பழம் பெருமை





(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு பெரிய கிராமம். அதன் உள்ளே ஒரு பிரதான பாதை. அப்பாதையின் ஒரு கரையிலே, நடுத்தர வயதை யுடைய ஒரு நாய் படுத்துக்கிடந்தது. சதை வற்றிப் போன அந்நாய், தவிட்டு நிறமானது. மயிர்கள் அடர்த்தியின்றித் தேகத்தோடு ஒட்டிக்கிடந்தன. விழிகளைச் சற்றே இடுக் கியவாறு பார்வையை எதிரே விரித்திருந்தது. அப்போது…
அவ்வழியாக ஓர் இள நாய் சிறிது விலகி, ஆனால் வெகு கம்பீரமாய் நடந்து அதனைக் கடந்தது.

‘வெகு அலட்சியமாக நடந்து போகிறானே இவன் யார்?’
நடுத்தர வயதான நாய் இவ்வாறு தனக்குள்ளே எண்ணமிட்ட வண்ணம் தலையை உயர்த்தி விழிகளை அகல விரித்து அந்த இள நாயை நோக்கியது.
“மதித்து மரியாதை செய்யத் தெரியாதவன்… அடேய்… நீ யார்?” கோபக் கனல் தெறித்தது நடுத்தர வயதான அந்நாயின் விழிகளிலே.
அந்த இள நாயோ, விசுக்கென்று திரும்பி அதன் அருகே வந்தது.
“நானா…நானும் உன்னைப் போல் ஒருவன் தான்…” அமைதியாக விடையளித்த இள நாய் மேலும் தொடர்ந்தது:
“நான் சாதாரணமாய் மூத்தோர் ஒருவருக்குச் செய்ய வேண்டிய மதிப்பையும், மரியாதையையும் செய் தேன். ஆனால், உன்னைப் பார்த்தால், என்னிடமிருந்து அவற்றைப் பெரிதாக எதிர்பார்க்கிறாய் போல் தெரிகிறது. நீ யார்?” என்றுவிட்டு நிலத்திலே கால்களை நன்கு ஊன்றிக் கொண்டது.
“நானா விபரமாகச் சொல்லுகிறேன் கேள்… எங்கள் இனத்தவர்கள். இப் பூமியிலே வலிமை மிக்க பல இடங்களைக் கைப்பற்றி ஆட்சி புரிந்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, அவர்கள் வெகு காலத்திற்கு முன்பே, இன்று வேறு இனத்தவர்கள் சிறந்து விளங்குகின்ற துறைகளில் பலவற்றிலே, மிகவும் சிறந்து விளங்கியுமிருக்கிறார்கள். அப்படியான அந்த இனத்திலே வந்தவன் நான். இப்போது விளங்குகிறதா நான் யாரென்று”
“ஓஹ்… ஹோ… அதனால் தான் மற்றவரிடமிருந்து இவ்வாறு மதிப்பையும், மரியாதையையும் எதிர் பார்க்கின் றாயோ?”
“என்னடா… சேச்… சே… நீ உலகம் தெரியாத வனாக அல்லவா இருக்கின்றாய். இதையும் சொல்லியா தெரிந்து கொள்ள வேண்டும்”
“நீ நினைப்பது போல் நான் உலகம் தெரியாத வனல்லன். விஷயங்களை நன்கு அறிந்து வைத்திருக்கிறேன். நீ கூறுவது போல் உன் இனம், பல சிறப்புக்களைப் பெற்றிருக்கலாம்.அந்தந்தச் சிறப்புகளைப் பெற்றுத்தந்தவர் களுக்கு நாம் பெரிதாய் மதிப்பும், மரியாதையும் செலுத் துவதில் தவறில்லை. ஆனால் அந்த இனத்தில் வந்தவர் நீர் என்பதற்காக எதுவுமே சாதிக்காத உமக்கு நீர் நினைப்பது போல், பெரிதாய், மதிப்பும், மரியாதையும் செலுத்துவது எப்படி…? இது என்னடா பகிடியாயிருக்கிறது…” என்று விட்டு,
‘ஹாஹ்…ஹாஹ்…ஹா… ” என்று வாய் விட்டுச் சிரித்தது அந்த இன நாய்.
கோபம் தாங்காத நடுத்தர வயதான நாய், விசுக் கென்று எழுந்து,
“என்னடா என்னைக் கிண்டலா பண்ணுகிறாய்…” என்று இயம்பியவாறு அந்த இள நாயைக் கடித்தது.
“ஒரு முறை கடித்து விட்டாய் நீ வயதிலே மூத்த வராகவும் இருக்கிறாய்… சரி, அதைப் பெரிதாகப் பொருட் படுத்த வில்லை. நமக்குள் இனி சன்டை வேண்டாம். ஒதுங்கிப் போய் விடு”
‘ஒதுங்கிப் போவதா… உனக்கு நல்ல பாடம் படிப் பிக்கிறேன்” மீண்டும் நடுத்தர வயதான நாய் இள நாயைக் கடித்தது.
இப்போது பொறுமை இழந்த இள நாயோ, நடுத்தர வயதான அந்நாயைக் கடிக்க, சண்டை வலுத்தது.இரண்டும் வீட்டுக் கொடுக்கவில்லை. பாய்ந்து பாய்ந்து கடித்தன; கடித்துக் கொண்டு உருண்டன.
அவ் வேளையிலேதான் நடுத்தர வயதையுடைய அந்த நாயின் கடைசித் தம்பியும் அங்கே வந்து சேர்ந்தது. ‘ம்..ஹு.’ என்று மூச்சை விட்டுக் கொண்டு சண்டையைக் கவனித்தது. ஒரு பக்கம் அண்ணன். மறு பக்கம் நண்பன். திக்குமுக்காட வைத்தது. ஒரு கணம்தான். மறு கணம் தன்னைச் சமாளித்துக்கொண்டு அவற்றை ஊன்றி நோக்கியது.
“ஹேய்… சண்டையை நிறுத்துங்கள்…” என்றது. அதன் சப்தம் ‘பொம்’ வெடித்தது போல் அதிர்ந்தது.
இரண்டும் சண்டையை நிறுத்திக் கொண்டு, நடுத்தர வயதையுடைய நாயின் தம்பியான, அப்புதிய நாயை நோக்கிப் பரபரவென்று விழித்தன. சில வினாடிகளின் பின் புதிய நாய் அவ்விரு நாய்களையும் நோக்கி நடந்த விடயத்தை வினவியது. அப்போது அவ்விரண்டு நாய்களும் அதனிடம் தனித்தனியாய் நடந்த விடயத்தை அப்படியே பிட்டு வைத்தன. மறுகணம், தன் அண்ணனான அந்த நடுத்தர வயதையுடைய நாயை நோக்கி புதிய நாய் பின் வருமாறு பகர்ந்தது:
“அண்ணா உங்கள் இருவரின் உரைகளிலிருந்தும் இங்கே நடந்த விஷயங்களை நான் நன்கு தெரிந்து கொண்டேன். இதைக் கொண்டு பார்க்கும் போது, உன் மேல் தான் முழுக்க முழுக்கப் பிழையிருக்கிறது. மற்றைய இவர்மேல் எதுவித பிழையுமே இல்லை. நீர் பகர்ந்த வார்த்தைகள் மிகவும் பொருத்த மற்றவை.ஆனால், எனது நண்பரான இவர் இயம்பிய வார்த்தைகளோ மிகவும் வாஸ்தவமானவை. திறந்து சொன்னால் இந்த விடயத் திலே, நானும் இவரது கருத்தையே கொண்டிருக்கிறேன். ஆகையினாலே, நாம் நமது இனத்தைச் சேர்ந்தவர்கள், அப்படிச் செய்தார்கள் இப்படிச் செய்தார்கள். அதிலே சிறந்து விளங்கினார்கள் இதிலே சிறந்து விளங்கினார்கள் என்று பழம் பெருமை பேசுவதிலே பயனில்லை. இப்படிப் பழம் பெருமை பேசிப் பேசி…பெருமையிலே மூழ்கிக் கிடந்ததனால் தான், இன்று நமது இனம் இவ்வளவு கீழ் நிலைக்கு வந்திருக்கிறது. அதை விட்டுவிட்டு நாம். ஒவ்வொருவரும், ஒவ்வொரு சாத்னையை நிலை நாட்ட முன்வர வேண்டும். அல்லது சிறப்பு மிகு செயல் ஏதாவது செய்ய முன்வர வேண்டும். அப்போதுதான் நமக்கு மதிப்பும் மரியாதையும் நிறையவே குவியும். அது மட்டுமல்ல, நமது இனமும் முன்னேறும்” என்று உறுதியோடு நிமிர்ந்து நின்றது அந்தப் புதிய நாய்.
இதனைச் செவிமடுத்த அந்த நடுத்தர வயதான நாய், இவ்வாறு இயம்பியது:
“தம்பி… நான் தவறுதலாய் எண்ணிக் கொண்ட தனால் தான், இதுவரை பிழையாக நடந்து கொண்டேன். ஆனால், நீயும், என்னோடு பொருதிய இந்த இள நாயும் கூறிய வார்த்தைகள் மிகவும் சரியானவையே, என்பதை நான் இப்போது தான் உணர்கிறேன். ஆகையினாலே, இனிமேல் நான் இவ்வாறு பிழையாக நடந்து கொள்ளாது. நனி சிறந்த காரியம் ஏதாவது செய்து நன்றாக வாழ்வேன்’ என்று வீட்டுத் தலையைக் கவிழ்த்துக் கொண்டது நடுத்தர வயதான நாய்.
இப்போது, நடுத்தர வயதையுடைய நாயின் தம்பியும் இள நாயும், ஒன்றை ஒன்று பார்த்துப் புன்னகை பூத்துக் கொண்டன.
– தினகரன் வார மஞ்சரி – 1987.03.15.
– நாங்கள் மனித இனம் (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1991, கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியீடு.
![]() |
உதுமாலெவ்வை ஆதம்பாவா (பிறப்பு: ஜூன் 15 1939) இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தன் பங்களிப்பினை வழங்கிவரும் மூத்த இலங்கை எழுத்தாளர்களுள் ஒருவராக திகழ்கின்றார். இலங்கை இலக்கிய வரலாற்றில் பல தரமான எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை மணிக்குரலுக்குண்டு. ஆதம்பாவாவின் முதல் ஆக்கத்துக்குக் 'களம்' கொடுத்ததும் 'மணிக்குரலே'. 1961ம் ஆண்டு 'மலையருவி' எனும் தலைப்பிலான கவிதை மூலம் இலக்கிய உலகில் இவர் பாதம் பதித்தார். அன்றிலிருந்து இன்று வரை காத்திரமான 45 சிறுகதைகளையும்,…மேலும் படிக்க... |