டென்னிஸ் எல்போவும் டிரிகர் பிங்கரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 28, 2024
பார்வையிட்டோர்: 1,487 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘மாமன் பிடித்து வந்த பிடி கயிறு பொன்னாலே’ என்று செங்கல் சூளையில் வேலை பார்க்கும் பெண் தாலாட்டும் கற்பனை.

‘கோவணம்கூட பொன் சரிகையாக இருந்திருக்கலாம்…’

இந்த நாஞ்சில் நாடன் பயலைக் கேட்டால், தங்க கோமணம் மலைபடுகடாம் பயன்படுத்தி இருக்கிறது என்பான்…

யாரு கேக்கதுக்கு இருக்கு? படிச்சிருந்தால்தானே மறுக்க முடியும்?

கோமணம் என்னும் சொல்லி இருந்து, கெளபீன சுத்தன் எனும் சொல்லுக்கு தாவியது கும்பமுனியின் சிந்தை….நாஞ்சில் நாடன்.


முன்மாலைப் பொழுது. உதயாதி நாழிகை இருபத்தி நான்கு இருக்கும். சற்றே சாய்ந்த சூழல் நாற்காலியில் இரண்டு கால்களையும் மேலே தூக்கி வைத்து, கக்கூஸ் போகும் தோதில், தமிழின் முற்றிப் பழுத்த எழுத்தாளர் கும்பமுனி அமர்ந்திருந்தார். வாயில், ஈத்தாமொழி வெற்றிலையும் நொய்ய நொறுங்கத் தட்டிய வறட்டுப் பாக்கும் சவைத்தபடிக் கிடந்தன. அத்தனைக்குதான் பல்பலம் இருந்தது. காது பலம், கண்பலம், மூக்கு பலம், நாக்கு பலம், நுரையீரல் பலம், இதய பலம், மூளை பலம், கும்பி பலம், குதபலம், மூலபலம், மயிர் பலம், தேக பலம், தாது பலம், காசு பலம் எல்லாம் இறங்கு கதியில் இருந்தன. பாய்ந்து பாய்ந்து கடித்தது போக இன்று பொய்க்கடி கடித்தாலேயே அபிநயம் செய்யும் பல் வேதனை காண்கிறது.

முற்றத்து மூலையில் தன்னிச்சையாக வளர்ந்து, புதரடைந்து, இரண்டாள் உயரத்தில் கவிந்திருந்த கொடுக்காப்புளி மரத்தில் இருந்து செண்பகம் மென்னடை நடந்து வந்தது. செண்பகம் எனில் பொருளாகவிலைலை எனில் செம்போத்து என்று வைத்துக் கொள்ளலாம். கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த கும்பமுனி மனத் திருஷ்டியில், ‘செம்பகம் பாய்ந்தது போல்’ என்றொரு காட்சி ஓடியது. கூடவே, ‘கூன் குருடு குண்டு பாய்ந்தது, நாங்கல் தூங்கல் நடை தாழ்ந்தது’ என்றொரு சொற்றொடரும்.

கொடுக்காப்புளிப் புதரில் செண்பகப் பட்சிகளின் கூடு இருக்கும் போலும். முன்னாட்களாய், ணை நடமாட்டடம் அதிகமாக இருந்தது. கொடுக்காப் புளி மரம் பூத்திருந்தது. கொடுக்காப்புளிக்கும் செண்பகத்துக்கும் ஏதும் தொடர்பு இருக்கலாம். நமக்கென்ன தெரியும்? கொடுக்காப்புளியைச் சீனிப் புளியங்காய் என்கிறார்கள். கவிஞர் விக்கிரமாதித்யன் ஆவலாதிப் பட்டதைப் போல- அருவியை நீர்வீழ்ச்சி என்கிறார்கள். மலையாளத்திலோ நீர் வீழ்ச்சை என்றால் ஜலதோஷம். water falls என்பதன் நேரடி மொழி பெயர்ப்பு நீர்வீழ்ச்சி. king kobra என்பதன் நேரடி மொழி பெயர்ப்பு ராஜ நாகம் ஆனதைப் போல. ஒண்ட வந்த பிடாரி, ஊர்ப்பிடாரியை ஓட்டுகிறாள். வழுதுணை என்றும் கத்தரி என்றும் பெய்ங்கன் என்றும் வாங்கி என்றும் இந்தியச்சொற்கள் குறிக்கும் காய்கறியைத்தான் இன்று egg plant என்று தமிழ்ப் பள்ளிகளும் போதிக்கின்றன. brinjal எனும் நேர்ச்சொல் கூட அநாவசியம்.

செண்பகம் மறுபடியும் புதரினுள் போயிற்று. கும்பமுனி எழுந்து அரையும் குறையுமாய் அரைபட்ட வெற்றிைைல பாக்கை படிப்புரையின் இடது ஓரத்தில் உமிழ்ந்தார். சுழல் நாற்காலியின் முன்னால் இருந்த சுழல் முக்காலி தண்ணீர்ச் செம்பு இருந்தது. பித்தளைச் செம்பு. வட்ட விளிம்பு சற்று நசுங்கி இருந்தாலும் பொன்னே போல் துலக்கி வைத்திருந்தார் தவசிப் பிள்ளை.

‘நாமென்ன தியாராஜ பாகவதரா, பொன் தட்டில் சாப்பிட்டு பொன் செம்பில் தண்ணீர் குடித்து, வெள்ளி வெற்றிலைச் செல்லத்தில் தாம்பூலம் தரிக்க?’ என்றோடியது கும்பமுனி நனவோடை.

‘மாமன் பிடித்து வந்த பால் பசுவின் பிடி கயிறு பொன்னாலே’ என்று செங்கள் சூளையில் வேலை பார்க்கும் பெண் தாலாட்டும் கற்பனை. ‘கோவணம் கூடப் பொன் சரிகையாக இருந்திருக்கலாம்… இந்த நாஞ்சில் நாடன் பயலைக் கேட்டால், தங்கக் கோமணம் மலைபடுகடாம் பயன்படுத்தி இருக்கிறது என்பான்… யாரு கேக்கதுக்கு இருக்கு? படிச்சிருந்தால் தானே மறுக்க முடியும்?’

கோமணம் எனும் சொல்லில் இருந்து. கௌபீன சுத்தன் எனும் சொல்லுக்குத் தாவியது கும்பமுனியின் சிந்தை. முதலில், கௌபீன சுத்தன் என்றால் கோமணத்தைத் தினமும் நன்கு அலக்கி உடுப்பவன் என்று நினைத்திருந்தார். பிறகு தான் புரிந்தது, பர ஸ்த்ரீ சகவாசம் இல்லாதவன் என்பது. எந்தப் பெண்ணுடனும் கலவி செய்யாதவனுக்கு என்ன சொல்? கௌபீன அதி சுத்தனா? “ஹா… ஹா… ஹா” என்று சிரித்தார் கும்ப முனி.

கொடுக்காப்புளி மரத்தில் இருந்து மறுபடியும் செண்பகம் அசைந்து நடந்து வெளியே தலை காட்டியது.

‘சீனிப் புளியமரம்… ச்சே… சீனி எனும் சொல் உருதுச் சொல்லுங்கிறாரு பேராசிரியர் அருளி… யாரு கண்டா? சீனிப் புளியங்கா பதினோராம் நூற்றாண்டுலே, பாலைவன நாடுகளில் இருந்து அரேபிய யாத்ரீகன் இந்தியாவுக்குக் கொண்டாந்தான் என்பான் எவனும் ஒரு பேராசிரியன்’ என்று பாய்ந்தார் கும்பமுனி.

“சாயா போடட்டா” என்று எட்டிப் பார்த்துக் கேட்டார் தவசிப்பிள்ளை.

“சாயா எந்த மொழிச் சொல்லுவே?” என்றார் கும்ப முனி.

“அதிலென்ன சந்தேகம்? மலையாளம் தான்”

“சும்மா சொல்லப் பிடாது… அகச் சான்று வேணும் வேய்”

“அதைத் தேடதுக்கு எவனாம் பொண்டாட்டியை ஒளி வருவான், அவன்கிட்டே சொல்லும்… வேலையத்துப் போயி நீரு கோழி முட்டைக்கு மயிரு புடுங்குகேரு!”

“நீரு சொன்னதும் சரிதாம் வே!… மலையாளம் தான் – ஆனா அதுக்கு மிந்தி பாரசீகமமாக்கும்…”

“அகச் சான்று உண்டா?” என்று கேட்ட தவசிப்பிள்ளை மேலும் கேட்டார். “என்ன எழவாம் ஆகட்டும்… ஆனா எளியேனுக்கு ஒரு சம்சியம்… பாரசீகத்தில் தேயிலைச்ை செடி வளருமா? தொலைஞ்சு போகு சவம்… இப்பம் சாயா போடட்டுமா, வேண்டாமா?”

தவசிப் பிள்ளை கண்ணுபிள்ளை அகன்றதும், கும்பமுனியின் சிந்தனைச் செம்மறி ஆடு கொடுக்காப்புளியில் தாவி மேய்ந்தது. மணிலாவில் இருந்து வந்த மரம் என்று எங்கோ வாசித்த நினைவு கொழுப் பாய்ந்தது. எந்த நூற்றாண்டோ, அறிவில்லை.

‘எங்கேருந்து வந்தா என்னா? இட்டிலி திண்ணாப் போறாதா? தட்டுக்கு எத்தனைண்ணும் தெரியணுமா? பப்பாளி போல, பிருத்திச் சக்கா போல, மரச்சீனிக் கெழங்கு போல, சவம் திங்கதுக்கு ருசியா இருந்தாப் போறாதா?’

சாலையில் இருந்து, புதிதாய் வரிந்து கட்டிச் சாய்ந்திருந்த நொச்சிமாறு படலைைையத் தள்ளித் திறந்து ஒருவர் இறங்கினார். முற்றத்தைக் கடக்க நடந்தார். நேவி நீல நிறத்தில் ஜீன்ஸ் உடுத்தியிருந்தார். மேலே சா. சந்தசாமி அல்லது பரீக்ஷா ஞாநி தோரணையிலான முரட்டுத் துணி ஜிப்பா.

‘இந்தத் துணி எல்லாம் எங்க கெடைக்கும்னு தெரியல்லே… தெரிஞ்சா நமக்கு நாலு, தவசிப்பிள்ளைக்கு நாலு தச்சுப் போட்டுக்கிடலாம்’ என்று நினைத்தார் கும்பமுனி. எதிரணியில், தவசிப்பிள்ளை. ‘வாரிக் கொண்டைக்கு பட்டுக் குஞ்சலம்’ என்று நினைத்தார்.

தோளில் கனமான ஜோல்னாப் பை தொங்கியது, கோணங்கி ஸ்டைலில். அதனுள் இருந்து தண்ணீர்ப் போத்தலின் மூடி எட்டிப் பார்த்தது. வெளியே தண்ணீர் குடித்தால் டைபாய்ட், மஞ்சக் காமாலை, வாந்தி பேதி வர வாய்ப்பு இருந்தது. என்ன நோய் வளம் இல்லை இந்தத் திரு நாட்டில்?

வேத்துப் பூத்து வந்தவரின் முகத்து புல்கானின் தாடியின் கருமை. உண்மைக் கருமையா, சாயமேற்றியதா என்று தெரியவில்லை. ‘மக்களே போல்வர் கயவர்!’

வரு விருந்தின் வியர்வை வீச்சமோ, வேற்று மனித வாடையோ, தவசிப் பிள்ளை முன்வாசலை வந்து சேர்ந்தார்.

“பாத்தா முனைவர் பட்ட ஆய்வாளன் போலத் தெரியல்லியே!” என்றார் கும்பமுனி.

“அவுனுக நடமாட்டம் தானே இப்பம் அதியமா இருக்கு!”

“அதுக்கு இனி புதுசாட்டு பத்ரம் தொடங்காண்டாமா?”

“கார்லே வரல்லே… வெங்கு வெங்குண்ணு நடந்து வாறான். சினிமாக்காரனா இருக்க சான்ஸ் இல்லே…”

“சினிமாக்காரன் எதுக்கு ஒம்மைத் தேடி வாறான்? ஒளி ஓவியம் வரையதுக்கா?”

படியேறி வந்தார். அவரே எதிரில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தார். ஜோல்னாப் பையில் இருந்த போத்தலை எடுத்துத் திறந்து, ஜிப்பாவின் முன்வாசல் நனையும்படி தண்ணீர் குடித்தார். ஜிப்பா போட்டு ஜோல்னாப் பையும் வைத்திருந்தால் அப்படித்தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது crpc 13, 28, 364. பிரிவு பி.

“கும்பமுனி, எம்பேரு புல்கானின்…”

“தாய்ளி அம்மைக்கு மடியிலே வச்சு பேரு விட்டது மாரியில்லா கூப்பிடுகான்” என்று வெளிக்குக் கேட்காமல் கறுவினார் தவசிப்பிள்ளை. அவர் உதட்டசைவில் இருந்து, காரியம் மனசிலாக்கிய கும்பமுனி, ‘சவம் விழுந்து கடிச்சிரப்பிடாதே’ என்ற முன்னெச்சரிக்கையுடன்,

“ஒரு சாயா கூடப் போடும் வே” என்றார் தவசிப் பிள்ளையைப் பார்த்து,

“அவுரு இப்பம் உம்ம கிட்டே சாயா கேட்டாரா?” என்றார் தவசிப்பிள்ளை.

“நான் காப்பி, டீ ஒண்ணுமே குடிக்கதில்லே, கேட்டேளா? சூடா ஒரு கிளாஸ் பால் கிட்டியால் கொள்ளாம்” என்றார் புல்கானின்.

“அதுக்கு இனி பால்மாடு புடிச்சிக்கிட்டு வந்தாத்தான்” என்றார் தவசிப்பிள்ளை.

‘நல்லவேளை தவசிப் பிள்ளை காப்பாத்துனாரு… இல்லாட்டா அவுரு பதிலாச் சொல்லக்கூடிய விர்த்தி கெட்ட சொலவம் ஒண்ணு உண்டும்’ என்று நினைத்தார் கும்பமுனி.

“நீரு நெனச்சதைத்தான் நானும் நெனச்சேன். எண்ணாலும் விருந்தோம்பல் தமிளர் பண்பாடுண்ணு சும்மா இருந்தேன்” என்றார் தவசிப்பிள்ளை.

“அதென்னவே தமிளர் பண்பாடு? பித்தளைத் தமிளரா, கண்ணடித் தமிளரா, அலுமினியத் தமிளரா, எவர்சில்வர் தமிளரா?”

“அந்தத் தமிளர் இல்லே… நம்ம கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே தோன்றிய தமிளர்” என்றார் தவசிப்பிள்ளை.

சுழலும் சொல்லரங்கமாகப் பட்டது புல்கானினுக்கு.

“இப்பம் நான் என்ன செய்யட்டும்? அவுரு காப்பி, டீ குடிக்க மாட்டாரு… பாலுக்கு நம்மட்ட கறவை இல்லே… கொஞ்ச நேரம் செண்ணு, சோத்துக்கு உலை வைப்பேன். சோறு சுமத்தி, ரெண்டு உப்புப் பரலு போட்டு ஆத்தி, செரட்டையில ஊத்திக் குடுக்கலாம். கடிக்கக் கருப்பட்டியும் இருக்கு…” என்றார் தவசிப்பிள்ளை. அவர்கள் கட்டைப் பஞ்சாயத்து தீரட்டும் என்று காத்திருந்தார் புல்கானின். ‘வெளீல இப்படி கட்டப் பஞ்சாயத்துப் போனா ஐந்நூறு அறுநூறு கோடி தேத்தீரலாம்’ என்று நினைத்தார்.

“சரி! வந்த காரியத்தைப் பாரும்” என்றார் கும்பமுனி. பார்ப்பது என்பது மிக அபாயகரமான குழூஉக் குறி. ஒருவேளை கும்பமுனி இதுவரை எழுதிய, படைத்தவனுக்கே பொறுக்காத, அழிச் சாட்டியங்களும் கறட்டு வழக்குகளும் கணக்கில் கொண்டு, ஜோல்னாப்பையில் கைத்துப்பாக்கியோ, ராம்பூர் சூரியோ, மொலட்டோவ் காக்டெய்லோ இருக்கக் கூடும் என்று அஞ்சினார். ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்’ என்பதும் தமிழன் வாக்குத் தானே!

தவசிப் பிள்ளை மனதில் குரூரமான கற்பனை ஒன்று ஓடியது. குத்து வாங்கும்போது, கும்பமுனி, ‘ஹே ராம்’ என்று சொல்லி விடுவாரோ என. சொன்னால், அவர் வெள்ளாள இந்துத்வா பிற்போக்கு திருத்தல்வாத எழுத்தாளர்’ என்பது உறுதியாகிவிடும். ‘படைச்சவனே’ என்றால் பிழைத்தார். ஆனால் கும்பமுனி எளிதில் இரட்சைப் படும் சாதி அல்ல. ‘வக்காளி குத்தீட்டானே’ என்பார். அல்லது ‘நாட்டுலே குத்திக் கொல்லப்பட வேண்டியவன் லெச்சம் பேரு இருக்கான். கத்தியே நம்மட்டே கொண்டுக்கிட்டு வந்திருக்கான்’ என்பார்.

அனிச்சையாகக் கும்பமுனி எழுந்து செலவாதிக்குப் போனார். இன்னும் பத்து நிமிடங்களுக்குள் அவர் சுடப்பட்டோ, குத்துப்பட்டோ, குண்டெறி பட்டோ சாக மார்க்கமில்லை என்று உணர்ந்த தவசிப்பிள்ளை அடுக்களைக்குள் கைசோலியாகப் போனார்.

புல்கானின் சற்றுநேரம் தாடியைப் பறண்டலானார். ஏதோ தத்துவ விசாரமாக இருக்கம், அல்லது புரட்சி விசாரமாக இருக்கும். நமக்கோ அன்ன விசாரமே இன்னும் ஆறினபாடில்லை என்று எண்ணிக் கொண்டார் தவசிப்பிள்ளை.

கும்பமுனி தன்னை மீட்டுருவாக்கம் செய்து கொண்டு, யதாஸ்தானத்தில் அமர்ந்தார். சூழலுக்குத் தகுந்தாற்போல, தன்னைத் தகவமைத்துக் கொண்டு தனது தாடிப் பிரதேசத்தைத் தடவிக் கொண்டார். மறுபடியும் செண்பகத்தின் நடமாட்டத்தை அவதானித்தார். வந்தவருக்கு வியர்த்து வழிந்தது. வந்து உட்கார்ந்ததில் இருந்து கடும் உழைப்பு எதனையும் அவர் கட்டுடைக்கவில்லை. மேலும் அது வியர்வை பெருக்கும் பருவகாலமும் இல்லை. எனினும் வியர்க்கவில்லை என்றால் அவர் என்ன தோழர்-

சாவகாசமாக வாய் திறந்தார் புல்கானின். பீடிப் புகையில் கருத்த உதடுகளும், வெற்றிலைக் காவி ஏறிய பற்களும் தெரியச் சிரித்தார்.

“பூமி வெப்பமடைதல் பற்றி நீங்க என்ன நெனக்கிறீங்க?”

“நீங்க பீடி குடிப்பதை நிறுத்தலாம்னு நினைக்கிறேன்”

“பசுமை பேணுதல் பற்றிச் சொல்வீங்கண்ணு எதிர்பார்த்தேன்”

“நீங்க எதிர்பாக்கதைப் பேசுனா அவுரு கும்பமுனி இல்லேப்பா” என்றார் தவசிப்பிள்ளை.

“பூமி வெப்பமடைதலைத் தவிர்க்க என்னென்ன செய்யலாம்?”- புல்கானின்

“நீரு என்னைச் செவ்வி எடுக்கதுக்கா வந்திருக்கேரு?” – கும்பமுனி.

“செவ்விண்ணா என்ன பாட்டா?” என்றார் தவசிப் பிள்ளை.

“பேட்டிண்ணு சொன்னா… பொறவு நேர்காணல்ணா… அந்தால நேர்முகம்ணா… இப்பம் செவ்வி. சுத்தத் தமிள்லே இன்டர்வியூண்ணும் சொல்லுவா…”

“ஓ! அதுவா? அதுக்கு நீரு இப்பம் யாருக்கும் செவ்வி குடுக்கதில்லையாமே?”- தவசிப்பிள்ளை.

“இப்பமும் எங்கே குடுக்கேன்? அவுரு என்னமோ கேக்காரு! நானும் என்னமோ சொல்லுதேன்”

புல்கானின், ஜோல்னாப் பையை மடியில் இருந்து கீழே இறக்கக் காணோம். சபரிமலை ஐயப்பனுக்கு நாற்பத்தோரு நாள் விரதம் இருந்து மலையேறும்போது, தலையில் தூக்கிவிடப்படும் இருமுடிக்கெட்டு ஜோல்னாப் பை போலும்.

“அதைக் கீழே வையுமே… கைப்புள்ள போல செமந்துக்கிட்டே இருக்கீரே!” என்றார் கும்பமுனி.

“அது கெடக்கட்டும்… பொறுப்புள்ள எழுத்தாளரே, சுற்றுச் சூழல் ஆர்வலரா, இந்த பூமிக்கு நாம என்னமாம் செய்யாண்டாமா?” புல்கானின்.

“நீரு ஆள விடமாட்டேரு போல்ருக்கே! உடனடியா பூமிக்கு வெப்பத்தை பத்து டிகிரி குறைக்காம இங்கேருந்து எந்திரிச்சுப் போக மாட்டேரா? எங்கேருந்து வாறேரு. என்ன உத்தியாகம், ஒரு பிடியும் தரமாட்டங்கேரு… வந்த நேரத்திலேருந்து பூமி வெப்பம், பூமி வெப்பம்னு பொலம்புகேரு… எனக்கொரு சந்தேகம்! ஒம்ம தொழில் என்ன? புரட்சியா?”

தவசிப்பிள்ளைக்கு கும்பமுனிமேல் எரிச்சலாக வந்தது.

“நீரு என்னத்துக்க ஞானி மடம்ணா யோனி மடம்ங்கேரு?”

“ஓய் கண்ணுபிள்ளே… நீரு இப்பம் மொதப் பக்கத்துக்கு ஓடியே போயி கதைத் தலைப்பை வாசியும்… அப்பம் உமக்கு மனசிலாகும். பொறவும் மனசிலாகலேண்ணா, நல்ல யதார்த்த கதையாட்டு தேடிப் பிடிச்சு வாசியும்… உடம்புக்கும் நல்லது”

“ஐயா, நாம பூமி வெப்பமடைதல் பற்றிப் பேசீட்டிருந்தோம்… பேச்சு தடம்புரண்டு போயிட்டு…” – புல்கானின்.

“இவுரு பேச்சு எப்பம் தடத்திலே போயிருக்கு? பாவி போன எடம் பாதாளம்லா! அது கெடக்கட்டும், சார்வாள் எங்கேருந்து வாறயோ?”

“நானா? அது என்னத்துக்கு இப்போ? இந்த பூமி வெப்பமாதல் பற்றிய ஆராய்ச்சியிலே இருக்கேன்” -புல்கானின்.

“நான் சொன்னா நீங்கள்லாம் கேக்க மாட்டயோ… கௌட்டுச் செறுக்கிவிள்ளே வயசான காலத்திலே பைத்தியம் புடிச்சு ஒளறுகாம்பியோ! என்னத்துக்கு கூதி கொழுத்து அரிமாணையிலே ஏறணும்?”

“நான் அந்த ஆய்வுக்காகத்தான் வந்தேன்… சத்தீஸ்கர்லே இருந்து நேரா வாறேன்… அடுத்தாப்பிலே சம்பல்பூர் போகணும்…”

சம்பல்பூர் என்று கேட்டதும் கும்பமுனிக்கு அஸ்தியில் குளிர் பாய்ந்தது. ‘ஒண்ணும் சொல்லுகதுக்கு இல்லே… தோக்கோ, எறிகுண்டோ, கண்ணி வெடியோ வச்சிருந்தாலும் வச்சிருப்பான்’ என்று வெறயல் வந்து நடுங்கினார் கும்பமுனி.

‘இண்ணைக்கு உமக்கு சாக்காலம்தான்… சவம் சங்கடம் என்னாண்ணா சனிப்பொணம் தனிப்போகாது…. அதான் நமக்குக் கவலையாட்டு இருக்கு…’ என்று தவசிப்பிள்ளை எதிர்ப்பந்து வீசினார்.

ஒரு ஒத்து தீர்ப்புக்கு வந்த விதமாக, தனது குரலின் பழி தரப்பு அங்கத்தின் டிகிரியை இறக்கிக் கொண்டு கும்பமுனி மொழியலுற்றார்.

“பொறுமையாட்டு கேக்கதுண்ணா சொல்லுகேன்…. குறுக்க மறிச்சுப் பேசாமக் கேக்கணும்… குறிப்பெடுத்துக்கிடலாம். எனக்கு சிந்தனை ஓட்டம் தடைப்பட்டுப் போச்சண்ணா பொறவு ஒண்ணும் வௌங்காது”

“ஆமா ! இவுரு சிந்தனை பனைவெட்டிப் பொளந்த மாரி போவும்பாரும் எப்பவும்” என்றார் தவசிப்பிள்ளை.

“நீரு சும்மா கெடவும் ஓய்… என்னா, கெவுணிக்கேரா, சத்தீஸ்கரு?”

“சத்தீஸ்கருண்ணா கவாஸ்கருக்குப் பக்கத்து ஊரா?” என்றார் தவசிப் பிள்ளை.

“கெட்டுச் சோத்துக்குள்ளே எலியை வச்ச மாரி, இந்த எழவெடுப்பானை வச்சுக்கட்டு உருப்படியா என்ன உரையாடல் நிகழ்த்த முடியும்?” கறுவினார் கும்பமுனி.

“நீங்க சொல்லுங்க தோழர்” என்றார் புல்கானின்,

கும்பமுனிக்கு மயிர்க்கூச்செறிந்தது. அவர் பிற்போக்கு மிதவாத சறுக்கல்வாத எழுத்தாளராக அறியப்படுகிறவர். அவரைத் தோழர் என எவரும் இதுவரை அழைத்ததில்லை. காரைக்காலம்மையை, ஆலகாலம் உண்ட, பனிமலை நீலகண்டன், “எங்க அம்மையில்லா!” என்று சொன்னது போல, உருகினார் கும்பமுனி.

கண்ணிர் மல்க, “சொல்லுங்க தோழர்” என்றார். புல்கானின் குறிப்புப் புத்தகமும் பேனாவும் கையுமாக நிமிர்ந்து உட்கார்ந்தார். “நாயி கொலச்சு நேரம் விடிஞ்சாப்லே தான்” என்று பிறர் கேட்காமல் ஆனால் கேட்கும் எனத் தெரிந்த முணுமுணுத்து உள்ளே போனார் தவசிப் பிள்ளை.

“மொதல்லே வருசத்துக்கு பந்திரெண்டு மானிய விலை கேஸ் சிலிண்டர் என்பதையெல்லாம் எடுத்துக்கிட்டு வருசத்துக்கு ஒரு சிலிண்டர் தாம்ணு அரசாணை போடணும். அப்பம் எல்லாத்தையும் பச்சையாத் திங்கப் பழகுவான். பூமியும் சூடாகாது. ரெண்டாவது உலகத்திலே எவனும் பீடி, சிகரெட், சுருட்டு, பைப் குடிக்கப் பிடாது… (பாரதிமணி அண்ணாச்சி கோவப்பட்டாலும் குத்தமில்லை…) கேன்சர் வராது. பூமியும் சூடாகாது”.

“குசு விடலாம்?” என்றார் தவசிப்பிள்ளை.

“ஆண்டிக்கு எந்தக் கவலை? அந்தக் கவலை! ஓமக்கு உள்ள இருப்புக் கொள்ளலையாக்கும்! மூணாவது எல்லா காரு, ஸ்கூட்டரு, மோட்டார் பைக்கு, ஆட்டோ, லாரி, வேன் எல்லாம் தடை செய்யணும்”

“ஏன் சைக்கிள விட்டுட்டேரு பாட்டா?” தவசிப்பிள்ளை.

“அவுரு கெடக்காரு… தோழர், நீங்க எழுதுங்க… நாலாவது கறிக்குக் கருவேப்பிலைக்குக் கூட எவனும் செடிகளை ஒடிக்கப் பிடாது…”

“சந்தனம், செம்மரம், தோதகத்தி, தேக்கு, கருமருது, வேங்கை எல்லாம் காட்டிலே வெட்டிப் பொழைக்கப் பட்டவன் கஞ்சியிலே மண்ணை வாரிப் போடுகேரே” தவசிப்பிள்ளை.

“வாழைமரம் குலைதள்ளி பழுத்த பிறகு வெட்டலாம்”

“மறைவோர் வேள்வி நடத்தலாமா தோழர்?” என்றார் தவசிப்பிள்ளை, நக்கலாக கும்பமுனியைப் பார்த்து.

“நீரு எப்பம் ஓய் தோழர் ஆனேரு? கடிச்சுக் கடிச்சு நீரு சங்கதியைக் கடிச்சிரப் பிடாது… பின்னே ஒரு காரியம் தோழர் புல்கானின், நாட்டுப் புறத்திலே வெயிலடிக்குண்ணு சொல்லிப் போட்டு வெளிநாடு போயி ரூமைச் சூடாக்கி, வெந்நியிலே குளிச்சிக்கிட்டு கெடக்கானுக பாரும். அவுனுக பாஸ்போர்ட் எல்லாம் ரத்து பண்ணணும்”

“இதெல்லாம் செய்தா பூமி வெப்பமாகது கொறையுமா?” என்றார் தவசிப்பிள்ளை.

“செய்து பாத்துக்கிட்டு வரட்டும்… இல்லேண்ணா வேற மருந்து குடுப்போம்…”

சற்று யோசித்துவிட்டு தவசிப்பிள்ளை சொன்னார்.

“பாட்டா, வில்லி பாரதத்திலே ஒரு பாட்டு சொல்வேருல்லா… சத்துருக்கனன் சொன்ன தாட்டு…”

“வில்லி பாரதத்துக்கு சத்துருக்கனன் எதுக்கு வந்தான்?”

“பின்னே வேற யாரு? ஆங்… ஆரு? ஆமா… நகுலன்….”

“அவுரு செத்து ஏழெட்டு வருசம் ஆச்சே! எரங்கல் கட்டுரை எல்லாம் எழுதினானுகளே!”

“அவுரு இல்லே… இது மகாபாரதம்… நீரு தானே பாட்டா சொன்னேரு… ஆளைப்போட்டு பைத்தியாரன் ஆக்காதீயும்… ஒரு பாட்டுச் சொல்வேருல்லா… கண்ணனைக் கெட்டிப் போட்டுட்டா மாபாரத யுத்தம் வராமக் காக்கலாம்ணு… அது மாரி உம்ம வாயைக் கெட்டினாலே போரும்… அப்பிடித் தீயால்லா துப்புகேரு…”

“தோழர், இங்க ரெஸ்ட் ரூம் எங்க இருக்கு?” என்றார் புல்கானின்.

“அதான் சரி! கொஞ்சம் படுத்து எந்திரியும். வெயிலும் தீயாத்தான் கொளுத்துகு!” என்றார் தவசிப் பிள்ளை.

“அவுரு அதைக் கேக்கல்ல வே? கக்கூஸ் எங்க இருக்குன்னு கேக்காரு!” என்றார் கும்பமுனி.

“சத்தீஸ்கர்லே ரெஸ்ட் ரூம்னா கக்கூசா? அப்ப ஒறங்கப்பட்ட முறியைக் கக்கூஸ்ம்பாளா?”

“சும்மா சலைக் காதையும் கெடந்து… அவரைக் கூட்டீட்டுப்போய் காணியும்…”

புல்கானினை ஆற்றுப் படுத்திவிட்டு வந்த தவசிப்பிள்ளை, சுழல் நாற்காலியில் கிடந்த அறிவு ஜீவி ஜோல்னாப் பையின் வாயைத் தூக்கிப் பார்த்தார்.

“வே…. வே… இது என்ன விர்த்தி கெட்ட வேலை…! அதைக் கீழே வையும்” என்றார் கும்பமுனி.

கும்பமுனி சொல்வதற்கெல்லாம் எதிர்மறையாகச் செயலாற்றிப் பழகிய தவசிப்பிள்ளை, மேலும் ஊக்கம் பெற்றவராக, பையின் வாயை நன்றாகத் திறந்து, சற்றுத் திகைப்பை முகத்தில் தேக்கி, உள்ளே கைவிட்டு, சுருண்டு கிடக்கும் கருநாகப் பாம்பு எனப் பளபளக்கும் கைத்துப்பாக்கி ஒன்றினை எடுத்து, கும்பமுனியை நோக்கி நீட்டி, தமிழ் சினிமா சோட்டா வில்லன் போல, மேலும் கீழுமாக ஆட்டினார். கும்பமுனிக்கு வயிறு கலங்கியது. “இன்னும் ஒண்ணு ரெண்டு விருது மிச்சம் கெடக்கு, அதையும் வாங்கீட்டுச் சாவலாம்ணு பாத்தா, பாவி விடமாட்டான் போலிருக்கே!” என்று அலறினார்.

“ஓய்! கொள்ளையிலே போவான்… சுட்ராதயும் வே… நம்மால சுட்டாள், சுட்டான், சுட்டேன் எல்லாம் எழுத ஆவியில்லே… அதை உள்ளே வையும். நான் இனி வாயைத் திறக்கல்லே… காணத் தொவையலு நல்லால்லேண்ணு கூடச் சொல்லல்லே… வே… சொன்னாக் கேளும்… இது பிள்ள விளையாட்டுல்ல… சம்மதிச்சேன் வே… கலைஞர் தான் ஒலகத் தமிழினத் தலைவரு… அடுத்த தலைவரு தளபதிதான்வே… என்னை விட்டுடும் ஓய்…”

மீண்டும் துப்பாக்கி மேலும் கீழும் முற்போக்கும் பிற்போக்குமாய் ஆட்டி, ஆயர்பாடிக் கண்ணனின் என்.டி.ராமாராவ் சிரிப்பொன்றைச் சிந்தினார் தவசிப் பிள்ளை.

குலை பதறினார் கும்பமுனி.

“ஓய்… திண்ண சோத்துக்கு நண்ணி காட்டும் வே… வேய், கண்ணுவிள்ள… நான் என்னமாம் தப்பாய் பேசீருந்தா நமக்குள்ளே பேசித் தீத்துக்கிடலாம்… யதார்த்தவாத முற்போக்குக் கதை வேணும்ணாலும் மேற்கொண்டு எழுதுகேன்… இந்தத் தோக்குச் சனியனைப் பைக்குள்ளே வையும்…”

கண்ணுப்பிள்ளைக்கு சிரிப்பாணி கொப்பளித்துப் பாய்ந்தது. ‘பாட்டா எளுத்துலே என்ன வீரம் காட்டுகொரு… ஒரு தோக்கைக் கண்டதும் கட்டிப் பீ எல்லாம் காடிப் பீ ஆயிற்று பாத்தேளா? எல்லாருக்கும் உயிரு கருப்பட்டிதான் போல்ருக்கு’ என்று குதியாளம் போட்டது மனது. கக்கூசில் தண்ணீர் விடும் சத்தம் கேட்டது.

“உள்ளே வையும் வேய்… சனியன், தாடிக்காரன் இப்பம் வந்திருவான். அபாயத்தை எதுக்குவே, அறவிலை குடுத்து வாங்கதேரு” என்றார் கும்பமுனி.

“வைக்கேன்… அதுக்கு மிந்தி நீரு எனக்கு ஒரு வாக்குத் தரணும்”

“என்ன வாக்கு வே! சீக்கிரம் சொல்லி அழும்… எழவு கைகேசி கேட்ட வரமாட்டுல்லா இருக்கும் போலிருக்கு…”

“நீரு எனக்க வாழ்க்கை வரலாறு எழுதணும்”

“அது ஓமக்கு என்னத்துக்கு வே? ஒரு வரீல எளுதீரலாமே! கஞ்சியும் காணத் தொவையலும் வைப்பான், கண்டம் வெட்டிப் போட்டு கெளங்கு அவிச்சு உப்பும் மொளகும் நுணுக்குவான்ணுட்டு…”

“எளுதுவேரா மாட்டேரா?” என்று கேட்ட தவசிப்பிள்ளை துப்பாக்கியின் குதிரையில் கையை வைத்தார். கொஞ்சமா தமிழ் சினிமா பார்த்திருப்பார்! அலறிக் கையை உதறியதில், கும்பமுனியின் வலது கை முட்டு’ணங்’ என்று சுவரில் மோதி சீவன் போவது போல் வலித்தது. இனி கொஞ்ச நாளைக்கு டென்னிஸ் எல்போதான்.

“உசிரு போச்சே!” என்று கத்தியவாறு, “சரிவே! எழுதித் தாறன்… எத்தனை பக்கத்திலே வேணும்? பதினெட்டாயிரம் பக்கம் போருமா? இப்பம் அதை உள்ளே வையும்…”

‘எடுத்தது, கண்டார். குற்றது கேட்டார்’ என்று கம்பன் சொன்னதைப் போல, எடுத்ததும் தெரியாமல், வைத்ததும் தெரியாமல் துப்பாக்கியைப் பைக்குள் வைத்துவிட்டு, தவசிப் பிள்ளை, ‘ஒண்ணுந் தெரியாத பாப்பா, ஒரு மணிக்குப் போட்டாளாம் தாப்பா’ என்பதுபோல் நின்றார்.

சாவகாசமாக, மூகத்தைத் துடைத்தவாறு வந்த தோழர் புல்கானின், பையை எடுத்து, உள்ளே சோதிப்பது போல் பார்வையிட்டு, நாற்காலியில் அமர்ந்தார். பை மறுபடியும் மடிப்பிள்ளை ஆயிற்று,

நேற்றுப் பிறந்த குழந்தை போல் முகபாவம் வைத்து தவசிப்பிள்ளை சொன்னார்.

“ரொம்ப நேரமாச்சே, நீங்க வந்து… நான் ஊருக்குள்ளே போயி கொஞ்சம் பசும்பால் வேண்டீட்டு வாறேன்…”

‘தாய்ளீ, சாவுக்குப் பயந்து ஓடுகான் பாரு. நம்மை ஒத்தையில விட்டுக்கிட்டு… சாட்சி சொல்லக்கூட ஆளிருக்காது… இந்த இலக்கியப் பத்திரிகைக்கு எல்லாம் யாரு தாக்கல் சொல்லுவா… அடுத்த மாசம் எரங்கல் கட்டுரை போடாண்டாமா’ என்று பதறினார் கும்ப முனி.

தவசிப் பிள்ளைக்கு, கும்பமுனியின் ஆவி கிடந்து துடிப்பது கேட்டது. ‘கொஞ்ச நேரம் கெடந்து அவதிப் படட்டும்’ என்று நினைத்தார்.

“இல்ல, எனக்கு ஒடனே பொறப்படணும்… போற வழியிலே என்னமாம் பாத்துக் கிடுதேன். பாக்கணும்ணு தோணிச்சு, பாத்தாச்சு! வரட்டுமா தோழர்…” என்றார் புல்கானின்.

எழுந்து, ஜோல்னாப் பையைத் தோளில் தொங்கவிட்டு, ‘வறேன் தோழர்’ என்ற இருவருக்கும் பொதுவாகக் கைகூப்பிவிட்டு, தோழர் புல்கானின் நடந்து சாலைக்கு விரைந்தார்.

ஒரு ‘லால் சலாம்’ தப்பியது என்று ஆசுவாசப்பட்ட கும்பமுனி, தவசிப் பிள்ளையைப் பார்த்துச் சொன்னார்.

“தோழர், கண்ணுப் பிள்ள! ரொம்ப ஆயாசமாட்டு இருக்கு… கடுப்பம் கூட்டி, பஞ்சாரை நெறயப் போட்டு? ஆத்தாம, கொதிக்கக் கொதிக்க ஒரு கட்டன் போடுதேரா? நல்லா இருப்பேரு! போற வழிக்குப் புண்ணியமாட்டுப் போகும்” என்றார்.

செண்பகம், கொடுக்காப்புளி புதரில் இருந்து மறுபடியும் எட்டிப் பார்த்தது.

– மணல் வீடு, அக்டோபர் 2014.

நன்றி: https://nanjilnadan.com

நாஞ்சில்நாடன் நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *