திருமணம்
கதையாசிரியர்: சு.குருசாமி
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 12, 2026
பார்வையிட்டோர்: 4,141
(1947ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24
பத்தொன்பதாவது அத்தியாயம்
“நான் ஏன் அடிக்கடி இதைப்பற்றிப் பேசவேண்டும்? இப்படிப் பேசுவதனால் நீங்கள் என்ன நினைத்துக் கொள்கிறீர்களோ, தெரியவில்லை. ஒரு வேளை நம்ம ருக் மணியை எங்கள் வகையில் கலியாணம் செய்து கொடுக்க விரும்புகிறேன் என்று நினைத்துக் கொள்கிறீர்களோ, என்னமோ.உங்கள் பெண்ணை நீங்கள் எங்குகொடுத்தால் எனக்கென்ன? நான் இனி இந்தப் பேச்சே எடுப்பதில்லை. உங்கள் பாடு உங்கள் பெண் பாடு. உங்களுக்கில்லாத த ஆத்திரம் எனக்கென்ன வந்தது?” என்றாள் சிவகாமி.
”கோபித்துக் கொள்ளாதேடி அம்மா. குற்றாலத்தில் துவரை இருந்தோம். அப்புறம் இங்கு வந்ததும், அந்த வேலை இந்த வேலை என்று நாள் கழிந்து விட்டது. இனி மேல் இந்த விஷயத்தைப் பற்றிக் கவனிப்போம்” என்றார் பகவான் செட்டியார்.
“நீங்கள் கவனித்தாலும் சரி, கவனிக்காவிட்டாலும் சரி உங்கள் பெண் நல்லாயிருக்க வேண்டும் என்று உங்களுக்கில்லாத கவலை எனக்கென்ன?” என்றாள் சிவகாமி.
சிவகாமி தன் மூத்தாள் பெண்ணின் கலியாணத்தில் இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொண்டதைப் பார்க்கப் பகவான் செட்டியாருக்கு மிகவும் சந்தோஷமாயிருந்தது.
”அது சரி நாம் இவ்வளவு தூரம் பேசுகிறோமே. ருக்மணிக்கு மாப்பிள்ளை பிடித்திருக்கிறதா என்று அவளுடைய அபிப்பிராயத்தையும் தெரிந்துகொள்ள வேண்டாமா?”
“தெரிந்துகொள்ளுங்கள், சும்மா இருங்கள்” என்று சொல்லிச் சிவகாமி விரைவாகச் சமயலறைக்குப் போய் விட்டாள். சிறிது நேரத்திற்குப் பின் அங்கிருந்து சத்தம் வந்தது. “இவர் தன் மகளுக்கு மாப்பிள்ளை பிடித்திருக் கிறதா என்று அவளுடைய அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்வதற்குள் அங்குக் கலியாணமே முடிந்துவிடும்!”
“போகலாம் என்று தான் சொல்கிறேனே சிவகாமி உனக்கு ஏன் இத்தனை கோபம் வருகிறது?”
சமயலறையிலிருந்து சிவகாமி மீண்டும் கணவனிடம் வந்தாள். ”நான் எதற்காகச் சொல்கிறேன் என்றால், அங்கே பெண் வீட்டுக்காரர்கள் நெருக்கிக் கொண்டிருக் கிறார்கள். நான் அங்கே இருந்த பொழுதே சாதகம் பிடித் திருப்பதாக இரண்டொரு பெண்வீட்டார் தெரிவித்திருந் தார்கள். அவர்கள்வந்து பேசிமுடித்துவிட்டால், அப்புறம் நம்முடைய எண்ணம் என்னவாகிறது? அல்லது நாம் முன்னாடியே இதைப்பற்றி ஒரு வார்த்தை அவர்களுக்குச் சொல்லி யிருக்கிறோமா அதுவுமில்லை. நமக்கு இம்மாதிரி அபிப்பிராயமிருக்கிற விஷயமும் அவர்களுக்குத் தெரி யாது. தெரிந்தாலாவது இதைக் கருதிக்கொண்டு அவர்கள் வேறு இடத்தைக் கவனிக்காமலிருப்பார்கள். அதுவுமில் லையே. உங்களுக்கும், ருக்மணிக்கும் மாப்பிள்ளை பிடிக்கா விட்டால், நான் இவ்வளவு தூரம் பேசமாட்டேன். உங்க ளுக்கும் மாப்பிள்ளையைப் பிடித்திருக்கிறது, அவளுக்கும் பிடித்திருக்கிறது. அப்படி இருக்கும்போது, அந்தக் காரி யத்தைச் சீக்கிரம் முடிவு செய்துவிட்டால் என்ன என்று தான் கேட்கிறேன்.”
இவ்வளவு தூரம் சிவகாமி சொன்னதன் பிறகு, பகவான் செட்டியார், பஞ்சாங்கத்தைப் புரட்ட வாரம் பித்தார்.
“இனி, நாளும் நக்ஷத்திரமும் பார்க்கப் போகிறீர் களாக்கும்!” என்று சிவகாமி மீண்டும் சமயலறைக்குப் போய் விட்டாள்.
“நல்லவேளையாக நாளைக்கே நல்ல நாளாயிருக்கிறது. சிவகாமி. நாளைக்குப் புறப்பட்டுப் போய், உடனே பேசி முடித்துக் கொண்டு வந்துவிடுகிறேன்” என்றார் பகவான் செட்டியார்.
மறு நாளிரவு சுந்தரஞ் செட்டியார் வீட்டிற்குள் பகவான் செட்டியார் நுழைந்தபோது, வாருங்கள், வாருங்கள்! சரியான சமயத்தில் வந்து சேர்ந்தீர்கள். பாலகிருஷ்ணனின் கலியாணப் பேச்சு நடந்து கொண்டி. ருக்கிறது’ உட்காருங்கள் என்று சுந்தரஞ் செட்டியார், அவரை உபசரித்தார்.
ஹாலில் சுந்தரஞ் செட்டியாரும் அவருக்கு முன்னால் மதுரை, உமையொருபாகஞ் செட்டியாரும், அவருடன் வந்த சிலரும் உட்கார்ந்திருந்தார்கள். பாலகிருஷ்ணனின் தந்தை ராமநாதஞ் செட்டியாரும் கூடவிருந்தார். அதைப் பார்த்ததும் பகவான் செட்டியாருக்கு ‘வெறுக்’ கென்றி ருந்தது. ‘சரியான சமயத்திலா வந்திருக்கிறேன்? சமயம் தவறி விட்டதே!’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டார்.
உட்கார்ந்திருப்பவர்களுக்கு மத்தியில் ஒரு தாம்பா ளத்தில் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம், பூ முதலியவை வைக்கப்பட்டிருந்தன: அவைகளைப் பார்த்ததும் பகவான் செட்டியாருக்கு ஒரு யோசனை தோன்றியது. சுந்தரஞ் செட்டியாரை ஜாடை செய்து வீட்டிற்குள் கூப்பிட்டார்.
“இன்னும் வெற்றிலை பாக்குப் பரிமாற வில்லை யல்லவா ?” என்று உள்ளே சென்றதும் பகவான் செட்டியார் சுந்தரஞ் செட்டியாரைக் கேட்டார்.
“ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்? என்ன விஷயம்?”
“இன்றைக்கு நல்லநாள் என்று நானும் அதே காரியத்திற்காகத்தான் வந்திருக்கிறேன்.”
சற்றுத் தூரத்தில் நின்று கொண்டிருந்த லக்ஷ்மி யம்மாள், “நான் நினைத்தேன்! சிவகாமி அன்று என்னி டம் ஜாதகம் கேட்ட பொழுதே அப்படித்தான் நினைத் தேன். ஆனால் இப்பொழுது என்ன செய்வது? காரியம் மிஞ்சி விட்டதே” என்றாள்.
“நீங்கள் இதைப்பற்றி முன்பே பிரஸ்தாபித்திருந் தாலும், நாங்கள் பேசாமலிருந்திருப்போம். இப்பொழுது திடீரென்று காரியம் முடியப்போகிற சமயத்தில் வந்திருக்கிறீர்களே!” என்றார் சுந்தரஞ் செட்டியார்.
“நீங்கள் இல்வளவு சீக்கிரமாக உங்கள் பேரன் கலி யாணத்தை முடிக்க நினைப்பீர்கள் என்று நான் எண்ணவில்லை.”
“தாயில்லாப் பிள்ளை, பாருங்கள். எல்லாங் காலா காலத்திலே முடிந்து விட்டால் நல்லது என்று நினைத்தேன். பின்னால் எதெது எப்படி நடக்குமோ, யார் கண்டது?” என்றார் சுந்தரஞ் செட்டியார்.
“இப்பொழுது யோசனை?”
“யோசனை என்ன? கலியாணத்திற்கு எல்லோரும் வந்து சேருங்கள்.”
பகவான் செட்டியார் முகத்தில் ஏமாற்றம் படர்ந்தது. சிறிது நேரம் அசைவற்று நின்றார். அவருடைய நிலைமை யைப் பார்ப்பதற்குப் பரிதாபகரமாயிருந்தது. இதையெல் லாம் கவனித்துக் கொண்டிருந்த லக்ஷ்மியம்மாள், அவர் கள் சமீபத்தில வந்து, “பாவம்! அவர் இதற்காகவே திருநெல்வேலியிலிருந்து மெனக்கட்டு வந்து, ஏமாற்றம் அடைந்து போவது நல்லாயில்லை” என்றாள்.
“இப்பொழுது நாம் என்ன செய்ய முடியும்?”
“இன்னும் வெற்றிலை பாக்குப் பரிமாற வில்லை யல்லவா?”
“இருந்தாலும், பேசின பேச்சிலிருந்து மாறுவது நன்றாயிருக்கிறதா?”
“ஒன்றுக்குள் ஒன்று பின்னிக்கொண்டு கிடக்கும்; அதை, இதை யோசிக்காமல், இவர் பெண்ணைத்தான் முடியுங்கள்” என்றாள் லக்ஷ்மி யம்மாள்.
“அவர்களுக்கு என்ன சொல்வது?”
“சகுனம் சரியில்லை. ஒரு அசந்தர்ப்பம் நடந்து விட்டது, என்று சொல்லிவிடுங்கள்”
இருவரும் ஹாலுக்குள் நுழைந்தனர். பகவான் செட்டியார் பேசாமல் தலை கவிழ்ந்து உட்கார்ந்து கொண்டார். சுந்தரஞ்செட்டியார் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார்.
“நம்ம பேச்சு இப்படி முடியும் என்று நான் நினைக்க வில்லையே !”
“என்ன?” என்று உமையொருபாகஞ் செட்டியார் ஆவலுடன் கேட்டார்.
“நம்முடைய பேச்சை இத்துடன் முடிக்க வேண்டியதுதான்”
“என்ன விஷயம்?”
“சகுனம் சரியில்லை. ஒரு அசந்தர்ப்பம் நடந்து விட்டது!”
“நன்றாக விட்டுப் பேசுங்களேன்? என்ன அசந்தர்ப்பம் நடந்துவிட்டது?”
”சகுனம் சரியில்லை என்றால் விடுங்களேன்,ஐயா. எல்லாவற்றையும் அவசியம் விவரித்துச் சொல்லத்தான் வேண்டுமோ?” என்றார் பகவான் செட்டியார்.
உமையொருபாகஞ் செட்டியாரும், அவருடன் வந்தி ருந்தவர்களும் விஷயம் இன்னதென்று யூகித்துக் கொண்டார்கள்.
“அபசகுனம் ஒன்றுமில்லை அண்ணே; இந்த மனு ஷன் இந்தச் சமயத்தில் வந்து சேர்ந்தானல்லவா? அது தான் அபசகுனம்! எழுந்திருங்கள் அண்ணே, போக லாம் மனுஷன் பேசின பேச்சு மாறும் பொழுது அப்புறம் என்ன இருக்கிறது? ஞானியாம்! அறிவாளியாம்! எழுந்திருங்கள் அண்ணே !” என்றார் ஒருவர்.
“என்னய்யா பேசினோம், மாறிவிட்டோம்? வெற் றிலை பாக்குப் பரிமாறினால் தான் ஐயா, பேச்சு ஊர்ஜிதமாகும்? எத்தனையோ பேச்சுக்கள் பேசுவது போல் இதையும் பேசினோம். பிடிக்கவில்லை என்றால், பேசாமல் போங்களேன்; வார்த்தை வித்தியாசமாய் ஏன் பேசுகிறீர்கள்?” என்றார் ராமநாதஞ் செட்டியார்.
சுந்தரஞ் செட்டியார் ஒன்றும் பேசவில்லை. தான் செய்வது சரியல்ல என்று அவருக்குத் தோன்றியது.
“என்னண்ணே யோசனை? இனி என்ன நமக்கு இங்கு இருப்பு? எழுந்திருங்கள்!” என்று மதுரைக்காரர் ஒருவர் உமையொருபாகஞ் செட்டியாரைப் பார்த்துச் சொன்னார்.
“யோசனை ஒன்று மில்லை. இதைப் போல மாப்பிள்ளை எத்தனையோ உண்டு உலகத்தில். ஆனால் சுந்தரஞ்செட்டி யாரைப் போன்ற மனுஷர் இவ்வளவு சுலபமாய் வாக்கு மாறுவார் என்று நான் நினைக்கவில்லை” என்று சொல்லிக் கொண்டே உமையொருபாகஞ் செட்டியார் எழுந்தார்.
“உலகமே அப்படித்தான் அண்ணே, சொல்லொன்று, செயலொன்று!” என்று சொல்லிக் கொண்டே மதுரைக்காரர் யாவரும் எழுந்து போய் விட்டார்கள்.
அரைமணிக்கொரு முறை வண்டி மதுரைக்குச் சென்று கொண்டிருந்தது. அடுத்த ரயிலிலேயே உமையொருபாகஞ் செட்டியாரும், அவருடைய சகாக்களும் புறப்பட்டு விட் டனர். ரயிலில் விளக்கு வெளிச்சத்தில் பார்த்தபோது, உமையொருபாகஞ் செட்டியார் மிகுந்த கவலையுடனிருப் பது தெரிந்தது. ‘ஏன் அண்ணே, கவலைப்படுகிறீர்கள்? நீங்கள் சொன்னது போல் இவனை விட அழகானவனும் படிச்சவனும் எத்தனைபேர் இருக்கிறான்கள்! ஏன் கவலைப் படுகிறீர்கள்?’ என்று ஒருவர் கேட்டார்.
“அது நிஜந்தான். ஆனால் இந்தப் பயல் பள்ளிக்கூட வருஷ விழாவில், அன்று பேசினானல்லவா? அதைப் பார்த் ததிலிருந்து அந்தச் சின்னக் கழுதை இவனைத்தான் கட்டிக் கொள்வேன் என்று பிடிவாதம் செய்கிறது. நான் இங்கு வருவதற்கு முன்பு, இன்னொரு மாப்பிள்ளையைப் பேசலாம் என்று கூட நினைத்தேன். அதற்கு அந்தக் கழுதை இடங்கொடுக்கவில்லை,” என்றார் உமையொரு பாகஞ் செட்டியார்.
நிற்க, அங்கே சுந்தரஞ் செட்டியார் வீட்டில் கலியாணப் பேச்சு தொடர்ந்து நடந்தது. பேச்சுக்கள் முடிந்து வெற்றிலை பாக்கும் பரிமாறப்பட்டது. லக்ஷ்மியம்மாள் மிக்க சந்தோஷமடைந்தாள்.
பகவான் செட்டியார் திருநெல்வேலிக்குச் சென்று, விஷயங்களை எல்லாம் விஸ்தாரமாகச் சொன்ன போது “நான் சிவகாமியும் அதிகச் சந்தோஷமடைந்தாள். சொன்னேனா என்ன? கொஞ்சந் தாமதித்திருந்தால் அப் புறம் நமக்கு அந்தச் சம்பந்தம் கிடைத்திருக்குமா?” என்றாள்.
சகுந்தலையையும், ருக்மணியையும் சீர்தூக்கிப் பார்த் தால், சகுந்தலையே அதிக அழகானவள். அவளைத்தான் பாலகிருஷ்ணனுக்கும் அதிகம் பிடித்திருந்தது. ஆயினும் அவனும் இந்தச் சம்பந்தத்தில் திருப்தியே அடைந்தான்.
இருபதாவது அத்தியாயம்
கலியாண ஏற்பாடுகள் இரண்டு வீடுகளிலும் ஆரம்பமாயின. சிவகாமி தன்னுடைய சொந்தப் பெண்ணின் கலியாணத்தைப் போலவே அதில் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டாள். சீர்களெல்லாம் மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டுமென்று அவள் தன் கணவரிடங் கூறி னாள். இம்மாதிரி ஒரு நிலைமை ஏற்படுத்திக் கொண்டதில் பகவான் செட்டியாருக்கு மிகுந்த சந்தோஷம் ஏற் பட்டது. ருக்மணியின் தாயாருடைய ஆபரணங்கள் எல்லாம் அவளுக்காகவே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவைகளே ஏராளமாயிருந்தன. ஆயினும் இப்பொழுது பல புதிய நகைகள் செய்யப்பட்டன. அதில் சிவகாமி அதிக உற்சாகங் காட்டினாள். மன நிறைவுடனும், சந்தோஷத் துடனும் எல்லாக் காரியங்களையும் செய்தாள்.
“இந்த வைரப் பதக்கங்களைப் பார் சிவகாமி, வாங்கலாமா? நன்றாயிருக்கிறதா?” என்று பகவான் செட்டியார் கேட்டார்.
“நன்றாய்த்தானிருக்கிறது. என்ன விலை சொல்லு கிறார்கள் ?” என்று சொல்லிக்கொண்டே அவ்விரண்டு பதக்கங்களில் ஒன்றை எடுத்து ருக்மணியின் கழுத்தில் போட்டுப் பார்த்தாள்.
”ஐந்நூறு ரூபாய் சொல்கிறான். கொஞ்சங் குறைக்கலாம் என்று நினைக்கிறேன்.”
”வாங்கிவிடுங்கள். நன்றாய்த்தானிருக்கிறது.”
“இரண்டையும் வாங்கிவிடலாம் என்று நினைக்கிறேன். உனக்கு வெள்ளைப் பதக்கம் இல்லை யல்லவா?”
“எனக்கெதற்கு வைரப் பதக்கம்? அவளுக்கு மட்டும் வாங்குங்கள் போதும்,” என்று கூறினாள் சிவகாமி.
மகளுடைய கலியாணத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு, மனைவிக்கும் இரண்டொரு நகைகள் வாங்கிப் போட்டால், அவளுக்கு மிகுந்த உற்சாகமாயிருக்கு மென்று பகவான் செட்டியார் நினைத்தார். ஆனால் இக் கலியாணத்தில் உற்சாகங் கொள்வதற்கு அவளுக்கு இம்மாதிரி சில்லறை விஷயங்கள் தேவையாயில்லை.
ருக்மணிக்குச் செய்வதெல்லாம் பாலகிருஷ்ண னுக்கே செய்வதாக அவள் மதித்தாள். ருக்மணியை அலங் கரித்தால், அவ்வலங்காரத்தை முடிவில் அனுபவிக்கப் போகிறவன் பாலகிருஷ்ணன் தானே! அதை நினைத்துச் சிவகாமி இன்பமடைந்தாள். பாலகிருஷ்ணனை அவளால் கலியாணம் பண்ணிக் கொள்வதற்கு முடியவில்லை. அந்த ஆனந்தம் அவளுக்குக் கொடுத்து வைக்கவில்லை. அவ்விஷ யம் தீர்மானமாகிய பொழுதே, பாலகிருஷ்ணனுக்கு நல்ல பெண்ணாய்ப் பார்த்துக் கலியாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று நிச்சயித்தாள். அதை நிறைவேற்று வதற்குரிய சாதனமும் தன் கையிலேயே இருப்பதை யறிந்தபோது, அவள் மிக்க மகிழ்ச்சி கொண்டாள். அவள் அவனுக்கு மாமியாராய் விடலாம். எவ்வளவு பெருமை யுள்ள பதவி! இரண்டாந்தாரமாய் வாழ்க்கைப் படுவதி லும் ஒரு அனுகூலம் இருக்கத்தான் செய்தது. அவள் முதல்தாரமாய் யாருக்காவது வாழ்க்கைப் பட்டிருந்தால், பாலகிருஷ்ணனுக்கு மாமியாகும் பாக்கியம் கிடைக்குமா? பாலகிருஷ்ணனும், அவளும் சதிபதியாயிருக்கும் இன்பத் தைத்தான் ஈஸ்வரன் அவளுக்கு அளிக்கவில்லை. மாமியாராகவாவது இருக்கலாமல்லவா? பாலகிருஷ்ணனுடன் ஏதாவது ஒரு வகையில் சம்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவளுடைய உள்ளம் விழைந்தது.
கலியாணமான பின்பு பாலகிருஷ்ணன் மேல் படிப் பிற்குத் திருநெல்வேலிக்கே வருவான். அவளுடைய வீட்டிலேயே வசிப்பான். உண்பான்; உறங்குவான்.அதெல்லாம் எவ்வளவு இன்பகரமாயிருக்கும் என்று சிவகாமி நினைத்தாள்.
பாலகிருஷ்ணன் என்ன நினைத்தான்? அவனுக்கும் இந்தச் சம்பந்தம் மிகவும் பிடித்திருந்தது. அது அவனுக்கு அனேக விதமான கற்பனைகளுக்கு இடங் கொடுத்தது.
“ஜாதகம் மிகவும் பொருத்தமா யிருக்கிறதென்று பகவான் செட்டியார் சொன்னாரே. அவர் என் ஜா த கத்தை வாங்கிப் போயிருந்தாரா, பாட்டி?” என்று ஒருநாள் பாலகிருஷ்ணன் கேட்டான்.
“அவர் வாங்கிப் போகவில்லை. சிவகாமி போன தடவை வந்தபோது வாங்கிக்கொண்டு போயிருந்தாள்.”
அப்படியானால் சிவகாமியின் தூண்டுதலின் பேரில் தான் இக்கலியாணம் முடிவாயிற்றோ? அப்படித்தா னிருக்கவேண்டும். தன் மூத்தாள் மகளை அவனுக்குக் கலியாணம் பண்ணிக் கொடுக்க வேண்டுமென்று சிவகாமிக்கு ஏன் ஆர்வம் ஏற்பட்டது ? இதே கேள்வி அவனுடைய மனதில் மீண்டும் மீண்டும் ஏற்பட்டு இன்பத்தை உண்டாக்கியது.
அவன் ஏன் இக் கலியாணத்திற்கு இசைந்தான்? அதில் ஏன் சந்தோஷமடைந்தான்? ருக்மணியையும், சகுந்தலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், சகுந்தலைதா ன் அதிக அழகி. குணம்? ஒருவருடைய குணமும் அவனுக்கு அப்பொழுது தெரியாது. அவர்களுடைய வெளி யுருவத்தை மட்டுமே அவன் அப்பொழுது பார்த்தான்: அதில் சகுந்தலைதான் மேம்பட்டவள். அங்ஙனமிருக்க ருக்மணியைக் கலியாணம் செய்துகொள்ள ஏன் அவன் சம்மதித்தான்? இந்தக் கேள்வி திரும்பத் திரும்ப அவனுடைய உள்ளத்தில் எழுந்தது. இதற்குச் சுலபத் தில் விடை கிடைக்கவில்லை. கடைசியில், உறவுக்குள் உறவு, அதில் பல சௌகரியங்கள் உண்டு என்று தன் மனத்தைச் சமாதானப் படுத்திக் கொண்டான் பால கிருஷ்ணன்.
இங்ஙனமிருக்கையில், திடீரென்று ஒருநாள் சிவகாமி வெற்றிபுரம் வந்து சேர்ந்தாள்.
இன்றைக்குக் காலையில் எழுந்ததும், திடீரென்று ஒரு விபரீத ஆசை தோன்றியது, அம்மா, உன்னைப் பார்க்காவேண்டும் என்று என்று நினைத்துக் கொண்டேன். உடனே புறப்பட்டுவிட்டேன்!” என்றாள்.
இதைக் கேட்டதும் லக்ஷ்மியம்மாள் மிக்க சந் தோஷம் அடைந்தாள்.
“உன் புருஷன் ஒன்றும் சொல்லவில்லையா?”
“அம்மாளைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது என்றேன்; போய்விட்டுவா? என்றார். வேறென்ன சொல்வார்?”
“உன் புருஷனைக் கோயிலில் வைத்துக் கும்பிட வேண்டும், சிவகாமி. உனக்குக் கிடைத்தது போல், வேறு யாருக்குக் கிடைக்கும்?” என்றாள் லக்ஷ்மியம்மாள்.
” ஏன், உனக்குக் கூடக் கிடைக்கவில்லையோ?” என்று அந்தச்சமயம் வீட்டிற்குள் நுழைந்த சுந்தரஞ் செட்டியார் சிரித்துக்கொண்டே மனைவியைப் பார்த்துக் கேட்டுவிட்டு, சிவகாமியின் யோக க்ஷேமங்களை விசாரித்தார்.
சுந்தரஞ் செட்டியார் சாப்பிட்டுவிட்டுப் போன பின்பு, சிறிதுநேரத்தில் பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். எதிர்பாராதவிதமாய் வீட்டில் சிவகாமியைக் கண்டதும் திடுக்கிட்டு விழித்தான்.
சிவகாமி தலைகவிழ்ந்து கொண்டிருந்தாள். “வந்தியா சிவகாமி” என்று பாலகிருஷ்ணன் கேட்டான். ‘ஆம்’ என்றாள் சிவகாமி. பாலகிருஷ்ணன் போய்விட்டான்.
வெற்றிபுரத்திற்குச் சிவகாமி வந்து பல நாட்களாய் விட்டன. ஒவ்வொரு நாளும் தான் மறுதினம் ஊருக் குப் புறப்படுவதாகச் சிவகாமி சொல்வாள். ஆனால் ஏனோ இன்னும் புறப்படவில்லை.
பாலகிருஷ்ணன் ஒரு நாள் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்துகொண்டிருந்தான்.
“நாளைக்கு நான் கட்டாயம் ஊருக்குப் புறப்பட வேண்டும் அம்மா. வந்து வெகு நாளாச்சு ” என்றாள் சிவகாமி.
இதுகாறும் அவள் இம்மா திரி சொல்லியபோதெல் லாம், “இன்னும் இரண்டு நாளைக்கு இருந்துவிட்டுப் போகலாம். இப்பொழுதென்ன அவசரம்?” என்றே லக்ஷ்மியம்மாள் சொல்லிக்கொண்டு வந்தாள். ஆனால் இப்பொழுது அவளுக்கும் சிவகாமி புறப்படவேண்டியது தான், வந்து வெகுநாளாச்சு என்று தோன்றியது. ஆகை யினால், “சரி, புறப்படு. இனித்தான் அடிக்கடி இங்கு வருவதற்குச சந்தர்ப்பம் ஏற்படுமல்லவா?” என்றாள்.
அவர்களுடைய பேச்சை அவன் கேட்டும், கேட்காதவன் போல் போய்விட்டான்.
அன்றிரவு அவன் சாப்பிட்டுவிட்டுத் தன் படுக்கை யில் வந்து படுத்துக்கொண்டான். அவனும் தாத்தாவும் மாடியில் தூங்குவது வழக்கம். பாட்டியும், சிவகாமியும் கீழே ஹாலில் தூங்குவார்கள். சிவகாமி வீட்டில் இருக்கும் வரைக்கும் இதுதான் வழக்கமாய் இருந்தது. அவளைக் கலியாணம் செய்து கொடுத்த பிறகு, அதில் ஒரு சிறு மாறுதல் ஏற்பட்டது. கீழே தனியே படுத் திருக்க விரும்பாமல், சிற்சில சமயம் பாட்டியும் மாடிக்கு வந்து விடுவாள். சிவகாமி வந்திருக்கும் சமயங்களில் பாட்டி கீழேயே அவளுடன் படுத்துக் கொள்வாள்.
அன்றிரவு சிவகாமி கீழே ஹாலில் தான் படுத்திருந்தாள். பாலகிருஷ்ணனுக்கு அன்று தூக்கமே பிடிக்க வில்லை. சிவகாமிதான் அன்றிரவு அவனுக்குச் சாதம் பரி மாறினாள். அதுவா காரணம் அவனுக்குத் தூக்கம் வராத தற்கு? படுக்கையில் புரண்டு கொண்டே கிடந்தான். அவனுக்குத் தூக்கமே வரவில்லை. வீட்டுக் கடிகாரம் மணி அடிக்க வாரம்பித்தது. ஒவ்வொன்றாய் எண்ணிணான். பதி னொருமணிதானா ஆயிற்று? வெகுநேரம் ஆனது போல் தோன்றியதே! போய்க் கடிகாரத்தைப் பார்த்தான் பதினொன்று தான் ஆகியிருந்தது. படுக்கையில் வந்து மீண்டும் படுத்தான். கடிகாரத்தின் சத்தம் வெகு கோரமாய்க் கேட்டது. அவனுக்குத் தூக்கம் வரவில்லை! அக்கடிகா ரத்தின் சத்தத்தினால் தான் அவனுக்குத் தூக்கம் வர வில்லையோ என்று நினைத்தான்.
அடுத்த அறையில் தாத்தா தூங்கிக் கொண்டிருந்தார். அவருடைய குறட்டைச் சத்தமும் அவனுக்குக் கேட்டது. ஆனால் அது கடிகாரத்தின் ‘டக் டக்’ என்ற சத்தத்தைப் போல் அவ்வளவு கோரமாக இல்லை. அவனுக்கு ஜலபாதைக்கு வந்தது. மீண்டும் எழுந்து சென்றான். அவ்வேலையை முடித்துக் கொண்டு படுக்கையில் வந்து படுத்தான். தூக்கம் வரவில்லை !
கீழே அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய அமைதியான சுவாசத்தின் சத்தங் கூட அச் சலனமற்ற இரவில் அவனுக்குக் கேட்டது. அவன் படுத்திருந்த இடத்திற்கு நேர் கீழேதான் அவர்கள் படுத்திருந்தார்கள்.
கடிகாரம் மணி அடித்தது. அவன் எண்ணினான். மணி பன்னிரண்டு! அமைதியான இரவு!
திடீரென்று ஒரு செருமல் சுத்தம் கேட்டது. அது யாருடைய செருமல்? அது கீழே இருந்து வந்தது. அவளு டைய செருமல் தான் அது! அப்படியானால் ? அவளுக்குந் தூக்கம் பிடிக்கவில்லையோ ? அல்லது மணி அடித்த சத் தத்தில் விழித்திருப்பாளோ?
பாலகிருஷ்ணன் கண்ணை மூடினான். அதென்ன சத்தம்? அது மிகவும் மெதுவாய் இருந்தது. மாடிப்படி யின் ஒவ்வொன்றின் மீதும் மெதுவாய் யாரோ ஏறுவது போல் தோன்றிற்று. பாலகிருஷ்ணன் கூர்ந்து கவனித் தான். மாடிப்படிகள் ஏறி முடிந்தாயிற்று. அதற்குமேல், சத்தம் அவனுடைய படுக்கையை நோக்கி வருவது போல் இருந்தது.படுக்கையை அணுகிவிட்டது. பாலகிருஷ்ணன் திடுக்கிட்டு விழித்தான். ஒன்றையும் காணோம்! சுற்று முற்றும் பார்த்தான்; ஒன்றையும் காணோம்! அப்படி யானால் அச் சத்தம் என்ன? வெறும் பிரமைதானோ?
அவனுக்கு மீண்டும் ஜலபாதைக்கு வந்தது. எழுந்து போனான். அவனுடைய நெற்றி யெல்லாம் கொதித்தது. தலையைத் தொட்டுப் பார்த்தான். உஷ்ணமா யிருந்தது. மறுபடியும் வந்து படுத்துக்கொண்டான்.
கடிகாரம் மணி அடித்தது. மணி ஒன்று!
படுக்கையிலிருந்து மெதுவாய்ப் பாலகிருஷ்ணன் எழுந்திருந்தான். மெதுவாய்க் கால்களைக் கீழேவைத்து நடந்து சென்றான். எங்கே? மாடிப் படிகளில் பூனைபோல் காலை வைத்தான். ஒவ்வொரு படியாய் இறங்கினான். விளக்கு மங்கலாய் எரிந்து கொண்டிருந்தது.
அவர்கள் படுத்திருந்தார்கள்!
அவ்விடத்தை அணுகினான். சிவகாமி தன் கையை. லக்ஷ்மியம்மாளின் மீது போட்டு அணைத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். ஆம், தூங்கிக் கொண்டிருந்தாள். அப்படியானால் அச் செருமல் ! அவளுடையதில்லையோ ? அல்லது தூக்கத்திலேயே செருமினாளோ?
பாலகிருஷ்ணன் மெதுவாய் அவ்விடத்தை விட்ட கன்று, மெள்ளக் கதைவைத் திறந்தான். வெளியே நக்ஷத் திரம் பூத்த வானம். குளிர்ச்சியான காற்று வீசிக்கொண்டிருந்தது. ஆனால் அது கூட அவனுடைய உள்ளத்தின் வேட்கையையும், வெக்கையையும் தீர்க்கவில்லை. திடீரென்று யாரோ பின்னால் வரும் சத்தம் கேட்டது. யாரது? யாரா யிருக்கலாம்? பாலகிருஷ்ணன் திடுக்கிட் டுத் திரும்பினான்.
பாட்டி!
“என்னடா பாலு, என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”
அந்தக் கேள்வி அவன் தலைமீது, ஒருகுடம் குளிர்ந்த நீரை ‘பொத பொத’ வென்று ஊற்றுவது போலிருந்தது. அவனுடைய உள்ளத்தில் எழுந்த தீ அணைந்தது.
“வயிற்றுக்குக் குணமில்லை” என்று சொல்லிக் கொண்டு பாலகிருஷ்ணன் மாடிக்குப் போய்விட்டான். அப்புறம் சிறிது தூங்கினான்.
சுமார் ஐந்து மணி யிருக்கும். லக்ஷ்மியம்மாள் “சிவகாமி, சிவகாமி” என்று மகளை எழுப்பினாள்.
“ஐயோ! வேண்டாம்! வேண்டாம்” என்று தட புட கொட்டிக்கொண்டு திடுக்கிட்டு எழுந்திருந்தாள் சிவகாமி.
”என்னடி சிவகாமி. இப்படிப் பயந்துபோய் எழுந் திருக்கிறாய்? என்னமாவது கனவு கனவு கண்டாயா? காலைவண்டியில் ஊருக்குப் போகவேண்டாமா? நேர மாச்சு,” என்று லக்ஷ்மியம்மாள் சொன்னாள்.
பாலகிருஷ்ணன் எழுந்து வெளியில் சென்றான். சிவகாமி வாசல் தெளித்துக் கொண்டிருந்தாள். ஒரு வரையொருவர் பார்க்கவில்லை!
சிவகாமியைக் கொண்டு விடுவதற்கு லக்ஷ்மியம்மாள் அவளுடன் சென்றாள். அவர்களுக்கு டிக்கட் வாங்கிக் கொடுப்பதற்காகப் பாலகிருஷ்ணன் அவர்களுடன் ரயில் நிலையத்திற்குச் சென்றான். அவன் டிக்கட்டுகள் எடுத் துக்கொண்டு வந்தபோது, சிவகாமி மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தாள். பாட்டியைக் காணோம். பாட்டி வந்த பிறகு டிக்கட்டுகளைக் கொடுக்கலாம் என்று பால கிருஷ்ணன் நின்று கொண்டிருந்தான்.
“டிக்கட் வாங்கியாச்சா?” என்று சிவகாமி கேட்டாள்.
“இந்தா” என்று பாலகிருஷ்ணன் டிக்கட்டுகளைக் கொடுத்தான்.
“இந்தாருங்கள் என்று சொல்ல வேண்டும். மாமி யாரென்ற மரியாதை வேண்டாமா?” என்று சொல்லிச் சிவகாமி சிரித்தாள்!
இருபத்தொன்றாவது அத்தியாயம்
பாலகிருஷ்ணனுக்கும் ருக்மணிக்கும் நடக்க விருந்த விவாகம் நின்று விட்டது ! உலகத்தில் மனிதர்கள் நினைக்கும் காரியங்களெல்லாம் அவர்கள் நினைத்தபடியே நடப்பதில்லை. அம்மாதிரி நடக்காமலிருப்பது நல்லதோ, கெட்டதோ ஆனால் விஷயம் இதுதான். நாம் நினைத்த படி யே காரியங்கள் நடப்பதில்லை. இக்கலியாணம் சம் பந்தப்பட்டவர்கள் எல்லாம், அதைப்பற்றி என்னவெல் லாமோ கற்பனை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களு டைய கற்பனைகளெல்லாம் வீணாயின. பலரும் பலவி தமாக இக்கல்யாண விஷயத்தில் உற்சாகங் கொண்டார்கள். இம் மணத்தினால் தன் குடும்பத்திற்கும் சிவகாமியின் குடும்பத் திற்கும் உள்ள உறவானது வலிவடையும் என்று லக்ஷ்மி யம்மாள் சந்தோஷப்பட்டாள். ஆனால் இது இப்படி முடியும், அதனால் அவ்விரண்டு குடும்பங்களுக்குமுள்ள உறவு ரத்தாகி விடும் என்று அவள் நினைத்தாளா?
அவ்விவாகம் எங்ஙனம் நின்றது? பகவான் செட்டி யார் வாக்குமாறிவிட்டார்! தான் பேசின பேச்சை மீறித் தன் பெண்ணை வேறு இடத்தில் கொடுப்பதென்று தீர்மா னித்து விட்டார். முன்பொரு சமயம் அதுவுங் கலியாண சம்பந்தமாகவே பகவான் செட்டியார் வாக்கு மாறிவிட்ட தாகச் சுந்தரஞ் செட்டியார் அவரைப் பரிகாசம் செய் தார். அது கேலிக்கும், மகிழ்ச்சிக்கும் இடமாயிருந்தது. ஆனால் இப்பொழுதோ, அவர் உண்மையிலேயே வாக் மாறி விட்டார்! இது அவமானத்திற்கும் மனக்கசப்பிற் கும் இடமாயிற்று. “சுந்தரஞ்செட்டியார் வீட்டுக் கலியா ணம் நின்று விட்டதா மல்லவா! வெற்றிலை பாக்குப் பரி மான பிறகுங்கூட, திருநெல்வேலிச் செட்டியார் பேச்சு மாறி விட்டாரா மல்லவா?” என்று இந்த விஷயத்தைப் பற்றி ஊரெல்லாம் இகழ்ச்சியாய்ப் பேச வாரம்பித்தார்கள்.
இத்தனைக்கும் அடிப்படையான காரணம் என்ன? பெரிய நதிகள் எல்லாம் சிறிய மூலத்தையே கொண்டுள் ளன என்று சொல்கிறார்கள். அதுபோல் பெரிய காரியங் களும் சிறிய காரணத்தையே கொண்டுள்ளன.
சிவகாமியைக் கணவன் வீட்டிற்குக் கொண்டுவிட லக்ஷ்மியம்மாள் சென்றிருந்தாளல்லவா? அங்கு ஒரு சிறிய- சம்பவம் நடந்தது. ருக்மணியின் கலியாண சமாசாரத்தைக் கேட்டு அவளுடைய சிறிய தாயார் (அவளுடைய தாயார் கூடப் பிறந்தவள்) திருநெல்வேலிக்கு வந்திருந்தாள்.
சில நாட்கள் அங்குத் தங்கியிருந்த லக்ஷ்மியம்மாள் ஒருகாள் ருக்மணியைப் பார்த்து, “எங்கடியம்மா, பேரன் பெண்டாட்டியின் சமர்த்தைப் பார்க்கலாம். இன்றைக்கு நீ சாதம் பரிமாறு. எப்படிப் பரிமாறுகிறாய் என்று பார்ப்போம்” என்றாள்.
ருக்மணி பரிமாறும் போது, சோற்றைச் சிறிது சிந்தி விட்டாள். சாம்பாரையும் சிறிது கொட்டி விட்டாள். உடனே அவளைப்பார்த்து லக்ஷ்மியம்மாள் வேடிக்கையாக, “இப்படிச் சாமான்களை யெல்லாம் கொட்டிக்கொண்டும், சிந்திக்கொண்டும் இருந்தால், எங்கள் வீட்டில் உன்னால் கொண்டு செலுத்த முடியாதம்மா! நீங்கள் பணக்காரர் கள். உங்கள் வீட்டில் எவ்வளவு சிந்தினாலும், சிதறினா லும் அதைப் பற்றிக் கவனிப்பாரில்லை. ஆனால் நாங்கள் உங்களைப்போல் பணக்காரர்கள் இல்லையம்மா!” என்று சொன்னாள்.
இதை ருக்மணியின் சிறிய தாயார் கவனித்துக் கொண்டிருந்தாள்.
அப்புறம் இன்னொரு நாள் ருக்மணி வாழைப்பழம் ஒன்றை உரித்துத் தின்றுவிட்டு, தோலை வீட்டிற்குள் ளேயே போட்டு விட்டாள்.
லக்ஷ்மியம்மாள் அதைப் பார்த்ததும், “ஏண்டீ வீட்டை இப்படித்தான் அசுத்தம் செய்வதா? என்ன விருந்தாலும் ஆம்பளை வளர்த்த பெண்தானே! அத்துடன் தாயாரில்லாததால் செல்லமாய் வளர்க்கப்பட்ட பெண்!” என்று சொன்னாள்.
லக்ஷ்மியம்மாள் வெற்றிபுரத்துக்கு வந்தவுடன் ருக்மணியின் சிறிய தாயார் பகவான் செட்டியாரிடம் ‘வத்தி’ வைக்க ஆரம்பித்து விட்டாள். “கிளியை வளர்த் துப்பூனையிடங் கொடுப்பதுபோல், கிளிபோலப் பெண்ணை இந்தக் கொடுமைக் காரியிடமா ஒப்புவிக்கப் போகிறீர் கள்? கலியாணம் ஆவதற்கு முன்பே இம்மா திரி அதிகாரம் பண்ண வாரம்பிப்பவள், கலியாணம் ஆனபிறகு என்ன அதிகாரம் பண்ணுவாளோ? தாயில்லாப் பெண் வாழைப் பழம் தின்றதுகூட இவளுக்குப் பிடிக்கவில்லையே! இவளா வாங்கிக் கொடுத்துக் கெட்டுப் போய்விட்டாள். அக்கா இருந்தபோது, ருக்மணி எவ்வளவு செல்லமாய் வளர்ந்த பெண் ! ஒழக்கரிசி ஜீவன் அவள் ஒருத்திபோக, இந்தப் பெண்ணின் கதி இப்படியாச்சு!” என்று ஒப்பாரிவைத்து அழவும் ஆரம்பித்து விட்டாள். கடைசியில் முடிவாக, ருக்மணியை நீங்கள் அங்கே கட்டிக் கொடுத்தீர்களா னால், நாங்கள் ஒருவரும் கலியாணத்திற்கு வரமாட் டோம். இப்பொழுதே சொல்லிவிட்டேன். கொடுமைக் காரி! பெண்ணை உங்கவிடாமல், திங்கவிடாமல் கெடுத்து விடுவாள். தாயைப் பறிகொடுத்துவிட்டு, இவ்வளவு நாளும் பரிதவித்த பெண், கலியாணமான பிறகு புருஷன் வீட்டிலுமா போய்க் கஷ்டப்படவேண்டும்?” என்று சொன்னாள்.
ருக்மணி விஷயத்தில் தனக்கிருக்கும் உரிமையை விட அவளுடைய சிறிய தாயாருக்கு அதிக உரிமை இருக்கிற தென்று ஏனோ பகவான் செட்டியாரும் நினைத்தார். ஆகை யினால் கலியாணம் நின்றுவிட்டது.
லக்ஷ்மியம்மாளைக் ‘கொடுமைக்காரி’ என்று ருக்மணி யின் சிறிய தாயார் சொன்ன சமாச்சாரம் வெளிவந்த போது, “இப்பேர்ப்பட்ட உத்தமியைக் கொடுமைக்காரி என்று சொன்னவள் நாக்கு இன்னுமா வெந்து போக வில்லை? ” என்று அனைவரும் கேட்டார்கள்.
லக்ஷ்மியம்மாளின் மீது இம்மாதிரி அபாண்டமான பழி சுமத்தியதற்கு அடிப்படையான காரணம் வேறு. ருக்மணிக்குத் தாய் கூடப் பிறந்த மாமா ஒருவர் இருந் தார். அவருக்குக் கலியாண வயதடைந்த ஒரு மகன் இருந்தான். ருக்மணியை அவனுக்குக் கட்டவேண்டு மென்பது அவளுடைய சிறிய தாயாரின் எண்ணம். தன் அக்காளுடைய ஆபரணங்களெல்லாம் இன்னொருத்தி வீட்டிற்குப் போவதா என்று அவளுக்கு வயிற்றெரிச்சல். ஆகையினால் அந்தக் கலியாணத்தை எப்படியாவது நிறுத்திவிட வேண்டுமென்று கங்கணங் கட்டிக்கொண்டே அவள் திருநெல்வேலிக்கு வந்தாள். அதற்காக ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, வஞ்சக நெஞ்சுடைய அவளுக்குங்கூட இச்சிறிய விஷயங் கள் தாம் கிடைத்தன. வேறொரு குறையோ, குற்றமோ அகப்படவில்லை. உடனே அவைகளைப் பிடித்துக் கொண்டு கூத்தாட வாரம்பித்து விட்டாள். அவளுடைய உண்மையான எண்ணம் பகவான் செட்டியாருக்குத் தெரிந்தபோது கூட அவர் அதை விசேஷமாக எதிர்க்க வில்லை. தாயில்லாப் பெண்ணாகிய ருக்மணியை அவளு டைய தாயார் வழியிலேயே கொடுப்பது நலம் என்று அவர் தீர்மானித்தார்.
சுந்தரஞ் செட்டியார் இவ்விஷயத்தை அறிந்த போது, மிகுந்த வருத்தமடைந்தார். ஆனால் பகவான் செட்டியாரைக் குறை கூறவில்லை. தன்னைத்தானே நொந்துகொண்டார். உமையொருபாகஞ் செட்டியாரிடம் பேசிவிட்டு அவர் உட னே மாறினாரல்லவா? அதற்கு இப்பொழுது, இந்த ஜென்மத்திலேயே, பலன் கிடைத்து விட்டதென்று அவர் கருதினார். தன்வீட்டில் பேசப்பட்ட ஒருகலியாணம் நின்று விட்டதென்பது அவருக்கு மிகுந்த அவமானமாய்த் தோன்றியது. ஊரெல்லாம் இதைப்பற்றி இகழ்ச்சியாய்ப் பேசுவார்களே என்று அவர் வெட்கினார். ‘சுந்தரஞ் செட்டியார் என்னையா நாணயகாரர்? இவர் அன்றைக்குப் பேச்சு மாறவில்லையா? அதற்கு இப் பொழுது பலன் கிடைத்துவிட்டது!’ என்று ஊராரெல் லாம் பேசுவார்களே என்று அவர் மிகவும் வருந்தினார். அன்று உமையொருபாகஞ் செட்டியார் வயிறெரிந்து அவருடைய வீட்டை விட்டகன்றார். இன்று வயிறெரிய வேண்டியது சுந்தரஞ் செட்டியாருடைய முறை! பெண் புத்தி கேட்டுத் தான் மதி கெட்டுப் போனதாக அவர் தன்னைத்தானே குறை கூறிக்கொண்டார்.
திருநெல்வேலியில் ருக்மணிக்கும் அவளுடைய மாமன் மகனுக்கும் நடக்கவிருந்த கலியாணத்திற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ஆனால் சிவகாமி அந்த விஷ யத்தில் சிறிதேனும் உற்சாகங் கொள்ளவில்லை. அவ ளுக்குக் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது. ‘இவளுடைய மாமன் மகனுக்குக் கொண்டு சேர்க்க வேண்டு மென்றா நான் இத்தனை நகைகளையும் செய்யச் சொன்னேன்?’ என்று அவள் நினைத்தாள்.
“வைரப் பதக்கம் எனக்கொன்று வாங்குவதாகச் சொன்னீர்களே, அதை உடனே வாங்கிக்கொண்டு வாங் கள்?” என்று தன் கணவருக்கு உத்தரவிட்டாள்.
அவர் சென்று பார்த்தபோது, அது விலைபோய் விட்டது.. மனைவியிடம் வந்து அவர் அவ்விஷயத்தைச் சொன்னபோது, “அதென்னமோ, எனக்கு வைரப்பதக்கம் அவசியம் வேண்டும். எப்படி வாங்குவீர்களோ எனக்குத் தெரியாது,’ என்று கண்டிப்பாய்ச் சொன்னாள்.
எங்கெங்கோ தேடி அலைந்து, கடைசியில் ஒரு வைரப் பதக்கத்தை வாங்கிக் கொண்டு வந்தார். பகவான் செட்டியார்.
ருக்மணிக்குச் செய்த நகைகளைப்போல் தனக்கும் ஒவ்வொன்று வேண்டுமென்று சிவகாமி பிடிவாதம் செய் தாள். அந்த நகைகளெல்லாம் வாங்கிக்கொண்டு வரப் பட்டன. ஆனால் கலியாண தினத்தன்று அவள் அந் நகை களில் ஒன்றேனும் போட்டுக் கொள்ளவில்லை. அவள் சாதாரணமாய்ப் போட்டுக் கொள்ளும் ஆபரணங் களையும் கழற்றி விட்டாள். இம்மாதிரி அடத்திற்குமேல் அடம் செய்துகொண்டிருந்தாள் சிவகாமி. பெரும்பான் மையான கலியாணச் சடங்குகளில் அவள் கலந்து கொள் ளவே இல்லை. அவசியமான சில சடங்குகளில் மட்டும் வேண்டா வெறுப்பாய்க் கலந்து கொண்டாள்.
இந்த விஷயம் லக்ஷ்மியம்மாளுக்கு எட்டிவிட்டது. அவள் ஒருநாள் தன் கணவனைப் பார்த்து, ருக்மணியை நம்ம பாலகிருஷ்ணனுக்குக் கலியாணம் பண்ண வேண்டு மென்று சிவகாமிக்குக் கொள்ளை ஆசை என்று சொன்னாள்
“எல்லாம் உன்னால்தானே கெட்டது?”
“நீங்களும் என்னைத்தான் குறை கூறுகிறீர்களா? நான்தான் கலியாணம் நடக்க விடாமல் செய்து விட் டேனா?”
“கலியாணம் ஆவதற்கு முந்தி நீ ஏன் பேரன் பெண் டாட்டி என்று உரிமை பாராட்டிக் கொண்டு அதிகாரம் செய்ய வாரம்பித்தாய்? நீ தோஷிக் கழுதை! உனக்குத் தான் ஒன்றும் இருக்கக் கூடாதென்று கடவுள் பிடுங்கிக் கொண்டானே ! அப்புறமும் மருமகள் என்றும், பேரன் பெண்டாட்டி என்றும் உனக்கு ஏன் இந்த வீண் ஆசை? உமையொருபாகஞ் செட்டியார் மகளையும் கட்டவிடாமல் அன்று தடுத்தாய்; இப்பொழுது இந்தப் பெண்ணையுங் கட்டவிடாமல் செய்துவிட்டாய்!” என்று தன் வயிற் றெரிச்சல் தீரக் கத்தினார் சுந்தரஞ் செட்டியார்.
“நானா என் பேரனுடைய கலியாணத்தைத் தடுத்து விட்டேன்? என் தலைவிதி! தலைவிதி!” என்று கண்ணீர் முத்து முத்தாய் உதிர, ஒரு மூலையில் உட்கார்ந்து தன் ஆத்திரம் எல்லாம் தீர லக்ஷ்மியம்மாள் அழ வாரம்பித்தாள்.
“அன்றைக்கு நல்ல பெண் வந்தபோது, தன் மகள் வழியில்தான் கலியாணம் பண்ணவேண்டுமென்று, அந்தக் கலியாணத்தைத் தடுத்தாளே. இப்பொழுது இந்தக் கலி யாணம் நடந்து விட்டதா? கெடுதல் காரி! எப்பொழுதும் அவளுக்குக் கெடுதல் புத்திதான் தோன்றுகிறது” என்று ராமநாதஞ் செட்டியாரும் தன் நண்பர்களிடம் குறைப் பட்டுக் கொண்டார்.
இப்படி இருக்கையில், ஒருநாள் திடீரென்று சிவகா மிக்கு டைபாயிட் ஜுரமென்றும், மிகவும் அபாயமான நிலையிலிருக்கிறாள் என்றும் தந்தி வந்தது. லக்ஷ்மியம்மாள் போக வேண்டுமென்று துடியாய்த் துடித்தாள்.
“அங்குப் போவதென்றால் நீ அங்கேயே இருந்து விடு. அப்புறம் இங்கே வரத் தேவையில்லை.” என்றார் சுந்தரஞ் செட்டியார்.
”பாவம்! அவள் என்ன செய்தாள் உங்களுக்கு?” “என்னை மதியாதவன் வீட்டிற்கு – நீ என்ன போவது?”
“நான் அவர்கள் வீட்டிற்குப் போகாமல், வேறு யார் வீட்டிலாவது இறங்கிச் சிவகாமியைப் பார்த்து விட்டு வந்து விடுகிறேன்.”
“கூடாது.”
இங்ஙனம் சுந்தரஞ் செட்டியார் குடும்பத்திற்கும், பகவான் செட்டியார் குடும்பத்திற்கும் பேச்சு வார்த்தையற்று, போக்கு வரவற்றுப் போய்விட்டது !
– தொடரும்…
– திருமணம் (நாவல்), முதற் பதிப்பு: செப்டம்பர் 1947, அருணோதய நிலையம், வேலூர்.
![]() |
சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க... |
