செம்புலிங்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 1, 2025
பார்வையிட்டோர்: 81 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஏய் வண்டியை நிறுத்து. உள்ளே இருக்க றது யாரு? இறங்கு சீக்கிரம்.” 

“அடேயப்பா! செம்புலிங்கமா? ஐயையோ விட்டுடுப்பா! உனக்குப் புண்ணிய முண்டு, அப்பா!” 

“என்னது? அப்பாவாவது டப்பாவாவது. அதெல்லாம் ஒண்ணும் பலிக்காது சாமி நம்ப கிட்ட. பேசாதே மூட்டை முடிச்சை யெல்லாம் என் முன்னாலே வச்சுட்டு மரியாதையாத் தூர நகருங்க.எதாச்சும் பேசினீங்கண்ணா விழுந்திடும் மண்டையிலே.நம்பளைவிட நம்ப ஆளுக பொல்லாதவங்க.” 

“செம்புலிங்கம், திருடன்களிலே நீ மகா யோக்கியன்னு எனக்குத் தெரியும்.உன் கிட்ட ஒரே ஒரு வார்த்தை சொல்லிக்கிட்றேன்.” 

“வார்த்தை யெல்லாம் அப்புறம் வச்சுக் கிடுங்க. கேட்டுக்கிட்றேன். முதல்லே காரியம் நடக்கணும். கையிலே, மடியிலே இருக்கறதை எல்லாம் வச்சுட்டுப் பேசுங்க.” 

“இதோ வச்சுட்டேனப்பா. வேறே ஒண்ணுமே கிடையாது.” 

“காதிலே என்னமோ மினுங்குதே!” 

“அப்பா செம்புலிங்கம், அது சிறு வயசிலே இருந்து காதோடு காதாக் கிடக்கற கடுக்கன். கழட்டினா காது அறுந்துபோகும்.” 

“சரி. தொலைஞ்சு போகுது, அடேயப்பா மாடசாமி, இந்த மூட்டையைக் கொண்டுபோய் பத்திரமா நம்ப வூட்ல வையி. கருப்பா, நீ வண் டியையும் வண்டிக்காரனையும் சோதனைபோடு”. என்று தன் ஆட்களுக்கு உத்திரவிட்டு விட்டு முத்துசாமி அய்யர் பக்கம் திரும்பி “சாமி’ உங்க கதையைச் சொல்லுங்களேன். கேட்போம்”, என்றான். 

பொழுது சாய்வதற்கு முன்னமே தன் சொந்த ஊராகிய களக்காட்டிற்குப் போய் விடலாமென்றுதான் முத்துசாமி அய்யர் திரு நெல்வேலியிலிருந்து மாட்டு வண்டியில் புறப்பட்டார். வண்டிக்காரன் எவ்வளவுதான் விரட்டிப் பார்த்தும் மாடுகள் தன் சொந்த நடையிலேயே சென்றதனால், களக்காட்டு மலைப் பக்கம் வருவதற்குள் நேரம் இருட்டிவிட்டது. களக்காட்டு மலைப்பக்கம் கொள்ளைக்காரச் செம்புலிங்கம் ஆட்சியென்பது எல்லோரும் அறிந்த விஷயம். வண்டியைத் திருப்பிக் கொண்டு திருநெல்வேலி போவதற்கும் வழியில்லை. ஆகவே கடவுளை நம்பிக்கொண்டு வண் டியை வேகமாக அந்தப் பாதையில் விரட்டச் சொன்னார். ஒருவேளை அன்று செம்புலிங்கம் அங்கு இல்லாமலிருக்கலாம். அப்படியே இருந்தா லும் அவனிடம் உண்மையைச் சொல்லி நயந்து கொண்டால் தன்னை விட்டு விடுவான் என்று எண்ணினார். ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாகச் செம்புலிங்கம் தன்னை மடக்கிக்கொண்டு பண் மூட்டையையும் பறித்துக் கொண்டதனால் அவர் மனமுடைந்துபோய் அவனெதிரே நின்றார். 

“என்ன சாமி? கதையைச் சொல்லுங்க. பேசாதே நிக்கிறீங்களே!’ என்றான் செம்பு லிங்கம். முத்துசாமி அய்யர் கண்களில் கண்ணீர் ததும்பியது. “அப்பா, எனக்கு ஒரே பொண்ணு. வீட்டை விற்று வாசலை விற்று அதைச் செல்ல மாக வளர்த்தேன். படிக்க வச்சேன்; பாட வச் சேன். அவளைச் சரியான பணக்கார வீட்டிலே கல்யாணம் பண்ணிக் குடுத்துடணும்னு எங்கெங்கே யெல்லாமோ மூணு நாலு வருஷமா அலைஞ்சேன். வயது வந்த பொண்ணை எவ்வளவு காலந்தான் வீட்டிலேயே வச்சிருக்கறது! என் கிட்டயும் ரொம்ப ஆஸ்தி ஒண்ணும் இல்லை. அதனாலே சுமாராப் பணம் உள்ள ஒரு மாப் பிள்ளையைப் போன வாரம்தான் தேடிப்புடிச்சுக் கல்யாண விஷயத்தைப் பேசி முடிச்சேன்” 

“மாப்பிளை வூட்டாரு எவ்வளவு எவ்வளவு பணம் கேட்டாங்க?” 

“அவங்க நாலாயிரம் ஐயாயிரம்னு கேட்டாங்க. நான் அவங்க காலைக் கையைப் பிடிச்சு ரெண்டாயிரத்துக்கு சம்மதிக்க வச்சேன். வரு கிற பதினாலாம் தேதி முகூர்த்தம். அன்னிக்கி நான் சொன்னபடி ரூபா ரெண்டாயிரத்தையும் மாப்பிள்ளையோட தகப்பனார் முன்னாலே. எண்ணி வச்சால்தான் மாப்பிள்ளை மண மேடை யிலே வந்து உட்காருவார். இதுக்காக வேண்டி திருநெல்வேலியிலே உள்ள எங்க பூர்வீக கஞ்சையை அவசரமா வித்து 1700 ரூபாயைக் கொண்டுக்கிட்டு வந்தேன். நீ அதைப் பிடுங்கிக் கிட்டே ! இன்னும் முன்னூறு ரூபாய்க்கி என்ன வழி செய்யறதுன்னு நான் கவலைப்பட்டுக் கிட்டு இருக்கேன். நீ இதையே எடுத்துக்கிட்டா நான் என்ன செய்யறது சொல்லு. செம்புலிங்கம், என் பொண்ணை ஆத்திலே தள்றதைத் தவிர வேறே வழியில்லே.” (அவருக்கு அழுகை பொங் கிக்கொண்டு வந்தது) 

“சாமி, நீங்க சொன்னதுபூறா ஆகாசவாணி பூமாதேவி சாச்சியா நெசந்தானே?” 

“நான் சொன்னது முக்காலும் சத்தியம். இதிலே ஒரு அணுவளவாவது பொய் இருந்தா என்னை இந்த இடத்திலேயே கொன்னுடு- சம்மதம்தான்.” 

“அப்படின்னா பயப்படாதிங்க, சாமி. இந்த செம்புலிங்கம் அநியாயமாக் கொள்ளையடிக்கற தில்லேங்கறதைக் கேள்விப்பட்டிருப்பீங்க. அத னாலே இந்தப் பணம் இப்ப என் கிட்ட இருக் கட்டும். நம்ப பங்காளிக்கி இப்ப கொஞ்சம் அவசரமாப் பணம் வேண்டியிருக்குது. நீங்க பேசாதே வீட்டுக்குப் போங்க. கலியாண ஏற் பாடுகளெல்லாம் நடக்கட்டும். கலியாண தினத் துக்குள்ளே உங்க பணம் உங்க கைக்கி வந்து சேரும். என் வார்த்தையை நம்புங்க. உங்க விலாசத்தை எழுதிக் குடுத்துட்டுப் போங்க. ஒண்ணும் ரோசனை பண்ணாம எழுதுங்க விலா சத்தை” என்று தயாராக வைத்திருந்த ஒரு பென்சிலை அவரிடம் நீட்டினான். 

வேறு வழியில்லை. முத்துசாமி அய்யர் தன் விலாசத்தை அவனிடம் எழுதிக் கொடுத்து விட்டு வண்டியில் ஏறினார். அவனிடம் இன் னும் ஏதாவது பேசினால் அவன் சாந்தமாகப் பேசுவதும் போய்விடுமென்று அவருக்குத் தெரி யும். அவன் சொன்னபடியே கேட்டு விட்டால் ஒரு வேளை அவன் மனம் இளகிப் பணத்தைத் திரும்பக் கொடுத்து விடலாம் என்ற நம்பிக்கை யோடு ஊருக்குப் போய்ச் சேர்ந்தார். 

வீட்டுக்கு வந்ததும் அவருடைய மனைவி அவர் போய் வந்த விவரத்தை விசாரித்தாள். முத்துசாமி அய்யர் வயலை விற்ற சங்கதியை எல் லாம் சாங்கோ பாங்கமாகச் சொன்னார். செம்பு லிங்கத்திடம் பணம் பறிகொடுத்ததை மட்டிலும் அடியோடு மறைத்து வீட்டு “கலியாண தினத்திற்குள் பணம் வந்து சேரும்” என்று பேச்சை முடித்தார். “வராவிட்டால்?” என்று ஒரு கேள்வியைப் போட்டாள் அவர் சம்சாரம். “வராவிட்டால் நான் எங்கேயாவது ஓடிப்போய். விட வேண்டியதுதான். கடவுள் செயலால் தான் எல்லாம் சரியாக நடக்கவேண்டும். நீ உன் சோலியைப் பார்” என்று அவளை அதட்டி விட்டுக் கலியாண ஏற்பாடுகளைக் கவனித்து வந்தார். 

கலியாண தினம். முத்துசாமி அய்யர் வீட்டில் ஏக அமர்க்களமாகப் பந்தலெல்லாம் அலங் கரித்திருக்கிறது. அவருடைய சம்பந்தி வீட்டுக் காரர்கள் நாலைந்து வீடுகளில் நிறைந்திருந்தார் கள். மாடி வராந்தாவில் அதற்குள்ளாகவே சீட்டாட்டம் ஆரம்பமாகிவிட்டது. களக்காட்டு மேகரத்தினம் நாகஸ்வரத்தை ஊதிக்கொண்டே பக்கத்திலுள்ள தவில்காரத் தங்கரத்தினத்தைப் பார்த்து “என்னப்பா மாப்பிளைப் பிள்ளையாண்டான் இன்னும் வரக்காணமே! மணி பத்து ஆவுதே!” என்று ஆச்சரியப்பட்டான். பெண்ணின் தாய் மாமனார் மாப்பிள்ளையின் தகப்ப னரான சம்பந்தி கிருஷ்ணையரைப் பார்த்து “என்ன? எல்லாம் ஆயிட்டுது. மாப்பிள்ளையை அழைக்கப் போகலாமா” என்று கால் மணி: நேரத்திற்கொருதடவை பல்லவி பாடிக்கொண்டிருக்கிறார். சம்பந்தி கிருஷ்ணைய்யரும் “ஆகட்டும். முத்துசாமி அய்யர் வாளைக் கூப்பிடுங்கோ. போவோம்” என்ற அனுபல்லவியை ஆவர்த்தனம் செய்து கொண்டிருக்கிறார். அதைக் கேட்ட அவர் முத்துசாமி அய்யரைத் தேடிப் போகிறார். முத்துசாமி அய்யர் இதைத் தெரிந்து கொண்டே மாடிப் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார். தன் மைத்துனன் முடி வாகத் தன்னைத் தேடிப்பிடித்து விட்டான் என்று தெரிந்தவுடன் முத்துசாமி அய்யர் ” நீ போ. நான் அப்புறம் வருகிறேன்” என்று கோபித்து அனுப்பி விட்டார். மைத்துனருக்கு விஷயம் ஒன்றும் புரியவில்லை. வேறு அலுவல் களைக் கவனிப்பதுபோல சமையல் கட்டிற்குப் போய் விட்டார். 

குறிப்பிட்ட லக்கினம் தவறி விடும்போ லிருந்தது. மாப்பிள்ளையின் தகப்பனார் தன் தம்பியைக் கூப்பிட்டு முத்துசாமி அய்யரைக் கையோடு அழைத்து வரும்படி அனுப்பினார். பணத்தை எண்ணிக் கையில் வாங்கினாலொழிய பையனை மணப் பந்தலுக்குள் அழைத்துவரக் கூடாதென்ற தீர்மானத்தோடு உட்கார்ந்திருந்தார் அவர். 

முத்துசாமி அய்யர் தப்புவதற்கு வேறு வழி யில்லாமல் தன் சம்பந்தி கிருஷ்ணைய்யர் முன் வந்து ஒரு கொலைக் கைதிபோல நின்றார். சம்பந்தி கிருஷ்ணைய்யர் அர்த்த புஷ்டியுள்ள ஒரு பார்வை பார்த்தவுடன் “கோவிச்சுக்கிடக் கூடாது.இப்போ முன்னூறு ரூபாதான் கை யிலே இருக்கு பாக்கி ஆயிரத்து எழுநூறையும் பின்னாடி நான் தந்துட்றேன். தயவு பண்ணி நீங்க இதுக்குச் சம்மதிக்கணும். எல்லாம் நாம் நினைக்கிறபடி நடக்கிறதா?” என்றார் முத்து சாமி அய்யர். 

“என்னங்காணும் நினைச்சபடி நடக்கறது போறது. அதெல்லாம் இருக்கட்டும். மாப்பிள்ளை மணமேடைக்கி வரணுமா வேண்டாமா? அதைச் சொல்லும்” என்று சம்பந்தி கிருஷ்ணைய் யர் கண்டிப்பாகக் கேட்டவுடன் முத்துசாமி அய்யர் தூணோடு சாய்ந்து உட்கார்ந்து விட்டார். என்ன சொல்வதென்றே புரியவில்லை. ஏதோ ஒரு சொப்பன உலகில் இருப்பதுபோலத் தலை யைத் தொங்கவிட்டுக்கொண்டு ஒன்றும் பேசாம லிருந்தார். 

செம்புலிங்கத்திற்கு ஏழெட்டு நாளாக உடம்பு சரியில்லை. படுத்த படுக்கையாக இருந் தான். சரியான வேட்டையும் கிடையாது: அவன் மனைவி அருகிலிருந்து அவனைக் கவனித்துக் கொண்டிருந்தாள். திடீரென் அன்று பதினாலாம் தேதியென்று ஞாபகம் வந்தது. உடனே முத்துசாமி அய்யருக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைத்தான். தன் கஷ்டத்தைப் பொருட்படுத்தாமல் படுக்கையை விட்டு இறங்கித் தன் பெட்டியைத் திறந்து பார்த்தான். அதில் நூறோ இருநூறோதான் பணமிருந்தது. மனைவியைக் கூப்பிட்டான். அவள் உடம்பில் கிடந்த நகைகளைக்கழட்டினான். 

மறு நிமிஷம் நகைகள் அவன் கூட்டாளி மாட சாமியின் கையில் கொடுக்கப்பட்டது. “மாட சாமி, நீ ஓட்டமாகப்போய் இதைச் செட்டியார் கடையில் அடகுவைத்து ரூபாய் இரண்டாயிரம் வாங்கிக்கொண்டு நேராகக் களக்காட்டிற்குப் போகவேண்டும். இந்த விலாசக்கார அய்யர் அன்று சொன்னபடி எல்லாம் உண்மையாக இருந்தால் ரூபாய் இரண்டாயிரத்தையும் அவரி டம் ஜாக்ரதையாகக் கொடுத்து உடனே திரும்பி வந்து என்னிடம் பதில் சொல்லவேண்டும்” என்று உத்திரவு போட்டு அவனை அனுப்பினான். 

கலியாண வீட்டில் தலையைக் குனிந்து கொண்டிருந்த முத்துசாமி அய்யர் “இந்த அவ மானத்தை நம்மால் சகிக்கமுடியாது. இப்படியே வெளியே எங்காவது போய்விட வேண்டியது தான்” என்ற தீர்மானத்தோடு மெதுவாக எழுந்திருந்தார். 

“என்னங்காணும்? எழுந்திருக்கிறீர். எங் களுக்கு என்ன ஜவாப்? இந்தக் களக்காட்டுக் காரர்கள் காரியமே இப்படித்தான்.அதெல்லாம் ஒண்ணும் பேசறதுக்கில்லே. நாங்க இப்பவே பழையபடி ஊருக்குத் திரும்ப வேண்டியதுதான். என்ன சொல்கிறீர்?” என்று அதட்டினார் சம்பந்தி கிருஷ்ணைய்யர். 

இந்தச் சமயத்தில் தவில்காரனுக்குப் பக்கத் தில் தடியை ஊன்றிக்கொண்டு நின்ற ஒருவன் முத்துசாமி ஐயரைக் கூப்பிட்டு “சாமி இந்தாங்க நம்ப நடுத்தெரு நாராயணசாமி நாயுடு குடுத் தாரு.” என்று அவர் கையில் ஒரு புடவைப் பார்சலையும் ஒரு கடிதத்தையும் கொடுத்தான், முத்துசாமி அய்யர் அவசர அவசரமாகக் கடிதத் தைப் பிரித்துப் பார்த்தார். முகம் மலர்ந்தது. உடனே வெகு அவசரமாகப் புடவைப் பார்சலைப் பிரித்தார். அதில் ஒரு உயர்ந்த பட்டுச்சேலையும் இரண்டு ஆயிர ரூபாய் நோட்டுகளும் இருந்தன. அதைக்கொண்டுவந்த ஆளைப் பார்த்து உபசாரம் பண்ணவேண்டுமென்று அங்குமிங்கும் தேடினார். ஆளைக் காணவேயில்லை. 

பணம் கைக்கு வந்ததும் முத்துசாமி அய்ய ருக்குத் தன் ஆனந்தத்தை சம்பந்தியிடம். எப்படித் தெரிவிப்பதென்றே தெரியவில்லை. “இந்தாருமைய்யா பணம். இரண்டாயிரம் போதுமா? ரெண்டாயிரத்து முன்னூறுவேணு மா? என்று ஓங்கிக் கேட்டுவிட்டு இரண்டு ஆயிர ரூபாய் நோட்டுகளை அலட்சியமாக அவர் முன் னால் போட்டார். பணம் கைக்கு வந்தவுடன் கிருஷ்ணைய்யரும் ரெம்பத் தமாஷாகப் பேச ஆரம் பித்தார். பழைய சண்டையை இருவருமே மறந்துவிட்டார்கள். 

விவாகம் ஐந்து நாட்கள் சிறப்பாக நடந்தது. முத்துசாமி அய்யரிடம் மீதியாக இருந்த முன் னூறு ரூபாயைக்கொண்டு தன் பெண்ணுக்கு இன்னும் அதிகமான சீர்வரிசைகளைச் செய்தார். அந்த ரூபாய் தன் பெண்ணுக்காகச் செம்புலிங் கம் அனுப்பிய கலியாணப் பரிசு என்று எண்ணிக் கொண்டு அவனை மனமார வாழ்த்தினார். 

கலியாணம் முடிந்த மறுவாரம் மாப்பிள்ளை வீட்டார் தங்கள் ஊருக்குப் புறப்பட்டார்கள். ஐந்து வண்டி நிறைய ஆட்களும் சாமான்களும் களக்காட்டு மலைப்பக்கமாகப் போய்க்கொண் டிருந்தது. செம்புலிங்கம் கண்ணில் படாமல் அந்தப்பக்கம் போய்விட முடியுமா? 

“ஏய்! வண்டிகளை நிறுத்து ! ஆட்கள் அல் லாரும் இறங்குங்க”. 

“ஐயையோ திருடன்”. “அடடா வழிப் பறியா?” “அட தெய்வமே, உனக்குக் கண்,காது மூக்கு இல்லையா?” “புதுசாக் கலியாணம் பண் ணிக்கிட்ட மாப்பிள்ளை!” “எங்களை உயிரோட வீட்டிடு” எங்க கிட்டப் பைசாக்கூடக் கிடை யாது”; “நாங்க விருந்தாளிகள்” என்று வண்டியி லிருந்து இறங்கிய கிருஷ்ணைய்யர் வகையறாக்கள் கூக்குரலிட்டார்கள். 

செம்புலிங்கம் எல்லோரையும் ஒரு முறைப்பு முறைத்து விட்டு “இந்த மாதிரிச் சத்தம்போட் டால் கையிலே இருக்கிற வீச்சரிவாளைப் பாத்துக். கிடுங்க. ஒரே வெட்டு. உடல் வேறே தலைவேறே! ஆமா! அல்லாரும் வாயைப் பொத்துங்க. வரிசையா நில்லுங்க அல்லாரும். மாப்பிள்ளைப் பிள்ளையாண்டான் இங்கே வாங்க. உங்க தகப் பனாரைக் கூப்பிடுங்க” என்றான். 

அவன் கூப்பிடுவதற்குள்ளாகவே கிருஷ்ணைய்யர் விழுந்தடித்துக்கொண்டு செம்புலிங்கத் தின் முன்னே வந்து “அப்பா, இதோ இருக் கேன் நான். என்ன செய்யணும்?” என்றார். 

“கலியாணம் எந்த ஊரிலே?” 

“களக்காட்டிலே தானப்பா!” 

“யார் வீட்டிலே?” 

“முத்துசாமி அய்யர் வீட்டிலேதான். அவர் மகளைத்தான் நம்ம பையனுக்கு முடிச்சிருக்குது.” 

“‘சரி. அந்த முத்துசாமி அய்யர் கிட்ட எவ் வளவு ரூபா வாங்கினீக?” 

“அவா பரம் ஏழைகள். ஐநூறுதான் கொடுத்தார்”. 

“பொய் சொன்னா ஒரே போடுதான். உள்ள தைச் சொல்லும்” 

“சொல்லிட்றேனப்பா! ரெண்டாயிரம் வாங்கினேன்” 

“அந்த ரூபாயை மரியாதையா இப்படிக் கொண்டு வந்து வையும்” 

“ஐயையோ! அதை உன் கையிலே குடுத் துட்டு நான் தெருவிலே போகவா?” 

“தெருவிலே போகவா? ஏன் இன்னும் கொள்ளையடிக்கிறதுக்கா? உம்மைப் பாத்தா இதைக் கொண்டு பிழைக்கிறவங்களாத் தெரி யலையே. ஏனய்யா ஏழைமாதிரி பாசாங்கு பண் றீர்? மூணு எண்றதுக்குள்ளே ரூபாயைக் கீழே வச்சுடணும். எண்ணுடா, மாடசாமி’ கிருஷ் ணைய்யர் பதறியடித்துக் கொண்டு மடியில் வைத் திருந்த இரண்டாயிர ரூபாயையும் எடுத்து அவன் முன்னால் வைத்து விட்டார். “ஏய் மாட சாமி, இதை எடுத்துக் கொண்டுபோய் நம்ப கஜனாவிலே வை. ஐயர்வாள், நீங்க கல்யாண வீட்டுக்காரர், அதனாலே உங்க நகைகளையும் பிடுங்கிக்கிட எனக்கு மனசுவரலை. மரியாதையா இப்படியே ஊர் போய்ச்சேருங்க. இந்த ரெண் டாயிர ரூபா அநியாயமா வந்தது. அநியாய மாவே போயிட்டுப் போகுது. கவலைப்படாம எல்லோரும் போயிட்டு வாங்க” என்று எல் லோரையும் வழியனுப்பினான். 

கிருஷ்ணைய்யர் உள்பட எல்லோருக்கும் ஒரு திருப்தி. தங்கள் உயிர் பிழைத்ததே என்பதில் அவர்களுக்கு சந்தோஷம். மேலும் அவர்கள் எதிர்பார்த்தபடி கொள்ளைக் கூட்டத்தார்கள் தங்களை அடித்து உதைத்து எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு விடாமல் அதோடு விட்டார் களே என்று செம்புலிங்கத்தை வாயார வாழ்த்தி னார்கள். இந்தவிதமான ஆபத்துக்களை யெல்லாம் நினைத்துப் பார்த்தபோது, அவர்கள் இரண்டாயிரம் ரூபாயை இழந்தது ஒரு பிரமாதமாகத் தோன்ற வில்லை.மகிழ்ச்சியுடனே ஊர்போய்ச் சேர்ந்தார்கள். 

இது நடந்த சில நாட்கள் கழித்து முத்து சாமி அய்யரிடம் ஒருவன் ஒரு காகிதப்பையைக் கொடுத்து விட்டுப்போனான். அதில் இரண்டா யிரம் ரூபாயும் ஒரு கடிதமும் இருந்தது. கலியாண தினத்தன்று கிருஷ்ணைய்யர் பேசிய கடூரமான வார்த்தைகளைக் கேள்விப்பட்டதாகவும், அத னால் அவர் அநியாயமாகக் கொண்டுபோன பணம் இரண்டாயிரத்தை மட்டிலும் பிடுங்கி அவருக்கு அனுப்பியிருப்பதாகவும், அந்தப் பணத்தைக் கொண்டு முத்துசாமி அய்யர் தன் பூர்வீக நிலங்களை வாங்கிக்கொள்ளலா மென்றும் செம்புலிங்கம் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தான். கடிதம் ஆனந்தக் கண்ணீரால் நனைந்தது. 

முத்துசாமி அய்யர் வெளியூருக்குப்போகும் போது வழியில் செம்புலிங்கத்தைக்கண்டு பேசாமல் போவதில்லை. அவன் போலீஸில் பிடிபட்ட அன்று அவர் சாப்பிடவே இல்லை.

– ஆனந்த விகடன், மணிக்கொடி, வசந்தம், யுவன், சக்தி ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன.

– சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947, மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி.

சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி. சமர்ப்பணம்  தமிழன் தனது கவிச்செல்வத்தையும் இசைச் செல்வத்தையும் நன்கு அனுபவிப்பதற்கு வழிகாட்டிய சிந்தனைச் செல்வர் ரசிகமணி  டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்.   நன்றியுரை  "ஆனந்த விகடன் " "மணிக் கொடி “வசந்தம்”, யுவன்'', "சக்தி" ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன. இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி. இப்பொழுது இவைகளைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *