தழைப்பது போல, பலப்பலர் வந்து விருந்துண்பது போல, வறியவர் வறுமை வாட்டம் தீர்வது போல, நோயினர் மருந்துண்டு வாழ்வது போல,உலகம் இவர் காவலில் உவந்தொளிர் – வது போல, துன்பம் துடைப்பது போல, அற இன்ப அன்பொளிக் குடும்பமாய் உலகம் வாழ்வது போல எத்தனையோ காட்சிகள்! கற்பக மலர்கள்: “இத்தனைக்கும் ஊற்று, நீயன்றோ?” என்று அவர் என்னை அணைக்க- வர, நான் எதிர் அணைக்கக் கை எடுப்பது போலக் கண்டதும்,உண்மையாகவே என் கை கவ்வியது. ஏமாற்ற- மடைந்தேன். ஆகாயக் கோட்டை உடைந்தது. எல்லாம் கனவாய் ஒழிந்தன. எதிர்பார்ப்பது வானத்தில் உயர உயர ஏமாற்றமும் கிடுகிடு பாதாளத்தில் ஆழும் அன்றோ? பூத்துயர்ந்த கொடி முறிவதுபோல நெஞ்- சுடைந்து நிற்கிறேன்.
தோழி : கனவு நனவாகும். கனவு பலியாதா? என்ன எண்ணுகிறாய்? மரம் எல்லாம், ஒன்றாகவா தழைக்கின்றன, மலர்கின்றன! சில மரங்கள் காலம் தாழ்த்து மலர- வில்லையா? அதிலோர் இன்பம் உலகம் கொள்ளவில்லையா!
தலைவி : இளவேனில் இன்றா வந்தது?
தோழி: அவரிருக்கும் இடம் அருகிலா இருக்கிறது? இடைவழி பெருவழியாயிற்றே! வரவேண்டாவா? அங்கே இளவேனிற் காலம் சிறிது தாழ்த்தும் தொடங்கலாம்.
தலைவி : என்னுள்ளமும் அவருள்ளமும் ஒன்றா-யிருந்த காலம் உண்டு. அவர் வருவார் என்று மனத்தில் தோன்றியதும் எதிரே வந்து நிற்பார். இப்போது இத்தனை இன்பக் கனவுகள் கண்டும் எதிர் வரவில்லையே?
தோழி: அடுத்த அறையில் இருந்தா?
தலைவி : அடுத்த அறை என்ன? அடுத்த நாடு என்ன? மனத்தினாற்றல் பெரிது.
தோழி: இவ்வாறு உருகும் உன் மனத்தின் ஆற்றல் இன்று குறைந்ததா? இளவேனில் ஆற்றல் மறைந்ததா?
தலைவி : நாமே மறைந்தோம். எந்த மூலையிலேனும் அவர்மனத்தில் ஒதுங்கி ஒடுங்கிக்கிடந்தால் அன்றோ அவர் – நினைவிற்கு வருவோம்? அகன்றவர் மறந்தே போனார். கண் மறையக் கருத்து மறையும்.
தோழி: கண் மறையக் கருத்து மறைந்ததா உனக்கு?
தலைவி: நம் மனத்தில் அவர் தவிர வேறொன்றும் இல்லை. அவர் மனத்தில் நாம் இருந்தோம். பொருள் புகுந்தது. குடத்தில் பழைய நீர் இருக்கப் புதுநீர் கொட்டினால் பழைய நீர் ஒருபோது முழுதும் வெளியேறி- விடலாம். அவர் நம்மை விட்டகன்றார். நம்மை மறந்தே- போனார். இளவேனில்… என் செய்யும்? வற்றல் மரம் தளிர்க்குமா?
தோழி: இன்பப் பூங்கொத்து இன்பக் கனவாய்ப் பூத்ததுபோலத் துன்பப் பூங்கொத்துத் துன்பக் கன- வாய் உன் மனத்தே மலர்கின்றதோ!- என்ன மறுபடியும் அந்தப் புதுமணம்-உனக்கு வரவில்லையா?
தலைவி : வருகிறது!வந்துதான் என்ன? வயிற்று நோயாளனுக்கு விருந்து மணந்து என்ன பயன்?
தோழி: வயிற்றெரிச்சலே. மிகும். ஈது என்ன பூமணம் என்றால், தெரியும் என்கிறாய்! தெரியச் சொன்- னால் அன்றோ! உன் பாட்டே பாடுகிறாயே!
தலைவி: உனக்கு அறிவுத் தினவு – எனக்குத் துன்பத் தினவு! அதுவா? பாதிரிப் பூமணம் – தெரிய- வில்லையா?
தோழி: என்ன நறுமணம்? பாதிரியா இது?
தலைவி : நான் எது சொன்னாலும் நம்பிக்கை இல்லையா? பேச்சுக் கொடுத்துத் துன்பத்தினைப் போக்க எண்ணமா? வேறு போக்குக் காட்டி மாற்ற எண்ணமா? ஐயம் ஏன்? அதோ கேள்!”பாதிரிப்பூ பாதிரிப்பூ!” என்று அவள் விற்று வருவதை.
தோழி: கேட்கிறது. அதோ அந்தப் பெண்ணும் வருகிறாள்.
தலைவி : அவள் ஒருத்தி, நடுவே எங்களுக்கு எனப் பிறந்தாளே?
தோழி : உனக் கெனப் பிறந்து, பூவினைக் கொண்டு வருகிறாளா? பூவினை வாங்கலாமா?
தலைவி: அவள் என்ன நட்பா? பகையா? இரண்டும் கெட்டவள்! அயலாள். பாவம்! அவள் யாரோ?நான்யாரே?
தோழி: “யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே”
என்று இன்று பாடலாகாதா,அயலரட்டி மலர் கொண்டு மகிழ்வித்து இன்பூட்டுகிறாள் என்று?
தலைவி: அடிப்படையை மறந்து பேசுகிறாய். அன்றோ அன்புப் பசை! இன்றோ வற்றல் மரம்? அன்று வேம்பும் கருப்புக் கட்டியாம்! இன்று அமுதமும் நஞ்சா-கிறது!
தோழி: நஞ்சாவது கிஞ்சாவது- நல்ல மணம்- தூய வெள்ளை நிறம் – நடுவே சிறிது இளஞ் சிவப்பு. இவற்றினிடையே பூந்தாது பார்த்தாயா? நீ சொல்கிற உவமை என்ன! நாம் அறிந்தனபோல இருந்தாலும், அவற்றைப் புதுப்புது வகையில் புதுப்புது நிலையில் திறம்- படச் சேர்த்து அமைத்து வியப்பூட்டும் ஓவியத்தைப் பற்றிப் பேசுவாய். அந்த ஓவியம், எழுதும் கைத்திறம் படைத்த ஓடாவி கையில் பிடிக்கும் துகிலிகையின் நுட்பத்- தில் ஈடுபடுவாய்: நிறம் பூசச் செவ்வரக்கில் தோய்த் தெடுத்துப் தீற்றிய பின்னும் செவ்வரக்கு நீ கூறும் துகிலிகையில் ஒட்டிக் கிடக்குமே, அது போலத் தலையில் சிவந்த பூந்தாதுக்களின் அழகே அழகு-உவமையை நன்றாக உணர்ந்தேனா?
தலைவி: பாடு உன் பாட்டை!
தோழி : என்ன அழகு! என்ன அழகு! எவ்வாறு புகழ முடியும்? புத்தம் புது மலர்- இன்றலர்ந்த மலர்- அதோ, வண்டுகள் பாடித் தேனை உண்டு மயங்கு- கின்றன!
தலைவி : நீயும் அத னழகைப் பாடி மயங்குகிறாய். தொலைவில் இருக்கும் இளவேனில் அழகு இவ்வாறு வீட்டிற்குள்ளும் வருகிறது.
தோழி: துன்பத்தில் இன்பமா?
தலைவி : ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும். துன்பத் தில் இன்பமும் துன்பமாம்.
தோழி: ஏன் அப்படி ? துன்பத்தில் இருப்பார் இன்பம் துய்யாரா? பிறர் இன்பம் துய்ப்பது கண்டு வயிற் றெரிச்சலா?
தலைவி: ஏன் வயிற்றெரிவு வயிற்றெரிவு என்று சிறு மாக்கள்போல் பேசுகிறாய்?
தோழி: பூ மணவாதா?
தலைவி : மணக்கும். ஆனால், மணப்பது வேறு, மகிழ்வதுவேறு; மணப்பது மூக்கு; மகிழ்வது மனம்; மனம் இல்லையானால் மகிழ்ச்சி ஏது?
தோழி: புறத்தே தோன்றுவதுதானே அகத்தும் தோன்றும்?
தலைவி: மனம் வேறிடத்தில் இருந்தால், எதிரிருப்-பதும் தோன்றாது.
தோழி: உன் மனம் இங்கேதானே இருக்கிறது?
தலைவி: ஓட்டை மனம்! இந்த இன்பப் பொருளைத் துய்க்கும் கண்ணும் காதும் மூக்கும் நாவும் உயிரும் டலும் இழந்து, நுறுங்கிய மனமே இங்கே இருக்கிறது. உயிரில்லாத பணம் இவற்றைத் துய்க்குமா? காதலும் வறள இன்ன்பமும் வறளச் செய்கிறதே அவருடைய பொருட் பற்று! பொன் என்று மகிழ்ந்தால், அதில் எந்த உயிர் தழைக்கும்? இந்த வருத்தம் ஒருபுறம். இந்த நிலையில் பாதிரி பாதிரி எனக் காது குடையக் கதறுகிறாள்.
தோழி : அவள் என்ன செய்வாள்? வயிறு வளர்க்க வேறு வழி ஏது ? பொருள் தேடித் திரிவதன் பெருமை தெரிகிறதா? அவர்போல, அவளும் பொருள் தேடுகிறாள் என்றா? அவள்மேல் என்ன சீற்றம்?
தலைவி : சீற்றம் ஏன்? உலகம், தான் வாழமட்டும் பார்த்துக் கொள்கிறது; இன்பத்தினையே கொண்டு பிற- ருக்கு ஊட்டுவதாகக் கருதுகிறது. ‘வேண்டா’ என்றால். ‘என்ன நன்றி கெட்டவர்கள்’ என்று பழிக்கிறது.
தோழி: வயிற்று நோயாளிக்கு விருந்து செய்து வெறுப்படைவோர் போல ……
தலைவி: நான் சொல்லியதைச் சொல்லி ஏசாதே- அந்தோ! புறப் பொருளிலா இன்பமோ துன்பமோ? கூடி மகிழ்வோருக்குக் குலாவிக் களிக்க இவை பெருந்துணை- யாய் இன்ப மாகலாம். பிரிந்து வாடுவாருக்கோ…….
தோழி: உன் புண்ணில் கோல்விட்டு அலைக்கிறாள் என்கிறாயா? பெரும் பாவி ! பெரும்பாவி!
தலைவி: நையாண்டி பண்ணாதே. என்…
தோழி: பின் என்ன? பூ விற்பதற்கா இவ்வளவு புகைகிறாய்?
தலைவி : ஐயோ பாவம்! என்மேல் அவளுக்கு என்ன பகையா? எப்படிப் பகை தோன்ற முடியும்? அயலாள் அவள்; என்னையே தெரியாதவள்.
தோழி: ஆனால்…
தலைவி: அறியாமையால் தன்னலத்தில் பிறரை அறியப் பொழுதில்லாமையால் பிறர் நலம் என்றே தன்- னலத்தைக் கருதிவிடுவதால் நிகழும் நிகழ்ச்சி இஃது. எங்கும் அப்படித்தான். அவரும் அப்படி! இவளும் இப்படி!
தோழி: இவள் வந்ததுபோல அவரும் வருவார். என்ன மணம்? என்ன அழகு? ஆனால்,உனக்குப் பிடியாது. ஆதலின், வாங்கவில்லை; இந்தத் தெருவழியே வா வேண்டா என்று சொல்லிவிடுகிறேன்.
தலைவி : பாவம் ! ஏழைப் பெண் பிழைக்க வேண்- டாவா ? விலை கொடுத்து வாங்கு. பாதிரியின் அழகினை
அறிவேன். நீயேனும் வாங்கி மகிழ்.
தோழி: அவளிடமா?
தலைவி : அவள் என்ன செய்வாள்? எனக்காகவா நான் பேசுகிறேன்? என்னைப்போல எத்துணைப் பேர் வாடி வதங்குவார்கள்? தாமும் வாடத் தம்முடைய தலை வரையும் பழிக்க அன்றோ இந்தப் பாதிரிப் பூ அவர்களைத் தூண்டுகிறது? இத்துணைப் பாவமும் இந்த ஏழைப் பெண்மேல் படியுமே என்றுதான் என் மனம் நோகிறது.
தோழி: அவள் நினையாத ஒன்றுக்குத் தண்டனை வருமா?
தலைவி : பழத்தின்மேல் கல் விட்டெறிந்தது பறவை- யைக் கொன்றால் பாவம் வாராதா? தெரிந்து தொட்டால்- தான் நெருப்புச் சுடுமோ? பிறர்க்கென்ன ஆகும் என் று பரிந்து வாழ்வதே பண்பாடு.
தோழி: தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப ரன்றிமற்(று)
எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால்-உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்.
தலைவி: நிறையப் படிக்கிறாய்போலும்! உனக்கு எது தெரியாது?
தோழி: ஒன்று தெரியவில்லை.
தலைவி : என்ன!
தோழி: பூ விற்பவளுக்கு இவ்வளவு நையும் மனம், அவருக்காகவும் நைய வேண்டாவா? உன்னைப்போல அவரும் வாடுவர் அல்லரோ? இவ்வளவு கனிந்த உள்ளங்- கள் வாழாது வாடுமா! வருவார்! வருவார்! பாதிரிப் பூ வீடேறி வந்ததுபோல அவரும் வீடேறி வருவார்.ஆனால், உலகம் என்ன சொல்கிறது தெரியுமா? தன்னலத்தில் மூழ்கிய உலகம் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளாம் உன்னிடமும் தன்னலமே காண்கிறது.
தலைவி: என்ன சொல்கிறது?
தோழி: அகமுடையான் அருகே இருக்கவேண்டும் என அழுகிறாயாம்!
தலைவி: அவர்கள் இன்பத்தின் நுட்பம் அறியார். இன்பம், உண்பதும் உறங்குவதுமா? அருகில் இருந்தால்- மட்டும் இன்பமோ? செயலில் ஈடுபட்டு, உலகினை மறந்து, உழைத்து உதவுவதில் பிறக்கும் ஆறுதலான நிறை- மனமே இன்பம் – பிறர் வாழத் தான் வாழும் வாழ்வே வாழ்வு. காதல் வாழ்வு அதனாலேயே சிறந்தது. வேளாண்மை வாழ்வு இல்லை என்பதே வாட்டம். அதனை மறந்தாரே என்பதே துன்பம். பலபல இன்ப வுலகக்- கனவு காணும் மனம் உடைகிறது. அதற்கும் மேலாக. இந்த ஏழை இளம் பெண்ணையும் இவ்வாறு பாவத்திற்கு உள்ளாக்குகிறோமே என்று மனம் நைகிறது. கூட்டுறவில் தழைக்கிறது அறவுலகம். தனி வாழ்வில் காய்கிறது பழி- யுலகம். அதனைப் படைக்கப் பிறந்து இதனைப் படைக்- கிறோமோ என்ற துன்பத்தினும் பெருந்துன்பம் எது?
இப் பாலை பாடிய பெருங் கடுங்கோ என்ற சங்கப் புலவர் 11 வரியில் இந்த நாடகம் எழுதுகிறார் :
அடைகரை மாஅத்து அல்குசினை ஒலியத்
தளிர்கவின் எய்திய தண்நறும் பொதும்பில்
சேவலொடு கெழீஇய செங்கண் இருங்குயில்
புகன்றுஎதிர் ஆலும் பூமலி காலையும்
அகன்றோர் மன்றநம் மறந்திசி னோர்என
இணருறுபு உடைவதன் தலையும் புணர்வினை
ஓவ மாக்கள் ஒள்அரக்கு ஊட்டிய
துகிலிகை அன்ன துய்த்தலைப் பாதிரி
வால்இதழ் அலரி வண்டுபட ஏந்திப்
புதுமலர் தெருவுதொறும் நுவலும்
நொதும லாட்டிக்கு நோம்என் நெஞ்சே.
–நற்றிணை 118.
– நற்றிணை நாடகங்கள், முதற் பதிப்பு: டிசம்பர் 1954, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.
![]() |
தெ.பொ.மீனாட்சிசுந்தரம் (08 சனவரி 1901 – 27 ஆகத்து 1980) 20-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தமிழறிஞர்களுள் ஒருவர். இறந்த ஆண்டு: ஆகஸ்ட் 27 – 1980. பிறந்த ஊர்: சிந்தாதிரிப்பேட்டை (சென்னை). மொழிப்புலமை : தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம், ஒப்பிலக்கியம், மொழியியல் குறித்த பல கட்டுரைகளையும், நூல்களையும், திறனாய்வுகளையும் எழுதியுள்ளார். சிறப்பு பெயர்கள்: பன்மொழிப்புலவர்,…மேலும் படிக்க... |
