நாகம்மாள்
கதையாசிரியர்: ஆர்.சண்முகசுந்தரம்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 12, 2025
பார்வையிட்டோர்: 120
(1942ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18
அத்தியாயம் – 13

ஆற்றில் பாதத்தளவு ஜலம் ‘குரு குரு’வென ஓடிக் கொண்டிருந்தது. சில இடங்களில் பாறையோரங்களில் முழங்காலளவு ஜலம் கூட நின்றிருந்தது. அங்கெல்லாம் ஆற்று நீரில் சின்னஞ்சிறு மீன்கள் துள்ளி விழுந்து கொண்டிருந்தன. அவைகளைச் சமயம் பார்த்து அடித்துக் கொண்டு போவதற்கு இரண்டொரு கொக்குகளும், வேறு சில பட்சிகளும் கரையோரத்தில் உட்கார்ந்திருந்தன. நாகம்மாள் அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே தோப்பினுள் அடியெடுத்து வைத்தாள். அவள் இப்போது போய்க் கொண்டிருக்கும் இடம் சற்று வழுக்கலானது. ஆற்றங்கரை மேட்டிலிருந்து நீர்வரை பெரும் பாறை பாசி பூத்து புல்லும், பூண்டும் சூழ்ந்திருந்தது. அங்கே ஜாக்கிரதையாகத் தான் காலடி எடுத்து வைக்க வேண்டும். கொஞ்சம் தவறினாலும் முழங்கால் உடைந்து விடும். நாகம்மாளுக்குச் சொல்ல வேண்டுமா? காந்த பூமியை இரும்பு பற்றியிருப்பது போலல்லவா அவள் பாதங்கள் ஒட்டிப் போகின்றன! க்ஷணத்தில் பாறை தாண்டி மேலே நடந்தாள்.
இனித்தான் வெளிச்சத்திலிருந்து இருட்டிற்கு வந்த தடுமாற்றம் ஏற்படும். ஆனால் பழக்கமானவர்களுக்கு இது ஒரு பொருட்டேயல்ல. நாகம்மாளின் வீச்சு நடையிலிருந்து இதற்கு முன்னும் அவள் இங்கு வந்து பழகியிருக்கிறாள் என்று தெரிகிறது. அப்போது நல்ல மத்தியான வேலைக்கு கிட்டத்தட்ட ஆகிவிட்டதென்றாலும் அங்கு ‘கருகும்’ மெனவே இருந்தது. அவ்விடத்தில் ஒரு மனிதன் அல்ல, மலையே இருந்தாலும் வெளியில் உள்ளவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியாது. நாகம்மாள் நேராகப் போய்க் கொண்டிருந்த பெரிய வழியை விட்டு குறுக்கு வழியாக ஒரு சந்திற்குள் புகுந்தாள். சிறிது தூரத்தில் ஒரு சமசதுரமான இடத்திற்கு வந்தாள். மறைவான அவ்விடத்தில் ஒரு சிறு மைதானம் பூசி வழித்த களம் போல அவ்வளவு சுத்தமாக எப்படியிருக்கிறதென்ற சந்தேகம் எழலாம். இந்த இடம் இரண்டொரு வருஷத்திற்கு முன்பெல்லாம் ஒரு காரியத்துக்காக உபயோகப்பட்டு வந்தது. ஆனால் போலீசாரின் ஒரு நாளைய பிரவேசத்தால் சட்டி முட்டிகளும், வேலாம் பட்டைகளும் மூங்கில் குழாய்களும் இன்னும் கட்டுப்பானை சாராயம் காய்ச்சுவதற்கு வேண்டிய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன. பின்பு அந்த இடத்திற்கு அவ்வளவாகப் போக்குவரத்தில்லை. தன்னுடைய உல்லாச நண்பர்களை இழந்து விட்டதனாலோ என்னவோ அந்த இடமும் வர வர சோபை இழந்து வருகிறது.
அம்மைதானத்தைத் தாண்டி சிறிது தூரத்தில் இரண்டு நாகமரம் கிட்டக் கிட்ட முட்டிக் கொண்டிருக்கின்றன. அங்கு வந்தவுடன் நாகம்மாள் தன் வீச்சு நடையை நிறுத்திவிட்டு மரத்தடியில் உட்கார்ந்தாள். அதே சமயம் “வந்து விட்டாயா?” என்ற குரல் எங்கிருந்தோ வந்தது.
என்ன இது, இந்தத் தனியிடத்தில் யார் இப்படி அழைப்பது? பேயா, பிசாசா, காட்டேறியா அல்லது வனதேவதை தானோ என்ற சந்தேகம் வேண்டாம். இதோ அந்தக் குரலுக்குச் சொந்தக்காரனான கெட்டியப்பனே கீழே இறங்கி வருகிறான். “நான் வெகுநேரமாப் பாத்துக்கிட்டிருந்தேனே? ஏன் இவ்வளவு நேரம்? தடத்திலே யாருடனோ நின்று பேசிக்கிட்டிருந்தாயே, யார் அது?” என்று கெட்டியப்பன் கேட்டான்.
“என்ன, இங்கிருந்து தெரியிதா?”
“ஆமாம் உச்சாணிக்கிளையிலிருந்து பாத்தேன். சற்று மங்கலாத் தெரிஞ்சது.”
“உன் தீரமே தீரம்” என்று வியந்து கொண்டே நாகம்மாள், “வெளியே தலைகாட்ட முடியலை” என்றாள்.
“ஏன் அப்படி?’
“என்னத்தைச் சொல்றது? நான் இந்த பத்து இருபது நாளாய் வாய் திறப்பதில்லை. பேசாமல் என்ன நடக்கிறதென சோதிச்சுப் பார்த்தேன். பேச்சு அப்படியே தணிகிறது.”
“நீ சொல்றது ஒண்ணுமே தெரியல்லையே!” என்றான் கெட்டியப்பன்.
“இதுக்கு ஒரு வழி சொல்லு. இனி, என்னாலே அவர்களோடு சேந்து வாழ முடியாது. அவனும் அவன் பெண்டாட்டியும் எக்கேடோ கெட்டுப் போகட்டும். அதைப் பத்தி துளியும் எனக்கு அக்கரையில்ல. நான் பிரிஞ்சு வந்தாலே போதும்.”
“நானும் அதைத்தானே சொல்லிட்டிருக்கிறேன்” என்றான் கெட்டியப்பன்.
“ஆமாம் இன்னும் எத்தனை நாளைக்குப் பேசாமலே இருப்பது?”
“ஏன், நீ சொல்லலையா? நேரடியாச் சொல்றதுதானே? தெரிஞ்சு போகுது.”
“எப்படி சொல்றதிண்ணுதான் எனக்கு கஷ்டமாயிருக்குது. ஏனோ, சொல்லாமலே உட்டுடலாமிண்ணு கூடப் பாக்கிறேன்.”
“சே, சே, அதுக்குத்தானா இமுட்டுக் கூடிக்கூடிப் பேசியது. கடைசியிலே இப்படிச் செய்வாய்ன்னு தெரிஞ்சிருந்தா, நான் முன்னுக்கு வந்திருக்கவே மாட்டேன்” என்று சலிப்போடு கூறினான் கெட்டியப்பன்.
“நீ அப்படியெல்லாம் என்னை நினைக்காதே. நான் கேட்டுடுறேன் அங்கேயே.”
“அங்கே என்றால் எங்கே? சின்னப்பனிடம் தானே?” என்று அவன் அவசரமாகக் கேட்டான்.
“ஆமாம்” என்று நாகம்மாள் தலையசைத்தாள்.
“சரிதான், முதலில் என்னவோ சொன்னயே, அது என்ன? யார் என்ன சொல்றாங்க?”
“யாரா? காலுக்கு வராத சில்லறையெல்லாம் தான், அந்த வெட்டிப் பேச்சு பேசுது. நான் பாகத்தைப் பிரிக்கச் சொன்னால் முடியாதின்னு சொன்னால் என்ன செய்யறது?’
“என்ன செய்யறதா? அப்புறம் சின்னப்பன் ஏத்துப் பூட்டியிடுவானா? தண்ணி, காடு பாய்ந்திடுமா? அவன் தான் தோட்டத்திற்குள் கால எடுத்து வைச்சுற முடியுமா?” என்று கோபமாகக் கேட்டான் கெட்டியப்பன்.
“இதெல்லாம் வம்புதானே?”
“இதில் வம்பு கிம்பு ஒண்ணுமில்லே. அவன் ஒழுங்கா ஒத்து வராமே போனாதானே வம்பு தேடிக்கிறான். நீ வம்புக்கு ஒண்ணும் போகலியே? இதில் தப்பு என்ன? உம் புருஷன் சம்பாதிச்சதிலே உனக்குப் பாகம் இல்லையா? இப்படி நீ சும்மாவே இருந்தா அவன் தோட்டம் காடெல்லாம் வித்துக்கிட்டு மாமியார் ஊர் போய்விடறான். அவள் போட்ட மாய பொடி தானே இது.”
“ஆமா, ஆமாம். நீ சொல்றது சரிதான். அந்த முண்டை வந்து போன பிறகு தானே எனக்கு விசயம் பூரா தெரிஞ்சுது. எப்படியோ ஒரு தப்புத் தண்டா இல்லாமே காரியம் ஆனாப் போதும்.”
“அதைப் பத்திக் கவலைப்படாதே. நான் அப்படி உன்னை மாட்டி விடுவனா? வீணா நீ ஏன் அங்கலாய்க்கிறாய். சட்டுப்புட்டுனு காரியத்தில் கண்ணாயிருந்து சாதிக்கப் பாரு. வீணா நாளை ஓட்டாதே” என்றான் கெட்டியப்பன்.
“அப்படியே ஆவட்டும். நீ மற்றவங்க கிட்டயும் இதைப் பத்தி கலந்து கொள். அவுங்க என்ன சொல்கிறாங்க பாப்போம்.”
“என்ன, நம்ம மணியக்கார அண்ணனிடம் தானே? நல்லாச் சொன்னாய். அவுங்க இதுக்கு அட்டி சொல்லமாட்டாங்க” என்றான் கெட்டியப்பன்.
“என்னமோப்பா. நீங்க எல்லாம் பாத்து என்னை எப்படிச் செய்யச் சொல்றீங்களோ அப்படிச் செய்றேன். என்னாலே வஞ்சகம் இல்லே. அதுதான் சொல்றதெல்லாம் சொல்லீட்டேன். நான் போறேன்” என்று கிளம்பினாள் நாகம்மாள்.
“சரி, சரி. சொன்னதெல்லாம் மனசிலிருக்கட்டும் ஏனோ தானோன்னு இருந்திட்டா கடைசியிலே நீயும் உம்மவளும் ஓடு எடுக்க வேண்டியதுதான்” என்று எச்சரித்து விட்டு, “நானும் கூட வாரேன். போக வேண்டியதுதான்” என்று புறப்பட்டான்.
“நல்ல கூத்து. நாம் போற மாட்டும் இங்கேயே இருப்பா. இது வேறெ யாராச்சு கண்டாக்கா போச்சு. ஊறுதென்றால் பறக்கிறதின்னும் சொல்லும் சனங்கள். அப்புறம் என்ன வேணுமானாலும் ஆரம்பிச்சு விடுவாங்க” என்றாள்.
“அப்படி எவனாவது வாய் அசைச்சா, குதிங்கால் நரம்பை வெட்டீட மாட்டனா? நீ ஒண்ணுக்கும் பதறாதே” என்றான் கெட்டியப்பன்.
“நானும் அப்படித்தான் மிரட்டிக்கிட்டு வாறேன்” என்று கூறிக்கொண்டே நாகம்மாள் நடந்தாள்.
அத்தியாயம் – 14
யாருடைய வருகைக்கு முன் தன் காரியத்தை முடித்துக் கொள்ள நாகம்மாள் எண்ணியிருந்தாளோ, எவருக்கு செய்தி எட்டுமுன்பே எல்லாவற்றையும் தீர்த்துக் கொள்ள ஆலோசித்தாளோ, எந்த முகத்தைக் காணுமுன்பே பிரிந்து விட நினைத்தாளோ, அந்த முகம் இன்று பிரசன்னமாகிவிட்டது. சின்னப்பனுடைய மாமியார் ஊரிலிருந்து வந்திருந்தாள். அந்த அம்மாள் தான் இவ்வளவு கசப்புக்கும் காரணம். அவளே இக்கிளர்ச்சியை முதலில் கிளப்பி விட்டவள்.
போன வருஷத்தில், மகளைப் பார்த்து விட்டுப் போக வந்திருந்தவள், பேச்சு வாக்கில் கெட்டியப்பனிடம், “ஊருக்குள்ளே கட்சி வரவரப் பலப்பட்டுக்கிட்டு வர்றதாமே” என்றாள். அப்போதெல்லாம் கெட்டியப்பன் அடிக்கடி வீட்டுக்கு வருவது கிடையாது. எப்போதாவது ஒரு நாள் வருவான். சின்னப்பனிடம் வெளியிலிருந்து பேசிவிட்டுப் போய்விடுவான். அவன் அடாவடிப் பேர்வழி தான். கவைக்காகாதவன் தான். இருந்தாலும் இரண்டு கட்சிக்கும் பொதுவாக நடந்து கொள்வதில் விருப்பமுள்ளவன். இல்லாவிட்டால் இரண்டு இடத்திலும் செல்வாக்குப் பெற முடியாதல்லவா? இப்படிப்பட்ட ஆளைத் தன் மருமகன் கட்சியில் சேர்த்தி விடச் செய்த முயற்சியின் விளைவுதான் இது. கெட்டியப்பன் இதைப் பயன்படுத்திக் கொண்டு, “நான் இருக்கும் போது எந்தப் பயல் வாலாட்டுவான். நீங்க கவலைப்பட வேண்டியதில்லை” என்றான். காளியம்மாள் “அதாங்கேட்டேன். நீங்கல்லாம் இவ்வளவனுசரணையா இல்லாட்டி இருக்கிற பூமியை வித்திட்டு மகளையும், மருமவனையும் என்னோடு இட்டுச் செல்லலாமென யோசிச்சேன். பாவம்! ஒண்டிக்காரனை இத்தனை கசக்கு முசக்குக்குள்ளே ஏன் தனியாக விட்டு வைக்கோணும்? நான் இருக்கவே இருக்கிறேன். அங்கு பண்ணையும் பாய்ச்சலையும் பார்த்துக்கிட்டுப் பையனுக்குத் தொணையாக இருப்பாங்களேன்னு பாத்தேன்” எனத் தொடர்ந்து பேசினாள்.
கெட்டியப்பனும் சமயம் பார்த்து, “நாகம்மாள் சங்கதி என்ன?” என்றான்.
“அவளுக்கென்ன வந்துவிட்டது. இருந்தால் வீட்டைக் கா காத்துக்கிட்டு இங்கிருக்கிறாள். இல்லாது போனா அங்கதான் வரட்டுமே. இனி அவளுக்கென்ன? சாகிற வரையிலும் சோறும், சீலையும் தானே. குழந்தை பெரிசானால் சித்தப்பன் இருக்குறாங்க, கலியாணம் காட்சி எல்லாம் பார்த்துக்கறாங்க. இங்கென்ன பத்துக் குழந்தையா இருக்குது?” என்றாள்.
கெட்டியப்பனுக்கு அப்போது தோன்றிய யோசனைதான் நாகம்மாளைப் பங்கு கேட்கத் தூண்டிவிட்டு இவ்வளவு தூரத்திற்கு வந்திருக்கிறது.
தன்னுடைய தாயார் ஊரிலிருந்து வந்திருக்கிறாள் என்றால் எந்தப் பெண்ணுக்குத் தான் சந்தோஷம் இல்லாமலிருக்கும்? ராமாயி சிரிப்பும் விளையாட்டுமாய் பூரித்துப் போனாள். குழந்தையை எடுத்துக் கொஞ்சுவாள். அதே சமயம் மேல் உலைத் தண்ணீரை எடுத்துப் புளி கரைத்துக் கொள்ளுவாள். வாசலுக்குப் போவாள். வீட்டிற்குள் வருவாள். அப்படியே தன் தாயாரிடம் தொட்டதும் விட்டதுமாய் இரண்டொரு வார்த்தை பேசிக் கொள்வாள். இப்படியாக உற்சாகத்திலே தேக்கித் திளைத்துக் கொண்டிருந்தாள் ராமாயி. ஆனால் நாகம்மாளோ மூன்றாவது மனுஷியைப் போல ‘வாங்க’ என்று கேட்டதைத் தவிர வேறு வார்த்தையே வைத்துக் கொள்ளவில்லை!
என்னவோ பெரிய வியாதி வந்து விட்டவளைப் போல பெரிய துப்பட்டியை எடுத்துப் போர்த்தி ஒரு மூலையில் படுத்துக் கொண்டாள். ராமாயி “சாதத்துக்கு என்ன போடறது அக்கா?” என்று பலதடவைக் கேட்ட பிறகு, “என்னைக் கட்டையிலே வைச்சிருந்தா யாரைப் போய் கேப்பாய்?” என்று கடிந்து மொழிந்தாள்.
இந்த வார்த்தைகளைப் பாதி கேட்டும், கேட்காதவள் போல, விஷயம் விளங்காத காளியம்மாள், “உடம்புக்கு ஒண்ணுமில்லையே” என்று நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். சௌக்கியமாய் இருக்கிற தேகத்தில் என்ன தெரியும்? எப்போதும் போலவே தான் உடம்பு இருந்தாலும் காளியம்மாள், “கொஞ்சம் கனகனப்பாயிருக்கிறாப் போலிருக்கிறது. வட்டச்சேறை கொத்தமல்லியைப் போட்டு கசாயம் வச்சுக் கொண்டு வரட்டுமா?” என்றாள்.
“எனக்கு ஒரு பண்டிதமும் வாண்டாம்” என்று ஒரே பேச்சில் சொல்லிவிட்டு நாகம்மாள் இழுத்துப் போர்த்திக் கொண்டாள். காளியம்மாளுக்கும் விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக விளங்கிற்று. அதற்குள் ராமாயி தன் தாயாரின் கையைப் பிடித்து வெளியே கூட்டி வந்து, “இந்த ரண்டு மாசமா இந்தக் கூத்துத்தான். இன்னம் சங்கதியெல்லாம் கேட்டா, நீ இங்கே பச்சைத் தண்ணி கூட வாயில் ஊத்தாமல் இப்போதே போயிடுவாய்” என்று தன் தாயாரிடம் சொன்னது, நாகம்மாள் காதிலும் லேசாகப் பட்டிருக்க வேண்டும். அதனால் தானோ என்னவோ போர்வையை எடுத்து எறிந்து விட்டுக் களைக் கொத்தையும் கூடையும் எடுத்துக் கொண்டு, “புல்லுக்குப் போறேன், நீ அப்படியிப்படி வீட்டுக்கு வெளியில் கால் எடுத்து வைத்திடாதே” என்று தன் மகளை எச்சரித்துவிட்டுப் புறப்பட்டாள்.
“இதென்ன நோவம்மா! வந்தபடியே போயிட்டுதே. ‘திப்புத் திப்புனு’ புல் கொண்டாரப் போறாளே!” என்று காளியம்மாள் ஆச்சரியப்பட்டாள்.
அத்தியாயம் – 15
காளியம்மாள் வந்து இரண்டு வாரமாயிற்று. அவள் இங்கு இன்னும் எத்தனை நாளைக்கு இருப்பாள்? எதற்காக வந்திருக்கிறாள்? என்ன பேச்சுவார்த்தைகள் நடக்கிறதென்ற விவரமெல்லாம் மர்மமாகவே இருந்தது. குடும்பத்தில் எவ்வித அதிர்ச்சியுமில்லை. குமுறல் கொந்தளிப்பின்றி அமைதியாகவே சென்று கொண்டிருந்தது. இந்த சமயத்தில் அடைமழைக் காலமும் வந்து சேர்ந்தது. புரட்டாசி கழிந்து ஐப்பசி ஆரம்பம். வானவீதியில் எந்நேரமும் சாயை படிந்து கருமுகில்கள் கவிழ்ந்த வண்ணமிருந்தன. திடீரென்று மழை கொட்டும். அடுத்த கணமே ‘கம்மென’ நின்று விடும். எதையோ நினைத்துக் கொண்டதைப் போல மறுபடியும் ‘சோ, சோ’வெனத் துளிக்கும். இப்படிப் பெய்யும் மழையை கவனிக்கையில் யாரோ ஒரு தாய் தன் வாலிப மகனைப் பறிகொடுத்ததை எண்ணி ஏக்கத்தில் ‘பலபல’வென்று, நின்று நின்று கண்ணீர் விடுவதைப் போலிருந்தது.
இங்ஙனம் அடைமழை ‘சொல்லாமல் கொள்ளாமல்’ வந்தாலும் பட்டி தொட்டிக்குப் போகிறவர்கள் நிற்கவேயில்லை. ஓலைக் குடைகளையோ, பனந்தடுக்குகளையோ அல்லது கோணிப் பைகளையோ போட்டுக் கொண்டு தங்கு தடையின்றி அவரவர் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர். வயது வந்த கிராமச் சிறுமிகள் ஆடைகளைச் சரியாகக் கூட மார்பில் போடாமல் ஜில்லிட்ட சாரலில் இட்டேறித் தடத்தில் செல்லும் காட்சியே காட்சி! ஆட்டு மந்தைகளின் பின்னாலோ வேலியோரங்களிலோ, காட்டின் நடுவிலோ, வாரி வழிகளிலோ அவர்கள் செல்வதைப் பார்த்தால், எங்கோ மாய உலகத்திலிருந்து வந்த மதன் மோஹினிகள் திரிந்து கொண்டிருப்பதைப் போலிருக்கும். இக்கூட்டங்களுக்கு மத்தியில் சின்னப்பனும் கலந்திருந்தான். அரை நாழிகை வீட்டில் சாய்ந்து உட்கார்ந்திருக்க மாட்டான்.
ஒரு நாள் ராத்திரி சின்னப்பன் சாப்பிடும் போது காளியம்மாள் என்னவோ ‘குசு குசு’ வென்று சொல்லிக் கொண்டிருந்தாள். ராமாயி கிட்டத்தில் தான் நின்று கொண்டிருந்தாள். “எஞ் சொந்தப் புள்ளையோட சொல்றாப்பலெ சொல்றேன். இன்னும் கொஞ்ச நாளில் பாருங்க, நாகம்மா என்ன கூத்து விடப் போறாள்னு.”
சின்னப்பன் சாதத்தைப் பிசைந்து கொண்டே என்னவோ யோசனையிலிருந்தான்.
“எங்கிட்டே நடந்துகிறதிலிருந்தே தெரிகிறதே. எல்லாங்கூடி எப்படியோ சதி பண்ணிப் போடுவாங்க. வேணுமானா நிசம், பொய்யல்ல பின்னால் பாருங்க” என்று காளியம்மாள் மிகவும் தணிந்த குரலில் சொன்னாள். ராமாயி அதையெல்லாம் வேடிக்கை பார்ப்பதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அதற்கு என்ன பண்ணுறது?” என்றான் அவன்.
“அதுக்குத்தான் போய் விடலாமிங்கிறேன். போவத்தான் வேண்டுமெங்கிறேன்” என்றாள் சற்று பலமாகவே. இந்தச் சமயத்தில் நாகம்மாள் உள்ளே நுழையவே பேச்சு வேறு வழியில் திரும்பியது. “போவத்தான் வேணுமெங்கிறேன். இதுக்காகப் பட்டரைக்குப் போகாமல் போனால் ஆசாரி உருளை செய்தாற் போலத்தான். நாளைக்கு எப்படி ஏத்துப் பூட்டுறது?” என்று அந்த வாக்கில் பேச்சுச் சென்றது.
ஆனால் நாகம்மாளுக்கு இந்தத் தில்லுமுல்லு எல்லாம் தெரியாதா? வார்த்தை துளிக்கூடக் கேட்காது போனாலே ஊகித்து விடக் கூடியவ. அரையும் குறையுமாகக் கேட்டுக் கொண்ட பிறகு எப்படி மாற்றினால் தான் வேறு ஏதோவென்றென நினைக்கவா போகிறாள்.
ஒன்றும் தெரியாதவள் மாதிரி, “அதுக்குப் போகாது போனா என்ன? அப்புறமாச் சொல்லி விடுகிறேன்” என்றாள் நாகம்மாள்.
ஆனால் ஆசாரி உருளை செய்து இரண்டு நாள் ஆயிற்றென்றும் இன்று காலையில் சின்னப்பன் அந்த உருளையில் தான் ஏற்று இறைத்து வந்திருக்கிறான் என்பதும் இவர்கள் இருவருக்கும் தெரியாது! நாலு நாளைக்கு முன் கேட்ட விஷயத்திலிருந்தே இவ்வளவு பேச்சும் நடக்கலாயிற்று. சின்னப்பன் சிரித்துக் கொண்டே “நமக்கெல்லாம் குளிர் என்றாலே நடுக்கமெடுக்கிறதே! நம் முத்துக்கு ஒண்ணும் செய்றதில்லையே!” என்றான். உடனே நாகம்மாள், “முத்து, முத்து!” என்று தெருவுக்கு வந்தாள்! இந்த வேடிக்கையை நினைக்கச் சின்னப்பனுக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்தது. அதே சமயம் மற்ற இருவரும் சிரித்தனர். இச்சிரிப்புச் சத்தத்தைக் கேட்ட நாகம்மாள் தன்னைப் பற்றித்தான் பேசிச் சிரிக்கிறார்கள் என்று எண்ணினாள்.
அன்று இரவு படுக்கையில் படுத்துங்கூட நெடுநேரம் இதைப் பற்றியே யோசித்தாள். ‘என்ன பேசியிருப்பார்கள்? அவள் எப்படித் தந்திரமாகப் பேச்சை மாற்றுகிறாள். பார், ஜாலக்காரி! போவத்தான் வேண்டுமாம். போடுகிறாளே சொக்குப்பொடியை! போகத்தான் போகிறாளா எல்லாம் வித்துக்கிட்டா? ஐயையோ அப்புறம் என் கதி? சே, சே, அப்படி ஒன்றும் என்னைத் தெருவில் விடமாட்டார்கள். ஆனாலும் இந்தப் பொல்லாத கிழவி இருக்கிறாளே! என்ன பேசியிருப்பார்கள். நான் இந்த ஒரு வாரமா எப்படியெல்லாம் மனதிலுள்ளதை ஒழிச்சு நடந்து வாரேன். அவளிடம் வெகு வெகு விசுவாசமாயிருந்தேனே. என்னையா இப்படித் தூற்றுவாள்? உம்… யார் கண்டது.’
இந்த இருபது நாளாகக் கெட்டியப்பனைப் பற்றியும் ஒரு சங்கதியும் தெரியவில்லை. இதையெல்லாம் அவனிடம் தெரிவிக்க வேண்டுமென்கிற ஆசை. ஆனால் ஆசாமி ஊரில் இருக்கிறது, இல்லாத சங்கதியே தெரியவில்லையே! யாரையாவது கேட்கலாமென்றால் தோதாக எந்த நபரும் காணவில்லை. யாரோ பேசிக் கொண்டார்கள் யாரோடு சண்டைக்குப் போய் அடித்துவிட்டானாம். அந்தக் கலவரத்தில் கால் வழுக்கி விழுந்து கை முறிந்து விட்டதாம். நாகம்மாள் மனத்திற்குள்ளாகவே வேதனையிலாழ்ந்தாள். ‘கெட்டியப்பனுக்கு கையும் முறியாது, காலும் முறியாது. நிசமா அவன் திடமாகத் தானிருப்பான். அவனுடைய விரோதக்காரர்களின் விருப்பமாக்கும் இவையெல்லாம்! எதுக்கும் சங்கதி தெரிஞ்சுடுது. இது தான் நல்லது’ என்று நாகம்மாள் முடிவு கட்டினாள்.
காலையில் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. விடிந்ததும் விடியாததுமாய் நாகம்மாள் வெளியே போகும் போது ஒரு சக்கிலி எதிரில் வந்தான். நாகம்மாளைக் கண்டதும் கையைச் சொரிந்து கொண்டே, “ரொம்பச் சங்கட்டமாய் இருக்குதுங்க’ என்றான். நாகம்மாளுக்கு ஒன்றும் புரியவில்லை.
“யாருக்கடா சங்கட்டம்?” என்றாள். “வலசிலிருந்து வாரானுங்க. நம்ம – உம் – சின்னக் கவுண்டருக்குத்தானுங்க” என்றான்.
அப்போது தான் நாகம்மாளுக்குச் சங்கதி தெரிந்தது. காளியம்மாளின் மகனுக்கு எப்போதும் நெஞ்சுவலி உண்டு. ஒரு தடவை தூக்க முடியாத பாரத்தைத் தூக்கிய போது உள்ளுக்குள்ளே சுளுக்கி நரம்பு புரண்டு விட்டது. அப்புறம் அதற்கு என்ன செய்தும் பூரண குணமாகவில்லை.
இந்தச் சேதி வீட்டில் தெரிந்தவுடன் காளியம்மாள் உடனே புறப்பட ஆயத்தமானாள். அங்குமிங்கும் ஆவி பறந்து திரிவதிலிருந்து எவ்விதம் வருத்தப்படுகிறாள் என்பது தெரியும். இருப்பதோ ஒரே ஒரு மகன்; அவனுக்கும் இப்படி வந்துவிட்டதென்றால் யாருக்குத்தான் துக்கமிராது? சிறிது நேரத்தில் பயணமாகி விட்டாள். பத்துப் பதினைந்து மைல் தூரம் ஒருத்தியையும் அனுப்புவதெப்படி என்று சின்னப்பனும் கூடப் புறப்பட்டான்.
– தொடரும்…
– நாகம்மாள் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1942, புதுமலர் நிலையம், கோயம்புத்தூர்.