கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 2, 2025
பார்வையிட்டோர்: 29 
 
 

(1990ல் வெளியான வாழ்க்கை வரலாறு, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1 -3 | 4 – 6

1 

ஆறு, ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் நான் டில்லிக்குப் போயிருந்த போது காமராஜ் டில்லியில் ‘முகாம்’ போட் டிருந்தார். அவரைப் பற்றி வேறொரு வாரப் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதுவதற்காக அவருடனேயே சில நாட்கள் தங்கியிருந்தேன். காமராஜ் அச்சமயம் முதலமைச்சர் பதவியில் இல்லை. ஆனால் ‘காமராஜ் திட்டம்’ காரணமாக நேருஜி, லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்களிடம் அவருடைய செல்வாக்கு இமயமலை போல் வளர்ந்திருந்தது. 

டி.டி.கே., அதுல்யகோஷ், எஸ்.கே.பாட்டீல் போன்றவர்கள் காமராஜைத் தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடிக் கொண்டிருந்தார்கள். 

டி.டி.கே. இல்லத்தில் ஒரு நாள் நடந்த விருந்து ஒன்றில் அதுல்யகோஷ் காமராஜைக் கட்டிப் பிடித்து, உயரத்தில் தூக்கிப் போட்டு விளையாடிய காட்சி இன்னும் என் நினைவில் இருக்கிறது. காமராஜ் கர்ம வீரர் என்றும், தன்னல மற்ற தியாகி என்றும், அவர் ஆட்சி நடத்திய மெட்ராஸ் ஸ்டேட் ரொம்ப ‘காம்ராஜ்’யமா யிருக்கிறதென்றும் அவர்கள் பாராட்டி பேசிக் கொண்டிருந்ததையும் மறக்கவில்லை. காமராஜ் அதையெல்லாம் சங்கோசத்துடன் கேட்டுக் கொண்டு மௌனமாக உட்கார்ந்திருந்தார். 

டில்லியில் காமராஜின் அன்றாட அலுவல்களைப் போட்டோ எடுத்துத் தரும்படி நண்பர் நடராஜனைக் கேட்டிருந்தேன்.நடராஜன் காமராஜுக்கு நீண்ட நாட்களாக அறிமுகமானவர். காமராஜ் போகும் இடங்களுக்கெல்லாம் அவரைப் பின்பற்றி நானும், நடராஜனும் போய்க் கொண்டிருந்தோம். 

அந்தக் காலத்தில் காமராஜின் ‘வலது கரம் என்று சொல்லக்கூடிய திரு. ராஜகோபாலன் ஒரு நாள் காலை ஆகாரத்துக்குத் தம் இல்லத்துக்கு வரும்படி காமராஜையும், கூடவே எங்களையும் அழைத்திருந்தார். அன்று நாங்கள் சாப் பிட்டு முடிக்கும் போது மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது. 

அன்று காலை ஒன்பது மணிக்கு நேரு வீட்டில் காமராஜ் கலந்து கொள்ள வேண்டிய முக்கியமான கூட்டம் ஒன்று இருந்தது.காமராஜுக்கு அது தெரியாது. கூட்டம் பத்தரை மணிக்கு என்றுதான் அவரிடம் யாரோ தகவல் கொடுத் திருந்தார்கள். அதனால் அவர் சாவகாசமாக ராஜகோபாலன் வீட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். 

திடீரென்று நேரு வீட்டிலிருந்து ராஜகோபாலனை இந் திரா காந்தி டெலிபோனில் அழைத்து, ‘காமராஜ் அங்கே இருக்கிறாரா? ஒன்பது மணிக்கு மீட்டிங் இருக்கிறதே! இங்கே எல்லாத் தலைவர்களும் வந்து காத்திருக்கிறார்கள். நேருஜி காமராஜுக்காகக் கூட்டத்தை ஆரம்பிக்காமல் உட் கார்ந்திருக்கிறாரே!” என்றார். 

ராஜகோபாலன் இந்தச் செய்தியைக் காமராஜிடம் சொன்ன போது அவர் பதறிப் போனார். “நேற்று என்னிடம் பத்தரை மணிக்குக் கூட்டம் என்றுதானே சொன்னார்கள். ஒன்பது மணிக்கு மாற்றிய செய்தி எனக்குத் தெரியாதே? சரி சரி, வண்டியை எடுக்கச் சொல்லு!” என்று வேகமாக எழுந்து வாசலுக்கு விரைந்தார். 

“நேருஜியையும், மற்றவர்களையும் வீணாகக் காக்க வைத்து விட்டோமே! தன்னைப் பற்றி நேரு என்ன நினைத்துக் கொள்வாரோ?” என்ற கவலையும், வேதனையும் காமராஜ் பேச்சில் வெளிப்பட்டன. 

வாசலில் மழை கொட்டுக் கொட்டென்று கொட்டிக் காண்டிருந்தது. காருக்குள் ஏறி உட்காருவதற்குள்ளாகவே தெப்பலாக மூழ்கிவிடக்கூடிய பேய் மழை. ராஜகோபாலன் சட்டென்று குடையைக் கொண்டு வந்து காமராஜைக் காரில் ஏற்றி விட்டார். 

எனக்கும், நடராஜனுக்கும் ஒன்றும் புரியவில்லை. காம ராஜுடன் போக வேண்டியதுதானா, இல்லையா என்பதை யோசிக்காமலேயே நாங்களும் காரில் ஏறிவிட்டோம். காம் ராஜ் அப்போது ஒன்றும் சொல்லவில்லை. அவர் நினைப்பெல் லாம் தீன்மூர்த்தி பவனிலேயே இருந்தது. 

மழையில் டில்லிப் பாதைகளெல்லாம் மூழ்கிப் போயி ருந்தன. பத்தடிக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பது கண்ணுக்குப் புலனாகவில்லை. 

கார் போய்க் கொண்டிருந்தது.கண்ணாடி கதவுகளையெல் லாம் மூடிக் கொண்டோம்.நடராஜன் முன் சீட்டில் உட் கார்ந்திருந்தார்.நானும், காமராஜும் பின் சீட்டில் உட் கார்ந்தோம். ஒரே மௌனம். 

ஏற்கனவே கூட்டத்துக்கு லேட்டாகப் போகிறோமே என்ற வேதனை காமராஜின் உள்ளத்தில் குழம்பிக் கொண்டிருந்தது. 

இந்த சமயத்தில் அவருடைய அனுமதியின்றி நானும், நடராஜனும் வண்டியில் ஏறிக் கொண்டது அவருக்குத் தர்ம சங்கடத்தை உண்டாக்கி விட்டது. நடராஜனும், நானும் அந்தக் கூட்டத்துக்குப் போவது கொஞ்சங்கூடப் பொருத்த மில்லாத காரியம். இங்கிதம் தெரியாமல் நாங்கள் வண்டிக் குள் ஏறிவிட்டோம். கொட்டுகிற மழையில் எங்களை நடு ரோட்டில் இறக்கவும் அவருக்கு மனமில்லை. நேரமோ ஓடிக் கொண்டிருக்கிறது. என்ன செய்வதென்று புரியாத நிலை. 

இதுதான் அவருக்குக் கோபம். 

திடீரென்று இடி முழக்கம் போல் காமராஜ் நடராஜனைப் பார்த்துக் கர்ஜிக்க ஆரம்பித்து விட்டார். 

”உனக்கு கொஞ்சமாவது யோசனை இருக்கிறதா? போது எதற்குக் காரில் ஏறினாய்? காமிராவும் கையுமாக நீ என்னோடு அங்கே வந்தால் அங்குள்ளவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?” 

நாங்கள் நடுநடுங்கிப் போனோம். 

எனக்கு ஒன்றும் புரியவில்லை. காமராஜை இப்படி ஒரு எக்கச்சக்கமான நிலையில் வைத்து விட்டோமே என்று எண்ணி வருத்தப்பட்டேன். கார் போய்க் கொண்டே இருந்தது. சட்டென்று காமராஜ், “அதோ, அதோ நிறுத்து!” என்றார். அவர் சுட்டிக் காட்டிய டத்தில் ஒரு டாக்ஸி நின்று கொண்டிருந்தது. எங்களைக் கண நேரத்தில் அங்கே இறக்கி விட்டு அந்த டாக்ஸியில் ஏறிக் கொள்ளும்படிச் சொன்னார். 

நடராஜனும்,நானும் ‘தப்பினோம், பிழைத்தோம்’ என்று பாய்ந்து ஓடி அதில் ஏறிக் கொண்டோம். நடராஜனுக்கு இதெல்லாம் ரொம்ப சகஜம் போலிருக்கிறது. காமராஜ் கோபத்தை அவர் பொருட்படுத்தவில்லை. “அவர் என்னைத் திட்டினால்தான் எனக்குத் திருப்தி. அவரிடம் திட்டு வாங்கு வதிலுள்ள மகிழ்ச்சி எனக்கு வேறு எதிலுமில்லை!” என்று ாக்பாட்டில் பணம் கிடைத்தவர் போல் சிரித்துக் கொண்டே சொன்னார். 

அன்று பகல் பன்னிரண்டரை மணிக்கு மொரார்ஜி தேசாய், ஜகஜீவன்ராம், காமராஜ் மூன்று பேருக்கும் காங்கிரஸ் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சம்பந்தமான கமிட்டிக் கூட்டம் ஒன்று இருந்தது. நானும், நடராஜனும் அங்கே போய்க் காத்திருந்தோம். காமராஜ் அங்கே எங்களிருவரையும் பார்த்து விட்டுச் சிரித்துக் கொண்டே, “என்ன இங்கே வந்திருக்கிறீர்களா? சரி. இங்கேயே உட்கார்ந்திருங்கள். இதோ வந்து விடுகிறேன்” என்று ரொம்ப சாந்தமாகச் சொல்லி விட்டுப் போனார். 

“இரண்டு மணி நேரத்துக்கு முன்னால் எரிமலையாக வெடித்த காமராஜர் இப்போது இப்படி பச்சை வாழைப் பட்டையாக மாறியிருக்கிறார்?” என்று வியந்தேன் நான். 

நேருஜியிடம் அவருக்குள்ள மதிப்பும், மரியாதையும் எவ்வளவு அழுத்தமானது, ஆழமானது என்பதை நான் அன்றுதான் புரிந்து கொண்டேன். 

அன்று பகல் சாப்பாட்டின் போது தம்முடைய தரிம சங்கடமான நிலையை அவர் எங்களுக்கு விளக்கிய போது தான் காரில் நாங்கள் இருவரும் ஏறிக் கொண்டது எத்தனை பைத்தியக்காரத்தனம் என்று புரிந்தது. 

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவரை இப்போது மீண்டும் திருமலைப் பிள்ளை ரோடிலுள்ள இல்லத்தில் சந்தித்தேன். 

“என்ன…வாங்க… என்ன சங்கதி ? சொல்லுங்க!” என்றார்.

“தாங்கள் சுயசரிதை எழுத வேண்டும்” என்றேன். 

“வேண்டாம், அது எதுக்கு?” என்று மொட்டையாகப் பதில் சொல்லி மறுத்து விட்டார். 

“தங்கள் சுயசரிதை என்றால் அதில் தமிழ் நாட்டின் சரித்திரம் இருக்கும். காங்கிரசின் சரித்திரம் இருக்கும்” என்று வாதாடி, வற்புறுத்தினேன். 

“வேண்டுமானால் நீங்க ‘பயாக்ரபியா’ எழுதுங்க. எனக்கு ஆட்சேபமில்லை” என்றார். 

“நான் எழுதுவதானால் தங்களுடைய உதவி இல்லாமல் முடியாது. எனக்குப் பல தகவல்கள் தேவைப்படும். தங்களை அடிக்கடி வந்து தொந்தரவு செய்வேன்” என்றேன். 

“வாங்க… வாங்க…” என்றார். 

“சொல்றீங்களா?” என்று கேட்டேன். 

“சொல்றேன்னேன்” என்று கூறி விட்டு டில்லிக்குப் புறப்பட்டுப் போய் விட்டார்! 

நான் விடவில்லை; டில்லிக்குப் போய் அவரைப் பிடித்துக் கொண்டேன். அங்கே தினமும் பார்லிமெண்டுக்குப் போகவும், நிஜலிங்கப்பாவுடன் பேசவுமே அவருக்கு நேரம் சரியாக இருந்தது. இதற்கிடையில் விசிட்டர்கள் வேறு. இவ்வளவுக்கும் இடையில் எனக்கும் நேரத்தை ஒழித்து வைத்துக் கொண்டிருந்தார் அவர். 

“புவனேசுவர் காங்கிரசிற்குப் பிறகு சில நாட்களுக்கெல்லாம் நேரு காலமாகி விட்டாரே, அதற்கு முன்னால் நேருஜியைத் தாங்கள் சந்தித்துப் பேசினீர்களா? நேரு தங்களிடம் அப்போது ஏதாவது சொன்னாரா?’ என்று என் முதல் கேள்வியைத் தொடங்கினேன். 

“புவனேசுவருக்கு நேருஜி வந்திருந்த போது அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போய் விட்டது; சீன ஆக்கிரமிப் புக்குப் பிறகே அவர் உடல் நிலையில் தளர்ச்சி கண்டிருந்தது. நேருஜி புவனேசுவருக்கு வந்திருந்த போதிலும் காங்கிரஸ் மாநாட்டு நடவடிக்கைகளில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. நேருஜி வராமல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு அதுதான். மாநாட்டுப் பந்தலில் அவருக்காகப் போடப்பட்டிருந்த ஆசனம் காலியாக இருந்ததால் மாநாட் டில் அவ்வளவு பெரிய கூட்டம் இருந்துங்கூடப் பந்தல் முழுதும் வெறிச்சோடிக் கிடப்பது போலவே தோன்றியது. அப்புறம் அவரால் விமான கூடத்துக்குக் காரில் போவது கூடச் சிரமமாகி விட்டது. அதனால் ஏர்போர்ட்டுக்கு ஹெலி காப்டரில் போய், அங்கிருந்து டில்லிக்கு விமானத்தில் பயணமானார். அதற்குப் பிறகு நானும்,சாஸ்திரியும் விசா கப்பட்டணத்தில், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போயிருந்தோம். அங்கிருந்து சாஸ்திரி டில்லி போய் விட்டார். நான் சென்னைக்குத் திரும்பி விட்டேன். 

அப்புறம் சில நாட்களுக்கெல்லாம் நேரு என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். மந்திரி பதவியிலிருந்து விலகியிருந்த லால்பகதூர் சாஸ்திரியை மீண்டும் காபினெட்டில் எடுத்துக் கொள்வது பற்றி என்னைக் கலந்தாலோசித்தார். அப்போது வேறு சில மந்திரிகளும் (காமராஜ் திட்டத்தின் கீழ்) விலகி யிருந்ததால் சாஸ்திரியை மட்டும் சேர்த்துக் கொள்வது பற்றிச் சிலருக்கு ஆட்சேபம் இருந்தது. நான் அச்சமயம் இந்திரா காந்தியின் பெயரைப் பிரஸ்தாபித்தேன். 

‘இந்திராவைப் பற்றிப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம்’ எனக் கூறி விட்டார் நேரு. 

பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று நேரு அப்போது சொன்னது என் மனத்திலேயே இருந்து கொண்டிருந்தது. தமக்குப் பிறகு ஒரு வேளை இந்திரா காந்தி மந்திரியாக வரட்டும் என்ற எண்ணம் அவர் மனத்தில் இருந்திருக் குமோ, என்னவோ? அப்படி அவர் வெளிப்படையாகவும் சொல்லவில்லை. நானாகவே அப்படி இருக்கலாமோ என்று ஊகித்துக் கொண்டேன். 

“நேரு இறக்கும் போது தாங்கள் எங்கே இருந்தீர்கள்? கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தீர்களா?”

“இல்லை.சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று டில்லியிலிருந்து லால்பகதூர் சாஸ்திரி கூப்பிடுவதாகச் சொன்னார்கள். எழுந்து போய்ப் பேசினேன். நேருவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உடனே புறப்பட்டு வரும் படி சாஸ்திரி என்னிடம் சொன்னார். நான் அடுத்த விமானத்தைப் பிடித்து டில்லிக்குப் பறந்தேன். போகும் போது விமானத்திலேயே ‘பகல் இரண்டு மணிக்கு நேரு இறந்து விட்டார்’ என்று செய்தி சொன்னார்கள். நான் டில்லி விமான நிலையத்தில் இறங்குவதற்குள்ளாகவே பிரஸிடண்ட் ராதாகிருஷ்ணன். நந்தாவைத் தாற்காலிகப் பிரதமராக நியமித்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. ஜி.ராஜகோபாலனும், வேறு சில நண்பர்களும் எனக்காக விமான கூடத்தில் காத்திருந்தார்கள். 

அப்போது என்னைப் பலர் அடுத்த பிரதமர் யார் என்பதைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தார்கள். நேருஜியின் இறுதிச் சடங்குகள் முடியும்வரை நான் யாரிடமும் பேச வில்லை.அப்புறந்தான் எல்லாத தலைவர்களையும், மந்திரிகளையும். பார்லிமெண்ட் மெம்பர்களையும் தனித்தனியாக அழைத்துப் பேசினேன். என் மனத்தில் சாஸ்திரியே பிரதமராக வரலாம் என்று இருந்த போதிலும் அந்த அபிப்பிராயத்தை நான் யாரிடமும் வெளிப்படையாகச் சொல்ல வில்லை. தாம் பிரதமராக வரவேண்டுமென்ற எண்ணம் மொரார்ஜி தேசாய்க்கு இருந்தது. அவரிடமும் நான் பேசினேன். ‘எல்லோரும் சாஸ்திரியைத்தான் போட வேண்டு மென்று சொல்கிறார்கள். ஆகையால் நீங்கள் போட்டி போடாமல் இருப்பது நல்லது’ என்றேன். அவர், இருக்கும் நிலைமையைப் புரிந்து கொண்டு, என் பேச்சை ஒப்புக் கொண்டு விட்டார். அதனால் சாஸ்திரியையே எல்லோரும் ஏகமனதாகத் தேர்ந்தெடுப்பது எளிதாயிற்று. 

பார்லிமெண்டரி காங்கிரஸ் கட்சிக்குத் தலைவர் தேர்தல் நடைபெற்ற போது நான் எழுந்து பேசினேன். அன்று ஜூன் மாதம் இரண்டாம் தேதி. பார்லிமெண்ட் சென்ட்ரல் ஹாலில் கூட்டம் நடைபெற்றது. பார்லிமெண்ட் மெம்பர்கள், முதலமைச்சர்கள் தவிர வெளிநாட்டுப் பிரமுகர்களும். தூதுவர்களுங்கூட அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தார்கள் அவர்கள் விசிட்டர் காலரியில் உட்கார்ந்திருந்தார்கள். 

“நேருஜியைப் போன்ற ஒரு தலைவர் இனிக் கிடைப்பது அசாத்தியம். இனி தனிப்பட்ட முறையில் யாரும் அந்தப் பொறுப்பை நிர்வகிக்கவும் முடியாது. கூட்டாகப் பொறுப் பேற்று, கூட்டுத் தலைமையின் கீழ், கூட்டாக அணுகித்தான் இந்தக் கஷ்டமான பணியை மேற்கொள்ள முடியும். கடந்த காலத்தில் நாம் பல தவறுகள் செய்திருக்கிறோம். நேருஜி நமது மாபெருந் தலைவராயிருந்ததால், அவரிடமிருந்த நம் பிக்கை காரணமாக மக்கள் நம்மை மன்னித்தார்கள். இனி நாம் சிறிய தவறுகள் செய்தாலும் மக்கள் பொறுக்க மாட்டார்கள் என்றேன்.” 

“சாஸ்திரிக்குப் பிறகு இந்திரா காந்தியைப் பிரதமராக்கியதும் தாங்கள்தானே?” என்று கேட்டேன். 

“ஆமாம். ‘நேருவின் மகளாயிற்றே, தப்பாக நடக்க மாட்டார்’ என்ற நம்பிக்கையில் போட்டு விட்டேன். அது ஒரு கதை; அப்புறம் சொல்கிறேன்” என்றார். 

2 

டில்லியில் காமராஜை நான் சந்தித்த போது அவர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். பேச்சு முழுதும் ஒரே தமாஷூம், வேடிக்கையுந்தான்! 

சிற்சில தலைவர்களைப் பற்றியும், பதவி மீதுள்ள பற்றுதல் காரணமாக அவர்கள் பயந்து வாழ்வதைப் பற்றியும் சொல்லி விட்டு, ‘ஹோ ஹோ’ என்று சிரிக்கத் தொடங்கி விட்டார். 

காமராஜ் அந்த மாதிரி, அந்த அளவுக்குச் சிரித்ததை நான் இதற்குமுன் கண்டதில்லை. அந்தச் சிரிப்பிலே கேலி இருந்தது, ‘ஐயோ, இவர்களெல்லாம் இப்படிக் கோழைக ளாக இருக்கிறார்களே’ என்ற பரிதாபம் இருந்தது. 

சிறிது நேரம் சிரித்து ஓய்ந்த பிறகு, “அவங்கதான் அப்படி இருக்காங்கன்னா நம்மைச் சுற்றி உள்ளவங்களும் சரி யில்லையேன்னேன், எந்தச் சமயத்தில் எதைப் பேசுவது, எதைப் பேசக்கூடாதுன்னுகூடத் தெரியலையே? வாயை மூடிக்கிட்டுச் சும்மா இருந்தாங்கன்னா அதுவே போதுமே!” என்று மீண்டும் சிரிக்கிறார். 

“ஜனசங்கம், சுதந்திரா இந்தக் கட்சிகளுடன் கூட்டுச் சேரும் முயற்சிக்கு என்ன தடங்கல்?” என்று நான் கேட்ட போது, “நான் என்ன செய்யட்டும்? குஜராத்தும்,மைசூரும் ஒத்துவர மாட்டேங்குதே? அவங்க ஊர்ப் பிரச்னை அவங் களுக்கு. அவசரப்பட்டாலும் சில காரியங்கள் கெட்டுப் போகுமே! 

எனக்குள்ள கவலையெல்லாம் இந்த நாட்டைப் பற்றித் தான். நாம் தியாகம் செய்து பெற்ற சுதந்திரம் பறிபோயிடக் கூடாதேங்கறதுதான். 

சிவப்புப் பணம் நம் நாட்டிலே நிறைய நடமாடுதுன்னு சொல்றாங்க. அப்படின்னா அது ஆபத்தில்லையா? அந்தப் பணம் எப்படி இந்த நாட்டுக்குள்ளே வருதுன்னு விஷயம் தெரிஞ்சவங்களை விசாரிக்கணும்.” 

“இந்திரா காந்தி ப்ரோ ரஷ்யாவா, ப்ரோ அமெரிக்காவா?” 

“அவங்க ப்ரோ இந்திரா. அந்த அம்மாவுக்குப் பதவி தான் முக்கியம்.” 

“நீங்கதானே அவங்களைப் பிரதமராப் போட்டீங்க? இப்ப நீங்களே வருத்தப்படறீங்களே!” 

“நேருவின் மகளாச்சே, நேருஜியுடன் கூடவே இருந்ததாலே இந்த நாட்டு அரசியலை நல்லா கவனிச்சுப் பக்குவப் பட்டிருப்பாங்க. நல்ல முறையிலே நாட்டை ஆளுவாங்க, அதுக்கேத்த திறமையும், மனப்போக்கும் இருக்கும்னு நினைச்சுத்தான் போட்டேன். இப்படி ஆகும்னு கண்டேனா? நாட்டையே அடகு வைச்சுடுவாங்க போலிருக்கே!” கோபமும், எரிச்சலும் வருகின்றன அவருக்கு. பேச்சிலே ஒரு வேகம், தவிப்பு… 

இடது கையால் பிடரியைத் தேய்க்கிறார். வலது கையால் தலையைத் தடவிக் கொள்கிறார். சட்டையின் விளிம்பைச் சுருக்கிச் சுருக்கி மேலே தோள்பட்டை வரை தூக்கிக் கொண்டு போய்ச் சேர்க்கிறார். “உம், இருக்கட்டும்” என்று மீண்டும் தாமாகவே பேசத் தொடங்குகிறார். 

“எனக்கு ஒண்ணுமில்லே; இந்தத் தேசம் பாழாப் போகுதே, இதை எப்படிக் காப்பாத்தப் போறோம்னுதான் கவலையாயிருக்கு. நான் என்ன செய்வேன்?” 

இதற்குள் எதையோ நினைத்துக் கொண்டு, “உம், சரி, பார்ப்பம்” என்று அழுத்தமாகச் சொல்லி விட்டுக் குழந்தை போல் சிரிக்கிறார். எளிமையும், தூய்மையும் நிறைந்த காந்திஜியின் கபடமற்ற சிரிப்பை நினைப்பூட்டுகிறது அந்தச் சிரிப்பு. 

”சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு நீங்களே பிரதமராக வருவதற்குச் சந்தர்ப்பம் இருந்தும் நீங்க ஏன் வர நினைக்கல்லே? நீங்களே வந்திருந்தால் இப்போது இந்தச் சங்கடங்க ளெல்லாம் இருந்திருக்காதே?’ 

“வாஸ்தவந்தான். வேறு யாராவது பிரதமரா வந்தால், அவங்க நல்ல முறையிலே நாட்டை ஆளுவதற்கு நாம் உதவியாயிருக்கலாம். அவங்க தப்புச் செய்தாலும் தட்டிக் கேட்க லாம். நாமே போய்ப் பதவியிலே உட்கார்ந்துகிட்டா சரியாயிருக்குமா? அப்பவே காரியக் கமிட்டி அங்கத்தினர்களில் பெரும்பாலோரும், ராஜ்ய மந்திரிகளில் அநேகமாக எல்லோருமே நான்தான் பிரதமரா வரணும்னு கேட்டுக்கிட்டாங்க. அடுத்தாப்பலே ஒரு வருஷத்துக்குள் தேர்தல் வரப்போகுது. தேர்தல் சம்பந்தமான கட்சி வேலைகளையெல்லாம் விட்டு விட்டு நான் பிரதம மந்திரிப் பதவியிலே போய் உட்கார்ந்துக்கிட்டா கட்சி என்ன ஆகிறது? எனக்குக் கட்சி முக்கியமா? பிரதம மந்திரிப் பதவி முக்கியமா?” 

“இந்திரா காந்தியை எப்படித் தேர்ந்தெடுத்தீங்க? அந்த விவரத்தைக் கொஞ்சம் சொல்ல முடியுமா?” 

“நேருவுக்குப் பிறகு நமக்கு மிஞ்சியிருந்த ஒரே தலைவர் சாஸ்திரிதான். நேருஜிக்கும் சாஸ்திரியிடத்தில் நல்ல மதிப் பும், நம்பிக்கையும் இருந்தன. சாஸ்திரி ரொம்ப சாது. காந்தீயவாதி. நேர்மையானவர். எளிய சுபாவம். அதே சமயத்தில் உறுதியான உள்ளம் படைத்தவர். இந்த நாட்டின் துரதிருஷ்டம் சாஸ்திரியும் சீக்கிரத்திலேயே நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். தாஷ்கண்டில் அவர் இறந்த போது நான் சென்னையில் இருந்தேன். ரேடியோவில் அந்தச் செய்தியைக் கேட்ட போது ரொம்ப துக்கப்பட்டேன். எனக்கு ஒண்ணுமே புரியல்லே. நம்ப நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தது. ஆனால் சுதந்திரம் வாங்கித் தந்த தலைவர்களெல்லாம் வயதானவங்க ளாகப் போயிட்டாங்க.காந்தி, படேல், பிரசாத், ஆசாத், நேரு எல்லோருமே ரொம்ப நாளைக்கு இல்லாமல் போயிட் டாங்க. அப்பவே காந்திஜி சொன்னார், காங்கிரசைக் கலைச் சுடலாம்னு. எனக்கு அப்போ அவர் எதுக்காக அப்படிச் சொல்றார்னு விளங்கல்லே. இப்போதுதான் புரியுது. அப் பவே கலைச்சிருந்தா இப்ப புதுசாவே இரண்டு பலம் வாய்த்த கட்சிகள் தோன்றி வளர்ந்திருக்கும். அது நாட்டுக்கும் நல்ல தாயிருந்திருக்கும். 

சாஸ்திரியின் காரியங்களெல்லாம் முடிஞ்ச இரண்டு நாளைக்கெல்லாம் இந்திரா காந்தி என்னிடம் பேச வந்தாங்க, தான் பிரதமரா வர முடியும் என்கிற நம்பிக்கை அவருக்கே இல்லை அப்போது.இருந்தாலும், மனசுக்குள்ளே ஓர் ஆசை இருந்திருக்கும். விஷயத்தைத் தெரிஞ்சிக்கிட்டுப் போவோம்னு வந்தாங்க போலிருக்கு. 

எப்படி இருக்கு நிலைமை, என்ன செய்யப் போறீங்கன்னு பொதுவாப் பேச்சை ஆரம்பிச்சாங்க. என் மனசிலே இருக்கிறதை நான் சொல்லல்லே. 

நீங்க பேசாமல் வீட்டிலே போய் உட்காருங்க; நான் கூப்பிட்டனுப்பிச்சா அப்ப வாங்க; அதுவரைக்கும் நீங்க யார்கிட்டேயும், எதுவும் பேசாதீங்க: உங்ககிட்டே யாரா வது வந்து ஏதாவது கேட்டாங்கன்னா காங்கிரஸ் பிரஸி டெண்டைப் போய்க் கேளுங்கன்னு சொல்லி அனுப்பிச் சுடுங்கன்னேன். 

அடுத்தாப்பலே பத்திரிகைக்காரங்க போய் அந்த அம் மாவைக் கேட்டப்போ, ‘எனக்கு ஒண்ணும் தெரியாது. காம ராஜ் என்னைப் பேசாமல் வீட்டிலே போய் உட்கார்ந்திருக்கச் சொல்லி விட்டார். அவரைப் போய்க் கேளுங்க’ன்னு பதில் சொல்லியிருக்காங்க. அது பேப்பர்லேகூட வந்ததா ஞாப கம்’ என்றார். 

“இந்திராவைப் போடலாம்னு ஏன் நினைச்சீங்க? மொரார்ஜி தேசாயே வந்திருக்கலாமே?” என்றேன். 

“நமக்குள்ளே போட்டியில்லாமல் ஒற்றுமையாக ஒரு முடிவு எடுக்கணும்னு என் ஆசை. அப்ப சில பேர் போட்டி போடணும்னு நினைச்சாங்க. காரியக் கமிட்டி அங்கத்தினர் களும் அப்படித்தான் அபிப்பிராயப்பட்டாங்க. எம்.பி.க்கள், முதலமைச்சர்கள், பிரதேசக் காங்கிரஸ் தலைவர்கள் எல்லா ரையும் தனித்தனியாக் கலந்து பேசினேன். என் மனசிலே இந்திரா காந்தியைப் போடலாம்னு ஓர் அபிப்பிராயம் இருந்தது.ஆனால் நான் அதைக் கொஞ்சங்கூட வெளியிலே காட்டிக்கல்லே. இந்திராவை ரொம்பப் பேர் வேண்டாம்னு சொன்னாங்க. ஆனாலும் அவங்களோடெல்லாம் நான் ரொம்ப நேரம் ‘டிஸ்கஸ்’ பண்ணினேன். அப்புறம் அவங்க அபிப்பிராயத்தை மாத்திக்கிட்டாங்க. ஆனால் மொரார்ஜி ரொம்பப் பிடிவாதமா இருந்தாரு. எம்.பிக்களுக்கெல்லாம் லெட்டர் எழுதினார். நான் அவர் வீட்டுக்குப் போய் போட்டி போட வேண்டாம், வாபஸ் வாங்கிக்குங்கன்னு கேட்டுக்கிட் டேன். அவர் பிடிவாதமா வாபஸ் வாங்க மறுத்துட்டார். வேறு வழியில்லாமல் மறுநாள் பார்ட்டியில் வைத்து வோட் டெடுத்தோம். இந்திராவுக்குத்தான் மெஜாரிடி கிடைச்சுது. 

“சரி, இந்திராவைப் பிரதமராக்கினீங்களே, அதுக்கப் புறம் முக்கியமான பிரச்னைகளில் உங்களைக் கலந்துகிட்டுத் தானே இருந்தாங்க?” 

“ஆமாம், கலந்துக்கிட்டுத்தான் இருந்தாங்க. ஆனால் நம்ம நாட்டைப் பாதிக்கிற ஒரு முக்கியமான விஷயத்திலே என்னைக் கலந்துக்காமல் அவசரப்பட்டுட்டாங்க. திடீர்னு நாணய மதிப்பைக் குறைக்கப் போறதா முடிவு எடுத்தது பெரிய தப்பு. நான் அப்ப மெட்ராஸிலே இருந்தேன். இந்திரா காந்தி எனக்குப் போன் பண்ணி டில்லிக்கு வரச் சொன்னாங்க. நானும் போனேன். என்கிட்டே விஷயத்தைச் சொன்னாங்க. 

அப்படிச் செய்யக் கூடாது. ரொம்பத் தப்பு. வெளி நாட்டு வியாபாரம் கெட்டுப் போகும். வெளிநாட்டிலே கோடி கோடியாக் கடன் வாங்கியிருக்கோம். அதை இரண்டு மடங்காகத் திருப்பிக் கொடுக்க வேண்டி வரும். டிவேல்யு வேஷன் அவசியந்தான்னு நினைச்சா அதைப் பற்றிப் பொரு ளாதார நிபுணர்களைக் கலந்து பேசி முடிவு எடுங்க. அவசரப் படாதீங்க. ஆறு மாசம் கழிச்சு செய்யலாமேன்னுகூடச் சொல்லிப் பார்த்தேன்…” 

“அதுக்கு என்ன சொன்னாங்க?” 

“இல்லே,காபினெட் மெம்பர்ஸ் ஒத்துக்கிட்டாங்கண்ணு சொன்னாங்க. காபினெட் ஒத்துக்கிட்டா மட்டும் போதாது. எக்ஸ்பர்ட்டுங்ககிட்டே டிஸ்கஸ் பண்ணுங்கன்னு சொன் னேன். என் பேச்சைக் கேட்கல்லே. அப்பத்தான் இந்த அம் மாவைப் பற்றி எனக்குப் பயம் வந்துட்டுது. நாட்டை இவங்ககிட்டே ஒப்படைச்சிருக்கோமே, எங்கேயாவது தடு மாறிப் போயிடப் போறாங்களேன்னு கவலை வந்துட்டது…”

“ஏன்,நீங்க அப்புறம் கூப்பிட்டுக் கேட்கிறதுதானே?”

“கேட்டேன். டிவேல்யுவேஷன் மேட்டரைப் பப்ளிக்கா டிஸ்கஸ் பண்ண முடியல்லே, ரகசியமாச் செய்ய வேண்டிய காரியம் அது,இது இன்னாங்க. அப்புறம் காங்கிரஸ் காரியக் கமிட்டியிலே இதைப் பத்தி விவாதிச்சோம், என்ன லாபம்? காரிய கமிட்டியிலே இதைத் திருத்த முடியுமா? கண்டிக்கத் தான் முடியும். கண்டிச்சுத் தீர்மானம் போட்டா கட்சிக்குத் தானே பலக்குறைவு ? எங்கே போய்ச் சொல்லிக் கொள்வது? அன்றைக்குத்தான் எனக்குக் கவலை வந்தது. இந்த அம்மா விடம் நாட்டை விட்டு வைத்தால் ஆபத்துன்னு நினைச்சேன். நான் என்ன செஞ்சுத் தொலைப்பேன்னேன்…!” 

சிரிப்பு … பலத்த சிரிப்பு ! எக்காளச் சிரிப்பு! தேசம் பாழாய்ப் போகிறதே என்று அடிவயிறு காந்தி வரும் சிரிப்பு… அந்தச் சிரிப்பு அடங்கக் கொஞ்ச நேரம் ஆகிறது. 

‘பார்ப்பம். பொறுமையாயிருந்துதான் காரியத்தைச் சாதிக்கணும்’ மணிக்கட்டைப் பிடித்துக் கொள்கிறார். பிடரியைத் தேய்க்கிறார். தவிக்கிறார்…! மீண்டும் அந்தக் குழந்தைச் சிரிப்பு. 

3 

அந்தக் காலத்தில் சத்தியமூர்த்திக்கும், காமராஜிற்கும் ஏற்பட்டிருந்த அன்புக்கும், பிணைப்புக்கும் இணையாக இன் னாரு நட்பைச் சொல்லிவிட முடியாது. காமராஜின் அரசி யல் குரு சத்தியமூர்த்தி என்றுதான் எல்லோரும் சொல்வார் கள். ஆனால் பொதுவான நிலை அதுவல்ல ; காமராஜே சிற்சில சமயங்களில் சத்தியமூர்த்திக்கு ஆசானாக இருந்த துண்டு. சத்தியமூர்த்தி வெள்ளை உள்ளம் படைத்தவர். ஆகை யால் யாரையும் எளிதில் நம்பிவிடக் கூடியவர். அரசிய லுக்கே உரித்தான சூழ்ச்சிகள், தந்திரங்கள், எதுவும் அறியா தவர். அதனால் சத்தியமூர்த்தியை யாருடைய சூழ்ச்சி வலை யிலும் சிக்க விடாமல் எச்சரிக்கையோடு இருந்து காப்பாற் றிய பெருமை காமராஜிற்கே உண்டு. அது மட்டுமல்ல, சத்தியமூர்த்தியின் புகழ் அரசியல் உலகில் சுடர் விட்டுப் பிரகாசிப்பதற்கும் காமராஜே காரணமாயிருந்தார். 

காமராஜ் தம்மிடம் கொண்டுள்ள அன்பும், அக்கறையும் எந்தக் காலத்திலும் மாறாதவை, மாற்ற முடியாதவை என் பதை அறிந்து கொண்ட சத்தியமூர்த்தி, தம்முடைய அரசி யல் வாழ்க்கையில் நெருக்கடி தோன்றிய நேரங்களிலெல் லாம் ம் காமராஜின் ஆலோசனையைக் கேட்டே எதையும் செய்து வந்தார். 

சத்தியமூர்த்திதான் தம்முடைய அரசியல் தலைவர் என்று காமராஜ் சொல்லிக் கொண்ட போதிலும், சத்தியமூர்த்தி தவறு செய்கின்ற போதும், திசை தப்பிப் போகின்ற நேரங்களிலும் காமராஜ் அவருடைய ஆசானாக மாறி யோசனை கூறவோ, மீறிப் போனால் கண்டிக்கவோ ஒருபோதும் தவறிய தில்லை. ஒரு சின்ன உதாரணம்: 

1940 -ஆம் ஆண்டில் சத்தியமூர்த்தி சென்னை நகரின் மேய ராக இருந்த போது பூண்டி நீர்த் தேக்கத்துக்கு அப்போது சென்னை கவர்னராக இருந்த ஆர்தர் ஹோப் அஸ்திவாரக் கல் நாட்டினார். மேயர் என்ற முறையில் திரு. சத்தியமூர்த்தி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அச்சமயம் திரு. காமராஜ் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராயிருந்தார். 

வெள்ளைக்காரர்கள் பங்கு கொள்ளும் எந்த விழாவிலும் காங்கிரஸ்காரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று காங் கிரஸ் மேலிடம் அப்போது ஒரு கட்டுப்பாடு விதித்திருந்தது. அதை மறந்து விட்டுச் சத்தியமூர்த்தி பூண்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெரிய தவறு என்று காமராஜ் கருதினார். சத்தியமூர்த்தி தம்முடைய தலைவர் என்பதற்காகக் காமராஜ் அவர் செய்த தவற்றைக் கண்டிக்கத் தவறவில்லை. சத்தியமூர்த் தியை நேரில் சந்தித்து, ‘காங்கிரஸ் மேலிடத்தில் இம்மாதிரி ஒரு கட்டுப்பாடு இருக்கும் போது தாங்கள் அதை மீறி வெள்ளைக்காரர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டது பெரிய தவறு இல்லையா?” என்று கேட்டார். 

“ஆமாம்; அதற்காக என்னை என்ன செய்ய சொல்கிறாய்? நான் மேயர் என்ற முறையில் போயிருந்தேன்” என்றார் சத்தியமூர்த்தி. 

“செய்தது தவறு என்பதை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுங்கள்” என்று கேட்டார் காமராஜ். 

“காமராஜா இப்படிக் கேட்கிறார்?” என்று ஒரு கணம் த்தியமூர்த்திக்கு ஒன்றும் விளங்கவில்லை; வேறு வழியில்லாமல் ஒரு காகிதத்தை எடுத்துத் தாம் செய்தது தவறுதான் என்று எழுதி மன்னிப்புக் கோரிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார் சத்தியமூர்த்தி. 

அண்மையில் காமராஜ் இந்தத் தகவலை என்னிடம் கூறிய போது, “அப்புறம் என்ன செய்தீர்கள்?” என்று நான் கேட்டேன். 

“‘இதைப் பற்றி மேலிடத்தில் அப்போது சத்தியமூர்த்தி யின் பேரில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?’ என்று என்னைக் கேட்டார்கள். ‘மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கி வைத்திருக்கிறேன்’ என்று அவர்களிடம் சொன்னேன்” என்றார் காமராஜ். “சரி, அந்தக் கடிதம் இப்போது எங்கே இருக்கிறது?” என்று நான் கேட்ட போது, “வீட்டில்தான் இருக்கிறது. எங்காவது பெட்டிக்குள் இருக்கும். தேடிப் பார்க்கணும்” என்றார். 

“சத்தியமூர்த்தியை நீங்கள் முதன் முதலாகச் சந்தித்தது எப்போது? ஞாபகத்தில் இருக்கிறதா?” என்று கேட்டேன். 

“1919-இல் அவர் விருதுநகருக்குப் பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக வந்திருந்தார். அப்போது நான் ஒரு சாதாரணத் தொண்டன். அவரோடு அப்போது பேசவே முடியவில்லை. அப்புறம் நாலு வருஷம் கழித்துத்தான் அவரோடு நெருங்கிப் பழகவும், பேசவும் எனக்குச் சந்தர்ப்பம் ஏற்பட்டது. 

1923-ஆம் ஆண்டில், திரு. சி.ஆர்.தாஸ் தலைமையில் சுயராஜ்யா பார்ட்டி ஆரம்பிச்சாங்க இல்லையா? அப்ப அந்தக் கட்சியின் கொள்கை பற்றி விவாதிக்கிறதுக்காக முக்கிய தலைவர்கள் எல்லோரும் மதுரையில் கூடினாங்க. கே.ஆர்.வெங்கட்ராமய்யர் இல்லத்தில் அந்தக் கூட்டம் நடைபெற்றது. இப்போது அவர் இல்லை. நானும் அந்தக் கூட்டத்துக்குப் போயிருந்தேன். சத்தியமூர்த்தி சுயராஜ்யா கட்சியின் கொள்கையை விளக்கி ரொம்பத் தெளிவாகப் பேசினார்.காங்கிரஸ் சட்டசபைக்குப் போக வேண்டும் என் பதுதான் சுயராஜ்யா கட்சியின் கொள்கை, அதுதான் சத்திய மூர்த்தியின் விருப்பமாகவும் இருந்தது. அந்தக் கூட்டத்தில் பலர் சட்டசபைப் பிரவேசத்துக்கு எதிரான கருத்தைத் தெரி வித்தார்கள். நான்கூட அப்போது சட்டசபைக்குப் போகக் கூடாது என்ற கட்சியைச் சேர்ந்தவனாகத்தான் இருந்தேன். 

அப்புறம் சத்தியமூர்த்தியுடன் அடிக்கடி தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்வதும், காங்கிரஸ் பிரசாரம் செய்வ துமே என் முழு நேர வேலை ஆயிற்று. 

அந்தக் காலத்தில் திரு. ஏ. ரங்கசாமி அய்யங்கார், திரு. எஸ்.சீனிவாச அய்யங்கார் இவர்களெல்லாம் ரொம்பப் பிரபலமாயிருந்தாங்க. காரணம் திரு. ரங்கசாமி அய்யங்கா ருக்குச் சொந்தத்தில் பத்திரிகை இருந்தது. அதனால் அவர் பிரபலமடைவது சுலபமாயிருந்தது. திரு.சத்தியமூர்த்திக்கு அத்தகைய வசதி எதுவும் இல்லாததால் அவர்களையெல்லாம் மீறிக் கொண்டு முன்னுக்கு வர முடியல்லே. 

முன்னுக்கு வந்த போது அரசியல் தலைமையில் அவருக் கும், ராஜாஜிக்கும் இடையே போட்டி இருந்து கொண்டே இருந்தது.போராட்டம், சிறைவாசம் என்ற போதெல்லாம் சற்றும் தயங்காமல் உற்சாகத்தோடு முன் வந்து நின்ற சத்திய மூர்த்தி, பதவி என்று வரும் போது மட்டும் அதைத் தாமே அடைய வேண்டும் என்று எண்ணாமல் மற்றவர்களுக்கு விட் டுக் கொடுக்கும் மனப்பான்மை கொண்டவராயிருந்தார். 

திரு. சத்தியமூர்த்திக்குப் பதவி மீது ஆசையில்லை என் பது இதற்கு அர்த்தமில்லை. அவருக்கு விருப்பம் இருந்தும், தகுதி இருந்தும், சந்தர்ப்பங்கள் இருந்தும் அவ்வப்போது ஏற்பட்ட போட்டி காரணமாக அவருக்குக் கிடைக்க வேண் டிய பதவிகள் கிடைக்காமற் போய் விட்டன. காங்கிரஸ் காரியக் கமிட்டியில் அங்கம் வகிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டதுண்டு. ஆனால் இது கிடைக்காமலே போய் விட்டது. மந்திரி சபையில் இடம் பெற வேண்டுமென்ற அவருடைய விருப்பமும் நிறைவேறாமல் போய் விட்டது. 

1937- இல் நடைபெற்ற சென்னை அசெம்பிளி தேர்தலில் காங்கிரஸ்காரர்களே எதிர்பார்க்காத அளவுக்கு காங்கிரசுக்கு வெற்றி கிடைத்தது. இதற்குக் காரணம் சத்தியமூர்த்தி ஓய்வு ஒழிவில்லாமல், இராப் பகலாகக் காரிலேயே சுற்றுப்பயணம் செய்து,ஊர் ஊராகப் பிரசாரம் செய்ததுதான். அவருடைய பிரசாரந்தான் காங்கிரசின் வெற்றிக்கு முக்கிய காரணம்னு சொல்லணும். அந்தச் சமயம் ராஜாஜி காங்கிரசிலிருந்து விலகியிருந்தார். 

ராஜாஜி முதல் மந்திரியாக வர்வேண்டும் என்பது சத்தியமூர்த்தியின் ஆசை. ராஜாஜி முதல் மந்திரியாக வர வேண்டும் என்பதில் இந்து சீனிவாசனும், இன்னும் சிலரும் குறியாக இருந்தார்கள். இந்து சீனிவாசன் சத்தியமூர்த்தியை அணுகி, அவர் நிற்பதாக இருந்த சர்வகலாசாலைத் தொகு தியை ராஜாஜிக்கு விட்டுக் கொடுக்கும்படி கேட்டுக் கொண் டார். சத்தியமூர்த்தி ராஜாஜிக்கு விட்டுக் கொடுத்தார். 

ஆனால் ராஜாஜி தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவருடைய மந்திரி சபையில் சத்தியமூர்த்திக்கு இடம் தரவில்லை. கடைசி வரைக்கும் சத்தியமூர்த்திக்கு மந்திரி சபையில் இடம் உண்டு என்று சொல்லிக் கொண்டிருந்த ராஜாஜி அவரை மந்திரியா கப் போடாமலே மழுப்பி விட்டார். 

பத்திரிகையில் மந்திரிகள் பேர்ப் பட்டியல் வந்த போது அந்தப் பட்டியலில் சத்தியமூர்த்தியின் பெயரைக் காணாமல் எங்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தமாயிருந்தது. வருத்தப்பட்டு என்ன செய்வது! பாவம், சத்தியமூர்த்தி ஒண்ணும் தெரியாத அப்பாவி! அவருக்கு இது பெரிய ஏமாற்றம். 

“எந்தப் போலீஸ்காரர்கள் காங்கிரஸ்காரர்களைத் தடி யால் அடித்தார்களோ அதே போலீஸாரைக் கதர் குல்லாய்க் குச் சலாம் போடும்படி வைக்கிறேன்னு சத்தியமூர்த்தி அடிக் கடி மீட்டிங்கில் பேசுவார். பேசியபடி தடியால் அடித்த போலீஸ்காரர்களைக் காங்கிரஸ்காரர்களுக்குச் சலாம் போட வும் வைத்தார். ஆனால் அந்தப் போலீஸ்காரங்க கதர்க் குல்லாய் அணிந்த சத்தியமூர்த்திக்கு மட்டும் சலாம் போட வில்லை. அந்த கௌரவத்தைச் சத்தியமூர்த்தி அடையாமல் போனது எங்களுக்கெல்லாம் பெரிய வருத்தந்தான். 

உப்பு சத்தியாகிரகத்தின் போது திருச்சி, வேலூர், அலிபுரம் ஆகிய மூன்று சிறைச்சாலைகளிலும் தேசபக்தர் களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது சிறையிலுள்ள தொண்டர்கள் ஒன்றுகூடி ஒரு தீர்மானம் செய்தோம். 

விடுதலையாகி வெளியே போனதும், திரு. சத்தியமூர்த்தி அவர்களையே தலைவராக்க வேண்டும் என்று நான் வெளியிட்ட யோசனையைத் தொண்டர்கள் அனைவரும் ஆமோதித்தனர். 

வெளியில் சென்றவுடன் மதுரையில் அரசியல் மகா நாடும், மாகாண காங்கிரஸ் கமிட்டித் தேர்தலும் நடைபெற் றன. திரு.சத்தியமூர்த்தியிடம் எங்கள் முடிவைத் தெரிவித்த போது அவர் சரி என்று ஒப்புக் கொண்டார். ஆனால் தலை வர் தேர்தல் நடைபெறுவதற்கு அரை மணி முன்னதாக ராஜாஜியும் போட்டியிடுகிறார் என்று தெரிந்ததும் சத்திய மூர்த்தி போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். அகில இந்திய சூழ்நிலையில் அது தவறான கருத்தை உண்டாக்கும் என்று சத்தியமூர்த்தி கருதியதே அதற்குக் காரணம். சத்திய மூர்த்தி அப்போது தலைமைப் பதவியை ராஜாஜிக்கு விட் டுக் கொடுத்தது மட்டுமின்றி, ராஜாஜி தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டதும் தாமே உபதலைவராக இருந்து வேலை செய்யவும் ஒப்புக் கொண்டார். 

1936- இல் பொதுத் தேர்தல் வந்த போது, தேர்தல் பிரசாரத்துக்காகச் சத்தியமூர்த்தி அவர்களும், நானும் திரு வண்ணாமலைப் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து கொண் டிருந்தோம். அதே சமயம் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் தேர்தல் நடைபெற இருந்தது. திரு. குமாரசாமி ராஜா தலைமைப் பதவிக்குப் போட்டியிட்டதைக் காங்கிரஸ் கட்சியில் பெருவாரியானவர்கள் விரும்பாததால் அவருக்கு எதிராக இன்னொருவரை நிறுத்த ஏற்பாடு செய்தனர். இந்த பிரச்னையைத் தீர்த்து வைக்க உடனே மதுரைக்குப் புறப் பட்டு வரும்படி தலைவர் சத்தியமூர்த்திக்குத் தந்தி கொடுத் திருந்தனர். அதைக் கண்ட சத்தியமூர்த்தி என்னைப் பார்த்து. குமாரசாமி ராஜாதான் விட்டுக் கொடுக்கட்டுமே! அவர் போட்டியிடவில்லையென்றால் பிரச்னை தீர்ந்து விடும் அல் லவா ? நீ என்ன சொல்கிறாய்? ராஜாவுக்குத் தந்தி கொடுத்து, ஒதுங்கிக் கொள்ளச் சொல்லலாமா?’ என்று கேட்டார். 

அப்போதிருந்த நிலைமையில் குமாரசாமி ராஜா தலைவ ராயிருப்பதுதான் நல்லது என்று எனக்குத் தோன்றியது. ஆகையால் ‘நாம் இருவரும் மதுரைக்குச் சென்று ராஜா வையே மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்க ஏற்பாடு செய்ய லாம்’ என்று யோசனை கூறினேன். ஆனாலும் அது அவ்வளவு எளிதில் நடந்துவிடக் கூடிய காரியமல்ல என்கிற பயம் என் மனத்தில் இருந்தது.தலைவரும், நானும் மதுரைக்குப் புறப் பட்டுச் சென்று, கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். ரு. சத்தியமூர்த்தி அங்கத்தினர்கள் எல்லோரையும் அழைத்து, ‘என்னிடம் உங்களுக்குப் பூரண நம்பிக்கை இருக் கிறதா?’ என்று கேட்டார். ‘இருக்கிறது’ என்று அவர்கள் பதில் கூறியும் சத்தியமூர்த்திக்குத் திருப்தி ஏற்படாததால், ‘இப்படிச் சொன்னால் போதாது.மீனாட்சி சுந்தரேசுவரர் சாட்சியாக என்னிடம் நம்பிக்கை இருக்கிறது என்று கூறி னால்தான் நம்புவேன்’ என்றார். 

அவர் கேட்டுக் கொண்டபடியே எல்லோரும் உறுதி அளித்தனர். அதன் பிறகே அவர், ‘உங்களுக்கு எந்தவித அபிப்பிராய பேதம் இருந்தபோதிலும் குமாரசாமி ராஜா வையே நீங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்பது தான் என் விருப்பம்’ என்றார். 

திரு. சத்தியமூர்த்தியின் விருப்பப்படி குமாரசாமி ராஜாவையே தேர்ந்தெடுத்தார்கள். 

1936- ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் சுற்றுப்பயணம் செய்த போதும், அதற்கு முந்திய வருஷங்களில் படேலும், ராஜேந்திர பிரசாத்தும் இங்கு வந்திருந்த போதுதான் சத்திய மூர்த்திக்குத் தமிழ் நாட்டில் எவ்வளவு செல்வாக்கு இருக் கிறது என்பதை மேலிடத்தார் அறிந்து கொண்டார்கள். 

வல்லபாய் படேலும், அவருடைய மகள் மணிபென் படேலும் இங்கே வந்திருந்த சமயம், சத்தியமூர்த்தியும் அவர்களுடன் ரயிலில் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. சத்தியமூர்த்திக்கு அப்போது உடல்நிலை சரியில்லாமலிருந் தும் பயணத்தை ரத்து செய்யவில்லை. அவர்கள் மூவரும் பயணம் செய்த ரயிலில் படேலுக்கும், அவர் மகளுக்கும் கீழ். ‘பர்த்’தை ரிசர்வ் செய்து விட்டு, சத்தியமூர்த்திக்கு மட்டும் மேல் ‘பர்த்’தில் இடம் போட்டிருந்தார்கள். அதைக் கண்ட படேல் தம் மகளை ‘அப்பர் பர்த்’தில் படுத்துக் கொள்ளச் சொல்லி, சத்தியமூர்த்திக்குக் கீழே இடம் தரும்படி கேட்டுக் கொண்டார். 

அப்புறம் 1939 கடைசியில் மாகாணக் காங்கிரஸ் தலை மைப் பதவிக்கு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும், சத்திய மூர்த்தியும் போட்டியிட்டாங்க இல்லையா? அந்தப் போட்டி யில் வகுப்பு வாதம் காரணமாகத் திரு. சத்தியமூர்த்தி தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்து போயிருந்த சத்தியமூர்த்தி, அன்றிரவு என்னைப் பார்த்து, ‘காமராஜ். அடுத்த வருஷம் உன்னைதான் காங்கிரஸ் தலைவனாகத் தேர்த லுக்கு நிறுத்தப் போகிறேன். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். வகுப்பு வாதத்தைப் போக்க அது ஒன்றுதான் வழி. நீ தலைவனாக இரு. நான் உனக்குக் காரியதரிசியாக இருந்து வேலை செய்கிறேன்’ என்றார். 

அதற்கு இப்போது என்ன அவசரம்? அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நான் பதில் கூறினேன். 

அடுத்த வருஷம் உன்னையேதான் நிறுத்தப் போகிறேன். இந்த முடிவு நிச்சயமானதுதான் என்று உறுதியாகக் கூறிய சத்தியமூர்த்தி அவர்கள், தாம் கூறியபடியே அடுத்த வருஷம் நடைபெற்ற தலைவர் தேர்தலில் என்னை நிறுத்தவும் செய்தார். பலத்த போட்டி இருந்தபோதிலும் சத்தியமூர்த்தியின் தலை மையில், ஊழியர்களின் ஆதரவுடன் நான் தேர்ந்தெடுக்கப் பட்டேன். என்னுடைய வெற்றி சத்தியமூர்த்திக்குப் பெரு மகிழ்ச்சியை அளித்தது. அந்த ஆண்டு நான் தலைவராக இருந்த போது, அவரே காரியதரிசியாக இருந்து, எனக்கு லோசனை கூறி, என்னைப் பெருமைப்படுத்தியதை நான் எப்போதும் மறக்க மாட்டேன்” என்றார் காமராஜ். 

“‘அப்போதுதானே சி.பி. சுப்பையா உங்களை எதிர்த்து நின்று தோற்றுப் போனார்?” என்று கேட்டேன். 

“ஆமாம்; அந்தக் கதையை அப்புறம் சொல்கிறேன்” என்றார் காமராஜ். 

– தொடரும்…

– சிவகாமியின் செல்வன், சாவியில் தொடராக வெளிவந்த காமராஜரின் அரசியல் வாழ்க்கை, நான்காம் பதிப்பு: ஜனவரி 1990, மோனா பப்பிளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *