நல்வாழ்வு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 28, 2026
பார்வையிட்டோர்: 100 
 
 

(1953ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“முதலியார் வீட்டிலே கல்யாணமாமே”

“எந்த முதலியார் வீட்டிலே? ராமலிங்க முதலியார் வீட்டுக் கல்யாணத்தைதானே சொல்கிறீர்ள்?”

“ஆமாம் ஆமாம். வேறு யார்? அவரைத்தானே இந்தப் பக்கங்களில் பேர் குறிப்பிடாமல், ‘முதலியார்’ என்று சொல்கிற பழக்கம்?”

“அதுதான் ஒரு மாச காலமாகத் திமிலோகப் படுகிறதே! பணம் பத்து விதமும் செய்யுமல்லவா? அருமை பெருமையுடன் வளர்த்த ஒரே பிள்ளைக்குக் கல்யாணம் என்கிறபோது தடபுடலுக்குக் கேட்பானேன்?”

“பதினைந்து வருஷத்திற்கு முன் இதே முதலியார் எந்த நிலையில் இருந்தார்; இன்று எந்த நிலையிலே இருக்கிறார் பார்த்தீர்களா? அப்போது குடும்பச் செலவுக்கே பற்றாத வருமானமுடைய ஏழைக் குமாஸ்தா. இப்போது லட்சாதிப் பிரபு! எல்லாம் காலம் செய்கிற கோலம்!”

“அடுத்தாற்போல இவரோடேயே வேலை பார்த்த பாலகிருஷ்ண முதலியாருடைய குடும்பம் பொன போக்கைப் பாருங்கள்! இருவரும் சம வயசு உடையவர்கள்தாம். அழகு, அறிவு, படிப்பு அனைத்திலுமே ஒரே மாதிரிதான். இருந்தும் அதிருஷ்டம் காரணமாக அவர் கம்பெனி மானேஜராகவும் இவர் அவர் கீழே உள்ள அநேகம் குமாஸ்தாக்களுக்கிடையே ஒரு சாமான்ய குமாஸ்தாவாகவும் இருந்தார்கள். அவர் பங்களாவிலே வசித்தார்; இவர் வெகு சாமான்யமான வீட்டிலே ஒண்டுக் குடியிருந்தார். இரு குடும்பங்களிடையேயும் அந்தஸ்தில் வெகு வித்தியாசம். இன்று நிலைமை அப்படிபே தலைகீழாக மாறிப்போய் விட்டது. இந்த மாறுதலுக்கு மூலகாரணம் என்ன என்பதைப்பற்றி நினைத்துப் பார்த்தால் மிகவும் ஆச்சரியமாக இல்லையா?”

“அந்தக் கட்டிட விபத்தைத் தானே சொல்கிறீர்கள்? பாவம், அத்தனைபேர் வேலை பார்த்த இடத்திலே கிருஷ்ணனைப் பொறுக்கி எடுத்துப் பலிகொண்டதே அந்தக் கட்டிடம்!”

“ஏன்? இன்னும் பல பேரைப் பலி கொள்ளவில்லையே என்று ஆயாசப் படுகிறீர்களா?”

“சே சே. என்ன அப்படி யெல்லாம் பேசுகிறீர்கள்? கிருஷ்ணனும் மற்றவர்களைப் போலத் தப்பியிருக்கலாகாதா என்றுதான் ஆதங்கப்படுகிறேன்.”

“நாம் ஆதங்கப்பட்டு என்ன பிரயோசனம்? அவருக்கு முடிவு அந்த வகையிலே போட்டிருக்கிறது. விதியை வெல்ல யாரால் முடியும்?”

“அட மனிதர் தாம் மாண்டு போனாரே, உடலின் ஒரு சிறு பாகங்கூடக் காணக் கிடைக்காதது தான் மிகவும் துக்ககரமான விஷயம்.”

“எப்படிக் கிடைக்கும்? கட்டிடமோ மிகப் பெரிது. பழைய காலத்தது. நொடிப் பொழுதில் இடிந்துவிழுந்து தரைமட்டமாகி விட்டது. ஏகப்பட்ட ஆட்களை வைத்துப் பிரயாசைப் பட்டும் கல்லையும் மண்ணையும் அப்புறப் படுத்தக்காலம் அதிகம் பிடித்தது.”

“என்னதான் கால தாமதமானாலும் இப்படியா உறுப்புகளில் ஒன்று கூடக் கிடைக்காமல் போய் விடும்? அவ்வளவுதான் அவர்களுடைய அக்கறை.”

“நீங்கள் அதைச் சொல்கிறீர்கள். தவறு அடிப்படையிலேயே இருக்கிறது. கட்டிட வேலை நிறை வேறுவதற்குள் அவர்கள் அங்கே ஆபீஷ் நடத்தத் தொடங்கியதே பெருந்தவறு. எங்கே என்ன கோளாறோ, திடீரென்று அப்படி நேர்ந்தது. நல்ல வேளை! பகல் நேரத்திலே பலரும் வேலை செய்து கொண்டிருக்கையில் அந்த விபத்து நேர்ந்திருந்தால்? எத்தனை உயிர்கள் மாண்டிருக்கும்? எவ்வளவு குடும்பங்கள் நடுத்தெருவிலே நிற்க நேர்ந்திருக்கும்? நினைத்தாலே மெய் சிலிர்க்கிறதே!”

“சில இடங்களில் இந்த மாதிரி ஏதாவது நடந்தால் ஸ்தாபனத்தார் கஷ்டத்திற்குள்ளான ஊழியர் குடும்பத்திற்கு உதவுவதுண்டு. இங்கே அதுவும் இல்லை.”

“எப்படி எதிர்பார்க்க முடியும்? கிருஷ்ணன் அந்தக் கட்டிடத்திலே சிக்கி மாண்டுபோனார் என்பது ஊகமே தவிர ஆதாரம் எதுவும் இல்லையே?”

“பாவம், கிருஷ்ணன் மனைவி சின்னஞ்சிறு பெண் குழந்தையும் கையுமா திண்டாடினதற்கு இந்த ராமலிங்கம் மட்டும் கைக் கொடுக்கவில்லை என்றால் என்ன ஆகும்?”

“அதிலும் கிருஷ்ணன் இருந்த வரையில் ராமலிங்கம் கசக்கிப் பிழிந்து கொடுமைப் படுத்தினாராம்.. அப்படிப் பட்டவரின் மனைவியையும் ராமலிங்கம் இப்படி ஆதரிப்பது வெகுவாகப் பாராட்டத்தகுத்தது தான்.”

“அதுமட்டுமா? இப்போது லட்சாதிபதியான தம் மகனுக்குப் பிச்சைக்காரி கொப்பானவறின் மகளை மணம் செப்வித்துக் கொள்கிறாரே, அதைச் சொல்லுங்கள்.”

“ஏழையாயிருந்த பொது நல்லவர்களாயிருந்தவர்கள் பணக்காரரான பின் தலைகீழாக மாறி விடுவர். ராமலிங்கம் இந்த கதிக்கு விலக்கு. என்னவோ, அவர் நல்ல குணத்திற்கு அவரும் அந்தக் குழந்தைகளும் மற்றும் அவர் குடும்பத்தினரும் நீடுழி காலம் சுகமாக வாழ வேண்டும்.”


அந்தப் பிராந்தியத்தில் எங்கே பார்த்தாலும் இதே பேச்சாத் தான் இருந்தது. ஊராரிடையே சதாகாலமும் இதே பேச்சென்றால் சம்மந்தப் பட்டவர்களிடையே கேட்கவும் வேண்டுமா? ராமலிங்கம் பரபரப்புடன் ஏற்பாடுகளைப் பிரமாதமாகச் செய்து கொண்டிருந்தார். அவர் மனைவி அபிராமிக்கு எல்லையற்ற சந்தோஷம். மகன் கோபாலனோ, தன் காதல் ஈடேறப்போகும் காலம் சமீபித்துவிட்டதை எண்ணி எண்ணிக் குதூகலித்தவண்ணம் இருந்தான். ஆம், லீலாவதியிடம் அத்தனை பிரேமையை வளரவிட்டிருந்தான் அவன்.

அங்கே லீலாவதியின் நிலையும் அப்படியேதான் இருந்தது. எந்நேரமும் ஆனந்தத்தால் துள்ளிக் கொண்டே இருந்தது அவள் உள்ளம். ஆயினும் இடையி டையே தாயின் நிலைகண்டு சிறிது கண் கலங்கவும் செய்தாள். ‘அடடா! அப்பா இருந்தால் இப்போது எப்படி இருக்கும்!’ என்று. ஆம். தாயின் நிலை கண்டுதான் அவள் தகப்பனை நினைந்து வருந்தினாள். அதற்குக் காரணம், தகப்பனாரை அறியாத காலத்திலேயே அவள் பறி கொடுத்துவிட்டது தான்.

ஆனால் சுந்தரியின் நிலை அப்படியா? பத்து வருஷகாலம் உடனிருந்து ஆண்டு அனுபவித்தவள் அவள். அந்த நாளில் கணவனின் முழு அன்பிற்கும் அவள் பாத்திரமாக இருந்தாள் என்று சொல்ல முடியாது தான், என்றாலும் அவள் அன்பு உள்ளம் என்றுமே கணவனிடம் வெறுப்புக் கொண்டதில்லை. அன்புடனோ அன்பின்றியோ கணவனோடு கூடி வாழ்ந்தவள், எதிர்பாராத விதமாகப் பேரிடியால் தாக்குண்டாள். எப்போதுமே துக்கம் அவள் நெஞ்சிலே நிறைந்திருந்தது. இப்போது அருமை மகளுக்குக் கல்யாணம் என்றதும் அந்தத் துக்கம் நெஞ்சிலே பிரம்மாண்டமாக வளர்ந்து நெஞ்சைக் கிழித்துக்கொண்டு வெளிப் பட முயன்று கொண்டிருந்தது. சுபகாரியம் எதிரே நிற்கும்போது துயரம் கொண்டாடக் கூடாதென்று அவள் மனசை அடக்கப் பாடுபட்டாள். அது அத்தனை சுலபமானதாக இல்லை.

ஏதோ காரியமாக அவளைக் காணவந்தாள் அபிராமி. வீட்டிலே சந்தடியே இல்லை..உள்ளே போய்ப்பார்த்தால் ஓர் அறையிலே படுத்துக் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள் சுந்தரி. அதைக் கண்டதும் அபிராமிக்கும் சகிக்க முடியாத வேதனை உண்டாகி விட்டது. வந்த சுவடு தெரியாமலே திரும்பி விட்டாள். மனத்திலே சுழன்று கொண்டிருந்த வேதனையின் சாயல் முகத்திலே நிழலாட ஏதோ பெயரளவில் வீட்டு அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருங்தாள்.

இரவு வீடு திரும்பிய ராமலிங்கம் மனைவியின் முகத் தோற்றங் கண்டு துணுக்குற்றூர், ‘என்ன, ஏது’ என்று விசாரித்தார். ‘ஒன்றும் இல்லை’ என்று மழுப்ப முயன்றள் அபிராமி. பலிக்கவில்லை. விவரம் உரைத்தாள். அதைக் கேட்டு ராமலிங்கம் பெரு மூச்செறிந்தார்.

இரவு கடு நிசிக்கு மேலாகியும் ராமலிங்கமும் அபிராமியும் தூங்கவில்லை. அத்தனை சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தனர். தூங்கிக் கொண்டிருக்கும் கோபாலன் தற்செயலாக விழித்துக் கொண்டால் அவன் காதில் பட்டுவிடப் போகிறதே என்கிற அச்சத்தால் மிகவும் ரகசியமாகப் பேசிக் கொண்டனர் அவர்கள். அப்படிப் பட்ட பேச்சு வேறு எதைப் பற்றியும் எவரைப் பற்றியும் அல்ல; எல்லாம் கிருஷ்ணனைப் பற்றித்தான், அவர் மறைவைப் பற்றிதான். அபிராமிக்குத் தன் கணவன் சொல்லிக்கொண்டு வருகிற விஷயங்களைக் கேட்கக் கேட்க ஆச்சரியம் தாங்க முடியவில்லை. ‘இப்படியும் நடக்குமா?’ என்று அதிசயிப்பவளைப் போல வியப்பே வடிவாய் அமர்ந்து கணவன் சொல்வதை யெல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். ராமலிங்கம் நிதானமாகச் சொல்லிக் கொண்டே போனார்.


“அபிராமி, கிருஷ்ணன் இறந்து விட்டதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்; சுந்தரி நினைத்துக் கொண்டிருக்கிறாள்; ஏன், உலகமே தான் நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் என் வரையில் அவர் இறக்கவில்லை. சொல்கிறேன் கேள்.

“கிருஷ்ணன் பரமத் துவேஷங் கொண்டிருந்தார். அவேஷத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் உள்ளடக்கி வைத்துக் கொண்டு மேலுக்கு மிக அன்புடன் நடந்து கொள்வது போல நடித்து வந்தார். இதை நான் வெகு சீக்கிரத்திலேயே உணர்ந்து கொண்டேன். மிகவும் ஜாக்கிரதையுடன் நடந்து கொண்டு வந்தேன். இதையெல்லாம் உன்னிடமும் அப்போதைக்கப்போது சொல்லி வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் உன் நெஞ்சில் அளவற்ற கவலை தோன்றும், அதன் சாயை முகத்திலே பயங்கரமாக நிழலாடும். ‘ஜாக்கிரதை’! ‘ஜாக்கிரதை!’ என்று என்னை எச்சரித்துக் கொண்டே வந்தாய். இதெல்லாம் இப்போதும் உனக்கு நினைவிருக்கும் என்றே நினைக்கிறேன். கடைசியில் ஒரு நாள் நாம் கவலைப் பட்டது நிகழ்ந்தே விட்டது.

“அன்று எல்லோரும் வீட்டுக்குப்போன பின்பும் கிருஷ்ணன் என்னை மட்டும் நிறுத்திக்கொண்டு ஏராளமான கடிதங்களைக் கொடுத்து டைப் அடிக்கச் செய்தார். இடையிடையே வாட்சுமேனைக் கொண்டு காபி முதலியன தருவித்து உபசரிக்கவும் செய்தார். எனக்கென்னவோ மனசு சரியாகவே இல்லை. ஏதோ பெரிய விபத்து எதிரே காத்துக் கொண்டிருப்பதாக அந்தராத்மா அறிவுறுத்திக் கொண்டே இருந்தது.

“இரவு பதினோரு மணி. கிருஷ்ணன் வாட்சுமேனை ஏதோ வேலை ஏவி எங்கோ அனுப்பினார். அவன் சென்றதும் என்னையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பினார். இருவரும் கீழே இறங்கி வந்தோம். ஊரோசை நன்கு அடங்கி விட்டது. தெருவிலே நின்று வாட்சுமேன் வரவை எதிர்பார்த்தோம். திடீரென்று, கிருஷ்ணன் “அடாடா! பர்ஸை மேஜை மீதே வைத்து விட்டு வந்து விட்டேனே. கொஞ்சம் போய் எடுத்து வருகிறீர்களா?” என்றார். நான் மாடிப் படிகளில் ஏறினேன். உடனே கிருஷ்ணன் என்ன செய்தார் தெரியுமா? கட்டிடத்தின் கீழ்த்தளத்திலே மத்திய பாகத்திலே இருந்த ஹாலை நோக்கி விரைந்தார். அந்த ஹால் எப்போதும் பூட்டியே இருக்கும். ஏனென்றால் அதன் மத்தியிலே தான் கட்டிடத்தின் பிரதான முட்டுக்கட்டை இருந்தது. அதன் வசந்தான் இருந்தது கட்டிடத்தின் வாழ்வு. அதற்கு ஹானி ஏற்பட்டால் அந்தக் கட்டிடமே நாசமடைந்து விடும். முழுவேலையும் பூர்த்தி பெற ஆறு மாதத்திற்கு மேல் ஆகும். அதன் பிறகுதான் முட்டுக்கட்டையை தட்டவேண்டும். எனவே அந்த ஹாலின் சாவி கிருஷ்ணனிடமே பத்திரமாக இருந்தது. அந்த நடு இரவிலே அவருக்கு அங்கே என்ன காரியம்?

“மாடிப்படியிலே ஏறத் தொடங்கிய நான் இரண்டாவது படியிலே காலை வைத்ததுமே, ‘ஆ’ என்று உட்கார்ந்து விட் டேன். அங்கே கிடந்த குண்டூசி என் காலிலே ஏறிவிட்டது. உட்கார்ந்து அதைப் பிடுங்கலானேன், ‘மறைவிலே இருந்த என் உருவம் கிருஷ்ணன் கண்ணிலே படவில்லை. ஆனால் அவரை என்னால் நன்கு கண்காணிக்க முடிந்தது. அதனாற்றான் இன்று உன்னோடு இப்படி அளவளாவும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

“கிருஷ்ணன் பரபரப்புடன் ஹாலைத் திறந்து கொண்டு உள்ளே போனார். நான் உற்றுக்கவனித்தேன். முன் ஏற்பாடாக எல்லாம் செய்து வைத்திருந்தார் போலும். வலுவான கயிறு ஒன்று முட்டுக் கட்டையிலே கட்டப்பட்டிருந்தது. அதன் மறுதலைப்பைக் கையிலே கொண்ட கிருஷ்ணன் வேகமாகத் தெருவுக்கு ஓடித் தம் பலங் கொண்ட மட்டும் இழுக்கலானார். அதைக்கண்ட நான் அவர் அறியாமலே இருளில் மறைந்து தெருவின் மற்றொரு பகுதியை அடைந்து மறைந்து நின்றுபார்த்தேன்.

“அத்தனை பெரிய கட்டிடத்திற்கு ஆதாரமாக உள்ள மூட்டுக் கட்டை, கேவலம் ஓர் ஆசாமி இழுத்தால் விழுந்து விடக்கூடியதாக ஒரு போதும் இராது. அவர் முன் யோசனையுன் அதில் ஏதோ விஷமஞ் செய்து வைத்து, இழுத்ததும் விழுந்து விடும்படிச் செய்திருக்கிறார்.

“கண் இமைக்கும் நேரத்துள் காரியம் மிஞ்சி விட்டது. திடு திடு வென்று கட்டிடம் இடிந்து விழ ஆரம்பித்தது. என் உடம்பு பயத்தால் வெட வெடத்தது. மறு கணம் கிருஷ்ணன் மீது பழி தீர்க்கும் ஆக்கிரோஷம் உக்கிரமாகப் பிறந்தது. அவரை நோக்கிப் பாய்ந்தோடினேன். பிரமை பிடித்தாற் போல நின்றிருந்த அவர் தொலைவில் என்னைக் கண்டதும் யாரோ, என்னவோ என்று உளறியடித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தார். நானும் தொடர்ந்து ஓடினேன்.

“அவர் திரும்பியே பார்க்க வில்லை. நான் அந்தக் கட்டிடத்திலே சிக்கி மாண்டு போயிருப்பேன் என்பது தானே அவர் எண்ணம்? ஆகவே வேறு யாரோ தம்மைத் துரத்தி வருவதாகத் தான் எண்ணி ஓடியிருக்க வேண்டும். வழியிலே ஓரிடத்தில் நான் இடறி விழுந்தேன். எழுந்து தொடருவதற்குள் அவர் வெகு தூரம் போய்விட்டார். இடையே ஒரு ஸ்டேஷன் குறுக்கிட்டது. அங்கே புறப்படத் தயாராக ஒரு ரெயில் நின்று கொண்டிருந்தது. கிருஷ்ணன் அதில் தாவி ஏறினார். நான் செல்வதற்குள் ரெயில் போய் விட்டது. சோர்ந்த உள்ளத்துடன் நான் வீடு திரும்பினேன். இது தான் நடந்த கதை…”

“இதை ஏன் மூடி வைத்து விட்டீர்கள்? பாவம் சுந்தரி விதவைக் கோலம் பூண்டு துக்கத்தில் மூழ்கித் துடிக்கிறாளே?” என்று பரபரப்புடன் கேட்டாள் அபிராமி, ராமலிங்கம் சிரித்தார். பிறகு சொன்னார்.

“அபிராமி, நான் அதைச் சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும் தெரியுமா? இப்போது பொய்யாக விதவைக் கோலம் பூண்டுள்ள சுந்தரி அப்போது மெய்யாகவே விதவை ஆக நேரிடலாம், அல்லது அவளுக்குப் பைத்தியம் பிடிக்கலாம். குழந்தை லீலாவதியின் கதி பரிதாபமாகலாம். ஒருவனைக் கொலை செய்ய முயன்ற குற்றம், லட்சம் பெறுமானமுள்ள கட்டிடத்தை நாசமாக்கிய குற்றம் இரண்டி னின்றும் கிருஷ்ணன் தப்ப முடியாது. அதனாற்றான் அன்று முழுப் பூசனிக்காயை இலைச் சோற்றிலே மறைத்து நடித்தேன் நினைவிருக்கிறதா?… அன்றிரவு ஒரு மணிக்கு வந்து கதவு தட்டினதும் திறந்து நீ கவலையோடு, “ஏன் இவ்வளவு நேரம்?” என்று கேட்டாய். சினிமாவுக்குப் போயிருந்ததாகப் பொய் சொன்னேன். சிறிது நேரத்திற்கெல்லாம் வாட்சுமேன் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடிவந்தான். என்னைக் கண்டதும் திகைத்து, “எப்போ வீட்டிற்கு வந்தீர்கள்?” என்றான். நான் மிக்க அமைதியை வரவழைத்துக் கொண்டு, “மானேஜர் உன்னை வெளியே அனுப்பிய உடனேயே என்னையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். மனசு அலுப்பாய் இருந்தது. சினிமாவுக்குப் போனேன். அவர் மட்டும். தனியே மாடியில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார்” என்று கூறி விட்டு, “ஏன்? என்ன விசேஷம்?” என்று வினவினேன். இதெல்லாம் உனக்கு நினைவிருக்குமே? அவன் உடனே நாக்குழற, “கட்டிடம் இடிந்து விழுந்து தரை மட்டமாகி விட்டது; மானேஜர் வீட்டுக்கு ஓடிப் போய் பார்த்தேன். அங்கே அவர் இல்லை. அதனால் அவர் அந்தக் கட்டிடத்திலே சிக்கி இறந்து போயிருப்பார் என்று நினைக்கவேண்டி இருக்கிறது. பாவம் மானேஜர் சம்சாரம் புழுவாய்த் துடிக்கிறாங்க” என்றான். உடனே நான் அவனோடு கிளம்பிச் சென்றேன்.

இப்படி நடிக்காமல் நான் அன்று உண்மையைச் சொல்லியிருந்தேனானால் கிருஷ்ணனைப் போலீஸ் சல்லடை போட்டுச் சலிக்கத் தொடங்கி யிருக்கும். அவர் கட்டாயம் சிக்கியிருப்பார். அதனால் அவருக்கும் கஷ்டம், அவர் குடும்பத்துக்கும் கஷ்டம், உனக்கும் கஷ்டம், எனக்கும் மான நஷ்டம். அபிராமி, சொல்லப் போனால் உன்னை உத்தேசித்துத் தான் நான் அப்படி நடந்து கொண்டேன் என்பதுதான் முறறும் பொருந்தும். நீ மட்டும் அடி நாளிலேயே அந்த விஷயங்களை என்னிடம் சொல்லியிராவிட்டால்”…என்று நிறுத்தினார் ராமலிங்கம். அபிராமி சிந்தனை வசப்பட்டுச் சிலையாய்ச் சமைந்து போனான். அவள் நினைவோட்டத்திலே பழைய சம்பவங்கள் அடுக்கடுக்காகப் பளிச்சிடத் தொடங்கின.


கிருஷ்ணனும் அபிராமியும் சிறுபிராயத்தில் நட்பு உடையவர்கள். ஆனால் அவர்களுடைய திருமணப் பருவத்திலே பெற்றோரிடையே தோன்றிய மனஸ்தாபம் காரணமாக அபிராமி ராமலிங்கத்தின் மனைவியானாள். கிருஷ்ணன் துடியாய்த் துடித்தான். ஜகத்தையே அழித்து விடுகிறாற் போலக் கோபங் கொண்டு கொதித்தார். நான் ஆள வேண்டிய அபிராமியோடு எவனோ ஒருவன் குலவுவதா? அவனை ஒழித்துக் கட்டி விடுகிறேன் எனப் பொருமினார். ஒன்றும் நடைபெறவில்லை. அபிராமிக்கு ரகசிய கடிதங்கள் எழுதினார், இருவருமாக வெளிநாடுகளுக்கு ஓடி விடலாமென்று. அவள் பல கடிதங்களுக்குப் பிறகு வெகு சாந்தமாக, விவேகமாக, கிருஷ்ணனுக்குப் புத்திமதி கூறி ஒரு கடிதம் எழுதினாள். அதைக் கண்டு கிருஷ்ணன் திருந்தி அடங்கி விட்டார். அல்ல அடங்கி விட்டாற் போல நடந்து கொண்டார். உள்ளே தீயும் மேலே சாம்பலுமாக.

வெகு காலத்திற்குப் பிறகு-

அபிராமி கோபாலனுக்குத் தாயாகவும், கிருஷ்ணன் லீலாவதிக்குத் தகப்பனாகவும் ஆன பிறகு – விதி மீளவும் அவர்களைக் கூட்டி வைத்தது. கிருஷ்ணன் மானேஜராக வேலைபார்த்த பிராஞ்சு ஆபீசுக்கு ராமலிங்கம் மாற்றலாகி வந்தார். வந்த பிறகுதான் கிருஷ்ணன் அங்கு மானேஜர் என்பது அபி ராமிக்குத் தெரியும். முன்பே தெரிந்திருந்தால் அவள் போதிய முயற்சி எடுத்துக் கொண்டு தகுந்த பரிகாரம் தேடியிருப்பாள். பின்னர் அது சாத்தியமில்லாது போய்விட்டது.

ராமலிங்கத்தை மணந்து கொண்ட உடனேயே அபிராமி கிருஷ்ணனுக்கும் தனக்கும் இருந்த பால்ய நட்பைப் பற்றி விவரமாகக் கூறி விட்டாள். கூறாமலே இருந்து விடலாம் என்று தான் பார்த்தாள். ராமலிங்கத்தின் கரை கடந்த அன்புக் கெதிரில் அவள் உள்ளத்தில் எந்த ரகசியமும் தங்கவில்லை. விவரமறிந்த ராமலிங்கமும், இது சகஜம் என்று கன அலட்சியமாகக் கூறினாரே தவிர அதை ஒரு பொருட்டாக எண்ணவேயில்லை. அபிராமி தன் கணவனின் பெருந்தன்மையான போக்கைக் கண்டு உள மகிழ்வு கொண்டாள் ஆனால் –

கனவுபோல் தேய்ந்து மறைந்து போன ஒரு விஷயம் பல வருஷங்களுக்குப்பின் புத்துயிர் பெற்றுப் பிரம்மாண்டமான உருவத்துடன் எதிரே வந்து நின்ற பிறகு அபிராமியால், ஏன்? ராமலிங்கத்தினால்கூடத்தான் அசட்டையாக இருக்க முடியவில்லை.

கிருஷ்ணனை முன்னதாக அறியாத ராமலிங்கம் மனத்தில் சிறிதும் கபடற்ற முறையிலே நடந்து கொண்டார். இரண்டொரு நாட்களுக்குப் பின்னர் குசலப் பிரச்சனத்தின் மூலம் ராமலிங்கத்தை இன்னார் என்றறிந்து கொண்ட கிருஷ்ணன் கபடத்துடன் நடந்து கொள்ளத் தலைப்பட்டார். பழைய நினைவுகள் தோன்றி அவரைத் தகிக்க ஆரம்பித்தன. ஏதேதோ முயற்சிகளை மேற் கொண்டார். ராமலிங்கம் காரியாலயத்தில் இருக்கக்கூடிய சமயமாகப் பார்த்து அவர் வீட்டுக்குச் சென்று அபிராமியோடு உறவாட முயன்றார். சாம தான பேதம் ஆகிய பல முறைகளையும் கைக்கொண்டார். அபிராமி சரியானபடி நடந்து கொண்டாள். தோல்வியிலே எழுந்த தீ ஜ்வாலை விட்டெறிய வெகுட்சியுடன் திரும்பினார் கிருஷ்ணன். உரிய காலத்தில் வீட்டையடைந்த கணவனிடம் அபிராமி நடந்ததை நடந்தபடி. கூறினாள். அப்போது தான் ராமலிங்கம் தமது மானேஐரைப் புரிந்து கொண்டார்.

அன்று முதல் ஆரம்பமாகி விட்டது ராமலிங்கத்திற்கு கஷ்ட காலம். கிருஷ்ணன் மறைமுகமாகப் பற்பல இன்னல்களை விளைத்து வந்தார். அந்த அளவிலே அவர் உள்ளம் திருப்தியுறுவதாயில்லை. தனக்கு உதவாத பாலைக் கொட்டிக் கவிழ்த்து எவருக்கும் உதவாததாகச் செய்து விடுகிற முறையில் ராமலிங்கம் அபிராமியின் வாழ்க்கையை அடியோடு நாசம் செய்துவிடத் திட்டமிட்டார். அதன் விளைவு தான் அந்தக் கட்டிட விபத்து. ஆனால் அது எப்படி முடிந்தது? தனக்குத்தானே வெட்டிக் கொண்ட புதை குழியாக ஆகி விட்டது.


நீண்ட நேரத்திற்குப் பின் சிந்தனையிலிருந்து விடுபட்ட அபிராமி தன்னைச்சுற்றி நோக்கியபோது அங்கே ராமலிங்கத்தைக் காணவில்லை. தெருபக்கம் அவர் குரல் கேட்டது. கல்யாண ஏற்பாடு சம்பந்தமாக யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தது. நீண்ட பெருமூக்சுடன் இருக்கையை விட்டெழுந்தவள் “கடவுளே! உன் திருவுள்ளம் ஏதோ! கிருஷ்ணன் போய்விட்டார் என்பது ஒருவகையில் மனசுக்குத் துன்பத்தையளித்தாலும் ஒரு வகையில் நிம்மதியாயிருந்தது. அந்த நிம்மதியை அடிப்படையாகக் கொண்டு குழந்தைகளின் மனக்கோட்டையைத் தகர்க்கக் கூடாதென்று இந்த ஏற்பாட்டிலே இறங்கிற்று. கிருஷ்ணன் இருக்கிறார் என்றால்? திடீரென்று எங்கிருந்து, எப்போது, எப்படி வருவாரோ, என்ன செய்வாரோ, என்ன விளையுமோ!… கடவுளே! நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும். குழந்தைகள் சந்தோஷமாக வாழ அருள் புரிய வேண்டும்.” என்று மனசுக்குள் புலம்பியவாறு அலுவல்களைக் கவனிக்கச் சென்றாள்.

வாத்தியங்களின் கோஷம் வானைப்பிளக்க, தெருவடைத்து அலங்காரத்துடன் விளங்கிய கொட்டாரப் பந்தலில் ஜே ஜே என்று கூட்டம் நெரியக் கன மோக்களாவாக ராமலிங்க முதலியார் வீட்டிலே திருமண வைபவம் நிகழ்ந்து கொண்டிருந்தது. கோபாலனும் லீலாவதியும் தம்மை மறந்து ஆனந்த நிலையிலே மணவறையிலே அமர்ந்திருந்தனர். சுந்தரி இன்பமும் துன்பமும் கலந்த உணர்ச்சி வெள்ளத்திலே மூழ்கியவளாய் ஒரு புறமாக இருந்து வைபவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்கள் தாரையாக நீரை வழியவிட்டபடி இருந்தன. ராமலிங்கமும் அபிராமியும் புத்தாடை தரித்துப் பூரித்த உள்ளத்துடன் காரியங்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர். இடையிடையே சுந்தரியைக் காணும் போது மட்டும் அவர்கள் உள்ளம் துணுக்குறும். ‘பாவம்’ என்று மனம் அங்கலாய்க்கும். அவளிடம் ரகஸியமாக விஷயத்தைத் தெரிவித்துச் சந்தோஷமாக இருக்கும்படி சொல்லலாமா எனப் பல தடவை ஆலோசித்தனர் தம்பதிகள். பின்னர் அது சரியல்ல வென்று அந்த யோசனையைக் கைவிட்டனர்.

தாலி கட்டும் நேரம். அப்போது திடீரென்று வாசற் புறத்திலே ஏதோ குழப்பம், ராமலிங்கம் என்னவென்று விசாரித்தார். யாரோ பைத்தியகாரக்கிழவன் உள்ளே புக முயன்றதாகவும் சிப்பந்திகள் தடுத்ததாகவும், பைத்தியம் முரண்டினதாகவும் சிப்பந்திகனில் ஒருவன் பைத்தியத்தைப் பிடித்து நெட்டித் தள்ளினதாகவும் கிழவன் கீழே விழுந்து மூர்ச்சையாகி விட்டதாகவும் தகவல் கிடைத்தது. ராமலிங்கத்தின் உள்ளத்தில் பளிச்சென்று ஓர் எண்ணம் மின்னலிட்டது. வேகமாக வாசற் புறம் சென்றார். கூட்டத்தை விலக்கிக் கொண்டு கிழவனிடம் சென்றார். ஏற இறங்கப் பார்த்தார். அருகில் இருந்த சிலர் “இந்த ஆசாமியைப் பார்த்தால் அந்தக் கட்டிடத்தில் அகப்பட்டுக் காலமான கிருஷ்ணன் மாதிரி இல்லை” என்றார்கள்.

ராமலிங்கம் கிழவனைக் கொண்டு வந்து ஓர் அறையில் கிடத்தி யாரையும் அங்கே அணுக விடாதபடிச் செய்து கிழவனை ஆசுவாசப்படுத்தத் தொடங்கினார். அபிராமி மட்டுமே அருகில் இருந்து உதவினாள்.

கிழவனுக்குப் பிரக்ஞை வந்தது. ஒரே பார்வையில் ராமலிங்கம் அபிராமி இருவரையும் யாரென்று நிதானித்துக்கொண்டு சக்தி யனைத்தையும் திரட்டிக் கொண்டு எழுந்து தடாலென்று அவர்கள் முன் விழுந்து பணிந்து மௌனக் கண்ணீர் வடித்தார். இடையே சுந்தரியிடம் சுருக்கமாக அனைத்தையும் கூறி அவளை மறைவாக நிறுத்தியிருந்தாள் அபிராமி. ராமலிங்கம் விஷயத்தைப் பலரறிய பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. எனவே நால்வர் அறிந்த ரகசியமாக அதை வைத்துக்கொண்டு ஆகவேண்டியதைக் கவனித்தார். கூட்டத்தில் குழப்பம் நீங்கி அமைதி நிலவிற்று,

ஜாம் ஜாம் என்று கல்யாணம் நடந்தது. கிருஷ்ணன் கண் குளிரக் கண்டார். மணமக்களுக்கு சாவதானமாக, போதிய அளவில் விஷயத்தைத் தெளிவு செய்தார் ராமலிங்கம். லீலாவதிக்கு எல்லையற்ற ஆனந்தம். எல்லாவற்றிலும் அதிக ஆனந்தம் பெற்றவள் அபிராமி தான். காரணம் வேறென்ன? கிருஷ்ணனின் மனம் தூய்மை பெற்றதுதான். அவள் கவலைப்பட்டபடி எதுவும் நிகழவில்லை. இரு குடும்பங்களும் அன்று முதல் ஒரே குடும்பமாக எல்லையற்ற ஆனந்த வாழ்விலே ஈடுபட்டதைக் கண்டு ஊரே வியந்தது.

– அஜந்தா’ இதழில் 1953-இல் வந்த படைப்பு (கே.ஸ்ரீ. என்பவரை ஆசிரியராய்க் கொண்ட ‘அஜந்தா’ 40/50 களில் வந்த ஒரு இதழ்.)

 நன்றி: https://s-pasupathy.blogspot.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *