பவுன் செடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 1, 2025
பார்வையிட்டோர்: 1,367 
 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அடுத்த வீட்டுச் சொர்ணத்துக்குக் குழந்தை ராதாவைக் கண்டால் வெகு ஆசை. தினம் மூன்று நான்கு தடவை, ராதாவைத் தூக்கிக்கொண்டு போய் விடுவாள். இன்றும் அவளைத் தவிர, வேறு யார் தூக்கிக்கொண்டு போயிருக்கப் போகிறார்கள்? 

“ராதாவுக்குக் காபி கொடுத்தாகிவிட்டதோ?” என்றார் சாமிநாதன். 

வெற்றிலைத் தாம்பாளத்தை மேஜைமீது வைத் துக்கொண்டே முகத்தில் சுளிப்புடன் கலந்த ஒரு புன்சிரிப்போடு அவர் மனைவி கூறலானாள்: “அது என்ன, சேர்ந்தாற்போல் அரைமணி நேரம் வீட்டில் இருக்கமாட்டேன் என்கிறது” என்றாள். 

ராதாவுக்கு வயது மூன்று நிறையவில்லை. பேசத் தெரியாது. கொஞ்சம் கொஞ்சம் சமிக்ஞை தெரியும். அரையும் குறையுமாக ஓர் உளறல் மாத்திரம் இப் போது வர ஆரம்பித்திருக்கிறது. தானாக நடந்து அடுத்த வீட்டுக்கு அவள் போகமாட்டாள்.சொர்ணந் தான் எடுத்துக்கொண்டு போயிருக்க வேண்டும். என்றாலும், ‘ராதா வீட்டில் இருக்கமாட்டேன் என் கிறது’ என்றுதான் அவளுடைய தாய் சொல்லுகிறாள். ஊரில் உள்ளவர் செய்ததையெல்லாம் ராதா செய்த தாகச் சொல்லுவதில் அவளுக்கு ஒரு சந்தோஷமா? இல்லை; அவள் மனத்துக்கு அப்படித்தான் தோன்றுறது. அவள் என்ன செய்வாள்? 

”சரி; குழந்தையைப் போய்ப் பார்.” 

சாமிநாதனின் மனைவி தங்கம், “நல்ல வேலை இது!  – தெருவெல்லாம் நான் சுற்றமாட்டேன். வறபோது வரட்டும்” என்று தலையைப் பலமாக அசைத்துக்கொண்டு திரும்பினாள். 

“பின்னே யார் போய்ப் பார்ப்பது? அந்த ஏழை வேலைக்காரியையும் துரத்தியாகிவிட்டது” என்றார் சாமிநாதன். 

படம் எடுத்த சர்ப்பம்போல் ஒரு சுற்றுச் சுற்றிக் கம்பீரமாக நின்ற தங்கம், ‘வேலைக்காரியா அவள்? திருட்டுச் சிறுக்கி; பச்சைக் குழந்தை கழுத்தில் போட்ட பவுன்காசைத் தஸ்கரம் செய்துவிட்டாள்! கிரா,தகி, அவள் வேறே எதைத் தூக்கிக்கொண்டு போனாலும் பொறுத்துக்கொண் டிருப்பேன். பச்சைக் குழந்தை..” என்று அடுக்கிக்கொண்டே போனாள். 

சாமிநாதன் கல கல என்று சிரித்தார். தங்கத் துக்கு ஆத்திரம் அதிகமாயிற்று. 

“என்ன சிரிப்பு, நாசமாய்ப் போகிற சிரிப்பு! அந்தப் பரட்டை திருடியிருக்கமாட்டாள் என்றே இன்னும் நீங்கள் நினைத்துக்கொண் டிருக்கிறீர்கள். அந்தக் கழுதையை ஜெயிலில் போட்டிருக்கவேண்டும். நம் வீட்டில் செய்தது போதாதா? இன்னும் யார் வீட்டிலாவது செய்யவேண்டுமென்று விட்டு விட்டீர்கள்” என்றாள் தங்கம். 

“நான் விட்டுவிட்டேனா? நான் வருவதற்குமுன் நீயே துரத்திவிட்டாயே. நான் இருந்தால் அவளை இப்படி அனுப்பியிருக்க மாட்டேன். அந்த ஏழைப் பரட்டை ரொம்பப் பயந்தவள்; சாது. பவுனைக் கொண்டுபோய் அவள் என்ன செய்வாள்?” 

”ரொம்பச் சரி” என்று அழுத்தந் திருத்தமாகச் சொன்ன தங்கம், ‘வெளியே போய்த் தேடிக் கண்டு பிடித்து ஒரு பல்லாக்கு வைத்து வேண்டுமானால் அழைத்து வாருங்களேன்” என்றாள். 

“பல்லாக்கு அவளுக்கு எதற்கு? அது உனக்கும் எனக்குந்தான் வேண்டும். அவள் நடந்து வருவாள். அதில் ரொம்பச் சந்தோ மாகவும் வருவாள். 

இதற்குமேல் தங்கத்தினால் தாள முடியவில்லை. “நீங்கள் புரொபஸர்; சித்திரமாகப் பேசுவீர்கள். இதுக்கெல்லாம் பதில் சொல்ல என்னால் முடியுமா?’ என்று சொல்லி அப்பால் போய்விட்டாள். 

ராதாவின் கழுத்திலிருந்த தங்கப் பவுன் காணா மல் போனதென்னவோ வாஸ்தவம். சாமிநாதன் ஒரு புரொபஸர் என்பதும் நிழந்தான். சரித்திரத்தை விடத் தர்க்க சாஸ்திரத்தில் அவருக்கு ஒரு பிரியம். தாம் காலேஜுக்குப் போயிருந்த சமயத்தில் பவுன் காசு காணாமல் போனது, பரட்டையை மனைவி துரத்தியது ஆகிய இரண்டு சம்பவங்களும் நடந்து விட்டன. பவுன்காசு காணாமல் போனதை எப்படி, எப்போது, எந்த இடத்தில் மனைவி கண்டுபிடித்தாள் என்பதை, ‘ஸ்காட்லண்டுயார்டு’ துப்பறியும் உத்தி யோகஸ்தரைப்போல் விசாரித்துப் பார்த்தார். மனைவி படபடவென்று பதில் சொன்னாளே தவிர, துப்புத் துலங்க ஒரு வழியையும் காணவில்லை. ‘பரட்டை திருடியிருக்க மாட்டாள்’ என்று மாத்திரம் என்னவோ அவர் மனத்தில் பட்டது. அப்படியானால், யார் திருடி யிருப்பார்கள்? சொர்ணத்தினிடம் சாமிநாதனுக்கு ஒரு சந்தேகம் உண்டாயிற்று. அதற்குக் காரணம் இல்லை. 

சொர்ணம் சம்பந்தப்பட்ட மட்டில் அவ ருடைய தர்க்கசாஸ்திர மூளை, காரணத்தைப்பற்றிக் கவலைப்படவும் இல்லை. அந்தச் சொர்ணம்! தாம் அவளோடு சண்டைபோட வேண்டுமென்றுகூட அவருக்குத் தோன்றிற்று. நாற்காலியில் உட்கார்ந்த படியே அது சுழல் நாற்காலி-இரண்டு மூன்று பிரதட்சிணம் செய்த வண்ணம் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தார். 

அடுத்த வீட்டுச் சொர்ணம் ராதாவைக் கொண்டு வந்து விட்டுவிட்டு, “அதோ பார், உன் அப்பா” என்று நகைத்துக்கொண்டே சுட்டிக் காட்டினாள். ஒரு நாணம், அதிலே ஒரு நகைப்பு – இரண்டோடும் மின்னலைப்போல் சாமிநாதனை ஒரு பார்வை பார்த்து விட்டு, “குழந்தையைப் பாத்துக்குங்க, ஐயா” என்று சொல்லி, மருள்கொண்ட மான்போல் துள்ளிக் குதித்து ஓடிவிட்டாள் சொர்ணம். 

சண்டைபோடத் தயாராக இருந்த சாமிநாதன், சொர்ணத்தை நேரே கண்டபோது, வாய் திறவாமல் ஊமையாயிருந்தார். வெட்கமா, பயமா, மன இளக்கமா – அது என்ன? அவருக்கே தெரியவில்லை. 

இன்று மாத்திரம் அல்ல; ஏறக்குறைய ஒரு வாரத்துக்குமேல் ஆகிவிட்டது. வழக்கம்போலச் சொர்ணமும் வந்துகொண்டும் போய்க்கொண்டுந்தான் இருக்கிறாள். ஒரு நாள்கூடச் சொர்ணத்துடன் சண்டைபோடச் சாமிநாதனுக்கு மனம் துணிய வில்லை. அதுமாத்திரம் அல்ல; சொர்ணத்தைக் கண்ணால் பார்ப்பதைக்கூட நிறுத்திவிட்டார். அதில் என்னவோ அவருக்கு ஒரு பயம் உண்டாகிவிட்டது. ஆனால், சொர்ணத்தைப்பற்றி இப்படி என்ன என்னவோ யோசனைகள் அவர் மனத்தில் உதயமாயினவே எதையாவது மனைவியிடம் சொல்லலாமே? சொல்லவே இல்லை. அது ஏதோ குற்றம்போல் அவர் மனத்தில் ஓர் உணர்ச்சி உண்டாயிற்று. 

சுமார் பத்து நாள் கழிந்திருக்கும். குழந்தை ராதா தள்ளாடித் தள்ளாடிக்கொண்டு உள்ளே ஓடி வந்தாள். உள்ளே கூடத்தில் சாமிநாதன், தங்கம் இருவரும் சிரிப்பும் கேலியுமாகப் பேசிக்கொண் டிருந் தார்கள். “அடசெல்லக் குஞ்சு!-எப்படித் தனியா வந்தது?’ என்று கையில் ராதாவை வாரியெடுத்த தங்கம், ஆர்வத்துடன் முத்தமிட்டுக்கொண்டாள். 

ராதாவோ கீழே கையைக் காட்டி இறங்க வேண்டுமென்று சமிக்ஞை செய்து கத்தினாள். இறக்கி விட்டாயிற்று. 

தங்கத்தின் சேலை முன்றானையைப் பிடித்து இழுத் துக்கொண்டு. ‘ஓ! ஓ!” என்று மறுபடியும் கத்திய துடன், உருப்புரியாமல் ஏதோ உளறிக் கொட்டினாள். 

‘எங்கேயோ கூப்பிடுகிறாள்!’ என்று தங்கம் கூடவே போனாள்; சொர்ணத்தின் வீட்டுக்குத்தான். உள்ளே போயாயிற்று. அங்கும் நிற்கவில்லை. கொல்லைப் பக்கம் அழைத்துச் சென்றாள். சொர்ணம் இதைப் பார்க்கவில்லை. அவள் சமையல் அறையில் ஏதோ வேலையாக இருந்துவிட்டாள். 

வீட்டுப் புறக்கடையில் குப்பைமேட்டுக்குப் பக்கத்தில் சொர்ணத்தின் மகன் – ஆறு, ஏழு வய துடைய மாணிக்கம் – குனிந்து உட்கார்ந்திருந்தான். அவனுடைய முப்பத்திரண்டு பல்வரிசையும் தெரியும் படி குதூகலத்தோடு, “அது முளைச்சிடுச்சு; நான்தான் உங்களைக் கூட்டிவரச் சொன்னேன் – பாருங்கம்மா” என்று, ஏதோ ஒரு முளையைக் கையால் தொட்டுக் காட்டினான். ‘என்னவோ குழந்தை விளையாட்டு என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்ட தங்கம், “இது என்ன செடி, அப்பா?” என்று கேட்டாள். 

“ஓ! அது காசு காய்க்கப் போகுது. நல்லா முளை விட்டிடுச்சு” என்றான் மாணிக்கம். 

தங்கத்துக்குச் சட்டென்று ஒரு சந்தேகம் தோன்றிற்று. அந்த முளை இருந்த இடத்தைக் கையினால் கல்லிப் பார்த்தாள். நினைத்தபடி, காணாமல் போன பவுன் அகப்பட்டுவிட்டது! தங்கத்துக்குப் பரம சந்தோஷம். பத்து வயதுச் சிறு பெண்ணைப்போல், ராதாவை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு, இரண்டு எட்டில் வீட்டுக்கு ஓடி வந்தாள். சாமிநாத னிடம் பவுனைக் காட்டினாள். இரைக்க இரைக்க அரை அரை வாக்கியமாக நடந்த சங்கதியைச் சொன்னாள். 

அந்த இரைப்போடு இரைப்பாக. “பாவம்!- அந்தப் பரட்டையைத் துரத்திவிட்டோம்.- அவள் தான் வந்து உங்களையாவது பார்க்கப் படாதோ” என்றாள். 

”ஆகா! வந்து பார்க்க மாட்டாளோ? எங்கே வேலை கிடைத்ததோ? அல்லது பிச்சையெடுத்துச் சோற்றுக்குத்தான் அல்லாடுகிறாளோ?” என்றார் சாமிநாதன். 

தங்கம் அழாக்குறையாக, “என்னைக் கண்டால் ஏன் உங்களுக்குக் கரிப்பாக இருக்கிறது? நான் என்ன செய்வேன்? அந்த அசட்டுப் பரட்டை வந்தால்…….” என்று சொல்லி முடிக்குமுன், சொர்ணம் அங்கே வந்து சேர்ந்தாள். 

வழக்கம்போல் அன்ன நடைதான்; மின்னல் பார்வைதான்; குறும்பு நகைப்பும் தளுக்கு நாணமும் கூட உண்டு. 

“ராதா இங்கே வந்திடுச்சா? நான் அங்கெல்லாம் தேடிக்கிட்டிருக்கேன்” என்றாள் சொர்ணம். 

சாமிநாதன் அவளை ஒரு முரட்டுப் பார்வை பார்த்துவிட்டு. ருத்திரன்போல் முகத்தைக் கடுத்து, “இந்தா,இனிமேல் இந்தப் பெண்பிள்ளையை இங்கே வரவிடாதே!” என்று கத்தினார். 

இடி கேட்ட நாகம்போல் ஒடுங்கிய சொர்ணம் பதில் சொல்லாமல், பூனைபோல் நடந்து வெளியே போய்விட்டாள். சாமிநாதனின் கோபத்துக்கு அவள் காரணம் கேட்கவில்லை. ஆனாலும், அது நியாயந்தான் என்று அவள் உணர்ந்ததுபோல் தோன்றியது அவள் நடந்துகொண்ட பாவனை. அன்று போனவள் தான்; அப்புறம் அவள் இந்த வீட்டுப்பக்கம் திரும்பிப் பார்க்கவே இல்லை. 

காரணம் கேட்டிருந்தால்தான் என்ன? தங்கம் பின்னால் எத்தனையோ தடவை வேடிக்கையாகவும் கேலியாகவும் விநயமாகவும் கேட்டுப் பார்த்தாளே; சாமிநாதனால் அவரது அந்தக் கோபத்துக்கு என்ன காரணம் சொல்ல முடிந்தது? என்னவாவது சொல்லிச் சிரித்து மழுப்புவார்; அல்லது ராதாவை எடுத்துப் பெருமூச்சுடன் கொஞ்சி இரண்டொரு முத்தம் கொடுத்து, “நம் கண்ணு! பவுன் செடி முளைக்கப் போட்டுவிட்டது, பவுன் பவுனாகக் காய்க்க! நமக் கென்ன குறை?” என்று நகைத்து, பேச்சை மறக்கடிப்பார். 

– நொண்டிக் கிளி, முதற் பதிப்பு: ஸெப்டம்பர் 1949, கலைமகள் காரியாலயம், சென்னை.

தி.ஜ.ரங்கநாதன் தி.ஜ.ர எனப் பரவலாக அறியப்படும் திங்களூர் ஜகத்ரட்சக ரங்கநாதன் (1901-1974) ஒரு தமிழ் எழுத்தாளர், இதழாளர். தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். இவர் 1901 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவையாற்றுக்கு அருகிலுள்ள திங்களூரில் பிறந்தார். நான்காம் வகுப்பு வரைதான் படித்தார். அறிவியலிலும் கணிதத்திலும் ஆர்வம் கொண்டு அவற்றைப் புரிந்துகொள்வதற்காகவே ஆங்கிலம் படித்தார். கர்ணமாக வேலை பார்த்த தன் தந்தையுடன் பல ஊர்களுக்குச் சென்றார். நில அளவையில் பயிற்சி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *