நூறு வயது!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 18, 2025
பார்வையிட்டோர்: 4,552 
 
 

இன்னும் நான்கு மாதங்களில் நூறு வயதை முழுமையாக விழுங்கப்போகிற, பத்துக்குழந்தைகளைப்பெற்று வளர்த்து கொள்ளுப்பேத்தி, பேரன்களைப்பார்த்து விட்ட தனது தந்தையின் தாத்தாவான பாட்டனை கல்லூரியில் உடன் படிக்கும் நண்பன் வினவ் அறிமுகப்படுத்திய போது வியப்பில் ஆழ்ந்து போனான் சுகன்.

முப்பது வயதிலேயே முகத்தில் சுருக்கம் வந்து விடும் இந்தக்காலத்தில் நூறு வயது வரை உயிர் வாழ்வதே பெறும் பேறு தான். அதிலும் முகத்தில் சுருக்கம் விழாமல், பற்களும் விழாமல், கூன் விழாமல், கண்களும், காதும் பழுதாகாமல், யாரையும் உதவிக்கு வைத்துக்கொள்ளாமல் வாழும் மனிதரை முதலாகக்கண்டான்.

அறுபதைத்தாண்டினாலே, நடக்க முடியாமல், அனத்தல், இருமல், முனகல் என மருந்து, மாத்திரைகளை விழுங்கிக்கொண்டு, அடிக்கடி மருத்துவ மனைக்குச்சென்று கொண்டு, ஹார்ட் ஆபரேசன், கால் மூட்டு ஆபரேசன், கண் ஆபரேசன் செய்து கொண்டு பேரன், பேத்திகள் ‘இவர் சீக்கிரம் போய் சேர மாட்டாரா?’ என வெறுக்கும் மனிதர்களை தனது இருபது வயது வரை கண்டவனை இவரது செயல்பாடுகள் மிகவும் யோசிக்கவைத்தது.

‘இக்காலத்தில் உள்ள வாலிபரைப்போல வளவளப்பான முகத்தை இதுவரை எப்படிக்காப்பாற்றினார்? என்ன சாப்பிட்டிருப்பார்? உடற்பயிற்ச்சி செய்தாரா? நடைப்பயிற்சியை தவறாமல் தொடர்ந்திருப்பாரா?’ என பல கேள்விகள் சுகனின் மனதில் எழுந்தன.

பத்து வருடங்களுக்கு முன் மனைவி இறந்த பின் சமையல் வேலையை தானே கவனித்ததோடு, வீட்டிற்கு தன்னைக்காண வரும் உறவுகளுக்கும் தானே சமைத்து பறிமாறுவதில் விருப்பமாக, விறுவிறுப்பாக செயல்படுகிறார் என கேட்டது ஆச்சர்யத்தில் ஆச்சர்யமாக இருந்தது.

“பாட்டையா..‌. நான் வினவ் வந்திருக்கறேன்….”

“ம்…. சொல்லு சாமி…. உன்ற சிநேகிதன கூட்டீட்டு வந்திருக்கறியா…..?”

“ஆமாங்க.‌‌…”

“சித்த பேசீட்டு உட்காருங்க… வாரேன்” எனக்கூறி கயிற்றுக்கட்டிலை கை காட்டி விட்டு சமையறைக்குள் சென்றவர் இரண்டு டம்ளர்களில் மோர் கொண்டு வந்து கொடுத்தார்.

மோரைக்குடித்த சுகனுக்கு உடல் உற்சாகமடைவது மகிழ்ச்சியாக இருந்தது.

“நாட்டு மாட்டுப்பால்… நானே கறந்து பானைல ஊத்தி சுண்டக்காச்சி பெறையூத்தி வெச்சிருவேன். தயிரு தெவஞ்சதுக்கப்புறம் மண்ணு பானைலயே திண்ணக்கால்ல கயித்தக்கட்டி நல்லா வெண்ண வாரவெரைக்கும் மத்தப்போட்டு சிலுப்பிப்போடுவேன். அப்பத்தா மோரு நல்ல மணமா இருக்கும். காத்தால பல்லு வெளக்கீட்டு ஒரு கெளாஸ் மோரு ஊத்தி குடிச்சுப்போட்டா மத்தியான வெரைக்கும் பசியே தெரியாது. பழைய ராயிகளிய தண்ணி ஊத்தி வெச்சு மோரூத்தி கரைச்சுட்டா பொழுதுக்கும் பசி இருக்காது. இப்பவாட்ட அன்னைக்கெல்லாம் ஆரு புட்டு சுட்டு திண்ணா…?”

“புட்டுன்னா….?” இதுவரை கேள்விப்படாத வார்த்தை என்பதால் புரியாமல் சுகன் கேட்க, “இட்லி தான்” என வினவ் விளக்கம் கொடுத்தான்.

“பதனேழு வயிசுலியே என்ற அத்த புள்ள வள்ளிய கண்ணாலம் பண்ணீட்டேன். அவளுக்கு பதனைஞ்சு வயிசு. நாப்பதுக்குள்ள பத்து உருப்பிடிய பெத்துக்கொடுத்துப்போட்டா என்ற ஊட்டுக்காரி. என்ற பாட்டம், பூட்டனெல்லாருமே நூறு வயிசுக்கு மேல வாழ்ந்து போட்டு போனவங்கதான். நானும் இன்னைக்கு வெரைக்கும் காய்ச்சலுக்குன்னு கூட ஆஸ்பத்திரிப்பக்கம் தல வெச்சு படுத்ததே இல்ல. கடன ஒடன வாங்கீட்டு கவலப்படமாட்டேன். தோட்டத்துல வெளையறத குந்தான்ல போட்டு வெச்சுட்டு நேரத்துக்கு சோத்தாக்கி உண்டு போட்டு, பொழுதானா காக்கா குருவியாட்டா போயி படுத்து தூங்கீருவேன். ஆடு, கோழி கறியெல்லாம் திங்க மாட்டேன். களிக்கு பசலக்கீரை தான் எனக்கு புடிக்கும். எப்பாச்சும் அரிசீம்பருப்பு பண்ணுவேன். நெய்யூத்தி உண்டா ஒணத்தியா இருக்கும்னு வெச்சுக்குவே…‌” என கூறிய போது கேட்ட இருவருக்கும் வாயில் எச்சில் ஊறியது.

“எங்கூருல ராம வாத்தியாருன்னு ஒருத்தரு இருந்தாரு. அவரரு குட்ட எழுதப்படிக்க தெரிஞ்சு போட்டேன். சிலேடு கூட கெடையாது. மணல்ல தான் எழுதிப்பழகுனேன்னு வெச்சுக்குவே. அப்பறம், ராமாயணம், மகாபாரதம்னு அன்னாடும் படிப்பேன். காட்டுக்குள்ள போயி பாடும் படுவேன். ஒழவோட்டுவேன், பாத்தி கட்டுவேன், தண்ணி கட்டுவேன். ஒடம்புல அன்னாடும் வேத்து வந்துச்சுன்னா எந்த நோயுங்கிட்ட வராது பாத்துக்க….”

‘எதற்காத நம்மிடம் இதையெல்லாம் கூறுகிறார்?’ என நினைத்த போது, ‘புதிதாக தன்னைப்பார்க்க வருபவர்களிடம் இவ்வாறு தனது கதைகளைக்கூறுவார்’ என்றான் வினவ்.

சுகன் இதுவரை திரைப்படங்களில் தான் கிராமத்தை பார்த்துள்ளான். நேரில் காரில் வெளியூர் செல்லும் போது வயல் வெளிகளை, ஆடு மாடுகளை, இடுப்பில் கோவணத்துடன் மேலாடை அணியாதவர்களை பார்த்தாலும் வீட்டிற்குள் சென்று வயதானவர்கள் யாரிடமும் பேசிப்பழகியதில்லை.

கல்லூரியில் சேர்ந்து வினவ் நண்பனானதும் ஒரு முறையாவது கிராமத்திற்கு சென்று தங்க வேண்டும் எனும் ஆவல் கூடியிருந்ததால் தன் விருப்பத்தை சுகன் சொன்னதும் நிறைவேற்ற வினவ்வும் ஆடிபதினெட்டைத்தேர்ந்தெடுத்து அழைத்து வந்தான்.

‘கார் வேண்டாம். பைக்கிலேயே போகலாம். அப்போது தான் சிறிய பாதைகளில் சென்று கிராமத்தை முழுமையாக சுற்றிப்பார்க்க முடியும்” என சுகன் கூறியிருந்ததால் வினவ் சம்மதித்தான்.

ஊருக்குள் நுழைந்தபோதே பூக்களின் நறுமணத்தோடு தன்னைத்தீண்டிய காற்றை நின்று சுவாசித்தான். கூரை வீடுகள், ஓடு வேய்ந்த வீடுகள், அங்கொன்றும் இங்கொன்றுமாக கான்கிரீட் வீடுகள், பங்களா போன்ற வீட்டருகிலேயே இருந்த பாலடைந்த வீடுகள் என இயற்கையோடு வாழும் மனிதர்களை எதிரே கண்டான்.

இந்த நவீன காலத்திலும் அடுப்பெரிக்க விறகு சுமந்து செல்லும் பெண்கள், வறுமையால் காலில் செருப்பு அணியாமல் நடந்து செல்பவர்கள், கந்தையான துணியை அணிந்தவர்கள், ஆற்றருகே வசித்தாலும் வாரக்கணக்கில் குளிக்காமல் வாழும் சோம்பேறிகள், அதிகம் படித்து விட்டு அப்பாவின் விவசாயத்தையே பார்க்கும் புத்திசாலிகள் என உலகத்தையே ஒரே கிராமத்து ஊரில் பார்த்தது போல் இருந்தது.

சுப்பையா பாட்டனை காலில் விழுந்து வணங்கிய வினவ்வை பார்த்து சுகனும் விழுந்து வணங்கினான். “வயசானவங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்கினா வயசு அதிகரிக்கும்னு நம்பிக்கை” என்று புதிய செய்தியைச்சொன்னான் வினவ்.

அரிசி வைத்திருக்கும் பானைக்குள் கைவிட்டவர் கையில் எடுத்த பணத்தில் இருவருக்கும் நூறு, நூறு என நூறு ரூபாய் பழைய அழுக்கு நோட்டாக பணம் கொடுத்தார். தினமும் கறக்கும் நாட்டு மாட்டுப்பாலை தனக்குப்போக விற்றதில் சேமித்து வைத்த பணம் என்றார்.

நகர வாழ்வில் சம்பாதிக்காத வயதானவர்களுக்கு பேரன், பேத்திகள் தான் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை செலவுக்கு கொடுப்பார்கள். நூறு வயதை விரைவில் கடக்கவிருக்கும் கிராமத்து மனிதரோ குடிக்க மோரும் கொடுத்து, செலவுக்கு நூறும் கொடுத்ததைப்பார்த்து ‘சொல்ல வார்த்தை இல்லை’ என நினைத்து வியந்து மகிழ்ந்தான் சுகன்.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *