கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
இணைய வெளியீடு: November 7, 2026
முதற்பதிப்பு: 1924
பார்வைகள்: 70 
வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்

(1924ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அதிகாரம் 13-15 | அதிகாரம் 16-18 | அதிகாரம் 19-21

பதினாறாம் அதிகாரம்

நாகபட்டினம் தாலூகா மேஜிஸ்திரேட்டார் இரண்டு மாஸம் லீவிலே போயிருந்தார். அவருக்குப் பதிலாகத் தெய்வசிகாமணி வேலை பார்த்து வந்தான். செட்டியாருடைய வில்லிமங்கலம் கிராமம் விளைவுக்கு வந்து கதிரறுப்புக் காலமாக இருந்தது. முந்தின வருஷத்தைப் போல தெய்வசிகாமணி கிராமத்திற்குப் போவற்குச் சந்தர்ப்ப மில்லாம லிருக்கிறான். செட்டியாரே போகும்படி யாயிற்று. மங்களம் தன்னையறியும் வயதுடைய வளாயிருந்த படியால் அவளைத் தனியே வைத்துவிட்டுப் போவது தகுதியல்ல வென்று நீலலோசனியுடன் அழைத்துப் போகிற தென்றும், தெய்வசிகாமணியின் சௌகரியத்திற்கு அமுர்தலிங்கத்தை நிறுத்திவிட்டுப் போகிறதென்று தீர்மானித்து அன்றிரவு 4 மணிக்குப் புறப்பட்டுச் சாமான்கள் சித்தப்படுத்திக் கொண்டிருந்தார். செட்டியார் கச்சேரியிலிருந்து வந்த தெய்வசிகாமணி அவர் பிராயாணத்திற்கு வேண்டும் ஒத்தாசை செய்து கொடுத்து விட்டுப் போசன முடிந்து படுக்கைக்குப் போய் விட்டான். எல்லாருந் தூங்கி மூன்றுமணிக்கு எழுந்து கொண்டு வண்டிகளை ஆயத்தப்படுத்தவும் சாமான்களை வண்டியிலேற்றவுமா யிருக்கிறார்கள். மங்களம் எழுந்து தந்த சுத்திசெய்து விபூதி பூசிக் குங்குமத் திலகமிட்டுக் கொண்டு, நீலதாச்சி, காரோண நாதா, இன்னும் இரண்டு மாஸத்திற்கு உன் தெரிசனம் கிட்டாது போலிருக்கிறதே யென்று கவலைப்பட்டுத் தெய்வசிகாமணியிடம் சொல்லிக் கொண்டு வர நினைந்து அவன் படுக்கக்கை யறையை நோக்கி ஓரடி யெடுத்து வைத்தாள். நீலதாச்சியம்மன் கோவில் காலசந்தி மேளம் தாம் தாம் என்று முழங்கத் தொடங்கியது. 

தெய்வசிகாமணியின் படுக்கையறைக்குட் புகுந்தாள். அவ்வீட்டின் மத்தியில் கடப்பைக் கற்களாற் சுவரெழுப்பப்பட்டு; நான்கு பக்கத்திலும் பெரிய பெரிய இரும்புச் சன்னல்கள் அமைத்து ஜன்னல்கள் தோறும் வெட்டி வேர்த்தட்டி தொங்க விட்டுச் சுவரெங்கும் முத்து வெள்ளைச் சன்னக்கொடுத்துத் தீற்றி – யானையடிச் செங்கலாற்றள வரிசை செப்பனிட்டு வெள்ளைச் சலவைக் கற்களால் மேற் கட்டிடம் அமைத்துள்ளது. அதில் இரண்டு சிங்கங்கள் ஒன்றோ டொன்று யுத்தம் பண்ண எழுந்து நிற்கிற பாவனையாக; யானைத் தந்தத்தாற் செய்திருக்கிற இருபக்கம் கிராதிகளும் வயிரக்கோங்கு மரத்தைப் பன்னீர்ச் செம்பு வடிவாகக் கடையப்பட்டுச் சாதிலிங்க மழுத்தி இருகடையிலும் வெள்ளிப்பூண் கட்டியகால்களும் வெட் பாலைமரச் சக்கைகளாற் கோக்கப்பட்டுச் சுற்றிலும் பச்சை வெல் வெட்டுப் பட்டினாற் ஜாலரணைத்துச் சூரத்துப் பஞ்சவர்னப் பட்டினால் விதானிக்கப்பட்ட மேற்கட்டியும் அமைந்த தோதகத்தி மரத்தாற் செய்த ஒரு மதகரிக்கட்டில் போடப்பட்டு அம்மஞ்சத்தில் நாய் நாக்குப்போல் மிருதுவாயிருக்கும் வெண்பட்டு மெத்தை விரித்து நான்கு பக்கத்திலும் இலவம் பஞ்சூட்டிய மகமல் தலையணைகள் அணைக்கப்பெற்ற படுக்கையில் பொன்னிறத்தோடுங் கூடிய கோபாலகிருஷ்ணன் பள்ளி கொண்டிருப்பது போல இடக்கையைத் தலையோரம் சேர்த்துச் சயனித்திருக்கும் தெய்வசிகாமணியைக் கண்டாள் மங்களம். பகைவரையும் பார்த்தவுடன், மயங்கச் செய்யும் திருமுக மண்டலமும் காக்கை மூக்குப் போன்ற இரு புருவங்களும், சிறிது சிறிது கரிய ரோமங்கள் அரும்பப்பட்டு விசாலித்திருக்கும் மார்பும், யானைத் துதிக்கையை நிகர்த்த இருகரங்களும், விரிந்த செந்தாமரைப் பூவை யொத்த உபய பாதங்களும், மங்களத்தின் மனத்தையும் கண்ணையும் கவர்ந்தன. தனக்குள் இதென்ன என் மனது ஒன்றிலுஞ் செல்லாமற் பிரமை கொண்டது போலிருக்கிறதே! இத்தனை நாளும் ஒன்றாயிருந்து பழகின இவர் விஷயத்தில் இன்றைக்கு ஏதோ ஒருவிதமான அபிப்பிராயம் உண்டாவானேன். இதைத் தானுலகத்தார் ஆசையென்று சொல்லுகிறதோ. இந்த ஆசை இதுவரையும் எங்கு மறைந்து கிடந்தது. இன்றி ராத்திரி கூட அண்ணாவென்று கூப்பிட்டு விட்டு இரண்டு மணி நேரத்திற்குள் என் சித்தம் இப்படி மாறுவானேன். ஊழா? ஊழென்றால் இதுவரை எங்கு போயிருந்தது. இல்லை, இல்லை பக்குவகாலத்திற்றான் ஊழ்கூட்டுவிக்கு மென்று இவரே ஒரு நாள் எனக்குச் சொல்லியிருக்கிறார். அப்படியிருந்தாலு மிருக்கும். ஊழென்பது வடக்குச் சமுத்திரத்திற் போட்ட ஒரு நுகத்துணையில் தெற்குச் சமுத்திரத்திலெறிந்த ஒரு சிறுக்கழி நுழையும்படி செய்வதல்லவா? சாமானிய வல்லமை யுடையதா? இந்த ஊழை நம்பி நாம் மனோராஜ்பம் பண்ணிக் கொண்டிருந்தும் அவர் நம்மை அலக்ஷியம் பண்ணிவிட்டால் யாது செய்யலாம். ஆனால் ஊழ் அவரையும் அகல வொட்டாது நம்மையும் நகரவிடாது. இவரை யெழுப்பி நான் ஊருக்குப் போய்விட்டு வருகிறேனென்று சொல்லிக் கொள்ள வேண்டுமே. கூப்பிடவும் கூச்ச முண்டாகிறதே. வழக்கம் போலே அண்ணா வென்று, கூப்பிடுவோமா, சீ அது எங்கிருந்து வந்தது ஒரு வயிற்றிற் பிறந்த அண்ணனா, தொட்டெழுப்புவோம். என்று தனது மெல்லிய கையைத் தெய்வசிகாமணியின் மார்பு மீது வைத்தாள். நித்திரையிலிருந்தவன் தன் மார்பிற்பட்ட காபரிசக் குளிர்ச்சியினாற் படுத்த வண்ணமாகவே கண் விழித்துப் பார்த்தான். தன் கட்டிலோரம் ஓரழகிய பெண் தன்னெஞ்சிற் கையை வைத்துக்கொண்டு அதுவும் இரவு நேரத்தில் அதிலும் பட்டகலை போன்ற தீப வெளிச்சத்தில் நிற்பாளாயின் ஓர் வாலிபன் மனம் எவ்வண்ணம் கட்டுப்பட்டு நிற்கும். பார்த்தான் ஒரு பார்வை: மயங்கினாள் மங்களம், ”அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” அப்பார்வையின் கருத்தை யெழுதிக்காட்ட முடியாது. நிமிஷ நேரத்திற்குள்ளே தெய்வசிகாமணி மனஸைத் தன்வயப்படுத்திக் கொண்டு அடமூட மனமே உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கிற பாதக மனமே என்ன நினைத்தாய் உன்னைத் தெருவில் விட்டுச் செருப்பாலடித்தாலுஞ் செல்லுமே. ஆருமற்ற அநாதையாய் அயோக்கியப் பயல்கள் வசம் சிக்கி அடியோடு போக இருந்த உன்னைக் காப்பாற்றிக் கஞ்சி வார்த்த கருணைப் பிரபுவுக்குக் காதகஞ்செய்ய நினைத்து விட்டாயே! அட மிருகமே! உன் தரமென்ன, உன்னிலைமை யென்ன, நீ நினைக்கக் கூடிய காரியமா. அடடா நல்ல யோக்யதை! அவர்களே வலியச் சொன்னாலும் நீ யொப்புக் கொள்ளலாமா? உனக்கு வெட்கமில்லையா? நீ சென்ற அடுத்த நிமிஷம் வரை தங்கையென்று அழைத்து விட்டு உனக்கு இப்பூத்தி யெங்கிருந்து வந்தது? பெற்ற பிள்ளை போற் கருதித் தன் ஆஸ்தியெல்லாம் எழுதி ஒப்பிவிக்கிறே னென்று மனப் பூர்வமாய் வாக்களித் தவள்ளலுக்குச்செய்யுங் கைம்மாறிதுதானோ? சீ, நீ கெட்டாய் என்று தன்னை நிந்தித்துக் கொண்டு தன்னெஞ்சில் வைத்திருக்கும் மங்களத்தின் கையைத் தன் வலக்கரத்தால் மிருதுவா யெடுத்துக் கொண்டே யெழுந்து, 

தெய்- மங்களம் எங்குவந்தாய் 

மங்- இங்குதான் வந்தேன் 

தெய்- என்ன விசேஷம் 

மங்- தங்களுக்குத் தெரியாதா 

தெய்- உன் வாயினாலேயே சொல்- 

மங்- இவடத்தைக் கண்டுகொள்ளவே 

தெய் – எத்தனையோ, அரும்பண்டங்கள் நிறைந்துள்ள பலநல்லவீடுகளிருக்க இந்தவெறும் வீட்டைவிரும்பி வருவானேன் 

மங் – அது அவரவருடைய மன தின்காரியம் 

தெய் – நீ இச்சித்தபடி இந்த வீட்டில் வசிக்க உன் பிதா உனக்கிடங்கொடாவிட்டால் யாதுசொல்வாய் 

மங் – இப்படியுங் கேட்பாருண்டா அருமைப்புத்திரி கேட்கிற பொருளைக்கொடாத பிதாவுமுண்டோ. கொடாவிட்டால் யாது செய்வாய் என்பதும் ஒரு கேள்வியா! உங்களைத்தான் ஒரு கேள்வி கேட்கிறேன் பதிற் சொல்லுங்கள், கண்ணுச்சாமி கையினின்று அப்பா மீட்காவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? 

தெய் – மீட்காவிட்டாலா, நெட்டால் போவேன் அந்தக் கவர்னமெண்டில் நியாயத்தை யெடுத்துச்சொல்லி யென்மீது பக்ஷ முண்டாகும்படி செய்துகொண்டு அவர்கள் அனுமதி பெற்று சுகமே என் ஜெனனதேசம் சேர்வேன். 

மங்-சேர்வீர்களா. சரி-நானும் அப்படித்தான் என்பிதா விடத்தில் இந்த வீட்டின் அழகையும் வசதிகளையும் இதில் வசிக்க எனக்கிருக்கும் விருப்பத்தையும் ஈன்றா யெடுத்துச் சொல்லி அவர்கள் அனுமதி பெற்றே இவ்வீட்டை யடைவேன். 

தெய் – விரும்பினவற்றை யெல்லாம் அடைய முயற்சிக் காலாமா? விருப்பமென்பது நீ சொன்னது போல மனதின் காரியம் அல்லவா? மனமோ எதிலும் நிலையுள்ள தன்று ஒன்றை விட்டொன்று பற்றும் இயல்பினை யுடையதே, இன்றைக் கொன்றை விரும்பும் நாளை மற்றொன்றை விரும்பும். இதை யொரு சாஸ்வதமாக எண்ணிப் பேசலாமோ “மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்” என்பது முதுமொழி. 

மங்- மனம் ஒன்றை விட்டொன்று பற்றுந்தன்மையுடைய தென்றது சரி. நீங்கள் 2-வருஷமாய் B.A.பி.ஏ. பரீக்ஷைக்குப் படித்தீர்களே ஒரு நாட் பாலர் வகுப்புப் பாடமும் மறுநாள் இரண்டாம் வகுப்புப் பாடமும் இன்னொரு நாள் வேதாந்த சாஸ்திரமும் மற்றொரு நாள் அரிச்சந்திர நாடகமும் ஆத்திசூடி கொன்றை வேந்தன் ஒரு நாளும் பி.ஏ. வகுப்புப் பாடம் இன்னொரு நாளுமாகத் தான் படித்தீர்களோ? 

தெய் – இல்லை இரண்டுவருஷமும் இடைவிடாது B. A – வகுப்புக்குரிய பாடங்களைத்தான் படித்தேன் 

மங் – நிமிஷத்திற்கு நிமிஷம் மாறுதலடைந்து கொண்டிருக்கும் இந்த மனம் எப்படி இரண்டு வருஷம் ஒன்றிலேயே பற்றிக் கொண்டிருந்தது கவனித்துச் சொல்லுங்கள். 

தெய் – என்னடா வெட்கக்கேடு இந்தச்சின்னக் குட்டி கேள்விக்கு மறுமொழி சொல்ல முடியாது போலிருக்கிறதே. மனம் பூர்வகன்ம வயப்பட்டு அதன் வழி நடப்பதானதால் ஒன்றிலேயே நெடுங்காலம் பற்றியிருந்திருக்கிறது. 

மங்- ஆகவே கன்மப்படிதான் மனஞ்செல்லும். மனதுக்குச் சுதந்தரத்துவங் கிடையாதென்கிறீர்கள் ஏன் அப்படித்தானே. 

தெய்- ஆஹா சந்தேகமில்லாமல் 

மங் – நல்லது சக்ரவர்த்தி சிரசில் மாணிக்கக் கிரீடத்தையும் தரித்திரன் தலையில் மண் கூடையையுஞ் ஏற்றி வைத்தகன்ம நியதியைத் தடுக்க ஒருவராலு முடியாதே? 

தெய் – முடியாது முடியாது. 

மங – அடைவிக்குங் கன்மமே இவ்வாறு மனதையிழுத்த தென்பது உங்கள் வார்த்தையிலிருந்தே தெரிகிறது. இந்த மட்டோடு என் கருத்துப்படியே விரும்பின வீட்டையடைவே னென்பது சித்தாந்தமாயிற்று. 

தெய் – நான் சாதாரண வீட்டைப் பற்றியே பேசுகிறேன். உன் வார்த்தையில் ஏதோ, கூடார்த்தம் இருக்கும் போலே தோன்றுகிறது. 

மங் – என் வார்த்தையில் இரண்டு பொருளுமா அடங்கியிருக்கிறது, தாங்கள் தான் படிப்பின் வல்லமையைக் காட்டிப் பற்பல சிலேஷைப் பொருள் படப்பேசுகிறீர்கள். 

தெய் – நான் படிப்பில் வல்லவனாயிருந்தால் அரிச்சந்திர நாடகம் படிக்கிற கூத்தாடி யென்று கேட்டாயா? 

மங் – நான் தான் ஒன்றை விட்டொன்று நினைக்கிற சுவபாவ முடையவளே, என் வார்த்தைக்குக் குற்றப்படலாமா? இருந்தாலும் மன்னிக்க வேண்டும். 

தெய் – பொதுவாக மனத்தின் தன்மையைப் பற்றிச் சொன்னதற்கு இவ்வளவு கோபம் வந்தால் நான் வீட்டுப்பேச்சை விட்டு வேறு வார்த்தை பேசியிருந்தால் உன் கோபத்தை தாங்க முடியாது போலிருக்கிறதே. 

மங் – என் கோபம் உங்களையென்ன செய்யும் உங்களுக்குக் கோபம் வந்தாலும் வேணுப்பாட்டாவையும் கண்ணுச்சாமியையும் ஒரு கை பார்க்கும். 

தெய் – (சிறித்துக்கொண்டு) இருக்கட்டும் இன்னும் வில்லிமங்கலத்திற்குப் பிரயாணப்பட வில்லையோ. 

மங் – புறப்படுகிற சமயந்தான். 

தெய் – நீயுங் கூடத்தானே. 

மங் – ஆம். 

அந்நேரம் “வேயுறு தோளிபங்கன்” என்று செட்டியார் பாடுகிற சத்தம் காதில் விழுந்தது. மங்களம் நமஸ்கரித்துக் கொண்டு தாயாருடன் வண்டியேறினாள் தெய்வசிகாமணி யெழுந்து போய் அவர்களை யெல்லாம் வழியனுப்பி விட்டு வந்தான். 

பதினேழாம் அதிகாரம்

இந்த வருஷம் வில்லிமங்கலம் நல்ல விளைவு, செட்டியாருக்குச் சாப்பிடக்கூட நேரங் கிடைக்கவில்லை. வாரம் பிரிக்கவும் நெல் விற்றுமுதற் செய்யவும் பணங்களை நாகப்பட்டணத்திற் கனுப்பவுமாகத் திரிகிறார். இந்தச் சமயம் மங்களம் புஷ்பவதியானாள். அந்தச் சாந்தி முகூர்த்தத்திற்குச் செட்டியாருடைய பந்துக்களெல்லாம் வில்லிமங்கலத்திற்கு வந்திருந்தார்கள். ஆக்டிங் மாஜிஸ்திரேட் தெய்வசிகாமணி பிள்ளையும் மூன்று தின ரஜாவின் பேரில் வந்திருந்தார். விருந்துகளெல்லாம். மஹா விமரிசையாய் நடந்தது. பிராமணர்களுக்கும் நல்ல வேட்டை தான். முகூர்த்த தினத்தன்றிரவு, திருவாரூர் இரத்தின பண்டாரமவர்களால் சாவித்திரி கதாகாலக்ஷேபம் நடந்தது. ஜனங்களெல்லாம் பன்னிரண்டு மணிவரை கதை கேட்டுக் கொண்டிருந்து விட்டு நித்திரைக்குப் போனார்கள். வாத்தியக்காரர்கள், பாகவதர்கள், தவசிப்பிள்ளைகள் முதலான அன்னியர்கள் அவரவர் விடுதி போய்ச் சேர்ந்தார்கள். ஊரெல்லாம் அயர்ந்த நித்திரை மயக்கம். இருட்டானாற் கிள்ளிவிட்டுக் கிட்ட நிற்கலாம். நேரமோ இலை குலுங்கா நடுச்சாமம். அந்த நேரத்தில் வில்லிமங்கலத்திற்கு நிருதி மூலையில் 4-5-தீவர்த்தி வெளிச்சந் தெரிந்தது, வர வர -10-20-30-40 ஆகப் பெருகிற்று. அரை நாழிகைக்கெல்லாம் 40-45 தடியர்கள் இடுப்பிற் கருங்கச்சை கட்டி முகமெல்லாங் கரியைப்பூசி வலதுகையிற் றடிக்கம்பும் இடதுகை யிற்றீவர்த்திகளையும் பிடித்துக் கொண்டு நெறு நெறு வென்று வந்து செட்டியார் வீட்டுக் கதவையுடைக்கத் தொடங்கினார்கள். தூக்கமயக்கத்தில் ஒன்றுந் தெரியாமல், கா.கூ.வென்று எல்லோரும் கத்தினார்கள். செட்டியாரும் தெய்வசிகாமணியும் அவர்களைச் சத்தம் போடாதிருக்கச் சொல்லிவிட்டு மேல் வீட்டிலேறித் துப்பாக்கி யெடுத்துச் சுட்டார்கள். தாழ்வாரத்திற்குள்ளே நின்று கதவையுடைக்கிற கொள்ளைக்காரர்களை மேல் வீட்டிலிருந்து வருகிற துப்பாக்கிக் குண்டுகள் யாது செய்யக்கூடும்? குண்டெல்லாங் காலியாய்ப் போகின்றன. துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடனே பதறின கொள்ளைக்காரர்கள், குண்டு வந்து விழுகிற வசத்தைத் தெரிந்து கொண்டு தைரியமாய் நின்று கதவைப் பிளக்கலானார்கள். முடியவில்லை. களைத்துப் பின் வாங்கிப் போக யோசனை பண்ணிக்கொண்டு நின்றார்கள். அவர்களிலொரு பரமதடியன் துணிந்து என்னடா முட்டாள் வேலை இடிடா ஜன்னலை என்று பெருஞ் சத்தம் போட்டுச் சொன்னான். அவ்வொலி காதிலே விழுந்தவுடன் பெண்டு பிள்ளைகளெல்லாம் அடிவயிற்றைப் பிசைந்து கொண்டு, ஐயோ! ஐயோ!! நீலதாச்சி இந்த ஒரு ஆபத்துக்குக் கைகொடு என்று பெருங் கூச்சலிட்டார்கள். மேல் மாடியிலிருந்த செட்டியார், அமடு வந்துவிட்டது இனி தப்பியோட வழிபார்க்க வேண்டியது தான் என்று வேகமாகக் கீழேயிறங்கி வந்து புறவாசற் கதவைச் சத்தப்படாமற் றிறந்து வெளிப்பக்கத்து மண் சுவரில் சமையற்காரர் தண்ணீரெடுத்து வந்து சுலபமாச் சேருகிறதற்காக அன்று தினம் இடித்து விட்டிருந்த திட்டிவாசல் வழியாய் உள்ளே யிருந்த ஜனங்களையெல்லாம் அரவமில்லாமற் கடத்தி வீட்டுக்கு வடபுறமிருக்கிற நந்தவனத்திற் சந்தடி செய்யாமற் பதுங்கியிருக்கும் படி செய்துவிட்டுத் தானும் தெய்வசிகாமணியும் துப்பாக்கியை ரெடி பண்ணிக்கொண்டு சொத்துப் போனாலும் போகட்டுமென்று ஜனங்களைக் காத்து நின்றார்கள். ஜன்னற் கதவு சாய்ந்துவிட்டது. வீட்டிற்குள் நுழைந்தார்கள் திருடர்கள். ஒரு அஞ்சுவயதுப் பிள்ளையைக் கூடக்காணோம், கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் அடே ஆள் வெளியேறுது வீட்டை வளையுங்கள் என்றான். உடனே கள்ள ரெல்லாம் ஓடிச்சுற்றிலும் நின்றார்கள். ஐயோ, இந்தச் சமயந்தான் மங்களாம்பாள் திட்டி வாசல் வழியே வெளியேறி வருகிறாள். முதலிலே வந்துவிட்டாளே! அந்த மட்டோடு நின்றாளா! விதியை விலக்கவல்ல வருமுளரோ. செட்டியாருந் தெய்வசிகாமணியும், துப்பாக்கிக்குக் குண்டு காணுமானால் கொள்ளைக்காரரை யெதிர்க்கலாம். என்று பேசிக் கொள்கிற சத்தங் காதில் விழுந்தவுடனே இரண்டு நாளைக்கு முத்தித் தன் தகப்பனார் தன் வசம் ஒப்பித்திருந்த குண்டு பெட்டி தன் பெட்டியிலிருக்கிற ஞாபகம் வந்து அதையெடுக்க வீட்டுக்குள் நுழையப் போய் ஆபத்திற் சிக்கிக் கொண்டாள்கள். கள்வர் தலைவன் வீட்டைவளை யென்று சொல்லுகிற போது மங்களம் குண்டுப் பெட்டியெடுத்துக் கொண்டு திரும்புகிறாள். அச்சத்தங்காதில் விழுந்தவுடன் பயந்து கொடியிற் கிடந்த ஒரு கம்பளிச்சட்டையை யெடுத்துத் தரித்துத் தலையில் ஒரு வெள்ளை வஸ்திரத்தைத் தலைப் பாகைபோற் சுற்றிக்கொண்டு திட்டிவாசல் வழியே வேகமாய் வந்தாள். கண்டு விட்டார்கள் கொள்ளைக்காரப் பாவிகள். இதோ போரான் தெய்வசிகாமணி பிடி பிடி யென்றார்கள். புலி பாய்ந்தது போலே நாலு தடியர்கள் சேர்ந்து பிடித்துத் தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள். கண்மூடிக் கண் திறப்பதற்குட் கூட்டமெல்லாம் பறந் துவிட்டது. போகும்போதே “கள்ளர்களை எக்கசக்கமாப் பேசுறது. இரண்டு சாக்ஷிகள் சொல்லிவிட்டால் 10-வருஷம், 12- வருஷம், தெண்டிக்க ஏற்பாடு செய்கிறது. மகா நீதிமானாம் கேடு கெட்ட மூதேவிவா, இண்ணைக்கி \உனக்கு ஜென்மத்தீர்ப்புக் குடுக்கிறோம்.’ என்று இன்னும் பல துர்ப்பாஷைகளாற்றிட்டிக் கொண்டு போனார்கள். 

பதினெட்டாம் அதிகாரம்

“திருப்பதி மிதியாப்பாதம் ” இருந்தென்ன பிரயோசனம்: பாருங்கள் அவருடைய வியவகாரங்களென்ன, குடும்பக்காரியங் களென்ன ஒன்றையுங் கவனியாமல் இமயமலை வரைக்கும் போய் வந்து விட்டாரே அதுவல்லவா புருஷத்துவம். மனுஷனென்று பிறந்தவன் நாலு தேசத்து நாகரீகமும் போய்ப் பார்த்திருக்க வேண்டும். என்று பாப்பையாபுரம் சாமிநாதக்கவிராயர்வீட்டில் அநேகபிரபுக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அநேக ஏழை ஜனங்கள் வயிறாரப்போ ஜனம் பண்ணிவிட்டு வாழ்த்திக் கொண்டு போகிறார்கள். சே சாமசுந் தரம்பிள்ளை ஸாதுக்கள் பந்தியிலேநின்றுபசரிக்கிறார். இவ்வாறு ஒரு வாரம்வரை, விருந்துகளும் மாஹேசுரபூஜைகளும் நடந்துகொண் டிருந்தது. அதற்கு மேற்பட்டு ஒருளள் பாப்பையாபுரத்திலுள்ள பெரிய குடித்தனக்காரர்களும் முதியோர்களும் பாலியர்களும் சேர்ந்து ஒரு சபை கூடினார்கள். கவிராயர் சபையோர்களைப் பார்த்துக் “கனவான்களே, மிராசுப்பிள்ளை மகன் காணாமற் போன தெய்வசிகாமணி இப்போது உயிருடனிருக்கிறான். அவனைக் கொண்டு வந்து சேர்க்க என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள்” என்றார். அதற்கு முன்பின் ஆலோசனையும் வேண்டுமோ, உடனே பத்துப் பேர் புறப்பட்டுப் போய் அழைத்துக் கொண்டு வந்து கவர்ன்மெண்டுக்குத் தெரியப்படுத்தி மிராசை வாங்கிக் கொடுத்து இந்தப் பாதாளகாண்டி தங்கச் சாமிபிள்ளையைக் கையைத்தூக்கி விடவேண்டியதுதான். இகற்கென்ன திகைப்பு” என்றார் குடிகள். பிறகு கவிராயர்தான் தெய்வசிகாமணியை மணிமங்கலத்திற் கண்டதும் காசியாத்திரைக்குச் சென்ற பின் நாகபட்டினம் தாலுகாவில் உத்தியோகம் பண்ணிக் கொண்டிருப்பது மாகிய விபரங்களைச்சொன்னார். எல்லாரும் பரமசந்துஷ்டர்களாய்ச் சுபதினம் பார்த்துக் கொண்டு நாகையை நோக்கிப் புறப்பட்டார்கள். விலைபெற்ற பெங்களூர், எருதுகள் பூட்டிய ஐந்துவில் வண்டிகள் வரிசையாய்ப் புறப்பட்டன. முதல் வண்டியிற் கவிரா யரும் சில பிரபுக்களுமிருந்தார்கள். மற்றவண்டிகள் நிறையப் பெரிய குடித்தனக்காரர்கள் சென்றார்கள். ஜெகவீர பொம்மு நாயக்கன் முன்வண்டி செலுத்திக் கொண்டு போகிறான். வண்டிகள் விராலிமலைக் காட்டூடே போய்க் கொண்டிருக்கின்றன. எதிரே ஒரு குதிரை வண்டி அதிவேகமாக வருகிறது. கொஞ்ச தூரத்தில் வரும் போதே குதிரைவண்டிக்காரன் “ஓய், வண்டிகளை விலக்குங் கானும்” என்றான். 

ஜெகவீர பொம்முநாயக்கன் – (என்னடாகாணும்) குதிரைவண்டிக்காரன்-குப்பைக்காட்டானோ? 

ஜெக – என்னடா, நாலு விராகனில் ஒரு கழுதை வண்டிவைத்திருக்கிறதினாலே நீ யொரு பட்டணக் கரையானோ.

குதி – லக்ஷிமியை (குதிரையை)ப் பார்த்துக் கழுதையென்று மனுஷன் சொல்லமாட்டான். 

ஜெக- மனுஷனில்லாமல் உண் கண்ணுக்கு எப்படித்தெரியுது வேய். 

கவி – என்னத்திற்கு வீண் வம்பு வண்டியை விலக்கியடி ஜெக வீர பொம்மு, 

ஜெக – ஐயா, இருபக்கத்திலும் செடிகள் அடர்ந்திருப்பதால் விலக மார்க்கமில்லை. 

கவி- பொறு நாங்கள் இறங்கிக் கொள்கிறோம் மாட்டையவிழ்த்தாவது வண்டியை விலக்கு. 

ஜெக- உன் குதிரையை அவிழ்த்து ஒரு தடம் விலக்கு. 

குறி – சீமைக்கதிபதி வந்தாலும் நம்பள் வண்டி விலகாது. 

ஜெக – என்னடா குரங்குச் சேட்டை பண்ரே உன்வண்டி விலக மாட்டாதோ! நான் விலகச் செய்யுறேன் பாரு. 

என்று தன் கையிலிருந்த சாட்டையினாற் குதிரையை ஓரடியடித்தான் அதற்குள் 

கவி – ஆ! ஆ! ஜெகவீர பொம்மு நில்லு நில்லு யாராவது பெரிய மனுஷாள் வண்டியாக இருந்தாலுமிருக்கும் அவஸரப்படாதே என்று குதிரை வண்டிக்குப் பின்னாற் போய் நின்று யாரையா வண்டியில் என்றார். அந்த வண்டிக்குச் சற்று சமீபத்தில் நின்று கொண்டிருந்த வேறு இரண்டு மனிதர்கள் கவிராயரைப் பார்த்து “வண்டியோரம் போகக் கூடாதென்று கையால் சைகை செய்தார்கள்.” அதை யொருபொருளா யெண்ணமற் கவிராயர் மறுபடியும் வண்டியை நெருங்கினார். அந்த வண்டிக்குள்ளிருந்து ஒரு மின்னற் கொடி துவண்டு விழுவது போல திடீரென்று கவிராயர் காலோரம்ம், ஒரு பெண்சாமி, சாமி, “காசிச் சாமியென்றலறி வீழ்ந்தாள்.” அவர் திடுக்கிட்டு. யாரம்மா பதறாதே! பதறாதே! எழுந்திரு, அழா என்ன சங்கதியென்றார். வண்டியிலிருந்த வர்களெல்லாம் இறங்கி வந்து குதிரை வண்டியை வளைந்து கொண்டார்கள். 

கவி – நீ, எந்தவூர் அம்மா. என்ன ஆபத்து சும்மா சொல். 

பெண் – காசிச்சாமி இன்னும் அடையாளந் தெரியவில்லையா, நான் மங்களம், 

கவி – தர்மகர்த்தாச் செட்டியார் மகளா. அட்டா. இதென்ன பரிதாபம். ஒருவரும் இல்லாமல் ஒண்டியா யெப்படி வந்தாய். 

பெண்- முதலிலே வண்டிக்காரனையும் பின்னாலே ஓடிவந்த இருவரையும் பிடித்துக் கட்டுங்கள் ஓடிப் போகாமல், அப்புறம் எல்லாஞ் சொல்லுகிறேன் என்றாள்.இந்த வார்த்தைக்கு முந்தியே, குதிரை வண்டிக்காரனைச் சேர்ந்த இருவரும் மெதுவாகக் கம்பி நீட்டப் பார்த்தார்கள் அதிற் கண்ணாயிருந்த ஜெகவீர பொம்முநாயக்கனும் சிறை மீட்டானும் சட்டென்று பிடித்து அவனவன் வேஷ்டிகளைப் பறித்து முருக்கி வண்டிக் காலோடு சேர்த்துக் கட்டினார்கள். வண்டிக்காரனை ஜெகவீ,பொம்மு பிடித்து அவன் நீண்டதலை மயிரை இரண்டாய் வகிர்ந்து வண்டி நுகத்துளையிற் கோத்துக்கட்டி மனுஷாள் முகரக்கட்டையைப் பாருங்க மூணாம் பேஸ்து பேஷ் என்று வெற்றிலை யெச்சிலைக் காரியுமிழ்ந்தான். கவிராயர் மங்களாம்பாளை ஒரு வண்டி யிலிருந்து கொள்ளும்படி செய்து நடந்த சங்கதியைத் தவறாமற் சொல்லென்றார். மங்களம் நடந்த வர்த்தமானங்களைச் சொன்னாள். 

கவி – உன்னை நாலு பேர் தூக்கிக் கொண்டு போனதாகச் சொன்னாயே இந்த வண்டி எவ்வகையிற் கிடைத்து இதற்கு வந்தாய்? 

மங் – என்னைச் சிரெஸ்த்தார்ப்பிள்ளை யென்றெண்ணித் தூக்கிக் கொண்டு ஒரு மைல் தூரத்திலுள்ள ஒரு காட்டுக்குட் போய் அங்கு ஏற்கெனவே நிறுத்தப் பட்டிருந்த இந்த வண்டியிற் போட்டு இவ்வளவு தூரங் கொண்டு வந்து விட்டார்கள். 

கவி – சிரெஸ்த்தார்ப்பிள்ளையென்று நினைத்து உன்னைத் தூக்கிக் கொண்டு வந்ததுனக் கெப்படித் தெரியும். 

மங் – அவர்கள் என்னைத்தூக்கிக் கொண்டு போகும்போது ‘கள்ளர்களை யெல்லாம் எக்க சக்கமாகப் பேசுகிறது இரண்டு சாக்ஷிகள் சொன்னாலும் அதை வைத்துக்கொண்டு 10, 12-வருஷம் தெண்டிக்க ஏற்பாடு செய்கிறது மஹா நீதிமானாம். வா இன்றைக்கு உனக்கு ஜென்மத் தீர்ப்புத்தான்’ என்று பேசிக் கொண்டதினால தெரிந்தேன்.

கவி – சிரெஸ்தார் வேலை பார்க்கிறவன் யாரைத் தண்டித்தான் நீ சொல்லுகிறது பொருத்தமாயில்லையே. 

மங் – அவர்களுக்கு மாஜிஸ்திரேட் வேலை வந்து 2-மாதமாகிறதே. 

கவி- அப்படியா பயலுக்கு ராஜயோகந்தான் விறுவிறென்றே றுகிறதே. 

ஜெகவீர பொம்மு நாயக்கன்-ராஜயோகம் இல்லாட்டா பாப்பையாபுரத்தான் இத்தனை பேரும் ஒண்ணுத் திரளுவானா ஐயா, கொஞ்சத்திலே. 

கவி – அது நிஜந்தானப்பா, மங்களம், மற்றக்கூட்டத்தாரெல்லாம் எங்கே தெரியுமா. 

மங் – கொஞ்சத்தூரங் கூடவே வந்தார்கள். கடைசியாய் விராலிமலைப் பறம்பில் வைத்து என்னைக் கொல்லும்படி இவர்களுக்கு உத்திரவு பண்ணிவிட்டு அவர்கள் நின்று போனார்கள். 

கவி – அவர்கள் நின்றுவிட்ட ஊர்ப்பேர் தெரியுமா. 

மங் – ஊரேது இரவெல்லாம் காட்டுவழியாகத்தான் வந்ததாகத் தெரிகிறது. 

கவி – விடிந்த பிற்பாடும் உன்னைப் பெண்ணென்று கண்டுகொள்ளாமல் எப்படி விட்டு விட்டார்கள். 

மங் – என்னையொருவருங் கவனிக்கவுமில்லை நானும் தலைப் பாகையையும் சட்டையையும் கழற்றாமல் தைரியமாகவே இருந்து வந்தேன். 

கவி – யாரு மில்லார்க்குத் தெய்வந்துணை யென்பதறிந்தேனம்மா” தியாகராஜ செட்டியார் தர்மந்தலைகாத்தது. இருக்கட்டும். தெய்வசிகாமணியைப் பற்றி எதுவுந்தெரியுமா.

மங் – ஒருவருக்கும் ஒரு தீங்குமில்லை நான் கடைசியாகப் பார்க்கும்போது நந்தவனத்தில் எல்லாரும் நின்றார்கள். 

கவி – தெய்வசிகாமணியை நன்றாய்ப் பார்த்தையா? 

மங் – திட்டமாய்ப் பார்த்தேன், என்னை அவர்களென்று நினைத்துத் தூக்கிக் கொண்டு வராதிருந்தால் அவர்களுக்கே பெரிய ஆபத்து வந்திருக்கக் கூடுமென்றுறுதியாய் நினைக்க வேண்டும். 

நல்லவேளையென்று வில்லிமங்கலத்திற்கு ஒரு தந்தியெழுதிக் கூடவந்தவர்களில் இரண்டுபேரைச் சமீபத்திலுள்ள மருங்காபுரித் தந்தியாபீஸுக் கனுப்பி விட்டுப் பரிசாரகனைச் சமையல் பண்ணும்படி சொன்னார். அங்குள்ள ஓர் குளக்கரைக்குச் சமீபத்தில் வண்டிகளை வட்டமாய் நிறுத்தி அவைகளைப் பொதிந்து காவித் திரைகளைக் கட்டிக் கூடாரம் போற் செய்து கொண்டு ஆகாரம் அட்டு முடிக்கப்பட்டது. அதற்குள் மருங்காபுரிக்குப் போன ஆட்களும் தந்தி கொடுத்து விட்டு வந்து சேர்ந்தார்கள். எல்லாரும் சாப்பிட உட்காரு முன் மங்களம் அன்னமில்லாமற் களைத்துப்போயிருந்த படியால் குளத்தில் முழுகி வரும்படி செய்து வண்டிக்குள் வைத்து அன்னம் பரிமாறப்பட்டது. பிறகு எல்லாரும் சாப்பிட்டு முடிந்தவுடன் வண்டியைப்பூட்டி விட்டார்கள். திருடர்களுக்குஞ் சாப்பாடு செய்வித்து வண்டிக்குப் பின்னாலே நாயைக்கட்டினது போலே கட்டி விட்டுவிட்டார்கள். மறுநாட்காலை 8 – மணிக்கு வில்லிமங்கலத்திற் செட்டி குச்சமீபமாக வண்டிகள் போய்க்கொண்டிருக்கின்றன. யார் வீட்டைச் சுற்றிப்போலீஸ் அதிகாரிகளும் பக்கக்கிராமத்து ஜனங்களும் நிறைந்து நிற்கிறார்கள். நீலலோசனியம்மாளுக்குத் தேறுதல் சொல்லிக் கொண்டு அநேக பெண்கள் துக்கமுகத் துடனுட் கார்ந்திருக்கிறார்கள். தெய்வசிகாமணி பிள்ளை சொல்ல முடியாத் துயர முகத்தினராய் ஒரு பக்கம் நிற்கிறார். செட்டியார் போலீஸ் சூப்ரெண்டெண்டு துரையிடம் கொள்ளை நடந்த விவரத்தை எழுதி வைத்துக்கொண்டுட்கார்ந்திருக்கிறார். இத்தருணம் இரண்டு வாலிபர்கள் வில்லிலிருந்து விடுபட்ட கல்லைப் போல வேகமாய்ச் செட்டியார் வீட்டை நோக்கி வருகிறார்கள். அவர்கள் நிலந்தூர்க்கும் வேஷ்டியுடையும் மிளகுக்கொடிச் சாயலேஞ்சிக்கட்டும் உள்ளங்கையகலச் சந்தணப்பொட்டும் கையிற் சக்கரப்பூண்கட்டுக் கம்பு பிடித்திருக்கும் வசமும் நெடுந்தூரமிருந்து நடந்து வருபவரைப் போற்காணப் பட்டாரில்லை. வந்தவர்கள் செட்டியார் இருக்குமிடம் போய்ச் சேரு முன்னமே கூடியிருந்தவர்கள் எந்தவூர் என்றார்கள். பாப்பையாபுரம் என்று பதிற் சொல்லிக் கொண்டேபோய்ச் செட்டியாரைக் கண்டார்கள். அதற்குள் ஜனங்கள் போய் மொய்த்துக் கொண்டார்கள். வந்தவர்களி லொருவன் தங்கள் மகள் மங்களாம்பாள் சுகமே வண்டியில் வருகிறது. பாப்பையாபுரத்திலிருந்து கவிராயரவர்களுடன் 20 பேர் 5-வண்டி சகிதம் வருகிறார்கள். எங்களை முன்னாலே அனுப்பினார்கள் என்றான். இந்த வார்த்தையைக் கேட்டதும் ஜனங்கள் சந்தோஷத்தினாற் இரைந்து பேசத் தொடங்கினார்கள் க்ஷணநேரத்திற்கு முந்தி நிர்ஜீவனாய்க் கிடந்த கூட்டம், இப்போது  பருவகாலத்துக் கடல் முழங்கினது போலே  மங்களம் வந்து விட்டாள் மங்களம் வந்து விட்டாள் என்று ஆரவாரித்துக் கொண்டிருக்கிறது. வண்டிகள் வில்லிமங்கலத்துத்தெருவூடே ஒழுங்காய் வருகிறது. மங்களம் எந்த வண்டியில் வருகிறாள், இந்த வண்டியிலேயா அந்த வண்டியிலேயா? என்று நெருங்கி வண்டியை போகவிடாமற் றடுத்து நின்றார்கள். ஜெக வீர பொம்முநாயக்கன் கிருதா மீசையைக் கண்டு ஜனங்கள் வியப்படைந்தார்கள். அஞ்சு வண்டி மாடும் அச்சிலே வார்த்தது போலே யென்றார் சிலர். மங்களத்தைத் திருடிக் கொண்டுபோன கள்ளர்களா, இதோ போகிறவர்கள், மூஞ்சியைப் பாருங்களென்றார் சிலர். இந்த வண்டியிலே போகிறவர் தான் மங்களத்தைக் கண்டுபிடித்துத் தந்தி கொடுத்தவரா மென்றார் சிலர். வண்டிகளும் செட்டியார் வீட்டு முன் வந்து நின்றன. முதலிற் கவிராயரிறங்கினார். செட்டியாரும் தெய்வசிகாமணியும் வணங்கினார்கள்: பாப்பையாபுரத்தி லிருந்து வந்தவர்களை யெல்லாம் செட்டியார் வாருங்கள் வாருங்கள் என்றுபசரித்தார், மங்களத்தை வண்டியை விட்டிறக்கி வீட்டுக் கழைத்துப் போனார்கள். குழந்தயைக் கண்டவுடன் நீலலோசனியம்மாள் கழுத்தைக் கட்டிக்கொண்டு கோவென்று கதறினாள். கூடின ஜனங்கள் அமர்த்தினார்கள் ‘எழுபது வெள்ளயாக்கைக் கோருயிரெய்திற்றன்றே’ என்பது போலக் கூடிய ஜனங்களின் எல்லாவுடலுக்கும் ஒருயிர் வந்தது போல ஆநந்தமயமாயிருந்தார்கள். இந்த அமிலையில் வண்டியிற கட்டப்பட்டிருந்த கள்ளர்களை ஒருவரும் கவனிக்கவில்லை. ஜெகவீர பொம்மு மாத்திரம் கண் போட்டுக் கொண்டிருந்தான். ஒரு கள்ளன் மட்டும் கட்டுகளை மெல்ல மெல்ல நெகிழ்த்துக் கொண்டிருந்தான். பாதிவேலை நடக்குமட்டும் பார்த்துக் கொண்டிருந்த ஜெகவீர பொம்மு ஓடி வந்து இடுப்பில் இரண்டு மிதி மிதித்து மறுபடியும் இறுக்கிக் கட்டிவைத்தான். தெய்வசிகாமணியும் செட்டியாரும் கவிராயரோடு கலந்து திருடர்களையும் குதிரை வண்டியையும் போலீஸார்வசம ஒப்பித்துக் கேஸ் நடத்தும்படி யேற்பாடு செய்தார்கள். குதிரையையும் வண்டியும் யாருடையதென்று நீங்கள் முதலிற் கண்டு பிடித்து விட்டால் அப்புறம் கேஸில் நீங்கள் அதிகப் பிரயாஸமெடுக்க வேண்டியிராது கவனித்துக் கொள்ளுங்கள் என்று போலீஸாரிடம் கவிராயர் சொன்னார். 

தெய்வசிகாமணி இன்னாரென்று முதலிலே பாப்பையாபுரத் தார்களுக்குத் தெரியாதிருந்தாலும் பிற்பாடு தெரிந்து கொண்டு நடந்து போன காரியங்களுக்காகக் கவலைப்படவும் நெருங்கிப் பேசவும் அவனது தேககாந்தி முகவசீகரம் வசன சாதுரிய முதலியவைகளைக் கண்டு கண்டு வியப்படையவு மாயிருந்தார்கள். தெய்வசிகாமணி அவர்களோடு ஐயன்மீர், தங்கள் காலடியிற்றவழ்ந்து கிடந்து நடந்து விளையாடித்தங்கள் திருக்கரந் தொட்டெடுக்கவும் உங்கள் நல் வசனங்களையும் நீதி போதங்களையும் கேட்டு நடக்கவும் பாக்கியம் செய்யாத பாழுடலைச் சுமந்த பாவி நான், என்னைப்போ லே பெற்றாரும் உற்றாரும் பேரும் ஊருமற்றுச் சாதியும் சமயமும் தெறியாது தலைமயங்கித் திரிந்த சண்டாளனைக் கதை யிலாவது கேட்டிருப்பீர்களா? குலமுறை குன்றாத தங்கள் கூட்டத்திலிருக்க நான் எவ்வளவும் அருகனல்ல, அன்னப்பறவைகளின் த் தியில் ஒரு கொக்கிருந்தது போல தலை கவிழ்ந்திருக்கும் தகுதியுள்ளவனா யிருக்கிறேன் என்று கண்ணீர் சொரியத்துக்கித்தான். கவிராயர், குழந்தாய் ‘இன்ன வினை இன்ன தலத்தெய்தும்’ என்ற ஈசுரநியதியைக் கடக்க எவராலு முடியாது. காக்கைக்கூண்டில் வளர்ந்த குயிலின் குஞ்சு பின்பு தன் சாதியைச் சேரவில்லையா? வளர்ந்த இடத்தினாற் பிறந்த ஜாதிப்பெருமை குறையுமா, அப்படியும் நீ தாழ்ந்தஸ்தானத்தில் வளரவில்லையே, நீ காணாமற் போன மறுதினமே உனது நெருங்கின பந்துக்களில் ஒருவரான தாசில்தாரிடம் உன்னைச் சேர்த்து இவ்வளவு மேலான பதவியில் வைத்த உன்னுடைய நல்வினைக்கு நீ நன்றியுள்ளவனா யிருக்க வேண்டும். உயர்ந்த மாணிக்கக்கல்லைத் தங்கத்தகட்டிலும், செங்கல்லை மண்சுவரிலும் பொருத்தி வைக்கும் தன்மையுள்ள விதிப்படி நடக்க வேண்டியவர் களாயிருக்கிறோம் நாம் என்றார். ‘எது எப்படியிருந்தாலும் இவ்வளவு காலங்கழித்துத் தங்களைக் கண்டதே எங்கள் பெரும்புண்ணியவச மென்றார்கள் பாப்பையாபுரம் குடிகள். அந்நேரம் அமுர்தலிங்கம் வந்து சாப்பாட்டுக்குச் செட்டியாரழைத்ததாக வந்து தெரியப் படுத்தினான். உடனே யெல்லாரும் எழுந்து போய் நீராடிப் போசஞ் செய்து விட்டு வந்துட்கார்ந்தார்கள். இவ்வாறு 15 – நாள்வரை வில்லிமங்கலத்திற் சந்தோஷமாயிருந்தார்கள். 

– தொடரும்…

– தெய்வசிகாமணி (ஒரு நவீனகம்), முதற் பதிப்பு: 1924, லெக்ஷிமி விலாசம் பிரஸ், சாத்தூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *