சீதையும் ஸ்ரீராமனும் செய்த சூரிய வழிபாடு
 கதையாசிரியர்: ராஜி ரகுநாதன்
 கதை வகை: மொழிபெயர்ப்பு                                            
 கதைத்தொகுப்பு: 
                                    ஆன்மிகக் கதை 
 கதைப்பதிவு: January 20, 2017
 பார்வையிட்டோர்: 18,030  
                                    ராம – ராவண யுத்தம் ஆரம்பமாவதற்கு முதல் நாள் ராவணன், சீதா தேவியின் முன்பாக ஒரு கபடமான யுக்தியைப் பிரயோகித்தான்.
மகா மாயாவியான ராவணன், ‘வித்யுஜ்ஜிஹ்வன்’ என்ற மந்திரவாதி அரக்கனை அழைத்து சீதையின் மனதை சிதற அடிப்பதற்காக ஒரு ஆலோசனை செய்தான்.
அதன்படி, “அரக்கனே! நீ ராமனுடைய தலையையும் பாணத்தோடு கூடிய கோதண்டத்தையும் ஸ்ருஷ்டி செய்து சீதையிடம் எடுத்துவா” என்று கூறி, அசோக வனத்திற்குச் சென்றான் ராவணன்.
“சீதே! ராமனின் தலையை அவன் தூங்கும்போது துண்டித்து விட்டோம். லட்சுமணனும் மற்றவர்களும் உயிரைக் காத்துக் கொள்ள ஓட்டம் பிடித்து விட்டார்கள். எனவே நீ என் வசப்படுவதைத் தவிர உனக்கு வேறு வழி இல்லை” என்று கொக்கரித்தான்.
ராவணனின் ஆணைப்படி மந்திரவாதி ஸ்ரீராமனின் தலையையும் கோதண்டத்தையும் கொணர்ந்து சீதை அருகில் வைத்துவிட்டுச் சென்றான்.
அவற்றைப் பார்த்த சீதை துக்கித்து மூர்ச்சித்தாள். அதற்குள் ஏதோ அழைப்பு வரவே ராவணன் அவ்விடம் விட்டகன்றான். அவன் சென்ற உடனே சிரசும் தனுசும் கூட மாயமாகி விட்டன.
மானஸீகமாக பலவீனமாகிப் போன சீதையின் மனத்தைத் தேற்றும் விதமாக விபீஷணனின் மனைவி ‘சரமா’ ஸீதையின் சகியாக அங்கு வந்து சேர்ந்தாள். ராமன் க்ஷேமமாக இருக்கும் விஷயத்தை எடுத்துக் கூறி அவளுக்கு தைரியமூட்டினாள். அதோடு,
கிரிவர மபிதோs நுவர்த மாநோ
ஹய இவ மண்டல மாஸுய: கரோதி !
தமிஹ சரணமப்யுபேஹி தேவம்
திவஸகரம் ப்ரபவோ ஹயயம் ப்ரஜாநாம் !! (யு -33-41)
“குதிரை போல மேருமலையை வெகு விரைவில் பிரதக்ஷிணம் செய்பவனும், இருளை ஒளியாகச் செய்யக் கூடியவனும் ஆன சூரியபகவானைச் சரணடை” என்று அறிவுறுத்தினாள் சரமா.
சீதா தேவி அப்போது முதல் திவாகர ஆராதனையை ஆரம்பித்தாள். ராவண சம்ஹாரம் முடியும் வரை சூரிய உபாஸனையை அவள் விடாமல் செய்து வந்தாள்.
இது இவ்விதம் இருக்கையில்,
ராம – ராவண யுத்தம் தொடங்கி முடியில் நிலையில் இருந்தது. ராவணனைத் தவிர அவனுடைய மித்திரர்கள், புத்திரர்கள், பரிவாரங்கள் அனைத்தையும் ராமன் வதைத்து விட்டான்.
ஆயினும் அவர்களில் இந்திரஜித்து போன்றவர்களால் ராமனும் மிகவும் சோர்வடைந்திருந்தான். இறுதியில் ராவணனோடு யுத்தம் செய்து அவனுக்கு அயர்ச்சியை உண்டாக்கி ஓய்வெடுத்துக் கொள்ளும்படி எச்சரித்து அனுப்பினானே தவிர, தானும் கூட மிகவும் களைத்துப் போனான்.
ராமன் உடலளவில் சோர்ந்திருந்தான். ராவணன் ஓய்வெடுத்து யுத்தத்திற்கு சித்தமாக இருந்தான். அச்சமயத்தில் சகல வித்யைகளுமறிந்த அகஸ்திய மகரிஷி ராமனுக்கு சூரிய சக்தி மூலம் சிகிச்சை அளித்தார். ஸ்ரீ ராமனின் உடலில் சௌர சக்தியைச் செலுத்தினார்.
நம் சனாதன தர்மத்தில் மருத்துவர் தெய்வம். மருந்து அமிர்தம். மருந்து தயாரிக்கும் ரகசியம் மந்திரம்.
அதனால் தான் மனச் சோர்வடைந்த சீதா தேவியும், உடற்சோர்வைடைந்த ஸ்ரீ ராமனும் கூட சூரிய சக்தியை உபாசனை செய்து சகஜ நிலையைத் திரும்பப் பெற்று வெற்றிக்கு ஒருவருக்கொருவர் உதவிகரமாக அமைந்தனர்.
உலகியல் விஷயத்தில் கூட கணவன் மனைவி இருவரில் ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டால் மற்றவரின் சிரத்தை மூலம் அது சரியாகிறது என்பதை நாம் பார்க்கிறோம்.
இங்கு வால்மீகி மகரிஷி ஒரு சிறிய ரகசியத்தை நமக்குத் புரிய வைக்கிறார். சீதையும் ராமனும் பெற்ற சூரிய உபாசனை என்னும் சிகிச்சையில் வேறுபாடு உள்ளது. சீதா தேவி சூரிய பகவானை திவாகர சொரூபமாக வணங்கினாள். ஒரு வேளை இது மானசீக பலவீனம் உள்ளவர்கள் வணங்கிப் பயன் பெரும் வழிமுறையாக இருக்கலாம்.
“தே அஸ்த்ய சர்வே திவமாபதன்தி கஸ்யபோ s ஷ்டம:
ஸ மஹா மேரும் சஜஹாதி” – என்பது வேதம்.
“மகா மேருவை மட்டுமே சுற்றி வரும் ‘கஸ்யப கிரணம்’ திவாகர ரூபம்”. அதனை வணங்க வேண்டும் என்று மகரிஷி சூட்சுமமாக சுட்டிக் காட்டுகிறார் போலும்.
ஸ்ரீராமன் ஆதித்ய சொரூபமாக சூரிய பகவானை வணங்குகிறான். இது உடல் பலகீனம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய வழி முறை போலும்.
ஆதித்யன், திவாகரன் என்ற சொற்களின் விளக்கத்தையும் அந்த சொரூபங்களின் சாமர்த்தியத்தையும் பற்றி விரிவாக அறிந்து கொண்டால் இவற்றின் பலன்கள் புரிய வரும்.
கணவன் மனைவி இருவரும் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை ஒருவருக்காக மற்றவர் உபாசனை செய்தால் அந்த குடும்பம் பலவீனத்தைக் களைந்து சைதன்யத்தைப் பெரும் என்பது உறுதி.
உத்தராயண ஆரம்பம் சூரியனின் தேஜஸ் நம்மை விசேஷமாக வந்தடையும் காலமாதலால், மாக (மாசி) மாதத்தில் சூரிய ஆராதனை செய்வது என்பது நமக்கு மகரிஷிகள் உபதேசித்த மார்க்கம். மின்சாரம் இல்லாவிட்டால் எத்தனை துன்பமோ அது அதிகமானாலும் துன்பமே, அல்லாவா? அதனால்,
“ஸ்வாமீ! உன் தேஜஸ்ஸை என் உடல் தாங்கும்படி அருள் புரிய வேண்டும்!” என்று பிரார்த்திப்பது மாக மாதத்தில் நம் கடமை. இதற்கு ஸ்ரீமத் ராமாயணம் யுத்த காண்டத்தில் உள்ள ஆதித்ய ஹ்ருதயம் ஒரு உபாயம். ஆதித்யனின் சொரூபத்தை அறிந்து கொண்டு வழிபடுவது விசேஷ பலன்களை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
மொழிபெயர்ப்பு -ராஜி ரகுநாதன்.
தெலுங்கில் -பிரம்மஸ்ரீ காசீபொட்ல சத்யநாராயண.
– தீபம், 5-11-2016ல் பிரசுரமானது.
                ![]()  | 
                                'கணையாழி களஞ்சியம் பாகம் 3' ல் திரு என். எஸ். ஜகந்நாதன் அவர்கள் மூன்றாவது பத்தாண்டு காலத் தொகுப்பாக தேர்நதெடுத்து கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட 80 கதைகளில் ஒன்று ராஜி ரகுநாதன் எழுதி கணையாழி, செப்டம்பர் 1989ல் வெளிவந்த 'வேப்பமரத்தை வெட்டிய போது...' சிறுகதை. பெரிய ஜாம்பவான்களோடு சேர்ந்து இவர் கதையும் சிறந்த கதைகளுக்கான ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுவது குறித்து மகிழ்கிறார். கீழ்வேளூரில் பிறந்து ஹைதராபாத்தில் வாழ்ந்து வரும் பி.ஏ.…மேலும் படிக்க... | 
                    