சுமக்காதவர்கள்….!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 24, 2026
பார்வையிட்டோர்: 1,897 
 
 

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14 | அத்தியாயம் 15-16

அத்தியாயம் – 13

பிலோமினாவால் தாங்க முடியவில்லை. முதல் வகுப்பு முடிந்த உடனேயே புறப்பட்டுவிட்டாள்.

லாரன்சு வரண்டாவில் அமர்ந்திருந்தான்.

இவளுக்கு ஆளைப் பார்த்ததும் கடுப்பு.

“நியாயம் செத்துப் போச்சு!” வெடித்தாள்.

அவன் இவளை அதிர்ச்சியாகப் பார்த்தான்.

“நீங்களும் மேடம் சொன்னதுக்குத் தலையாட்டி ஒரு தலை பட்சமாய் முடிவெடுத்துட்டு வந்துட்டீங்க.” அமர்ந்து படபடத்தாள்.

“பொறுமை.! பொறுமை.! மொதல்ல என்ன நடந்ததுன்னு சொல். அதுக்கு அடுத்தது நான் நடந்ததுக்கு நியாயம் சொல்றேன்.” என்றான்.

“நியாயம்தான் சொல்வீங்களா. சரி எது, தப்பு எது தெரியாதா?“

“வந்த விசயத்தைச் சொல்?”

“இப்போ நடந்த நடப்பு ஏஞ்சல் வாக்குமூலம்படி ராத்திரி வந்ததுமே என்ன பேசி ஏது பேசியோ மதர் சுப்பிரீயரைச் சரி கட்டியாச்சு. காலையில அலுவலகத்துல நுழைஞ்சதும் கடுகடுன்னு உட்கார்ந்து யாரையும் ஆலோசிக்காம டைப்பிஸ்டை அழைச்சு பாலனுக்கு டிஸ்மிஸ் உத்தரவு டைப் பண்ண சொல்லிட்டாங்க. அடுத்து உடற்பயிற்சி ஆசிரியை அழைச்சு இனி நீதான் எல்லாம்ன்னு பொறுப்பை ஒப்படைச்சு அதுக்கப்புறம்தான் கமிட்டியைக் கூட்டி விபரம் சொல்லி உங்களையும் வரவழைச்சு சம்மதம் வாங்கினாங்க.” நடந்த நடப்பைச் சொன்னாள்.

“இதுல என்ன தப்பு?”

“எல்லாமேத் தப்புதான்! தோன்றித்தனமா முடிவெடுத்துட்டு நிர்வாகக் கமிட்டிக்குத் தெரியப்படுத்தியது. நிர்வாக கமிட்டி கூடித்தான் எந்த ஒரு முடிவையும் எடுக்கனும். நியாயம் சம்பந்தப்பட்ட ரெண்டு தரப்பையும் வைச்சு கேட்கனும்.”

”சரி. செயற்குழு உறுப்பினர் நீங்க யாரும் இந்த தப்பைச் சுட்டிக்காட்டலையா?”

“மதர் சுப்பீரியரைத் தவிர மத்த எல்லாரும் தலைமை ஆசிரியை கீழ் வேலை செய்யுறவங்க. எதிர்த்துப் பேசினால் பாதிப்பு வருமோங்குற பயம். வழக்கம் போல் ஒப்புதல் தலையாட்டிட்டாங்க.”

“கலா விசயத்தில் துணிச்சலாய்த் தப்புன்னு சொன்ன நீ இந்த தவறைச் சொல்ல என்ன தயக்கம்?”

“ஒருத்தரும் வாயைத் திறக்கலை. நானும் திறக்கலை. பள்ளிக்கூட கட்டுப்பாட்டுல இல்லாத நீங்க இதைச் சொல்வீங்கன்னு எதிர் பார்த்தேன்.”

‘இது நியாயம்!’ லாரன்சு மௌனமாக இருந்தான்.

“ஏன் மௌனமாய் இருக்கீங்க? இப்போதான் தவறு தெரியுது. சூடு உணர்றீங்களா?” பிலோமினாவின் கேள்வி அவனைப் பலமாகத் தாக்கியது.

மறுபடியும் அவனுக்குள் சிந்தனை ரேகைகள்.

“ஏன் சொல்லலை?” சொடுக்கினாள்.

“காரணம் இருக்கு. நான் தவறைச் சுட்டிக்காட்டுறதால எதுவும் நடக்கப் போறதில்லே.” மெல்ல சொன்னான்.

“நீங்க ஒத்தை ஆள். மைனாரிட்டி சப்போர்ட் இல்லேன்னு ஒதுங்கிட்டீங்களா?”

“நான் அதுக்காக தலையாட்டி வரலை. காரணம் வேற. எக்காரணம் கொண்டும் பாலன் இங்கே வேலைக்கு வர்றதாய் இல்லே.”

பிலோமினா திகைப்பாய் அவனைப் பார்த்தாள்.

“சென்னையில நடந்த விசயம் வேற.”

“என்ன?!”

“மானக்கேடு.! இந்த அம்மா நினைச்சுப் போனது ஒன்னு அங்கே நடந்தது ஒன்னு.”

“புரியலை?!” குழப்பமாகப் பார்த்தாள்.

“ரொம்ப அசிங்கம். அதை உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலை!” சங்டப்பட்டான்.

“நாம் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டவர்கள்.சொல்லுங்க?”

லாரன்சுக்கு இப்போது முகம் தெளிவாகியது,

“எல்லாரும் சென்னைக்குப் புறப்படுறதுக்கு முதல் நாள். நாங்க விளையாடி முடிஞ்சதும் பாலன் என்கிட்ட நாளையிலேர்ந்து ‘நாம ஒரு வாரம் விளையாட முடியாது’ சொன்னார். ஏன்…? கேட்டேன். தலைமை ஆசிரியை எலிசபெத்தோட பரிசுப் பொருட்கள் வாங்க சென்னைக்குப் போறோம்ன்னு சொன்னார். அதுக்கு ஏன் ஒரு வாரம்ன்னு கேட்டேன். தலைமை ஆசிரியை வேறு வேலை வைச்சிருப்பாங்க சொன்னார். நானும் இதுல வில்லங்கம் இல்லேன்னு விட்டேன். அனுப்பி விட்டோம்.”

ஞாயித்துக் கிழமை விடியக்காலை நாலு மணிக்கெல்லாம் யாரோ வந்து கதவைத் தட்டினாங்க. யார்ன்னு கதவைத் திறந்து பார்த்தேன். பாலன்!

“என்னைய்யா! இந்த நேரத்துல? ஒரு வாரம் கழிச்ச வர்றேன்னு சொல்லிட்டுப் போன நீ உடனே வந்து நிக்கிறே?!” அதிர்ச்சியாய்க் கேட்டேன்.

“அதுக்கு அவர் பொணமா வந்திருக்க வேண்டியவன். உயிர் பொழைச்சு வந்ததே அதிசயம்!” சொல்லி உள்ளே நுழைஞ்சு கதவை அடைச்சார்.

“என்னய்யா நடந்துது?!” கேட்டேன்.

“இந்தம்மா ஏஞ்சல்… ஆம்பளை சபலம் உள்ளவன், அழைச்சா வந்துடுவான். தொட்டா பணிஞ்சுடுவான். பணியலைன்னாலும் மிரட்டி காரியத்தைச் சாதிச்சு என்கூட ஒரு வாரம் உல்லாசமாய் இருக்கலாம்ன்னு நெனைச்சு திட்டம் போட்டு அந்த எலிசபெத்தைத் துணைக்குக் கூட்டி என்னை சென்னைக்கு அழைச்சிருக்கு சார். நானும் விசயம் தெரியாம கிளம்பிட்டேன்!” அமர்ந்தார்.

எனக்குப் பயங்கர அதிர்ச்சி.

“ஆம்னி பேருந்து டிக்கெட்டெல்லாம் அது ஏற்பாடு சார். அங்கே போய் இறங்கியதும் வாடகை கார் பிடிச்சு பெரிய நட்சத்திர ஓட்டலுக்குள் நுழைஞ்சோம். இவ்வளவு பெரிய ஓட்டலுக்கு நமக்கு ஏன்னு அப்பவே கேட்டேன். நமக்கு இங்கேதான் அறை. சொல்லிச்சு. அது தகுதிக்கு இப்படித்தான் வந்து தங்கும் போலிருக்குன்னு நெனைச்சு அடுத்து பேசாம போனேன். அதுவே வரவேற்புல போய் சாவி வாங்கி லிப்ட்டுல ஏத்தி ஒரு அறைக்குள்ளே நுழைஞ்சோம். ஏ.சி டிவி டபுள் கட்டில்ன்னு ஆடம்பர அறை. அங்கே உங்களுக்கு அந்த கட்டில் எங்களுக்கு இந்த கட்டில்ன்னு சொல்லிச்சு. எனக்கும் ஒரு அறைன்னு நெனைச்ச எனக்குப் பெரிய ஏமாத்தம். அது மட்டுமில்லாம பொம்பளைங்க கூட எப்படி தங்குறது? அவுங்க கன்னிகாஸ்திரி. ஆம்பளை பொம்பளை பேதம் நினைக்காம இருக்கலாம். நமக்கு சரி படாதுன்னு நெனைச்சு நான் தனி அறை டுத்துக்கிறேன்னு சொன்னேன். அதுக்கு ஏஞ்சல்…

“நீங்க நெனைக்கிறபடியெல்லாம் இங்கே அறை கிடைக்காது. கிடையாது. நானே இதை ஒரு மாசத்துக்கு முன்னால முன் பதிவு செய்தேன். நீங்க இங்கேதான் தங்கனும்ன்னு சொல்லிச்சு.”

“அதுக்கு நான் பரவாயில்லை. பக்கத்துல ஒரு லாட்ஜ் இருக்கு. தனியே தங்கி நீங்க வரச் சொல்ற நேரத்துக்கு வர்றேன்னேன்.”

“அதுக்கு ஏஞ்சல் அதெல்லாம் கூடாது. நாம ஒன்னாத் தங்கினாத்தான் எல்லாத்துக்கும் வசதி. நாங்க கன்னிகாஸ்திரி. எங்களையும் உங்களா நெனைச்சு தங்குங்க. எந்த தொந்தரவு கஷ்டம் இருக்காது இன்னைக்கு ஓய்வு. நாளைக்குப் பொருட்கள் வாங்கறோம்ன்னு சொல்லிச்சு. கடனேன்னு தங்கினேன்.”

“அப்பவே அவுங்க ரெண்டு பேரும் நைட்டிக்கு மாறினாங்க. ஏஞ்சல் போன் செய்து சாப்பாடு வரவழைச்சாங்க. இவ்வளவு சாதாரண பெண்ணாய் மாறிட்டாங்களேன்னு எனக்கு அப்பவே ஆச்சரியம். சாப்பிட்டோம். பயணக்களைப்பு அவுங்க ரெண்டு பேரும் ஒரு கட்டில்லேயும் நான் ஒரு கட்டில்லேயும் படுத்துத் துாங்கினோம். பிரச்சனை இல்லே.”

மாலை நாலு மணிக்கு எல்லாரும் எழுந்திரிச்சு பக்கத்துல உள்ள பூங்காவுக்குப் போனோம். ஏஞ்சல்தான் கூட்டிப் போனாங்க. அறை சாவியெல்லாம் பூட்டி அவுங்களே வைச்சிக்கிட்டாங்க. அங்கே இங்கே சுத்தி வெளியிலேயே சாப்பாடு முடிச்சுக்கிட்டு ராத்திரி எட்டு மணிக்குத் திரும்பினோம். அறைக்குள்ள நுழைஞ்சு பூட்டி சாவியை வழக்கம் போல் ஏஞ்சல்தான் தலையணைக்கடியில வைச்சுக்கிச்சு. பத்து மணிக்கு மேலதான் வில்லங்கம். ரெண்டு பேருமே வந்து என்னைப் படுக்கையில தொட்டாங்க. மேடம்! அலறினேன். அதெல்லாம் வெளியில பள்ளிக்கூடத்துல இங்கே இப்போ நான் ஏஞ்சல், இவள் எலிசபெத் சொன்னாங்க. நான் ஆடிப் போய் தப்புன்னேன். சம்மதிக்கலைன்னா வேலை போயிடும். ஒரு வாரம் உல்லாசமா இருந்துட்டு புறப்படலாம்ன்னாங்க. ஐயோ சாமி பதறினேன். கரும்பத் தின்ன என்ன கூலின்னு ரெண்டு பேருமே என் மேல பாய… எங்க போராட்டத்துல என் சட்டை கிழிய…. ஒரு வழியா தப்பிச்சு வந்துட்டேன் சார்.” நிறுத்தினார்.

நான் அப்படியே சிலுவையில அறைஞ்சவன் போல சமைஞ்சேன்.

“தன் பெட்டியைத் திறந்து இதோ பாருங்க சார் அவுங்க கிழிச்ச சட்டை. இங்கே பாருங்க சார் வெறி புடிச்ச நாய்ங்க செய்த அநியாயம் சொல்லி சட்டையைக் கழற்றினார். உடம்பெல்லாம் நிறைய நகக்கீறல். பல் பதியல்”

“அவளுங்க பொம்பளைங்க இல்லே. வெறி புடிச்ச பேய்ங்க. நான் சபலத்துக்கு ஆசைப் பட்டு கொஞ்சம் தலையசைத்திருந்தேன்னா… என்னைக் கடிச்சுக் குதறி சின்னாபின்னமாக்கி இருப்பாளுங்க. பொணமா வந்திருப்பேன். இல்லே சக்கையாய்த் திரும்பி இருப்பேன். தப்பிச்சது கடவுள் செயல்.” நடுங்கினார்.

“அதோட மட்டும் விடலை. நான் இனி ஒரு நிமிசம் இந்த பள்ளிக்கூடத்துல வேலை செய்ய மாட்டேன் சார். நான் வேலை செய்தாலும்…. சம்மதிக்காத ஆத்திரம், காட்டிக் கொடுத்துடுவேன்ங்குற பயம். நீக்கிடுவாளுங்க. கஷ்டம், தொந்தரவு கொடுப்பாளுங்க. இந்தாங்க சார் என் ராஜினாமா கடிதம் சொல்லி கொடுத்தார்.” சொல்லி முடித்த லாரன்சு எழுந்து உள்ளே போய் திரும்பி வந்தான். கையில் பாலன் கிழிந்த சட்டை. கடிதம்.

பிரிந்து பார்த்தவள் சிலையாக இருந்தாள்

“இப்போ சொல்லு பிலோமினா. நான் நியாயம் சொல்லியும் பிரயோசனமில்லே. வேசம் கலைக்கலாம். வீண் வாக்குவாதம், மனக்கசப்பு மிஞ்சும்“ நிறுத்தினான்.

“அநியாயம்!” பிலோமினா தன்னையறியாமல் முணுமுணுத்தாள்.

“ஆமாம்.”

“இவளையெல்லாம் சுண்ணாம்பு காலவாயில வைச்சு சுடனும்.”

“எல்லா மதத்திலேயும் இந்த அநியாயம் இருக்கு பிலோமினா. ஒரு சில அயோக்கியர்களால சில அயோக்கியர்களால யோக்கியர்களெல்லாம் தலை குனிஞ்சு போக வேண்டிய நிலை இருக்கு. இதுக்கெல்லாம் தெய்வம் தண்டிக்காததுதான் காரணம். மனுசனா இருந்து எவன் எந்த அயோக்கியத்தனம் செய்தாலும் கவலை இல்லே. ஆனா சாமி பேரைச் சொல்லி எவன் அயோக்கியத்தனம் செய்ய ஆரம்பிச்சாலும் அங்கேயே அவனுக்கு ஏதாவது ஒரு பாதிப்பை ஏற்படுத்தனும். அப்போதான் சாமி மேலேயும் இவனுங்களுக்குப் பயம் வரும். மக்களுக்குப் பக்தி வரும். இது செய்யாததினால்தான் நாத்திக ஆத்திக போட்டி வருது.”

“எனக்கு ஒரு உண்மை தெளிவாய்த் தெரியுது. கடவுள் உண்டு. அது ஒன்னு. நிச்சயம். சத்தியம். வேசம் போட்டா ஒழுங்கா அந்த வேசத்துக்குத் தக்கப்படி இருக்கனும். இருக்க முடியலைன்னா கலைக்கனும்.” சொன்னான்.

பிலோமினா மெளனமாய் அவனை ஏறிட்டாள்.

“நானும் இந்த வேலையை துறக்கலாம்ன்னு இருக்கேன். அதுக்கு உன் சம்மதம் வேணும்.”

புரியாமல் பார்த்தாள்.

“நாம தம்பதிகளாய் வாழ இந்த வேசம் தேவை இல்லே.”

“லாரன்ஸ்ஸ்…!” அலறினாள்.

“யோசிச்சு சொல்.”

அவள் எழுந்தாள்.

“ஒரு நிமிசம் பிலோமினா. அடுத்து நான் சொல்றதையும் கேட்டுட்டுப் போ.”

“திருடன் திருந்தி யோக்கியனாகிறான். யோக்கியன் அயோக்கியனாகிறான். மனசு எப்படி எப்படியோ வலையுது. மனுசன் எப்படியும். வாழ்றான். இப்படித்தான்னு கோடு போட்டு வாழ்றவன் சரி இல்லேன்னு நினைக்கும் போது கோட்டைத் தாண்டறான். கோட்டையைப் பிடிக்கிறான், தகர்க்கிறான். நாமும் அப்படி தகர்க்கலாம்ன்னு எனக்குள்ளே பிரியம். நீ சொன்னதுக்காக வேலைக்காரியையும் நிறுத்திட்டேன்.”

“அன்னைக்கு உன்னை மறக்கவும் என் குடும்பத்துக்குச் சீக்கிரம் சம்பாதிச்சு போடவும் இந்த பாதிரியார் படிப்பும் வழியும் சரியாய் இருந்துச்சு. அதே போல அப்பா மேல உனக்குள்ள கோபம். தன் காதலைத் தகர்த்தவருக்குத் தண்டனைக் கொடுத்து துடிக்க வைக்கனும்ங்கு ஆத்திரம் நீ கன்னிகாஸ்திரியாகிட்டே. இன்னைக்கு எல்லாம் முடிச்ச மனிதர்களாகிட்டோம். இந்த பாட்டையை உடைச்சு நாம் ஏன் வாழ்க்கைங்குற ராஜபாட்டையில நடக்கக்கூடாது?

“மேலும் வெளியே புனிதமாய் மதிக்கப்பட்டு போற்றப்படுற இந்த பாதிரியார் பாதிரியார் கன்னிகாஸ்திரி வாழ்க்கையில இன்னைக்கு கருங்காளிகளும் இருந்து அர்த்தமில்லாம ஆக்குறாங்க. அர்த்தமில்லாத இந்த வாழ்க்கையில நாமும் ஏன் அர்த்தமில்லாம வாழனும்? வாழ்க்கை வாழனும்ன்னுதான் ஆண்டவன் உயிர்களைப் படைச்சான். எனக்குத் தொண்டுகள் செய். என்னோடு வந்து சேர்ன்னு அவன் யாரையும் அழைக்கலை. படைச்சதுக்காக அவன் இப்படி மக்கள்கிட்ட பிரதி உபகாரமும் எதிர் பார்க்கலை. எதிர்பார்க்காதவன். இந்த வேசமெல்லாம் மனுசன் போட்ட வேலி. இது உடைக்கமுடியாத இரும்பு சிறைன்னு நினைச்சு நாம ஏன் அவஸ்தைப்படனும்?”

“உன்னைப் பார்த்த நாள் முதலாய் எனக்குள்ளே இந்த சலனம் ஏற்பட்டுடுச்சு பிலோமினா. இந்தப் பாதையும் புனிதமில்லேங்குறதை உனக்கு எப்படி காட்டுறதுன்னு பேசாம இருந்தேன். இப்போ ஏஞ்சலும் எலிசபெத்தும் அதை உன் கண்முன்னாலேயே உடைச்சு துாள்துாள் ஆக்கிட்டாங்க.”

“உன் சம்மதமில்லாம இந்த வாழ்க்கை வழியை என்னால உதற முடியாது பிலோமினா. காரணம் உன்னைத் தவிர மத்த யாரையும் நான் மனசால நினைக்கலை. நீ சம்மதிகலைன்னா நான் மறுபடியும் மனசை இறுக்கிப் பிடிச்சு என்னைப் பொறுத்தவரை சுத்தமா இருந்து இந்த வாழ்க்கையே போதும்ன்னு வாழ்ந்துடுவேன். அதுக்காக நீயும் நானும் இந்த இடத்தைபிட்டு பிரிய வேண்டியதில்லே. இங்கேயே இருக்கலாம் நண்பர்களாய் பழகலாம்.” முடித்தான்.

பிலோமினாவிற்குள் தடுமாற்றம். தள்ளாடியபடி நடந்தாள்.

‘இங்கு இருக்கும் இருபத்தைந்து பேர்களில் மூவர் நால்வர் அருகதை அற்றவர்களாய் இருக்கும்போது இன்னும் நாடு உலகளாவிய இடங்களில் இன்னும் எத்தனை பேர்கள் எப்படி, எப்படி?!‘ நினைத்தபடி பள்ளி வளாகத்தில் நுழைந்து ஓய்வறைக்குள் நுழைந்தாள்.

பின்னாலேயே வந்த கோமதி “மிஸ்! உங்களைப் பெரிய மிஸ் உடனே அழைச்சாங்க” சொன்னாள்.

அத்தியாயம் – 14

‘ஏன் எதற்கு அழைக்கிறாள்?’ யோசித்துக்கொண்டே நடந்தாள்.

தலைமை ஆசிரியை அறை வாசலிலே ஏஞ்சல் இவளை எதிர்பார்த்து நின்றாள்.

இவள் அருகில் சென்றதும், “வா பிலோமினா!” அழைத்து உள்ளே சென்றாள்.

“உட்கார்!” அமர்ந்தாள்.

பிலோமினா எதிரில் அமர…

“எங்கே போனே..” கேட்டாள்.

“ஃபாதர்கிட்ட.”

“ஏன்?“

‘இந்த ராட்சசியிடம் என்ன சொல்லி தப்பிக்க?’

“என்ன பிலோமினா மௌனமா இருக்கே?”

“ஃபாதர் பாலன் ஒப்புக்குத் தலையாட்டிப் போனாரோன்னு எனக்குத் தோணிச்சு. அதான் போய் பேசினேன்.”

“என்ன சொன்னார்?” ஏஞ்சலின் முகத்தில் ஆவல் பரபரப்பு ஒட்டிக்கொண்டது,

“ரொம்ப சரின்னார்.”

“இது பேசவா இவ்வளவு நேரம்?”

“ஒரு ஆணை கவுரவமாய் மதிப்பு மரியாதையாய் அழைச்சுப் போக… அவர் இப்படியெல்லாம் இவர்களுக்கு மரியாதைக்குறைவாய் நடந்திருக்கக்கூடாதுன்னு அவர் மனசுல கொஞ்சம் நஞ்சம் அழுக்கு இருந்தாலும் அலசிப் போகிறாப் போல நிறையப் பேசினேன்.” சொல்ல….

ஏஞ்சலின் முகத்தில் இன்னும் மகிழ்ச்சி கூடியது,

“அப்புறம் இன்னொரு விசயம் மேடம். நானும் ஃபாதர் லாரசன்சும் ஒரே ஊர் புதுக்கோட்டை. சின்ன வயசிலேர்ந்தே நண்பர்கள்”.

“அப்படியா?!”ஏஞ்சல் கண்கள் விரிந்தது.

“நல்ல நேரத்துல நல்ல வேலை செய்ஞ்சே. எனக்கும் ஃபாதர் மேல சின்ன சந்தேகம். இங்கே ஒப்புக்குத் தலையாட்டி பின்னால போய் மேலிடத்துக்குப் புகார் எழுதிடுவாரோன்னு பயம். நாம் சரியாய்ச் செய்தாலும் பிறர் கண்ணுக்கு இது தப்பாப் படலாமில்லையா. அதான் பயம்! அவருக்கு வேண்டிய நீயே போய் பேசி சரி செய்துட்டு வந்ததுல எனக்குச் சந்தோசம்!” மலர்ந்தாள்.

‘அழுக்குக் கோட்டான். சந்தேக பிசாசு. இனி லாரன்சுடனேயே இருந்தாலும் இவள் தன்னை வைத்து காரியம் சாதிக்க துணிவாளேத் தவிர…போகாதே! தடுக்க மாட்டாள்.’ பிலோமினாவிற்குத் தெளிவாகத் தெரிந்து. விடை பெற்றுக்கொண்டு எழுந்தாள். ஆசிரியைகள் ஓய்வறையை நோக்கி நடந்தாள்.

‘லாரன்சு சொல்வது எவ்வளவு துாரத்திற்குச் சரி?‘ யோசிக்க மனம் குழம்பியது,

‘பாதிரியார் கன்னிகாஸ்திரி காதல்!’ நினைத்துப் பார்க்கவே என்னவோ போலிருந்தது, திருமணம் முடித்துக் கொண்டால் அதுவே உலகச் செய்தியாகக்கூட போகலாம். இப்படி நடந்திருக்கிறதா? கேடு கெட்டவங்க வெட்டிப்போடுங்க! என்று வெறி கொண்ட கும்பல் ஒன்று கிளம்பி வெட்டிப்போட்டிருக்கிறதா?! மதம் பிடித்தவர்கள் அப்படி செய்யத் துணிவார்கள்!

வாசலில் நிழலாடியது. நிமிர்ந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி ஆச்சரியம். நம்ப முடியாமல் கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு பார்த்தாள்.

சந்தேகமே இல்லை. அம்மா, அப்பா!

ஆயிரம்தான் மனசுக்குள் வலி வருத்தம், கருத்து வேற்றுமைகள் இருந்தாலும்…பெற்றவர்களைத் திடுமென பார்த்ததில் ஏற்றபட்ட உந்துதல், உணர்ச்சி, மகிழ்ச்சி…

“எப்போ வந்தீங்க? எப்படி வந்தீங்க?” பிலோமினா ஓடிப் போய் அவர்களைக் கட்டிக் கொண்டாள்.

“மொத்த கேள்விகளையும் இப்படி பள்ளிகூடத்து நடுவால கேட்டால் எப்படி பதில் சொல்ல முடியும். மொதல்ல உன் அறைக்குப் போவோம்.” சூசை சொன்னார்.

பிலோமினாவிற்கு அப்போதுதான் பெற்றவர்களை பள்ளிக்கூடத்து வரண்டா ஓய்வறை வாசலிலேயே நடுவிலேயே நிற்க வைத்து பேசியது புரிந்தது,

“வாங்க போகலாம்!” துள்ளிக் குதிக்காத குறையாய் தலைமை ஆசிரியையிடம் போய் விசயத்தைச் சொல்லி அனுமதி பெற்றுக் கொண்டு விடுதி அறைக்கு அழைத்துச் சென்றாள்.

“இந்த இடத்தை எப்படிப்பா கண்டுபிடிச்சீங்க?!” வியப்பாய்க் கேட்டாள்.

“என்னம்மா! அமெரிக்காவையே சுத்தி அடிச்சுப் பார்த்து அலுத்துப் போன எங்களுக்கு இந்தியா வந்து உன் இடத்தைக் கண்டு பிடிக்கிறதா கஷ்டம்?” அலட்சியமாக சொன்ன சூசை, “நீ சொன்ன உன் விலாசம் எங்களுக்கு அத்துப்படி.. சென்னை விமான நிலையத்தை விட்டு இறங்கியதும் அங்கே ஒரு வாடகை காரைப் புடிச்சி டிரைவர்கிட்ட ஊர் பேரைச் சொல்லி நேரா இங்கே வந்தோம். தேடி அலையாம பள்ளிக்கூடம் மெயின் ரோட்டுலேயே இருக்கு. ஆகையினால உன் பள்ளிக்கூடத்துப் பேரைப் பார்த்ததும் இங்கே நிறுத்தினோம். வாசல்ல ஒரு பையன் நின்னான். உன் பேரைச் சொல்லி இங்கேதான் வேலை செய்யுறீயான்னு விசாரிச்சேன். அவன் ஆமாம் சொல்லி அங்கே போய் பாருங்க சார்ன்னு அங்கிருந்தே இந்த இடத்தைக் காட்டி விட்டான். நேரா வந்து நின்னோம் நீ இருக்கே.”

‘அப்பா புத்திசாலிமட்டுமில்லை துணிச்சல்காரர்!’ நினைக்க மலைப்பாக இருந்தது பிலோமினாவிற்கு.

“நீ இப்படி இருக்கிறது எங்களுக்கு ரொம்ப வருத்தமா இருக்கும்மா?” அம்மா மேரி கலங்கினாள்.

“அதை விடுங்க. எல்லாம் முடிஞ்சுப் போன விசயம்!” ஒதுக்கிய பிலோமினா, “நீங்க நல்லா இருக்கீங்களா? அங்கே பெரியம்மா பெரியப்பா எல்லாம் நல்லா இருக்காங்களா?” விசாரித்தாள்.

“எல்லாரும் நல்லா இருக்கோம். நீயும் எங்க கூட இல்லாததுதான் எல்லாருக்கும் பெரிய வருத்தம்”

பிலோமினாவிற்குப் பேச்சு திரும்பவும் தன்னைச் சுற்றுவது பிடிக்கவில்லை.

“நீங்க எத்தனை நாள்ப்பா இங்கே தங்கல்?” மாறினாள்.

“நீ குடும்பமா… நல்லா இருந்தா நாங்க இங்கேயே இருப்போம். இல்லே. அதனால் ஒரு மாசம் இங்கே தங்கி வேளாங்கண்ணி, பூண்டி, பெங்களுாரு குழந்தை ஏசு கோயில் அது இதுன்னு சுத்திப் பார்த்துட்டு புறப்படுறதா இருக்கோம்.”

“இந்த ஒரு மாசமும் நான் உங்க கூடயே இருக்கேன்ப்பா” பிலோமினாவிற்கு அவளையும் அறியாமல் பாசம் தலைக்காட்டியது.

“தாராளமா. அதுக்கான ஏற்பாடெல்லாம் நான் முடிச்சு வந்திருக்கேன்.”

“என்ன ஏற்பாடுப்பா?”

“இங்கே வந்து இறங்கினதுமே….இந்த பள்ளிக்கூடம், பக்கத்துல மாதாக்கோயில்.. என்கிற சுற்றுப்புறம் புடிச்சுப் போச்சு. உன் வேலைக்குத் தொந்தரவு இல்லாம நாம நிம்மதியா இருக்க இங்கேயே ஒரு அறையோ. இல்லே… வீடோ கிடைச்சா நல்லா இருக்குமேன்னு தேடினோம். அதிர்ஷ்டத்தைப் பாரு. இந்த பள்ளிக்கூடத்துக்கு எதர்க்கயே ஒரு வீடு இருந்துது. ரெண்டு படுக்கை அறை, சமையலறை, கழிவறைன்னு வீடு படு கச்சிதம். வாடகை எவ்வளவுன்னு கேட்டோம். இரண்டாயிரம்ன்னு சொன்னார். முன் பணம்? பத்தாயிரம். உடனே காசைக் கொடுத்து கொண்டு வந்த பெட்டியெல்லாம் அங்கே போட்டுட்டு வெறும் ஆளாய் உன் முன் வந்து நின்னோம்.”

‘பெற்றவர்களைப் பார்த்த பரவசம் அதைக்கூட கவனிக்கவில்லை.’ புரிந்தது. இடமும் சுலபமாக கிடைத்ததில் அவளுக்கு மகிழ்ச்சி.

“இங்கே எங்களோட திருப்தியே..மாதாக்கோயில் பக்கத்துல வீடு கிடைச்சதுதாம்மா. காலை மாலை அதிக துாரம் நடக்காம செபம் செய்ய எங்களுக்கு ரொம்ப வசதி.” என்றார் சூசை.

“ஆமாம்ப்பா..” என்றவளுக்கு லாரன்சு நினைவு வர அடி வயிறு பிசைந்தது. முகம் மாறியது.

“என்னம்மமா?“ என்றார் சூசை.

“வந்து… வந்து…. நமக்கு இந்த இடம் சரிபடாதுப்பா, அது மட்டுமில்லாம இங்கிருந்து வேளாங்கண்ணி பூண்டியெல்லாம் துாரம். நாம் வேளாங்கண்ணி போய் கோயிலுக்குப் பக்கத்துலேயே அறை எடுத்து தங்கினோம்ன்னா…அந்த உலக மாதாக் கோயிலைத் தினம் தரிசிக்கிறதோட மட்டுமில்லாம நீங்க னைச்சாப் போல அங்கிருந்து ஊர் சுத்திப் பார்க்கவும் வசதியாய் இருக்கும்.” சொன்னாள்.

“அங்கே பெரிய ஆரவாரமாய் இருக்கும் பிலோமினா. உனக்குத்தான் தெரியுமே… எனக்கு எந்தவித தொந்தரவும் இல்லாம அமைதியான முறையில கர்த்தரை செபம் பண்ணறதுதான் பிடிக்கும். அதனால எனக்கு இந்த மாதாக் கோயிலே பிடிச்சிருக்கு. வேற எங்கேயும் போகாம உன்கூட இருந்து இந்த மாதாவைத் தரிசிச்சுட்டுப் போறோம்”.

‘இது இடைஞ்சல். ஏஞ்சல் ஏற்பாடு!’ பிலோமினா மனதில் சடக்கென்று இதுதான் உதித்தது. “உங்க பொண்ணு இங்கே ஒரு சாமியார்கிட்ட போய் அடிக்கடி பேசி பழகிகிட்டு இருக்காள். பார்க்கிறதுக்கும் அசிங்கம். பள்ளிக்கூடத்துக்கும் கெட்ட பேர் வந்து பார்த்து கண்டிச்சுட்டுப் போங்க.” நைசாய் அவர்களுக்குத் தொலைபேசி செய்து முள் வைத்துவிட்டாள். இல்லையென்றால் அப்பாவும் அம்மாவும் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று எப்படி முளைப்பார்கள்? அதோடு மட்டுமில்லாமல் இவர்களுக்குச் சொல்லி வைத்தது போல் எதிரில் வீடு கிடைத்ததெல்லாம் பொய். எல்லாம் முன்னேற்பாடு, அவர்களை வரச் சொல்லி நீங்களே அருகில் இருந்து அசிங்கத்தைப் பாருங்கள் என்று வரவழைத்து வீடும் பிடித்துக் கொடுத்திருக்கிறாள். இல்லையென்றால் அப்பா அம்மா இவ்வளவு சரியாக வர முடியாது. இது போல முள் வைப்பது அடுத்தவர்களைக் கெடுப்பதெல்லாம் ஏஞ்சலுக்குக் கைவந்த கலை.

அம்மா அப்பா அமெரிக்க விலாசம் தொலை பேசி எண்கள் எல்லாம் அலுவலக குறிப்பேட்டில் இருக்கிறது. அதை வைத்து செய்திருக்கிறாள்.

லாரன்சும் அப்பாவும் சந்தித்தால்…!?

‘என் பொண்ணைக் கெடுத்தியேடா பாவி!‘ கொலையே நடக்கலாம். அப்பா பசுத்தோல் போர்த்திய புலி. ஆத்திரத்தில் அவர் கொலையும் செய்ய தயங்காதவர்.

கொலை செய்யவில்லையென்றாலும் ‘ஓ….! நீங்க இப்படி கொட்டமடிக்கிறீங்களா? அதை நாங்க காணக்கூடாது, உங்க திருட்டுத்தனம் எங்களுக்குத் தெரியக்கூடாதுன்னுதான் இந்த இடம் சரி இல்லே. வேணாம் வேளாங்கண்ணி போகலாம்ன்னு எங்களை கிளப்புனீயா?’ நாளை லாரன்சை நேரில் பார்த்தால் மனதில் இந்த கேள்வி நிச்சயம் வரும். பிலோமினாவிற்கு நினைத்துப் பார்க்க நடுக்கமாக இருந்தது.

“என்னம்மா யோசனை?” விபரம் புரியாமல் மேரி மகளைப் பார்த்தாள்.

“ஒன்னுமில்லேம்மா உங்க சவுகரியம் எப்படியோ அப்படியே இருக்கலாம். இந்த ஊர் எனக்குப் போரடிச்சுப் போச்சு. நானும் இங்கே விடுப்பு சொல்லிட்டு வெளியூர்ல தங்கி போகலாமேங்குற ஆசையிலதான் சொன்னேன்.” குறைந்த பட்சம் தங்களுக்குள் எந்தவித தொக்கு, தொடர்பு இல்லை என்றாவது நம்பட்டும் என்கிற நப்பாசையில் சமாளித்தாள்.

“உனக்கு அப்படின்னா இங்கே ரெண்டு நாள் தங்கி இந்த மாதாக் கோயில் செபம் முடிச்சிட்டுப் புறப்படலாம்!” சூசை இவளுக்குச் சாதகமாக தலையசைத்தார்.

‘லாரன்சு கண்ணில் படாமல் இருக்கத்தான் இந்த ஏற்பாடு. முடியாது! ஆளைப் பார்த்துவிட்டுத்தான் செல்வதாக இருக்கிறாரென்றால் சதி! லாரன்சை இரண்டு நாட்களுக்கு இவர் கண்ணில் படாமல் மறைத்து ஒதுக்கினாலென்ன?’ இவளுக்குள் அடுத்த யோசனை தோன்றியது.

“சரிப்பா. உங்க விருப்பப்படி செய்யலாம் மொதல்ல நீங்க உங்க வாடகை வீட்ல போய் ஓய்வெடுங்க. நான் இங்கே மதர் சுப்பிரீயர் தலைமை ஆசிரியையிடமெல்லாம் சேதி சொல்லிட்டு பெட்டி படுக்கையெல்லாம் எடுத்துக்கிட்டு அங்கே அங்கே வர்றேன்“. சொன்னாள்.

எழுந்த சூசை “ரொம்ப சரிம்மா. உனக்கு இடம் தெரியுமா?” கேட்டார்.

“அமெரிக்காவுலேர்ந்து நீங்க வந்து என்னைக் கண்டு பிடிக்கும் போது நான் இங்கே எதர்க்க உள்ளதைக் கண்டு பிடிக்க முடியாதா? கண்டுபிடிச்சுடுவேன். நீங்க கவலைப்படாம போங்க. நான் வந்துடுவேன்.”

“சிரமம் எதுக்கு கீழே இறங்கினதும் பள்ளிக்கூடத்து வாசல்லேர்ந்து பார்த்தாலே தெரியும். காட்றேன்.” இறங்கினார். தாயும் மகளோடு இறங்கினாள்.

“அதோ அந்த கட்டிடம்தான்!” சூசை வாசலுக்கு வந்ததும் காட்டினார். சாலைக்கு அந்தபுறம் பள்ளிக்கு நேர் எதிர் கட்டிடத்திற்கும் அடுத்தக் கட்டிடம். வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டே மாதாக்கோவிலையும் பள்ளிக்கூடத்தையும் தரிசிக்கலாம் அப்படியொரு அமைப்பு.

‘இது ஏஞ்சல் வேலையைத் தவிர வேறு ஆள் வேலை இல்லை! என்ன செய்ய?!’ அவர்களை அனுப்பி கதவைச் சாத்திவிட்டு விடுதி பக்கவாட்டின் வழியே லாரன்சு இருப்பிடத்தை நோக்கி நடந்தாள்.

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *