ஞானம் வந்த பின்பே…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 21, 2025
பார்வையிட்டோர்: 7,514 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

பொழுது நன்றாக விடிந்து விட்டது. நாய் குரைப்பைத் தொடர்ந்து,“ பால் என்ற செல்வியின் குரல் கேட்டது. ‘டாணென்று ‘ ஆறு மணிக்கு அவள் ஆறு மணிக்கு அவள் பாலை போட்டு விடுவாள். அவள் சைக்கிளின் பின்னால் இரண்டு பக்கமும் பெரிய பையை மாட்டி அதில் பால் பாக்கெட்டுகளை வைத்துக் கொண்டு வருவாள் . அவள் பின்னாலே நாலு நாய்கள் ஒடி வருவது கண் கொள்ளாக் காட்சியாய் இருக்கும். பிஸ்கோத்தை அதற்கு வீசுவாள். நன்றிக் கடனாக நாய்கள் அவள் பால் பாக்கெட்டுகள் போட்டு முடிக்கும்வரை சைக்கிளின் பின்னாலேயே வந்து கொண்டிருக்கும் – காவலாய்!

எனக்கு அவள் வந்தது நிம்மதியை அளித்தது. காபி சீக்கிரம் கிடைத்து விடும். நித்யா, செல்வி வந்தவுடன்தான் காபியைக் கலப்பாள். சிறிது நேரம் ஆயிற்று. நித்யா ஒரு டம்பளரில் காபியைக் கொண்டு வந்து ” டங்” என்று என் அருகில் வைத்து ” காபியை எடுத்துக்கோங்கோ ” என்று கோபத்துடன் கூறினாள். அவள் வைத்த வேகத்தில் காபி சிறிது கீழே சிதறியது.

நித்யாவுக்கு வயது நாற்பது ஆகிறது. அவள் குழந்தையாய் இருக்கும் போது என் தோளில் போட்டு விளையாட்டு காட்டியிருக்கிறேன். இப்பொழுது அவள் ஒரு குழந்தைக்கு ஒரு தாய்…

அவளிடம்தான் நான் புகலிடம். அதனால் அவள் கோபத்தைப் பொறுத்துத்தானே ஆகவேண்டும். . ஆம், என் அக்கா பெண் நித்யா வீட்டில்தான் ஒண்டி இருக்கிறேன். அதுவுமில்லாமல் எனக்குக் கால் முட்டி அடிப்பட்டு செயலற்றுப் போய் விட்டதால் உட்கார்ந்துகொண்டு, நகர்ந்து நகர்ந்துதான் போகவேண்டும் அதுவும் மிகச் சிரமப்பட்டு.

”ஏம்மா காபியைப் பார்த்து வைக்கக் கூடாதா?” என்று மெதுவாகக் கேட்டேன்..

”உங்களை மாதிரி நான் சும்மா உட்காரவில்லை. எனக்கு எத்தனையோ வேலை சமையல் முடிக்கணும். சுலோக வகுப்புக்குப் போகணும்..”

நான் எதுவும் பேசவில்லை . பேசினால் சண்டையும் சச்சரவும்தான் உண்டாகும்..

என் நினைவலைகள் பின்னோக்கிச் சென்றன.

நான் அப்போது தஞ்சாவூரில் ஒரு அலுவலகத்தில் வேலையாயிருந்தேன். நான் திருமணமே செய்து கொள்ளாமல் ஓண்டிக் கட்டையாய் காலத்தைக் கடத்தி விட்டிருந்தேன். ஓய்வு பெற்றதும் ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் போய் சேர்ந்து கடைசிக் காலத்தை நிம்மதியாய்க் கழிக்கலாம் என்று நினைத்திருந்தேன். பத்து இலட்சம் வரை சேர்த்து வைத்திருந்தேன். ஓய்வு பெறும் வேளையும் வந்து விட்டது.

அந்தச் சமயத்தில்தான் நித்யா என்னைப் பார்க்க வந்திருந்தாள் . கண்ணில் மைதீட்டி நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு வைத்து பார்ப்பதற்கு வசீகரமாய் இருந்தாள்.. “மாமா நீங்க ஓய்வு பெற்றதும் என் வீட்டில் வந்து இருங்களேன். என் கணவர் அடிக்கடி வெளியூர் போய் விடுகிறார். உங்களை விட்டால் எனக்கு நெருங்கிய சொந்தம் யாருமில்லை. தாய்மாமாவான நீங்க மறுக்காமல் எங்க கூட வந்து இருக்கணும், நீங்கள் இருந்தால் எனக்கு நல்ல துணை. என் பையன் மாதவனுக்கு எட்டு வயசாகிறது. அவனுக்கு ஆட்டிசம்”.

”ஆட்டிசம்” என்றால் என்ன ? அது மூளை சம்பந்தபட்ட. வியாதியா?”

“சே, சே! நீங்க நினைக்கிற மாதிரி அது வியாதியே இல்லை. அது வளர்நிலை குறைபாடு. எண்ணங்கள் புரிதல், கற்றுக் கொள்வது இவற்றில் ஏற்படும் குறைபாடு. பெயர் சொல்லிக் கூப்பிட்டால் குழந்தை திரும்பிப் பார்க்காது. கண்ணோடு கண் பார்க்காது. தேவையில்லாமல் அழும். காரணமில்லாமல் சிரிக்கும். விரும்பும் ஒரு விஷயத்தைத் திரும்ப திரும்பச் செய்ய விரும்பும். மாற்றம் இருந்தால் சிரமப்படும். சுருக்கமாகச் சொன்னால் சிறப்பு குழந்தை. நம்ம மாதவனால் பேச முடியாது“ என்றாள் மையிட்ட கண்களில் ஈரம் கசிய.

“நீயே சிரமப்பட்டுக் கொண்டிருக்கே. நான் வேறே எதுக்கு? எனக்கு என்ன பெண்டாட்டியா, சந்ததியா ? என்னாலே யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வேண்டியதில்லை. நான் முதியோர் இல்லத்தில் சேரலாம் என இருக்கிறேன்..”

“நல்லா இருக்கே நீங்க சொல்றது. உங்களாலே எனக்கு என்ன பிரச்சனை ? உங்களை என் அப்பா மாதிரி கவனிச்சுக்கிறேன். என் கணவராலேயும் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் வராது. மாசத்திலே பாதி அவர் வெளியூரில் இருப்பார். வாசலில் இருக்கிற அறையை உங்களுக்கு தந்து விடுகிறேன். அதனோடு பாத் ரூம் சேர்ந்திருக்கு. அதில் நீங்கள் சவுகரியமாய் இருந்துக்கலாம். எங்கள் கூடவே இருந்துடுங்களேன். கடன் வாங்கி வீட்டைக் கட்டி விட்டேன். என்னால் வட்டி கொடுக்க முடியவில்லை. பத்து லட்சம் எனக்குக் கொடுத்து உதவுங்களேன் மாமா” என்றாள்.

இவள் நான் பெறாத பெண் . உடம்பு சரியில்லை என்று படுத்துவிட்டால் முதியோர் இல்லத்தில் யார் கவனிக்கப் போகிறார்கள்.? அக்கா பெண் பாசத்தோடு பார்த்துக் கொள்வது போல் ஆகுமா? இருக்கிற பணத்தைக் கொடுத்து விட்டு வாழ்நாள் பூரா அங்கேயே ஒண்டிக் கிடப்பதுதான் புத்திசாலித்தனம் என்று எனக்குத் தோன்றியது. அதன்படியே என் பணத்தை அவளிடம் கொடுத்துவிட்டு அவள் வீட்டில் நான் வசித்துக் கொண்டிருக்கிறேன்.

ஒரு தருணத்தில் நாம் எடுக்கும் முடிவுகள் சரியானவை என்று நாம் நினைக்கிறோம். அந்தக் கணத்தில் அவை சரியானவை என்று நமக்குத் தோன்றுகின்றன. நாம் எடுத்த முடிவு சரி அல்லது தவறு என்பதைக் காலம்தான் பதில் சொல்லும் என்பதை அப்போது நான் அறியவில்லை.

“மாதவா, பாத்ரூம் போகணுமா? வாடா போகலாம் “ என்று அவனைக் கழிவறைக்கு அழைத்துச் சென்றாள் நித்யா.

அவளால் எனக்குச் சகாயம் இருக்குமென நினைத்தேன்.

சாப்பிடுவேன், பேப்பர் படிப்பேன், நல்லா தூங்குவேன். பொழுது ஆனந்தமாய் கழிந்தது.

நித்யா பக்தியில் அதிக நேரம் செலவிட்டாள். அவள் பூஜை செய்யும் போது இடியே விழுந்தாலும் எழுந்திருக்க மாட்டாள். அவள் கணவர் பதினைந்து நாளுக்கு ஒரு நாள் வருவார். அடுத்த நாள் கிளம்பி விடுவார்.

இப்போதெல்லாம் நித்யா வெளியே போகும் போது மாதவனை என் அறையிலிருக்கும் நாற்காலியில் கட்டிப் போட்டு விட்டுப் போய் விடுவாள். .நான் அவனைப் பார்த்துக் கொள்ள வேண்டுமாம். அவனைப் பார்த்து என் மனம் பரிதவித்தது..

நானும் அவனிடம் ஏதாவது பேசுவேன். அவன் பதில் பேச மாட்டான். அவன் கண் என்னைப் பார்க்காது. சில சமயம் அவனிடமிருந்து உறுமல் மட்டும் வரும்.

“மாதவா, நான் கால் ஒடிஞ்சி போய் கிடக்கிறேன். தஞ்சாவூரில் நான் ஒரு வீட்டில் இருக்கும்போது எதிர் போர்ஷ்னில் குடியிருந்த தஞ்சாவூர் பட்சிராஜன் என்பவருக்கு உதவி செய்திருக்கிறேன். அவருக்கு இரண்டு காலும் கிடையாது. காலையில் இயற்கை உபாதையை போக்குவதற்கும், அவர் குளிப்பதற்கும் உதவி செய்வேன். அவருடைய மனைவி இறந்து விட்டார். ஒரே பையனும் சேரி பெண்ணை கல்யாணம் செய்துகொண்டு வீட்டை விட்டு ஓடி விட்டான். அவன் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை. சில சமயம் இரவு கூட அவர் என்னை உதவிக்கு அழைப்பார். நான் போய் உதவி செய்துவிட்டு வருவேன். அந்த மாதிரி இரண்டு வருடம் அவருக்கு உதவி செய்தேன். மனுசன் மாரடைப்பில் போய் விட்டார்.”

மாதவனிடமிருந்து எந்தப் பதிலும் வராது. அவன் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருப்பான்.

“மாதவா நம்ம இரண்டு பேருக்கும் ஒரே நிலைமை வீட்டுக்குள் அடைபட்டு இருக்கிறோம் பார்த்தாயா?”

“என்ன யாருகிட்டே பேசிண்டு இருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டே வாட்ச்மேன் பார்த்தசாரதி வந்தான். பார்த்தசாரதிக்குக் காலை எட்டு மணியிலிருந்து இரவு எட்டு மணிவரை வேலை.

”மாதவனிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். நம் மனதிலுள்ள குறையை யாரிடமாவது சொல்லிவிட வேண்டுமல்லவா? யாரும் இல்லையென்றால் சுவற்றிடமாவது சொல்லி அழ வேண்டும். அவனுக்கு எதுவும் புரியாவிட்டாலும் நான் அவனிடம் என்னுடைய குறையைச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தேன்”.

“அம்மா எங்கே? வெளியே போய் இருக்காங்களா?”

”பகவத் கீதை வகுப்புக்குப் போய் இருக்காங்க. அதெல்லாம் உயர்ந்த விசயம். அவங்களுக்கு அதில் ஈடுபாடு அதிகம்.. எனக்கு அதைப் பத்தி தெரியாது.

”உங்களுக்கு அதிலெல்லாம் ஈடுபாடு இல்லையா?”

நல்ல கேள்வி கேட்டாய். எனக்கும் பக்திக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. ஆன்மீகத்தில் மனம் செல்லாததிற்குக் காரணம் இளம் பிராயத்தில் “ இப்பவே எதுக்கு” என்றும் யௌவன பருவத்தில் ‘ இப்போ போய் எதுக்கு” என்றும், முதிய பருவத்தில் இனிமேல் எதுக்கு’ என்றும் உற்றாரும் உறவினரும் திசை மாற்றி விட்டதால்தான்.” என்று கூறிச் சிரித்தேன்.

பார்த்தசாரதியும் சிரித்தான்.

சிறிது நேரத்தில் நித்யா வந்து விட்டாள் . வழக்கம் போல் ஸ்கைப்பில் சத் சங்கத்தில் ஈடுபட்டாள். அது முடியும் போது இரண்டு மணி ஆகி விட்டது. எனக்குப் பசிக்குமே என்று அவள் கவலை பட்டதே கிடையாது.

எனக்கோ பசியோ பசி. நித்யா சுட சுட அரிசி சோற்றை என் முன் வைத்தாள். தெனாலி ராமன் பூனைக்குப் பால் வைத்த மாதிரி இருந்தது அவள் செய்தது. சூடாக வைத்த உணவை என்னால் கையால் பிசைய முடியவில்ல.

வலியால் துடித்துக் கொண்டு இருக்கும் போது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் கொதிக்கும் சாம்பாரைச் சோற்றின் மீது கொட்டினாள்.

”என்ன நித்யா இது ? சோறு கொதிக்கிறது ஆறட்டும். அதுக்குள்ளே சாம்பாருக்கு என்ன அவசரம் ? என்றேன் எரிச்சலுடன்..”.

“என்ன, வர வரக் குற்றம் குறை கண்டுபிடிக்கறீங்க ? . உங்களுக்கு இங்கே இருக்கப் பிடிக்கலேன்னா வெளியே போங்க.” என்று கத்தினாள்.

நித்யாவின் இந்த வார்த்தைப் பிரயோகத்தைக் கண்டு நான் அதிர்ந்து போனேன்.

நான் அங்கு வந்ததது முதல் படிப்படியாய் அவளுடைய உபசரிப்பில் விரிசல்கள் வளர்ந்து வந்தன.

அன்று அமாவாசை. நித்யா அறையைத் தண்ணீர் போட்டு அலம்பியிருந்தாள். டைல்ஸ் போட்ட தரை. அப்போது பார்த்துத்தான் நான் குளித்து விட்டு வந்தேன். டைல்ஸ் தரையிலும் ஈரம்.. கால் வழுக்கி படாரென்று விழுந்து விட்டேன். கைத்தடி நழுவி ஒரு பக்கம் விழ அம்மா என்று கத்திவிட்டேன். அப்போது நித்யா பகவத் கீதை பற்றிக் குருவின் உபந்நியாசத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் எந்தச் சப்தம் வந்தாலும் வைரக்கியமாய் சத் சங்கத்தை விட்டு வரவே மாட்டாள். அது அவள் சுபாவம். நான் செய்வதறியாது தவித்தேன்., எழுந்திருக்க முடியவில்லை. துக்கத்தால் கண்கள் கலங்கின.

நல்ல காலமாக அப்போது பால்காரி செல்வி வந்தாள்.

“அய்யோ! அய்யா! கீழே விழுந்துட்டீங்களே”. கீழே விழுந்திருந்த கைத்தடியை எடுத்து என் கையில் கொடுத்து, “மெல்ல பிடிச்சுண்டு எழுந்திருங்க” என்றாள்..

அவளுடைய மனித நேயம் என்னைப் பிரமிக்க வைத்தது.

‘பட்ட காலிலே படும்’ என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். அடிபட்ட இடத்திலேயே எனக்கு மீண்டும் அடிபட்டு விட்டது.. உயிர் போகிற மாதிரி வலித்தது. என்னால் எழுந்திருக்க முடியவில்லை.

மெதுவாக எழுந்து வந்த நித்யா, என்னைப் பார்த்து, “கர்மயோகத்தைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். சே! எதையுமே கேட்க விட மாட்டீங்களே. பார்த்து நடந்திருக்கணும். இப்படி யாராவது விழுவார்களா? எழுந்திருங்க”. என்று அதட்டினாள்.

என்னாலே எழுந்திருக்க முடியவில்லை.

ஆனால் எனக்கு நடக்க முடியவில்லை. நகர்ந்து நகர்ந்துதான் போகவேண்டியிருக்கு. கஷ்டப்பட்டு எழுந்து நடந்தாலும் இரண்டடி நடப்பதற்கு பத்து நிமிடங்கள் கடந்து விடும்.

”என்ன யோசிச்சிட்டிருக்கீங்க.? இந்த கீரையை ஆய்ந்து கொடுங்க” என்று ஒரு கீரைக் கட்டை என் முன் நித்யா கொண்டு வந்து வைத்தாள்.

நான் அவளைப் பார்த்தேன்.

“என்ன பார்க்கறீங்க. கால்தான் முடமாயிடுச்சி. கை நல்லாத்தானே இருக்கு.”

“நித்யா ஏன் இப்படி மாறி விட்டாள் ?” காரணம் தெரியவில்லை.

சோகம் என்னை வாட்டியது. ஓ மனமே ! இந்தத் துன்பங்களிலிருந்து விடுபட்டு கவலையில்லாத மனிதனாக ஆவது எப்போது? யோசிக்காமல் உறவோடு வந்து தங்கிவிட்டேனே எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும் என்று எண்ணிக்கொண்டே கீரையை ஆய்ந்து வைத்தேன்.

என்னவோ நினைத்தேன்; என்னவோ நடக்கிறதே ஆண்டவா!

நித்யா எதெற்கெடுத்தாலும் சிடுசிடுத்தாள். என்னிடம் கடின வார்த்தைகளை உபயோகித்தாள். என்னால் எதுவும் செய்ய முடியாத நிலை. நான் முதியோர் இல்லம் போகலாமென்றாலோ என்னிடம் பணம் இல்லை. நான் நித்யாவிடம் அடைக்கலமானது தவறான முடிவோ என்று மிகவும் வருத்தப் பட்டேன்.

எனக்கு நித்யா காலையில் டீ கொடுக்கும்போது இரண்டு பிஸ்கட்டைத் தட்டில் வைத்துக் கொடுப்பாள் . பத்திரமாக வைத்திருப்பேன். மாதவனிடம் சாப்பிடக் கொடுப்பேன். அல்லது காலையில் செல்வி பால் போட வரும்போது கூட ஓடி வருமே நான்கு நாய்கள்…. அவைகளுக்குப் போடுவேன். நாய்க்குப் பிடித்த வஸ்து பிஸ்கட்”.

அவள் அன்று ஸ்கைப்பில் சத் சங்கத்தில் ஈடுபட்டிருந்தாள். எனக்கு ஓண்ணாம் நெம்பர் அவசரமாய் வந்து விட்டது . நித்யா என்று பல முறை உரக்க அழைத்தேன்.. அவள் ஏனென்று கேட்கவில்லை. நான் தட்டுத் தடுமாறிப் போய் விட்டு வருவதற்குள் முட்டிக்கொண்டு வந்த இயற்கை உபாதை வேட்டியை மீறி தரையைத் தொட்டு விட்டது.

சிறிது நேரம் கழித்து செவிகளில் ஜிமிக்கி அசைந்தாட கைகளில் அழகிய வளையல்கள் ஊஞ்சலாட வந்தாள் . என் நிலைமையைப் பார்த்ததும் சினத்துடன், ”கிழமே, ஒழுங்கா இருந்தா இரு. இல்லாட்டா முதியோர் இல்லத்திலே சேர்த்திடுவேன்..” என்று கத்தினாள்.

என் இயலாமையை அவளுக்கு எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. நான் பேசாமல் இருந்தேன். அவள் முணுமுணுத்துக் கொண்டே அறையைத் துடைத்தாள். இதுபோல் பல முறை நடந்து விட்டது…

இன்னொருவருடைய கையை எதிர்பார்த்தாலே துன்பம்தான். அதுவும் இயற்கை உபாதைக்கு மற்றொருவர் உதவியை எதிர்பார்க்கும் நிலமையில் நான் இருக்கிறேன். தெய்வமே, என்னை ஏன் உயிரோடு வைத்திருக்கிறாய். என்னை உன்னிடம் சீக்கிரம் அழைத்துக் கொண்டு விடு என்று பல முறை பிரார்த்தனை செய்தேன்.

ஒரு முறை நித்யாவின் கணவன் ஊரிலிருந்து வந்திருந்தார். அவள் கணவனுடன் தர்க்கம் செய்து கொண்டிருந்தது காதில் விழுந்தது. இந்த பாழாய்ப் போன இயற்கை உபாதை அந்த சமயத்திலேதானா வரவேண்டும் . கைத்தடி கைக்கு எட்டும் தூரத்தில்லை. .நித்யா என்று கூப்பிடுவதைத்தவிர வேறு வழியில்லை. ”நி..த்..யா” என்று தயங்கித் தயங்கிக் கூப்பிட்டேன் சிவபூசையில் கரடி நுழைந்தது போல் என் குரலைக் கேட்டதும் கோபத்துடன் எழுந்து வந்தவள் ”ஏன் கூப்பிட்டீங்க? “ என்று எரிந்து விழுந்தாள்.

சுண்டு விரலைக் காண்பித்தேன்.

“கர்மம், கர்மம், உங்களுக்கு எதுக்கும் நேரம் காலம் எதுவும் கிடையாதா? வேளை கெட்ட வேளையிலே ஒன் பாத்ரூம் போகணுமா? இழவு, எல்லாம் என் தலையெழுத்து. உன்னாலே என் பிராணன் போறது.” என்று புலம்பிக்கொண்டே கைத்தடியை எடுத்துக் கொடுத்து நான் எழுந்திருக்க உதவி செய்தாள்.

”அந்தக் கிழக் கோட்டானுக்கு வேறே வேலையில்லை. அது செய்யும் லீலைகள் சொல்லி மாளாது. என் உயிரை வாங்றது, சனியன் என்று நித்யா அவள் கணவனிடம் சொல்லிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது.

”இன்னொருத்தரை அண்டி இருந்தால் எவ்வளவு பேச்சுக் கேட்க வேண்டியிருக்கிறது. நான் கேட்டது வெறும் வார்த்தைகளா, இல்லை விஷம் தோய்ந்த அம்புகளா? நாக்கை ? பிடுங்கிக் கொண்டு சாகலாம்” என்று தோன்றியது..

அன்று காலையில் நித்யா குளித்து பட்டுப்புடவை கட்டி வெளியே போக தயார் ஆகி விட்டாள். மாதவனை என்னுடைய அறையிலிருந்த நாற்காலியில் எப்போதும் போல் கயிற்றால் கட்டி விட்டுப் போய் விட்டாள். அவள் போய் ஒரு மணி நேரம் கழித்து அவன் வாயிலிருந்து வேதனையான சப்தம் வந்தது. அவன் முகம் வாடியிருந்தது. நேரம் ஆக ஆகச் சப்தம் அதிகரித்தது அவனுக்குப் ஃபிட்ஸ் வந்து விட்டது. அப்போது பார்த்தசாரதி வந்தான்.

”மாதவனைப் பார். அவனுக்கு உடம்பு சரியில்லை” போல் தெரிகிறது. என்றேன்.

“ஆமாம், நீங்கள் சொல்வது சரி”.

உடனே செல்போனை எடுத்து நித்யாவைத் தொடர்பு கொள்ள முயன்றேன். பயனில்லை. அலைபேசியை அணைத்து விட்டால் எப்படித் தொடர்பு கொள்ள முடியும்? ஐயோ ! பையனை அம்போன்னு விட்டுவிட்டு வெளியே போக எப்படி ஒருத்திக்கு மனசு வரும். என் நெஞ்சு கொதித்தது.

”பக்கத்தில் டாக்டர் எங்கே இருக்கிறார் ?” என்று கேட்டேன். தெருக் கோடியில் ஒரு நர்சிங் ஹோம் இருக்கிறது என்றான் பார்த்தசாரதி.

அவனே போய் ஒரு ஆட்டோவை அழைத்து வந்தான். மாதவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போனோம். பார்த்தசாரதி ஆஸ்பத்திரியை அடைந்ததும் எனக்கு ஒரு சக்கர நாற்காலியை ஏற்பாடு செய்தான். மாதவனை டாக்டரிடம் காண்பித்தோம். ”தக்க சமயத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தீங்க” என்று டாக்டர் சொன்னார் அவனை அங்கு அட்மிட் செய்து விட்டோம். இருபத்தி நான்கு மணி நேரம் போன பிறகுதான் எதுவும் சொல்ல முடியும் என்று பெரிய டாக்டர் சொல்லிவிட்டார்.

நித்யாவுக்கு விசயம் தெரிந்து அவள் ஆஸ்பத்திரிக்கு வரும் போது மணி மூன்று ”நாராயணீயம் யார் வீட்டிலோ வைத்திருந்தார்கள். அங்கே போய் விட்டேன்“ என்றாள். அவள் முகம் பேயறைந்தது போல் இருந்தது.

அவள் மூன்று நாள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியதாயிற்று. அந்த மூன்று நாட்களிலும் பார்த்தசாரதி எனக்கு மிகவும் உதவி செய்தான். காபி டிபன் இத்யாதி ஓட்டலிருந்து வாங்கிக் கொடுத்தான். காலைக் கடன் கழிப்பதற்கு உதவி செய்தான்.

என் மனசில் ஒரு குமட்டல், குமைச்சல் ஒரே கோபம். ‘அவ நன்னாயிருக்க மாட்டாள்’என்று சபித்தேன். பால்காரி செல்விக்கும் வாச்மேன் பார்த்தசாரதிக்கும் இருக்கும் மனிதாபிமானம் கூட நித்யாவுக்கு இல்லை. தடிச்சிறுக்கி! நான் பார்த்து வளர்ந்தவ. எப்பவும் என்னைத் திட்டிக் கொண்டே இருக்கிறாள். மனுஷியா அவள் நடந்து கொள்ளவில்லையே என்று முணுமுணுத்தேன்.

இந்த மூன்று நாட்களில் ஒரு நாள் என் பால்ய சிநேகிதன் வாசுவிடமிருந்து அலைபேசி வந்தது. பெருங்களத்தூரிலுள்ள ஒரு முதியோர் இல்லத்தில் இருக்கும் அவன், என்னைக் கூட வந்து வசிக்கும்படி கேட்டுக் கொண்டான். நான் நன்றாகச் சிந்தித்தேன். நித்யாவோ பணம் வாங்குவதற்கு முன் ஒரு முகம், பணம் வாங்கிய பின் இன்னொரு முகத்தைக் காட்டுகிறாள். பணம் போனால் பரவாயில்லை. நான் சநதோஷமாக வாழ வேண்டும். அதனால் முதியோர் இல்லம் போய் விடலாம் என்று தீர்மானித்து விடடேன். அவ்ள் வீட்டுக்கு வந்த்தும் சொல்லி விட்டுப் போக வேண்டும் என்று காத்திருந்தேன்.

மாதவன் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து விட்டான். .

இதுதான் அவளிடம் சொல்லச் சரியான தருணம் . என்று நினைத்து, ” நித்யா உன்னிடம் ஒன்று.” என்று ஆரம்பித்தேன்.

அதற்குமுன் நித்யா முந்திக் கொண்டு,

“மாமா, மாதவன் பிழைத்ததே கடவுள் அனுக்கிரகம். நீங்க சரியான சமயத்திலே அவனை ஆஸ்பிட்டலிலே சேர்க்காமல் சேர்க்காமல் இருந்திருந்தால் அவன் பிழைத்திருக்க மாட்டான். குழந்தை புனர்ஜென்மம் எடுத்து வந்திருக்கான். நான் உங்களைத் திட்டியும் கொடுமைப் படுத்தியும்கூட எனக்கு நல்லது பண்ணியிருக்கீங்க.! நான் உங்களை மிகவும் தொந்தரவு படுத்தி விட்டேன் மாமா. எல்லாவற்றிக்கும் என் கண் மூடித்தனமான ஆன்மீக நாட்டம்தான் காரணம்.. என்னை மன்னித்து விடுங்க” என்று தழுதழுத்த குரலில் சொல்லி என்னை நமஸ்கரித்தாள்.

அவன் உடம்பு சரியில்லாமல் ஆஸ்பிட்டலில் இருந்தபோதுதான் பெரியவங்களையும் குழந்தையையும் முதலில் கவனிக்காம விட்டது தவறு என்பதை உணர்ந்தேன். தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தருமமும் என்பது போல் குழந்தைகளுக்கும் பெரியவங்களுக்கும் பின்னால்தான் தெய்வ வழிபாடு. கீதை கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே என்கிறது. ஆன்மிகத்தின் அடிப்படை நோக்கத்தை நான் புரிந்து கொள்ளத் தவறி விட்டேன். நான் என் கடமையைச் செய்ய தவறி விட்டேன்.. குழந்தை வளர்ப்பைப் புறக்கணித்தேன். பகவத்கீதையை விட பெரியது வேறொன்றில்லை என்று நினைத்தேன். அதனால் பெரியவங்களுக்கும் குழந்தைக்கும் முக்கியத்வம் கொடுக்காமல் பக்திக்கு முதலிடம் கொடுத்து எப்போதும் நேரத்தை அதில் செலவழித்தேன் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை அநுபவத்தில் உணர்ந்து கொண்டேன். இனிமேல் பக்திக்குச் செலவழிக்கும் நேரத்தைப் பாசத்திற்கும் கடமைக்கும் செலவழிப்பேன். பாசத்துக்குப் பின்தான் பக்தி ! !மனித சேவையே மகத்தான சேவை!

நான் நெகிழ்ந்துதான் போனேன். மன்னிப்போம், மறப்போம் என்பது மனிதப் பண்பு அல்லவா? மனசுக்குள் அவளை மன்னித்து விட்டேன். நான் சொல்ல நினைத்ததைச் சொல்லவில்லை. “பரவாயில்லை நித்யா. நீ குழந்தையைச் சரியாகப் பராமரிக்கவில்லை என்பதை இப்போதாவது உணர்ந்தாயே.அது போதும். மாதவனை இனி நன்கு கவனி. நான் உயிரோடு இருக்கும்வரை உன்னோடு துணையாய் இருப்பேன்.”

நித்யா இப்போதெல்லாம் மாதவனிடம் அதிக நேரம் செலவிட்டாள். பன்னிரண்டு மணி அடித்தால் சத் சங்கம் என்று இருப்பவள் இப்போதெல்லாம் அதைப் பற்றி கண்டுகொள்வதில்லை.

”என்னிடம் அவள் கனிவுடன் பேசுகிறாள். அன்பே வடிவானவளாக மாறி விட்டது எனக்கு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.

நித்யா வெளியே கிளம்புவதற்கு தயார் செய்து கொண்டிருந்தாள். சுலோக வகுப்புக்கோ அல்லது நாராயணீயம் வகுப்புக்கோ போகப் போகிறாள் என்று நினைத்தேன். நான் டாக்டரிடம் மாதவனை அழைச்சிண்டு போறேன். என்றவளை நான் திகைப்புடன் பார்த்தேன.

“மாதவனுக்கு உடம்பு சரியாயிடுத்துன்னு பார்க்கறீங்களா? ”பார்த்தசாரதிதான், ஆட்டிசத்துக்கு அடையாறில் ஸ்பெஷல் டாக்டர் ஆளவந்தார் இருக்கார். அவரிடம் மாதவனைக் காண்பியுங்கள். பயிற்சிகளின் மூலம் அவனைப் பேச வைச்சிடுவார்” என்று அட்ரஸ் கொடுத்தான். ஒரு வாச்மேனுக்கு இருக்கிற மனித நேயம் கூட எனக்கு ல்லையே என்று நினைத்தால் எனக்கு ரொம்ப வெட்கமாயிருக்கு.

“நித்யா, நீ சொல்வது மிகவும் சரி. கடமையென்றால் என்ன? எதைச் செய்யணுமோ அதை செய்வதுதான் கடமை. ஆனால் நாம் எதுக்கு முக்யத்துவம் கொடுக்கிறோமோ அதைச் செய்வதை கடமையாய் நினைக்கிறோம். உன்னிடமிருந்து எனக்கும் தெளிவு பிறந்தது. நானும் என் கடமையைச் செய்யத் தவறி விட்டேன். பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம் என்று இந்நாள்வரை நேரத்தை வீணடித்து விட்டேன் ; எதையும் கண்டிலேன் ;. புத்தகங்களையாவது படித்திருக்கலாம். அதுவும் செய்திலேன். எதுவும் தெரியாமல் மூடனாக இருந்து விட்டேன். நீ மனம் மாறி விட்டாய். நானும் மாறி விடுகிறேன். இறையடியை மனதில் பற்ற பகவானின் நாமத்தை இனி சொல்லப் போகிறேன்., மாதவன் இளங்குருத்து. அவனை நன்றாக வளர்ப்பது நம் கடமை. அவனுக்குப் பாடம் கற்றுக் கொடுப்பதில் தினந்தோறும் கொஞ்ச நேரத்தைச் செலவழிப்பேன். நித்யா, உன் கிட்டே இருக்கிற பகவத் கீதை புத்தகங்களையெல்லாம் எங்கிட்டே கொடு . நேரம் கிடைக்கும் போது கீதையின் மணத்தை நுகருகிறேன்..”…

“ஓ, பேஷா கொடுக்கிறேன். கீதையை வாசியுங்கள்” என்று சிரித்தாள். அவள் கண்களில் அன்பு பளிச்சிட்டது. உடனே ஒரு புத்தகத்தை எடுத்து என்னிடம் கொடுத்தாள்.

“வா பட்டு வா, போகலாம்” என்று மாதவனைக் கொஞ்சி அழைத்தாள். அவன் கன்னத்தில் பாச மழையைப் பொழிந்தாள். ஞானம் வந்த பின்பே அவளிடம் பாசம் பொங்கியது..

அப்போது வாச்மேன் பார்த்தசாரதி,” நான் எதாவது உதவி செய்யணுமா ஐயா? ”என்று என்னை நோக்கிக் கேட்டுக் கொண்டே வந்தான்.

“நீ யாரப்பா? பெற்றப் பிள்ளையாட்டம் இவ்வளவு கரிசனத்துடன் கேட்கிறாய். கேட்காமலேயே உதவி செய்கிறாய்.” என்றேன்.

“என் அ.ப்…பா தஞ்சாவூர் பட்சிராஜன்”.

எனக்கு ஆச்சரியம் மேலிட்டது . ஆம் ! நான் அன்று உதவி செய்த அதே பட்சிராஜன்! நாராயணா! உன் கணக்கும் சரியாகத்தான் இருக்கிறது என்று வாய் முணுமுணுத்தது. கண்களிலிருந்து பெருகிய கண்ணீர் உதட்டின் வழியாக வாயில் விழுந்து இனித்தது!

– எதிர்வீடு (சிறுகதைகள்), வெளியீடு: FreeTamilEbooks.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *