பனி பெய்யும் இரவுகள்
கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 25, 2025
பார்வையிட்டோர்: 4,586
(1993ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
அத்தியாயம் – 7

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்துவிட்டு உள்ள செல்வத்தை எல்லாம் சுருட்டிக் கொண்டு போனபின் இரு நாடுகளிலும் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுடன் வளர்ந்தவர்கள் அருளம்பலமும் சத்தியமூர்த்தியும்.
இருவரும் இந்தியாவிற் தங்கள் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டவர்கள். இணைபிரியாத சினேகிதர்கள்.
அடையாற்றில் ஒரு வீட்டிலிருந்து ஒன்றாகப் படித்த வர்கள். விடுமுறை நாட்களில் தஞ்சாவூருக்கும் சிவகாசிக் கும் போய் இனிதே பொழுது கழித்தவர்கள். குற்றால நீர் வீழ்ச்சியிற் குளித்து குதூகலம் கண்டவர்கள். இளமை யும் கனவுகளும் வாழ்க்கையின் இன்னும் எதிர்பார்க்கப் போகும் அனுபவங்களை ஆரோக்கியமான, கௌரவமான நீதியான கண்களுடன் நோக்க வேண்டும் என்ற உறுதி கொண்டவர்கள்.
எத்தனையோ சாதாரண மனிதர்களில் அவர்கள் அசாதாரண மனிதர்களாகத்தானிருக்க வேண்டும். அருளம்பலம் இலங்கை வந்து சேர்ந்ததும் சத்தியமூர்த்தி யின் வீட்டுக்கு வந்துபோக அந்த உறவு சத்தியமூர்த்தியின் தங்கை காந்திமதியைக் கல்யாணம் செய்யுமளவுக்கு வளர்ந்து விட்டது.
அது ஒன்றும் காதற் கதையல்ல. இரு குடும்பங்களும் பேசி வைத்த கல்யாணம். காந்திமதி எந்தத் தமிழ்ப் பெண்களுக்கும் விதிவிலக்கானவளல்ல. அட்டியலுக்கும், கை வளையல்களுக்கும் கனவு காண்பவள் தான். பார்க்கப் பரவாயில்லாத – படித்த தன் தமையனுக்குத் தெரிந்த – அதிக சீதனம் எதிர்பார்க்காத அருளம்பலத்தைக் கட்ட அவள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று அவள் சினேகிதிகள் சொல்லிக் கொண்டார்கள்.
அருளம்பலத்துக்குக் கொழும்புலேயே ஒரு தனியார் கொம்பனியில் வேலை கிடைத்துவிட்டது. காந்திமதிக்குக் சீதனமாக வெள்ளவத்தையில் ஒரு வீடு; அருளம்பலத்தின் வாழ்க்கை மிக சௌகரியமான ரீதியில் ஆரம்பமாயிற்று.
அருளம்பலம் தன் தங்கையைக் கல்யாணம் செய்ய யோசித்தபோது சத்தியமூர்த்தியால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
அருளம்பலம் கலையை, இயற்கையை ரசிப்பவர். ஆயிரம் புத்தகங்களானாலும் அவற்றை எல்லாம் ஆர்வத்துடன் வாசிப்பவர்.
காந்திமதி கலைமகளையும் கல்கியையும் மட்டும் வாசிப் பவள். அதிலும் ராஜகோபாலாச்சாரியார் போன்றவரது கட்டுரைகள் தவிர வேறொன்றும் வாசிக்கமாட்டாள்.
பெரிய கடவுள் பக்தியுள்ளவள் என்றில்லை. ஆனால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பின்னேரமும் பம்பலப்பிட்டிக் கோயிலுக்குப் பூசைத்தட்டுடன் போக மறக்காதவள். சத்தியமூர்த்தியும், அருளம்பலமும் கொழும்பு காலிமுகத் திடரில் அமர்ந்திருந்து, மாலையிளம் வெயிலில் பச்சைப் புல்தரையில், அலையோடும் கடல் பார்த்திருந்து கலை பற்றி, அரசியல் பற்றி பேசுவதெல்லாம் அருளம்பலம் காந்தி மதி கல்யாணத்துடன் குறையத் தொடங்கியது.
சத்தியமூர்த்திக்குப் பதுளை நகரில் ஒரு கல்லூரியில் ஆங்கில ஆசிரியர் வேலை கிடைத்தது. அங்கு சென்றதும் அவர் பதுளை நகரின் இயற்கையழகிற் சொக்கி விட்டார்.
வான் தொடும் மலை முகடுகள், அந்த முகடுகளில் முத்த மிடும் நீலவானம், மலையடிவாரத்தில் நடனமிடும் நதிகள், குன்றுகளைத் தடவிப்பாயும் நீர்வீழ்ச்சிகள். மலை நாட்டில் செல்வம் தரும் தேயிலைத் தோட்டங்கள், அந்தத் தோட்டங்களில் தங்கள் உழைப்பை, உடலை, வாழ்க்கை யைத் தானம் பண்ணும் இந்திய வம்சா வழித் தமிழர்கள். அவர் அந்தச் சூழ்நிலையிற் சொக்கிவிட்டார். அதே ஊரில் அப்போது நல்லநாயகம் ஒரு சுகாதார அதிகாரி யாக இருந்தார். இருவரும் ஒரு நாள் எவரோ ஒருவர் வீட்டில் விருந்தில் சந்தித்துக் கொண்டார்கள்.
சத்தியமூர்த்தி ஒரு வீட்டில் அறை எடுத்துக் கொண்டிருந் தார். வீட்டுக்காரத் தமிழர்.கீழே கடையும் மேல் மாடியில் குடித்தனமும் வைத்திருந்தார். காலையில் எழுந்து பின்னேரமாகும் வரைக்கும் ஒரே சந்தடி.
பாடசாலை விட்டு வந்து ஓய்வான நேரத்தில் புத்தகம் வாசிக்க முடியாத சந்தடியான சூழ்நிலை.
“ஒரு சின்ன தனி வீடாகப் பார்த்தால் என்ன?”
சத்தியமூர்த்தி நல்ல நாயகத்தைக் கேட்டார்.
இருவரும் கல்யாணமாகாதவர்கள். நல்லநாயகம் ஒன்றும் கலை, அரசியல், இசை, இயற்கை என்று புலம்பிக் கொள்ள மாட்டார். ஆனால் சுவாரசியமான மனிதர். வாழ்க்கையை ‘அனுபவிக்கத்’ தெரிந்தவர். இருந்து விட்டுக் குடிப்பார். வேறு ஏதும் ‘வேறு பழக்கங்களும் இருக்கலாம். அது பற்றி சத்தியமூர்த்திக்கு அக்கறை யில்லை. மத்திய தரத்தமிழர்கள் ஏழைச் சிங்களப் பெண் களையும் மலைநாட்டு இளம் தமிழ்ப் பெண்களையும் சந்தர்ப்பம் வந்தால் தடவிப் பார்க்கத் தயங்குவதில்லை என்று சத்தியமூர்த்தி எப்போதோ புரிந்து கொண்டார்.
நாராயணன்… என்பவன் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஒரு ஏழை நல்லநாயகத்துக்குத் தெரிந்த ஒரு தமிழ் வர்த்தகர் கடையில் வேலை செய்யும் ஒரு இந்தியத் தொழிலாளி. அவன் நல்லநாயகத்தை நீண்ட நாட் -களாகத் தெரிதவன். வாய்க்கு ருசியாகத் தன் தாய் சமைத்துப் போடுவாள் என்று சொன்னான்.
இலங்கைத் தமிழ் அரசியல் வாதிகள்.ஜி.ஜி.பொன்னம் பலம் போன்றோர், 130 வருடங்களுக்குமேலாக இலங்கைக் காட்டையழித்துத் தேயிலையால் நாட்டுக்குச் செல்வம் தேடிக் கொடுத்த இந்தியத் தமிழ் வம்சாவழித் தொழி லாளர்களை நாடற்றவர்கள் என்று பிரகடனப்படுத்திய பின் இந்தியத் தொழிலாளர்களுக்கு வகுப்புவாதச் சிங்களக்காடையினரால் அவ்வப்போது பிரச்சினை வரும். ஒரு ஏழை இந்தியனைச் சில வகுப்புவாதச் சிங்களவர்கள் ஏதோ சாட்டுச் சொல்லிப் புடைத்தால் ஏனென்று கேட்க நியாயமில்லாத நாட்கள் அவை. ஒன்றிரண்டு வருடங் களுக்கு முன் தான் நாராயணனின் தகப்பன் குடிவெறியில் யாருடனோ வாய்த்தர்க்கப் பட்டு அதனாற்தாக்கப் பட்ட தால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சில வாரங்களுக் குப் பின் இறந்துவிட்டான்.
“ஏழைக் குடும்பம் எங்களுக்குச் சமைத்துப் போட்டால் ஏதோ இருபது, முப்பது ரூபா கொடுத்துவிட்டுப் போகி றோம்.” நல்லநாயகம் வாய்க்கு ருசியாகச் சாப்பாடு தேடுபவர், ருசியை மலிவான உழைப்பிற் பெறத் தயங்காதவர்.
லட்சுமிக்கு நாற்பது வயதிருக்கலாம். பதின்மூன்றோ பதின்னாலோ வயதில் கல்யாணம் செய்து குடும்ப பாரம் ஏற்ற வடு வயதில் தெரிந்தது. தலை நன்றாக நரைத்து முன் பற்கள் விழுந்து விட்டாலும் அவள் முகத்தில் சீதேவித் தன்மை. சிரிப்பு எப்போதும் தயங்காமல் வந்து போகும்.
“ஆம்பிளங்கள் நம்பி எப்பிடி ஐயா சீவிக்கிறது, பொம் மனாட்டிங்க எப்படீன்றாலும் பிழைச்சுப் போகணும்” அவள் தன் கணவரைத் தாக்கிப் பேசுகிறாளா அல்லது எடுக்கும் சம்பளத்தின் பாதியைக் குடியிற் செலவழிக்கும் மகன் நாராயணனுக்காகத் தான் இந்த வார்த்தைகளைச் சொல்கிறாளா என்று தெரியாது.
அவள் சமையல் ருசியானது, சம்பாஷணை அலாதி யானது.ஒரு கிழமையிலேயே சத்திய மூர்த்திக்கு எப்போது லட்சுமியின் கைப்பட்ட சாப்பாடு கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டு விட்டது.
“ஐயா ஒங்களுக்குப் புண்ணியமாகப் போகும் எம் பொண்ணுக்கு இங்கிலிசு சொல்லித் தர்ரீங்களா ஐயா” லட்சுமி ஒருநாள் பின்னேரம் இவரைக் கேட்டாள்.
மாலை வெயில் மலை முகட்டில் மறைந்து கொண்டிருந்தது.
மலைச்சாரலை நதியணைத்து விளையாடியது.
இளம் தென்றற்காற்றில் கண்ணை மூடிப் படுத்திருந்தவர். லட்சுமியின் குரல் கேட்டுத் திரும்பினார்.
மெல்லிய பச்சையில் சிவப்புக்கரை போட்ட பாவாடை யுடன் ஒரு சிவப்புப் புள்ளிச் சட்டை போட்டு, பச்சைத் தாவணி போட்ட கோயில் விக்கிரகமா லட்சுமியின் மகள்?
வாசித்துக் கொண்டிருந்த பாவை விளக்கில் மனம் பதித் திருந்த சத்தியமூர்த்தி மாலை வெயில் கண்களிற் பிரதி பலிக்க தனக்கு முன் நாணத்துடன் குனிந்து நிற்கும் அந்த இளம் பெண்ணைப் பார்த்தார்.
”எம் பொண்ணு செந்தாமரைங்க” லட்சுமி முந்தானை யால் வியர்வை வழியும் முகத்தைத் துடைத்துக் கொண்டு சொன்னாள்.
செந்தாமரை!
எத்தனை பொருத்தமான பெயர்.
“பொண்ணு மாடு மாதிரி வளர்ந்திருந்தாலும் அவளுக்கு இப்போதுதான் பதினைந்து வயதுங்க”
இவளைப் பார்த்ததும் குற்றலாத்தில் குளித்த சுகம், மரீனா பீச்சில் மணல் அணைந்த உணர்வும், மலைச்சாரல் நதி யில் கால் பதிய நடந்த தெளியும். நிலவில் காணும் அழகும் ஏன் மனதில் வந்தது.
இவர் லட்சுமி கேட்டதற்குப் பதில் சொல்லவில்லை.
“எம் பொண்ணு டீச்சரா வர ஆசைப் படுதுங்க”
ஏழை இந்தியத் தொழிலாளியின் அந்தப் புனிதக் கனவு அவள் தொனியில் ஒலித்தது.
”ஐயா அவள் சொல்லிக் கொடுத்ததெல்லாம் நல்லாப் படிப்பாள் ஐயா” லட்சுமி குழைந்தாள்.
“யோசித்துச் சொல்கிறேன் லட்சுமி’ அவர் தன்னைத் தானே அடக்கிக் கொண்டார். அதன் பின் ஒரு மாதம் அவர் லட்சுமிக்குப் பதில் சொல்லவில்லை. காலையில் கல்லூரிக்குப் போகும் வழியில் தன்னைச் சில வேளை கடந்து செல்லும் செந்தாமரையை ஓரக் கண்ணாற் பார்ப்பார்.
ஒருநாள் நல்ல மழை. பாடசாலையிலிருந்து வந்து கொண்டிருந்தார். செந்தாமரை மழையில் நனைந்து போய்க் கொண்டிருந்தாள்.
“செந்தாமரை”
அவள் திரும்பிப் பார்த்தாள்.
நீர் நனைந்த மீனாக அவள் கண்கள். அவரை ஊடுரு வியது. அவள் தயங்கினாள்.
இடி இடிக்கத் தொடங்கியது.
மழை வானம் பொத்துக் கொண்டு பெய்தது.
“என் குடையில் வரவேண்டாம். நீயே பிடித்துக் கொள்” அவர் குடையை நீட்டினார். தேபிலைச் செடிகளில் நீர்த் துளிகள் படபடவெனக் கொட்டின.
அவள் கைகள் நடுங்கின.
ஏன் என்று தெரியவில்லை. குளிரிலா?
அவருக்குத் தெரியாது. அவள் குடையையும் அவரையும் பார்த்தாள். பின்னர் விடுவிடுவென்று மலையேறிப் போய் விட்டாள்.
இது வரை வாய் திறந்து ஒரு வார்த்தையும் அவள் பேசி இவர் கேட்டதில்லை.
அன்றிரவு அவர் தூங்கவில்லை, மழையில் நனைந்த செந்தாமரையின் உருவம் கனவில் வந்தது. அவருக்கு முப்பது வயதாகப் போகிறது.
தாய் தகப்பன் எத்தனையோ பெண்களைப் பார்த்து விட்டார்கள். தனக்குப் பிடிக்காத யாரையும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று சொல்லி விட்டார்.
“சரி உனக்குப் பிடித்த பெண்ணாக யாரையும் பாரேன்” தாய் தகப்பன் நச்சரிக்கத் தொடங்கி யிருந்தார்கள்.
அடுத்த நாள் தாயின் கடிதம் வந்திருந்தது. வழக்கப்படி எப்போது கல்யாணம் முடிக்கப் போகிறாய் என்ற கேள்வி.
ஒன்றிரண்டு நாட்கள் தனிமையிலிருந்து யோசித்தார். வாழ்க்கை முழுக்கப் பிரம்மச்சாரியாக இருக்க முடியாது. எப்போதோ இந்த மாதிரிச் செந்தாமரைகள் அவர் சிந்தனையைக் குலைக்கத்தான் போகிறார்கள்.
பதுளை நகரம் மார்கழி மாதக் குளிரில் தன்னைப் பிணைத்துக் கொண்டது.
மலை முகடுகளைப் புகார் கவ்விக் கொண்டது. மழை சோ வெனக் கொட்டி தேயிலை யிலைகளை வளம் செய்தது.
அவர் தூக்கமில்லாமற் தவித்தார். கடைசியாகத் தாய்க்கு ஒரு கடிதம் எழுதினார். “நீங்கள் பார்க்கும் பெண்ணைச் செய்கிறேன்,” அடுத்த மாதம் செல்வ மலரைத் திருமணம் செய்து கொண்டார்.
அத்தியாயம் – 8
தை பிறந்தது. செல்வமலர் திருமணம் நடந்த கை யோடு யாரோ எல்லாரையும் பிடித்து அவரைக் கொழும்புக்கு மாற்ற ஓடித் திரிந்தாள். அப்போது இலங்கையில் வகுப்பு வாதத்தின் விதை விதைக்கப்பட்டு விருட்சமாகிக் கொண்டு வந்தது. பண்டார நாயக்கர் பதவிக்கு வந்து சிங்கள மொழியை உத்தியோக பூர்வமாக்கியதைத் தொடர்ந்துத் தமிழ்த் தலைவர்கள் கோல்பேஸ் திடலில் தமிழுக்குச் சம அந்தஸ்துக்குக் கேட்டுச் சத்தியாக்கிரகம் இருந்தார்கள்.
சிங்களக் காடையர்களால் தமிழ்த் தலைவர்களுக்கு நல்ல அடி, இந்த ஊரில் “ஏன் இருக்க வேண்டும். நாங்கள் இங்கிலிஸ் படித்தவர்கள் லண்டனுக்குப் போனால் என்ன?” – செல்வமலர் கேட்டாள்.
அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. கல்யாணம் செய்து கொண்டது. சரி; இனி அவரின் வாழ்க்கையைச் செல்வ மலருக்காகத் தியாகம் செய்ய வேண்டுமா?
செல்வமலரின் நிகழ்ச்சி நிரலே வேறு. அவள் தனியார் கொம்பனி ஒன்றில் நல்ல சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள். வசதியான குடும்பம். அண்ணன்மார் நிறையக் கொடுத்திருந்தார்கள். எக்காரணம் கொண்டும் அவள் பதுளைக்குக் குடி பெயர்ந்து வரத் தயாராயில்லை.
சத்தியமூர்த்தி கல்யாணத்துக்காக எடுத்துக் கொண்ட ஒரு மாத லீவிற்தான் தன் எதிர்காலத்தைப் பற்றி யோசித் தார். செல்வமலர் – அவளின் பெரிய குடும்பம்; அவர்கள் அகராதியில் அவரின் எதிர்காலம்!
கொழும்பு கோல்டேஸில் சேர்ந்திருந்து அரசியல், கலை இலக்கியம் பேச அருளம்பலம் இப்போது தயாராயில்லை. “என்ன நீங்கள் இளம் பெடியன்களா செல்வமலர் கேள்வி கேட்டாள்.
சத்தியமூர்த்திக்குக் கர்நாடக சங்கீதத்தில் அதிக ஆர்வம். இந்தியாவில் வாழ்ந்தபோது கேட்டு ரசித்த நீலாம்பரியும் சல்யாணியும் செல்வமலரின் ஆங்கில றெக்கோர்டரின் சத்தத்தில் ஒலியிழந்து விட்டன. அவரால் எல்விஸ் ஃபிரஸ்லியைச் சகிக்க முடியவில்லை. ரொக் அன்ரோல்ட் மியுசிக்கில் செல்வமலருக்குப் பைத்தியம்.
விடுதலை நேரத்தில் அவருக்குக் கொள்ளுப் பிட்டியில் கடற்கரையில் நடக்க ஆசை. பாறையில் அமர்ந்திருந்து புத்தகம் வாசிக்க, ஓடிவரும் அலையில் கால் மிதிக்க ஆசை, அவளுக்கு அதெல்லாம் பிடிக்காது.
பட்டுச்சேலை சரசரக்க, தங்க நகை பளபளக்க அவள் உற்றார் உறவினர் வீடுகளுக்கு ஊர்வலம் போவாள். அவர்கள் பேச்சு லேற்றஸ்ட் சாரி,பிளவுஸ், தங்க மாளிகை நெக்லஸ் பற்றியிருக்கும்.
ஒரு மாதம் முடிய விட்டு பதுளைக்கு வந்து சேர்ந்தார்.
நாராயணன், இப்போது அடிக்கடி குடிக்கத் தொடங்கி விட்டான் லட்சுமி அடிக்கடி இருமலால் கஷ்டப்படுபவன் இப்போது இரத்தமும் துப்பத் தொடங்கி விட்டாள்.
“இந்த வருடம் எஸ். எஸ். சி எடுக்கப் போறாள் செந்தாமரை. இங்கிலிசு கொஞ்சம் சொல்லிக் குடுங்க ஐயா”.
செந்தாமரை தாயின் ஒரு அறை வீட்டின் மூலையில் அமர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருத்தாள். அவர்கள் இருப்பது ஒரு பெரிய வீட்டின் மூலையிலுள்ள ஒரு சிறிய அறையில். விறாந்தையில் நாராயணன் படுப்பான். விறாந்தையை ஒட்டியபடி ஒரு அடுப்பு, அதுதான் அவர் களின் சொத்து.
“செந்தாமரை உனக்கு இங்கிலிசு படிக்க ஆசையா?” அவர் செந்தாமரையைப் பார்த்துக் கேட்டார்.
அவள் சரி என்பதுபோற் தலையாட்டினாள்.
“பின்னேரம் வீட்டே வா”
அன்று பின்னேரம் அவர்களின் வீட்டு விறாந்தையில் ஒரு மேசையை இழுத்து, இரண்டு கதிரைகளைப் போட்டுக் கொண்டார்.
நல்லநாயகம் இதெல்லாம் எதற்கு என்பதுபோற் பார்த்தார். தான் செந்தாமரைக்கு ஆங்கிலம் படிப்பிப்பதாகச் சொன்னார்.
நல்ல நாயகம் இவரை மேலும் கீழும் பார்த்தார். என்ன யோசித்தார் என்பது பற்றி சத்தியமூர்த்திக்கு அக்கறை யில்லை.
அவள் வந்தாள். தயக்கத்துடன் முன்னால் உட்கார்ந்தாள். அவர் அவள் முகத்தைப் பார்க்கவில்லை. முடிந்த மட்டும் புத்தகத்தையும் இல்லாவிட்டால் தூரத்தில் தெரியும் மலை முகட்டைப் பார்த்துக் கொள்வார்.
அந்த வருடம் தான் அவர் வாழ்க்கையின் வசந்தகாலம் என்பதைப் புரிந்துகொள்ள சத்தியமூர்த்திக்கு அதிக நாள் எடுக்கவில்லை. வார விடுமுறைகளில் கொழும்புக்கு வருவதும் செல்வமலருடன் அவளின் ஆசைக்கு ஏற்றபடி இழுபடுவதும் போதும் போதும் என்றிருந்தது. செந்தாமரைக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது. அவளுடன் சேர்ந்திருப்பது காலையில் நீலாம்பரி ராகம் கேட்பதுபோலவும் மலை முகட்டில் கண்மூடி கல்யாணி ராகம் ரசிப்பதுபோலவுமிருக்கும்.
நீண்ட நாளாகச் செய்யாத தன் பழைய வழக்கத்தை மீண்டும் ஏற்படுத்திக் கொண்டார். புல்லாங்குழலை எடுத்து வாசித்துக கொண்டார்.
பனிபடர்ந்த புல்தரையில் மெல்லிய நடையுடன் செந்தாமரை, தாய் லட்சுமி செய்து கொடுத்த சாப்பாட் டைக் கொண்டு வருவாள். லட்சுமிக்கு அடிக்கடி சுகமில்லாதபடியால் செந்தாமரையே பெரும்பாலாக சமையலைக் கவனித்தாள்.
அந்த வருடம் நன்றாகப் பரீட்சை செய்ததாகச் சொன்னாள் செந்தாமரை.
நாராயணன் ஒரு கல்யாணம் செய்து கொண்டான். அதன்பின் நாராயணன் செய்து வந்த கொஞ்ச நஞ்ச உதவியும் நின்று விட்டது.
லட்சுமி ஒன்றிரண்டு வீடுகளுக்குப் போய் ஒத்தாசை செய்து கொடுத்தாள்.
“இந்த லட்சணத்தில் அம்மா என்னை ரீச்சராகப் பார்க்க ஆசைப்படுறா” செந்தாமரையின் கண்களில்நீர் மல்கியது. ஏழை இந்தியத் தமிழர் கூலிகளாக மட்டும் வாழவும் நடத்தப்படவும் படைக்கப்பட்டவர்களா?
சாப்பாட்டிற்கு முன்னையவிடக் கொஞ்சம்கூடப் பணம் நல்லநாயகமும் சத்தியமூர்த்தியும் கொடுத்தார்கள்.
கொழும்பிலிருந்து வரும்போது செல்வமலர் தனக்குத் தேவையில்லை என்று கழித்து வைத்திருந்த பிளவுஸ் களைக் கொண்டு வந்து கொடுத்தார். செல்வமலருக்கு இவருக்குச் சமையல் செய்து கொடுக்க லட்சுமி என்ற இந்தியப் பெண்ணும் அவள் மகளும் இருக்கிறார்கள் என்று சொல்லியிருந்தார்.
செல்வமலரின் உடுப்பில் செந்தாமரையைப் பார்த்த போது அது அசிங்கமாகப் பட்டது. தூய்மையான ஒரு கோயில் விக்கிரகத்துக்கு ஒரு கந்தையை விரித்து வைத்தது போல் இருந்தது.
அன்றொரு நாள் அவர் ஒன்றிரண்டு புதுத்துணிகள் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்.
“வேண்டாம் ஐயா”
செந்தாமரை பழைய உடுப்பைப் போடத் தயார்!
புதிதாக ஒன்றும் இவரிடமிருந்து வாங்க மாட்டாளாம். அவர் கட்டாயப் படுத்தவில்லை. ஆனால் செல்வமலரின் உடுப்புக்களைக் கொண்டு வருவதை விட்டு விட்டார். தங்கை காந்திமதி ஏதாவது கொடுத்தால் வாங்கிக் கொண்டு வருவார்.
நல்லநாயகம் ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொண்டு நல்ல வீட்டைப் பார்த்துக் கொண்டு போன பின் பொழுது போவது இவருக்குப் பெரிய திண்டாட்ட மாக இருந்தது.
நாராயணன் தன் மனைவியை வீட்டுக்கு வேறு கொண்டு வந்து விட்டான்.
செந்தாமரையும் தாயும் வசதியற்றுக் கஷ்டப் பட்டார்கள்.
‘லட்சுமி இந்த வீட்டில் நான் இனி யாரையும் சேர்க்கப் போவதில்லை. உனக்கு விருப்ப மென்றால் குசினிக்குப் பக்கத்தில் இருக்கிற சின்ன அறையில் செந்தாமரையுடன் வந்து இரேன்.”
லட்சுமி இருமலுடன் இவரை நிமிர்ந்து பார்த்தாள்.
“வேண்டாம் ஐயா”
”சரி உன் விருப்பம்” அவர் வற்புறுத்தவில்லை. ஆனால் பல பின்னேரங்களில் குளிர் தாங்காமல் லட்சுமி தன் விறாந்தையிற் சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்துப் பரிதாபப் படுவார்.
ஒரு மாலை நேரம் கொழும்பு போக வெளிக்கிட்டவர் சரியான காய்ச்சல் வந்ததும் பேசாமற் படுத்து விட்டார். தனக்குச் சுகமில்லை என்றும் அடுத்த வாரம் வருவதாகவும் செல்வமலருக்குப் போன் பண்ணிச் சொன்னார்.
மழை சோ எனக் கொட்டத் தொடங்கி விட்டது.
தலையிடி மண்டையைப் பிளந்தது. யாரும் ஏதும் குடிக்கத் தர மாட்டார்களா என்றிருந்தது.
பின்னேரம் எத்தனை மணியிருக்கும் என்று தெரியாது. ஏதோ கனவு காணுவது போற் பிரமையாய் இருந்தது. ஆயாசத்துடன் கண் திறந்தவர் முன்னால் அவள் நின்றிருந்தாள்.
கையில் கோப்பியோ தேநீரோ ஏதோ ஒன்றுடன் அவள் உருவம் மங்கலாகத் தெரிந்தது.
“செந்தாமரை” அவர் முனகினார்.
“ஐயா…… நல்லநாயகம் ஐயாவுக்குக் சொல்லி ஆனுப்பட்டா’ அவள் மெல்லக் கேட்டாள்.
மழை விடாமற் பெய்தது.
வேண்டாம் என்பதுபோல் தலையாட்டினார்.
கொஞ்ச நேரத்தில் அவர் தூங்கிப் போய் விட்டார்.
எழும்பிப் பார்த்தால் நல்லநாயகம் இவர் கையைப் பிடித்து நாடி பார்த்துக் கொண்டிருந்தார்.
”உனக்கு நல்ல மலேரியாக் காய்ச்சல்”
நல்லநாயகம் ஒரு அப்போதிக்கரி. மருந்தெழுதிக் கொடுத் தார். அடுத்த நாள் விடிந்தால்தான் ஏதும் மருந்து வாங்கலாம்.
நல்லநாயகம் சிறிது நேரம் இருந்து விட்டுப் போய் விட் டார். வெளியில் இடியும் மின்னலும். இவர் காய்ச்சலிற் பிதற்றத் தொடங்கி விட்டார்.
லட்சுமி சாதாரணமாகவே நோபாளி. கட்டிலின் அடியில் ஒரு மூலையில் குந்தியிருந்தாள்.
செந்தாமரை இவர் பக்கத்தில் கதிரையில் உட்கார்ந்திருந்தாள்.
நடுச்சாமம் இருக்குமா?
ஏதோ ஒரு பயங்கரக் கனவு. மலை முகட்டிலிருந்து யாரோ இவரை பாதாளத்துக்குத் தள்ளிவிடுவது போலவும், செல்லமலர் தன் சிநேகிதிகளுடன் காரில் ஏறிப் போவதுபோலவும் கனவு. யாரோ உதவிக்கு வருகிறார் கள். யார் என்று முகம் தெரியவில்லை.
இவர் திடுக்கிட்டு விழித்தார். செந்தாமரை பக்கத்தில் இருந்தாள். அவள் கை இவர் நெற்றியில்.
“உங்களுக்குச் சரியான காய்ச்சல் ஐயா. பிதற்றத் தொடங்கி விட்டீர்கள்” அவள் இவர் நெற்றியைத் தடவி விட்டாள்.
லட்சுமி தன் சேலையால் மூடிக் கொண்டு நல்ல தூக்கம். வானம் இப்போது அமைதியாக இருந்தது. ஆயிரம் நட் சத்திரங்கள் மழை முகில்களை அகற்றிவிட்டு இப்போது தான் எட்டிப் பார்த்தது.
“உனக்கு நித்திரை வரவில்லையா செந்தாமரை”
அவள் இல்லை என்பதுபோல் தலையாட்டினாள். “என்ன நேரம்.”
அவர் போட்டிருந்த கைக் கடிகாரத்தைப் பார்த்து “காலை ஐந்து மணி” என்றாள்.
“ரேடியோவில் ஏதாவது கேட்கலாமா” அவர் காய்ச்சலில் பிதற்றுகிறாரோ தெரியவில்லை என்பதுபோல் அவள். பார்த்தாள்.
“நீ கொஞ்ச நேரம் படுத்துக் கொள்”
“இன்னும் கொஞ்ச நேரத்தில் விடியப்போகுது ஐயா” அவள் பணிவாகச் சொன்னாள்.
விடிந்தது. உலக மாதாவை இரவெல்லாம் நீராட்டிய அலுப்பில் வருணபகவான் ஓய்ந்து விட்டான்.
தேயிலைச் செடிகள் குளித்து முழுகிய இளம் பெண்போல் காற்றிலாடின.
பக்கத்து பங்களாக் கோழிகள் கூவின.
இவள் இவருக்குச் சுடக் சுடச் கோப்பி போட்டுத் தந்தாள்.
சுகமில்லாமல் படுக்கையிற் படுத்தது நினைவு தெரிந்த நாளிலிருந்து இதுதான் முதற்தரம்.
அவர் வீட்டில் மூத்த மகன், அதனால் நினைவு தெரிந்த நாளிலிருந்து யாரையாவது பார்க்கும் பொறுப்பு. தம்பி ஒருத்தன் பத்து வயதில் இறந்து போனான். வெறும் காய்ச்சல் என்று படுத்தவன். எழும்பவில்லை. அப்போது அவர்களின் தாய் துடித்து விட்டாள். இறந்து விட்ட தம்பியைத் தூக்கி வைத்துக் கொண்டு புலம்பிய தோற்றம் இவரின் மனத்தை விட்டகலவில்லை.
அன்றுதான் அவருக்கு இன்னொரு உண்மையும் விளங் கியது. அவரின் நினைவிற் படும்படியாக அவரின் தாய் இவரையணைத்ததையோ முத்த மிட்டதையோ இவர் அறியார். தாய்ப்பாசம் என்றால் பாலூட்டுதலும் சோறு போடுவதும், உடுப்புத் தோய்த்துக் கொடுப்பதும் என்று மட்டுமா?
இந்தியாவில் படிக்கும்போது கோயிற் தலங்கலுக்குத் தரிசனம் செய்யப் போகும்போது “என்ன தேவை என்று பிரார்த்திக்கிறாய்” அருளம்பலம் கேட்பார்.
இவர் சங்கோஜத்துடன் சிரிப்பார்.
“பிள்ளையார் கேட்டமாதிரி அம்மா மாதிரி ஒரு மனைவி தேவை என்று கேட்காதே” அருளம்பலம் கேலி செய்வாள். வாழ்க்கையின் முதற் தடவையாக நினைவு தெரிந்த நாளி லிருந்து அவரையாரோ, இன்றுதான் மனமார்ந்த அன்பு டன் தொடுகிறார்கள். செல்வமலர் அவரைத் தொடுவதற்கும் இவள் தொட்டதற்கும் தான் எத்தனை வித்தியாசம். செல்வமலரில் என்ன குறை? சம்பிரதாயத்தின்படி, சமுதாய எதிர்பார்ப்புகளின்படி அவள் நடந்து கொள்கிறாள்.
இவர், கலைத் தேவியை வணங்குவதை, இயற்கையைப் பணிவதைப் பற்றி அவளுக்கு என்ன தெரியும். எல்லா மத்திய தர வர்க்கத் தமிழ்ப் பெண்களும் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் தட்டைத் தூக்கிக் கொண்டு கடவு ளிடம் பம்பலப்பிட்டிக்குக்செல்லுவதுபோல் அவளும்தான் போகிறாள். செல்வமலரும் இவளும் வாழும் உலகமும் எதிர்பார்க்கும் அனுபவங்களும் எத்தனை வித்தியாசமானவை?
அத்தியாயம் – 9
சத்தியமூர்த்தி உடம்பு சுகமாகி வீட்டுக்குப் போன போது எவ்வளவோ இளைத்து விட்டார். ஒரு மாதம் மெடிக்கல் லீவு போடச் சொல்லி செல்வமலர் உத்தரவு போட்டு விட்டாள்.
அந்த உத்தரவை ஒரு கிழமை மெடிக்கல் லீவாக்கி விட்டு பதுளை திரும்பும் போது ஒரு புதிய உற்சாகம். புதிய வேகம், புதிய எதிர்பார்ப்பு.
முப்பத்திரண்டு வயதாகிறது, ஆனால் இப்போதுதான் ஏதோ பதினெட்டு வயது வாலிபன் என்ற நினைவு. ஓடும் மேகங்களைப் பார்த்து மனம் குதூகலித்தது. மலைச் சாரல்களில் நதிகள் தன்னைப் பார்த்து நாணிக் கொண்டு வளைந்து செல்வதாகத் தோன்றியது.
தன்னைத் தடவிப் போகும் தென்றல் ஏதோ ரகசியம் சொல்ல வந்ததுபோல் இருந்தது, ஏதோ தன்னைபறியாத எதிர்காலம் அவரை எதிர் கொள்வது போலிருந்தது.
அந்த வாரம் இலங்கையில் இனக்கலவரம் ஆரம்பமானது. தமிழர்களுக்கு எதிரான முதற் தமிழ்க்கலவரம் அது. தங்கள் மொழிக்கும் அந்தஸ்து கேட்டபடியால் சிங்களப் பேரின வகுப்புவாதம் அவிழ்த்து விட்ட பயங்கர வாதம் அது.
ஆயிரக் கணக்கான உடமைகளைத் தமிழர்கள் இழந் தார்கள், நூற்றுக் கணக்கான உயிர்கள் சிங்கள இன வாதத்திற்குப் பலியானது. கொழும்பிற்குச் சாமான் ஏற்றிச் சென்ற நாராயணனின் லொறி காடையர்களால் தாக்கப்பட்டு அவன் கொல்லப் பட்டான். அந்த நிகழ்ச்சி பதுளையை வந்தடைய எத்த னையோ நாளாகி விட்டன. விஷயம் வந்தவுடன் எப்போது செத்து முடிவேன் என்றிருந்த லட்சுமி படுக் கையில் விழுந்து விட்டாள்.
நாராயணனின் மனைவி வயிற்றில் வளரும் குழந்தையுடன் தாய் தகப்பன் இருக்கும் தோட்டத்துக்குப் போய் விட்டாள்.
எப்படியும் கொழும்பு வந்து சேரும்படி செல்வமலர் தந்தியடித்திருந்தாள். எப்படிப்போவதாம்? எத்தனையோ கொடுமைகள் வழியில் பாணந்துறைக் கோயில் ஐயரின் குழந்தைகளை கொலை செய்து மனைவியைப் கற்பழித்து ஐயரைத் தார் உருகும் பீப்பாவில் உயிருடன் போட்டதை யாரோ சொன்னார்கள்.
தமிழர்களின் கடைகள் எரிக்கப்பட்டன.
வீடுகள் தாக்கப் பட்டன. எப்போது என்ன நடக்கப் போகிறது என்று தெரியாது.
லட்சுமி பிதற்றும் நிலையில் இருந்தால், ஆஸ்பத்திரிக்கும் கொண்டு போய்ச் சேர்த்தார் சத்தியமூர்த்தி. ஒன்றிரண்டு நாளில் நிலைமை சீரடையும் என்று எதிர்பார்த்திருந்த போது நல்லநாயகம் குடும்பத்தினரும் வந்தனர். தாங்கள் கொழும்புக்குப் போவதாகவும் இவரையும் வரச் சொல்லி நல்லநாயகம் சொன்னார்.
செந்தாமரையையும் லட்சுமியையும் விட்டுதான் வரப் போவதில்லை என்று சத்தியமூர்த்தி சொன்னார்.
நல்லநாயகம் இயலுமான புத்திமதிகளைச் சொன்னார். சத்தியமூர்த்தி மசியவில்லை.
“உலகம் என்ன சொல்லும்”
நல்ல நாயகம் கேட்டார்.
“உலகம் கேட்கும் கேள்விகளுக்குத் திருப்தியான மறுமொழிகள் கொடுக்க என்றால் முடியாது.”
நல்லநாயகம் கொழும்புக்குப் போய் என்ன சொன்னாரோ தெரியவில்லை.
ஒன்றிரண்டு நாட்களில் செல்வமலரின் தம்பிகள் இருவர் காரில் வந்தனர். லட்சுமி இப்போது கிட்டத்தட்ட பேச்சு மூச்சற்ற நிலையில் இருந்தாள்.
“இந்த முண்டங்களுக்காகவா பதுளையைச் சுற்றிச் சுற்றி இருக்கிறீர்கள்” செல்வமலரின் குண்டாந்தம்பி கேட்டான். அவன் ஒரு வேலையுமில்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருப்பவன்.
நாய் எலும்புத் துண்டைப் பார்ப்பதுபோல் செந்தாமரை யைப் பார்த்தான்.
“எங்கள் வீட்டுக்கும் வேலைக்காரிகள் தேவை” குண்டாந் தடி கிண்டலாகச் சொன்னான்.
நேர்மை கெட்டவர்களுடன் அவர் பேச்சு வைத்துக் கொள்ளவில்லை.
வந்தவர்கள் வார்த்தைகளை உதிர்ந்து விட்டுப் போய் விட்டார்கள்.
லட்சு மி இறந்து விட்டாள்.
நாராயணன் மனைவி தன்னுடன் செந்தாமரை இருக்க முடியாது என்று சொல்லிவிட்டாள். ஒருவேளைச் சோற் றுக்கு அவளே தன் பெற்றோர்களை எதிர்பார்க்கும் போது இந்த வயதுப் பெண்ணை வைத்து என்ன செய்வதாம்?
”எனக்கு ஒரு வேலை என்றாலும் எடுத்துத் தரப்பாருங்க ஐயா” அந்தக் காலத்தில் பெண்கள் கடை கண்ணிகளில் வேலை செய்வதில்லை. அவன் தகப்பன் ஒரு ட்ரைவர், தமையன் ஒரு ட்ரைவர். தேயிலைக் கொழுந்து பறிக்கும் வேலையும் கிடைக்காது செந்தாமரைக்கு.
அவள் ஆசிரியர் கல்லூரிக்கு எடுபடுவதென்றால் எத்த னையோ பிரமுகர்களின் சிபார்சு தேவை.
கொழும்புக்குப் போய் காந்திமதி வீட்டில் விடலாமா? அவர் யோசித்துக் கொண்டிருக்கும்போது செல்வமலரின் கடிதம் வந்தது.
அவர் செய்கை குறித்து கண்டபடி எழுதியிருந்தாள். இத்தனை வயதில் ஒரு இளம் பெண்ணை வைப்பாட்டியாக வைத்திருக்க வெட்கமாயில்லையா என்று கேட் டெழுதியிருந்தாள்.
அவளின் தம்பிகள் அப்படித்தான் சொல்லியிருக்க வேண்டும். நல்லநாயகம் இதே தருணம் பார்த்து ஒரு தமிழ்ப் பகுதிக்கு மாற்றம் எடுத்துக் கொண்டு போய் விட்டார்.
செல்வமலரின் கடிதத்தின் பின் காந்திமதி வீட்டில் செந்தா மரையைக் கொண்டு விடுவதும் அவரால் முடியவில்லை.
“செந்தாமரை என்னில் நம்பிக்கையிருந்தால் இங்கேயே இருக்கலாம்.”
அவளுக்கு வேறு வழியில்லை. ஏழ்மை அவளை இப்படி வாழப் பண்ணியது.
அப்படி அவள் நினைத்து ஒரு (கிழமைக் கிடையில் அக்கம் பக்கத்து வேலைக்காரிகள் இவளைக் கேவலமாகப் பேசத் தொடங்கி விட்டார்கள்.
அருளம்பலம் இந்த நேரம் பார்த்து பதுளை வந்திருந் தார்.
சத்தியமூர்த்தி அந்த ஏழைப் பெண்ணின் துயரக் கதையைச் சொன்னார். அருளம்பலம் தனக்குத் தெரிந்து ஒரு தமிழ் வீட்டில் அவளை கண்டியில் கொண்டு போய்ச் சேர்த்து விடுவதாகச் சொன்னார்.
“அவள் படிச்ச பெட்டை, ரீச்சர் ட்ரெயினிங் போகக் காத்துக் கொண்டிருக்கிறாள். வேலைக்காரி மாதிரி நடத்து. முயலாதே”. சத்தியமூர்த்தி கெஞ்சினார்.
தனக்குத் தெரிந்த தமிழ் மனிதர் அப்படி ஒன்றும் கெட்ட வரல்ல, நல்ல மாதிரித்தான் நடத்துவார் என்று அருளம் பலம் சொன்னார்.
இப்படிச் சொல்லி அருளம்பலம் தன்னை கொழும்புக்கு. அழைத்துச் செல்லத்தான் வந்திருக்கிறார் என்று தெரி யாத சத்தியமூர்த்தி அவரை நம்பிக் கொழும்புக்கும் போனார்.
செல்வமலர் முகம் கொடுத்துப் பேசவில்லை. கண்ட பாட்டுக்குத் திட்டித் தீர்த்தாள். அவளுக்கு உரிமை இருக்கிறது. திட்டித்தீர்க்கட்டும் என்று பொறுமையுட னிருந்தார் சத்தியமூர் த்தி.
ஒரு மாத லீவில் கொழும்பிலிருந்து வந்தபோது செந்தா மரை இவர் வீட்டில் துவண்ட கொடியாய்ச் சோர்ந்து போய் இருந்தாள். பசியில் கண்கள் சுருங்கி, உடம்பு மெலிந்திருந்தாள்.
செல்வமலர், அருளம்பலம் எல்லாரும் சேர்ந்து ஒரு உதவாப்பயலுக்குக் கல்யாணம் செய்து வைக்கத்தான் இவளைக் கண்டிக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள் என்பதைக் கேட்டபோது அவர் துடித்து விட்டார். அருளம்பலமும் சேர்ந்தா இந்தக் கொடுமை? ஒரு காலத்தில் அருளம்பலம் நினைத்து, நடந்து கொண்ட கொள்கைகளுக்கும் இப்போது அவன் நடந்து கொள்ளும் விதத்துக்கும் எத்தனை வித்தியாசம்?
பெண்மையைத் தெய்வமாய், சக்தியாய்த் தாயாய் நினைக்கும் அருளம்பலமும் மற்றவர்களுடன் சேர்ந்து இப்படி நடந்து கொள்ளலாமா?
நடந்தார், யோசனையுடன் ஒவ்வொரு பின்னேரமும் பதுளைமலைச் சாரல்களில் நடந்தார். பனி தவழ்ந்த மர நிழல்களில் இரவில் இருந்து சிந்திப்பார்.
அடுத்த அறையில் பதினேழு வயதில் ஒரு இளம் பெண்ணின் விம்மல் அவர் இருதயத்தைப் பிழிந்திருக்கும். ஏழையாய்ப் பிறந்த குற்றத்துக்காகத்தான் எத்தனை தண்டனை? இந்த அழகும் இந்தப் பவ்யமும் ஒரு பணக் காரவீட்டுக்குப் பெண்ணுக்கிருந்தால் இப்போது கோயில் கட்டி வைத்திருப்பார்களே.
அவள் விம்மலின் காரணங்களை அவர் கேட்கவில்லை. அவர் கேட்கத் தேவையில்லை. பக்கத்து பங்களாக்காரப் பெண்கள், அவர்களின் வேலைக்காரிகள் என்றும் பல பெண்கள் விரசமாய்ப் பேசியிருக்கலாம். அருளம்பலத்தின் கடிதம் வந்தது.
அவர் எதிர்பார்த்தது சரிதான். தனது தங்கையைச் செய்து கொண்ட கடமைக்காக குடும்ப மானம் காக்க செந்தாமரையைச் சத்தியமூர்த்தியிடமிருந்து பிரிக்க அவரும் துணையாய்த்தான் இருந்தார் என எழுதியிருந் தார்.
“ஏன் இந்தச் சிறையில் போய் மாட்டியிருக்கிறாய்” அருளம்பலம் கேட்டெழுதியிருந்தார்.
செந்தாமரை அவர் வீட்டு மூலையில் வாழ்வது ஏன் சத்தியமூர்த்திக்குச் சிறையாக இருக்கவேண்டும்?அவளல்லோ இந்தச் சமுதாயச் சிறையில் தன் பெண்மையைப் பற்றிக் கொள்ளத் தன்னை இவரிடம் ஒப்படைத்திருக்கிறாள்.
செல்வமலர் கண்டபாட்டுக்கு எழுதியிருந்ததாள். ஊர் உலகம் என்ன சொல்லும் என்று ஏதோ குழந்தைப் பிள்ளை மாதிரிக் கேட்டெழுதியிருந்தாள்.
ஊர் உலகமென்றால் யார்?
செல்வமலர் உன்னைப்போல் பெண்களும் உன் தம்பியைப் போல இழிமக்களும் சேர்ந்ததுதானே உலகம்.
“அவளைத் தொட்ட கையால் என்னைத் தொடப் போகிறீர்கள்! என்ற கற்பனைகூட உங்களுக்கு இருக்க வேண்டாம்” செல்வமலருக்கும் அவருக்கும் எத்தனை வித்தியாசம் என்று தெரியும். ஆனால் அவரைப் பற்றி அவள் இவ்வளவு மோசமாகவா நடக்க வேண்டும்?
அவர் சாப்பிடவில்லை. இந்தப் பெண்ணைக் காணா விட்டால் இவர் இந்த இக்கட்டான நிலையில் அகப்பட்டிருக்கத் தேவையில்லையே!
“என்னய்யா சாப்பிடாமல் இருக்கீங்க” இரண்டொரு நாள் அவர் சாப்பிடாமல் அலைவதைக் கண்டு அவள் கேட்டாள்.
மார்கழி மாதம் நல்ல குளிர்,வானம் கருமேகங்களால் மறைக்கப்பட்ட உலகமே ஏதோ சோக கீதம் பாடுவது போல் சோகமாய்த் தெரிந்தது.
அவள் அவர் முன்னால் நின்றிருந்தாள். சிவப்புச் சேலையும் ஒரு நீலச் சட்டையும் போட்டிருந்தாள். அவர் வாங்கிக் கொடுத்த உடுப்பு.
“பசிக்கயில்ல செந்தாமரை” அவர் பொய் சொல்கிறார் என்று தெரியும்.
“ஐயா என்னைப் பத்தித்தானே யோசிக்கிறீங்க”
அவர் மௌனமாய் இருந்தார்.
“ஐயா போகச் சொன்னால் போய்விடுவேன்”
அவள் அழுதாள். நிலம் பார்த்த முகம், நீர் வழியும் கண்கள்.
“எங்கே போவாய்”
“……..”
“உனக்கு ஆசிரியர் கலாசாலையில் ஒரு இடம் கிடைக்க என்னாற் தெரிந்த ஆட்களை எல்லாம் கேட்டிருக்கிறேன்; அது வரைக்கும் எங்கே போவாய்”
“……..”
‘உலகம் பொல்லாதது செந்தாமரை”
“தெரியுமய்யா’ அவள் விம்மி விம்மி அழுதாள்.
வெளியில் உலகம் இருளில் சூழ்ந்து கிடந்தது.
”எங்களைப் பற்றிக் கூடாமல் கதைக்கினம்”
“……..”
“நான் உன்னை வைச்சிருப்பதாகச் சொல்லிகினம்”
அவள் இப்போது நிமிர்ந்து பார்த்தாள்.
நீராடும் அவள் விழியில் அவர் உருவம் தெளிவாகத் தெரிந்தது.
“நீங்க என்னை வைச்சிருக்கீங்கதானே ஐயா”
அவள் விம்மலுக்கிடையில் சொன்னாள் அவள் விளங்கித் தான் சொல்கிறாளா? அல்லது பேதைத்தனமாகப் புலம்பு கிறாளா?
“நீ என்ன சொல்கிறாய் செந்தாமரை”
“நான் சாப்பிடற சாப்பாடு, நான் உடுத்துகிற உடுப்பு, படுத்திருக்கிற இடம், நம்பிக் கொள்கிற பாதுகாப்பு எல்லாம் உங்களின்ரைதானே. நீங்க என்னை வைச்சிருக்கிறீங்க ஐயா’
“அடி பெண்ணே, நீ இளம் பெண். உன் வாழ்க்கையில் ஒரு நல்லவனைச் சந்திப்பாய். நாலு பிள்ளைகளைக் கட்டிப் பாதுகாப்பாய். நான் உன்னை ஒன்றும் வைச்சிருக்க இல்லை. உன்ரை உழைப்பில், பணியில், பாதுகாப்பில் வாழ்கிறேன்”
இருவருக்கும் விளங்காமல் இருவரும் பேசிக் கொள்கிறார்களா?
“ஐயா உலகம் என்ன சொன்னாலும் என்ன. நான் இஞ்ச பலமில்லாமல் இருக்கேன். நீங்க என்னைப் பாதுகாப்பாக வச்சிருக்கிறீங்க.”
இன்னும் ஏதோ சொல்ல நினைத்தாள் போலும்.
அவரை மேலும் கீழும் பார்த்தாள்..
“நீங்க விரும்பினா நீங்க அந்த உலகம் நினைக்கிற மாதிரி வைச்சிருக்கலாம் ஐயா”
அவர் திடுக்கிட்டு விட்டார்.
இந்தப் பெண் பேசுவது என்னவென்று தெரிந்துதான். பேசுகிறாளா?
“எனக்கு விருப்பமில்லாத யாரோ குடிகாரரைக் கட்டி வைக்கப் பார்த்தாங்க, கல்யாணம் நடந்திருந்தா அடியும் உதையும் வாங்கிக் கொண்டு அவனோட வாழ்ந்திருக்கத் தானே வேணும். அதைவிட அதைவிட…” அவள் அழுது விட்டாள்.
“நீ என்ரை பாதுகாப்பில் இருக்கிறதற்காக நீ என்னிடம் எதையும் தரத் தேவையில்லை செந்தாமரை”
“நான் எப்போதே தந்திட்டேங்க” அவள் நிதானமாகச் சொன்னாள். அவர் கொடுத்த புத்தகங்களை வாசித்த புத்தியா இது?
அவர் அன்றிரவு நீண்ட நேரம் வெளியிலிருந்து யோசித் தார். ‘இவளைத் தொட்ட கையால் என்ன துணிவிருந்தால் என்னைத் தொட நினைப்பீர்கள்’ என்று செல்வ மலர் கேட்டு எழுதியிருந்தாள்.
அவருக்குச் சிரிப்பு வந்தது. அழவேண்டியவர் சிரிக்கிறார். அன்றிரவு பனி பெய்து இலையெல்லாம் முத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது.
அடுத்த நாள் சனிக்கிழமை. இப்போதெல்லாம் அவர் கொழும்புக்குப் போவதில்லை. செந்தாமரையின் காலடிகள் விருப்பமான வீணையின் நாதமென அவருக்குக் கேட்கிறது.
ஒன்றிரண்டு கிழமைகளின் பின் பொங்கல் வந்தது.
அவர் அவளுக்குப் புதிய உடுப்பு வாங்கிக் கொடுத்தார். அவள் வீடு கழுவி பொங்கல் வைத்து, புத்தாடை கட்டிக் கொண்டு வந்து அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டாள். அவள் கண்கள் அவர் கண்களைத் தழுவிக் கொண்டன.
“நான் கல்யாணமானவன்” அவர் குரல் தழதழத்தது.
மலை முகட்டின் பின்னணியில் வெள்ளைப் பூவில் கரை சேர்த்துக் கட்டியிருந்த சேலையுடன் அவளைப் பார்க்கும் போது உலகத்து அபூர்வமெல்லாம் பெண்ணுருவில் அவர் முன்னால் நின்றது,
“எனக்கொரு மஞ்சள் கயிறு போதுமய்யா. தங்கத்தாலி வேண்டாம்”
அவளாக அவர் கையைப் பற்றிக் கொண்டாள்.
அவர் விடுவித்துக் கொள்ளவில்லை. யுகயுகமாய் அந்த அழைப்பிற்குக் காத்திருந்த பிரமை அவர் மனத்தில் பிரவேசித்தது.
– தொடரும்…
– பனி பெய்யும் இரவுகள் (நாவல்), முதல் பதிப்பு: செப்டம்பர் 1993, பாரி நிலையம், சென்னை
![]() |
இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க... |
