தேனீப் பட்டாளம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 14, 2025
பார்வையிட்டோர்: 135 
 
 

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முன்காலத்தில் பெரிய நகரங்களைச் சுற்றிலும் கருங்கல்லினால் மதில் சுவர்கள் கட்டப்பட்டிருந்தன. பகைவர்கள் வராமல் இருப்பதற்காகவே இப்படிக் கோட்டைகள் கட்டப்பட்டன. 

அக் காலத்தில் விசயநகரத்தைச் சுற்றிலும் மிகப் பெரிய கோட்டைச் சுவர் இருந்தது. நகரின் உள்ளே வருவதற்கு ஒரே ஒரு வாசல் இருந்தது. அந்த வாசலுக்கு இரும்பினால் ஆகிய பெரிய கதவு கள் இருந்தன. அங்கே ஒரு காவல்காரன் இருந் தான். அவனுக்குக் கதவை மூடுவதும் திறப்பதுவுந் தான் வேலை. அதனால் அவன் அங்கேயே குடியிருந் தான். அவன் காவலுக்குக் கெட்டிக்காரன். அய லார் ஒருவரையும் அவன் உள்ளே விடமாட்டான். 

கதவுகளை அடிக்கடி திறக்கும் வேலை கிடை யாது. சில நாட்களில் கதவுகளைத் திறப்பதே இல்லை. இதனால் அவனுக்கு நல்ல ஓய்வு உண்டு. அவன் தேனீ வளர்ப்பதில் விருப்பமுடையவன். 

“தேன் கூடுகளை மதில் சுவரின்மேல் வைத்தால் என்ன? அங்கே வைத்துவிட்டால் அவற்றை யாரும் தொடமாட்டார்கள்,” என்று எண்ணினான். அதன் படியே தேன் கூடுகளைச் சுவரின்மேல் வரிசை வரிசையாக அடுக்கி வைத்தான். 

விசய நகரத்தைப் பிடிக்கவேண்டு மென்னும் எண்ணம் முகலாய மன்னனுக்கு நெடுநாட்களாய் இருந்துவந்தது. எப்பொழுது நேரம் வாய்க்கும் என்று அவன் எதிர்பார்த்திருந்தான். அவன் தன் அமைச்சர்களுடன் கலந்து போருக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தான். “நாம் பொழுது விடிவ தற்குள் விசய நகரத்தை முற்றுகையிட்டால், அவ் ஊரிலுள்ளவர்கள் விழித்துக்கொள்வதற்குள் நகரத் தைப் பிடித்துக்கொள்ளலாம்”, என்று முதல் அமைச்சன் சொன்னான். 

ஒருநாள் நல்ல இரவில் முகலாய மன்னன் ஒரு பெரிய படையைத் திரட்டிக்கொண்டு விசய நகரத்தை நோக்கிப் புறப்பட்டான். விசயநகரம் நன்றாய் உறங்கிக்கொண்டு இருந்தது. பால்காரர் களே விடியற்காலையில் எழுந்து வேலை செய்கிற வர்கள். 

பால் விற்கும் பையன்களில் சொக்கனும், முனி யனும் இணைபிரியாத நண்பர்கள். அவர்கள் இரு வரும் அன்று விடியற்காலையில் பால் விற்கப் போகும் போது கோட்டை வாசல்பக்கம் வந்து சேர்ந்தார்கள். 

“காவல்காரன் நன்றாய்க் குறட்டை போடு கிறான். கொஞ்சம் தேன் சாப்பிடலாமா?” என்று சொக்கன் கேட்டான். முனியன் அதற்கு இசைந் தான். இருவரும் மெள்ள மெள்ளச் சுவரின்மேல் ஏறினார்கள். சொக்கன் மேலே ஏறியதும் “அது என்ன ஓசை?” என்று கேட்டான். “ஒருவேளை காவல்காரன் விழித்துக் கொண்டிருப்பானோ?” என்று முனியன் சொக்கன் காதிற்குள் மெல்லச் சொன்னான். 

“இல்லை இல்லை. அந்த ஓசை, சுவருக்கு வெளிப் புறத்திலிருந்து வருகிறது, என்று சொக்கன் சொன்னான். இரண்டு பையன்களும் சுவரின் ஓரத்தில் போய் எட்டிப் பார்த்தார்கள். முகலாய சேனை நிற்பதைக் கண்டார்கள். சுவரின்மேல் ஒரு பெரிய ஏணி சாய்த்து வைத்திருந்தது. இன்னும் சற்று நேரத்தில் அவர்கள் சுவரின்மேல் ஏறி உள்ளே வந்து விடுவார்கள்போல் தோன்றியது. 

சிறுவர்களுக்கு என்ன செய்வதென்று தோன்ற வில்லை. தங்கள் ஊரிலுள்ளவர்களை எழுப்பவோ எச்சரிக்கை செய்யவோ நேரமில்லை. இரண்டு சிறு பையன்கள் பெரிய சேனையை எதிர்த்து என்ன செய்யமுடியும்? 

சொக்கனுக்குத் தேன்கூடுகளின் நினைவு வந்தது. ஊரிலுள்ளவர்கள் விழிக்காவிட்டாலும் தேனீக்கள் மட்டும் விழித்துக்கொண்டுதான் இருந்தன. இருவரும் சேர்ந்து தேன்கூடுகளைச் சுவரின் ஓரத்திற்குக் கொண்டுபோனார்கள். மறு நொடியே தேன்கூடுகள் கீழே நின்றவர்களின் தலைமேல் விழுந்தன. 

தேனீக்கள் ‘விர்’ என்னும் ஒலியுடன் சண்டை யிடத் தொடங்கின. அடே அப்பா! என்ன கூக் குரல்! என்ன ஓட்டம்! தேனீக்கள் கொட்டுவது தேள் கொட்டுவதைப் போல் இருந்தது. 

இரண்டு பையன்களும் கீழே இறங்கி மணி அடித்தார்கள். ஊராரெல்லாரும் எழுந்து ஓடி வந் தனர். விசய நகர மன்னன் தன் படையைத் திரட்டிக் கொண்டு கோட்டை வாசலை நோக்கி ஓடி வந்தான். இதற்குள் தேனீக்கள் தங்கள் வேலையைச் செய்து முடித்துவிட்டன. தேனீப் படைகள் முன்னால் முகலாயப் படை எதிர்த்து நிற்க முடியவில்லை. முகலாய சேனை வந்தவழியே ஓட்டம் பிடித்தது. 

விசயநகர மன்னன் சொக்கனுக்கும் முனிய னுக்கும் நல்ல பரிசுகள் கொடுத்தான். பின்பு அவர்களைத் தன் அரண்மனையிலேயே வேலைக்கு அமர்த்திக்கொண்டான். 

‘நாட்டினைக் காத்த சிறுவர்களின் 
நற்றமிழ்க் கதையைக் கற்றனமே.’ 

அருஞ் சொற்கள் 
அரண்மனை 
இணை பிரியாத 
எச்சரிக்கை 
எதிர்த்துநிற்க 
ஓட்டம் பிடித்தல் 
மதில் சுவர் 
ஓய்வு 
குறட்டை 
நெடுநாட்கள் 
முகலாய மன்னன்
முற்றுகை யிடுதல் 
விடியற்காலை 

– கழகக் கதைச் செல்வம், முதற் பதிப்பு: டிசம்பர் 1941, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *