தடுமாறும் உறவுகள்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 27, 2026
பார்வையிட்டோர்: 118 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

மழைக்கால மாலை நேரத்தின் குளுமை, வீட்டின் பால்கனியில் உட்கார்ந்திருந்த சுந்தரத்தின் மனதைச் சிறிதும் சீண்டவில்லை. கைபேசியில் வந்த அந்த குறுஞ்செய்தியை மீண்டும் ஒருமுறை படித்தார். 

“அப்பா, எனக்கு அமெரிக்காவில் புதிதாகத் தொடங்கியுள்ள தொழிலுக்கு உடனடியாக முப்பது லட்சம் தேவைப்படுகிறது. அந்த பழைய வீட்டை விற்றுப் பணத்தை அனுப்ப முடியுமா?”

மகன் விவேக்கின் செய்தி அது.

சுந்தரம் பெருமூச்சு விட்டார். அந்த வீடு வெறும் செங்கற்களால் ஆன கட்டிடம் அல்ல; தன் வாழ்நாள் உழைப்பு, மனைவி பார்வதி வாழ்ந்த இடம். குழந்தைகள் வளர்ந்த நினைவுகள் நிறைந்த ஒரு பொக்கிஷம். பார்வதி மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. விவேக் அமெரிக்கா சென்று ஐந்து வருடங்கள்.

தொடக்கத்தில் தினமும் பேசியவன், நாளடைவில் வாரத்திற்கு ஒருமுறை, பின்னர் மாதத்திற்கு ஒருமுறை எனச் சுருங்கி, இப்போது பணம் தேவைப்படும்போது மட்டும் அழைக்கும் நிலைக்கு வந்துவிட்டான்.

மறுநாள் காலை, சுந்தரத்தின் தங்கை மங்கலம் வீட்டிற்கு வந்தாள்.

“அண்ணன் நீங்க தனியா இருக்கீங்க..ன்னு மனசு தாங்கலண்ணே. இனி நான் உங்ககூடவே இருந்து உங்களைக் கவனிச்சுக்கிறேன்,” என்றாள் மிகுந்த பரிவோடு. 

சுந்தரத்திற்கு நெஞ்சம் நெகிழ்ந்தது. மனைவியின் மறைவுக்குப் பின் தனிமையில் தவித்தவருக்கு, உடன்பிறந்தவளின் இந்தப் பாசம் பெரும் ஆறுதலாக இருந்தது.

சில நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் மங்கலம் மெதுவாகப் பேச்சைத் தொடங்கினாள். “அண்ணே, விவேக் உன்னை மறந்துட்டான். அவன் இனி அமெரிக்காவிலிருந்து வரப்போறதில்ல. இந்த வயசான காலத்துல உன்னை அனாதையா விடாமப் பார்த்துக்கிற எனக்கு, அந்தப் பழைய வீட்டை என் பையன் பேருக்கு எழுதி வச்சிடுண்ணே. உனக்கும் ஒரு பாதுகாப்பு, எனக்கும் ஒரு நிம்மதி,” என்றாள்.

சுந்தரத்தின் நெஞ்சில் இடி விழுந்தது போல் இருந்தது. மகனின் சுயநலக் கோரிக்கையால் ஏற்பட்ட ஏமாற்றத்தை விட, அன்பு செலுத்துவது போல் வந்து சொத்தைக் கேட்கும் தங்கையின் பாசாங்கு அவரை அதிகம் காயப்படுத்தியது. 

பாசம், பிரிவு, ஏமாற்றம் என அனைத்து உணர்வுகளும் தன் அஸ்திவாரத்தை இழந்து தடுமாறுவதை எண்ணி அழுது தீர்த்தார்.

இரவு முழுவதும் சிந்தித்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தார்.

மறுநாள் காலை, வழக்கறிஞரை வரவழைத்து ஒரு பத்திரத்தைத் தயார் செய்தார். மகனை வீடியோ காலில் வரவழைத்தார்.

“விவேக், மங்கலம்… உங்க ரெண்டு பேருக்கும் அந்த வீட்டின் மீதுதான் கவலை. ஆனால் எனக்கு அந்த வீடே என் பார்வதியின் நினைவு. அதை நான் யாருக்கும் விற்கவோ, எழுதி வைக்கவோ போவதில்லை. அந்த வீட்டை ஒரு முதியோர் இல்லத்திற்கும், ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கும் அறக்கட்டளையாக மாற்றி எழுதி வைத்துவிட்டேன். 

நான் அங்கு சென்று அந்தப் பிள்ளைகளோடும் பெரியவர்களோடும் என் எஞ்சிய காலத்தைக் கழிக்கப் போகிறேன்,” என்றார் உறுதியான குரலில்.

இருவரின் முகத்திலும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் தாண்டவமாடியது.

சுந்தரம் கைபேசியை அணைத்துவிட்டு, பார்வதியின் புகைப்படத்தைப் பார்த்தார். எதிர்பார்ப்புகளும் சுயநலமும் நிறைந்த மனித உறவுகள் தடுமாறலாம், ஆனால் மனிதநேயமும் சுயமரியாதையும் என்றும் தடுமாறுவதில்லை என்பதை உணர்ந்தவராாய், தன் புது வாழ்வை நோக்கிப் புன்னகையோடு அடியெடுத்து வைத்தார்.

இரா.கலைச்செல்வி இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு  நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *