கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 22, 2024
பார்வையிட்டோர்: 1,690 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருவிழா, தேர், தீர்த்தம், கல்யாணம், மருத்துவமனை என்ற மட்டில் நாம் வெளியே போகும் தேவை காரியங்கள் நம் வீட்டுக்காரரின் வெளிவிவகார நடவடிக்கைகள், அரிதாகத்தானிருந்ததென்றாலும் அந்த மாதிரித் தேவைகளுக்கான வாகன சௌகரியம் மாட்டு வண்டில்தான். அந்தச் சேவையில் எங்கள் குடும்ப புரோகிதமாக நியமனமாகி இருந்தவர் கந்தையா – காளேஸ்வரர் கந்தையா எப்பவோ நடந்தேறிய தென்னாட்டு ஷேத்திராடனத்தின் ஓர் இனிய நினைவு, பக்தி மார்க்கத்தில் எழுந்த ஒரு சின்னம் கந்தையா காளேஸ்வரர் ஆக முதல்வர் கந்தையா ஆனார். அல்லாமல் காளை வண்டிலோடு தன் வாழ்க்கையைப் பிணைத்துக்கொண்டு வண்டிலோட்டியாக இருந்து கந்தையா கோலோச்சினார் என்பதற்காக அல்ல. அது எப்படியிருப்பினும் இவ்விதமாகச் சூடப்பெறும் பெயர் விலாசத்தில் கந்தையாவின் மனம் குளிர்ந்தது என்னவோ மெய். 

பாரம்பரிய சொத்துடமையாகச் சேர்ந்த பெரும் கமப் புலத்துக்கு காளைப்பருவத்தினராயிருந்த போதே ஏக உரிமையாளராகி அதனை அனுபவிக்கும் பேறும் பெற்றிருந்தார் கந்தையா, மூன்று நான்கு இரட்டைகளை அப்பவும் அவர் பண்ணை ஆட்கள் கட்டி அவிழ்த்த போதும், தனது தேவைக்கென்று பிரத்தியேகமாக ஓர் ஒற்றைத் திருக்கலை வைத்துக்கொண்டு ஊரும் உலகமும் அளந்தவர்தான். நினைத்தவாக்கில் வண்டிலில் காளையைப் பூட்டிக்கொண்டு தன்னிஷ்டமாகக் கிளம்பினார் என்றால் எங்கெல்லாமோ சுற்றியடித்துக்கொண்டு மதியம் வீடு திரும்புவார். அடிக்கடி காங்கேயன் பெரும்துறைக்கு போகும் வேலை இருந்தது. 

கொழும்புப் பயணக்காரருக்காக ரயில்லே ஸ்டேஷன் என்றும் மணியகாரன் கந்தோர், கோடு கச்சேரி என்றும் ஊர் வேலைகளிலே உல்லாசப் பவனி வருவார். கைக்கு வருவதை விடமாட்டார். பெருமை சிறுமை பாராட்டாமல் சமயதருணமாக உதவி பலருக்கும் உபகாரியாக நடந்து கொள்வார். இதனால் எல்லாம் தேடிக்கொண்ட நல்லுறவு சத் சங்கம் நட்பு என்பன புடை சூழ்ந்து அணிவகுக்க, கோவில் திருவிழா கல்யாணம் மற்றும் ஊரவர், அயலவர் சுகதுக்கங்களில் எல்லாம் முழுமனமாக கலந்து கொள்வார். அவரது கமப்புலச் செய்கையில் அவருக்கு உதவி ஒத்தாசை ஆட்களாக நாலைந்து குடி, அதில் வேலன் இளையவன் குடிசை இதர குடியிருப்புகளுக்குச் சிறிதே அப்பால் விலகி ஒதுக்கமாக இருந்தது. வேலன் இளையவி அவன் மனையாள் மக்களுடனே கூடக் கந்தையனாரின் கமம்புல வேலைகளில் அவருக்கு எந்நாளும் பெரும் துணை பலமாக இருந்ததுடன் பனை சீவவும் போவான். 

ஊரிலே கந்தையனாரின் வசிப்பிடத்திற்கு அண்மித்ததாற்போலுள்ள வைரவர் கோவிலில் ஆண்டுக்கொரு பட்சம் பெரும் திருவிழாக்கள் நடைபெறும். காளை கந்தையா அந்த வயதில் கமப்புலக்காரியங்களில் கண்ணும் கருத்துமாயிருந்த நாளில் ஒரு தினம் இராத் திருவிழா பார்க்கப் போய், திருவிழாவில் நாட்டியமாடிய நடன மகளிர் ஊட்டிய மோகலாக்கிரியும் அத்துடன் விடிய விடியக் கண்விழித்த கிறக்கமுமாய் நிலம் தெளிந்து பொழுது விடிகிற சமயம் வீடு திரும்பி அவருக்கென்று காத்திருந்த பனை அமுதத்தைப் பருகியபோது மது மயக்கம் கட்டு மீறி வரம் புடைத்து எழுந்து பொங்கிப் பிரவாகித்ததன் வினையாகத் தடம் புரண்டு இடறி வீழ்ந்து பெரும் அவலப்பட்டார். அதுதான் கதை அதனை அவர் வாயால் கேட்க வேண்டும் அங்குதான் சுவை. 

அன்று முதலாக என் வாழ்க்கைப் படகே புதிய திசை திருப்பத்திகுள்ளாகிற்றடா, தம்பி!” என்பார் ஆனால் அந்தக் கதையை எல்லா நாளும் சொல்லமாட்டார். எப்பொழுதாவது மிக அபூர்வமாகவே அது அவர் வாய் மொழியாக வெளிவந்து கேட்பவர்களின் இதய தந்திகளை மீட்டும் “தம்பி, வானம் பார்த்த இப்பூமியிற் பிறந்தவன் பனை ஓலைக் கூரையின் நிழலில் பனையோலைப் பாயில் படுத்துறங்கி எழவேண்டும். ஒடியல் மாப் பிட்டு அவித்துச் சாப்பிட வேண்டும். பாணிப்பனாட்டுடனே பழைய சோறு சாப்பிட வேண்டும். ஒடியல் கூழ் காய்ச்சிக் குடிக்க வேண்டும். பனையோலையால் வீட்டைச் சுற்றி கச்சிதமாக வேலி அமைக்கத் தெரிந்திருக்கவேணும். பனங்கருப்பட்டியும் கல்கண்டும் காய்ச்சி அதன் தித்திப்பு உலகில் வேறெந்தச் சுவைக்கும் நிகரற்றது. என்ற சுவை உணர்வில் கட்டுண்டு திளைக்க நமது நாவை வசப்படுத்தியிருக்க வேண்டும். பனம்பழத்தின் வாசனை நாசித்துவாரத்தை எப்படித் துளைத்துச் செல்கிறது பார்! பனை மரங்கள் ஒவ்வொன்றும் குளுகுளு என்று என்ன உல்லாசமாக கண்முன்னே காற்றிலே அசைந்தாடி நிற்கிறது பார்! பனைத்தோப்பு பூம்பொழில் சோலையாக – அட பார், என்ன பசுமை! என்ன பசுமை! இதையெல்லாம் அனுபவிக்கமாட்டாதவனை, இவ்வளவு வரப்பிரசாதங்களையும் நுாற்றுக்கு நுாறு ஏற்றுக்கொள்ள உடன்பாடாக இருக்காதவனை யாழ்ப்பாண மண்ணில் பிறந்தவன் என்று நான் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டேன். யாழ்ப்பாணத்தான் என்று இந்த வடபால் பூமாதேவி அவனை ஒருக்காலும் ஏற்றுக்கொள்ளமாட்டாள்!” 

“காளை கந்தையனார் தனது வண்டில் சாரத்திய ஆசன பீடத்திலிருந்து வண்டிக்குள்ளே அமர்ந்திருக்கும் ஒருவருடனே இவ்விதமாகப் பேச்சுத் தொடுக்கிறார் என்றால் – அவர் வயிற்றில் அது சமயம் பால் வார்க்கப்பட்டிருக்கிற தென்று நாம் ஊகித்துக் கொள்ளலாம். பெரும் பகுதியும் அது இப்பூமித்தாய் சுரந்த பனம் பாலாகத்தானிருக்கும். இல்லையானால், பச்சைமலை பவளமலையாக நம்மூர் பனைமரங்களை அப்படி நேத்திரானந்தமாக அனுபவிக்கும் ‘பட்சிப்பார்வை’ அந்தாளுக்கு எப்படிச் சித்தித்திருக்கக்கூடும்? 

வண்டியிலிருப்பவர்களின் வசதி, சௌகர்யத்தை கணித்து அவர்தம் விருப்பு வெறுப்பை அனுசரித்து வண்டி அது போகின்ற பாதையில் நடுநடுவே இரண்டோரிடத்தில் சில நிமிட வேளை தாமதித்து நின்று மறுபடி விர்ரெனக் கிளம்பும். இதற்குப் பிறகு வண்டி ஓட்டத்தின் போது காளை அண்ணரின் பேச்சில் வயிற்றில் வார்த்த பால் கொதித்து அதன் வெம்மை ‘டிகிரி’ ஏறுவதும் இறங்குவதும் வண்டியுள்ளே இருப்பவர்களின் சகசத்தைப் பொறுத்தது. 

2 

அன்று ஒருநாள் –

எங்களுக்குப் பள்ளிக்கூடமில்லை. பாடசாலை அதிபர் சடுதி மரணமான துயரமாகப் பள்ளி ஆசிரியர் முழுப்பேரும் அந்தச் சாவுக்குப் போய்விட, பள்ளிக் கூட வாயிலை அன்று ஒருநாள் திறக்காமலே மூடிவிட்டார்கள். அதனால் விடியற்காலை எழுந்த கிராமம் விட்டுக் கிராமம் நெடுந்தூரம் வழிநடத்த நாம் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு போன வழியே திரும்பினோம். எதிர் பார்த்திருக்காதபடி பள்ளிக்கூடத்துக்கு மிக அருகாமையிலேயே காளை அண்ணர் வண்டிலோடு தோற்றமானார். வெற்றிலைச் சரைக்குள் வைத்திருந்த புகையிலையை காற்றுத் துாக்கி வீசிவிட, அதைத் தேடி எடுப்பதற்காக வண்டிலை நிறுத்தியவர், பள்ளிச்சிறார் கூட்டத்தை எதிரே கண்டதும் காளை ஒச்சும் கம்பை நீட்டி என்னைத் தன்பால் வரவழைத்தார். “விடியற்காலை பனிநீர் கூட வற்ற முன்னமாய் எழுந்து பறந்தடித்து ஓடிவருவியளே, ஏன் இன்றைக்குப் பள்ளிக் கூடமில்லையோ?” என்று வினாவியவரின் கைக்கம்பு ஆணை காட்டிய பிரகாரம் காற்று தெருவோரமாகக் கொண்டு போய் வீசிய துண்டுப் புகையிலையை தேடி எடுத்து அவரிடம் தந்து, “பள்ளிக்கூட அதிபர் காலமாகிவிட்டாராம் கந்தையாண்ணே! அதற்காக இன்றைக்கு பள்ளிக் கூடம் விடுமுறை, எங்கள் பள்ளி ஆசிரியர்கள் முழுப்பேரும் சாவீட்டுக்குப் போய் விட்டார்கள்” என்று சொல்லிசும்மா நின்றேன். அந்த துயர சம்பவத்தில் நம்முடனே தானும் பங்குகொள்ளும் மன ஒன்றுபாடாக, “ஓ அந்தாளும் மோசம் போட்டுதோ! தரும் சிந்தையுடனே அந்தாளைப் போல பள்ளிக்கூடம் கட்டுவதற்கு இனி ஒருவர் பிறக்க வேணும்!” என அநுதாப வாக்கு மொழிந்து அதன் பின் வண்டிலில் ஏறி உட்கார எனக்கும் மனமுவந்து, காளையை மேலே தட்டிவிட்டார். பள்ளித்தோழரான மற்றப்பிள்ளைகள் எங்கள் வீட்டுக்குத் தெரியப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் அன்று பகல் முழுநாளும் கந்தையா அண்ணர் கூட ஊர் சுற்றினேன். பொழுது இருள்படுகின்ற சமயமாக வண்டில் கீரிமலையை அண்மித்திருந்த பனை ஊர் குடியிருப்பொன்றில் கடைசித்தரிப்பாக சிலவேளை நின்று பின் எங்கள் ஊர்த்திரைக்குத் திரும்பலாயிற்று. ஈடுபாலமாகத் தள்ளாடித் தடம் புரண்டு வந்து ஆசனபீடத்தைக் கைப்பற்றிய பொண்ணர் இப்பொழுது தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு தன்னை மறந்த தவசியாய் உலகத்தை வெறுத்த பரதேசியாய் வாய் மூடி கண்மூடி மௌன உறக்கத்தில் ஆழ்ந்து கோகிறார். வண்டில் சிறிது துாரம் கடகடவென்று உருண்டொடி அதன் பின் வேகம் தணிந்து மெல்ல அசைகிறது. நிறைகலம் இனி வீடுபோய் சேருமட்டும் இந்த நிலைதான் என்று மனதுக்குள்ளாகத் துணிந்து கொண்டு ‘நாணயக் கயிற்றை என் கையில் கொடுத்துவிட்டு உள்ளே தள்ளி இருங்கோ கந்தையாண்ணே!” என்றேன். 

“சேச்சே! அதைப்பற்றி ஒன்றும் யோசிக்காதேடா தம்பி. நீ உன்பாட்டில் பேசாமலிரு. மயிலை எங்களிருபேரையும் பத்திரமாக வீடு கொண்டு போய் சேர்க்கும். எப்பொழுதாவது மனங் கோணாமல் கொஞ்சம் அதிகபடியாக வார்த்து விட்டேனேயானால் என் நிலை இப்படித்தான்!” – அயர்ந்திருந்தார் போல மெல்ல மெல்லத் தலை நிமிர்கிறது. வாயில் பேச்சுப்பிறக்கிறது. தடுமாற்றமில்லாத பேச்சு, நெஞ்சத்தின் ஆழத்தில் குமிழிட்டு ஊற்றெடுக்கும் நினைவுகள், பழைய நினைவுகள், புதையல் எடுத்ததினம் நமக்கு. 

“வண்டிக்காரர் கந்தையாண்ணை என்ற மட்டில் தான் என்னை தெரிந்து கொண்டிருக்கிறாய். நானும் உன்னைப் போல ஒரு காலத்தில் சிறுவனாக பள்ளி மாணவனாக அதன் பின் கட்டிளம் காளை பருவத்தினனாக இருந்து வசந்தம் கோடை, மாரி எல்லாம் கண்டு அனுபவித்தவன்தான். வாலிபப் பராயத்திலே என் நிமிர்ந்த தோள்களும் புயபலமும் ஊரிலே பலபேரின் கவனத்தை ஈர்த்த கவர்ச்சி அம்சமாயிருந்தன. கண்வைத்துக் காத்திருந்தோர் பலபேர். நானோ கொம்பன் காளையாக வால் முறுக்கித்திரிந்தேன். கொம்பு முறித்து என் கொட்டம் அடக்கியாரும் என்னை அணுகாதபடி விழிப்பாயிருந்தேன். சுதந்திரப் பறவையாய் அவ்விதமாக வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருந்த நாளில்தான் அந்த அவலம் சம்பவித்தது. 

என்னைத் திகைப்பிலும் வியப்பிலும் ஆழ்த்தி வைத்து கந்தையாண்ணர் தொடர்ந்து பேசுகிறார். 

“வைரவர் கோயில் கொடியேறிவிட்டதென்றால் எனக்கு பெருமகிழ்ச்சி. வேறேந்த கோயிலிலே அத்தனை கூட்டம். மேளங்களும் ஆடல் பாடல்களும் அப்படி சன சமுத்திரத்தைச் சேர்க்கிறது. என் இரட்டை அந்தப் பட்சம் திருவிழா முழுநாட்களும் ஏறுபடி மேளகாரராயும் சின்ன மேளகாரரையும் ஏற்றிச் சுமந்து ஓடித்திரிந்தபடி கோவிலடியிலேதான் நிற்கும். பகல் திருவிழா ஒன்றும் தப்பவிடாமல் பார்ப்பேன். அன்றைக்கும் இராத்திருவிழாவுக்குப் போக வீட்டுப் படலை தாண்டி வெளியே கால்வைத்த போது 

வழமைப்படி வேலன் இளையவனைக் கூப்பிட்டுச் சொல்லி விட்டுப் போவேன். விடியற் காலை நிலம் தெளிவதற்கு முன்னமாய் அவன் பனை ஏறப் போவான். இரண்டு கலசம் நுங்கும் நுரையுமாக பொங்கி வழிய செல்லப்பர் வீட்டு மாட்டுக் கொட்டிலில் என்னைக்காத்திருக்கும் இரா முழுக்க கண்விழித்து அந்தந்த திருவிழா உபயகாரருக்காகச் சில பல உதவிகளும் செய்து கொடுத்து நாலு வீதியும் ஓடித்திரிந்த அயர்வும் ஆகாயமும் அங்கு அவ்விரு கலசங்களையும் பார்த்த மாத்திரத்தே பறந்தோடிப் போகும் அந்நேரம் அவை அமுத கலசங்களாக புத்தெழுச்சி ஊட்டி பின் இனிதாகக் கண் உறக்கத்தில் ஆழ்த்திவிடும். 

அன்றைக்குத் திருவிழாவில் நடனமாடிய சின்னமேளம் அந்நாளில் யாழ்ப்பாணத்தில் பெரும்புகழ் பரப்பி பிரகாசித்த ஜோடி ஆட்டம் பாட்டு அழகுறுதோற்றம் ஆகிய மூன்று அம்சங்களும் மூவர்ணமாகக் கவர்ந்து கொள்ள சென்றவிடமெல்லாம் பல்லாயிரம் பேரைத் தம் வசப்படுத்தினார்கள். 

*சுவாமி, வடக்கு வீதி தவில் சமா முடிவெய்தி ஈசானம் திரும்ப, மெல்லக்கலையும் திருவிழாக் கூட்டத்தில் கலைந்து என் வழி திரும்பிய நான் நாட்டிய மகளிரின் ரூபலாவண்யம் இன்னமும் கண்ணுக்குள்ளே நிழலாட அவர்கள் பாடிய பாட்டு ஒன்றினை வாயில் சீட்டி அடித்துக்கொண்டு கனவுலகில் மிதந்தோடி வந்து நேரே செல்லப்பர் வீட்டு மாட்டுக் கொட்டிலை நாடினேன். அப்பொழுதுதான் செல்லப்பரின் பொடிச்சி ஒரு கலசத்தைக் கொண்ட வந்து வைத்துவிட்டு மெல்ல மறைந்ததை அந்த மங்கிய நிலாவொளியிலும் என் கண்கள் அவதானித்தன. நிலத்தில் குத்தி கூரையில் செருகி வைத்தெடுத்த தெங்குக் குவளையில் கலசத்திலிருந்ததை வார்த்துப் பருகினேன். தித்திக்கும் தேனமுதாக சுவைத்தது தருவின் பானம். ஒரே மூச்சாக மூன்றாவது குவளையையும் உறிஞ்சி இழுத்த போது முன்னொருநாளும் என்னிடத்தே உண்டாக்கியிருக்காத வினோத உணர்வுகள் திமிர்த்து வீறுற்றெழுந்தன தெங்குக் கள்ளை பொற்கிண்ணமாக நாட்டிய மகளிர் அதற்குள்ளே குதித்து குரைவையாடி நின்றார்கள். காமஞ்சால் இளமை, அவர் தம் கூந்தலில் சூடிய புஷ்பக்கொத்தில், குறுநகையில் வேல் விழி நோக்கில் ஏன் அங்க அசைவுகள் ஒவ்வொன்றிலுமே, கள் ஒழுகியது… தேன் சிந்தியது…. 

இரண்டாவது கலசம் வருகிறது. அது என் கண்முன் வைக்கப்படுகிறது. 

“ஓ! நீயா! இராத்திரி உன்னைப் பார்த்தேனே! சுமந்து கொணர்ந்த உன் நல்ல கைகளால் அப்படியே சரிந்து வீடு வெகுநேரம் காத்திருக்க வைத்துவிட்டாய். இராத்திரி ஒரு கண் உறக்கமில்லை. ஒரு நிமிடம் ஓய்ந்திருக்கவில்லை.” 

அமுதகலசம் கொணர்ந்த அந்த சோமலதையிடம் இந்த விதமாக என் வாய் உளறிப் ‘புசத்தி’யிருக்க, கைகள் அவளிடம் நீட்டிய குவளையில் கலசம் ஒருக்கால் சரிந்து எழுகிறது. மடமடவென்று உறிஞ்சி இழுத்துவிட்டு மறுதடவையும் நீட்டினேன். அவள் நின்ற நிலை பெயரால் வைத்த அடி எடுக்காமல் மணிகளை கிளுகிளுக்க வாயுதட்டில் விழியோரத்திலுங் கூட போதுவிழும் அதே மென்னகை நெளிந்திழைய கலசத்தை சரித்தனள், இரண்டொரு மிடறு என நினைவுகள் சரிந்தன கனவுகள் சரிந்தன. திலையும் பேறும் சரிந்தது. 

வெளியே நிலவு நிற்கிறது. அது ஓடி மறையவில்லை. “நீயும் கோவிலுக்கு வந்தியோ?” இரண்டடி பின்னகர்ந்து நீலவானத்தை பார்த்து நின்றாள். நெற்றியில் சாந்து மினுக்கம் வாரிப்பின்னி முடிந்த கேசம், நிலாவொளியில் பளிச்சிடும் வதனம் வைரமாய் ஜ்வலிக்கும் கண்கள். எழுந்து கலசம் சரிந்த கையினைப் பற்றின என் கரங்கள். 

விடிநிலவு பகலொளியில் மௌன சங்கமத்தின் பின் உஷத்கன்னி அதன் பின் புதுமை எழுச்சி பாடி எங்கும் கோலோச்சினாள். 

“எப்பவோ நடந்த பழைய நினைவும் கதையுமாகப் போனதை இன்றைக்கு எப்படி நினைவில் மீட்டுக்கொண்டு இந்த விதமாக மனதை அலட்டிக் கொண்டீர்கள் கந்தையாண்ணை?” கதையை முடித்துவிட்டு குறை பாயாக வைத்த புகையிலைச் சுருட்டை மீண்டும் பற்ற வைத்த சமயமாகக் கந்தையரிடம் வினாவினான். கடைசி வேளைத் தாகசாந்திக்காக ஒதுங்கிய கொட்டிலில் ஒரு பருவக்குமரி அப்பன் பனை சீவப் போய்விட்டான். எப்பெனுக்குப் பொறுத்திருங்கள்’ என்று சொல்லி, வீட்டிலிருந்ததைக் கொணர்ந்து வார்த்துக் கொடுத்தாள். அவளைப் பார்த்தது முதலாக, அவள் கையால் ஊற்றியதை பருகியது முதலாக பழைய நினைவுகள் நெஞ்சத்தில் துளித்தெழுந்து படமெடுத்து ஆடியதாகச் சொன்னார். இதற்கு மேலும் அவர் கூறியதொரு கூற்றுத்தான் அந்நாள் மேல் விழுந்த அனுதாபத்தை வருவித்து அவர் நிலைக்காக மனமிரங்கி மனமுருகி கண்களில் நீர்துளிக்கும்படியாயிருந்தது. உலகத்திலே நடக்காத காரியமல்ல, நேற்று நடந்தது, இன்றைக்கும் நடக்கிறதுதான். ஆனால் அதுவெல்லாம் அல்லடா தம்பி அந்த விடிநிலவுப் பொன்மயில் ஆரென்று இன்று வரை என்னால் தெரிந்துகொள்ளக் கூடவில்லை. செல்லப்பா வீட்டிலும் அப்படியொரு பருவக்கொடி அடுத்த மற்ற வீட்டுகளிலும் வேலன் இளையவன் வீடுகளிலும் கூட அதே போல இருந்தார்கள். இன்னும் இதற்கு மேல் கோவில் திருவிழா பார்ப்பதற்கென்று அக்கம் பக்கமாக உள்ள அண்டை அயல் ஊர்களில் இத்தனை வீட்டுக்காரருக்கும் உறவு முறையாக இருந்த பெண்களும் பிள்ளைகளும் பல பேர் சில தினங்களாக அங்கு வந்து கூடியிருந்தார்கள். எவளோ ஒருத்தி, யாரோ? அவள் யாரோ? மயங்கியதோர் நிலாவொளியில் கனவுலகில் நடந்ததோ, ஆசைவலையதிலே அவலமாய் வீழ்ந்ததேனே! என்னை அவ்விதமாக அன்னிறரா சிக்கவைத்த சித்திராங் கதையை மற்றொரு தடவை கண்களால் பார்க்கவோ நெஞ்சங் கலக்கவோ அல்லது இது நாள்வரை அவளைக் குறித்து ஒரு வார்த்தை பேசவோ மனதால் நினைக்கவோ கூட முடியாத மூடுபனியும் மூளி அலங்காரமுமாக எல்லாம் மனத்துயரமாக நடந்து முடிந்ததே என்ற அந்த ஒரு நினைவு எப்பவும் என் மனதை விட்டகலா நினைவாக நின்று ஓரோர் சமயம் கழன்றாடும். கொட்டிலிலே தருவின் நிழலிலே கலசம் சரிந்த போதெல்லாம் அந்த நிலால் கன்னியின் நிலவு முகம் அங்கு ஒரு சமயம் சிரிப்பொலி கலீரிடத் தோன்றி மறையும் இன்னொரு சமயம் எங்கோ ஒரு பனங் காட்டின் மத்தியில் எவனோ ஒரு தவசியின் குடிசையில் கிருஷ்ண விக்கிரகத்தின் எழில் ரூபகனாகச் சிரித்தொழிரும் ஓர் ஆண் குழந்தையைக் கையில் ஏந்தி அடிவானத்தைப் பார்த்து ஏங்கிக் கலங்கி நிற்கும் சகுந்தலைப் பெண்ணாளின் தலைவிரிகோலம்…… அன்றிரவு கண்கள் உறங்கா…. 

எங்கள் வீட்டுத் தெரு வாசலில் நின்று காளை கந்தையனாரின் ஒற்றையிடம் விடை பெற்றுக்கொள்கிறேன். 

அதன் நகர்ந்து உருளும் வண்டியில் காளை அண்ணரின் உச்சக்குரலிலே பழைய நாள் நாடக மேடைப்பாட்டு ஒன்று எழுந்து அதுவும் துார துாரப் போய் மெல்ல மறைகிறது. 

அ.செ.முருகானந்தன்

அமரர் அ.செ.முருகானந்தன் ஈழத்தின் மறுமலர்ச்சிப் படைப்பாளிகளில் ஒருவர். புகையில் தெரிந்த முகம் அவரது குறுநாவலாகும். நூற்றுக்கணக்கான சிறுகதைகளை எழுதியுள்ளார். அவற்றில் சில சிறுகதைகள் மனிதமாடு என்ற பெயரில் வெளிவந்துள்ளன. அவருடைய நல்ல சிறுகதைகளில் ஒன்று வண்டிச் சவாரி ஆகும். 

– 6.11.1977

– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.

அ.செ.முருகானந்தன் அ.செ.மு. என்ற அ.செ. முருகானந்தன் ஈழத்துச் சிறுகதை இலக்கியத்திற்கு பெருமை கூட்டிய எழுத்தாளர். இரண்டாம் பரம்பரை எழுத்தாளர். ஈழகேசரி பண்ணையைச் சேர்ந்தவர். ஈழகேசரியின் ஆசிரியராகப் பணியாற்றியவர். மறு மலர்ச்சி இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவர். மறுமலர்ச்சியின் இணை யாசிரியராகவும் எரிமலை என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும் விளங்கியவர். வீரகேசரி, ஈழநாடு ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியப்பீடங்களில் பணியாற்றி யவர். பல்வேறு புனைபெயர்களில் நிறைய எழுதியவர். அவரது சிறுகதைகள் யாழ்ப்பாண சமூககளத்தில் மட்டுமன்றி மலையக்திலும் மண்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *