துறவு
கதையாசிரியர்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 11, 2025
பார்வையிட்டோர்: 161
(2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்).

பதினைந்தாம் நூற்றாண்டில், இப்பொழுது நடப்பது போலவே, ஒவ்வொரு நாளும் சூரியன் காலையில் எழுவதும் மாலையில் மறைவதுமாக இருந்தது. சூரியனின் முதல் கதிர்கள் பனித்து ளியை முத்தமிட்டவுடன் பூமி விழித்துக் கொள் ளும். மகிழ்ச்சியும் உற்சாகமும் நம்பிக்கையும் நிறைந்த ஒளி எங்கும் பரவும். மாலைவேளையில், இதே பூமி அமைதியாகி இருளில் மூழ்கும். சில சமயங்களில், மேகங்கள் திரண்டு வந்து கோபமாக இடி இடிக்கும். இல்லையென்றால், வானில் இருந்து ஒரு நட்சத்திரம் தூங்கி விழும். அல்லது, பயந்தபோன துறவி ஒருவர் ஓடி வந்து, மடத்துக்கு மிக அருகில் ஒரு புலியைப் பார்த்ததாகத் தன்னுடன் தங்கியிருக்கும் அருட்சகோதர்களிடம் சொல் வார். அதற்குமேல் ஒன்றும் இல்லை. பிறகு மீண்டும் அதே நாள், அதே இரவு.
மடத்தில் இருந்த துறவிகள் வேலை செய்வதும் பிரார்த்தனை செய்வதுமாக காலத்தைக் கழித்தனர். அவர்களில் வயதான துறவி, லத்தீன் மொழியில் பாடல்களைப் புனைவார், இசையமைத்து ஆர்கன் கருவியில் வாசிப்பார். அந்த முதிய வருக்கு அபாரத் திறமை இருந்தது. அவருடைய இசை காற்றில் அசைந்து வெளியேரும் போது யாரும் கவனிக்காமல் இருக்க முடியாது எனும் அளவுக்கு நேர்த்தியாக ஆர்கன் வாசிப்பார். வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருப்பதால் கேட் கும் சக்தியை வெகுவாக இழந்திருந்தவர்களால் கூட இவரது இசையைக் கேட்டதும் கண்களில் நீர் ததும்புவதைக் கட்டுபடுத்த முடியாது.
அந்தத் துறவி பேசிய போது, அது சாதாரணமான விஷயமாக இருந்தாலும் கூட, அதாவது மரங்கள், கொடிய மிருகங்கள், கடல் இப்படி எதைப் பற்றி அவர் பேசினாலும், சிரிக்கா மலோ அழாமலோ யாராலும் அவரது பேச்சைக் கேட்க முடியாது. அவருடைய ஆர்கன் கருவியில் ஒலிக்கும் இசை அவரது ஆன்மாவிலும் எதிரொ லிப்பதாகத் தோன்றும். பிரம்மாண்டமான விஷ யங்களைப் பற்றி அவர் பேசிய போதும், கடுமை யான கோபமோ அதிக சந்தோஷமோ ஏற்படும் போதும், உணர்ச்சிப் பெருக்கில் மூழ்கிப்போவார். கோபத்தில் இருக்கும் அவரது கண்களில் இருந்து கண்ணீர் ததும்ப ஆரம்பிக்கும், முகம் சிவக்கும், அவரது குரல் இடி போல் முழங்கும். இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் துறவிகள், பேசுபவரின் அவருடைய உணர்ச்சிப் பெருக்கு, தங்களுடைய உள்ளத்தை உலுக்குவதாக உணர்வார்கள். இது போன்ற அருமையான அற்புதமான தருணங்க ளில், அவருடைய சக்தி, எல்லையில்லாமல் இருந் தது. அந்த நேரத்தில் அவர் மட்டும் ஆணையிட் டிருந்தால் போதும். அவரைவிட வயதில் பெரிய வர்கள் கூட துறவியின் விருப்பத்தை நிறைவேற்ற ஒருமனதாக, சந்தோஷமாக ஓடிச் சென்று கடலில் குதித்திருப்பார்கள்.
அவரது இசை, குரல், இறைவனைப் போற்றி அவர் பாடும் வரிகள் இவை எல்லாம் அங்கிருந்த துறவிகளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை வாரி வழங்குவதாக அமைந்தன. எந்திரமயமான அவர்களுடைய வாழ்க்கையில், மரங்கள், மலர்கள், வசந்த காலம், இலையுதிர் காலம் எல்லாம் எரிச்சலை உண்டாக்கின. கடலின் ஓசை இரைச்சலாக இருந் தது ; பறவைகளின் பாடல் நாராசாரமாக ஒலித்தது. ஆனால், அன்றாடம் தேவைப்படும் உணவு போல், அவர்களுக்கு கிடைத்த முதிய துறவியின் திறமை மட்டும் விதிவிலக்கு.
சில வருடங்கள் கழிந்தன. இரவும் பகலும் எவ்வித மாற்றமும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்தன. அந்த மடத்தின் அருகில் கொடிய மிரு கங்களையும் பறவைகளையும் தவிர வேறு எந்த உயிரினமும் தலைகாட்டுவதில்லை. மடம் இருக்கும் இடத்துக்கும் மனிதர்கள் வாழும் இடத்துக்கும் இடையே தூரம் அதிகம். அங்கிருந்து மடத்துக்கு வரவேண்டும் என்றாலோ இங்கிருந்து அங்கு செல்லவேண்டும் என்றாலோ நூறு மைல் அகலம் கொண்ட பெரிய பாலைவனத்தை தாண்டியாக வேண்டும். அதுவும் யாருக்கு வாழ்க்கையின் மேல் எவ்வித மதிப்பும் இல்லையோ, யார் வாழ்க்கையை வெறுத்தவரோ அவர்கள்தான் இப்படி துணிந்து பயணம் மேற்கொண்டு ஏதோ ஒரு கல்லறைக்கு வருவது போல் மடத்துக்கு வருவார்கள்.
நிலைமை இப்படி இருக்க, ஒரு நாள் இரவு ஒரு நபர் வந்து தங்கள் மடத்தின் கதவைத் தட் டியபோது துறவிகளுக்கு ஆச்சரியமாக இருந்தது. வந்தவன் பார்க்க நகரத்தைச் சேர்ந்தவன் போல் இருந்தான். வாழ்க்கை மேல் விருப்பம் வைத்து பாவங்களைச் செய்து காலம் தள்ளும் சராசரி மனிதர்களில் ஒருவன். ஜபம் சொல்வது, மூத்த துறவியிடம், ஆசீர்வாதம் கேட்பது என எதையும் செய்வதற்கு முன் வந்திருப்பவன் சாப்பாடும் மதுவும் கேட்டான். ‘நகரத்தில் இருந்து பாலைவனத் திற்கு எப்படி வந்து மாட்டிக்கொண்டாய்?’ என்று அவனிடம் கேட்டார்கள். அவன் வேட்டைக்கு வந் தவன். குடிக்க நிறைய வைத்திருந்திருந்தானாம். பிறகு வழியைத் தவற விட்டுவிட்டான். அவன் ஒரு துறவியாகி தன் ஆன்மாவை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற புத்திமதியை கேட்டதும், சிரித்தபடியே, “நான் உங்களுடைய நண்பன் இல்லை” என்று பதில் சொன்னான்.
அவனுக்குத் தரப்பட்ட உணவையும் ஒயினை யும் சாப்பிட்ட பிறகு அவனுக்கு உணவளித்த துறவிகளைப் பார்த்து எரிச்சலுடன் தலையை ஆட்டியபடி பேசினான். ”துறவிகளாகிய நீங்கள் ஒன்றும் செய்வதில்லை. உங்கள் சாப்பாடு, மது இவற்றின் மீது தான் உங்கள் அக்கறை எல்லாம். உங்கள் ஆன்மாவைக் காப்பாற்ற இது தான் வழியா?
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நீங்கள் இங்கே தங்கி, அமைதியாக சாப்பிட்டுக் கொண்டும், குடித்துக்கொண்டும், இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்ற கனவில் காலத்தைக் கழிக்காதீர்கள். இதே நேரத்தில் உங்கள் சகோதரர்கள் வழி தெரியாது நரகத்தில் உழல்கிறார்கள். அங்கே நகரத்தில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். சிலர் பசியில் சாகிறார்கள் ; மற்றவர்கள் தங்களிடம் உள்ள பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் ஊதாரித்தனத்தில் ஈடுபட்டு தேனில் விழுந்த ஈக்களாக மடிகிறார்கள் மனிதர்களிடையே நம்பிக்கையோ நேர்மையோ இல்லை. அவர்களை காப்பாற்றுவது யார் கடமை? காலை முதல் மாலை வரை குடித்துக் கொண்டு இருக்கிறேனே, என்னுடைய கடமையா அது? இங்கே நான்கு சுவர்களுக்கிடையே உட்கார்ந்து கொண்டு ஒன்றும் செய்யாமல் இருப்பதற்காகவா கடவுள் உங்களுக்கு நம்பிக்கை, நேசிக்கும் கருணை உள்ளம் ஆகியவற்றைக் கொடுத்து இருக்கிறார்?” வந்தவன் பொரிந்து தள்ளினான்.
போதையில் நகரவாசி செய்த போதனை அன்னியமாக இருந்தாலும் மூத்த துறவியை ஒரு வகையில் பாதித்தது. அவரும் உடனிருந்த துறவிகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். முகம் வெளிறிப்போயிருந்த அவர் பேசினார். “சகோதரர்களே, அவன் சொல்வது சரிதான். அறியாமை, பலவீனம் ஆகியவற்றின் காரணமாகப் பாவப்பட்ட மனித இனம் நம்பிக்கையின்மையிலும் பாவத்தி லும் உழன்று மடிகிறது. மேலும், ஏதோ இது நம் வேலை இல்லை என்பது போல் நாம் இருக்கும் இடத்திலிருந்து நகராமல் இருக்கிறோம். அவர்க ளுக்கு மறந்து போன கிருத்துவை அவர்களிடம் சென்று நினைவுபடுத்த நான் ஏன் அங்கு செல்லக் கூடாது?”
நகரவாசியின் வார்த்தைகள் மூத்த துறவியின் மனதை இளகவைத்தது. அடுத்த நாள், உடன் இருந்தவர்களை அழைத்தான். எல்லோரிடமும் விடைபெற்று நகரத்தை நோக்கி, நடக்க ஆரம்பித்தார். எனவே, அவருடைய இசை, அவரது பாடல் கள் வார்த்தைகள் எல்லாம் இழந்து அங்கிருந்த துறவிகள் தனிமையில் இருக்க வேண்டியதாகியது.
துறவிகள் முதலில் ஒரு மாதம், பிறகு இரண்டு மாதங்கள் எனக் காத்திருந்து பார்த்தார்கள். அந்த வயதான துறவி திரும்பவில்லை. மூன்றாவது மாதக் கடைசியில் ஒரு வழியாக அவருடைய சத் தத்தைக் கேட்க முடிந்தது. துறவிகள் எல்லோரும் அவரை நோக்கி ஓடிச் சென்று கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்களோடு சேர்ந்து சந்தோஷமாக இருப்பதற்குப் பதிலாக அவர் சோகமாக அழுதார். எதுவும் பேசவில்லை. அவர் மிகவும் மெலிந்து போய் இருப்பதையும் வெகுவாக சோர்ந்து போய் இருப்பதையும் துறவிகள் கண்டனர். அந்தச் சோர்வும் ஆழமான சோகமும் அவருடைய முகத்தில் வெளிப்பட்டன. அவர் அழுதபோது, ஆழமாக புண்பட்ட மனிதர் ஒருவர் போல் தோன்றினார்.
பின்னர், அங்கிருந்த துறவிகளும் அழுதார்கள். அவரிடம், ஏன் அழுகிறீர்கள், ஏன் உங்கள் முகம் இப்படி சோர்ந்திருக்கிறது என்று கேட்டார் கள். ஆனால், அவர் பதில் எதுவும் பேசவில்லை. அறைக்குப் போய் கதவைச் சாத்திக் கொண்டார். ஐந்து நாட்கள் அங்கேயே இருந்தார். சாப்பிடவும் இல்லை ; குடிக்கவும் இல்லை. இசைக்கருவியை யும் தொடவில்லை. துறவிகள் சென்று கதவைத் தட்டிப்பார்த்தார்கள். வெளியேவந்து அவரது துய ரத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி மன் றாடிக் கேட்டுக் கொண்டனர். ஆனால் ஆழ்ந்த மௌனமே அவருடைய பதிலாக இருந்தது.
ஒரு வழியாக அவர் வெளியே வந்தார். அவ ரைச் சுற்றியிருந்த துறவிகளிடம் அழுது அழுது வீங்கிய முகங்களில் சோகமும், ஆச்சரியமும் கலந்திருந்தன. கடந்த மூன்று மாதத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி அவர்களிடம் பேச ஆரம்பித்தார். மடத்தில் இருந்து நகரத்துக்கு அவர் மேற்கொண்ட பயணத்தை விவரித்தபோது அவருடைய குரல் அமைதியானது. கண்களில் சிரிப்பு. அவர் சென்ற பாதையில் பறவைகள் காதோரம் வந்து பாடல் இசைத்தன. ஏதோ, எதிர்கொள்ளப் போகும் போரில், நிச்சயம் வெற்றிப் பெறப்போகும் படைவீரன் போல் தன்னை உணர்ந்தார். இப்ப டிக் கனவு கண்டபடியே, பாடல்களை உருவாக்கிக் கொண்டே நடந்ததில் அவருடைய பயணத்தின் முடிவு வந்துவிட்டது. இதை உணர்ந்ததும் அவ ருக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஆனால் இப்பொழுது அவர் குரல் நடுங்கியது. கண்களில் சீற்றம் தெரிந்தது. நகரத்தைப் பற்றியும் மனிதகுலத்தை பற்றியும் சொல்லத் தொடங்கியதும் அவரது கோபம் பொங்கியது. அவர் நகரத்திற்குள் நுழைந்தபோது அவர் காண நேர்ந்த காட் சியை அவர் அதற்கு முன் பார்த்ததில்லை. கனவி லும் நினைத்ப் பார்த்ததுமில்லை. இந்த இடத்தில், தன் வயதான காலத்தில், வாழ்க்கையில் முதன் முறையாக சாத்தானின் வலிமையைக் கண்கூடாகக் கண்டார். மேலும், ஏற்றத்தாழ்வின் ஆதிக்கத்தையும், மனித குலத்தில் வேரூன்றிப்போன பலவீனத்தையும் புரிந்துகொண்டார்.
துரதிஷ்டவசமாக, அவர் நுழைந்த முதல் வீடு பாவங்களின் இருப்பிடமாக இருந்தது. அங்கே பெரும் பணம் படைத்த ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் குடித்துக் கும்மாளமிட்டுக் கொண்டு இருந்தார்கள். போதை தலைக்கேறி பாட்டுப் பாடியதுடன், அதிர்ச்சியளிக்கக்கூடிய பயங்கரமான விஷயங்களை துணிச்சலாகப் பேசிக்கொண்டு இருந்தார்கள். அவற்றை கடவுளுக்கு பயப்படும் எவரும் உச்சரிக்கக்கூடத் தயங்குவார்கள். அவர்கள் கட்டற்ற சுதந்திரத்துடனும், சந்தோஷத்துடனும், துணிச்சலடனும் இருந்தார்கள். அவர்களுக்கு கடவுள் மீதோ, பிசாசு மீதோ, சாவைப் பற்றியோ பயம் இல்லை. அவர்கள் நினைத்ததை செய்தார்கள்; பேசினார்கள். அவர்கள் இஷ்டப்படி எங்கு செல்ல வேண்டும் என்று தோன்றியதோ அங்கெல் லாம் சென்றார்கள். பொன்னிறமாய் காட்சியளித்த மது, நிச்சயமாக நல்ல வாசனையுடனும் சுவை யோடும் தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அதைக் குடித்தவர்கள் எல்லோரும் உற்சாகமாகச் சிரித்ததோடு மட்டுமல்லாமல் மீண்டும் அதை ஆர்வத்தோடு அருந்தச் சென்றார்கள். எத்தகைய மயக்கும் தன்மை அச்சுவையில் மறைந்துள்ளது என மதுவுக்குத் தெரிந்ததுபோல், குடித்தவர்களிடையே அது சிரிப்பை வரவழைத்து, குதூகலத்தை மேலும் அதிகமாக்கியது. அழுவதையும், கோபத்தில் பொருமுவதையும் விட்டு விட்டு அந்த வயதான துறவி தான் பார்த்ததையெல்லாம் விளக்கமாகச் சொல்லிக்கொண்டே போனார்.
“குடித்து கொண்டாட்டத்தில் இருந்தவர்களின் மத்தியில் ஒரு மேசை போடப்பட்டு, அதன்மீது அறைகுறை ஆடையுடன் ஒரு பெண் நின்றிருந்தாள். அவளுடைய வனப்பை விட உற்சாகமூட்டக் கூடிய உன்னதமான விஷயத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாது. இளமையாக இருந்த அவளுக்கு நீண்ட கூந்தல், கருப்பு கண்கள், தடித்த உதடு கள். வெட்கத்தை மறந்து அகந்தையோடு காட்சியளித்த அந்த பேய், பால்போல் வெண்மையான பற்களைக் காட்டி, “நான் எவ்வளவு அழகாகவும் திமிரோடும் இருக்கிறேன் பார்” என்று சொல்வது போல் இருந்தது. பட்டுச் சரிகையிலான அழகான ஆடைகள் அவள் தோள்களில் இருந்து சரிந்தன. ஆனால் உடையின் அடியில் மறைத்துவைக்க முடியாத அவளது அழகு, இளவேனில் காலத்தில் பூமியில் முளைத்து எழும் பசும்புல்லைப்போல, மடிப்புகள் வழியாக, ஆர்வமுடன் வெளியேறியது. வெட்கத்தை மறந்த அப்பெண் மதுவை அருந்திய வுடன் பாடல்களை பாடியபடி அங்குக் கொண்டாட் டத்தில் கலந்து கொண்டவர்களிடம் தன்னையே அர்ப்பணித்தாள்,
சீற்றத்தோடு கைகளை வெகுவாக ஆட்டியவாறு பேசிய அந்தத் துறவி, மேலும் அவர் பார்த்த பந்தய மைதானங்கள், எருதுச் சண்டை, நாடக அரங்குகள் ஆகிய விஷயங்களை விவரித்துக் கொண்டே போனார்.
மேலும், நிர்வாண நிலையில் உள்ள பெண்ணின் வடிவங்களைக் களிமண்ணால் செய்து வண்ணம்பூசி வைக்கப்பட்டிருந்த கலைஞர்களின் பயிற்சிக் கூடங்களைப் பற்றி விரிவாக விளக்கினார். அவர் பேச்சில் வசீகரமும் ஓசை நயமும் இருந்தன. ஏதோ கண்ணுக்குப் புலப்ப டாத ஓர் இசைக்கருவியை வாசிப்பது போல், அவர் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். ஆச் சரியத்தில் ஸ்தம்பித்துப்போன துறவிகள், அவரு டைய பேச்சை ஆர்வமாகக் கேட்டு ஆனந்தத்தில் மெய்மறந்த நிலையில் இருந்தனர். பிசாசின் அத்தனை வனப்புகளையும், வஞ்சகத்தின் அழகையும், மோசமான பெண்ணின் கவர்ந்திழுக்கும் வடிவத்தையும் விரிவாக விவரித்து முடித்த பிறகு, சாத்தானைச் சபித்துவிட்டு, திரும்பவும் தன் அறைக்குள் சென்று மறைந்து போனார்.
அடுத்த நாள் காலை அறையை விட்டு வெளியே வந்து பார்த்தபோது, அவருடன் இருந்த துறவிகளில் ஒருவரைக்கூட மடத்தில் பார்க்க முடியவில்லை. எல்லோரும் நகரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள்.
– இக்கதை, 1888ஆம் ஆண்டு, முதன் முதலில் நியூ டைம்ஸ் இதழில் வெளிவந்தது.
– ஆன்டன் செக்காவ் ஆகச்சிறந்த கதைகள், தமிழில்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர், முதற் பதிப்பு: 2019, தடாகம் பதிப்பகம், சென்னை.