சாண் நீளமா? முழம் நீளமா?
கதையாசிரியர்: நெ.சி.தெய்வசிகாமணி, மரியாதைராமன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 13, 2025
பார்வையிட்டோர்: 10
(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வையாபுரி வட்டிக்குக் கடன் கொடுப்பவர். அவரிடம் முருகேசன் என்ற வியாபாரி நூறு வராகன்கள் கடன் வாங்கியிருந்தான்.
வையாபுரி முருகேசனிடம் பலமுறை அலைந்தார். முருகேசனோ வட்டியும் தரவில்லை; அசலையும் தரவில்லை.
ஒருநாள் வையாபுரி முருகேசனிடம் தன் பணத்தை வட்டியுடன் சேர்த்து உடனடியாகக் கொடுத்துவிடுமாறு கடுமையாகக் கேட்டார்.
“நாளைய தினம் காலையில் நான் வயலில் வேலை செய்து கொண்டிருப்பேன். அப்பொழுது கடன் பத்திரத்தைக் கொண்டு வாரும். அசலும் வட்டியும் கொடுத்து விடுகிறேன்” என்றான் முருகேசன்.
மறுநாள் வையாபுரி கடன் பத்திரத்துடன் முருகேசனின் வயலுக்குப் போனார். வையாபுரியைப் பார்த்த முருகேசன் ‘உங்கள் கடனைத் தீர்த்து விடுகிறேன். கடன் பத்திரத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்களா?” என்று கேட்டான்.
“இதோ கொண்டு வந்திருக்கிறேன்” என்று கூறிய வையாபுரி தம் மடியில் இருந்த கடன் பத்திரத்தை எடுத்து முருகேசனிடம் காண்பித்தார்.
உடனே முருகேசன் சட்டென்று அவர் கையில் இருந்த கடன் பத்திரத்தைப் பிடுங்கிச் சுக்கல் சுக்கலாகக் கிழித்தான். பக்கத்தில் குவிக்கப் பட்டிருந்த காய்ந்த சருகுகள் நெருப்புப் பிடித்து எரிந்து கொண்டிருந்தன. அந்த நெருப்பில் துண்டு துண்டாகக் கிழித்த கடன் பத்திரத்தைப் போட்டு விட்டான் முருகேசன்.
இதைப் பார்த்துத் திகைத்துப் போய்விட்டார் வையாபுரி.
“பணமா வேணும் உனக்கு? இனி உனக்கு ஒரு காசு கூடத் தர முடியாது. எங்கே போய் வேண்டுமானாலும் பிராது செய்து கொள்” என்று அகம்பாவத்துடன் கூறினான் முருகேசன்.
வையாபுரிக்கு ஒன்றும் புரியவில்லை. கடன் பத்திரம் இல்லாமல் அவன் மேல் பிராது செய்ய முடியாது என்பது தெரியும். இருந்தாலும் நேரே மரியாதைராமனிடம் போய் முறையிட்டார்.
அவர் சொன்னதை முழுவதும் கேட்ட மரியாதை ராமன்! “முருகேசன் எழுதிக் கொடுத்த கடன் பத்திரம் எவ்வளவு நீளம் இருக்கும்?” என்று கேட்டான்.
“ஒரு சாண் நீளம்தான் இருக்கும்” என்றார் வையாபுரி.
“நாளைய தினம் இதே கேள்வியை உங்களிடம் கேட்கும்போது ஒரு முழ நீளம் இருக்கும் என்று நீங்கள் சொல்ல வேண்டும்” என்றான் மரியாதைராமன்.
வையாபுரியும் மரியாதைராமன் சொன்னபடி மறுநாள் வழக்கு மன்றத்திற்கு வந்தார்.
மரியாதைராமன் முருகேசனிடம், “நீர் வையாபுரியிடம் நூறு பணம் கடன் வாங்கியதுண்டா?” என்று கேட்டார்.
“இல்லை, அய்யா!” என்றான் முருகேசன்.
“நீ கடன் வாங்கிக் கொண்டு கடன் பத்திரம் கூட எழுதிக் கொடுத்ததாக வையாபுரி சொல்கிறாரே!”
“பொய், நான் இவரிடம் கடன் வாங்கவுமில்லை. என் பத்திரம் எழுதிக் கொடுக்கவுமில்லை” என்றான் முருகேசன்.
மரியாதைராமன் வையாபுரியின் பக்கமாகப் பார்த்து, “இவர் உம்மிடம் கடன் வாங்கிக் கொண்டு கடன் பத்திரம் எழுதிக் கொடுத்ததாகச் சொல்கிறீர்களே, அதன் நீளம் எவ்வளவு இருக்கும்?” என்று கேட்டான்.
“ஒரு முழ நீளம் இருக்கும்” என்று கையினால் அளந்து காட்டினார் வையாபுரி.
இதைப் பார்த்த முருகேசன், “ஏன் புளுகுகிறாய்? நீ கொடுத்த நூறு ரூபாய் பணத்துக்கு முழ நீளப் பத்திரம் எழுதிக் கொடுப்பார்களா? ஒரு சாண் நீளம் கூட இருக்காது. முழநீளம் இருக்கும் என்று புளுகுகிறாயே!” என்று ஆவேசமாகக் கூறினான்.
இதைக் கேட்ட மரியாதைராமன், “ஆமாம் அவரை நான்தான் அப்படிப் புளுகச் சொன்னேன். அப்படி அவர் புளுகியதால்தான் உன் வாய் மூலமாகவே உண்மை வந்து விட்டது. உன் போன்ற ஏமாற்றுக்காரர்களைச் சும்மாவிடக் கூடாது” என்று கூறியதுடன், வையாபுரிக்குச் சேர வேண்டிய நூறு பணத்தை வட்டியுடன் அவன் சேர்த்துக் கொடுக்க வேண்டுமென்றும், வாங்கிய பணத்தை இல்லையென்று சொன்னதுடன், எழுதிக் கொடுத்த கடன் பத்திரத்தைக் கிழித்துத் தீயில் போட்டுப் பொசுக்கி யதற்காக ஐம்பது கசையடிகள் பெற்றுக் கொள்ள வேண்டு மென்றும் தீர்ப்பளித்தான்.
– மரியாதைராமன் கதைகள், முதற் பதிப்பு: ஏப்ரல் 1981, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை.
| பதிப்பாசிரியர் முகவுரை (மரியாதைராமன் கதைகள் - பதிப்பியல் நோக்கில சில குறிப்புகள்) மரியாதைராமன் கதைகள் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. இவ்வேளையில், முதற்பதிப்பு வெளிவந்த காலத்திற்குப்பின் இக்கதைகள் தொடர்பாக என்னால் தொகுக்கப்பெற்ற சில அரிய குறிப்புகளை இங்குப் பதிவுசெய்கிறேன். அவற்றோடு இப்பதிப்பினைக் குறித்தும், மரியாதைராமன் கதைப்பதிப்புகள் குறித்தும் குறிப்பிடத் தக்க செய்திகளையும் இங்கே அளிக்கின்றேன். இச்செய்திகள் இக்கதையிலக்கிய ஆர்வலர்க்கும் அன்பர்களுக்கும் பயன்மிக நல்கும் பான்மையனவாகும். புகழ்மிகு கதையிலக்கியங்கள் : விக்கிரமாதித்தன்…மேலும் படிக்க... |