நாகரத்தினம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 26, 2025
பார்வையிட்டோர்: 3,641 
 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மல்லிகைப் புதர் மறுபடியும் துளிர்த்துவிட்டது. அதிலே அரும்பு எடுக்கும்போதுதான், உளுந்தாயியின் உள்ளத்தில் என்ன என்னவோ எண்ணங்கள் – இன்பக் கனவுகள் எழும். அந்த மனைப்பாம்பு வசித்ததும் இந்தப் புதருக்கு அடியில் இருந்த வளை களிலேதான். 

சில நாளைக்கு முன்னே தழை மண்டிக் கிடந்தது இந்த மல்லிகைப் புதர். ஒரே ஓர் அரும்புகூட அப்போது அதில் முகிழ்க்கவில்லை. உளுந்தாயி புதரைச் சுற்றிச் சுற்றி வருவாள். அரும்பே அகப்படாது. கையிலே அரும்பு நிறையும்போதுதானே அவள் உள்ளத்திலே எண்ணங்கள் கொப்பளிக்கும். குதூகலம் உண்டாகும்? அரும்பைக் காணாமல் உளுந்தாயி ஏமாற்றமடைவாள்; ஏங்குவாள். இந்த மல்லிகைப் புதரிலே அவள் அரும்பு எடுக்கும்போது தான் மாணிக்கமும் பெரும்பாலும் வந்து அவளிடம் கேலிக்கு ஆளாவான். எது பூ அரும்பு, எது இள அரும்பு என்று தெரியாமல் எல்லாவற்றையுமே அவன் பறித்து விடுவான். எத்தனை நாள் அந்த வித்தியாசத்தை அவள் எடுத்துச் சொல்லியும் அவனுக்குப் புரியவே இல்லை. திரும்பத் திரும்ப அந்தப் பிசகை அவன் செய்துகொண்டே யிருந்தான். அது கண்டு உளுந்தாயிக்கு ஒரு பக்கம் உண்மை யிலேயே கோபம் வரும்; மறுபக்கம் சிரிப்பு வரும். சீறுவாள்: கேலி செய்வாள். இத்தனையையும் அள வற்ற பொறுமையுடன் மாணிக்கம் பொறுத்துக் கொள்வான். அவனுங்கூட ஊருக்குப் போய் விட்டான். அவன் போனதை அறிந்துதான் இந்தப் புதரும் இப்படித் தழை மண்டி விட்டதோ, ஒருவேளை! 

அந்தியில் நிலாக் கண்டதும், இந்தப் புதரிலே அரும்புகளைப் படிபடியாய் உளுந்தாயி எத்தனையோ முறை பறித்திருக்கிறாள். இரவில் ஒரு பானை தண்ணீரிலே அந்த அரும்புகளைப் போட்டுவைத்தால், விடியும்போது மலர்ந்து அவை என்ன அற்புதமாய் மணம் வீசும்! அவற்றை அவள் மிகவும் நேர்த்தியாய்த் தொடுப்பாள். அரசமரத்துப் பிள்ளையாருக்கு அணிந்தது போக, மீதியைத் தன் தோழிகளுக்கெல்லாம் கொடுத்து, தன் கொண்டையிலும் கொஞ்சம் செருகிக்கொள்வாள். 

என்றும் பூத்துவந்த அந்தப் புதர் ஏன் திடீ ரென்று ஒரு நாள் தழை மண்டி. அரும்பே கட்டாமல் நின்றது? பூவாக அசோகமரங்கூட அழகியின் கால் பட்டால் பூக்கும் என்பார்கள். உளுந்தாயி அரும்பு எடுக்கும் போதெல்லாம் நித்தமும் அவள் காலடியில் மிதிபட்ட மல்லிகைப் புதருக்கு ஏன் இந்தச் சண்டித்தனம்? 

”அப்பா.இதென்ன பூக்கவே மாட்டேங்குது?’ என்று முகம் சுளித்தபடி தகப்பனைக் கேட்டாள் உளுந்தாயி. 

அவள் இன்னமும் கன்னி கழியாத கட்டழகி. அவளுக்கு என்ன தெரியும், இந்தப் பூச்செடி ரகசிய மெல்லாம்? 

அவளுடைய தகப்பன் சாமிச்சேந்தன் புன் சிரிப்புப் பூத்தான். தன் ஒரே செல்வகளின் வெகுளித்தனமான கேள்வி அவனுக்குக் களிப் பூட்டியது. மனைவியை இழந்தது முதல். கன் மகளிடம் அவனுக்கு அளவற்ற அன்பு. பாவம், தாயில்லாப் பெண்!’ என்று நினைக்கும் போதெல்லாம் அவன் உள்ளம் நெகிழும். அவனுக்கு என்ன. செல்வத்தில் குறைவா? மதிப்பில் குறைவா? அவன் மச்சுவீட்டுக்காரன். எல்லாருக்கும் நல்லவன். நல்ல உழைப்பாளி. சுவாமிக்குப் பயந்தவன். ‘சாயியார்’ என்றே அவனை ஊரிலே எல்லாரும் சொல்வார்கள். அவ்வளவு பற்றற்றவனாய் அவன் வாழ்ந்தான். ஆனால், அவனுக்கு இன்று வாழ்க்கையில் ஒரே ஓர் ஆவல், ஒரே ஒரு கவலை மட்டும் உண்டு. மகள் உளுந்தாயி எந்நேரமும் சந்தோஷமாக இருக்க வேண்டும்;அவள் துளிமுகம் சிணுங்கினானும் அவனால் பொறுக்க முடியாது. 

“என்ன சிரிக்கிறீங்களே! இனிமே இது பூவே பூக்காதா?’ என்று மறுபடியும் கேட்டாள் உளுந்தாயி. 

“ஒரே வாரத்தில் அதைக் கொள்ளை கொள்ளை யாய்ப் பூக்கச் செய்கிறேன். கவலைப்படாதே, தங்கம்” என்றாள் சாயிச் சேந்தன். 

நிறைய வைக்கோலை எடுத்துப் புதரைச் சுற்றிலும் போட்டான்; கொளுத்திவிட்டான். மல்லிகை இலைகள் வாடிக் கருகின. இரண்டே நாளில் அத்தனை சருகும் உதிர்ந்து புதர் முழுவதும் மொட்டையாய் நின்றது. மீண்டும் எருவிட்டுத் தண்ணீர் பாய்ச்சினான் சாமிச்சேந்தன். மல்லிகைப் புதரில் மெத்தென்று தளிர்கள் உதயமாயின. அத்தனையும் ஒரே அரும்புகளாய் முகிழ்த்துக் குலுங்கின. உளுந்தாயியின் உள்ளமும் பூரித்துக் குதூகலித்தது. அவள் அரும்பு எடுக்கத் தொடங்கினாள். 

இப்போதுதான் அவளுக்கு அந்த நாகப் பாம்பின் ஞாபகம் வந்தது. ‘அன்னக்கி அப்பா வைக்கலைப் பரப்பிக் கொளுத்திச்சே. அப்போ வளைக்குள்ளே இருந்த பாம்பு என்ன ஆச்சுதோ; மாண்டு போயிருக்குமோ?” என்று அவள் எண்ணினாள். ”ஐயோ பாவம்!” என்று தனக்குத் தானே சப்புக் கொட்டிக்கொண்டாள். 

சேந்தனுக்குச் செடி கொடிகளெல்லாம் குழந்தைகள் போல. அவன் சிறிது தூரத்திலே ஒரு கத்திரிச் செடியில், பூச்சி அரித்த இலையைக் கிள்ளி எறிந்து, அன்புடன் அதன் மற்ற இலைகளைக் கோதி விட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தான். 

நாகம் மாளாதிருக்குமானால், இரவில் உளுந்தி தான் அதைக் கண்டுகொள்ளலாமே! ஆனால், என்னவோ சில நாளாக அவளுக்கு அந்த ஞாபகமே இல்லை. அவளுக்குத்தான் ஞாபகம் இல்லையா? 

அல்லது அதுதான் மாண்டு விட்டதோ? “இன்னக்கி ராவிலே அதைப் பார்த்துட்டாப் போவுது” என்று அவள் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். இருந்தாலும் உளுந்தியின் மனத்துக்குச் சமாதானம் ஏற்படவில்லை. ‘அப்பா, நீங்க வைக்கலைப் போட்டுக் கொளுத்தினீங்களே. அப்போ அந்தப் பாம்பு செத்திடுச்சோ, என்னமோ!’ என்று அவள் தகப்பன் காதில் விழச் சொன்னாள். 

“என்னா சொல்றே?” என்று அரைச் சிரிப்புடன் கேட்ட சேந்தன், ”பாம்பா? அதுவா சாவும்? எதிக்கவும் தெரியாமே ஓடவும் தெரியாமெ அடிவாங்கற அநாதைங்க மனிசங்களிலேதான் உண்டு. பாம்பு, பறவையெல்லாம் அப்படி இல்லே. பாம்பு அப்பவே ஓடிப்போயிருக்கும்” என்றான். 

இந்தச் சமயத்தில், ”என்ன அம்மான், வந்திட் டேன். உளுந்தி என்ன, பூப் பறிக்குதா?” என்று கேட்டுக்கொண்டே மாணிக்கமும் வந்து சேர்ந்தான். 

“வாடாப்பா” என்று அவனை வரவேற்றான் சேந்தன். 

உளுந்து அப்படியே சட்டென்று புதருக்குள்ளே மறைவாக உட்கார்ந்து ஒளிந்துகொண்டாள். 

”ஓ! நான் பாக்கலைன்னா நெனைச்சுக்கிட்டே? சும்மா எளுந்திரு. குட்டி!” என்றான் மாணிக்கம். 

இடியிடியென்று சிரித்துக்கொண்டே, “வா, அத்தான்! இந்தப் பச்சைக் கொளந்தைங்க மென்னியை யெல்லாம் திருகலாம், வா” என்று எழுந்தாள் உளுந்தி. 

“அடடா! நீதான் ரொம்பக் கெட்டிக்காரி, மத்தவங்களுக்கு என்னா தெரியும்?” என்று சொல்லிக் கொண்டே புதரின் கிட்டச் சென்றான் மாணிக்கம். 

அவனும் அரும்பு எடுக்க ஆரம்பித்தான். தூவெள்ளையாக இருக்கும் அரும்புகளை விட்டு, பசுமை பாறாத தளிர் அரும்புகளை யெல்லாம் அவன் பறித்துவிட்டான். தர்க்கம், சீற்றம், சிரிப்பு எல்லாம். தொடர்ந்தன. 

“அது கெடக்கு, மாணிக்கம். நாளைக்கு அந்தத் தென்னங் கன்னுகளுக்குத் தண்ணி இறைக்கணும். வருவியா? காலையிலே பத்து நாளிகைக்குள்ளே எறைச்சு முடிச்சிடணும். அதுக்கு மேலே புழுக்கம் தாங்காது” என்றான் சேந்தன். 

“நல்லா வர்றேன்” என்று மாணிக்கம் பதில் தந்தான். 

”ஏன்? கொள்ளை நெலாக் காயுதே. இப்பவே அத்தான் நாலு சால் எறைச்சாப் போவது. பாத்தி யிலே நான் தண்ணி கட்டிடுவேன். நீங்ககூட உடம்பை வாட்டிக்கிட வாணாம்” என்றாள் உளுந்தி. 

“அடேயப்பா! பாத்தியா மாணிக்கம்! உளுந்தி வளந்திடுச்சு. அப்பனை வேலையே செய்யாமெ குந்த வெச்சுச் சோறு போடப் போவுது” என்றான். சேந்தன். 

அதைப்பத்திக் கவலெப்படாதீங்க, அம்மான். அது போடாட்டியும் நான் போடறேன்’ என்று உளுந்தியைக் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டே சொன்னான் மாணிக்கம். 

உடனே உளுந்தி கொல்லென்று சிரித்தாள். சேந்தன் வாய்க்குள்ளேயே சிரித்துக்கொண்டான். 

சேந்தனுக்குத் தெரியும்: ஊரிலே ‘இதுகள் ரெண்டுந்தான் சரியான ஜோடி.’ தன் மகளுக்கு அவன் வேறே வரன் பார்க்கப் போவதில்லை. ஆனாலும் இந்த வயசிலே ‘இதுகள்’ இரண்டும் இப்படிக் கும்மாளம் போடலாமா என்பது மட்டில் அவனுக்குக் கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது. என்றாலும், அவன் இவர்கள் விஷயத்தில் அதிகமாய்க் குறுக்கிடுவதில்லை. 

“சரி, பதனமா அரும்பு பறிச்சிட்டு, சடுதியா வந்திடுங்க. நான் கஞ்சி குடிக்க இரண்டு இலை தைக்கிறேன்” என்று சொல்லிய சேந்தன், திண்ணைக்குப் போய்விட்டான். 

பாம்பு மனைப்பாம்பாக இருந்தாலும், வி ஐந்துவே அல்லவா? அகனிடம் சற்று ஜாக்கிரதை யாகவே இருக்கவேண்டும் என்பது சந்தனின் அபிப்பிராயம். மகள் அரும்பு பறிக்கும் போதெல்லாம் ‘பதனம்’ ‘பதனம்’ என்று அவளை எச்சரித்துக் கொண்டே இருப்பது சேந்தனின் வழக்கம். 

உளுந்திக்கு அந்தப் பயம் கிடையாது. கொஞ்ச நஞ்சம் அவளுக்கு இருந்த பயத்தையும் மாணிக்கம் போக்கிவிட்டான். மனைப்பாம்பு 95 தீங்கும் செய்யாது என்பது அவனுடைய திடமான அபிப் பிராயம். 

ஊருக்குள்ளே மெத்தப் படித்தவன் மாணிக்கம். அவன் மானம்பூப் பள்ளிக்கூடத்திலும் படித்திருக் கிறாள்; பாதிரி பள்ளிக்கூடத்திலும் படித்திருக்கிறான். திருப்புகழை எடுத்தால் அவன் மாதி ‘கட கட’ என்று படிக்க அந்த நாட்டிலேயே யாராலும் முடியாது. காமன் பண்டிகையில், எரியாத கட்சிப் பாட்டை அவள்தான் பாடுவது வழக்கம். அவனுக்கு எத்தனையோ கதைகள் தெரியும். அவற்றில் சில வற்றை உளுந்திக்கும் சொல்லியிருக்கிறான். 

சேந்தன் அப்பால் போனபின்பு, அப்புறம் அந்த நாகரத்தினக் கதையை முடிக்காமெயே போயிட்டேயே. பிறகு, அந்த பொண்ணு என்ன ஆச்சு?’ என்று கேட்டாள் உளுந்தி. 

“பூப் பறிச்சுது” என்று ராகம் இழுத்துச் சொன்னான் மாணிக்கம். மேலும் சிரித்துக்கொண்டே, ‘இ தோ இந்த அரும்பைப் பறிக்கலாமா? நீ சொல்லு என்று உளுந்தியின் தோள் அருகே இருந்த ஓர் அரும்பைத் தொடுவதுபோல, அவளுடைய தோளைக் கிள்ளிவிட்டான். 

“இந்தா, இந்தச் சரசமெல்லாம் நம்பகிட்ட வெச்சுக்காதே!’ என்று உடலை உலுப்பிச் சீறினாள் உளுந்தி. 

“அப்போ கதை வேண்டாமா? நான் போறேன்” என்றான் மாணிக்கம். 

“உன்னை என்னதான் பண்றது?” என்று சொல்லி, முப்பத்திரண்டு பல்லும் தெரியச் சிரித்தாள் உளுந்தி 

“அடடே! அரும்பெல்லாம் போச்செ!” என்றான் மாணிக்கம். 

“எங்கே போச்சு?” 

”உன் வாயிலே. உன் வாய் நிறைய அரும்பாய் இருக்குதே!” என்று குறும்பாகக் கண்ணடித்தான் மாணிக்கம். 

இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே கேலியும் சிருப்புமாகப் போயிற்று. இதற்குள்ளே, “ஏ குட்டி உருந்தி,கஞ்சி குடிக்க வா. மாணிக்கமும் வர்றானா?” என்று அழைத்தான் சேந்தன். 

மாணிக்கம் வீட்டுக்குப் போய்விட்டான். உளுந்தி யும் தகப்பனும் மட்டில் கஞ்சி குடித்தார்கள். 

சேந்தனுக்குப் பெரிய திண்ணையிலே படுத்தால் தான் தூக்கம் வரும். அதற்குப் பக்கத்திலேயுள்ள கொழுவத்து மாடுகள் அசை போடும் லேசான சத்தம் அவன் குறட்டைக்குச் சுருதி போட்டுக்கொண் டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் கண் மூடாது. சேந்தன் பெரிய திண்ணையில் படுத்துவிட்டான். 

உளுத்தி சின்னத் திண்ணைக் கட்டிலில் படுத்தாள். ராஜாத்திக்குப் மெத்தையின் சுகம் தெரியு மென்றால், உளுந்திக்குக் கயிறு பின்னிய மெத்தென்ற கட்டிலின் சுகம் நன்றாகத் தெரியும். கற்றாழை கொண்டுவந்து அழுகப்போட்டு இழைத்து நார் எடுத் துச் சுத்தமாகக் கயிறு திரித்து, சேந்தனே தன் அருமை மகளின் கட்டிலுக்குக் குறுக்குப் பின்னல் பின்னிக் கொடுத்தான். கோத்து வாங்கிப் பின்னும் அந்தப் பின்னல் அந்த ஊரிலேயே அவனைத் தவிர வேறே யாருக்கும் தெரியாது. ஒரு சமயம் ஒரு மலைக் குறவனிடம் அதை அவள் கற்றுக் கொண்டான். 

உளுந்து படுத்தாள். அவளுக்குத் தூக்கம் வர வில்லை. அவள் மனம் பூரித்திருந்தது. சில எண்ணங்கள் அவள் மனத்திலே வளைய வளைய வட்டமிட்டுக்கொண்டிருந்தன. ‘ஆடு பாம்பே, தெளிந் தாடு பாம்பே ?’ என்று று மாணிக்கம் பாடுவானே, அந்தச் சித்தர் பாட்டின் அடி ஞாபகம் வந்தது. மல்லிகை பூத்தது. மாணிக்கம் வந்து விட்டான். பாம்பு என்ன ஆயிற்று? ஐயோ பாவம்! ஆனால், இந்த இரவில் கவனித்துவிடலாம். அதைக் கண்டு பிடிக்காமல் தூங்குவதேயில்லை. இப்படி அவள் தீர்மானித்துக் கொண்டாள். 

கர்ர்ர்! 

ஓஹோ! பாம்பா? – உளுந்து உற்றுக் கேட்டாள். கலீர் என்று அவளுக்குச் சிரிப்பு வந்தது. அது பாம்பின் அரவம் அல்ல; அப்பனின் குறட்டைச் சப்தம். “இவுங்க என்ன இப்பிடிக் குறட்டை விடறாங்க!” என்று அவள் தனக்குத்தானே முணு முணுத்துக்கொண்டு சிரித்தாள். 

வாசலிலே தென்னம்பிள்ளைகளின் நிழற் கோலம் மெல்ல மெல்ல மங்கியது. நிலவு குறைந்து சாய்ந்து விட்டது. இருளும் சூழ்ந்தது. இதுவரையில் எவ்வளவுதான் கண்ணை மூடினாலும் வராத தூக்கம் இப்போது மெல்ல உளுந்தியின் இமைகளைப் பற்றத் தொடங்கியது. உ ந்தியின் மனம் சலித்துச் சோர்ந்தது. அவள் அரைத் தூக்க நிலையில் இருந்தாள். 

உஸ்ஸ்ஸ்! 

பாம்புக்குச் செவியே இல்லை என்று இந்தக் கால உயிர் நூல் புலவர்கள் சொல்லுகிறார்கள். பாம்புக்குச் செவியில்லாதிருக்கலாம். ஆனால், உளுந்திக்குப் ‘பாம்புச் செவி’; பழமையாக நாம் நம்பி வருகிறோமே அந்தப் ‘பாம்புச் செவி.’ 

புஸ்ஸ்ஸ்! 

உளுந்தியின் கண் விழித்துவிட்டது. அவள் தூக்கம் கலைந்தது. பாம்பின் சத்தத்தை நன்றாகக் கேட்டாள்.பாம்பு தான்; சந்தேகமில்லை. நிச்சயமாக அதுதான். இதோ, மல்லிகைப் பூ வாசனை வருகிறதே! மல்லிகைப் புதரில் வாழும் நாகத்தின் வாசனை மல்லிகை வாசனையே. அவள் இந்த வாசனையை முன்னே எத்தனையோ நாள் நுகர்ந்திருக்கிறாள். 

‘உஸ்ஸ்ஸ் – புஸ்ஸ்ஸ், உஸ்ஸ்ஸ் – புஸ்ஸ்ஸ்’ என்று பாம்பு சுவாசம் விடத் தொடங்கியது. இதை உளுந்தி இதற்கு முன் எத்தனையோ இரவு கவனித் திருக்கிறாள். இந்தப் பாம்பின் சுவாசம், கேட்டுக் கேட்டு அவளுக்கு ஸகஜமாகிவிட்டது. 

வீட்டெதிரே வேலியருகே செவ்வரளி, கார்த்தி கைக் கிழங்கு இரண்டு செடிகளும் ஒட்டி நிற்கும் இடத்திலே தினந்தோறும் இரவில் அந்த நாகப்பாம்பு வந்து, கருக்கல் வெளுக்கு மட்டும் இப்படிச் சீறிக் கொண்டிருந்துவிட்டுப் போவது வழக்கம். உளுந்தி இடையிடையே விழிக்கும் போதெல்லாம் இந்தச் சீறல் அவள் காதில் விழும். இதைக் கேட்டால் அவளுக்குப் பயம் இல்லை. அது மாத்திரம் அல்ல; அவள் ஓர் உற்சாகங்கூட அடைவாள். வேண்டு மென்று வாசலிலே எழுந்து போய் அந்தச் செவ் வரளிக்குச் சிறிதே எட்டியுள்ள தங்க அரளியின் அடியிலே எச்சில் உமிழ்ந்து விட்டு வருவாள். துரோபதை அம்மன் கோயிலிலே உளுந்தி பாரதம் கேட்டிருக்கிறாள். பாம்பு சிவபிரானின் மாலை; திருமாலின் படுக்கை. குழந்தை கர்ணனின் பெட்டி யிலே தாய் குந்திதேவி வைத்த சேலை, அவனுக்குக் தாயென்று சொல்லிப் பொய்யாய் வந்த பெண்களை யெல்லாம் பாம்பாகவே சீறியது. இந்த மனைப் பாம்பு கன்னிப் பெண்ணான தனக்கு வந்த காவலாகவே, உளுந்திக்கு என்னவோ ஓர் எண்ணம் தோன்றியது. தன்னை ஒரு தெய்வப் பெண்ணாகக்கூடச் சில சமயம் அவள் கற்பனை செய்து கொண்டு விடுவாள். 

உஸ்ஸ்ஸ் – புஸ்ஸ்ஸ்! 

பாம்பு சாகவில்லை. உளுந்தியின் மனம் நிம்மதி அடைந்தது. அவள் தூங்கினாள். 

மறுநாள் போது விடிந்தது. சொன்னது சொன்னபடி தென்னங் கன்றுகளுக்குத் தண்ணீர் இறைக்க மாணிக்கம் வந்துவிட்டான். 

கேணியின் விட்டத்திலே உருளையை மாட்டி னான். தாம்பின் ஒரு முனையிலே சாலைக் கட்டி மறு முனையில் கல்லைக் கட்டினான். தண்ணீர் இறைக்கத் தொடங்கினான் மாணிக்கம். பாத்திக்குத் தண்ணீர் கட்டினான் சேந்தன். 

உளுந்தி பல் விளக்கிச் சுள்ளி பொறுக்கி அடுப்பு மூட்டிக் கஞ்சி காய்ச்சும் வேலையில் ஈடுபட்டாள். 

மாரிமழை பொய்த்தாலும்
மாளாத பொற்கேணி!
கோடைவெயில் சுட்டாலும் 
குளிர்ந்திருக்கும் நற்கேணி! 
வீராதி வீராவர் 
வில்லெடுத்து நாணிழுத்து 
நேராக விட்டசரம் 
நேடிவரும் அந்நேரம் 
பேராது நின்றதிருப் 
பெரும்பசுவைப் போல்சுரந்து 
தீராத தேம்பாகைத் 
தெள்ளிவரும் பாற்கேணி! 

இப்படி ஓர் ஏற்றப் பாட்டைப் பாடினான் மாணிக்கம். பாடியபடியே சால் சாலாகத் தண்ணீரை இறைத்தான். பாட்டைக் கேட்டுக்கொண்டே கஞ்சி காய்ச்சினாள் உளுந்தி. சேந்தனுக்குப் பாட்டைப் பற்றிக் கவலையில்லை. எந்த எந்தத் தென்னம் பிள்ளை ‘நாலு குரும்பை’ வைத்திருக்கிறது என்பதையே கவனித்துக்கொண்டு அவன் தண்ணீர் பாய்ச்சினான். 

உளுந்தி நடு நடுவே கேணிக்கு வந்து, சால் தண்ணீரில் பானை தண்ணீர் ஏந்திக்கொண்டு போனாள். அப்படி வந்து செல்லும் ஒவ்வொரு தடவையும் !டக்கிய அவள் உதட்டையும் மீறிப் புன்சிரிப்பு அவள் கண்ணிலே ஒளிர்ந்தது. மாணிக்கமா சால் தண்ணீரை வேண்டுமென்றே வீசியடித்து உளுந்தியின் சேலை நுனியைப் பாதிக்கு மேல் நனைத்துக் குறும்புச் சிரிப்புச் சிரித்தான். 

மாணிக்கம் தண்ணீர் இறைத்து முடிக்கும் சமயத்தில், சேந்தன் வீட்டு வாசலில் பல சிறுவர்கள் காச்சு மூச்சென்று கூச்சல் போட்டுக்கொண்டு கூடி விட்டார்கள். அந்தக் கூட்டத்துக்கு நடுவிலே வந்தான் ஒரு பாம்புப் பிடாரன். கறுப்பான ஆட்டிடையன் – கம்பளி யொன்றை அவன் தோளிலே போட்டுக்கொண் டிருந்தான். கையிலே மகுடியும் கட்கத்திலே பாம்புப் பெட்டியும் வைத்திருந்தான். 

ஊருக்கு வந்து ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பாம்பு பிடித்து, சம்மானம் பெற்று வருகிறானாம். அவன் பாம்பு பிடிக்கும் வேடிக்கையைப் பார்ப்பதற்காகத் தான் அந்தச் சிறுவர் கூட்டம் வீடு வீடாக அவனைப் பின்தொடர்ந்தது. 

தன் வீட்டுப் பாம்பையும் பிடாரன் பிடித்துப் போகச் சேந்தன் சம்மதித்து விட்டான். 

“வேண்டாம், அப்பா: அது இருந்துவிட்டுப் போகட்டுமே” என்றாள் உளுந்தி.

“நீ சும்மா இரு, குட்டி. அவன் பிடிக்கிறதைக் தான் பார்ப்போமே” என்று அவளிடம் சொன்ன மாணிக்கம், “ஆமாம், நல்ல பாம்பை நீ பிடிப்பியா?” என்று பிடாரனைப் பார்த்துக் கேட்டான். 

”வீட்டுக்கு வீடு நல்ல பாம்புதான் பிடிச்சுக் கிட்டு வர்றேன், எசமான்.” 

”உனக்கு என்ன சம்மானம் கொடுக்கணும்?” 

“ஏளைக்கி என்னாங்க வேணும்? ஒவ்வொரு வீட்டு மகராசாவும் ஒரு துணி, ஒரு படி அரிசி,கால் ரூபாய்க் காசு கொடுக்கிறாங்க; எசமானும் அப்படிக் கொடுக்காமெயா போறீங்க!’ 

உளுந்துக்குப் பாம்பைப் பிடாரன் பிடித்துப் போவதில் சம்மதமே இல்லை. என்றாலும், அவன் பாம்பு பிடிப்பதை வேடிக்கைப் பார்க்க மெத்த ஆசை தான். கடைசியில், அவளும் அதிக ஆட்சேபம் சொல்லாமல் மௌனமானாள். 

பிடாரன் மகுடி ஊதினான். வெகுநேரம் ஊதினான். இடையிடையே மகுடியின் கண் அடைத்துக் கொண்டது. 

“பார்த்தீங்களா! பொல்லாத பாம்பு, சாமி. வெகு தொல்லை பண்ணுது; சண்டித்தனம் பண்ணுது. வெள்ளென வரமாட்டேங்குது. அதை யார் விடறா!” என்று சொல்லிவிட்டு மகுடியைப் பின்னும் பலமாக ஊதினான் பிடாரன். 

முடிவில் பாம்பு வந்துவிட்டது. பார்த்தனின் மார்பை நோக்கிச் சீறிவந்த வாசுகியைப் போலப் பாய்ந்து வந்தது சர்ப்பம். ஆனால். அது பிடாரனை நோக்கிச் செல்லவில்லை. அங்கும் இங்கும் திரும்பி ஓடப் பார்த்தது. பிடாரன் விடுவானா? குனிந்தும், உட்கார்ந்தும், நிமிர்ந்தும், எழுந்தும் ஆடியாடிப் பாம்பின் எதிரே மகுடியைச் சுழற்றிச் சுழற்றி ஊதினான். 

பாம்பு படம் எடுத்தது; சீறியது; வால் நுனியைப் பூமியிலே பதித்து, முக்கால் உடலைத் தூக்கிச் செங்குத் தாக நின்று துள்ளி விழுந்தது; மகுடியைக் கொத்த வந்தது; கண்களால் அனல் சொரிவதுபோல் விழித் தது. நாமமிட்ட அதன் படம், பிசாசாடுவதுபோல் மகுடி போன திசை யெல்லாம் திரும்பியது. பிடாரன் ஆடினான்; மகுடி ஆடிற்று; பாம்பு ஆடிற்று; குழந் தைகளெல்லாம் ஆடின. எல்லாருக்கும் தலைகால் புரியாத வெறி உண்டாயிற்று. ஆனால், உளுந்தியின் உள்ளம் மாத்திரம் நடுங்கி ஒடுங்கியது. செவ்வரளிச் செடிக்குக் கீழே தினந்தோறும் இரவிலே சீறுவது இந்தப் பாம்பா? ஐயோ! இதை இந்தப் பிடாரன் பிடித்துக்கொண்டு போவதே நல்லதென்று அவளுக்கு இப்போது தோன்றியது. 

முடிவிலே பிடாரன் ஏதோ ஒரு வேரைப் பாம்பின் முகத்துக்கு எதிரே நீட்டினான். மயக்கமருந்தை மோந்த மனிதனைப்போல அடங்கி ஒடுங்கித் தலையைக் கீழே போட்டது பாம்பு. தோளில் இருந்த கறுப்புக் கம்பளியை அப்படியே பாம்பின்மீது போட்டுப் பிடித்து, அதைத் தன் பெட்டிக்குள்ளே போட்டு மூடினான் பிடாரன். தனக்குரிய சம்மானத்தைப் பெற்றுக்கொண்டு, சிறுவர் படை புடைசூழ அகன்றான். 

இனிமே உளுந்திக்குப் பயமில்லே. அஞ்சாமெப் பூப்பறிக்கலாம்” என்று சொல்லிச் சிரித்தான் மாணிக்கம். 

“ஆமாம், தம்பீ” என்று உதடசையாமல் சொன்னான் சேந்தன். 

உளுந்தி மட்டில் பேசவில்லை. வெறுமையே சப்புக் கொட்டினாள். ‘ஆமாம். பாம்பு தொலைஞ்சது நல்லதாச்சு!’ என்று அதற்கு அர்த்தமா? அல்லது, ‘ஐயோ! பாம்பு போயிடுச்சே!’ என்று அர்த்தமா? இரண்டு அர்த்தங்களுமே அதில் தொனித்தன. அவள் உள்ளமே அப்போது அந்த நிலையில்தான் இருந்தது. 

“சரி; கஞ்சி குடிக்க வாங்க” என்றாள் அவள்.

சேந்தனும் மாணிக்கமும் தொன்னை தைத்துக் கொண்டு கஞ்சி குடிந்தார்கள். பிறகு. ‘புளகு வெத்திலை’ போட்டுக்கொண்டார்கள். 

அன்று இரவு கட்டிலிலே படுத்தபோதும், உளுந் திக்குத் தூக்கம் வரவில்லை. ‘ஆடு பாம்பே’ என்ற பாட்டடி ஞாபகம் வந்தது. அன்று மாணிக்கம் பாடிய ஏற்றப் பாட்டிலே வந்ததே,அது என்ன பசு? காராம் பசுவா? அந்தப் பசுவும் அவளுக்கு ஞாபகம் வந்தது. பாம்பு போய்விட்ட இப்போதுதான் அவளுக்கு இன் னொன்றும் ஞாபகம் வந்தது. மாணிக்கம் சொன்ன கதையில், ஒரு நாகம் கக்கிய நாகரத்தினம் ஒரு கன்னிப் பெண்ணுக்குக் கிடைத்ததே; அது மாதிரி இந்தப் பாம்பும் தனக்கு ஒன்று கக்கும் என்று ஆசை கொண்டாள். அடடா! பாம்பு போய் விட்டதே. இனி நாகரத்தினம் அவளுக்கு எங்கே கிடைக்கப் போகிறது? உளுந்தி ஏங்கினாள்; மனம் வெதும்பினாள். அவளுக்கு வெகு நேரம் தூக்கம் வரவில்லை. தென்னை களின் நிழல் மறைந்து நிலவும் சாய்ந்துவிட்டது. இன்னமும் அவளுக்குத் தூக்கம் வரவில்லை; நேற்று மாதிரி அரைத் தூக்கங்கூட வரவில்லை. 

காக்கை குருவிகளெல்லாம் ஒடுங்கிவிட்ட நிச்சப்த மான நள்ளிரவு நேரம். ஒரே ஒரு பல்லி மட்டில் ‘கெக்-கெக்-கெக்’ என்று ஏதோ கவுளி சொல்லியது. உளுந்தி திடுக்கிட்டாள். அன்று அந்தச் சர்ப்பம் காளிங்கனைப்போல் ஆடிய பயங்கர நர்த்தனத்துக்குப் பின்பு இந்தக் கவுளிச் சப்தங்கூட அவளுக்குப் பய மூட்டியது. ஆனாலும், அப்பாடா! அந்தச் சர்ப்பந் தான் போய்விட்டதே! இப்படி அவள் நினைத்து முடிக்கவில்லை. 

உஸ்ஸ்ஸ் – புஸ்ஸ்ஸ்! 

நாகம் சீறியது. உளுந்தி பதறிவிட்டாள். நாகம் போகவில்லை. அது இன்றும் வந்துவிட்டது. மல்லி கைப் பூ மணத்தோடே அது இதோ வந்துவிட்டது. அந்த மணந்தான் மூக்கைத் துளைக்கிறதே! உளுந்தி கோரைப் பாயை இழுத்துச் சுற்றிச் சுருட்டிப் படுத் துக்கொண்டாள். ஆடாமல் அசையாமல் படுத்துக் கொண்டாள். கருக்கல் வெளுக்கும் அளவும் பாம்பின் சீறல் ஓயவில்லை; அவள் தூங்கவும் இல்லை. 

நல்ல வேளையாய்ப் போது விடிந்தது. சூரியன் உதித்தது. 

சேந்தன் கஞ்சி குடித்துவிட்டு வயல் வெளியைப் பார்க்கப் போனான். 

அந்த வீட்டில் பகலிலே தனியாய் இருக்கக்கூட உளுந்திக்கு இன்று பயமாக இருந்தது. 

ஆனால், மச்சு வீட்டுக்கு வராமல் மாணிக்கத்துக் குப் போது போகுமா? அவன் வழக்கப்படி வந்து விட்டான். வரும்போதே வாயெல்லாம் பல்லாகச் சிரித்துக்கொண்டே வந்தான். அவன் தலையைக் கண்டதும் உளுந்திக்குத் தைரியம் பிறந்தது. “வா, அத்தான் என்று வரவேற்றாள். 

“அட, இதென்ன புதுமையா இருக்கு! ஓடாமெ ஒளியாமெ நீகூட என்னை வர்றபோதே அளைக்கிறையே! மளைதான் வரப்போவுது” என்றான் மாணிக்கம். 

திண்ணையிலே வந்து அவன் குந்தினான். “அம்மானை எங்கே காணோம்?’ என்று கேட்டான். 

“வயல் பக்கம் போயிருக்காங்க.” 

“அப்ப நான்கூடப் போகவேண்டியதுதான்.’ ‘வேணாம்.போகாதே. இங்கேயே இரு.’ “ஏனாம்?” என்று அழகு காட்டிக்கொண்டே கேட்டான் மாணிக்கம். 

“இந்தப் பரிகாச மெல்லாம் வேணாம், அத்தான். போகாதே.” 

“வீட்டுக்குக் காவலா? உனக்குக் காவலா?” 

“இரண்டுக்குந்தான்” என்று கொஞ்சும் குரலில் சொன்னாள் உளுந்தி. 

“ஏன்ன கூலி கொடுப்பே?” 

“என்ன கேட்டாலும் தர்றேன்.” 

“நிச்சயமா?” 

“நிச்சயம்.” 

துள்ளி எழுந்து நின்று இரண்டு விரலைத் தலைக்குமேலே தூக்கிக்காட்டி, “என்னை இந்த வருசமே கலியாணம் கட்டிப்பியா?” என்று கேட்டான் மாணிக்கம்; அப்போதுதான் அவன் முகத் திலே அசடு வழிந்தது. 

உளுந்தி கம்பீரமாக நிமிர்ந்தாள். மாணிக்கத்தை விழுங்கி விடுபவள்போல உற்றுப் பார்த்தாள். பிறகு “உனக்கு இது இன்னும் சந்தேகமா, அத்தான்? இதுக்குத்தானா இந்தக் கேள்வி கேட்டே?” என்று கேட்டாள். 

மாணிக்கத்துக்கு ஒன்றும் பதில் சொல்லத் தெரியவில்லை. மந்திரத்தில் பாம்பு கட்டுப்படுமோ கட்டுப்படாதோ; ‘மந்திரத்தில் கட்டுண்ட பாம்பு போல அவன் நின்றான். சொல்ல முடியாத பரவசம் ஒன்று அவன் உள்ளத்திலே குறுகுறுத்தது. 

‘பொன்மானோ எனப்பயந்தேன்; 
புள்ளிமான் வசமாச்சு. 
கண்பெற்ற குருடனைப்போல் 
கணக்கிறந்த மகிழ்ச்சியுற்றேன்’ 

என்று பித்தனைப்போல் பாடினான். அவன் பட்ட ணத்துச் சினிமாவெல்லாம் பார்த்தவனல்ல. உளுந் தியை அவன் தொடவில்லை. கட்டியணைத்து முத்தமிடவும் இல்லை. இந்த நிமிஷந்தான் அவனுக்கு அவள் மிகவும் புனிதமாய்த் தோன்றினாள். தான் தொட்டுத் தாலி கட்டப்போகும் கட்டழகியல்லவா வள்? துளியும் மாசு மருவில்லாத கன்னியையே மணம் புரிந்து கைப்பிடிக்க வேண்டுமென்பது அவன் ஆவல். தன்னை மறந்து திண்ணையிலே அவன் உட்கார்ந்தான். உளுந்து உள்ளே போய்விட்டாள்.

மாணிக்கம் சிறிது நேரத்துக்கெல்லாம் நிதான மடந்தான். தன் நினைவு வந்தது. “ஏ உளுந்தி!” என்று செல்லமாகக் கூப்பிட்டான். 

”ஏன்?” என்று கேட்டுக்கொண்டே உளுந்தி வெளியே வந்தாள். 

மாணிக்கம் அர்த்தம் இல்லாமல் சிரித்தான். அவளும் சிரித்தாள். 

“அந்தப் பாம்பு…” என்று என்னவோ சொல்ல ஆரம்பித்தான் மாணிக்கம். 

”ஐயோ! அது போகல்லை. அதுதான் எனக்குப் பயமாயிருக்குது” என்றாள் உளுந்தி. 

“அந்த ரகசியம் உனக்குத் தெரியுமா? பிடாரன் அதைப் பிடிக்கவே இல்லை” என்று புதிர் மாதிரி சொன்னான் மாணிக்கம். 

“பின்னே?”

“அவன் கிட்ட முன்னாடியே ஒரு பாம்பு இருந்திருக்கிறது. அதையே வீட்டுக்கு வீடு விட்டுப் பிடிச்சிருக்கான்” என்றான் மாணிக்கம். 

இதை மாணிக்கம் எப்படிக் கண்டுபிடித்தான்? ஊர்க்கோடியிலே உள்ள ஆலமரத்தடியில் நேற்று மாலை அந்தப் பிடாரன் தங்கியிருந்தான். அப்போது ஊர்க் குழைந்தைகளுக்கு அவன் பாம்பாட்டி வேடிக்கை காட்டிக்கொண் டிருந்தான். குளத்தங்கரைக்குத் தலைமுழுகப்போன மாணிக்கம் அதைக் கண்டான். பிடாரனிடம் ஒரே பாம்புதான் இருந்தது. அதன் உண்மையை மாணிக்கம் விசாரித்தாள். பிடாரன் முதலில் உண்மையைச் சொல்லவில்லை. வேட்டியும் காசும் கொடுத்து அவனைச் சிநேகம் பிடித்த பிறகு அவன் சொன்னான். மகுடி எடுத்து ஊத்தினால் எல்லாப் பாம்பும் சுலபமாக வெளியே வராதாம். பொந்தும் இருப்பிடமுமற்ற பழைய பாம்பு மட்டுமே. தான் அடையும் பெட்டியைத் தேடி வருமாம். பிடாரன் தன் பாம்பையே வீட்டுக்கு வீடு வீட்டுப் பிடித்தானாம். 

“அப்படியா! ஊரையே என்ன களுதெப்புரளி பண்ணிப்பிட்டான் அந்தப் பிடாரன்!” என்றாள் உளுந்தி, 

“ஆனால் பாம்பை வசியப்படுத்தற வேரை அவன் எனக்குக் கொஞ்சம் கொடுத்திருக்கான். ஓர் ஒலையைச் சுருக்குப் போட்டுக்கூடப் பாம்பு பிடிச்சிடலாமாம்; மந்திரமுமில்லே, மாய முயில் லெயாம். எல்லாம் தந்திரந்தான் வேணுமாம்” என்றான் மாணிக்கம். 

திறந்த வாய் திறந்தபடி இதையெல்லாம் ஆச்சரியத்தோடு கேட்டுக்கொண்டு நின்றாள் உளுந்தி. கடைசியில் சிரித்துக்கொண்டே, அது கிடக்கு. எனக்கு நீ என்ன பரிசம் கொடுக்கப்போறே?” என்று கேட்டாள். 

“உனக்கு என்ன வேணும்?” 

உளுந்தி தயங்கித் தயங்கி, “நிசம்மா உனக்குப் பாம்பு பிடிக்கத் தெரியுமா?” என்றாள். 

“தெரியும். பாம்பு ஏதுக்கு? மாலையா போட்டுக்கப் போறே?” 

“இல்லே. நீதானே நாகரத்தினக் கதை சொன்னே. நம்ம வீட்டுப் பாம்பின் தலையிலே நாகரத்தினம் இருக்குமே. அதைக் கக்கவைப்பியா?” 

”கக்கினா அது செத்துப் போவுமே.” 

“சாகட்டுமே.” 

“கொல்லாமெப் பிடிக்கணும். கொன்னா நாகரத்தினம் மாயமாப் போகும். கொல்லாமெப் பிடிச்சுக் கக்க வைக்கணும். கக்கினாச் செத்துப் போவும். இப்படித்தான் கதையிலே வருது’ என்றான் மாணிக்கம். 

“அது என்னமோ, எனக்கு நாகரத்தினம் வேணும்.” 

“ஐயோ பாவம்! பாம்பு செத்துப் போவுமே.” ”ஓஹோ! உனக்குப் பயம். சும்மா வாய்வீரம் பேசறே!” என்று இகழ்ச்சியாகச் சொன்னாள் உளுந்தி. 

மாணிக்கம் ரோஷம் கொண்டான். “அப்படியா நினைக்கிறே? இப்பவே இதோ பிடிச்சு வர்றேன் பார் பாம்பை” என்று எழுந்தான். 

“இந்தா, கஞ்சி காய்ச்சியாயிடிச்சு; கையைக் காலைக் கழுவிட்டு. கஞ்சி குடிச்சுப்பிட்டுப் போய்ப் பாம்பு பிடிக்கலாம்” என்றாள் உளுந்தி. 

‘வேணாம்” என்று பாய்ந்தெழுந்தான் மாணிக்கம். 

உளுந்திக்குத் தன்னை அறியாத ஏதோ ஓர் உணர்ச்சியால், இருதயம் படபடத்தது. அவள் சிரிக்க முயன்றாள்; சிரிக்கவில்லை. மௌனமாய் வீட்டுக்குள்ளே சென்றாள். 

மாணிக்கம் முன்பின் பாராமல் துள்ளி நடந்தான். 

மல்லிகைப் புதரைக் கலக்கினான். அதற்கடியிலே யிருந்த பாழையெல்லாம் குச்சியால் குடைந்தான். கடைசியில் சர்ப்பம் சீறிக்கொண்டு வெளியே வந்தது. புஸ் என்று படமெடுத்துத் தலையைத் தூக்கி ஆவேச மாய் வந்தது. கையில் இருந்த வேரை நீட்டினான் மாணிக்கம். பாம்பு அதை லட்சியம் செய்யவில்லை. சொடேர் என்று அவன் கையைக் கொத்திவிட்டது. 

மாணிக்கமும் விடவில்லை. அந்த நிமிஷமே அதைத் தடியால் அடித்துக் கொன்றுவிட்டான். 

வீட்டுக்குள்ளே இருந்த உளுந்திக்கு இதெல்லாம் தெரியாது. அவள் மனத்திலே ஒரு குதூகலம் பொங்கியது. ஆனால், அது தூய குதூகலமாயில்லை; ஒரு வேதனையும் அதிலே கலந்திருந்தது. அகப்பை யால் கஞ்சியைக் கிளறி விட்டுக்கொண்டே, பானையில் கொந்தளித்த குமிழிகளைப்போல் தன் மனத்திரை யிலும் பல எண்ணங்கள் குமிழியிடத் துரிதமாய் வேலை செய்துகொண் டிருந்தாள். இதோ மாணிக்கம் மாணிக்கத்துடன் வந்து சேர்ந்து விடுவான்’ என்று ஒரு விநாடி எண்ணினாள். அந்த நேரத்தில் அவள் காதிலே ஓர் ஓலம் கேட்டது. 

‘ஏ உளுந்தி! இனி நான் உன்னைத் தொட்டுத் தாலி கட்டப் போவதில்லை. என் விதி முடிந்தது இப்போது கொடு ஒரு முத்தம்; ஒரே ஒரு முத்தம்!’ என்று கூச்சலிட்டான் மாணிக்கம். 

உளுந்து அலறிப் புடைத்துக் கொண்டு, “என்ன என்ன!” என்று அரற்றியபடி ஓடிவந்தாள். 

இதற்குள்ளே மாணிக்கத்துக்குத் தலை சுழன்றது; கண் இருண்டது; கால்கள் தள்ளாடின. அவன் சுருண்டு விழுந்தான். பக்கத்திலே பாம்பு மாண்டு கிடந்தது. 

உளுந்தி அவனைக் கையிலே வாரியெடுத்துத் தூக்கித் தோளிலே சார்த்திக் கொண்டாள். திண்ணை யிலே கொண்டு வந்து கிடத்தினாள். ஓலமிட்டாள்; கதறிப் புலம்பினாள். ஐயோ! மாணிக்கம்! என் ராசாவே! நாகமணி கேட்டேனே, பாவி! நாகமணி கேட்டு, என் சீவமணியை – மாணிக்கத்தை இழந் தேனே!புத்தி கெட்ட நான்தான் கேட்டேன். நீயும் அதை ஒப்புக்கொள்ள வேணுமா? ஐயோ! என்னை மோசம் செய்தாயே! மாணிக்கம்! மாணிக்கம்!” என்று கதறினாள். 

மாணிக்கம் போய்விட்டான். மனைப் பாம்பு போய்விட்டது. மல்லிகை அரும்புகள் மதிப்பாரற்று மலர்ந்து புதரிலேயே வாடி உதிர்ந்தன. மனைப் பாம்பு போய்விட்டது. ஆனால், இன்று உளுந்தியே அந்த வீட்டின் மனைப்பாம்பாகிவிட்டாள்; எந்த வாலிபனும் அந்த வீட்டை அண்ட முடியாத நாக மாகிவிட்டாள். கன்னி கழியாமலே பல வருஷ காலம் அவள் வாழ்ந்துவிட்டாள். ஆனால், அவளைக் கேட்டால், தான் கன்னி கழியாதவள் என்று அவள் ஒப்புக் கொள்வதில்லை, கட்டுக்கழுத்தி’ என்றே இன்னும் சொல்கிறாள்.

– நொண்டிக் கிளி, முதற் பதிப்பு: ஸெப்டம்பர் 1949, கலைமகள் காரியாலயம், சென்னை.

தி.ஜ.ரங்கநாதன் தி.ஜ.ர எனப் பரவலாக அறியப்படும் திங்களூர் ஜகத்ரட்சக ரங்கநாதன் (1901-1974) ஒரு தமிழ் எழுத்தாளர், இதழாளர். தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். இவர் 1901 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவையாற்றுக்கு அருகிலுள்ள திங்களூரில் பிறந்தார். நான்காம் வகுப்பு வரைதான் படித்தார். அறிவியலிலும் கணிதத்திலும் ஆர்வம் கொண்டு அவற்றைப் புரிந்துகொள்வதற்காகவே ஆங்கிலம் படித்தார். கர்ணமாக வேலை பார்த்த தன் தந்தையுடன் பல ஊர்களுக்குச் சென்றார். நில அளவையில் பயிற்சி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *