கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன் (இலங்கை)
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 13, 2024
பார்வையிட்டோர்: 1,217 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்றும் அந்தக் கடற்கரை அதி காலையிலேயே சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியிருந்தது. 

பரந்து விரிந்துகிடந்த அந்தக் கடற்கரையின் மேற்குப்புற மாய் அடர்ந்த தென்னை மரங்கள்… அவற்றின் முன் பக்கமாய் கடலை நோக்கியவாறு ஆங்காங்கே மீன்வாடிகள்…அவ்வாடி களின் விறாந்தைகளிலே மீனவர் சிலர் வீற்றிருந்து கதையளக் கின்றனர். வெளியிலே மீனவர் பலர் முதலாளிகள் மேல் சாலவும் விசுவாசமாய் செயற்படுகின்றனர். 

கடலையண்டி தோணிகள் கரையிலே தள்ளி வைக்கப் பட்டிருக்கின்றன. அவற்றிலே, அதிகமானவை கரைவலைத் தோணிகள்… 

கடலிலே சற்றுத் தொலைவில் பெருந்தொகையான இயந்திர மீன்பிடிப் படகுகள் நங்கூரமிட்டிருக்கின்றன. 

ஆங்காங்கே பல தோணிகள் இயந்திரப் படகுகளிலிருந்து மீன்களை மடி மாறிக்கொண்டு கரையை வந்து சேர்கின்றன. 

கடற்கரையிலே அங்குமிங்குமாய் எப்போதோ விட்டெறிந்த தளப்பத்து, கொப்புறா போன்ற மீன்களின் குடல்கள் சிதறிக்கிடக் கின்றன. துர் நாற்றத்திற்கிடையிலும் காக்கைகள் அவற்றைக் கொத்திச் சுவைக்கின்றன. 

இளஞ் சூரியனின் கிரணங்கள் கூதலை உறிஞ்சியெடுத்து அப்பகுதியை இதமான கணகணப்பில் ஆழ்த்துகின்றன. 

அன்றும் அக்கடற்கரையை அண்டிய கடலிலே மீன்கள் மிகக் குறைவாகவே பிடிக்கப் பட்டிருந்தன. 

கரையை வந்து சேர்ந்த தோணிகளிலிருந்த மீன்கள் தரையிலே போடப்பட்டு விலைகூறி விற்கப்படுகின்றன. 

அங்கு, தமக்கும் இரை கிடைக்காதா என்ற நப்பாசையில் சில காக்கைகள் மேலே மிதக்கின்றன. இன்னும் சில காக்கைகள் பக்கத்திலே உள்ள தென்னைகளில் வீற்றிருந்து அப்பகுதியை நோக்கி தமது பார்வையை விரித்திருக்கின்றன. 

தென்புறமாய் சற்றுத் தொலைவில் கடலிலிருந்து ஒரு தோணி கரையை நோக்கி அம்பாய் விரைகின்றது. 

அத்தோணியில் மூவர் அமர்ந்திருக்கின்றனர். அவர்களிலே தண்டையல் சவளால் நீரைத் துளாவி தோணியை இயக்குகின்றார். 

அலைகள் வந்து வந்து கரையைத் தழுவிவிட்டு மீழ்கின்றன. சற்றுப் பெரிய அலையொன்று வேகமாய் வந்து கரையை ஆரத்தழுவிவிட்டுச் செல்கிறது. அதன் தழுவலிலிருந்து விடுபட்ட கரையும் ‘ஸ்…ஸ்…’ என்று மூச்சுவிடுகிறது. 

இதனிடையே அத்தோணி கரையை வந்து சேர்கிறது. 

தோணியிலிருந்த மூவரும் கரையிலே குதித்து தோணியை அலை வந்து மோதுமிடத்துக்கு அப்பால், மணல் மேட்டில் தள்ளிவைக்க எத்தனிக்கின்றனர். கரையில் நின்றவர்களில் ஆறு ஏழுபேர் அங்கு விரைந்து அப்பணி நிறைவேற அவர்களுக்கு தோள் கொடுப்பது தெரிகின்றது. 

அதனைக் கவனித்தவாறு பரீத் ஹாஜியார் கரையிலே சற்றுத் தொலைவில் நிற்கிறார். 

அத்தோணியும், அதனோடு செயற்படும் இயந்திரப்படகும் அவரது உடைமைகள்தான். 

அறுபது அறுபத்திரண்டு வயது மதிக்கத்தக்க அவர் பொது நிறமும் அளவான உயரமும், பருமனும் கொண்டவர். நன்கு பற்றிப்பிடிக்கக் கூடிய அளவுக்கு தாடியும் வளர்த்திருந்தார். அதில், ஆங்காங்கே தலைகாட்டிய நரை மயிர்கள் அவரது முதிர்ச்சிக்கு சான்று பகர்கின்றன. 

அவர், அணிந்திருந்த இள மஞ்சல் வண்ண வட்டத்தொப் பியும், வெள்ளை நிறமான நீண்ட கை கொண்டதும், முழங்காலின் கீழ் நீண்டதுமான ஒரு பெரிய சட்டையும், இந்திய பழையகாட் சாரணும் அவரது தோற்றத்தை மேலும் அழகுப்படுத்தின. 

தோணியில் வந்தவர்களில் இருவர், ஆளுக்கு ஒன்றாய் இரண்டு அறுக்கிளா மீன்களையும் கொண்டுவந்து அவரின் முன்னே மணலில் போடுகின்றனர். 

ஒன்று நாலு நாலரைக் கிலோவாகவும் மற்றையது மூன்று கிலோவிற்கு குறையாமலுமிருக்கலாம். 

மீன்களைக் கொண்டு வந்து போட்டவர்களில் ஒருவர், பரீத் ஹாஜியாரைப் பார்க்கிறார். 

“இன்டைக்கு இந்த ரெண்டு மீன்களும்தான் பட்டிச்சி… காக்கா…” என்கிறார். 

“என்ன மிச்சம் மோசமாரிக்கி… நேற்றும் இப்படித்தான்…” அலுத்துக் கொண்டார் ஹாஜியார். 

மீன்களை ஹாஜியாரிடம் ஒப்படைத்தவர்கள் இருவரும் விடைபெற அங்கு மீன் வியாபாரி ஒருவர் வருகிறார். விலை பொருந்தாததால் அவரும் அங்கிருந்து விலகிக் கொள்கிறார். 

சற்று நேரத்தின் பின்பு அவ்விடத்தில் அதிரடிப்படை வீரர் ஒருவரின் பிரசன்னம் நிகழ்கிறது. அவ்வதிரடிப்படை வீரரோ இதழ்களில் புன்னகையொன்றை நெளியவிட்டவாறு மீனையும் பரீத் ஹாஜியாரையும் மாறி மாறிப் பார்க்கிறார். முதலில், உரையையும் அவரே தொடுக்கிறார். 

“என்னப்பா…இந்த ரெண்டு மீனும்தானா இன்டைக்கு…?” 

“ஓம்… மாத்தயா…” பணிவோடு பகர்கிறார் ஹாஜியார். 

“இதில இந்தச் சின்ன மீனத்தாப்பா…” 

“மாத்தயா… நல்லாப்பட்டிருந்தா தந்திருவன்… நல்லாப்பட் டிருக்கக்குள்ள உங்கட ஆக்களுக்கெல்லாம் நான் நல்லாக் குடுத்துத்தானிருக்கன்… இன்டைக்கு நீங்க கேட்கப்படா…” 

“அப்படிச் சொல்லாதப்பா… எடுக்கன்…” அதிரடிப்படை வீரர் சிறிய மீனை எடுப்பதற்காக நிலத்தை நோக்கி வில்லாய் வளைகிறார். 

“மாத்தயா… தரமாட்டன் எடுக்கப்படா…” கண்டிப்பான வார்த்தைகளை உதிர்த்தார் பரீத் ஹாஜியார். 

நெற்றியில் கல்லடி பட்டவர்போல் திடீரென்று நிமிர்ந்த அதிரடிப்படை வீரர், ஹாஜியாரின் பக்கமாகச் செல்கிறார்; மிக்க சினத்தோடு பார்க்கிறார். 

“என்னப்பா மிச்சம் கேந்தி… இது சின்ன மீன்தானே…” என்றவாறு அவரின் தாடியைப் பற்றி இழுக்க வலது கையை நீட்டியபடி தாவுகிறார். 

தாடி என்பது, கலாசாரம் மட்டுமல்ல; ‘சுன்னத்’தான ஒரு வழிமுறையும், முகம்மது நபி அவர்களின் முன்மாதிரி ஒன்றைப் பின்பற்றுகின்ற விடயமுமாகும். 

அத்தனை முக்கியத்துவம் பொருந்திய தாடி அவமதிக்கப் படுவதை அவரால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. வெறிகொள் கிறார்; தன்னையே மறக்கிறார். 

வலது கர முஷ்டியால், தனது தாடையை நோக்கி நீண்ட அதிரடிப்படை வீரரின் கையை நோக்கி பலமாக வீசி அடிக்கிறார். அவ்வடி அவரின் வலது கரத் தோள் மூட்டில் விழுந்து இடது புறமாய் அவரைச் சாய்த்துவிடப் பார்க்கிறது. 

திடீரென்று தன்னைச் சுதாரித்துக்கொண்ட அதிரடிப்படை வீரர், தன்னிடமிருந்த கத்தியை எடுத்து பரீத் ஹாஜியாரைக் குத்துவதற்கு எத்தனிக்கிறார். 

ஹாஜியாரோ, தனது சேர்ட்டின் மேல் பொத்தான்கள் தெறித்து விழும்வகையிலே, சேர்ட் கொலரை இரு பக்கங்களிலும் பிடித்து இழுத்து நெஞ்சை வெளியிலே காட்டிக்கொண்டு, 

“எங்கள் சமயத்திலுமா கைவைக்கத் துணிந்துவிட்டாய். உன்னைப் போன்றவர்களைக்கண்டு பயந்து ஒதுங்குவது மகா பிழை. உனக்குத் தைரியமிருந்தால் என்னைக் குத்து பார்ப்பம்..” என்றவாறு அதிரடிப்படை வீரரை நோக்கி முன்னே அடிவைக்கிறார். 

ஹாஜியாரின் துணிவையும், வெறியையும் கண்ட அவ் வதிரடிப்படை வீரர் அதிர்ந்துபோய் சிலையாய் சமைகிறார்.

அவ்வேளை, அவரின் சகாக்களான அதிரடிப்படை வீரர் இருவர் அங்கு வந்து சேர்கின்றனர். அவர்கள், நிகழ்ந்த விடயத்தை அறிந்தபோதும் நீதியின் பக்கம் அவர்களின் தலைகள் சாயவில்லை. மாறாக தமது தோழனுக்கு ஆதரவு காட்டும் வகையிலே ஹாஜியாரை எரித்து விடுபவர்கள் போல் பார்க்கின்றனர். 

அவரோ, நிலை குலையவில்லை. அந்தக் கடற்கரைச் சூழலில் அங்குமிங்குமாய் நின்றவர்களை நோக்கி தனது பார்வையை அகல விரிக்கின்றார். 

“என்னடா… பாத்துக்கொண்டு சும்மா நிக்கிங்க… ஓடியாங்க ளன்டா… இவங்கட அடாவடித்தனத்துக்கு நல்ல ஒரு பாடம் படிப்பிக்கணும்… வந்து என்னன்டு கேளுங்களண்டா…” தொண்டை கிழியக் கத்தினார் பரீத் ஹாஜியார். 

அதனைச் செவிமடுத்த மீனவர்களும் மற்றையோரும் ஹாஜியாரைச்சுற்றி அதிக அளயிலே விரைவாய் குழுமத் தொடங்கினர். 

நிலைமை மோசமடைவதை உணர்ந்த அந்த அதிரடிப்படை வீரர், திடீரென்று தனது தோளில் தொங்கிய துப்பாக்கியை எடுத்து ஆகாயத்தை நோக்கி, ‘பட்… பட்… பட… பட’ என்று வேட்டுக்களைத் தீர்க்கின்றார். 

ஹாஜியாரின் ஆசையும் அரும்பிலேயே கருகிப்போகிறது. அங்கு குழுமியவர்களும் பீதியினால் வந்த வேகத்திலேயே கலைந்து மறைகின்றனர். 

தான் இன்னும் அங்கு நிற்பது தகாது என்பதை உணர்ந்த பரீத் ஹாஜியாரும் அவர்களோடு கலந்து காணாமற் போகின்றார். 

அவ்வாறு ஹாஜியாரும் சனங்களோடு சேர்ந்து கரைந்து விட்டதை அறிந்து தாம் பிழை விட்டுவிட்டதாக உணர்ந்து தம்மையே நொந்து கொண்டதோடு, “சே…” என்று தமது அதிருப்தியையும் வெளிப்படுத்துகின்றனர் அதிரடிப்படை வீரர்கள். 

அவர்கள், அக்கடற்கரையின் மூலை முடுக்குகள், மீன்வாடிகள், தேநீர்க்கடைகள் ஆகியவற்றில் மட்டுமல்ல, அயல் இல்லங்களிலும் சல்லடை போட்டுத் தேடினர். என்றாலும், ஹாஜி யாரின் வாசத்தைக்கூட அவர்களால் நுகர முடியவில்லை. 

“இன்றைக்கில்லாது விட்டாலும் என்றைக்காவது எங்கள் கையில் அகப்படுவார்… அப்போது பார்த்துக்கிறம்…” சற்றுத் தொலைவிலே ஒதுங்கி நின்ற மீனவர் சிலரைப்பார்த்து கர்ச்சித்து விட்டு அங்கிருந்து அகன்றனர் அவ்வதிரடிப்படை வீரர்கள். 

சிறிது நேரத்தின் பின்னர், பரீத் ஹாஜியார் உறவினர் ஒருவரின் துணையோடு தனது கிராமத்தின் அயலிலுள்ள பொலிஸ் நிலையத்துக்குச் சென்றார். அங்கு கடமை புரிந்த பொறுப்பதி காரியிடம், கடற்கரையில் நிகழ்ந்த அச்சம்பவம் பற்றியும், முனைப்பாக அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டு தன்னை மிகவும் பாதித்த அந்த அதிரடிப்படை வீரர் பற்றியும் விளக்கிக் கூறினார். 

பரீத் ஹாஜியாரின் முறைப்பாட்டைக் கேட்டு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அவ்வதிரடிப்படை வீரர் மேல் மிக்க சினம் கொண்டார். 

“நீங்க ஒரு ஹாஜியார், மதப்பெரியார், அது மட்டுமல்ல வயதுபோன ஒரு மனிதராகவுமிருக்கிங்க… அந்த ‘எஸ்டியெப்’ இது ஒண்டையுமே கவனிக்காம உங்கட தாடியப்பிடிச்சி இழுக்க முற்பட்டிருக்கார்… அது நீங்க கூறியது போல உங்களை மட்டு மல்ல இஸ்லாமிய சமயத்தையே அவமதிப்பதாக அமைந்திருக் கிறது என்பதை நானும் ஏத்துக்கொள்ளத்தான் வேணும்… அந்த ‘எஸ்டியெப்’ எவ்வளவு மோசமான ஒரு மனிதராகவிருக்கார்… அவர விடப்படா… நான் அவர்ர ‘கேம்ப்’ பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கன்…” என்கிறார். 

”சரி… சேர்” 

பரீத் ஹாஜியார் கடற்கரையில் நிகழ்ந்த அந்தச் சம்ப வத்தை சட்டபூர்வமாகப் பதிவு செய்துவிட்டு தனது உறவினரோடு பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறுகிறார். 

அடுத்த தினம், காலை பத்து பத்தரை மணியிருக்கும். அப்பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பரீத் ஹாஜியாரையும் அழைத்துக் கொண்டு குறிப்பிட்ட அதிரடிப்படை முகாமை அடைந்தார். 

விடயமறிந்த அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி, முகாமில் அமைந்திருந்த தனது அலுவலக அறைக்கு அவர்களை உடன் வரவழைத்து தனக்கு முன்னே இடப்பட்டிருந்த இருக்கை களில் உட்காரச்செய்து கொண்டார். 

கூரை மின்விசிறி உமிழும் காற்று, வெப்பம் அறையில் நுழைந்து விடாதவகையில் கடுங்காவலில் ஈடுபடுகிறது. 

ஒரு பெரிய மேசையின் முன்னே, ‘குசன்’ பண்ணப்பட்ட உயரமான இருக்கையில் கம்பீரமாக அமர்ந்திருந்த ‘கேம்ப்’ பொறுப்பதிகாரி தனக்கெதிரே வீற்றிருந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியையும், பரீத் ஹாஜியாரையும் புன்முறுவலோடு பார்க்கிறார். 

தனக்கு எதிரே வலதுபுறமாய் நின்றிருந்த அதிரடிப்படை வீரர் ஒருவரைச் சுட்டிக்காட்டியவாறு பரீத் ஹாஜியாரிடம் வினவுகிறார். 

“பெரியவர்…இவர்தானா,கடற்கரையில் உங்களோடு பிரச்சினைப்பட்டவர்?” 

”ஓம்… சேர்…இவர்தான்…” 

“எச்குவை என்னோடு தொடர்புகொண்டு கடற்கரையில் நடந்த அந்த விடயத்தோடு, முஸ்லிம்கள் ஏன் தாடி வைக்கிறார்கள்? அதன் முக்கியத்துவம் என்ன? என்பனவற்றையும் என்னிடம் விளக்கமாக எடுத்துச்சொன்னார். நானும் உடனேயே செயற்பட்டு இவரை இனங்கண்டு இவரிடம் விடயங்களை விபரமாக எடுத்துச் சொன்னேன்… இது, பரீத் ஹாஜியாரை அவமதிக்கிற ஒரு விடயம் மட்டுமல்ல… முக்கியமாக, இஸ்லாமிய சமயத்தையே அவமதிக்கிற ஒரு பாரதூரமான விடயம் என்கிறத்தையும் நான் இவரிடம் சுட்டிக்காட்டினேன்… இவரும் தான் செய்தது மிகவும் பிழை என்பதை ஏற்றுக்கொண்டார். இவரும் ஒரு இளம் ஆள்தானே… தெரியாத்தனமாக நடந்துகொண்டார்… இனிமேல் இவ்வாறான பிழைகள் ஏற்படாமல் நடந்துகொள்வார்… சும்மா மீன் எடுக்கப் போனதாலதான் இத்தனை பிரச்சினைகளும். இனி இவரு மட்டுமல்ல… எனது ‘கேம்பைச் சேர்ந்த எவராகவிருந் தாலும் உங்கட கடற்கரைக்கு வந்து சும்மா மீன் எடுக்கிற விளையாட்டு நடக்காது. யாருக்காவது அப்படி மீன் தேவையாக விருந்தால் அவர் காசு தந்துதான் வாங்குவார். இதே நடைமுறை யைத்தான் எல்லாக் கடற்கரைகளிலும் பின்பற்ற வேண்டுமென்றும் நான் இவர்களைக் கேட்டிருக்கிறேன்…” பொறுப்பு. வாய்ந்த வார்த்தைகளை மழையாகப் பொழிந்து தள்ளினார் முகாம் பொறுப்பதிகாரி. 

“சேர்…ஒங்கட ‘கேம்ப்’ கொஞ்சம் தூரத்தில இருக்கிறத் தால உங்கட கேம்பைச் சேர்ந்த ‘எஸ்டியெப்’மார் எங்கட கடற் கரைக்கு வாறது மிச்சம் குறைவு. அதுவும் எப்பவாவது இருந் திருந்துதான் வருவாங்க… மீன் நல்லாப்பட்ட காலங்கள்ல இவங் களுக்கும் நாங்க சும்மா மீன்கள் கொடுத்துத்தான் இருக்கம்… இம்முற இவரு எங்கட கடற்கரைக்கு வந்தபோது எங்களுக்கு ரெண்டு மீன்கள்தான் பட்டிருந்த… அதுவுமில்லாம அண்டையச் செலவையும் அவற்றைக்கொண்டுதான் சமாளிக்கவும் வேண்டியி ருந்தது…அதனாலதான் நான் இவருக்கு மீன் கொடுக்காம விட்ட… 

“சரி… சரி… அதவிடுங்க…” என்ற முகாம் பொறுப்பதிகாரி, இப்போது அவ்வதிரடிப்படை வீரர் மேல் தன் பார்வையைத் திருப்புகிறார். 

‘பரீத் ஹாஜியாரிடம் விபரமாக விசயங்கள எடுத்துச் சொல்லி மன்னிப்புக் கேளுங்க…” என்கிறார். 

அதனைச் செவிமடுத்த வீரர், ஹாஜியாரின் அருகில் வருகிறார். 

“முதலாளி… நேற்றுக் காலையிலே கடற்கரையில் நான் தங்களோடு நடந்துகொண்ட விதம், செயற்பாடு எல்லாமே பிழை யானது என்பதை மட்டுமல்ல, முக்கியமாக நான் தங்களது தாடியைப்பிடித்து இழுக்க வந்தது மிகவும் பிழையானது என்பதை யும் நான் இப்போதுதான் உணர்கிறேன்.. தாடியின் முக்கியத்துவம் பற்றி எனக்குத் தெரியாது. தயவுசெய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்…” 

“நீங்க செய்த எல்லா வேலைகளுமே எனக்கு ஆத்திரத்த ஏற்படுத்திச்சித்தான்… ஆனா… நீங்க என்ட தாடியப்பிடிச்சி இழுக்க வந்ததுதான் மிகவும் ஆத்திரத்த, ஒரு வெறிய எனக்கு உண்டாக்கிட்டு… நீங்க இப்ப எல்லாத்தையும் உணர்ந்திட்டிங் கதானே… சரி…” இது பரீத் ஹாஜியார். 

“இனி எங்களுக்குள் பகைமை இல்லை; இருவரும் ஒற்றுமையாகிவிட்டோம் என்பதற்கு அடையாளமாக இருவரும் கைலாகு கொடுத்து கைகுலுக்கிக் கொள்ளுங்கள்…’ 

அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி, அவ்வதிரடிப் படை வீரரையும், பரீத் ஹாஜியாரையும் மிக்க கனிவோடு வேண்டினார். 

அதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட அவ்விருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் நன்கு நெருங்கி வந்து களிப்போடு கைலாகு கொடுத்து கைகுலுக்கிக் கொள்கின்றனர். 

– 1998இல் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் கருவாகக் கொண்டு பின்னப்பட்ட சிறுகதை.

– தினகரன் வாரமஞ்சரி, 2004 நவம்பர் 14.

யூ.எல்.ஆதம்பாவா உதுமாலெவ்வை ஆதம்பாவா (பிறப்பு: ஜூன் 15 1939) இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தன் பங்களிப்பினை வழங்கிவரும் மூத்த இலங்கை எழுத்தாளர்களுள் ஒருவராக திகழ்கின்றார். இலங்கை இலக்கிய வரலாற்றில் பல தரமான எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை மணிக்குரலுக்குண்டு. ஆதம்பாவாவின் முதல் ஆக்கத்துக்குக் 'களம்' கொடுத்ததும் 'மணிக்குரலே'. 1961ம் ஆண்டு 'மலையருவி' எனும் தலைப்பிலான கவிதை மூலம் இலக்கிய உலகில் இவர் பாதம் பதித்தார். அன்றிலிருந்து இன்று வரை காத்திரமான 45 சிறுகதைகளையும்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *