சுமக்காதவர்கள்….!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 26, 2026
பார்வையிட்டோர்: 1,819 
 
 

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 13-14 | அத்தியாயம் 15-16

அத்தியாயம் – 15

லாரன்சு இருப்பிடத்தில் இருந்தான். வழக்கம் போல் சாதாரண உடையில் தினசரி படித்துக் கொண்டிருந்தான். பிலோமினாவைப் பார்த்ததும் அவனுக்குள் உவகை.

“என்ன திடீர் விசயம்?” கேட்டான்.

“நமக்கு ஆபத்து.”

“நமக்கா?!“

“ஆமாம். என் அம்மா அப்பா அமெரிக்காவுலேர்ந்து வந்திருக்காங்க.”

“எப்போ, எப்படி?”

“யார் ஏற்பாடோ தெரியலை. திடீர் திக் விஜயம். என்கிட்ட சொல்லாமகூட புறப்பட்டிருக்காங்க.”

“காரணம்?“

“அதான் தெரியலை. ஒரு வேளை நாம பக்கத்துல பக்கத்துல இருக்கிற விசயம் அவுங்களுக்குத் தெரிஞ்சிருக்குமோ என்னவோ?”

“யார் சொல்லி இருப்பா?”

“தெரியலை. ஏஞ்சல் மேல சந்தேகமா இருக்கு.”

“அவுங்களுக்கு எப்படி நம்ம விசயம் தெரியும்?“

“தெரியலை. குழப்பமா இருக்கு.”

“சரி. நீ இப்போ வந்த விசயம்?”

“நீங்க ரெண்டு நாளைக்குப் பூசை வைக்காம எங்கேயாவது போகனும்.”

“ஏன்?!“

“என் அம்மா அப்பா கண்ணுல படக்கூடாது.”

“காரணம்?“

“நம்மைத் தப்பா நெனைப்பாங்க. அப்பாவுக்கு உங்களைப் பார்த்தா கோபம் வரும்.”

“ஏன்?“

“உங்களால நான் இப்படி ஆகி இருக்கேன்னு கோபம் வரலாம்.”

லாரன்சுக்குப் புரிந்தது.

“அதற்கு என்ன செய்ய முடியும்? என்னால அப்படி திடீர்ன்னு போக முடியாது பிலோமினா?”

“ஏன்?”

“இங்கே பூசை யார் வைப்பா?”

“யாராவது வைப்பாங்க. இல்லே வைக்காம போறாங்க. இங்கே சாமியார் இல்லாத நாட்கள்ல எத்தனையோ முறை அப்படி நடந்திருக்கு.”

“நடந்திருக்கலாம். எனக்கென்னமோ இப்படி பயந்துக்கிட்டு போறது சரி இல்லேன்னு தோணுது.”

திகைப்பாய்ப் பார்த்தாள்.

“இப்போ நான் யார் மேலேயும் விருப்பு வெறுப்பு இல்லாத பூசை மட்டுமே வைக்கத் தெரிந்த சாமியார். நீ சொல்றதுக்காக நான் இப்போ வீண் பிரச்சனை வேணாம்ன்னு போனேன்னா நான் பயந்து போனதாய் மனசாட்சி உறுத்தும். நான் விரும்பலை. கஷ்டமோ நஷ்டமோ நான் எதையும் ஏத்துக்க தயாராய் இருக்கேன்.”

பிலோமினா கையைப் பிசைந்தாள்.

“சூசை, அப்பா ஸ்தானத்துக்கு மாறி என்னை ஏதாவது செய்தார்ன்னா அதை ஏத்துக்கிறதுதான் இந்த பாதிரியாரோட கடமையாய் இருக்கனும். அதுதான் இந்த உடைக்கு மரியாதை.”

“நீங்க மனுசனாய் மாறனும்ன்னு சொன்னீங்களே?!” மடக்கினாள்.

“அது வேறு இது வேறு பிலோமினா. நான் இந்த உடையைக் கழற்றும்வரை அதுக்கு நான் மரியாதை கொடுக்கனும்.”

“நீங்க என்னை வேதனைப்படுத்தனும்னு அநாவசியமாய் பிடிவாதம் பிடிக்கிறீங்க.”

“உன் வேதனையை என்னால தாங்க முடியாது. நீ சம்மதம்ன்னு சொல்லு. இந்த நிமிசமே இந்த உடையைக் கழட்டிட்டு நாம சாதாரண மனுசங்களாய் இந்த இடத்தைவிட்டுப் போகலாம்.”

‘இது நினைத்ததும் உடனே கழற்றித் துாக்கி எறிந்துவிடு உடையல்ல! பெண்களுக்குக் கழுத்தில் இருக்கும் தாலியைவிட கணம்.’ பிலோமினா குமைந்தாள்.

“அது….” இழுத்தாள்.

“உண்டு!, இல்லை !… சொல்லு பிலோமினா. நான் அடுத்த முடிவு எடுக்கனும்.”

“…..”

“மத்த அயோக்கியர்களைப் பத்தி எனக்குக் கவலை இல்லே. என் உடல்ல இந்த உடை இருக்கிறவரை நான் அதுக்கு மரியாதை கொடுப்பேன். விசுவாசமாய் இருப்பேன்.”

“அப்போ இதுக்கு வழி?”

“நான் எங்கேயும் போக மாட்டேன். கோயிலுக்கு வர்றவங்களுக்கு விருப்பு வெறுப்பு இல்லாம ஆசீர்வாதம் செய்வேன். உன் அப்பா கோபப்பட்டு எது கொடுத்தாலும் ஏத்துப்பேன்.”

“என் அப்பா மேல உங்களுக்குக் கோபம், பயம், வெறுப்பு இல்லையா?“

“இல்லே. ஒரு பெண்ணோட அப்பா நிலையிலேர்ந்து அவர் செய்ய வேண்டியது செய்தார். நான்… என் அம்மா அப்பாவிற்குப் பிள்ளை, தங்கைக்கு அண்ணன் ஸ்தானத்திலேர்ந்தும் காதலி சுகப்படட்டுமேங்குற மனித ஸ்தானத்திலேருந்தும் என் கடமையைச் செய்தேன். இடையில காதல் செத்துப் போச்சு இதுல விருப்பு வெறுப்புக்கு வாய்ப்பே இல்லே. உன் அப்பா பழசை மறந்து பேசினால் பேசுவேன். பேசலைன்னாலும் வருத்தம் கெடையாது. யார் மாதாக் கோயிலுக்கு வந்து செபம் செய்தாலும் ஆசீர்வதிக்கிறது என்னோட கடமை. கர்த்தர் காலடியில எதிரி, நண்பன், நல்லவன், கெட்டவன் கெடையாது. எல்லாரையும் ஆசீர்வதிக்கனுங்குறது பாதிரியாரோட பால பாடம். ஏன் எதிரியையும் நேசிக்கனும் உனக்கும் அதுதானே பாடம்?!”

“பேச்சு நல்லா இருக்கு. நீங்க இப்படி இருக்கீங்க. அவர் மகள் வாழ்க்கையை அழிச்ச துரோகின்னு உங்களைப் பார்த்தால் பாய்வாரோன்னு எனக்குப் பயமா இருக்கு.”

“ஒன்னு நல்லா புரிஞ்சுக்கோ. நான் உன் வாழ்க்கையைக் கெடுக்கலை. அவர்தான் கெடுத்தார். அவர் சம்மதிச்சிருந்தால் நம்ம திருமணம் ஜாம் ஜாம்ன்னு நடந்திருக்கும். யாருக்கும் எந்தவித கஷ்டமும் கெடையாது, நாம நல்லா இருந்திருப்போம். அடுத்த விசயம் நான் மறுபடியும் சொல்றேன் அவர் அடிச்சாலும் உதைச்சாலும் சண்டை போட்டாலும் சிரிச்சுட்டே ஏத்துப்பேன். ஃபாதர் படிப்பு பயிற்சியிலேயே நான் கோபம், தாபம், வெறுப்பு எல்லாத்தையும் மூட்டைக் கட்டி வைச்சாச்சு. மனசுல அன்பு, கருணை மட்டும்தான் இருக்கு.”

“என் அப்பா ரொம்ப கோபக்காரர் லாரன்சு.” பிலோமினா இன்னமும் நடுங்கினாள்.

“இருக்கலாம். ஆனா அவர் என் மனசுக்கு நியாயக்காரராய்ப் படறார். அன்னைக்கு அவர் என்னை அடிச்சிருக்கலாம் உதைச்சிருக்கலாம் கை காலை உடைச்சு மூலையில கிடத்திருக்கலாம். ஏன் கொன்னும் போட்டிருக்கலாம். செய்யலை. புத்தி சொன்னார். என் மகளை விட்டு விலகு சொன்னார்”.

“உங்களுக்கு அவரைப் பத்தி தெரியாது லாரன்சு முதல்ல வீண் வம்பு, கொலை வேணாம்ன்னு காரியம் சாதிக்கப் பார்ப்பார். முடியலைன்னா அடுத்துதான் கொலை.”

“உன் அப்பாவைப் பத்தி உனக்குத்தான் தெரியும்”.

“இப்போ எப்படி இருக்கார்ன்னு என்னாலேயும் அனுமானிக்க முடியாலை லாரன்சு”.

“எதுவும் நடக்காது தைரியமா இரு.”

“அப்போ நீங்க என் சொல்படி கேட்கப்போறதில்லையா?”

“இம்மி அளவு என்னால நகர முடியாது.”

லாரன்சை மாற்ற முடியாது தெரிய…பிலோமினா துவண்டு போனாள். ‘நடப்பது நடக்க வேண்டுமென்றால் நடந்தேதான் தீரும்!’ இப்படியொரு முடிவிற்குத்தான் அவளால் வர முடிந்தது.

“இருந்தாலும் நீங்க ஜாக்கிரதையாய் இருங்க.” மெல்ல சொல்லி எழுந்தாள்.

‘என்னதான் பாசம் அன்பு நேசம் அற. கர்த்தர்தான் உன் மூச்சு. இறை பணிதான் உன் வாழ்க்கை என்பது பாலபாடமாக இருந்தாலும் கஷ்டமென்று வந்தால் மனித இயல்புகளை மாற்ற முடிவதில்லை. பெற்றவர்கள் இறந்தால் கலங்காத சாமியார், பாதிரியார். கன்னிகாஸ்திரிகள் யார்? அப்படி கலங்காதவர்கள் கடவுள் விசுவாசிகள் இல்லை. கல் மனம் படைத்தவர்கள். பிறப்பு இறப்பு சமம், சகஜம், ஆண்டவன் விதி, உலக நியதி, எனக்குத் துக்கமில்லை என்று சொல்வதெல்லாம் பம்மாத்து. கடவுளால் உயிர் உருவாக்கப்பட்டாலும் நீ யாரால் இந்த உலகிற்கு வந்தாய் ? பெற்று வளர்த்து எடுக்காமல் மனிதன் இந்த நிலையை எப்படி அடைய முடியும் ?! மத வெறி இல்லாமல் கடவுள் சாயம் பூ சாமல் இருக்கும் எந்த மனிதனுக்கும் கலக்கம் வரவேச் செய்யும்.

ஆக இது விவசாயி, தொழிலாளி, வேலைக்காரர்கள் என்பது போல் ஒரு வேசம், வேலை! புரிந்தது.

‘எல்லாம் அறுத்து இறை பணியே என்றிருந்து கொலை நடந்தாலும் கண்டு கொள்ளாமல் போனால் அவன் கல்! ஆகா…. இவன் நம்மைத் தவிர இடியே விழுந்தாலும் மதிக்காதவன் கவலைப்படாதவன். இவன்தான் தனக்கு ஏற்றவன் பக்தன் என்று இறைவன் மெச்சுவானா?! மாட்டான்!‘

கஷ்டப்படுவர்களுக்குக் கை கொடு என்பது கடவுளின் சித்தாந்தம். ஏழையின் சிரிப்பில்தான் இறைவன் இருக்கிறான். மக்கள் தொண்டு மகேசன் தொண்டு, ஆக… கடவுள் மனிதன் மனிதனாகவே இருக்கப் பிரியப்படுகிறான். அதனால்தான் ஏஞ்சல் எலிசபெத்துகளையெல்லாம் அவன் கண்டு கொள்வதில்லை வெறுப்பதில்லை.

பின் இந்த வேசம்?….

மதப் பிரியர்கள் பிரியர்கள் வெறியர்கள் ஏற்பாடு. கட்டுப்பாடு! பிலோமினாவிற்குள் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்று கழன்று விழுவது போல் இருந்தது.

நாளைப் பொழுது நல்லதாக வேண்டுமென்று வேண்டிக்கொண்டு இறங்கினாள். அப்பா அம்மாவிடம் சொல்லியது போல் மதர் சுப்பீரியரிடமும் ஏஞ்சலிடமும் அப்பா அம்மா வந்த விசயத்தைச் சொல்லி அவர்களுடன் தங்கி இருக்கப் போவதாக கூறி விடுதி அறையை விட்டு வெளியேறினாள். அவர்களுடன் போய் தங்கினாள்.

‘நாளை என்ன நடக்கும்?’ மனதை இறுக்கிப் பிடித்தாள்.

அத்தியாயம் – 16

காலை ஆறு மணி பூ சைக்கு எதிரிலுள்ள கோயிலுக்குக் கிளம்ப சூசை அதிகாலை ஐந்து மணிக்கே விழித்துவிட்டார். மனைவியை எழுப்பி மகளை எழுப்பி….குளிக்க விரட்டி….

நேரம் நெருங்க நெருங்க பிலோமினாவிற்கு உதைப்பாக இருந்தது.

‘கடைசி வரிசையில் அமர்ந்து அப்பா கண்ணில் லாரன்சு படாதுவாறு திரும்பினாலென்ன?’ இந்த எண்ணம் மனதில் தோன்றியதும் “இதோ இதோ” என்று முடிந்தவரையில் நேரத்தைக் கடத்தினாள்.

சூசைக்கு முன்னாலும் போக முடியவில்லை. மனைவி மகளை விட்டுப் போகவும் மனமில்லை.

அப்படி இப்படி இப்படி நேரம் கடத்தி பிலோமினா 5.55 க்கெல்லாம் புறப்பட்டாள். மூவரும் ஓட்டமும் நடையுமாக ஓடினார்கள். நல்ல வேளையாக பூசை ஆரம்பிக்கப்படவில்லை. கோயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பிலோமினா நினைத்தப்படி கோயிலினுள்ளே வாசலுக்குப் பக்கத்திலேயே மண்டிப்போட இடம் கிடைத்தது. இவர்களுக்குப் இவர்களுக்குப் பின்னால் வந்தவர்களெல்லாம் வாசலுக்கு வெளியே உள்ள சிமெண்ட் தளத்தில் மண்டிப் போட்டார்கள்.

சூசையும் மேரியும் மண்டிப் போட்டதுமே கண்களை மூடி செபிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

அதன் பிறகுதான் ஃபாதர் லாரன்சு மேடையில் தோன்றி பூசையை ஆரம்பித்தான்.

“பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே!” தொடங்கினான் இந்த மட்டில் கர்த்தர் தனக்கு அனுசரணையாய் இருப்பதில் பிலோமினாவிற்குத் திருப்தி. இந்த அனுசரணை இன்னும் வேண்டும். பூசை முடிந்ததும் லாரன்சை நெருங்க விடாமல் இப்படியே அழைத்துக் கொண்டு சென்றுவிடவேண்டும்! நினைத்தாள்.

அரைமணி நேரம். பூசை முடிந்து கண்விழிக்க…

“அப்பா! கூட்டம் நம்மை நெருக்கிறதுக்கு முன்னால வெளியேறிடலாம்ப்பா.” சொன்னாள்.

“சரி இல்லேம்மா. சாமியார் அருமையாய்ப் பூசை வைத்தார். அவரைப் பார்த்து ஆசி வாங்கிட்டுப் போகனும். அடுத்து இந்த கோயிலுக்கு நாங்க இப்போ முதன்முதலா வந்திருக்கோம். மேரி மாதா அருளே வடிவாய் குழந்தையை வைச்சிக்கிட்டு நிக்கிறாங்க. அவுங்களையும் போய் கிட்ட தரிச்சிச்சுட்டு கோயிலையும் மெதுவா நல்லா சுத்திப் பார்த்துட்டு சாமியார் கையால அப்பம் வாங்கிட்டு.. அப்புறம் புறப்படலாம்.” சொல்லி எழுந்தார். கணவனுடன் மனைவியும் எழுந்தாள்.

சூசை சொன்னதோடு மட்டும் நிற்காமல், “வாம்மா…” அழைத்து பீடத்தை நோக்கி நடந்தார்.

‘இனி சமாளிக்க முடியாது!’ பிலோமினாவிற்குத் தெளிவாகத் தெரிந்து விட்டது.

‘கர்த்தர் விட்ட வழி!’ தொடர்ந்தாள்.

லாரன்சு பீடத்தின் கீழ் நின்று கொண்டு வழக்கம் போல் பக்தர்களை ஆசீர்வதித்து அப்பம் கொடுத்துக் கொண்டிருந்தான். கூட்டம் நகர நகர அவன் பணி தொடர்ந்தது.

அப்பா அப்பம் கொடுக்கும் போதே “படவா!” சட்டையைப் பிடிப்பார்! பிலோமினாவிற்குக் கலக்கியது.

சூசை பாதிரியாரையெல்லாம் கவனிக்கவில்லை. கோயில் உச்சியையும் அதன் கட்டுமான அழகையும் ரசித்துக்கொண்டு முன்னேறினார். அதன் அழகும் அமைதியும் அவரை அப்படி கட்டிப் போட வைத்துவிட்டது,

அப்பா இங்கே சண்டையேப் போட வேண்டாம். அமைதியாக வீட்டிற்கு வந்து,

“நெனைச்சேன்!” வெடிக்கலாம்.

“ஓ… நீங்க ரெண்டு போரும் இங்கே கொட்டமடிக்கிறீங்களா?” கேட்கலாம்…

“அவன் என் கண்ணுல படக்கூடாது குட்டு வெளிப்பட்டுடும்ன்னுதான் நாம் இங்கே தங்க வேணாம் வேளாங்கண்ணியில தங்கலாம்ன்னு அவசரப்படுத்தினீயா? திருடி! கள்ளி!”

“கூட்டத்துல குளறுபடி வேணாம். கோயிலுக்குள்ளே அசம்பாவிதம் ஏதும் நடக்கக்கூடாது மாதா மன்னிக்கமாட்டாள்ன்னுதான் சும்மா வந்தேன். நான் அவனை அழிக்காம விடமாட்டேன்டி!” கோபப்பட்டுப் புறப்படலாம்! பிலோமினா மனம் திக் திக்.

முன்னேறும் தந்தையைப் பயத்துடன் பார்த்தாள்.

‘எதுவும் நடக்கக்கூடாது. அப்படி நடந்தால் நாம் குறுக்கே பாய்ந்து தடுத்துவிடவேண்டும்! எனக்கு வல்லமை கொடு. பலம் கொடு.’ வேண்டி அவரை ஒட்டியே நடந்தாள்.

ஆனால் நடந்தது வேறாக இருந்தது. எதுவும் நடக்காததுது ஆச்சரியமாக இருந்தது.

சூசை வாயில் அப்பம் வாங்கிக் கொண்டு அமைதியாக நகர்ந்தார்.

லாரன்சு யாரையும் கவனிக்கவில்லை. வாயில் அப்பம் வைக்கும் போதுதான் அவன் பிலோமினாவையேக் கவனித்தான். அதன் பின்தான் முன்னால் செல்லும் பிலோமினா அம்மா அப்பாவை ஒரு வினாடி பார்த்தான்.

அப்பம் வாங்கிய சூசை முகம் மாறி விட்டது. அதன் பிறகு அவர் யாருடனும் பேசவில்லை. மனதுக்குள் எவ்வளவோ அதிர்ச்சிகள், அலைகள். சிந்தனை வயப்பட்டவராக கோயிலை விட்டு வெளியே நடந்தார்.

மேரி அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. யார் பாதிப்பு தாக்குதலும் அவளுக்குத் தெரியவில்லை. எதுவும் தெரியாத அப்பிராணி.

பிலோமினாவிற்குள் தந்தையின் இந்த மௌனம்தான் புரியாத புதிராக இருந்தது. எந்த நேரம் எப்படி வெடிக்குமோ என்று பயமாக இருந்தது,

‘ஒரு வேளை அப்பாவிற்கு லாரன்சை அடையாளம் தெரியவில்லையா?’ என்று கூட ஒரு மாறுதலுக்காக நினைத்தாள். ‘அடையாளம் தெரியாமலா அவர் முகம் மாறியது?’ அதற்கும் அடி விழுந்தது. மாதாக் கோவிலை விட்டு வெளியே வந்து வீடு வரும் வரையிலும் அவர் யாரோடும் பேசவில்லை.

வந்தும்… சாய்வு நாற்காலியில் அமர்ந்து விட்டம் பார்த்தார்.

“ஏன் ரொம்ப நேரமா என்னவோ போலிருக்கீங்க?” கவனித்த மேரிக்குக் கணவன் மீது கவலை.

சூசை பதில் சொல்லவில்லை.

“ஏன் பேயடிச்சாப்போல இருக்கீங்க?” விடவில்லை. இதற்கும் பதிலில்லை.

‘இதற்கு மேல் கேட்டால் கணவனின் கோபம் தன் மீது பாயும்!’ உணர்ந்து அடுத்து வாயைத் திறக்காமல் அகன்றாள். வெகு நேரத்திற்குப் பிறகு அவர் கண்களில் கண்ணீர் கட்டி கன்னங்களில் அருவியாக வழிந்தது.

பார்த்த மேரி பதறிப் போனாள்.

“என்னங்க… என்னங்க ஆச்சு?” பதை பதைத்தாள். சூசையால் அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியவில்லை.

குமுறிக் குமுறி அழுதார்.

“என்னங்க… என்னங்க ஆச்சு?” மேரியால் தாளமுடியவில்லை. திடுக்கிட்டு கணவனை உலுக்கினாள்.

பிலோமினாவிற்கு இது அதிர்ச்சியாக இருந்தது, ‘எப்படி எப்படி?’ அவளால் நம்பவே முடியவில்லை.

“பிலோமினா! அப்பாவுக்கு என்னமோ ஆச்சு. ஏன்.. என்னன்னு கேளு.” அலறி மேரி மகளிடம் ஓடிவந்தாள்.

அவருக்கு என்ன ஆனது என்று அவளுக்குப் புரிந்தது. தாய் அலறலுக்கு அசையாமல் இருந்தாள்.

“என்னடி! அப்பா அழறார். நீ அசையாம உட்கார்ந்திருக்கே. உங்களுக்கு என்ன ஆச்சு. கர்த்தரே! இவளுக்கும் என்னமோ ஆச்சே. எனக்கு ஒன்னும் தெரியலையே..! என்ன செய்வேன்?” அவளும் புலம்பினாள். அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

“அம்மா!”

“என்னடி?” புலம்பலை நிறுத்தி கேட்டாள்.

“அப்பா அழட்டும்!”

“ஏன்டி?“

“அவருக்குத் தாக்கம்!”

“என்ன தாக்கம்?”

“லாரன்சை சாமியாராய்ப் பார்த்த தாக்கம்.”

“லாரன்சா? யார் அவன்?”

“என் காதலன்!”

“அவன் எங்கே இங்கே இருக்கான்?”

“கோயில் பாதிரியாரா?”

“ஐயோ ! நான் கவனிக்கலையே. அவன் ஏன் அப்படி போனான்? நான் பார்க்கனும்.”

“வேணாம்.”

மேரிக்கும் ஓரளவிற்கு விசயம் புரிய… உறைந்தாள்.

இருட்டு தன் போர்வையைப் போர்த்தி இருந்தது. யாரும் யாரோடும் பேசவில்லை. ஏன் அவர்கள் சாப்பிடவில்லை. உறங்கவில்லை.

“பிலோமினா!” சூசை மகளைக் குழைவாய் அழைத்தார்.

“சொல்லுங்கப்பா?”

“நான் அந்த பையனைப் பார்க்கனும்.”

“ஏன்?“

“பேசனும்.”

“மன்னிப்புக் கேட்கப்போறீங்களா?”

“இல்லே. பிராயச்சித்தம் தேடப்போறேன்.”

“புரியலை ?”

“நீங்க இப்போ திருமணம் முடிக்க சம்மதம்.”

“அப்பா!” திடுக்கிட்டு எழுந்தாள்.

”என்ன உளர்றீங்க?” மேரியும் சீறினாள்.

“யாரும் விளக்கைப் போடாம நான் சொல்றதை மட்டும் கேளுங்க. காரணம்… இது காது மட்டும் கேட்கும் சமாச்சாரம். முகம் தேவை இல்லே. இன்னைக்கு தெய்வம் பேர்ல மனுசன் போடுற வேசமெல்லாம் கலைஞ்சு போச்சு. தின வார மாத பத்திரிக்கைகள் செய்திகளைப் பார்த்தால் நாட்டுல நம்ப முடியாத செய்திகள், நடக்க முடியாத நிகழ்வுகள். இரண்டாயிரத்துல உலகம் அழியும்ன்னு எவனோ சொன்னான் நடக்கலை. ஒரு நாட்டுல கடவுள் பேரைச் சொல்லி ஆயிரம் பேர் மோட்சம் போறோம்ன்னு தற்கொலை செய்துகிட்டு செத்தாங்க. போகலை. உயிர்தான் போச்சு. ஆக…இங்கே மூடப்பழக்கங்களும் முட்டாள் பக்தியும்தான் பிரதானமா இருக்கு.”

“எந்த மதத்து சாமியார்களும் யோக்கியம் இல்லே. ஏசு வர்றார் வர்றார்ன்னு சொல்றாங்க.. வரலை. பக்தி மக்களுக்குப் பொதுவாய் இருக்க… சிலருக்கு மதம் வெறியாய் இருக்கு அயோக்கியர்களுக்குக் கூடாரமாய் இருக்கு. மதம் தெய்வப் பேரைச் சொல்லி… அயோக்கியத்தனம், கொலை, கொள்ளை, நடத்துறாங்க.”

“தெய்வம்ங்குறது மனுசனுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியேத் தவிர தண்டனை கொடுக்கிற நீதிபதி இல்லே. மனுசன் ஆடினாலும் அசைஞ்சாலும் நிலையாய் நின்னாலும் அவர் பார்த்துக்கிட்டுத்தான் இருப்பார் பாதிப்பு இல்லே. சாமியார்களும் கன்னிகாஸ்திரிகளும் தேவ துாதர்களில்லே. மதம் பரப்பும் மனிதர்கள். அவர்களுக்குக் குடும்பங்கள் இருக்கலாம். மதம் பரப்பும் வேலையை மறந்து வாழ்ந்துடக்கூடாதுன்னுதான்… மனிதன் அவர்களுக்கு அன்பு, பாசம், காமங்கள் மறன்னு வேலிகள் போட்டான். அவைகளையேச் அவர்களுக்குச் சுவராய் எழுப்பினான். அதுவே நடைமுறையாய்ப் போச்சு மதச் சட்டதிட்டமாகவும் ஆச்சு. அதனால அதை மீறும் போது ஆத்திரப்படுறான் ஆவேசப்படுறான். மீறுறது தவறுன்னா தெய்வம் தண்டிக்கனும்! ஏன் தண்டிக்கலை? தண்டிக்காது! அது தெய்வம் போட்ட வேலி இல்லே. அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்ங்குறதெல்லாம் மக்கள் காலத்தைத்தான் சொன்னாங்களேத் தவிர கடவுளை இல்லே. ‘எந்த கோயிலை இடிச்சவன் செத்தான்? நம் கண் முன் நிகழ்வு. பாபர் மசூதியை இடிப்பை அல்லாவால தடுக்க முடியலை. அடியில ராமர் இருக்கிறதா சொன்னாங்களே.. எழ எழ முடியலை. அழிச்சவனும் மனுசன்தான். எழுப்ப முயல்றவனும் மனுசன்தான். சாதி, மதம், தெய்வம் பேரால அயோக்கியத்தனம் செய்யிறவனெல்லாம் மனுசனேதான்!”

“பயம் அடிப்படையில் பக்தி வந்துச்சு. அந்த பக்தியை வைச்சு மனுசன் மதம் கட்டினான். இந்த மதத்தைச் சரி செய்ய வேறொரு கிளை பிரிஞ்சுச்சு. அதை சரி செய்ய இன்னொன்னு. இப்படித்தான் இந்து, புத்தம், யேசு, அல்லா, கர்த்தர்ன்னு…ஏகப்பட்ட மதங்கள். அவனவனுக்குள்ளே ஆயிரம் நெறி முறைகள். அதிலே ஓட்டை உடைசல்கள். சாமி ஒன்னு சரியாய் நிலையாய் இருக்கும்மா. படைக்கப்பட்ட அசாமிகள் சரி இல்லே.”

“நமக்கு மதம் வேணாம்மா. சாக்கடை.! போட்டிருக்கிற வேசத்தைக் கலைச்சி நாலு பேருக்கு நல்லது செய்து ‘மதம் இல்லா’ மனுசன்களா வாழ்வோம்மா. இது எனக்கு இன்னைக்குக் கிடைச்ச ஞானதோயம். இதை லாரன்சுகிட்ட போதிச்சு என் பொண்ணை ஏத்துக்கோங்கன்னு சொல்லப்போறேன். இல்லே கெஞ்சப் போறேன்.” நிறுத்தினார்.

சூசையின் ஞானதோயத்தைக் கேட்ட பிலோமினாவிற்கும் உள்ளம் தெளிந்தது,

மனசுக்குள் மத்தாப்பு பூ த்தது.

அணிந்திருக்கும் அவள் கன்னிகாஸ்திரி உடை கனமாய் இருந்தது.

“சரிப்பா…!” அழுத்தமாகச் சொன்னாள்.

(முற்றும்)

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *