சொன்னதைச் செய்யும் சின்னான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 14, 2025
பார்வையிட்டோர்: 143 
 
 

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சின்னான் கீழ்ப்படிதலுள்ள பையன். சொன்ன தைச் சொன்னபடி கேட்பான். ஆனால் அவனுக்குச் சமயத்துக்குத் தக்கபடி ஆய்ந்தோய்ந்து செய்யும் அறிவில்லை. 

அவனுக்கு அவன் தாயார் அறிவு புகட்ட விரும்பினாள். எனவே அவனைப் பக்கத்துத் தெருவிலுள்ள பாட்டி வீட்டிற்கு அனுப்பினாள். 

அன்று மாலை சின்னான் வீட்டிற்கு வரும் பொழுது அவன் பாட்டி அவனிடம் ஓர் ஊசியைக் கொடுத்து, அதனை வீட்டுக்குக் கொண்டுபோய் அவன் தாயிடம் கொடுக்கும்படி சொன்னாள். 

போகும் வழியில் ஒருவன் வைக்கோற் கட்டு ஒன்று கொண்டுபோனான். சின்னான் அவ் வூசியை வைக்கோற்கட்டில் குத்தி வைத்து, ‘வீட்டுக்குப் பக்கத்தில் போனபின் எடுத்துக்கொள்ளலாம்’, என்று நினைத்தான். ஆனால் வீட்டுக்குப் பக்கம் வந்த போது அவ் வூசியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதைக் கேட்டதும் சின்னான் தாய், ‘நீ என்ன முட்டாளா யிருக்கிறாய்? அதனை உன் சட்டையில் ஏன் செருகிக் கொண்டு வரக்கூடாது,’ என்றாள். ‘இனி அப்படிச் செய்கிறேன்,’ என்றான் சின்னான். 

இரண்டாம் நாளும் சின்னான் பாட்டி வீடு சென்றான். பாட்டி அன்று வீட்டிற்குக் கொண்டு போகும்படி ஒரு சிறு கத்தியைக் கொடுத்தாள். சின்னான் அதைச் சட்டையில் செருகிக்கொண்டு வீட்டுக்கு வந்தான். அதனால் சட்டை கிழிந்ததோடு கத்தியும் எங்கோ விழுந்துவிட்டது. 

இவ் விவரம் கேட்ட தாய், ‘நீ என்ன முட்டாளா யிருக்கிறாய்? அதனைச் சட்டைப் பையிலேதானே வைத்துக்கொண்டு வரவேண்டும்?’ என்றாள். சின்னான், ‘சரி; இனி அப்படியே செய்வேன்,’ என்றான். 

மூன்றாம் நாள் பாட்டி ஒரு நாய்க்குட்டியைக் கொடுத்தாள். சின்னான் அதனைச் சட்டைப் பைக்குள் திணித்தான். நாய்க்குட்டி ‘வீல், வீல்’ என்று கத்திற்று. ஆயினும் சொன்னதைத் தட்டக்கூடா தென்ற நினைவுடன் சின்னான் அதனை அமுக்கிப் பையினுள் வைத்துக் கொண்டு வந்தான். நாய்க் குட்டி மூச்சுவிட முடியாமல் திணறி இறந்து போயிற்று. 

இதைக் கேட்ட தாய் வருத்தமுற்று, ‘என்ன இவ்வளவு தெரியாமல் இருக்கிறாயே! நாய்க்குட்டியின் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி அதனைக் கையில் பிடித்துக்கொண்டுதானே வர வேண்டும்?’ என்றாள். சின்னான், ‘சரி அம்மா! இப்போது தெரிந்தது. இனி அப்படியே செய்கிறேன்’, என்றான். 

அதன்பின் ஒரு நாள், பாட்டி சுவையுள்ள அப்பம் ஒன்று செய்து ‘வீட்டுக்குக் கொண்டு போ,’ என்று கொடுத்தாள். சின்னான் அதனை ஒரு கயிற்றில் கட்டித் தெரு வழியாக இழுத்து வந்தான். அப்பம் மண்ணானதோடன்றி நாய்களும் அதனைத் தொடர்ந்து கடித்துத் தின்றுவிட்டன. 

சின்னான் தாய் இதைக் கேட்டதும் நகைத்து, ‘உன்னைப்போல் கோமாளி யார்? அதை நன்றாய்த் தாளில் பொதிந்து தலையில் வைத்துக்கொண்டு வந் தால் என்ன?’ என்றாள். சின்னான் சற்றுத் தயக்கத்துடன், ‘இனி அப்படிச் செய்யத் தவறமாட்டேன்,’ என்றான். 

மறுநாள் பாட்டி கொஞ்சம் வெண்ணெயைச் சுட்டிக் காட்டி, ‘அதை வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போ’ என்றாள். சின்னான் அதை ஒரு தாளில் பொதிந்து தலைமீது வைத்துக்கொண்டு புறப்பட்டான். வெயில் நேரமானதால் வெண்ணெய் உருகித் தலையெல்லாம் வழிந்து தோள்களிலும் சட்டை களிலும் ஒழுகிற்று. கண்களும் வெண்ணெய் உருகிக் கசிந்ததால் கரிக்கத் தொடங்கின. இவ்வளவு துன்பங்களுக் கிடையில் வெண்ணெய் பொதிந்த தாள் வீடு வந்து சேர்ந்தது. உள்ளே வெண்ணெய் மட்டும் இல்லை. 

இந்தத் தடவை சின்னான் தாய் சினங்கொண்டு, ‘உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் அறிவு வரமாட்டேன் என்கிறதே! சொன்னதைச் செய்ய மட்டுந்தான் உனக்குத் தெரியுமா? எதை எதை எப்படிச் செய்யவேண்டும் என்று தெரிய வேண்டாமா?’ என்றாள். 

– கழகக் கதைச் செல்வம், முதற் பதிப்பு: டிசம்பர் 1941, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *