தோல்வியின் வெற்றி
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 20, 2025
பார்வையிட்டோர்: 100

பெரியவர் பாபா பாரதி , நகரத்து வாழ்க்கை பிடிக்காமல் தம் வாழ்நாள் சேமிப்பைக் கொண்டு தமது கிராமத்தின் எல்லையில் ஒரு சிறிய கோயிலையும் வசிப்பிடத்தையும் கட்டிக் கொண்டு தம்முடைய எஞ்சிய வாழ்நாளை வாழ்ந்து வந்தார். அந்த வசிப்பிடத்தில் அவருடைய உற்ற துணையான குதிரைக்கு ஒரு லாயத்தையும் அமைத்தார். ஆம் . ஒற்றை ஆளான அவருக்கு பேச்சுத் துணை கோயிலில் எழுந்தருளி இருக்கும் தெய்வமும் அவருடைய குதிரையும் தான். அவருடைய குதிரை மிகவும் அழகான குதிரை. ஒரு முறை அதனைப் பார்த்தவர்கள் , மீண்டும் அதனைப் பாரத்து விட்டுத் தான் செல்வார்கள். அந்த குதிரையை பாபா , அன்புடன் பராமரித்து வந்தார். நேரத்திற்கு தீவனம் அளித்து தண்ணீர் கொடுத்து அதற்கு தினவு எடுக்கும் போதெல்லாம் தடவிக் கொடுத்து அன்பு காட்டி வந்தார்.
மாலை நேரங்களில் பாபா பாரதி , தம்முடைய குதிரையில் ஏறி அமர்ந்து மைய சாலையில் சில கிலோ மீட்டர் சவாரி செய்து விட்டு இருட்டுவதற்குள் திரும்பி விடுவார்.
யார் கண் பட்டதோ என்று சொல்வார்கள் அல்லவா ? அவருடைய குதிரையின் மீது ஒருவன் கண் பட்டு விட்டது.
ஒரு நாள் மதிய நேரம். பாபா பாரதி , துதிப்பாடல் புத்தகத்தில் ஆழ்ந்திருந்த போது லாயத்தில் இருந்த அவரது குதிரை யாரோ வந்திருப்பதைக் குறிக்க கனைத்தது.
பாபா நிமிர்ந்து பார்த்தார். அங்கே வாட்டசாட்டமான நடுத்தர வயது நபர் நின்று கொண்டிருந்தார்.
“யார் நீங்க என்ன வேணும்?” கேட்டார் பாபா.
“கேள்விப்பட்டிருப்பீங்களே பெரியவரே.. நான்தான் கடக்சிங் …”
“நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.. கொள்ளைக் காரர்களின் தலைவன் … நீங்க எடுத்துச் செல்ல என்னிடம் ஒண்ணும் இல்லையே.. கோயிலில் இருக்கும் கிருஷ்ணனிடமும் நகை எதுவும் இல்லை.”
“நான் அதற்கு வரவில்லை . உங்களிடம் அழகான , நேர்த்தியான குதிரை இருக்கிறது ன்னு சொன்னாங்க அதைப் பார்க்காலம்னு வந்தேன்.” என்றான் கடக்சிங்.
தம்முடைய குதிரையின் பெருமை பரவி இருப்பதை அறிந்து பாபா புன்னகை பூத்தார்.
“வாங்க காட்றேன்..”
பாபா அவனை தமது குதிரை இருக்கும் லாயத்திற்கு அழைத்துச் சென்றார். வழியில் பார்த்த குதிரையை மிகவும் அருகில் பார்த்த கடக்சிங் வியந்து போனான். பிடித்துப் போயிற்று என்றால் உடனே எடுத்துக் கொள்வதுதானே திருடர்களின் இயல்பு?
கடக்சிங் பேசினான் – “ஐயா நீங்க வளர்க்கறதுக்குத் தான் இங்க இத்தனை பூனைக்குட்டி நாய்க்குட்டி எல்லாம் சுத்தி வருதே… இந்த குதிரை என்னை மாதிரி ஆளுங்களுக்குத் தானே வேணும்…உபயோகம்”
பாபா குதிரையின் அருகில் சென்றார். அதனை அணைத்துக் கொண்டார்.
“இவன் மேல எனக்கு ரொம்ப அன்பு பிரியம் … நகரத்துல இருந்த போது என்கிட்ட வந்து சேர்ந்தான்.. என் கூடயே இருக்கான். இவனை நான் யாருக்கும் தர மாட்டேன்…”
உணர்ச்சி மேலிட்ட குரலில் பேசினார் பாபா. கடக்சிங் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டான்.
சில நாட்கள் கழித்து பாபா பாரதி தமது அன்பிற்குரிய குதிரை மீது ஏறி சவாரிசெய்து மைய சாலையில் சென்று கொண்டிருந்த மாலை வேளை .
ஐயா ஐயா என்று கூக்குரல் போல் கேட்டது. சாலையின் ஓரத்தில் ஒரு மாற்றுத் திறனாளி.
பாபா குதிரையிலிருந்து இறங்கினார். அந்த நபரின் அருகில் சென்றார்.
கால்கள் வளைந்து இருந்தன.
“என்னப்பா ஏன் இங்கு இருக்கே?”
அந்த நபர் பேசினார் –
“யாருமே என்னை ஏத்திக்க மாட்டேங்கறாங்க வண்டிக்காரங்களும் நிறுத்தி ஏத்திக்க மாட்டேங்கறாங்க நான் பக்கத்து கிராமத்து வைத்தியர் தம்பி… நீங்க கொஞ்சம் ஒங்க குதிரையில என்னை ஏத்திகிட்டு எங்க கிராமத்துல விடுங்களேன்”
அந்த நபருடைய வேண்டுகோளை ஏற்று பாபா அவனுக்கு கைகொடுத்து எழுந்திருக்க வைத்தார். கனமான சரீரம் கொண்ட அவனை கஷ்டப்பட்டு குதிரை மீது அமர வைத்தார். அவர் குதிரையில் ஏற முற்படுகையில் அவன் குதிரையின் லகானைப் பற்றிக் கொண்டு குதிரையை வேகமாக செலுத்தி பாபா இருந்த இடத்தை விட்டு சற்றே தொலைவில் சென்று விட்டான். மாற்றுத்திறனாளி போல் பாபாவிடம் நடித்தவன் கடக்சிங்.
பாபா உரத்த குரலில் “கொஞ்சம் நில்லப்பா” என்றார்.
அவன் மேலே போகாமல் நின்றான். பாபா அவனருகில் வந்தார்.
அவன் சொன்னான் –
“பெரியவரே குதிரை என் வசமாகி விட்டது. இதோ நான் சொல்வதை கேட்கிறது. நான் இதை உங்க கிட்ட தர மாட்டேன்… “
பாபா பேசினார் –
“அவனை நீயே வெச்சுக்கோ.. ஆனால் எப்படி என்கிட்டேந்து வாங்கினேன்னு உன் சகாக்கள் கிட்ட, தெரிஞ்சவங்க கிட்ட சொல்லவே சொல்லாதே…”
குதிரை மீது அமர்ந்து இருந்த கடக்சிங் நகைத்துக் கொண்டே கேட்டான்..
“அதை நான் மத்தவங்க கிட்ட சொல்வதால் உங்களுக்கு என்ன ஆகும்?”
பாபா பாரதி சாந்தமான குரலில் சொன்னார் –
“எனக்கு ஒண்ணும் இல்ல தான்… ஆனா இந்த சம்பவம் பத்தின செய்தி மக்களிடையே பரவினா, எளியவர்களுக்கு உடம்பு முடியாதவர்களுக்கு உதவி செய்ய யாருமே முன் வர மாட்டாங்க….”
சொல்லி விட்டு பாபா பாரதி, தம்முடைய இல்லம் நோக்கி நடந்து சென்றார்.
குதிரையுடன் தன்னுடைய இருப்பிடத்திற்குச் சென்றான் கடக்சிங்.
அன்றிரவு. படுத்த உடனே உறக்கத்தைத் தழுவும் அவன் கண்களில் உறக்கம் இல்லை. எளியவர்களுக்கு, உடல் முடியாதவர்களுக்கு உதவி செய்ய யாருமே முன் வர மாட்டாங்க என்று பெரியவர் கூறியது அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. அவன் படுக்கையை விட்டு எழுந்தான்.
நடுநிசி வேளை. அவன், ஏமாற்றிப் பெற்று வந்த குதிரையில் ஏறி பாபா பாரதியின் இருப்பிடம் நோக்கிச் சென்றான். குதிரையின் குளம்படி சத்தம் கேட்டும் ஊர் உறங்கிக் கொண்டிருந்தது. பாபாவும் உறங்கிக் கொண்டிருந்தார். எங்கோ தெரு நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தன. கடக்சிங் பாபாவின் குதிரை லாயத்தை நோக்கிச் சென்றான். லாயம் திறந்து இருந்தது. அங்குதான் குதிரை இல்லையே … குதிரையை அங்கே கட்டி வைத்து விட்டு லாயத்தை மூடிவிட்டு வந்த சுவடு தெரியாமல் அங்கிருந்து விரைவாக நகர்ந்தான்.
மறு நாள் பொழுது விடிந்தது. கண் விழித்த பெரியவர் பாபா பாரதி , அவன்தான் இல்லையே … அவன் இருந்த இடத்தையாவது பார்ப்போம் என்று தனக்குத் தானே பேசிக்கொண்டே லாயத்தை நோக்கி வந்தார் அவர். எஜமானரைக் கண்டதும் உற்சாகத்துடன் பெரிதாக கனைத்தது குதிரை..
ஓடோடி வந்து குதிரையைத் தழுவிக் கொண்ட பாபா பாரதி “வந்துட்டியாடா.. முடியாதவங்களுக்கு உதவுவதற்கு ஜனங்க முன் வருவாங்க” என்று சொல்லிக் கொண்டார்.
– இந்தி எழுத்தாளர் சுதர்சன் அவர்களின் ‘ஹார் கி ஜீத் ‘ கதையின் மொழிபெயர்ப்பு.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
