படித்தவுடன் எரிக்கவும்

நாளை காலை ஆறு மணிக்கு அவருக்குத் தூக்கு. சிறையில் ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன. தூக்கு மேடை சரி பார்க்கப்பட்டது, மருத்துவர்கள் காத்திருந்தனர், ஆம்புலன்ஸ் வண்டி தயாராகவிருந்தது. இரவு முழுக்கவும் தூங்காமல் விழித்திருந்த தலைமை ஜெய்லருக்கு ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரியும், தூக்கை நிறைவேற்றக் கடைசி நிமிடத் தடைகள் நிச்சயம் வராது, தொலைப்பேசியில் கடைசி நிமிடத்தில் நீதிமன்றத்திலிருந்து ஸ்டே ஆர்டர் வராது. ஏனெனில் ட்ரயல் நீதிமன்றத் தீர்ப்பு வந்தபின் மேல் முறையீடு செய்ய மறுத்துவிட்டார் அந்தக் கைதி. தன் நாற்பதாண்டு சிறை அனுபவத்தில் எத்தனையோ வழக்குகளைப் பார்த்த ஜெய்லருக்கு இது மிக விசித்திரமான வழக்கு. பொதுவாக உச்ச நீதிமன்றம் வரை முறையிட்டு, கருணைமனுக்கள் எல்லாவற்றையும் உபயோகித்தபின் வேறு வழியில்லாமல் கடைசியில் தூக்கு நிறைவேற்றப்படும். ட்ரயல் நீதிமன்றம் தீர்ப்பு சொன்ன மூன்றே மாதங்களுக்குள் தூக்குத் தண்டனை நிறைவேறவிருக்கும் முதல் வழக்கு இது. வழக்கு மட்டும் விசித்திரமானது அல்ல, கைதியும் மர்மமானவர். ஐம்பத்துமூன்று வயதானவர் சிறைச்சாலையில் யாருடனும் பேசமாட்டார். காவல்துறை ஆவணங்களின்படி இது அவர் செய்த முதல் குற்றம், இரட்டை கொலை. அவரே வந்து சரணடைந்து கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அந்த நபர் சிறைச்சாலையில் இருந்தவரை அவரை பார்க்க யாரும் வந்ததில்லை.
விடியற்காலை மூன்றரை மணிக்குத் தனி அறைக்கு மாற்றப்பட்ட கைதியை ஜெய்லர் போய் பார்த்தார். எந்த வித பதற்றமோ, பயமோ, துயரமோ கைதியின் முகத்தில் தெரியவில்லை. மருத்துவர் கடைசியாக ஒருமுறை பரிசோதனை செய்து உடல் நிலை சரியாக உள்ளதாக அறிக்கை கொடுத்தபின் காலை ஐந்தரைக்கு ஜெய்லர் அறையின் தொலைப்பேசி அடித்தது. கைதி மூன்று தாள்களையும் பேனாவும் கேட்டதாகச் சொன்னார்கள். உடனடியாக ஏற்பாடு செய்யும்படி சொன்னார் ஜெய்லர். காலை ஐந்து முக்காலுக்கு எந்தவித அலறலும், அழுகையும் , ஆர்பாட்டமும்மின்றி அவரே வந்து மேடையில் நின்றுகொண்டார். கால்களைக் கட்டியபின் கைகளைக் கட்டப்போகும் போது செய்கையால் ‘ஒரு நிமிடம்’ என்றார். சட்டை பாக்கட்டிலிருந்து மூன்று தாள்களை எடுத்து, ஜெய்லரை மேடைக்கு வருமாறு செய்கை செய்தார். ஜெய்லர் அருகில் சென்றவுடன் அந்த மூன்று தாள்களை அவரிடம் கொடுத்துவிட்டு எதுவும் பேசாமல் நின்றார். தாள்களை ஒரு முறை மேலாகப் புரட்டிப் பார்த்த ஜெய்லர், அதில் எதுவும் எழுதப்படவில்லை என நினைத்து, தாள்களை பாக்கட்டில் வைத்துக்கொண்டு மேற்கொண்டு செய்யவேண்டியதைச் செய்யுமாறு உத்தரவிட்டவுடன் கைகள் கட்டப்பட்டன, முகமூடி மூடப்பட்டது, நீதிபதி தண்டனையை ஒரு முறை வாசித்தார், சரியாக ஆறுமணிக்குத் தூக்குமேடை கதவு விழுந்தது, உயிர் பிரிந்தது.
அன்று மதியம் இரண்டு மணியாகிவிட்டது ஜெய்லர் வீடு திரும்ப. இறந்தவரின் உடலைப் பரிசோதனை செய்து, மருத்துவர் மரணச் சான்றிதழ் கொடுத்து, சிறைச்சாலை வளாகத்திற்குள்ளேயே தகனம் செய்து, மீதமுள்ள வேலைகளைச் செய்து முடிக்க. வீடு திரும்பி சட்டையை கயற்றும்போதுதான் அந்த தாள்கள் சட்டைப் பைக்குள் இருப்பது நினைவுக்கு வந்தது. தாள்களைப் பிரித்துப் பார்த்தார். மூன்றிலும் வலதுபக்கம் மேல் மூலையில் எண்கள் ஒன்று, இரண்டு, மூன்று என எழுதி வட்டமிடப்பட்டிருந்தது. முதல் மற்றும் இரண்டாம் தாள்கள் காலியாக இருந்தன. மூன்றாம் தாளின் பின் பக்க முடிவில் ‘படித்தவுடன் எரிக்கவும்’ என எழுதியிருந்தது. மேடை மேல் நின்றிருந்த போது கடைசி பக்கத்தைப் பார்க்க மறந்ததை உணர்ந்ததும் சங்கடத்தில் விழுந்தார். கைதியின் கடைசி ஆசையா இது? என்ன விசித்திரமான ஆசை இது? ஏன் மூன்றாம் பக்கத்தை மட்டும் எரிக்கவேண்டும்? அல்லது இந்த மூன்று பக்கங்களில் ஏதாவது மர்மம் இருக்கிறதா? எதுவும் புரியவில்லை. நாளை சிறைச்சாலையில் பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டார்.
அடுத்த நாள் காலை வழக்கம்போல சிறைச்சாலை சென்றபோது நுழைவாயிலிலேயே ஏதோ பதற்றம் நிலவுவது தெரிந்தது. பல அரசு அடையாளம் சுமந்த கார்கள் நின்றிருந்தன. அவர் அறைக்குள் நுழைந்தவுடன் மாநில சிறைத்துறை டி.ஐ.ஜி நின்றிருப்பதைப் பார்த்தார்.
“சார். வாங்க சார்” என்றார் ஜெய்லர் வலது கையை உயர்த்தி சல்யூட் அடித்தபடி.
“நெத்தி தூக்குல தொங்கினவன் உங்ககிட்ட ஏதோ கொடுத்தானாமே?” என்றார் டி.ஐ.ஜி.
“ஆமாம் சார். ஐந்தரை மணிக்கு மூணு பேப்பரும் ஒரு பேனாவும் கேட்டார், கொடுத்தோம். மேடைல கைகளை கட்றதுக்கு முன்னாடி அதை என் கிட்டத் திருப்பிக் கொடுத்தார்.” என்றார் ஜெய்லர்.
“எங்க அது?”
“என்கிட்ட தான் சார் இருக்கு.” என்று சொல்லி அந்த மூன்று தாள்களையும் டி.ஐ.ஜி க்கு கொடுத்தார். அவர் அந்தத் தாள்களைப் பிரித்துப் பார்த்தார். கடைசி பக்கத்தில் பின் புறம் மட்டும் எழுதியிருந்த வாக்கியத்தை எதுவும் பேசாமல் பார்த்துவிட்டு,
“வேற ஏதாவது கொடுத்தாரா?”
“இல்லை சார். உண்மையில சில பக்கங்களைச் சேர்த்து அவருக்குக் கொடுத்தோம் ஆனா மூணு பக்கம்தான் வேணும்னு சொல்லி அப்பவே மிச்சமிருந்த பக்கங்களைத் திரும்ப கொடுத்துட்டாரு. மேடைல அந்த மூணையும்கூட திரும்ப கொடுத்துட்டாரு.”
“சரி அவரோட உடமைகள் எங்கிருக்கு?”
“ஸ்டோர் ரூம்ல சார்”
“வாங்கப் பார்க்கலாம்”
ஸ்டோர் ரூமில் நேற்று தூக்கிலிடப்பட்ட கைதியின் உடமைகளைச் சுமார் அரை மணிநேரம் சோதனை செய்தார் டி.ஐ.ஜி. உடமைகள் மொத்தமே இரண்டு பேண்டு சட்டைகள், ஒரு கைக்கடிகாரம் அவ்வளவுதான். பேண்டு, சட்டைப் பைக்குள் திரும்பத் திரும்ப சுழற்றி சுழற்றி பார்த்தார். அதன் பின் கைதி தங்கியிருந்த அறைக்கு அழைத்துச் செல்லுமாறு சொன்னார்.
“ரொம்பவும் விசித்திரமான கேஸ் சார், ஆளும் அப்படித்தான். இங்க இருந்தவரையில யாரும் அவரை வந்து பார்க்கல, யாரோடையும் பேசல. ஏன் அப்பீல் கூடு போடல. இந்தமாதிரி நான் பார்த்ததே இல்லை. நார்மலா தூக்கு மேடைமேல ஆசாமியை ஏத்தறத்துக்குள்ள போறும் போறும்ன்னு ஆயிடும். ஆனா நேதிக்கு பார்க்குக்கு போன மாதிரி இருந்தது…சார் உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்?”
“என்ன?”
“அவர் என்கிட்ட இந்த பேப்பரை கொடுத்ததை யார் உங்ககிட்ட சொன்னது?” என்றார் ஜெய்லர்.
“உங்களுக்கு அது தேவையில்லாத விஷயம். இது ஒன்னும் ரகசியமில்லை. எல்லார் முன்னாடியும்தானே உங்ககிட்ட அதை கொடுத்தாரு? ” என்றார் டி.ஐ.ஜி
“எஸ் சார்..சும்மாதான் கேட்டேன்”
அறையை சென்டிமீட்டர் விடாமல் சோதனை செய்த டி.ஐ.ஜியை பார்த்து ஜெய்லருக்கு மிகவும் விசித்திரமாக இருந்தது. எந்நாளும் இப்படி நடந்ததில்லை. பொதுவாகத் தூக்கிலிடப்பட்டவுடன் வழக்கு முடிந்துவிடும். கைதி அடைக்கப்பட்ட அறையைச் சோதனை செய்ய மாட்டார்கள். அப்படியே செய்வதென்றாலும் டி.ஐ.ஜி அளவிற்கு ஒரு பெரிய அதிகாரி சோதனை செய்ய மாட்டார். இந்த வழக்கு ஆரம்பத்திலிருந்து முடிவுவரை விந்தையாக இருந்தது ஜெய்லருக்கு. அறையைச் சோதனை செய்துவிட்டு வெளியில் வந்த டி.ஐ.ஜி,
“இந்த மூணு பேப்பரும் ரெண்டு நாள் என்கிட்ட இருக்கட்டும்.” என்றார்.
“சார் உங்களுக்கே தெரியும்..” எனச் சொல்ல ஆரம்பித்த ஜெய்லரை முறைத்த டி.ஐ.ஜி,
“ஏதாவது விசாரணை வந்தா என் பேரை சொல்லுங்க” எனச் சொல்லி சிறைச்சாலையிலிருந்து வெளியேறினார்.
சிறையிலிருந்து வெளியேறிய டி.ஐ.ஜி நேராக ஊருக்குக் கிழக்கே இருக்கும் ராணுவ முகாமிற்குச் சென்றார். வாயிலில் இயந்திரத் துப்பாக்கி ஏந்திய சிப்பாய்கள் அவர் காரை நிறுத்தி முழுக்கவும் சோதனை செய்தனர். அவருடைய அடையாள அட்டையை எடுத்துச் சென்று வாயிலிருந்து முகாமிற்குள் யாருடனோ பேசிய வாயில் காவலர், சில நிமிடங்களில் வெளியில் வந்து கதவைத் திறக்கச் சொன்னார். வாயிலுக்குள் சென்ற காருக்கு முன் ஒரு ஜீப் வண்டி வந்து நின்றது. அதில் ஆயுதம் ஏந்திய மூன்று சிப்பாய்கள் பின்பக்கத்தில் நின்றிருந்தனர். அதில் ஒருவர், டி.ஐ.ஜியின் கார் ஓட்டுநரை இறங்கச் சொல்லி பிறகு அவரே அந்தக் காரை முகாமின் ஓரத்தில் தனியாக நின்றிருந்த ஒரு கட்டிடத்திற்கு ஓட்டிச் சென்றார். அந்தக் கட்டிடம் நாலா பக்கமும் வேலியிடப்பட்டிருந்தது. ஒரே நுழை வாயிலில் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட டி.ஐ.ஜியை உள்ளே அழைத்துச் சென்று முன் அறையில் ஒரு நாற்காலியில் அமர்த்தினர்.
அந்த அறை மிக எளிமையாகக் காட்சியளித்தது. அறை முழுவதற்கும் ஒரே ஒரு நாற்காலிதான். கூரையில்கூட மின்விசிறிகள், விளக்குகள் எதுவுமே இல்லை. உண்மையில் அந்த அறையில் மின் இணைப்பே இல்லை என்பதை டி.ஐ.ஜி கவனித்தார். நாலா பக்கமும் பார்த்துக்கொண்டிருந்த வேளை அறையினுள் ஒரு நடுத்தர வயதானவர் மிக எளிமையான சட்டை பேண்டுடன் நுழைந்ததைப் பார்த்து மெதுவாக எழுந்து நின்றார் டி.ஐ.ஜி. அறையினுள் நுழைந்தவரின் முகம் மற்றும் உடல் மெலிந்திருந்தது. முழு வழுக்கை மண்டை, கன்னங்களை மறைக்கும் அடர்ந்த தாடி. இந்த நபரைப் பாதையில் பார்த்தல் எளிதில் மறந்துவிடலாம். ஆனால் ஏதோவொன்று முன் நிற்பவர் சாதாரணமானவர் அல்ல என டி.ஐ.ஜி க்கு சொன்னது. தாடி ஆசாமி டி.ஐ.ஜி முன்னே வந்து இடது கையை நீட்டினார். எதுவும் பேசாமல் பாக்கட்டிலிருந்து அந்த மூன்று தாள்களை எடுத்து அவரிடம் கொடுத்தார் டி.ஐ.ஜி. அதை ஒரு முறை எதுவும் பேசாமல் பார்த்துவிட்டு புன்னகைத்தார் மர்ம நபர்.
“டெத் சர்டிபிகேட்ல என்ன பேரு போட்டிருக்கீங்க?” என்றார் அந்த மர்ம நபர்.
“கைதானபோது கொடுத்த பேரு தான்” என்றார் டி.ஐ.ஜி
“அத்தான் என்னனு கேட்கறேன்?”
“குமார்” என்றார் டி.ஐ.ஜி
அதன் பின் எதுவும் பேசாமல் அந்த மர்ம நபர் அறையிலிருந்து நடக்கத் தொடங்கியதும்,
“சார்..அந்த பேப்பர்..எங்க ஃபைல்ல…” எனச் சொல்லத்தொடங்கிய டி.ஐ.ஜியை திரும்பிப் பார்க்காமலேயே,
“தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜப்தி செய்யப்பட்டதுன்னு எழுதிக்கோங்க” என்று சொல்லி அந்த மர்மத் தாடி நபர் அறையை விட்டு வெளியேறினார்.
அந்தக் கட்டிடத்தின் இன்னொரு அறைக்குச் சென்று உட்கார்ந்த அந்தத் தாடிக்காரர், மேஜையின் அடுக்கு பெட்டியிலிருந்து மூன்று ஆவணக் கோப்புகளை எடுத்தார். கோப்புகள், ஒன்று, இரண்டு, மூன்று எனப் பெயரிடப்பட்டிருந்தன. அவற்றில் மூன்றாம் கோப்பை எடுத்துத் திறந்தபோது முதல் பக்கத்தில் தூக்கிலிடப்பட்ட கைதியின் புகைப்படத்திற்குக் கீழே வேறு பெயர் இருந்தது. மெதுவாகப் புன்னகைத்தவாறே அந்த ஆவணக்கோப்பை முழுக்கவும் படித்து முடித்து பெருமூச்சு விட்டார். மெதுவாக எழுந்து அறையின் பின் கதவைத் திறந்து வெளியில் வந்து அந்த முழு ஆவணத்தையும் தீக்கிரையாக்கினார்.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: November 2, 2025
பார்வையிட்டோர்: 289