சிட்டுக் குருவிப் பட்டாளம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 18, 2025
பார்வையிட்டோர்: 33 
 
 

(1988ல் வெளியான சிறுவர் இலக்கியம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாராண்டபுரம் என்று ஓர் ஊர் இருந்தது. அந்த ஊரில் ஒரு மன்னர் இருந்தார். அந்த மன்னருக்கு ஒரு மகள் இருந்தாள். 

அவள் ஒரே மகள். எனவே பாராண்டபுர மன்னருக்கு அவள் செல்ல மகள். 

அந்தச் செல்ல மகள் விளையாடுவதற் காக மன்னர் ஒரு சோலையை உண்டாக்கினார். 

ஊருக்குப் பக்கத்தில் உள்ள காட்டில் இந்தச் சோலை யமைந்தது. 

இதில் நிழல் தரும் பழ மரங்களும், மணந் தரும் பூஞ்செடிகளும், கொடிகளும் வளர்க்கச் செய்தார். எல்லாம் வளர்ந்து ஓர் அழகான பூஞ் சோலையாக மாறிய பின், தன் மகளை அதாவது இளவரசியை அங்கே அழைத்துச் செல்லும் முன் பூஞ் சோலையைப் பார்த்து வரப் புறப்பட்டார் மன்னர். 

அவருடைய அமைச்சர்கள் நான்கு பேரும், மெய்காப்பாளரும் உடன் சென்றனர். 

அந்தச் சோலை மிக அழகாக இருந்தது. 

சோலை யருகில் செல்லும்போதே பூக் களின் மணம் மூக்கைக் துளைத்தது. 

மன்னர் சோலைக்குள்ளே நடந்து சென்றார்.  

கக்கக்கக்கக்
குக்குக்குக்குக் 
கக்குக்குக்கக் 
குக்கக்கக்குக் 

என்று சோலை முழுவதும் சிட்டுக் குருவிகள் ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. 

‘இது என்ன ஓசை?’ என்று கேட்டார் மன்னர் சற்றுச் சினத்துடனேயே! 

‘இது சிட்டுக் குருவிகளின் ஓசை’ என்று ஓர் அமைச்சர் பதில் அளித்தார். 

‘சிட்டுக் குருவிகள் இங்கே என்ன செய் கின்றன?’ என்று கேட்டார் மன்னர். 

‘குருவிகள் பறந்து விளையாடுகின்றன’ என்று அந்த அமைச்சர் பதில் அளித்தார். 

மன்னருக்குச் சினம் பொங்கிவந்தது. ‘இளவரசி விளையாடுவதற்காக அமைத்த சோலையில் சிட்டுக்குருவிகள் எப்படி விளையாடலாம்? கூப்பிடு காவல் வீரர்களை’ என்று பொரிந்து தள்ளினார் மன்னர். 

காவல் வீரர்கள் ஓடோடி வந்தனர். 

‘மாமன்னர் வாழ்க!’ என்று கூறி வணக்கம் இட்டு நின்றனர். 

‘இந்தச் சோலை இளவரசி விளையாடுவதற்காக அமைக்கப்பட்டது. இங்கு சிட்டுக் குருவிகளை விளையாட விட்டது தவறு. இன்றே அவற்றை யெல்லாம் இங்கிருந்து அப்புறப் படுத்துங்கள். இது என் கட்டளை’ என்று ஆணையிட்டார் மன்னர். 

உடனே காவல் வீரர்கள், சிட்டுக் குருவிகளை விரட்டத் தொடங்கினர். சிலர் மரங்களில் ஏறி அவற்றின் கூடுகளைக் கலைத்து விட்டனர். 

சில வீரர்கள் சிட்டுக் குருவிகளின் மேல் கல்லை விட்டெறிந்தனர். சிலர் கவண் வில்லினால் களிமண் உருண்டைகளை யடித்தனர். சிலர் வில்லை வளைத்து அம்பெய்தனர். இதில் சில சிட்டுக் குருவிகள் அடிபட்டு விழுந்து இறந்தன. 

இந்த வேட்டை நடந்து கொண்டிருக்கும் போதே ஒரு சிட்டுக் குருவி வான வெளியில் பறந்து சென்றது. நேரே கொல்லி மலைக்குச் சென்றது. அங்கு ஓர் அரச மரத்தில் வீற்றி ருந்த சிட்டுக் குருவியரசனிடம் நடந்த நிகழ்ச்சி களைக் கூறியது. உடனே அந்த சிட்டுக் குருவி அரசன் படை திரட்டிக் கொண்டு பாராண்டபுரத்திற்குப் பறந்து சென்றது. பாராண்டபுரத்து அரண்மனையைச் சுற்றிலும் சிட்டுக் குருவிகளின் படையெடுப்பு. 

அரண்மனை வேலைக் காரர்களால் வேலை செய்ய முடிய வில்லை. தோட்ட வேலை செய்பவன் முகத்தில் நான்கு சிட்டுக் குருவிகள் மோதின. 

அவன் கோபத்தோடு கல்லெடுக்கக் கையை நீட்டும்போது கையில் நான்கு சிட்டுக் குருவிகள் கொத்தின. அவன் நிமிரும் போது கன்னத்தில் கொத்தின. குனியும்போது தலையில் கொத்தின. 

இப்படி ஒவ்வொரு  அரண்மனை  வேலைக்காரரைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான குருவிகள் சூழ்ந்து கொண்டு தொல்லை கொடுத்தன. 

தோட்டக்காரர்கள் செடிகளுக்கு நீர் ஊற்ற முடியவில்லை. சேடிகள் பூப்பறிக்க முடியவில்லை. சமையல்காரர்கள் அடுக்களை யில் வேலை செய்ய முடியவில்லை. காவல் வீரர்கள் பாராக் கொடுக்க முடியவில்லை. 

அமைச்சர்கள் அரண்மனைக்குள் நுழையவே முடியவில்லை. 

அரண்மனை முழுவதும் ஒரே கூச்சலும் கூக்குரலும் அழுகுரலும் நிறைந்தன. அரண்மனையைச் சுற்றிலும் சிட்டுக் குருவிகளின் ஆங்காரமான போர்க்குரல். 

பாராண்டபுரத்து மன்னர், இந்த நிலையைப் பற்றிக் கேட்டவுடன், என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக உப்பரிகைக்கு வந்தார். 

உப்பரிகைத் தளத்தில் அரசர் வரவை எதிர் பார்த்துக் கொண்டு ஆயிரம் சிட்டுக் குருவிகள் காத்திருந்தன. 

மன்னர் தலையைக் கண்டவுடன் ஒரே யடியாக அவர் மீது பாயத் துடித்துக் கொண்டு நின்றன. 

ஆனால் மன்னர் முன்னேற்பாடாக இரும் புக் கவசம் அணிந்து வந்தார். முகத்துக்கு நேரே கண்ணாடி அமைந்த தலைக் கவசத்து டன் அவர் வெளியே வந்தார். 

உப்பரிகையின் மேலிருந்து அரண்மனை யின் முன்புறத்தை நோக்கினார். எங்கு பார்த் தாலும் சிட்டுக்குருவிகள். இலட்சக்கணக்கான சிட்டுக் குருவிகள். 

அரசர் அந்தச் சிட்டுக் குருவிகளின் கூட்டத்தை நோக்கிப் பேசினார். 

‘சிட்டுக் குருவிகளே, நீங்கள் ஏன் இப்படிக்கூட்டமாகப் படையெடுத்து வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு என்ன குறை? தண் ணீர் கிடைக்கவில்லையா? தானியம் கிடைக் கவில்லையா? ஏன் இப்படிக் கூட்டமாக வந்து அரண்மனையைச் சூழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்று பாராண்டபுர மன்னர் கேட்டார். 

‘எங்கள் தலைவன் வருகிறார்! சிட்டரசன் வருகிறார்! உங்களுக்கு அவர் பதில் சொல்லுவார்!’ என்று ஐந்தாறு சிட்டுக் குருவிகள் கத் தின. அப்போது தொலைவில் வானவெளி யில் ஒரு பூம்பல்லக்கு மிதந்து வருதது தெரிந்தது. 

பாராண்டபுர மன்னர் நிமிர்ந்து பார்த்தார். 

கொடிகளால் பின்னிய ஒரு பூம்பல்லக்கு வானில் மிதந்து வருவதுபோல் தோன்றியது. உண்மையில் அது வானில் தானாக மிதந்து வரவில்லை. ஐம்பது சிட்டுக் குருவிகள் தங் கள் அலகுகளால் பற்றிக் கொண்டு ஒரே சீராகப் பறந்து வந்தன. 

சாமந்திப் பூக்களால் ஆகிய அந்த மஞ்சள் பல்லக்கில் ரோஜாப் பூவினால் ஒரு உயர்ந்த பீடம் அமைக்கப் பட்டிருந்தது. அந்தப் பீடத் தின் மீது மிகுந்த பெருமிதத்தோடு ஒரு சிட்டுக் குருவி உட்கார்ந்திருந்தது. அதன் சிறிய கண்களின் கூரிய பார்வையால், அது உலகத்தையே அடக்கியாளக் கூடிய தோற் றத்தைப் பெற்றிருந்தது. இலட்சக் கணக்கான சிட்டுக் குருவிகளுக்குத் தலைவனாய் இருக்க கூடிய அதன் தகுதிக்கு அந்தப் பார்வையே சான்றாக அமைந்திருந்தது. 

சிட்டரசனாகிய அந்தச் சிட்டுக் குருவி ஏறி வந்த பூம்பல்லக்கு உப்பரிகையின் மீது வந்து இறங்கியது. அது இறங்கிக் கொண் டிருந்த போதே, சுற்றிலும் இருந்த சிட்டுக் குரு விகள் “சிட்டரசன் வாழ்க! சிட்டரசன் வாழ்க” என்று முழக்கம் எழுப்பின. 

பூம்பல்லக்கு உப்பரிகைத் தளத்தின் மீது இறங்கியவுடன், சிட்டரசன் மெல்லக் கீழே இறங்கியது. பாராண்டபுர அரசன் எதிரில் வந்து நின்றது. 

‘மன்னர் பிரானே, வணக்கம்’ என்று தலை வணங்கியது. 

ஒரு சிட்டுக் குருவிக்கு எவ்வளவு பெருமை என்று மனத்துக்குள் மனத்துக்குள் அதைத் திட்டினாலும், அதை மறைத்துக் கொண்டு பாராண்டபுர மன்னர் அமைதியாகவே பேசினார். 

‘சிட்டரசனே, இது எல்லாம் என்ன? எதற்காக எல்லாச் சிட்டுக்களையும் அனுப்பி என் அரண்மனையை அல்லோல கல்லோலப் படுத்துகிறாய்?’ 

‘எனக்கும் உனக்கும் என்ன பகை?’ என்று மன்னர் கேட்டார். 

‘மன்னர் பெருமானே, இந்த உலகத்தில் கடவுள் மனிதர்களை மட்டும் படைக்க வில்லை. விலங்குகளையும், நீர் வாழ்வனவற் றையும் பறவைகளையும் படைத்திருக்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது?’ என்று சிட்டரசன் கேட்டது. 

‘ஏ, சிட்டுக் குருவியே, நீ என்ன பள்ளிக் கூடம் நடத்துகிறாயா? இது என்ன பாடம் நடக்கிற வகுப்பா?’ என்று கேட்டார் மன்னர். 

‘அரசே, நீங்கள் பதிலைச் சொல்லுங்கள். இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் தான் சொந்தமா?’ என்று கேட்டது சிட்டு. 

‘இல்லை, இல்லை. எல்லாருக்கும் தான் சொந்தம். உயிர்கள் அனைத்தும் வாழ்வதற் காகத் தான் இறைவன் இந்த உலகில் எல்லா ரையும் படைத்திருக்கிறான். எல்லாரும் வாழப் பிறந்தவர்களே? இதில் ஐயமேயில்லை’ என்றார் மன்னர். 

‘மன்னர் பெருமானே, தாங்கள் தங்கள் மகள் விளையாடுவதற்காக ஒரு சோலை உருவாக்கினீர்களாம். அதில் வாழும் எங்கள் சிட்டுக் குருவிகளை விரட்டியடிக்கச் சொன்னீர்களாம். உங்கள் மகள் விளையாடும் சோலையில் எங்கள் குருவிக் குஞ்சுகள் விளையாடக் கூடாதென்று சொன்னீர்களாம். உங்கள் ஆட்கள் எங்கள் கூடுகளையெல்லாம் கலைத்து விட்டார்களாம். இதற்கு நீதி கேட்கவே நாங்கள் இங்கு கூடி வந்துள்ளோம்’ என்று சிட்டரசன் கூறியது. 

பாராண்டபுரத்து மன்னர் ஊமையானார். சிறிது நேரம் கழித்து அவர் சிட்டரசனைப் பார்த்து, 

‘நான் நீதி தவறி விட்டேன். மன்னன் என்ற ஆங்காரத்தால் மனந்தெளியாமல் இந்தக் கட்டளையைப் பிறப்பித்துவிட்டேன். 

‘சிட்டரசனே, இனிமேல் நான் மட்டும் அல்ல, என் ஆட்சியில் உள்ள யாரும் இவ் வாறு நடந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்கி றேன். இறைவன் படைப்பில் எல்லா உயிர் களும் ஒரு மாதிரி தான் என்ற உண்மையை நான் மறக்க மாட்டேன். நீயும், உன் குருவிக் குலமும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். என் அன்பின் அடையாள மாக, இன்று அரண்மனைக் களஞ்சியத்தில் உள்ள தானியங்களை உங்களுக்கு வாரி வழங்க விரும்புகிறேன். எல்லோரும் விருந் துண்டு மகிழ்ச்சியாக உங்கள் கூடுகளுக்குத் திரும்ப வேண்டுகிறேன்!’ என்றார். 

உடனே எல்லாச் சிட்டுகளும் ‘பாராண்ட புரமன்னர் வாழ்க!’ என்று கத்தின. 

தானிய விருந்து உண்ட பின் தத்தம் கூடுகளுக்கு மகிழ்ச்சியோடுபறந்து சென்றன. சிட்டரசனும் தன் பூம்பல்லக்கில் ஏறிக்கொல்லி மலைக்குத் திரும்பியது. 

– பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1988, தமிழாலயம் வெளியீடு, சென்னை.

நாரா.நாச்சியப்பன் நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *