தேவதையும் சிட்டுக்குருவிகளும்
கதையாசிரியர்: நாரா.நாச்சியப்பன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 16, 2025
பார்வையிட்டோர்: 182
(1988ல் வெளியான சிறுவர் இலக்கியம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருவல்லிக்கேணி பாரதி சாலையில் ஓர் அரச மரம் இருக்கிறது. அந்த அரச மரத்தின் அடியில் ஒரு பிள்ளையார் இருக்கிறது. அந்த அரச மரத்தின் கிளை ஒன்றில் இரண்டு சிட்டுக்குருவிகள் வாழ்ந்து வந்தன.
அந்த இரண்டு சிட்டுக் குருவிகளும் என்றும் இணைபிரியாமல் இருந்தன.
ஒன்று ஆண். இன்னொன்று பெண். இரண்டும் எங்கு சென்றாலும் ஒன்றாகத்தான் செல்லும். எது கிடைத்தாலும் ஒன்றாகத்தான் தின்னும். என்ன செய்தாலும் ஒன்றாகத்தான் செய்யும்.
பாரதி சாலையில் நடந்து செல்லும்போது வானத்தை நிமிர்ந்து பார்த்தால் மேலே அந்தச் சிட்டுக் குருவிகள் இரண்டும் ஒன்றாகப் பறந்து செல்வதைப் பார்க்கலாம்.
சாலையின் ஓரத்தில் நின்று பார்க்க வேண்டும். நடுவில் நின்று பார்த்தால் பார்க் கிறவர்கள் மேல் பேருந்து ஏறிவிடும்.
நாள்தோறும் அவை கடற்கரைக்குச் சென்று வரும். கடற்கரையில் அவற்றிற்கு நிறையத் தீனி கிடைப்பதால், மாலையில் அங்கு போய் விடும். கடற்கரையில் கூடும் மக்கள் கொறிக்கும் போது தவறிவிழும் தின் பண்டங்கள் நம்சிட்டுக்குருவிகளுக்குத் தீனிப் பொருள்கள்.
ஒரு நாள் அந்தச் சிட்டுக் குருவிகள் இரண்டும் கடற்கரையில் தீனி பொறுக்கித் தின்று விட்டுத் தங்கள் கூட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன. அப்போது அவற்றின் எதிரில் ஓர் அழகான பெண் வந்து கொண் டிருந்தாள். அவள் நீலச் சேலை அணிந்திருந் தாள். அவளுடைய கூந்தல் காற்றில் விரிந்து ஆடிக் கொண்டிருந்தது. அவள் கண்களில் அருள் ஒளி தோன்றியது.
சிரித்த முகத்தோடு அன்பு வடிவமாக வந்து கொண்டிருந்த அந்தப்பெண்மணியைக் கண்ட சிட்டுக் குருவிகள் அவள் எதிரில் பறந்து வந்தன. அவள் தன் இரு கைகளையும் நீட்டினாள். சிட்டுக் குருவிகள் இரண்டும் அவளுடைய இரண்டு உள்ளங்கைகளிலும் போய் உட்கார்ந்தன.
இரண்டு சிட்டுக் குருவிகளுக்கும் அந்தப் பெண்மனி அன்பு முத்தம் கொடுத்தாள்.
“குழந்தைகளே உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டாள் அந்தப் பெண் மணி.
“அம்மா தாங்கள் யார்?” என்று ஆண் குருவி கேட்டது.
“குழந்தைகளே, நான்தான் கடல்தேவதை. உங்களுக்கு என்ன வேண்டும், கேளுங்கள் நான் தருகிறேன்” என்றாள் அந்தப் பெண் மணி.
சிட்டுக் குருவிகள் அவளை நிமிர்ந்து பார்த்தன.
“தாயே! எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை நாங்கள் மனநிறைவோடு இருக்கிறோம். தங்களிடம் என்ன கேட்பதென்றே தெரியவில்லை” என்று கூறின.
“நல்ல குழந்தைகள்! இருந்தாலும் நான் உங்களுக்கு ஒரு நல்ல மொழி சொல்லுகிறேன். அதைக் கேட்டு நடங்கள். உங்கள் வாழ்வு என்றும் பயனுள்ளதாக இருக்கும். அதனால் மிக்க மகிழ்ச்சியைக் காண்பீர்கள்” என்று கூறினாள் கடல் தேவதை.
“சொல்லுங்கள் அம்மா!”‘ என்று இரண்டு சிட்டுக் குருவிகளும் பணிவோடு கேட்டன.
“குழந்தைகளே, எல்லாரிடமும் அன்பு செலுத்துங்கள். நல்லவர்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறினாள் கடல் தேவதை.
“அப்படியே செய்கிறோம் அம்மா! உங்களை மறுபடி எங்கே பார்க்கலாம்?” என்று சிட்டுக் குருவிகள் கேட்டன.
“குழந்தைகளே, நீங்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால், கடற்கரைக்குப் பறந்து வாருங்கள். கரையோரத்தில் நின்று கொண்டு ‘அம்மா!’ என்று அழைத்தால் நான் ஓடோடி வருவேன்” என்று கூறினாள் கடல் தேவதை. குருவிகள் தேவதையிடம், போய் வருகிறோம் என்று சொல்லிக் கொண்டு தங்கள் கூட்டுக்குத் திரும்பின.
அந்தச் சிட்டுக்குருவிகள் இரண்டும் தூக்கம் வரும்வரை தேவதையைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தன. அவளுடைய அழகைப் பற்றியும், இனிய மொழிகளைப் பற்றியும், அன்பான பார்வையைப்பற்றியும், அவள் சொன்ன நல்ல கருத்தைப் பற்றியும் பேசிக் கொண்டே தூங்கின.
தூக்கத்தில் கூட அந்த அழகான தேவதை நேரில் வந்து அவற்றோடு அன்பாகப் பேசிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டன. அந்த நல்ல தேவதையின் நட்புக் கிடைத்தது பற்றி அவை மகிழ்ச்சியடைந்தன.
ஒரு நாள் இரண்டு சிட்டுக் குருவிகளும் கடற்கரையில் தீனி பொறுக்கித் தின்று கொண்டிருந்தன. தீடீரென்று மழை பெய்யத் தொடங்கியது. உடனே, கடற்கரையில் காற்று வாங்க வந்திருந்த அனைவரும் எழுந்து ஓடினர்.
சாலைக்கு வந்து பேருந்துகளில் ஏறக் காத்திருந்தனர். சிறிது நேரத்தில் ஒரு பேருந்து வந்து நின்றது. மக்கள் முட்டி மோதிக்கொண்டு பேருந்தில் ஏற முயன்றனர்.
பேருந்தில் ஏறிக் கொண்டிருந்த ஒரு சிறுமியின் கழுத்தில் இருந்த சங்கிலியை கூட்டத்தில் கலந்திருந்த ஒரு திருடன் அறுத்துக் கொண்டு ஓடினான்.
‘ஐயோ, சங்கிலி சங்கிலி!’ என்று அந்தச் சிறுமி கதறினாள். உடனே பேருந்து நின்றது. பேருந்தில் படிக்கட்டில் நின்ற பலர் திருடனை விரட்டிக் கொண்டு ஓடினர். திருடன் மிக வேகமாக ஓடினான். யாராலும் பிடிக்க முடியாது போல் இருந்தது.
மழைத் தூறல் நின்றுவிட்டது. திருடனைத் துரத்தியவர்களில் சிலர் அங்கங்கே கால் ஓய்ந்து நின்று விட்டனர். ஐந்து பேர் மட்டும் எப்படியாவது பிடிப்பதென்ற உறுதியில் ஓடிக் கொண்டிருந்தனர்.
மழை நின்றதும் சிட்டுக் குருவிகள் பறந்தன. ஓடிக் கொண்டிருக்கும் திருடன் மீது பாய்ந்தன. அவன் முகத்தின் மீது பாய்ந்து பாய்ந்து கொத்தின. அவன் ஓட முடியாமல் தடுமாறினான். அப்போது பின்னால் விரட்டிக் கொண்டு வந்தவர்கள் நெருங்கி வந்து அவனைப் பிடித்து விட்டனர்.
திருடன் பிடிபட்டதைக் கண்டு மற்றவர் களும் ஓடி வந்தனர். கூட்டம் கூடிவிட்டது.
எல்லோரும் திருடனை உதைத்து அவன் அறுத்து வந்த தங்கச் சங்கிலியை அந்தச் சிறுமிக்குத் திருப்பிக் கொடுத்தனர்.
சிட்டுக் குருவிகள் மகிழ்ச்சியுடன் தங்கள் கூட்டுக்குத் திரும்பின.
‘இன்று நாம் அந்தச் சிறுமிக்கு உதவி செய்தோம். இது தெரிந்தால் கடல் தேவதை மிகுந்த மகிழ்ச்சியடைவாள்’ என்று அவை பேசிக் கொண்டன.
மறுநாள் வழக்கம் போல் அவை கடற் கரைக்குச் சென்றன. தீனி பொறுக்கித் தின்று கொண்டிருந்தன.
அப்போது அவற்றின் மீது ஒரு வலை வந்துவிழுந்தது. எதிர்பாராத இந்த ஆபத்தைக் கண்டு அவை திடுக்குற்றன. வலையை இழுத்துச் சுருக்கிக் கொண்டிருந்த மனிதனைத் திரும்பிப் பார்த்தன.
முதல் நாள் சங்கிலி திருடி அகப்பட்டு அடி வாங்கிய திருடன் தான் அவன்.
‘என்னைக் காட்டிக் கொடுத்தீர்களா? இன்று பாருங்கள். உங்களை என் பூனைக்கு விருந்து வைக்கிறேன்!’ என்று பல்லைக் கடித்துக் கொண்டே பேசினான் அந்த மனிதன்.
சிட்டுக் குருவிகளுக்கு என்ன செய்வ தென்றே புரியவில்லை. அந்தக் கொடிய திருடனிடமிருந்து எப்படித் தப்பிப் பிழைப்பதென்றும் புரியவில்லை.
ஒன்ன்ற யொன்று பார்த்து விழித்தன.
கடற்கரை ஓரத்தில் ஒரு குடிசையை நோக்கி அந்த மனிதன் விரைந்தான். அந்தக் குடிசையின் முன்னே ஒரு முரட்டுப் பூனை உட்கார்ந்திருந்தது.
திருடன் கையில் இருந்த வலைக்குள் சிட்டுக் குருவிகளைப் பார்த்தவுடன் அந்தப் பூனை உடனே கடித்துத் தின்னப் பாய்ந்து வந்தது.
‘பூனைக் கண்ணா! கொஞ்சம் பொறுமையாயிரு. வலையை விட்டு எடுத்து விடுகிறேன். பிறகு நீ லபக் கென்று பிடித்துக் கொள்ளலாம்’ என்று கூறிச் சிட்டுக் குருவி ஒன்றை வெளியில் எடுத்தான், திருடன்.
பூனை அதைக் கௌவிப் பிடிக்கப் பாய்ந்தது.
வலைக்குள் இருந்த மற்றொரு சிட்டுக் குருவி ‘அம்மா:..!’ என்று கதறியது.
அவ்வளவு தான்! பூனையின் தலையில் ஓர் அடி விழுந்தது. அந்தத் திருடன் தலையில் ஓர் அடி விழுந்தது. அந்தத் திருடனும் பூனையும் மயங்கி விழுந்தார்கள்.
வலைக்குள் இருந்த சிட்டுக் குருவியை ஒரு பெண்ணின் அழகான கை வெளியில் எடுத்து விட்டது.
‘அன்புக் குழந்தைகளே! நீங்கள் பறந்து செல்லுங்கள்!’ என்று அந்தச் சிட்டுக் குருவிகளை இரண்டு கைகள் தூக்கி வானை நோக்கி வீசின.
சிட்டுக் குருவிகள் பறந்து கொண்டே கீழே நோக்கின. கடல் தேவதை கனிவான முகத்தோடு அவற்றைப் பார்த்துக் கை வீசிக் கொண்டிருந்தாள்.
‘அம்மா காப்பாற்றினாள்; கடலம்மா காப்பாற்றினாள்’ என்று பாடிக் கொண்டே அவை தங்கள் அரசமரத்துக் கூட்டுக்குப் பறந்து சென்றன.
மற்ற குருவிகளிடம் தாங்கள் பட்டபாட்டை எடுத்துக் கூறின.
அந்த முரட்டுத் திருடனின் அரக்கத் தனத்தைப் பற்றியும், கடலம்மாவின் அன்பு உதவியைப் பற்றியும் அவை விரிவாக எடுத்துக் கூறின.
அந்த மரத்தில் இருந்த மற்ற குருவிகளுக் கெல்லாம் கடலம்மாவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.
‘எங்களுக்கெல்லாம் கடலம்மாவைக் காட்டுவீர்களா?’ என்று அவை ஆவலோடு கேட்டன.
‘உறுதியாக! கடலம்மா மிக அன்புள்ளவள் நம் எல்லாரையும் ஒன்றாகப் பார்த்தால் மிக மகிழ்ச்சியடைவாள்’ என்று அந்தச் சின்னச் சிட்டுக் குருவிகள் கூறின.
மறுநாளே அரச மரத்தில் இருந்த எல்லாக் குருவிகளும் கடற்கரைக்குப் புறப்பட்டுச் சென்றன.
வான வீதியில் அவை கூட்டமாய்ப்பறந்து செல்வதைக் கண்ட- மற்ற மரங்களிலும், வீடு களிலும், குடியிருந்த சிட்டுக் குருவிகள் அனைத்தும் இவற்றைத் தொடர்ந்து பறந்தன.
குருவிகள் கூட்டமாகப் பறந்து செல்வ தைக் கண்ட, காகங்களும், புறாக்களும், மைனாக்களும், மரங்கொத்திகளும் கூட்டம் கூட்டமாக அவற்றைப் பின்பற்றிப் பறந்து சென்றன.
பாரதிசாலை முழுவதும் வானவெளியில் ஒரே பறவைக் கூட்டங்களாகக் காட்சியளித்தது.
அதைப் பார்த்து ஒரு சிறுவன்,
காக்கை குருவி எங்கள் சாதி-நல்ல
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெல்லாம்
நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்
காக்கை குருவி எங்கள் சாதி
என்று பாடினான்.
கடற்கரை முழுவதும் பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து கொண்டும், கத்திக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தன.
ஒரே திருவிழா மாதிரி இருந்தது.
எங்கே கடலம்மா?
எங்கே கடலம்மா?
என்று எல்லாம் சேர்ந்து கேட்கத் தொடங்கின.
சாலை யோரத்தில் நின்ற சில சிறுவர்கள் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் கூடி வந்த பறவைகளைக் கலைக்கும்படியான ஒரு செயல் செய்தார்கள்.
சாலை ஓரத்தில் கிடந்த கற்களை எடுத்துக் கூடி நின்ற பறவைகளின் மீது குறிபார்த்து அடித்தார்கள். இதனால் பல பறவைகள் காயப்பட்டன.
சிறுவர்கள் மேலும் மேலும் கற்களைப் பொறுக்கி யடித்தார்கள். மகிழ்ச்சியாகக் கூடியிருந்த பறவைக் கூட்டத்தின் இடையில் வேதனையும் துன்பமும் பரவியது. சில காகங்கள் அந்தச் சிறுவர்களைக் கொத்துவதற்காகச் சாலை நோக்கிப் பறந்தன.
இதற்கிடையே சின்னச்சிட்டுக்கள் இரண்டும் ‘அம்மா! கடலம்மா!’ என்று கத்தின.
இந்தக் குரல் கேட்டவுடனே, கடலம்மா அவற்றின் கண்முன்னே தோன்றினாள். வானத்தில் அழகாக இறக்கை விரித்துப் பறந்தாள். ஒவ்வொரு பறவைக் கூட்டத்தையும் பார்த்து வாழ்த்து மொழிகளைக் கூறினாள். மேலே அங்கும் இங்கும் பறந்து கொண்டே இரண்டு கைகளாலும் நவதானிய மணிகளை எங்கும் கொட்டினாள்.
பறவைக் கூட்டங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாது.
எல்லாப் பறவைகளும் கடலம்மாவை வணங்கின. அவள் போட்ட தானிய மணி களைத் தேடிப் பொறுக்கித் தின்றன. மகிழ்ச்சி யுடன் அவ்வப்போது அவளை நிமிர்ந்து பார்த்தன. கடலம்மா எல்லாப் பறவைகளை யும் வாழ்த்தினாள். சிறுவர்களை நோக்கிப் பறந்தாள்.
‘சிறுவர்களே, காக்கை குருவியெல்லாம் உங்கள் அன்புக்குரிய பறவைகள். அவைகளை நீங்கள் ஆதரித்து வளர்க்க வேண்டும். கல்லால் அடிப்பதோ, தொல்லை கொடுப்பதோ கூடாது. அவற்றோடு சேர்ந்து விளையாடலாம். துன்புறுத்தக் கூடாது. உலகில் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்க இதுவே வழி!’ என்று கடலம்மா கூறினாள்.
உடனே சிறுவர்கள் ‘தெரியாமல் செய்து விட்டோம் தாயே. மன்னிக்க வேண்டும். இனிமேல் எல்லாரிடமும்அன்பாக இருப் போம்’ என்று கூறினார்கள்.
கடலம்மா ஒவ்வொரு சிறுவனுக்கும் முத்தம் கொடுத்தாள்.
பறவைக் கூட்டங்களுக்கெல்லாம், என்றும் பசியில்லாத அளவு நிறைய தானிய மணிகள் கிடைக்குமாறு அருள் மொழி கூறினாள்.
அரசமரத்துச் சிட்டுக்களைத் தன் கையில் தூக்கி வைத்துக் கொண்டு அன்பு முத்தம் கொடுத்தாள்.
மீண்டும் ஒரு முறை எல்லாப் பறவைகளுக்கும் வாழ்த்துக் கூறி விட்டுக் கடலம்மா மறைந்து விட்டாள்.
பறவைக் குலங்கள் எல்லாம் கடலம்மாவின் அருளை வியந்து மகிழ்ந்தன.
அரசமரத்துச் சிட்டுக்குருவிகள், கடலம்மாவின் செல்லச் சிட்டுக்களாக இருந்ததால், எல்லாப் பறவைகளும் அவற்றிடம் மிகுந்த அன்பு பாராட்டின.
– பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1988, தமிழாலயம் வெளியீடு, சென்னை.
![]() |
நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க... |
