கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை நாடகம்
கதைப்பதிவு: September 1, 2025
பார்வையிட்டோர்: 2,382 
 
 

(1956ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாடக பாத்திரங்கள்

மாணிக்க முதலியார் – சபாபதி முதலியார் தகப்பன்
சபாபதி முதலியார் – மாணிக்க முதலியார் பிள்ளை
குப்புசாமி முதலியார் – சபாபதி முதலியார் மாமனார் 
கிருஷ்ணசாமி – சபாபதி முதலியார் மைத்துனன் 
முருகேசம்  – சபாபதி முதலியாரின் சினேகிதர்  
குமரகுரு – சபாபதி முதலியாரின் சினேகிதர் 
நரசிம்மாச்சாரி – சபாபதி முதலியாரின் சினேகிதர் 
சுந்தரமூர்த்திப் பிள்ளை – ஓர் பெரிய மனுஷ்யன்
சபாபதி – சபாபதிமுதலியாரின் வேலையாள் 
சின்னசாமி முதலியார் – தமிழ் வாத்தியார் 
நாகேஸ்வர ஐயர் – பாடகர்கள் 
கோபிநாத் ராவ் – பாடகர்கள் 
கோவிந்தப் பிள்ளை – பாடகர்கள் 
திரிபுரம்மாள் – சபாபதி முதலியார் தாயார் 
தெய்வயானை அம்மாள் – சபாபதி முதலியாரின் மாமியார் சினேகிதர்கள், பிராமணன் முதலியவர். 

கதை நிகழ் இடம் :- சென்னை, திருவல்லிக்கேணி 

குறிப்பு: எனது நாடகங்களில் வரும் பெயர்களெல்லாம் புனைப் பெயாகளேயொழிய ஒருவரை குறிப்பனவல்ல. 

சபாபதி

(முதல் பாகம்)

முதல் அங்கம்

முதல் காட்சி

இடம்:- சென்னை: திருவல்லிக்கேணியில் மாணிக்க முதலியார் வீட்டில் ஓர் அறை. 

சபாபதி முதலியார் வருகிறார் 

ச.மு. பைஜோவ்! (by Jove) நாலேகால் மணியாயிபோச்சி. இன்னம் ஓர்த்தரும் வரலே. இந்த இண்டியன்சு (Indians) களுக்கு பங்க்சுயாலிடி (punctuality) இண் ரதே தெரியரதில்லே; யூரோபியன்ஸா (Europeans) யிருந்தா, நாலரை மணியிண்ணா, நாலு மணிக்கெல் லாம் சரியா வந்தூடமாட்டாங்களா! யாரடா அங்கே? சபாபதி! 

சபாபதி மெல்ல வந்து கதவின் ஓரம் நிற்கிறான். 

சபாபதி! – அடே! என்னாடா இது? நான் உன்னெ கூப்பிடறேன், இங்கே நிண்ணுகினு, பேசாதிருக்கிறயே! 

ச. இல்லேப்பா நீ வந்து உன்னெ கூப்பிட்டெ – இண்ணு நெனச்சிக்கினே அப்பா! 

ச.மு.வாட் நான்சென்ஸ்! (what nonsense) நான் என்ன மாடா என்னெ கூப்டுக்குவேன்? 

ச. நீ – உன்னயே கூப்பிடமாட்டே-அல்லா? ஆமாம்பா, தப்புதான். 

ச.மு. இங்கே வாடா இப்படி- நம்ப ரெண்டு பேருக்கும் ஒரே பேரா இருக்கிறத்துலெ, பெரிய ந்யூசென்சா (nuisance) இருக்குது; உம் பேரெ நீ மாத்திகோ. 

ச. அதென்னமாப்பா முடியும்?எம்பேரெ நானே மாத்திக்க முடியுமா? 

ச.மு. ஏண்டா முடியாது ? 

ச. நானே என்னமாப்பா மாத்திகிறது? 

ச.மு. ஏன் வேறே பேர் வைச்சிக்கோ. 

ச. ஓ! அப்படி சொல்ரையோ – ஆனா – அதுக்கு ரொம்ப செலவு புடிக்குமே அப்பா. 

ச.மு. அதுக்கென்னாத்துக்குடா செலவு ? 

ச. எனக்கு பேர் வைச்சப்போ, எங்க பந்துகோலுங்களுக் கல்லாம் எவ்வளவு சாப்பாடு கீப்பாடெல்லாம் போட்டாங்களாமே. அந்தமாதிரி செய்யத் தேவலையா? 

ச.மு. அதுக்கு எவ்வளவு புடிக்கும்? 

ச. ஒரு அஞ்சி ரூபாயாவது புடிக்காதா? 

ச. மு. அம்மாவே கேட்டு அஞ்சி ரூபா வாங்கிதர்ரேன் – பேரெ மாத்திக சீக்கிரம். 

ச. அப்படியே ஆவுட்டும் அப்பா. 

ச.மு. ஊம் – என்னாண்ணு பேரே மாத்திக்கரே? 

ச. ஊம் – நானு – ஊம் – ரத்தினசபாபதி இண்ணு பேரு வைச்சிக்கிறேம்பா. 

ச.மு. வாட் நான்சென்ஸ்!  (what nonsense) சபாபதியே ஒதவாது இண்ணா, ரத்தின சபாபதி என்னாடா அது! அதெல்லாம் ஒதாவது. வேறே என்னமானா பேர் வைச்சிகணும். 

ச. அப்படியே ஆவட்டும்பா. 

ச.மு. சரிதான், நீ போயி தெருவண்டெ பாரு, என் சினேகிதருங்க யாரானாலும் வர்ராங்களா இண்ணு. [போகிறான்]

ச. இதோ வர்ராரப்பா ஒருத்தரு. 

முருகேசம் வருகிறான். 

மு. குட் ஈவ்னிங், பிரதர்.(good evening brother) 

ச.மு. குட் ஈவினிங், வாங்க வாங்க! – என்னா பிரதர், இவ்வளவு லேட்டா (late) வந்தைங்களே? நான் நாலு மணிக்கெல்லாம் வரச்சொல்லலே? 

மு. (கடியார சங்கிலியை இழுத்து, கடியாரத்தைப் பார்ப்பதுபோல் பார்த்து) ஓ அஞ்சி நிமிஷம் லேட்டா போச்சி! 

ச.மு. அஞ்சி நிமிஷமா? இரவது நிமிஷமாச்சி – உங்க கடியாரம் ஸ்லோவா (slow) போராப்போலே யிருக்குது- காட்டுங்க பார்க்கலாம். 

[முருகேசத்தின் கடியார சங்கிலியை இழுக்க, சாவிக்கொத்து மாத்திரம் வெளிப்படுகிறது.] 

என்னா பிரதர்! கெடியாரம் எங்கே? 

மு. கெடியாரம்…. ரிபேருக்கு (repair) கொடுத்திருக்கிறேன்.

ச.மு. கொஞ்ச நாழிக்கி முன்னெ – என்னமோ மணி பாத்து சொன்னைங்களே. என்னமா சென்னைங்க? 

மு. சும்மா, ஒரு கெஸ் (guess) பண்ணென். 

ச.மு. சாவி கொத்தெ பாத்து! 

குமரகுரு வருகிறான். 

கு. எக்ஸ்கியூஸ் மி (excuse me) பிரதர் – நான் வர்ரத்துக்கு கொஞ்சம் நேரமாச்சி – நேத்து நீங்க கொட்டெ பாக்கு கேட்டைங்களே, அத்தெ நல்லதா பொறுக்கி வாங்கி யாரத்துக்கு கொஞ்சம் நேரமாச்சி. 

ச.மு. வேணாம் பிரதர், நீங்களே வைச்சிகிங்க, வீட்லெ நேத்து சாயங்காலம் பஸ்டுகிளாஸ் (first class) கொட்டெ பாக்கு வாங்கி யிருக்கிறாங்க – கொஞ்சம் கொண்டுவரச் சொல்ரேன் பாருங்க – அடே சபாபதி! 

[சபாபதி மறுபடி வருகிறான்.] 

அம்மா கிட்டேபோயி, நேத்து சாயந்திரம் வாங்கனாங்களே, அந்த கொட்டே பார்க்குலே கொஞ்சம் வாங்கி கினு வா – சீக்கிரம். 

[சபாபதி போகிறான்.]

கு. என்னா பிரதர் நேத்து மத்யானம் என்னமா யிருந்துது?

ச.மு.காபி (Coffee) எல்லாம் நண்ணாயிருந்துது, அந்த உப்பு மாவுலே தான் கொஞ்சம் உப்பு அதிகமா போட்டூட்டான். 

கு. அதெல்லா பிரதர். அரித்மெடிக் (arithmetic) பேபரெ பத்தி கேட்டேன். 

ச.மு. அதுவா? க்வைட் ஈசி (quite easy), ஒன்பது சம்ஸ் கரெக்ட் (sums correct) 

கு. எட்டு சம்ஸ்தானே கொடுத்திருந்துது? 

ச.மு. ஓ!–அது சொல்ரைங்களோ அதுலே ஒரு சம்முக்கு ரெண்டு ஆன்சர் (answer) வந்தது பாருங்கோ, அத்தெ சேர்த்து ஒன்பது கணக்கு பண்ணிவுட்டேன். 

[சபாபதி பாக்கைக் கொண்டு வருகிறான்.] 

ச.இந்தாப்பா. 

ச.மு. ஏண்டா! டர்டி பெக்கர்! (dirty beggar) கையிலேயா எடுத்துவர்ரது? உன் டர்டி ஹான்ட்ஸ்லே (dirty hands) கொண்டுவரக்கூடாது இண்ணு எத்தினிதரம் சொல்ரது ? 

ச. நீ சொல்லவே இல்லையட்பா. 

ச.மு. எல்லாம் சொல்லி யிருக்கிறேன், இனிமேல என்னா கொண்டாரச் சொன்னாலும், ஒரு தட்டுலே வைச்சி கொண்டு வரணும். 

ச. சரிதாம்பா. 

ச.மு. பிரதர்ஸ், இந்த பாக்கெ கொஞ்சம் டிரை (try) பண்ணி பாருங்க. 

மு. பஸ்டுகிளாஸ்! 

கு. நண்ணா இருக்குது பிரதர். 

ச.மு. ஏன் ருக்மாங்கதம் இன்னம் வல்லே? எப்பவும் இப்படித்தாம் பிரதர் அவன். எந்நேரமும் புஸ்தகம் தான், ஹி ஹார்ட்லி ஓர்க்ஸ் (he hardly works) பிரதர் – கொஞ்சம்கூட எக்சர்சைஸ் (exercise) எடுத்து கிறது இல்லெ – நாம்ப போயி டெனிஸ் (tennis) பிகின் (begin) பண்ணுவோம். அவன் வரட்டும் அப்புறம் அடே சபாபதி என் டெனிஸ் ஷூஸ் (shoes) கொண்டுவா சீக்கிரம் 

[சபாபதி போகிறான்]

பிரதர் முருகேசம், உங்கள் பாட் (bat) கொண்டு வந்திருக்கைங்களா? 

மு. இதோ கொண்டு வந்திருக்கிறேன் பிரதர். 

ச.மு. ஏது பிரதர், நியூ (new) வா யிருக்குது? என்னா பிரதர், றிஸ்டு பாண்டெ (wrist band) பீச்ச கையிலெ கட்ரைங்களே? நீங்க என்னா லெப் ஹாண்டிலெயா (left hand) ஆடரைங்க? 

மு. இல்லே பிரதர், (brother) – சோத்து கையிலே தான் ஆடரேன் – ஆனாலும் டுவிஸ்டு (twist) பண்ணும் போது இந்த கையிலெ சுளுக்கிகிது, அதுக்காக-

சபாபதி ஒரு வெள்ளித் தட்டில் பந்தாடுகிற ஜோட்டை வைத்துக் கொண்டு வருகிறான். 

ச.மு. வாட் நான்சென்ஸ்! (what nonsense) என்னாடா இது? ஜோட்டே தட்டுலே வைச்சி கொண்டாரையே! 

ச. நீதானே அப்பா சொன்னே, எத்தெ கொண்டாரச் சொன்னாலும் ஒரு தட்டுலே வைச்சி கொண்டாரச் சொல்லி. 

ச.மு. ஸ்டுபிட் கூஸ்! (stupid goose!) இதுகூடவாடா தெரி யாது? எதுவானா திண்ரவஸ்து கொண்டாரச் சொன்னா தட்டுலே வைச்சி கொண்டாரணு மிண்ணா, ஜோட்டே கூடவா, தட்டுலே வைச்சி கொண்டாரச் சொன்னேன்? 

ச. எனக்கென்னமாப்பா தெரியும், நீ சொல்லிக் கொடுத்தா அல்லவோ தெரியுமப்பா. 

ச.மு. இதுகூடவா சொல்லிக்கொடுக்கணும்? இனிமேலே ஜோட்டெ தட்டுல வைக்காதே, போ. 

ச. இனிமேலே ஜோட்டே தட்டுலே வைக்கலேப்பா – போரேம்பா என்னமோ இங்கிலீஷ்லெ சொன்னையே – டூபிட் கூஸ் இண்ணா அதுக்கு அர்த்தம் என்னாப்பா! 

ச.மு. ஸ்டுபிட் கூஸ் (stupid goose) இண்ணா ரொம்ப கெட்டிக்காரன் இண்ணு அர்த்தம்,போ.

[சபாபதி போகிறான்.]

என்னா போங்க பிரதர், இவனெ கட்டிகினு அழரது பெரிய ந்யூசென்ஸா (nuisance) யிருக்குது. அண்ணா கிட்ட சொல்லி இவனெ டிஸ்மிஸ் (dismiss) பண்ணி விடலாம் இண்ணு பாத்தா, எனக்கு மனசு வரல்லெ சின்னபோது மொதல் என்னோடே வளர்ந்து வந்திருக்கிறான்,- ஸ்டுபிட் (stupid) டா யிருந்தாலும், க்வைட் ஆனஸ்டு சாப் (quite honest chap) – வாங்க பிரதர்ஸ், போகலாம் – ரொம்ப நாழியாயி போச்சி! 

[வெளியே பார்த்து]

அட்டடே ! என்னா தூர்ராப்போலெ யிருக்குது! மழெ வந்தூட்டுது பிரதர் – இண்ணைக்கு டெனிஸ் (tennis) முடியாது – சீ! 

கு. ஆமாம் பிரதர் வெரி ஹெவி ரெயின் (very heavy rain). ஆடமுடியாது இனிமேலெ. 

ச.மு. அப்போ, வேறே என்னா செய்யலாம்? கார்ட்ஸ் (cards) ஆடலாமா? 

 மு. ஆமாம் பிரதர். 

ச.மு. அடே சபாபதி! 

[சபாபதி வருகிறான்.] 

கார்ட்ஸ் கொண்டா சீக்கிரம். 

[சபாபதி போகிறான்.] 

நம்ப மூணுபேர்தா இருக்கிறோமே – முன்னூத்திநாலு – ஸ்டுபிட் கேம் (stupid game) தான் ஆடமுடியும். 

சபரபதி ஒரு போஸ்டு கார்டு (port card) எடுத்துக்கொண்டு வருகிறான்! 

ச.இந்தாப்பா. 

ச.மு. என்னாடா இது? இத்தெ கொண்டாந்தையே? 

ச. கார்டு கொண்டுவரச் சொன்னையே அப்பா. 

ச.மு. சத் கழுதை! கார்டு பாக் (cark pack) கார்டு பாக் தெரியாதா? 

ச. அதுவா? – இதோ கொண்டாரேம்பா. 

[போகிறான்.] 

ச.மு. இவனெ கட்டிகினு அழரது பெரிய கஷ்டமா போச்சி, எது சொன்னாலும் தப்பா செம்யரான்! 

சபாபதி ஒரு கார்பெட் பாக் (carpet bag) எடுத்துக்கொண்டு வருகிறான்.

ச. இதோ அப்பா! 

ச.மு. வாட் இடியட்! (what idiot) என்னாடா இத்தெ கொண்டாந்தையே! 

ச. கார்பெட்பாக் கொண்டாரச் சொன்னையே அப்பா. 

ச.மு. ஏண்டா? நான் கார்பெட் பாக் இண்ணு சொன்னேனா?

ச. நீ சும்மா கோவிச்சிக்காதெ அப்பா, இந்த இங்கிலீஷ் பாஷே எனக்கு நண்ணா அர்த்தமாவலெ – தமுழுலே சொல்லப்பா. 

ச.மு. கார்டு பாக்குக்கு தமிழ் என்னா பிரதர்? 

ச. என்னாப்பா. அது தெரியாதா ஒனக்கு?என்ன முட்டாளா இருக்கிறேப்பா! 

ச.மு. அடே ஸ்டுபிட் கூஸ்! பேசாதிரு. 

மு. காயிதக்கட்டு இண்ணு சொல்லுங்க பிரதர். 

ச. ஆ! அவருக்கு தெரியும்பா, அவர் கெட்டிக்காரப்பா! டூபிட் கூஸ்! அவரு! 

ச.மு. என்னாடா அவரை திட்ரையெ? கழுதை! 

ச. நான் எங்கேப்பா திட்டினேன்? கெட்டிக்காரருண்ணல்லவோ சொன்னேன்! டூபிட்கூஸ் இண்ணா, ரொம்ப கெட்டிக்காரன் இண்ணு நீதானே அப்பா சொன்னே.

ச.மு. மூடு வாயெ! தடிக்கழுதை! இன்னொருதரம் பேசனா உன்னெ டிஸ்மிஸ் (dismiss) பண்ணி உடுவேன் – நயினா கிட்ட சொல்லி. 

ச. இல்லெப்பா இல்லெப்பா? – நீ கோவிச்சிக்காதேப்பா. 

ச.மு. ஆனா – வாயெ மூடிகினு போயி – காயிதக்கட்டு – கொண்டா சீக்கிரம். 

ச. உம் பேசக் கூடாதல்லவா? 

[போகிறான்] 

ச.மு. பெரிய இடியட்டா (idiot) இருக்கிறான். இவனெ பயித்தியக்கார ஆஸ்பத்திரிக்கி அனுப்பிச் சூடலாமிண்ணா, நானு மாத்திரம் ஒண்டியா என்னமாப்பா போறது, நீயும் கூடவாப்பா இண்ரா! இவனெ என்னா செய்யரது? 

சபாபதி பெரிய காகிதக்கட்டு ஒன்றைக் கொண்டு வருகிறான்.

ச.மு. பாத்தைங்களா பிரதர் சொன்னத்துக்குச் சரியா செய்யரான்! ஏண்டா, இத்தெ வைச்சிகினு என்ன மாடா ஆடரது? 

ச. பேசலாமா அப்பா? 

ச.மு. பேசு. 

ச. நீ இஸ்பெட் காயிதம் தானே கேட்டே? அப்பவே நெனைச்சேம்பா, ஆனாலும் நீ பேசக்கூடாது இண்ணையே இண்ணு இத்தெ கொண்டாந்தேம்பா. 

ச.மு. போடா! இஸ்பெட் காயிதந்தான் கொண்டா சீக்கிரம். 

ச. இதோ கொண்டாந்தூட்டேம்பா. [விரைந்து போகிறான்.]

ச.மு . இவனெ கட்டிகினு அழரது போதுமிண்ணு போவுது!

சபாபதி சீட்டுக்கட்டை எடுத்துக் கொண்டு வருகிறான். 

ச. இத்தெ மின்னாளே சொல்லக்கூடாதாப்பா? 

ச.மு. கொடுடா இப்படி. [அதைக் குலுக்கிக்கொண்டே] நாலுபேர் இருந்தா சரியாயிருக்கும் ஆட்டம் – 

ச. அப்பா, எனக்கு கூட, இஸ்பெட் ஆடத் தெரியும்பா கொஞ்சம்- 

ச.மு. சத்! அதனப் பிரசங்கி ! -தெருவுலே போயி தெரிஞ்சவங்க யாரானாலுமிருந்தா இட்டுகுனு வா – நிக்காதே போ! 

[சபாபதி போகிறான்.] 

[சீட்டைக் குலுக்கிப் போட்டுக்கொண்டு] நாலாவது கை வர்ர வரைக்கும் முன்னூத்தி நாலுதான் ஆடுவோம். 

சபாபதி மறுபடி விரைந்து வருகிறான். 

ச. அப்பா! அப்பா! நாலாவது கை ஆப்டுது அப்பா இதோ இட்டாந்தேம்பா! 

சின்னசாமி முதலியார் மெல்ல வருகிறார். 

சி. அப்பேன் தம்பி 

ச. மு. யாருடா அது? 

ச. தமிழ் வாத்தியாரப்பா 

ச.மு. [ஒரு புறமாக] ஏண்டா! இவரெ யாரடா இட்டாரச் சொன்னது? 

ச. தெரிஞ்சவங்க யாரையானாலும் இட்டாரச் சொன்னை யேப்பா. 

சி. அப்பேன், என்னை என்னத்திற்குக் கூட்பிட்டே? 

ச.மு. இதோ உக்காருங்க வாத்தியார். 

[பரபரப்புடன் சீட்டையெல்லாம் சேர்த்து வைத்து விட்டு தன் சிநேகிதர்களுக்குக் கண்ணால் சைகை செய்து அவர்களை அனுப்பி விடுகிறான்.]

சி. நம்ம ஆள் வந்து என்னமோ ஒரு கை குறைவா யிருக்குது உங்களெ அவசரமா அழைக்கிறாங்க, இண்ணு சொன்னான் உடனே வந்தேன்; அதென்ன குறைவாயிருக்குது? 

ச.மு. ஒரு பாட்டுக்கு கொஞ்சம் அர்த்தம் குறைவாயிருக்குது தெரியலே அதுக்காக தமிழ் வாத்தியார் போனா அழைச்சிகினுவா, அர்த்தம் கேக்கணும் இண்ணு சொல்லி அனுப்பிச்சா, இந்த தடிக்கழுதை தப்பா சொன்னான்! 

ச. நானாப்பா தடிக்கழுதெ? 

ச.மு. சத் பேசாதிரு! வாயெ தெறந்தையோ பாரு! 

சி. என்ன பாட்டப்பேன் அது? – இந்தப் புத்தகத்திலா? 

[சீட்டுக்கட்டை எடுக்கப் பார்க்கிறார்] 

ச.மு. இல்லே! இல்லே! 

[அதை எடுத்துக்கொண்டு] 

திருவாசகத்துலே “நாடகத்தால் உன்னடியார் போல்” என்ற பாட்டு. 

சி. ரொம்ப சுலபமாச்சே – சொல்றேன் கேள் – நாடகத்தால் – நாடகத்தால், உன்னடியார் உன்னடியார், போல் — போல, நான் நானாகப்பட்டவன், அடித்து – அடித்து, வீடகத்தே – வீடகத்தே, புகுந்திடுவான் – புகுந்திடுபவன், மிகப் பெரிதும் – ரொம்ப பெரிதாகவும், விரைகின்றேன் – விரைக்கின்றேன், ஆடகச் சீர்- ஆடமாகிய சீர், மணிக்குன்றே – மணியாகிய குன்றே, இடையரா – இடையராகிய, அன்புனக்கு – அன்புனக்கு – 

[பின்புறமாக மாணிக்கமுதலியாா மெல்ல வந்து நிற்கிறார்] 

என்னூடகத்தே – என் வூட்டினுடைய அகத்தே, நீன்றுருக – நின்றுருக, தந்தருளேன் – தந்தருளேன், உடையானே உடையவனே அவ்வுளவுதான் அர்த்தம், ரொம்ப சுலபமாச்சே. 

மா. ரொம்ப அழகா யிருக்குது! இந்த மாதிரி அர்த்தம் சொன்னா, அவனுக்குத் தமிழ் நண்ணா வந்தூடும்! 

சி. ஆ! – பெரிய மொதலியாரவாளா? பாக்கலே — ஏ! மன்னிக்கணும். 

மா. மன்னிக்கரது அப்பறம் இருக்கட்டும், இந்த மாதிரி நீங்க பாடஞ்சொல்லி அழுதா, அவன் பாஸ் பண்ணாப் போலெத்தான்! ரெண்டு வரி தமிழ் சரியா எழுதத் தெரியலே- 

சி. இல்லைங்க – நீங்க ஒரு வியாசம் எழுதச் சொன்னைகளே அது பதினெட்டு பக்கம் சரியாக எழுதினதாகச் சொல்லுச்சே அப்பென். 

மா. அத்தெ கேக்கத்தான் வந்தேன்; அந்த பதினெட்டு பக்கம் எழுதின அழகே! [வியாசத்தை அவர் கையில் கொடுக்கிறார்] 

சி. [வாங்கிக்கொண்டு] இருக்குங்க, பதினெட்டு பக்கம் இருக்கும். 

மா. பதினெட்டு பக்கம் இருக்கரது சரிதான் படிச்சிப் பாருங்கையா. 

சி. [படிக்கிறார்] “இருப்புப்பாதை வியாசம் – இருப்புப்பாதை என்றால், இருப்புப்பாதை என்று அர்த்தம்”- 

மா. சரிதான், நீங்க அர்த்தம் சொல்லிக் கொடுக்கிற மாதிரி தான் அவனும் எழுதரான் – அப்புறம். 

சி. [படிக்கிறார்] “மட்ராசில் சௌத் இண்டியன் றெயில்வே, மட்ராஸ ரெயில்வே என்று, ரெண்டு றெயில் வேக்க ளிருக்கின்றன” 

மா. என்னா ஐயா இது தமிழா ? – அப்புறம் படிங்க. 

சி. [படிக்கிறார்] ‘சௌத் இண்டியன் ரெயில்வே மட்ராசிலிருந்து புறப்பட்டு குப் குப் குப் குப்!-குப் குப்- குப்”…அப்பேன்! இது என்னா அப்பேன்?… 

ச.மு. உங்களுக்கு சரியா படிக்கத் தெரியலே வாத்தியார் – நான் படிக்கிறேன் பாருங்க. 

[படிக்கிறான்] 

‘சௌத் இண்டியன் றெயில்வே,மட்ராசிலிருந்து புறப்பட்டு, குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப்-‘ 

சி. அப்பேன், என்னாப்பேன் இந்த குப் குப்? 

ச.மு. பொகை போறது. 

சி. ஓ – எவ்வளவு தூரம் போவது? 

ச.மு. செங்கல்பட்டு வரைக்கும். 

சி. என்னா! இந்த குப் குப் செங்கல்பட்டு வரைக்குமா போவுது? 

ச.மு. இல்லாப்போனா றெயில் நிண்ணுபூடாதா? 

மா. பாத்தைங்களா வியாசம் எழுதின் அழகெ? 

சி. [பக்கங்களைத் திருப்பி பார்த்து] அப்பேன், அந்த குப் குப் தவிர, வேறென்னமானா எழுதி இருக்கிரையா? 

ச.மு. எழுதியிருக்கிறேன் சாமி. 

மா. எழுதியிருக்கரான்! – அத்தெயும் படிக்கச் சொல்லுங்க.

சி. அதெ படியப்பேன். 

ச.மு. [ஏழு பக்கங்களைத்தள்ளி] பிறகு செங்கல்பட்டைக் கடந்து போகும்போது பாலாறு பிரிட்ஜ் (bridge) வரும் போது அதன் பேரில் கட கட கட கட கட கட கட கட வென்றும், பட பட பட பட பட பட பட வென்றும், கட கட பட பட, பட பட கட கட கட கட பட பட, பட பட கட கட கட பட பட, கட கட –  

சி. உம் – இந்த கட கட, பட பட எவ்வளவு? 

ச.மு. பிரிட்ஜ் தாண்டர வரைக்கும்.

சி. இல்லே எத்தினி பக்கம் எழுதியிருக்கரெ இண்ணு கேட்டேன் – 

 மா. [சபாபதி கையிலிருந்து வியாசத்தைப் பிடுங்கிக் கொண்டு] கட கட பட பட அஞ்சி பக்கம், குப் குப் ஏழு பக்கம் வியாசம் தீர்ந்து போச்சி! 

[அதைக் கிழித்துத் தமிழ் வாத்தியார் தலைமீது போடுகிறார்]

இதுக்கு பரிட்செ ஒண்ணு! தமிழ்வாத்தியார் ஒண்ணு. 

திரிபுரம்மாள் விரைந்து வருகிறார்கள்.

தி. அதென்னா போங்க? இப்ப போயி நாயினாமேலெ கோவிச்சிகரைங்களே! அதோ கோளப்பஞ் சேரியம்மா வந்திருக்கிராங்க புள்ளையெ பாக்க! 

ச.மு. உம்! உம்! 

[அழுகிறான்]

மா. ஆமாம், கண்ணாலம் ஒண்ணுதான் கொறைச்சல் பிள்ளை யாண்டானுக்கு! — கண்ணாலத்தையும் பண்ணிவுடு, அப்புறம் அவன் படிச்சாப்போலெத்தான்! 

தி. ஆமாம்! நீங்க படிச்சி பாஸ் பண்ணிபுட்டைங்களே – கெடக்கட்டும், நீங்க கிளப்புக்கு (club) போங்க! 

மா. சரி, உம்பாடு – இப்படித்தான் அவனெ செல்லங் கொடுத்து கெடுக்கரெ! – நான் வர்ரேன். [போகிறார்]

தி. ஐயா, வாத்தியாரே, இண்ணைக்கு பாடம் சொல்லிக் குடுத்தது போதுங்க – நாளைக்கி வந்தூடுங்க சீக்கிரம்.

சி. அப்படியெ அம்மா. 

[போகும் பொழுது சீட்டுக்கட்டை எடுக்கிறார்]

ச. ஏ! அதென்னாது வாத்தியாரே, இத்தெ தூக்கிகினு போரைங்களே? 

சி. இதுவா? – ஓ! புஸ்தகம் இண்ணு பாத்தேன். 

ச. பாப்பைங்க பாப்பைங்க! – வைச்சூட்டுப் போங்க இத்தெ. 

[வாங்கிக் கொள்ளுகிறான் ; சின்னசாமி முதலியார் போகிறார்] 

தி. நாயினா, கண்ணெ தொடச்சிக்கோ நாயினா! – கோளப் பஞ்சேரி யம்மா உன்னே பாக்க வந்திருக்கராங்க இந்தா தலயெ வாரிகொ – அடே சபாபதி, தம்பிக்கு சரிகெ அங்கவஸ்திரம் கொண்டாந்து குடு. 

[சபாபதி அப்படியே செய்கிறான் ] 

இப்படி உட்காந்துகினு என்னமானா படிச்சிகினு இரு – அவங்களே இட்டுக்கினு வர்ரேன். [போகிறார்] 

ச.மு. அடே சபாபதி அவங்க வந்த பிற்பாடு நானு என்ன மானா புஸ்தகம் பேர் சொல்றேன் – நீ போயி, மெத்த மேலே நாயினா லைப்பெரரி (library) யிலே யிருக்கிர புஸ்தகங்கள்ளெ, பெரிய புஸ்தகமா ரெண்டு மூணு கொண்டா. 

ச. அப்படியே செய்யரேம்பா – நீ பயப்படாதே! 

திரிபுரம்மாள், தெய்வயானை அம்மாளை அழைத்துக்கொண்டு வருகிறார்கள், பின்னால் கிருஷ்ணசாமி மெல்ல வருகிறான்.

தி. இப்படி வாங்க மச்சி! – நம்ப கொழந்தெயாச்சி – நீங்க பாக்கரத்துக்கென்னா? 

தெ. படிச்சிகினு இருக்கராப் போலெ இருக்குது? 

தி. அதெயேன் சொல்ரைங்க மச்சி – என் நேரமும் புஸ்தகமும் கையும்தான் – சும்மா படிச்சி படிச்சி…. 

ச. மூளையெல்லாம் கரைஞ்சி பூடுதம்மா – அதுக்குத்தான் நான் படிக்கிரதில்லே. 

ச.மு. அடே சபாபதி, நீ மெத்தெமேலே போயி என் சைக்ளோ பீடியா பிரிட்டானிக்கா இண்டிகா (Encyclopaedia Britanica Indica) எடுத்துவா. 

ச. இதோ அப்பா. 

[விரைந்து போகிறான்] 

தெ. தம்பிக்கு என்ன வயசாவுதுங்க? 

தி. இப்பதாம் பதனாறு வயசாவுதுங்க. 

தெ. போன வர்ஷம் கேட்டபோது பதனேழு இண்ணைங்களே? 

தி. ஆமாம் மச்சி. அது வாஸ்தவம்தான்; அப்புறம் ஜோஸ்யரே கேட்டோம். அவரு ஜோஸ்யம் பார்த்து, இப்ப பதனாறு வயசுதாம் ஆவுது இண்ணாரு. 

சபாபதி மூன்று பெரிய புஸ்தகங்களை தூக்கமாட்டாததுபோல் தூக்கிக் கொண்டு வருகிறான். 

ச. இந்தாப்பா! 

ச.மு.மொள்ளமா வைடா கழுதே! 

ச. கழுதையா? என்னாப்பா இது! ரொம்ப பளுவா இருக்கர புஸ்தகமா தூக்கிவரச் சொல்லிட்டு, இப்ப திட்டரையே. 

ச.மு. சரிதான் வாயெ மூடு! படிக்கும்போது டிஸ்டர்ப் (disturb) பண்ணாதே. 

[படிப்பது போல் பாசாங்கு செய்கிறான்.]

தெ. தம்பி, நூஸ்பேப்பர் (news paper) படிக்குதுங்களா?

ச.மு. சபாபதி, மெத்தமேலெ போயி, ஹிண்டு ஆப் தி டைம்ஸ் (Hindu of the times) கொண்டுவா. 

ச. இதோ அப்பா 

[போகிறான்] 

தி. இந்தப் பாழாப்போன நூஸ் பேப்பர் வந்தாலும் வந்தது ராத்திரி யெல்லாம் நூஸ் பேப்பர்தான். 

சபாபதி மெயில் (Mail) பேப்பருடன் வருகிறான்.

ச.மு. எத்தனி நாழிடா கொண்டுவர? 

ச. என்னாப்பா அது, நானு எவ்வளவு வேகமா ஓடி வந்தேன், வரும்போது கூட ஒரு க்ளாஸ் டம்ளரெ (glass tumbler) ஒடிச்சூட்டேன் வர்ர வேகத்துலே!

சு.மு. போனாப்போவுது, கொடு, இப்படி. 

[வாங்கிப்படிப்பதுபோல் பாசாங்கு செய்கிறான்] 

தெ. இங்கிலீஷ்கூடப் படிக்குதுங்களா தம்பி? 

தி. அடெ சபாபதி – நாயினாவே ஓரக்க படிக்கச் சொல்லு. 

ச. என்னாப்பா, நீ மாத்திரம் படிச்சிகினா எனக்கு தெரியத் தேவலையா? ஓரக்கப் படிப்பா. 

ச.மு. இப் டூ டிரையாங்கில்ஸ் ஹேவ் டூ சைட்ஸ் ஆப் தி ஒன் ஈக்வல் டு டூ சைட்ஸ் ஆப் தி அதர், அண்ட் தி ஆங்கில் கன்டெயிண்ட் பை தி டூ சைட்ஸ ஆப் தி ஒன், ஈக்வல் டு தி ஆங்கில் கன்டெயின்ட் பை தி டூ சைட்ஸ் ஆப் தி அதர், தென் தேர் பேசஸ் ஆர் தர்ட் சைட்ஸ் ஷேல் பி ஈக்வல், தி டூ டிரையாங்கில்ஸ் ஷெல் பி ஈக்வல், அண்ட் தேர் அதர் ஆங்கில்ஸ் ஷெல் பி ஈக்வல் நேம்லி தோஸ்டு விச்தி ஈக்வல் சைட்ஸ் ஆர் ஆபொசிட் (If two triangles have two sides of the one epual to two sides of the other, and the angle contained by the two sides of the one, equal to the angle contai- ned by the two sides of the other, then their bases or third sides shall be equal, the two triangles shall be equal, and their other angles shall be equal, namely these to which the equal sides are opposite.) 

ச. இரு இரு அப்பா, சும்மா நீயே படிச்சிகினு போனா, எனக் கென்னாப்பா தெரியும்! – அத்தே தமுழ்லே சொல்லப்பா. 

ச.மு. ஓ எஸ் (Oh! yes) ஒனக்கு இங்கிலீஷ் தெரியாதல்லா? சொல்ரேன் கேளு – இப்பவும் சென்னப்பட்டணத்திலெ வர்த்தகருங்கல்லாம், போட்டிபோட்டுகிணு லாபம் சம்பாதிக்கரத்துக்காக, கெர்சின் ஆயில் (kerosine oil) எண்ணெயின் வெலெயெ ரொம்ப ஒஸ்திவிட்ட தாகவும், அதனாலெ ஜெனங்களுக்கெல்லாம் ரொம்ப கஷ்டமா யிருக்கிறதாகவும், கவர்ன்மெண்டார் அவர்களுக்குத் தெரிவிச்சிகினாங்களாம். 

ச. உம் — அதுக்கு இந்த கவுமெண்டாரு என்ன பதில் சொன்னாங்களாம்? 

ச.மு. பட் இப்தி சைட் ஏபி, இஸ் ஈக்வல் டு தி சைட் டிஇ. அண்ட் தி சைட் ஏசி இஸ் ஈக்வல் டு தி சைட் டிஎப், அண்ட் தி ஆங்கில் பிஏசி,இஸ் ஈக்வல் டு தி ஆங்கில் இடிஎப் – (but if the side AB is equal to the side DE, and the side AC is equal to the side DF and the angle BAC is equal to the angle EDF) 

ஆனால் கவர்ன்மென்டார் அதுக்கு பதில் என்னா சொன்னாங்க இண்ணா,கெர்சினாயில் எண்ணெ வெலெ அதிகமா போனா, எல்லோரும் வீட்லெ எலெக்டிரிக்லைட் (electric light) போட்டுக்கொள்ள வேண்டியது இண்ணு பதில் சொல்லிவிட்டார்களாம் – அம்மா, நம்ப வூட்லெகூட அண்ணாகிட்ட சொல்லி எலெக்டிரிக் லைட் போட்டூடச் சொல்லுங்கம்மா. 

ச. இதிருக்கட்டும்பா- மகாராஜருங்கதான் எலிகட்டுலைட்டு போட்டுக்கராங்க – ஏழைங்க என்னப்பா செய்யரது? அது என்னமானா போட்டு இருக்குதா பாரப்பா.

ச.மு. எழுதியிருக்கிறது, கேளு — அண்ட் தேர்போர் தி டூ டிரை ஆங்கல்ஸ் ஆர் ஈக்வல் டு ஒன் அநெதர் – and therefore the two triangles are equal to one another) ஏழைங்களா இருக்கரவங்க எலெக்டிரிக் லைட் போட முடியாப்போனா, மொழுக்கு வத்தி உபயோகிச்சிக் கொள்ளவேண்டியது ஊட்டுங்கள்ளே, இண்ணு தெரிவிக்கிராங்களாம். 

ச. அடடெ! இந்த யோசனே எனக்கு தோணாத போச்சே இதுவரைக்கும்! – இந்த வெள்ளக்காரன் யுக்தியே யுக்தியப்பா! – அதெல்லாம் இருக்கட்டும்பா, எங்க ஊர்லெ மழே பேஞ்சிதா பாரப்பா. 

ச.மு. எந்த ஊரு, உங்க ஊரு? ? 

ச. ஆத்தூரப்பா – செங்கல்பட்டு கிட்ட.

ச.மு. இதோ பாத்து சொல்ரேன் – ஓ!  ஹியர் இட் இஸ் (Oh! here it is) “இந்தி டிஸ்டிரிக்ட் ஆப் செங்கல்பட் ஆல்ரைட் ஆங்கல்ஸ் ஆர் ஈக்வல்டு ஒன் அநெதர் (In the District of Chingleput, all right angles are equal to one another) செங்கல்பட்டு ஜில்லா ழுழுமையும் கொஞ்சம்கூட மழை பேயவெ யில்லையாம். 

ச. அடடா! அப்புறம்? 

ச.மு. அண்ட தேர் போர்-(and therefore) ஆகவே தானியங்க வெலெ யெல்லாம் அதிகமாயி, ஜனங்களெல்லாம் ரொம்ப கஷ்டப்படராங்களாம், சில ஜனங்கள் காஞ்சிபுரத்துலெ கலகம் பண்ணி கொள்ளையடிச்சாங்களாம். 

ச. என்னாப்பா அது, இங்கில்சுலே இவ்வளவுண்டு சொன்னே, தமுலே அதுக்கு இவ்வளவு பெருசா அர்த்தம் சொல்ரையே? 

ச.மு. இங்கிலீஷ் இண்ணா அப்படித்தான். 

தி. போதும் நாயினா படிச்சது – அப்புறம் ஒடம்பு கெட்டுப் போவப்போவுது. 

தெ. ஆமாம் அண்ணி – நிறுத்தச்சொல்லுங்க, ரொம்ப படிச்சா ஒடம்புக்கு சூடு இண்ராங்களே. 

ச. ஆமாம்மா, படிச்சி படிச்சி அப்பாவுக்கு ரொம்ப சூடா போவுதம்மா – நீங்க இன்னொருதரம் வர்ரப்பொ கொஞ்சம் பாதுமல்வா கொண்டாங்க. 

சு.மு. அடே சபாபதி! 

ச. இல்லெப்பா, நீதானே சொன்னேப்பா, பாதுமல்வா இஷ்டமிண்ணு.

ச.மு. சரிதான். வாயெ மூடு. 

தெ. தம்பி பாஸ் பண்ணி யிருக்குதுங்களா? 

தி. பாசுக்கென்னா மச்சி – பத்து ரூபா பரீட்சைக்கு போயி இருக்குது — இந்த வர்ஷம் பத்துரூபா கட்டியிருக்குதே, பரீட்செ பண்ரவங்களுக்கு – பாசு கொடுக்காதிருப்பாங்களா? 

தெ. சரிதான் மச்சி – அப்பொ – நாழியாவுது – நானு வரட்டுமா? 

தி. இன்னம் கொஞ்சம் இருந்து போங்களேன்? இதுக்குள்ள என்னா அவசரம்? 

தெ. இல்லே நாழியாச்சி – அடே கிருஷ்ணசாமி – போய் சொல்லிவிட்டு வாடா! – உம் – வெக்கமென்ன? – உங்க அத்தானா ஆவப்போராரு, அவரோடே பேசரத்துக்கு வெக்கமென்னா உனக்கு? 

கி. [சபாபதி முதலியார் அருகில் போய்] நான் போயி வர்ரேன். 

ச.மு. அல்லோ (hallo!) வா தம்பி – உன்னெ பார்க்கவேயில்லை  இதுவரைக்கும் – வா உக்கார் – என்னா சமாசாரம்?– நண்ணா படிக்கரையா? எந்த கிளாஸ்லே (class) படிக்கரெ? 

கி. ஐ ஹாவ் அப்பியர்ட் பார் தி மெட்ரிகுலேஷன் எக்சாமினேஷன். (I have appeared for the matricu- lation examination.) 

ச. ஒ – ஐ சீ! (Oh! I see) மெத்த கிளாட் (glad) ரொம்ப சந்தோஷம். ஹோப் வில் பாஸ் (hope will pass), எஸ்ஸே (essay) எத்தனை பேஜ் (page) எழுதனெ தம்பி?

கி. அஞ்சி பக்கம் எழுதனேன். 

ச.மு. ஓ! யூஸ்லெஸ்! (oh! useless) பிரயோஜனமில்லே! ஒரு பத்து பக்கமாவது எழுதணும். நீ பெயில் (fail) ஆயிபூடுவே இண்ணு நெனைக்கரேன்! டஸ் நாட் மாட்டர், (does not matter) இந்த நாட்டுப்புறத்து பள்ளிக்கூடங்கள்ளெ யெல்லாம் படிக்கிரது இதுதான் தப்பு. – நீ சென்னப்பட்டணம் வந்தூடப்பேன் – அது தான் நல்லது. 

தெ. அவங்க அக்காளுக்கு கல்யாணமானா, அவனும் இங்கே வந்தூடமாட்டான படிக்க. 

ச.மு. மெத்த கிளாட் (glad), நீ போய்வா தம்பி. 

கி. நான் வர்ரேன். 

[திரிபுரம்மாள் தெய்வயானையம்மாள், கிருஷ்ணசாமி போகிறார்கள்] 

ச. அப்பா, உனக்கு கண்ணாலமாகரப்பொ, எனக்கு ஒரு சரிகெ தலெ குட்டே வாங்கி கொடுக்கணும்பா, இப்பவே சொல்லிட்டேன். 

ச.மு. அடே, எல்லாம் ஆகட்டும் – அப்புறம் பாத்துகலாம். 

காட்சி முடிகிறது 

இரண்டாம் காட்சி

இடம் – அதேயிடம் 

சபாபதி முதலியார் நாற்காலியின் மீது உட்கார்ந்து ஓர் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார். சபாபதி எதிரில் நிற்கிறான். 

ச.மு. எல்லாம் பாக் (pack) பண்ணியாச்சா? 

ச. இப்பதான் அல்லாம் வைச்சிகினு இருக்கரேம்பா, இதுக்குள்ளே நீ கூப்டையெ இண்ணு வந்தேன். 

ச.மு. எத்தனி நாழிடா பாக் பண்ண? சீக்கிரம் ஆகட்டும், மாமா அவுங்கள்ளாம் வர்ர வேளெ ஆச்சி, வந்தவுடனே சாயங்காலம் பொறப்பட்டுப் போவணும் அவுங்க வீட்டுக்கு. 

ச. என்னாப்பா விசேஷம்? 

ச.மு. பொங்கல் விருந்துக்குக் கூப்பிட வர்ராங்க. 

ச. ஓ! அப்போ சீக்கிரம் பாக் பண்ணிடமாட்டே. 

ச.மு. இந்தா, எல்லாம் பாக் பண்ணியானப்புறம் இந்த காயி தத்தெ, பக்கத்து தெரு முருகேசம் கிட்ட கொண்டு போயி கொடுத்தூட்டு வா. 

ச. என்ன காயிதம்பா இது? 

ச.மு. அடே அதனப்பிரசங்கி! அதெல்லாம் ஒண்ணும் கேக்கக் கூடாது இண்ணு சொல்லலெ நானு? 

ச. இல்லெப்பா, எனக்கொரு தலெ குட்டெ வாங்கி குடுக்க ரேண்ணையெ, அத்தெ பத்தி எழுதனையோ ஒருவேளெ, இண்ணு கேட்டேன். 

ச.மு. தலெ குட்டெ யெல்லாம் அப்புறம்தான், இப்பொ இல்லெ, போ– அதோ மாமா வர்ராப்போலே இருக்குது சீக்கிரம் போய் பாக் பண்ணிவை. [சபாபதி போகிறான்] 

குப்புசாமி முதலியாரும் கிருஷ்ணசாமியும் வருகிறார்கள்.

ச.மு. அல்லோ (hallo) நெவர் எக்ஸ்பெக்டட்! (never expected) வாங்க மாமா, வாங்க, வா தம்பி, நீங்க வர்ரது எனக்கு தெரியவே தெரியாதே! வர்ரதாக ஒரு கார்டு (card) போடக்கூடாது? – உக்காருங்க, உக்காருங்க. 

கு. உங்க நாயினாவுக்கு ஒரு காயிதம் எழுதனேனே. 

ச.மு. அவருக்கு எழுதி பிரயோஜனமில்லே – இப்பொ அவுங்க இந்த முனிசிபல் எலெக்ஷன் (Municipal Election) விஷயமா ரொம்ப பிசி (busy) யாயிருக்கராங்க. நீங்க எனக்கு நேரா யெழுதியிருக்கணும் – டஸ் நாட் மாடர் (does not matter) பரவா யில்லெ – என்னா தம்பி, என்னா விசேஷம்? ஏது இப்படி வந்தது ? 

கி. இண்ணைக்கி செனெட் அவுஸ்லெ (Senate House) ரிசல்ட்ஸ் (results) ஒட்ராங்க இண்ணு சொன்னாங்க அத்தெ பாத்துட்டு போகலாமிண்ணு வந்தேன். 

ச.மு. ஒ! ஐ சீ! (oh ! I see) அதுக்கா வந்தெ? – அப்பொ, போயி சீக்கிரம் பாத்துட்டு வா அப்பேன். 

கி. நீங்களும் வாங்களேன்? உங்க ரிசல்டு (result) பார்க்க வேணாமா? 

ச.மு. என் ரிசல்டெ (result) பத்தி சந்தேகமில்லெ.அதுலெ என்னா ராங்க் (rank) போட்டிருக்குமா என்னா? சும்மா பஸ்டு கிளாஸ் (first class) இண்ணு போட்டிருக்கும், இல்லாப்போனா பெயில் (fail) இண்ணு போட்டிருக்கும், அவ்வளவுதான். 

கு. அது ஏன் அப்படி? 

ச.மு. வேறொண்ணு மில்லெ…. இங்கிலீஷ் பேபர்லெ (paper) கொஞ்சம் சந்தேகமா யிருக்குது – கிளியர் (clear) பண்ணி யிருக்கரென்! நாயமா வெரி நியர் மாக்சிமம் (very near maximum) வரணும், ஆனாலும், இந்த வர்ஷம் ரே எக்சாமினர் (Rae, examiner) இண்ணு சொல்ராங்க. ஒரு தரம் ஒரு மிடிங்லெ, (meeting) அவனெ எதிர்த்து பேசனேன், அப்பொ, ஆல் ரைட் ஐ வில் சி (all right, I will see) இண்ணு சொன்னா, அது மொதல் எம்பேர்லெ கொஞ்சம் காரமாயிருக்கரா. 

கு. என்னமா இருக்கரா? 

ச.மு. காரமா – அதாவது கோவமா யிருக்கரா, அத்தொட்டு எம் பேபர் இண்ணு தெரிஞ்சுதோ, சுழிச்சூடுவான், அதாம் ஒரு பயம். அத்தெ கவனிக்கா போனாண்ணா பஸ்டு கிளாஸ் பஸ்டு பாய் (first class first boy); கவ னிச்சாண்ணா, பெயில் (fail); அத்தொட்டு என் ரிசல்டெ பத்தி நீங்க பார்க்கத் தேவலெ – தம்பி ரிசல்டு (result) மாத்திரம் பாத்துகினு வரட்டும் – அதிருக்கட்டும், வேறென்னாப்பேன் சமாசாரம்? 

கி. வேறொண்ணு மில்லெ. 

கு. என்னாடா கிருஷ்ணசாமி, வந்த வேலெயெ மறந்து பூடரெ! உங்க அத்தானே, பொங்கல் விருந்துக்கு வரச் சொல்லி கூப்பிடரா. 

கி. ஆமாமாம், மறந்து பூட்டேன் அத்தான், பொங்கல் விருந்துக்கு, நீங்களும், அல்லாரும், ஊருக்கு வரணும்.

சு.மு. ஓ! ஐ சீ! (Oh!Isee!) இதுக்குள்ளே பொங்கல் வந்தூட்டுதாப்பேன்? இப்பொதாம் போனாபோலே இருக்குது – எப்போ,பொறப்படரது அப்பேன்? 

கி. இண்ணைக்கி சாயங்காலமெ புறப்படலாம். 

ச.மு. ஐ டோன்ட் திங்க் இட் பாசிபில் (I don’t think it possible) இண்ணைக்கி முடியாது போலே இருக்குதெ ஐ திங்க் ஐ ஹாவ் காட்டு அட்ரெஸ் எ மிடிங் (I think I have got to address a meeting) எதுக்கும் பார்க்க ரேன் – அடே சபாபதி – சபாபதி! 

ச. [உள்ளிருந்து] இதோ வர்ரேம்பா.

ச.மு. வா சீக்கிரம். 

சபாபதி வருகிறான். 

எத்தனி நாழிடா வர்ரதுக்கு? 

ச. எல்லாம் கட்டி வைக்கரத்துக்கு நாழியாச்சப்பா. 

ச.மு. என்னாத்தெ கட்டி வைக்கிரத்துக்கு? 

ச. மாமா வந்து பொங்கல் விருந்துக்கு கூப்புடுவாங்க, சாயங்காலம் போவணும், மூட்டை யெல்லாம் கட்டிவை யிண்ணையேப்பா. 

ச.மு. அதனப் பிரசங்கி! அத்தெ யெல்லாம் யார்டா கேட்டது உன்னெ? நீ போயி மெத்தமேலெ என் என்கேஜ் மென்ட் லிஸ்டு (engagement list) மேஜெ மேலெ வைச்சிருக்கிரேன், கொண்டா இப்படி – ஓ! வாணாண்டா, இதோ இருக்குது- 

[ஒரு காகிதத்தை எடுத்துப் பார்த்து] 

ஓ! ஐ சீ! (Oh I see) அந்த மீடிங் நேத்தே ஆயிபூட்டுது. இண்ணைக்கி சாயங்காலமே பொறப்படலாம்பேன்.

கி. அதுக்குள்ள நான் போயி ரிசல்ட்ஸ் பாத்துட்டு வர்ரேன்.

ச.மு. இதுக்குள்ள என்னாப்பேன் அவசரம்? அதெல்லாம் நாலு மணிக்கு மின்னே ஓட்டமாட்டாங்க. – எல்லாம் கொஞ்சம் பொறுத்து போகலாம் – கொஞ்சம் தாகத்துக்கு சாப்பிட்டுட்டு போங்க – உனக்கென்ன வேணும் அப்பேன்?,- சோடா (soda) சாப்பிடரையா. லெம னேட் (lomonade) சாப்பிடரையா? 

கி. சோடா சாப்பிடரேன். 

ச.மு. அடே சபாபதி, சீக்கிரம் ஒரு சோடா புட்டியெ ஓடச்சி கொண்டா. 

ச. ஏ! அது கெட்டு பூடும்பா அப்புறம். 

ச.மு. அதனப்பிரசங்கிக் கழுதெ! சொன்னபடி செய் முன்னெ! குறுக்கே குறுக்கே பேசிகினு! 

ச. இப்பவே சொன்னேம்பா! அப்புறம் எம்மேலே கோவிச்சிகினா பாரு! [போகிறான்] 

ச.மு. நீங்க மாமா? 

கு. எனக்கு ஒண்ணும் வேணாம்பேன். 

ச.மு. இல்லெ, ஏதாவது கொஞ்சம் சாப்பிடுங்க. 

கு. ஆனா இந்த சோதா வேணாம் – கொஞ்சம் காப்பி சாப்பிடரேன். 

ச.மு. ஹாட் காபி (hot coffee) சாப்பிடரைங்களா? ஐஸ்டு (iced) காபி சாப்பிடரைங்களா? 

கு. அப்படிண்ணா? 

ச.மு. ஓ! உங்களுக்கு அந்த டிபரன்ஸ் (difference) தெரியாதோ? உனக்கு தெரியுமாப்பேன் ஐஸ்டு காபி எப்படி ப்ரிபேர் (prepare) பண்ரது இண்ணு? 

கி. தெரியாது. 

ச.மு. ஐஸ்டு காபி இண்ணா. சாதாரணமா நாட்டுப்புறத்தார். காபியிலே ஐஸ் (ice) போடரது இண்ணு நெனைச்சிகி வாங்க – அது ரொம்ப தப்பு. ஐஸ்டு காபி இண்ணா காபி பொடி பண்ணும்போதே, ஐஸ்லே போட்டு பொடிபண்ணணும். நான் டியான்ஜிலிஸ் (D’angelis)லே விசாரிச்சி தெரிஞ்சி வந்திருக்கிறேன் அது ரொம்ப டிபிகல்டு (difficult) ப்ரிபேர் (prepare) பண்ண. 

கு. அப்பேன், எனக்கு ஐஸ் வாணாம். சுடசுடவே யிருக்கட்டும். 

சபாபதி ஒரு தட்டில் ஒரு சோடா புட்டியைத் துண்டு துண்டாக உடைத்து வைத்துக்கொண்டு வருகிறான். 

ச. பாத்தையா அப்பா? அப்பவே சொன்னேனே புட்டியெ ஓடெச்சா கெட்டுபூடும் இண்ணு! ஓடெச்ச உடனே தண்ணியெல்லாம் புஸ் இண்ணு பூட்டுதப்பா!

ச.மு. வாட் நான்சென்ஸ்! (what nonsense) உன்னை யார் புட்டியெ ஒடெக்கச் சொன்னது? 

ச. நீ தானே அப்பா சொன்னே? அப்பவே நானு வேணாம் இண்ணனே! 

ச.மு. தெறந்து கொண்டுவாடா இண்ணா! 

ச. தெறக்கரதா? எப்படியப்பா ? நீ சாவி கொடுத்தெயா? 

ச.மு. டாம் இடியட்! (Damn idiot) நீ ஒண்ணுக்கும் ஒதவ மாட்டே போ! 

ச. போரேம்பா. 

ச.மு. இங்கே வா இப்படி! உள்ளே போய் காபி (Coffee) யாவது சுடசுட கொண்டுவா! அத்தெ தொடத்தேவலே!  அத்தெயும் கெடுத்து வைக்கப்போரே! தெரியுமா? 

ச. தெரியும்பா. 

ச.மு. போனா போவது தம்பி. வில்யூ ஹாவ் சம் டீ (Will you have some tea)? 

கி. எஸ் (yes) 

ச.மு. சபாபதி! 

ச. [உள்ளிருந்து] ஏன்? 

ச.மு. அப்படியே ஒருடம்ளர் டீ (tea)யும் கொண்டுவா சுடச் சுட! 

சபாபதி ஒரு தட்டில் ஒரு டம்ளர் காபியும் ஒரு டம்ளர் தேத்தண்ணீரும் எடுத்துக்கொண்டு வருகிறான். 

ச.மு. அவங்க நடுவிலே வை அதை. 

[அப்படியே வைக்கிறான்; குப்புசாமி முதலியாரும் கிருஷ்ணசாமியும் அதைத் தொட்டு அப்பப்பா!என்கிறார்கள்.] 

ச.மு. ஏண்டா! சபாபதி! இவ்வளவு கொதிக்க கொதிக்கவா கொண்டாரச் சொன்னேன் ? 

ச. எனக்கென்னமாப்பா தெரியரது? தொடத்தேவலெ இண்ணையே என்னெ? 

ச.மு. ஆல் ரைட்! (all right) உனக்கு சரியான பனிஷ் மெண்ட் (punishment) கொடுக்கணும்; இத்தெ ரெண்டையும் ஆத்திக் கொண்டு வா சீக்கிரம்; கை சுடட்டும் உனக்கு! 

[சபாபதி போகிறான்] 

நீங்க என் நியூ போடகிராப் (new photograph) கேட்ட தில்லைங்களே? 

கு. என்னா அது? 

ச.மு. நியூ போட்கிறாப் (new photograph), அது என்னம்மா பாடு திண்ரைங்க; வெரி குட் மியூஜிக் (very good music) தாகத்துக்கு சாப்பிட்ட வுடனே அத்தெ கொஞ்ச வாசிக்கரேன். அத்தெ வாசிக்க கத்துகிரத்துக்கு மூணு வர்ஷம் புடிச்சுது. ஒரு மியூஜிக் மாஸ்டர் (music master) வைச்சி, அவருக்கு மன்திலி செவன் ருபீஸ் (monthly seven Rupees) கொடுத்து வந்தேன். இப்பொ நண்ணா வாசிக்கரேன். 

[சபாபதி மறுபடியும் இரண்டு டம்ளர்களைக் கொண்டுவந்து குப்புசாமி முதலியாரிடம் ஒன்றையும் கிருஷ்ணசாமியிடம் ஒன்றையும் கொடுக்கிறான்.] 

இருவரும் [குடித்துப் பார்த்து] து து! 

கு. என்னா அப்பேன் இது? காப்பி ஆட்டம் இல்லையே!

கி. இதுவும் டீ (Tea) ஆட்டம் இல்லெ! 

ச.மு. வாட் ஈஸ் தி மேட்டர்? (what is the matter?) லெட் மி சி (let me see) 

[முகர்ந்து பார்த்து] 

சபாபதி என்னடா செய்தே? 

ச. ஆத்தி கொண்டாரச் சொன்னையே அப்பா! ரெண்டையும் ஊத்தி ஆத்தி கொண்டாந்தேன். 

ச.மு. டாம் தி ஆஸ்! (damn the ass) ஒண்ணாவா ஊத்தச் சொன்னென்? இப்பொ என்னா செய்ரது அத்தெ? 

ச. அதுக்கென்னாப்பா,வடி கட்டனா சரியா போவுது. 

ச.மு. டாமிட் (damn it) என் முன்னே நிக்காதே! எனக்கு கோபம் வரும்! போ வெளியே! பிக் பூல் (big fool) 

[சபாபதி போகிறான்] 

நெவர்மைன்ட் (never mind) அவ்வையார் சொன்ன படி வயிற்றுக்குச் சோறு இல்லாதபொழுது காதுக்குக் கொஞ்சம் கொடுக்கப்படும், என்றபடி கொஞ்சம் மியூ ஜிக் (music) கேட்போம். 

[கிராமபோனில் ஒரு பிளேட் (plate) போடுகிறான்.] 

இது நான் பாடின ஸ்பெஷல் சாங் (special song) ரொம்ப ஸ்பிலென்டிட் (splendid) ஆயிருக்கும் ஹியர் பிளீஸ் (hear plese) [அதற்கு சாவி கொடுக்கிறான்]வாட்டீஸ் திஸ் (what is this?) சம்திங் ராங் (something wrong) அந்த டாம் பூல் (damn fool) என்னமோ கெடுத்து வைச்சிருக்கிறான்! சபாபதி- 

சபாபதி வருகிறான்.

ச. ஏம்பா! 

ச.மு. இத்தெ யென்னமானா தொட்டையா நீ? 

ச. நானு ஒண்ணும் செய்யலெ அப்பா! அல்லாம் தொடச்சி வைக்கச் சொன்னையே இண்ணு, அந்த தோசக்கல்லு மாதிரி யிருக்குதே, அது ரொம்ப டீ அழுக்கா யிருக்குது இண்ணு, நண்ணா செங்கல் போட்டு பளபள இண்ணு தேச்சி வைச்சேன். 

ச.மு. பாத்தைங்களா ! நெனைச்சேன் நானு! இந்த இடியட்டெ (idiot) கட்டிக்கொண்டு அழவேண்டியதா யிருக்குது! இன்னொரு பிளேட் (plate) போட்டு பார்க்கிறேன், 

[கொஞ்ச நேரம் பாடின பிறகு கம்ப, கம்ப, கமப என்று பாடிக் கொண்டிருக்கிறது.] 

வாட் நான்சென்ஸ் இஸ் திஸ் அகேய்ன்! (what nonsense is this again) இங்கே வாடா இப்படி சபாபதி, நிஜத்தைச் சொல்லு, இத்தெ என்னா செய்தே? 

ச. நான் ஒண்ணும் செய்யலெ அப்பா! நானு தொடைக்கவே யில்லெ அப்பா இதெ! இது பொய் பேசுதப்பா! 

ச.மு. நான்சென்ஸ் (nonsense) நிஜத்தைச் சொல்! இல்லாப்போனா உடனே டிஸ்மிஸ் (dissmiss) பண்ணி விடுவேன். 

ச. இல்லெ அப்பா ! நெஜத்தே சொல்லிடரேன், நேத்து நீ சொன்னையா ஊசியினாலே கோடுபண்ணி யிருக்கிரத் தொட்டுதான் பாடுது இண்ணு, அத்தெ பாக்கணும் இண்ணு, ஒரு குண்டூசி எடுத்து கோடு கிழிச்சிகினெ வந்தெ! ஓரண்டெ பொத்தலா போச்சிப்பா கொஞ்சம், அவ்வள தாம்பா. 

ச.மு. பொத்தலா பண்ணிவுட்டெ! 

ச. இல்லெ அப்பா! அத்தெ ஓடனே கொஞ்சம், சாதம் போட்டு ஒட்டிவிடரெம்பா, நீ கோவிச்சிக்காதேப்பா! 

ச.மு. டாம் டர்ட்டி பூல் (damn dirty fool) உன்னே டிஸ்மிஸ் (dismiss) பண்ணிவிட்டேன்! போ வெளியே. 

[சபாபதி போகிறான்]

இல்லைங்கோ! இதெல்லாம் ரொம்ப காஸ்ட்லி ஸ்லைட்சு (costy slides) ங்கொ, ஒவ்வொண்ணு, ஆம் பாஸ்டு திரீ கோர்டர் பாஸ்ட் பைவ் ருபிஸ் (half past three. quarter past five rupees) ஆகுதுங்க! 

[ஒரு கடிதத்துடன் சபாபதி மறுபடியும் வருகிறான்.]

உன்னெ யார் மறுபடியும் வரச்சொன்னது? 

ச. இல்லெ அப்பா. பக்கத்தெரு முருகேசம் ஊட்டுல யிருந்து அவசரமான காகிதம் இண்ணு கொடுக்கச் சொன்னாங்க இந்த காயிதத்தெ! 

ச.மு. அல்லோ ! (hullo!) மைத்த கிலாட் (glad), ரிசல்டஸ் (result) எல்லாம் செனெட் அவுஸ் (senate house) லெ ஒட்டிவிட்டாங்களாம் அப்பேன், உன் ரிசல்ட்டு (result) போய் பார்த்துகினு வரக்கூடாது? 

கி. உங்க ரிசல்ட்டு (result) என்னா? 

ச.மு. அத்தெ எழுதலெ என் பிரன்ட் (friend) அத்தெ பத்தி ஏதாவது சந்தேகம் இருந்தாதானே? 

கி. எதுக்கும் நீங்களும் வாங்களேன் கூட, போய் பார்க்கலாம். 

ச.மு. ஓ! வேஸ்ட் ஆப் டைம் (waste of time) அங்கெ என்னா சும்மா பஸ்ட் கிளாஸ் (first class) இண்ணு போட்டிருக்குமே தவிர, ராங்க் (rank) போட்டிருக்காது. 

கி. அப்பா, உடனே புறப்பட்டு போய் பாத்து வருவோம் வாங்க. 

கு. ஆஹா புறப்படுவோம். 

ச.மு. தம்பி, எண்ணைக்கு பொங்கல் இண்ணு சொன்னே?

கு. ஆ மறந்து பூட்டேன்! வர்ரப்போ இந்த பக்கம் வந்து இட்டும்போரெம்பேன். 

ச.மு. ஓ! அதுக்கென்னா? – சீக்கிரம் தம்பி ரிசல்டஸ் (result) பாத்துகினு வாங்கள்; ஓப் வில் பி குட் நியூஸ் (hope will be the good news) 

(குப்புசாமி முதலியாரும், கிருஷ்ணசாமியும் போகிறார்கள்.) 

ச. ஏம்பா, பரிட்செ ஆச்சாப்பா உனக்கு? 

ச.மு. பரிட்செ யெல்லாம் – பணால் ஆச்சு? 

ச. அப்பா! சந்தோஷமாச்சப்பா! நானு இப்பவெ சொல்லிவுட்டேன். இந்த மாசம் மொதலு எனக்கு ஒரு ரூபா சம்பளம் ஒஸ்தணும். 

ச.மு. பரிட்சே பணாலா போச்சி இண்ணா! என்னா டாம் பூல் (damn fool) ஆயிருக்கரே. 

ச. பாசு பண்ணலெ? ஆச்சு இண்ணையே அப்பா! பெயிலா போச்சு? 

ச.மு. புஸ்! ஆல் பேட் (all fate) அது போனா போவுது, சபாபதி நான் ஒண்ணு சொல்லப்பொரேன் இப்பொ, அதும்படி செய்தையா, உனக்கு சம்பளம் ஓஸ்தரேன். 

ச. சொல்லப்பா. 

ச.மு. நான் சொல்ர வரைக்கும் பெயிலா (fail) போன சமாசாரம் ஒருத்தருக்கும் சொல்லாதே! 

ச. இல்லவே யில்லேப்பா. 

ச.மு. முன்னெ போயி பத்துபலம், பாதுமல்வாவும், பத்து பலம் பகோடாவும், வாங்கிகினு வா, சீக்கிரம் – இந்தா அரெ ரூபா. 

ச. என்னாத்துக்கப்பா இப்பொ? 

ச.மு. அதெல்லாம் கேக்காதே,போ முன்னே. 

சு. இல்லெ, நம்பவூட்லயே பலகாரம் பண்ணி யிருக்கிறாங்களே, அத்தெ சாப்பிடக்கூடாதா இண்ணு கேட்டேன். 

ச.மு. அதெல்லாம் ஒதவாது; சீக்கிரம் ஒருத்தருக்கும் தெரியாமெ மறைச்சி கொண்டா இங்கே. 

ச. ஒரு வேளெ தெரிஞ்சிபோனா? 

ச.மு. உன்னெ டிஸ்மிஸ் (dismiss) பண்ணி விடுவேன்! – போ சீக்கிரம்.

ச. உம் – எந்த கடையிலே வாங்கி வர்ரது? 

ச.மு. எந்த கடையாவது கிட்ட இருக்கர கடையிலே – போ சீக்கிரம். 

ச. எது மின்னெ வாங்கரது? 

ச.மு. ரெண்டையும் ஒண்ணா வாங்கிகினு வா – போ! 

ச. என்னாப்பா அவசரப்படரே! அங்கே போனப்புறம் மறந்துபூட்டா என்ன செய்ரது? அதுக்குதான் இப்பவே எல்லாம் கேட்டுகினு போரேன். உம்… என்னென்னா வாங்கிவரச் சொன்னே? 

ச.மு. டாம் பூல் (damn fool!) இத்தனி நாழி சொன்ன தென்னா? கால் ரூபாய்க்கு பகோடாவும் கால் ரூபாய்க்கு பாதுமல்வாவும்; அரை நொடியிலே ஓடியாரணும்! 

ச. இதோ வந்துட்டேன். 

[வேகமாய்ப் போகிறான்.] 

சு.மு. எப்படியும் பெயில் (fail) ஆயிப்போன சமாசாரம் தெரிஞ்சி பூடும்; இதுதான் சரியான யுக்தி! இல்லாப் போனா இன்னொரு வர்ஷம் படிடா இண்ணுவாங்க. 

சபாபதி மறுபடி வருகிறான் 

எங்கே மிட்டாயி? 

ச. இரப்பா கொஞ்சம்! – மூச்சு வாங்குது! – ஓடி வந் தேன். 

ச.மு. மிட்டாய் எங்கேடா? 

ச. அங்கே போயி நெனைச்சிகினேன்! – ஒண்ணு சொல்ல மறந்து பூட்டையே, எந்த கால் ரூபாய்க்கி பாதுமல்வா? எந்த கால் ரூபாய்க்கி பகோடா? 

ச.மு. வாட் இடியட்! (what idiot) எதுக்கானா என்னா? நான் அவசரம் இண்ணு சொன்னா, கொஞ்சமாவது தெரியலெ! எதுக்காவது வாங்கிவா போ. 

(சபாபதி போகிறான்.) 

நல்ல கயறா பாக்கணும் – இங்கே மாட்டிகினு தொங்கனா தான், வெளியிலேயிருந்து பாத்தா நண்ணா தெரியும், இந்த நாக்காலி யெல்லாம் எடுத்தூடணும். 

[அப்படியே செய்கிறார்.] 

சபாபதி இரண்டு பொட்டலங்களை எடுத்துக்கொண்டு மறுபடி வருகிறான். 

ச. இந்தா அப்பா! 

ச.-மு. ஆல் ரைட் (all right), கொடு இப்படி. சபாபதி, இந்த கயத்தெ நண்ணா கட்டு சீக்கிரம் அந்த திராவியிலே, க்விக் (quick). 

[உள்ளே போகிறார்.]

ச. [கயிற்றைக் கட்டிக்கொண்டே] நானு அவ்வளவு வேகமா ஓடிப்போயி முட்டாயி வாங்கியாந்தேன், எனக்கு கொஞ்சம்கூட கொடுக்காதையா திண்ணூடரெ, ஆவட்டும்! ஆவட்டும்! 

திரிபுரம்மாள் வருகிறாள். 

தி. சபாபதி, கொழந்தெ எங்கேடா? 

ச. இங்கெ இல்லே அம்மா! அந்த அறையிலெ இருக்கறாரோ என்னமோ தெரியாதம்மா எனக்கு! 

தி. கொழந்தெ பரீட்சே பாசு கொடுத்துதா தெரியுமா உனக்கு? 

ச. பாசு கொடுத்தது எனக்கு தெரியாதம்மா![ஒரு புறமாக] பாசும் கொடுக்கலெ பகோடாவும் கொடுக்கலே! 

தி. என்னாடா,சபாபதி, உங்கிட்ட ஒண்ணும் சொல்ல லெயா? 

ச. நான் பெயிலா போனேன் இண்னா யார்கிட்டவும் சொல்லாதே இண்ணாரு! அத்தொட்டு நானு சொல்ல மாட்டேன், அது நீங்களா வேணுமிண்ணா கேட்டு குங்கோ! 

தி. ஐஐயோ! அவென் பாசு பண்ணாபோனா நானு பொழச் சிருக்கமாட்டெனிண்ணானே ! 

 [ஒருபுறமாய்ப் போகிறாள்.] 

சபாபதிமுதலியார் மிட்டாய் பொட்டலங்களை எடுத்துக்கொண்டு வருகிறார். 

ச.மு. பூட்டாங்களா அம்மா ? – அந்த கவுத்தெ கொடு இப்படி – சபாபதி, உனக்கு சம்பளம் ரெண்டு ரூபாய் ஒஸ்தரேன், இப்ப மாத்திரம் நான் சொன்னபடி செய்யணும் தெரியுமா? 

ச. ஆவட்டும்பா. 

ச.மு. கதவண்டெ பாத்துகினே இரு, மாமா வண்டி திரும்பி வந்தவுடனே, எனக்கு சைகெ காட்டு. நானு தூக்கு போட்டுகிற மாதிரி இருக்கரேன்; நீ ஓடிப்போயி அவங்ககிட்ட, சின்ன ஐயா தூக்கு போட்டுகுது ஓடி வாங்க! ஓடிவாங்க! இண்ணு சொல்லு, தெரியுமா? அப்புறம் நானு பாத்துகிறேன் ஆக வேண்டியதே. 

ச. உம் உம்! 

ச.மு. என்னமானா தப்பு பண்ணப்போரே பத்தரம்! என்னாண்ணு சொல்ரே, சொல்லு பாக்கலாம். 

ச. ஐயா! ஐயா! நம்ப சின்ன ஐயா தூக்கு போட்டுக்கப் போறாராம்! வேடிக்கெ பாக்க ஓடிவாங்க! இண்ணு சொல்ரேன். 

ச.மு. சத்! பூல் (fool) அப்படியா சொல்லச் சொன்னேன்? தூக்கு போட்டுகினு செத்து பூடராரு! ஓடி வந்து தடுங்க! இண்ணு சொல்லு. போயிரு வெளியே, சீக்கிரம் வருவாங்க. 

(சபாபதி போகிறான்.) 

வரவேண்டிய டைம் (time) ஆச்சி, நம்பொ தயாரா யிருக்கணும். 

சபாபதி மறுபடி வருகிறான். 

வந்துட்டாங்களா? 

ச. இன்னும் வல்லெ அப்பா. 

ச.மு. வல்லையா?- பின்னெ நீயேன் வந்தே? 

ச. அத்தெ சொல்லிட்டு போலாம் இண்ணு வந்தேன்.

ச.மு. மடையா! – போ வெளியே! – போயிரு சீக்கிரம்! 

ச. இல்லெ அப்பா, தொள தொளாட்டிக்கித்தானே தூக்கு போட்டுகப்போரெ நீ? 

ச.மு. அது ஏன் உனக்கு? 

ச. இல்லே அப்பா, நீ நெஜம்மா தூக்கு போட்டுகினா கனிஷ்ட பருங்க வந்து என்னெ புடிச்சிம் போமாட்டாங்களா? 

மு. அதெல்லாம் ஒண்ணும் செய்யமாட்டாங்க, போ! 

(சபாபதி போகிறான்.) 

அதோ வண்டி வராப்போலே இருக்குது! 

சபாபதி மறுபடி வருகிறான். 

ச. அதோ வருதப்பா வண்டி! வண்டி! 

(சபாபதி முதலியார் கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டு தூக்குப் போட்டுக் கொள்வது போல் பாசாங்கு செய்கிறார்; சபாபதி, “அப்பா, தூக்கு போட்டுகுது! ஓடி வாங்க ஓடி வாங்க!” என்று கூவிக்கொண்டு வெளியில் போகிறான்.)  

திரிபுரம்மாள் ஓடி வருகிறாள். 

தி. மகனே! மகனே! வேண்டாண்டா வேண்டாண்டா! 

(கையைப் பிடித்துத் தடுக்கிறாள்.) 

ச.மு. (திமிறிக் கொள்வது போல் பாசாங்கு செய்து) அதெல்லாம் முடியாது! அதெல்லாம் முடியாது! பரீட்செ பெயில் (fail) ஆன பிற்பாடு நானு பொழச்சிருக்கமாட்டே பொழச்சிருக்கமாட்டே நான் செத்து பூடரேன்! செத்து பூடரேன்! 

ச. அப்பப்பா! அந்த பாதுமல்வா எங்கே வைச்சிருக்கெ அத்தெ சொல்லிட்டு செத்துபூடப்பா! அத்தெ முன்னெ சொல்லிவுடப்பா! 

ச.மு. அதெல்லாம் முடியாது! நான் உயிரோடெ இருக்க மாட்டேன் – இருக்கமாட்டேன்! 

தி. வேணாண்டா கண்ணு! வேணாண்டா கண்ணு! 

[கயிற்றைப் பிடிங்கி எறிந்துவிட்டு] 

இந்தப் பாழாப்போன பரிட்செ எக்கேடாவது கெட்ட்டும்! – நீ பொழைச்சி யிருந்தா போதும்! 

ச.மு. அம்மா, நீங்க ஏம்மா என்னை தண்டத்துக்கு தடுக் கரைங்க? – இந்த வர்ஷம் இல்லாப்போனா வர்ர வர்ஷம் செத்து பூடப்போரேன்.- 

தி. அது ஏன் அப்படி? 

ச.மு. வர்ர வர்ஷம் மறுபடியும் நாயினா என்னெ பரீட்சைக்கு போகச் சொல்லமாட்டாங்களா? 

தி. வேண்டவே வேண்டாம்! நான் உங்க நயினாகிட்ட சொல்லி, இனிமேலே இந்த எழவெடுத்த பரீட்சைக்கே அனுப்பத்தேவலெ, இண்ணு சொல்ரேன், பயப்படாதே! 

ச.மு. அந்த மாதிரி கை போட்டு கொடுங்க. 

தி. [அவன் கையை அடித்து] அப்படியே ஆவட்டும்.நீ ஒண்ணும் பயப்படாதே! – நீ சாப்பிடவா பலஹாரம் – இந்த மூஞ்செ வைச்சிகினா, மாமியார் ஊட்டுக்கு போவாங்க பொங்கல் விருந்துக்கு. 

ச.மு. இல்லே அம்மா, எனக்கு பசிக்கலெ இப்போ. 

தி. அப்பொ, மூஞ்செல்லாம் கழுவிகினு, தலை வாரிகோ; அடெ சபாபதி, அப்பா கூடவே இரு.- நீதான் உத்தரவாதம். கயிறு கியிறு தொட்டுதா பாரு! 

ச. இனிமேலே தொடாதம்மா, நான் பாத்துகரேன். 

[திரிபுரம்மாள் போகிறார்கள்] 

ச.மு. கதவெ சாத்துடா, உள்ளே தாப்பாள் போடு. 

[சபாபதி அப்படியே செய்கிறான்] 

ச. [மெல்ல] எங்கேப்பா, அல்வாவும் பகோடாவும்? 

ச.மு. [அறையிலிருந்து அவைகளை எடுத்து] இதோ! 

[இருவருமாக விரைவாகப் புசிக்கிறார்கள்] 

காட்சி முடிகிறது. 

மூன்றாங் காட்சி

இடம் – மாணிக்க முதலியார் வீட்டின் மெத்தை சபாபதி முதலியார் உட்கார்ந்திருக்கிறார். முருகேசமும் குமரகுருவும் வருகிறார்கள். 

மு.கு. லெட் மி கன்கிராட்யுலேட், லெட் மி கன்கிராட்யு லேட் யு! (let me congratulate you) 

ச.மு. ஓ எஸ்! ஓ எஸ் ! (Oh yes!) ஆனாலும் இதுலே கொஞ்சம் வருத்தம் இருக்குது பிரதர்ஸ் (brothers; நான் பஸ்டு கிளாஸ்லெ (first class) பஸ்டு பாய் இன் தி பிரசிடென்சி (first boy in the presidency) ஆக பாஸ் (pass) பண்ணுவேன் இண்ணு நினைச்சேன்,கொஞ்சம் தப்பிப் பூட்டுது. அந்த (Ray) இங்கிலீஷ் பேப்பர்லெ (English paper) டூ மார்க்ஸ் (two marks) குறைச்சிப் போட்டான் இண்ணு நெனைக்கிறேன். 

மு. பஸ்டு கிளாஸ்லெ (first class) பாஸ் (pass) பண்ணையோ இல்லையோ ? 

ச.மு. இல்லெ, செகிண்ட் கிளாஸ்லெ (second class) தான் போட்டான். பாஸ் (pass) பண்ணா, பஸ்டு கிளாஸ்லெ (first class) பஸ்டு பாய் இன் தி பிரசிடென்சி (first boy in the presidency) ஆக பாஸ் (pass) பண்ணனும், இல்லாப்போனா எந்த கிளாஸ்லெ (class) பாஸ் பண்ணா என்னா? 

கு. பாதர் இன் லாவுக்கு (Father-in-law) டெலிகிறாம் (telegram) அனுப்பிச்சூட்டைங்களா? 

ச.மு.பை ஜோவ்! (by jove) அதெ மறந்தேன் – சபாபதி சபாபதி! 

சபாபதி மெல்ல வருகிறான் 

ச.மு. என்னா நான் கூப்பிட்டதுக்கு ஏன் இண்ணு சொல்லாதே வர்ரெ? 

ச. என்னாப்பா! பாஸ்கூட குடுத்துவுட்டே, இப்பகூட சபாபதி இண்ணு கூப்பிடரையே என்னெ? 

ச.மு. பின்னெ என்னாண்ணு கூப்பிட? 

ச. சபாபதி முதலி இண்ணு கூப்பிடக்கூடாதா? 

ச.மு. சத்! நான்சென்ஸ்! (nonsense) அதெல்லாம் உதவாது இந்தா, இதோ டெலிகிறாம் (telegram) எழுதி தர்ரேன், அத்தெ நேரா தபால் ஆபீஸ்லெ கொண்டு போய் போடணும் தெரியுமா? 

ச. அப்படியே ஆவட்டுமப்பா. 

ச.மு. (எழுதிக்கொண்டே) கன்கிறாட்யுலேட், பாஸ், பஸ்ட் சென்ட், வைப், பாசிடிவ்லி (congratulate, pass, first, send, wife, positively) இன்னும் டூ வொர்ட்ஸ் (two words) இருக்குது. 

மு. பஸ்ட் (first) இண்ணு ஏன் எழுதனே? செகெண்ட் கிளாஸ்லெ (second class) பாஸ் (pass) பண்ணதாக சொன்னையே? 

ச.மு. இதுலே, பஸ்ட் (first) இண்ணா பஸ்டு கிளாஸ் (first class) இண்ணு அர்த்தம் அல்லா, பஸ்ட் டேட்லெ (first date) ரிசல்ட்ஸ் (results) வந்துது இண்ணு அர்த்தம் – இன்னம் டூ வொர்ட்ஸ் (two words) இருக்குது டெலிகிறாம்லெ (telegram) பாக்கி, ஆ! தட் இஸ் ரைட், எக்ஜாமினர்ஸ் குட்! (ah that is right, examiners good!) சரியா போச்சி! – எடுத்தும் போடா சீக்கிரம். 

[சபாபதி போகிறான்]

கு. எந்த காலேஜிக்குப் (college) போப்போரெ அப்பேன்? 

ச.மு. அதாம் பெரிய கஷ்டமாயிருக்குது! டாக்டா மில்லர் (Dr. miller) என் காலேஜ் (college) வந்து சேரணும் இண்ணு அர்ஜென்ட் டெலிகிறாம் கொடைகனால்லெ (urgent telegram Kodaikanal) யிருந்து அனுப்பிருக்கிறான்; டாக்டர் போர்ன் (Dr. Bourne) பிரசிடென்சி காலேஜ் ஒன்லி குட் காலேஜ், கம் ஜாயின் (Presidency Collge only good college, come join) இண்ணு எழுதி யிருக்கிறான். பச்சையப்பாஸ் காலேஜ்லே (Pachayappah’s College) எங்க பாதர் டிரஸ்ட்டி (father trustee) ஆக இருந்தாரே இண்ணு யோசிக்க வேண்டியதாயிருக்குது. அதுவு மில்லாதெ யாரும் கிளவர் பிரிலியண்ட் பாய்ஸ் (clever brilliant boys) இல்லெ இண்ணு பிரின்சிபால் கம்ளெயின் (Principal complain) பண்ணிகினு இருந்தாரு – இதுலே பெரியசங்கடமா யிருக்குது! 

மு. என்னா சப்ஜெக்ட் (subject) எடுத்துக்கப்போரே? 

ச-மு. எடுத்துக்கனா, கெமிஸ்டு (chemist) ஆவது பிசிக் (physic) ஆவதுதான் எடுத்துகணும்; நீ என்னா அட்வைஸ் (advise) பண்ணரே? 

கு. நீ பிசிக் (physic) எடுத்துக்கனாதான் ஈசி (easy) 

மு. ஐ அட்வைஸ் கெமிஸ்ட் (I advise, chemist) கெமிஸ்ட் எடுத்துக்கப்பேன் சுலபம். 

ச.மு. நான், எங்க மதர் (mother) ஏ கன்சல்ட் (consult) பண்ணிப்பார்த்தென், அவுங்க, படிச்சது போதும் தம்பி அதிகமா படிச்சா ஓடம்பு கெட்டுப் போவுது இண்ணு சொல்ராங்க, அத்தொட்டு ஸ்டடி ஸ்டாப் (study stop) பண்ணிவிடலா மிண்ணு பாக்கரேன், நீங்க என்ன சொல்ரைங்க பிரதர்ஸ் ? (brothers)

கு. அப்படியே செய்யலாம் அப்பேன். 

மு. அப்போ சும்மாவா இருப்ப வூட்லே? 

ச.மு. ஓ நோ (Oh no!) அது செய்ய மாட்டேன். எடுக்கேஷன் (Education) ஓட எப்பவும் டச்லே (touch) இருக்கணும். பச்சையப்பாஸ் காலேஜ் டிரஸ்டி (Pachayappah’s College Trustee) ஆவது; இல்லப்போனா யூனிவர்சிடி பெல்லோ (Uniuersity fellow) ஆவது ஆவ டிரை (try) பண்ணலாமிண்ணு இருக்கரேன். 

மு. பச்சைப்பாஸ் டிரஸ்டிக்குத் (Pachayappah’s trustee,) தான் டிரை (try) பண்ணு அப்பேன், கஷ்டமில்லெ. அதுலெ பேச வேண்டியதில்லே, மீட்டிங் (meeting) கூடம் அட்டென்ட் (attend) பண்ணவெண்டியதில்லெ. 

சின்னசாமி முதலியார் வருகிறார். 

சி. அப்பேன், சபாபதி, பரீட்செ பாஸ் (Pass) ஆச்சாமே! ரொம்ப சந்தோஷம். 

ச.மு. வாங்க! வாங்க! வாத்தியார்! வாட் ந்யூஸ் (what news?) என்னா சமாசாரம்? 

சி. ஒன்றுமில்லே மேல் பரீட்சைக்கு தமிழ் பாடம் படிக்க வேணுமே இண்ணு.- 

ச.மு. ஓ! அதெல்லாம் கிடையாதே! சமாசாரம் தெரியாதோ? இப்போ யூனிவர்சிடியிலே பைபில் கேஷன் இன்ட்ரொட்யூஸ் (University biblecation introduce) பண்ணிவிட்டாங்களே? பி.எ. (B. A) கிளாஸ்லெ (class) போனதும் தமிழே பேசக்கூடாது; மெட்ரிகுலேஷன் பாஸ் (matriculation pass) பண்ணதும், அல்லாம் இங்லீஷே (english) பேசணும்; தமிழெல்லாம் மறந்து பூடணும். 

சி. சரிதான் அப்பேன் – ஆனாலும் நீ பாஸ் பண்ணத்துக்காக ஒரு சாத்துக்கவி பண்ணேன், அதெ படிக்கரேன் கேக்கரையா? 

ச.மு. ஓ! சாத்துக்கவியா? ரொம்ப சந்தோஷம் – ஆனா அதெ கொஞ்சம் பொறுத்து, என் சிநேகி தருங்கல்லாம் வருவாங்க, ஒரு ஈவினிங் பார்ட்டி (evening party) வைச்சிருக்கரேன், அப்பொ அவுங்க எதிருக்க படியுங்க – வைச்சூட்டுப் போங்க இப்படி. 

[அவர் ஒரு காகிதத் துண்டை மேஜைமீது வைக்கிறார்] 

கொஞ்சம் நேரத்துக்கெல்லாம் வாங்க. 

சி. அப்படியே தம்பி. 

[போகிறார்.]

சபாபதி வாடிய முகத்துடன் வருகிறான். 

ச. என்னாப்பா அது! சும்மா பாஸ் (pass) பண்ணூட்டேன் பாஸ் (pass) பண்ணூட்டேன் இண்ணு மாத்ரம் சொல்ரே! உனக்கு இன்னும் கொஞ்சமாவது புத்தி யில்லெ அப்பா! 

ச.மு. என்னாடா அது! டாம் புரூட்! (damn brute!). 

ச. இங்கே எல்லாம் போடாதே, தபால் ஆபீசுலெ போடு இண்ணு சொன்னையா – நானு அப்பவே நெனைச்சேன் தப்பு இண்ணு, ஆனாலும் நீ சொல்ரத்துக்கு எதிர்த்துப் பேசக்கூடாது இண்ணு பேசாதே போனனா போனதுக்கு நல்ல தொடப்பக்கட்டு அடி ஆப்டுது! 

ச.மு. ஏன்? 

ச. ஏனா? தபாலாபீசிலெ எல்லாரும் உக்காந்துகினு இருக்கர எடத்துலே நடுப்புர போட்டேன்; போட்டுட்டு இத்தெ யாரானா எடுத்துகினு போராங்களா இண்ணு மொள்ளமா ஒளிஞ்சிகினு பாத்துகினு இருந்தேன்? கொஞ்சம் பொறுத்து அங்கே பெருக்கரவ வந்து, அத்தெ பெருக்கிம்போயி குப்பையிலே கொட்ட போனா! – உடனே எனக்கு கோபம் வந்து, அவகிட்ட போயி, அப்படியே புடிச்சிகினேன்! அப்புறம் ரெண்டு பேரும் சண்டெ போட்டோம். 

ச.மு. அப்புறம்? 

ச. அப்பறம் — எனக்கு தொடப்பக்கட்டெ அடிதான்!

ச.மு. அந்த காகிதம் என்னமாச்சு? 

ச. ஆ! அத்தெ மாத்திரம் உடலே அப்பா! அந்த குப்பெ தொட்டியிலே தேடி பார்த்தேன், என் கண்ணுக்கு ஆப்பிடலெ, சரிதான் இருக்கட்டும் இண்ணு, அங்கேயிருந்த குப்பை யெல்லாம் ஒண்ணுகூடம் உடாதெ, தபால் பெட்டியிலே வாரி போட்டூட்டு வந்தூட்டேன்! 

ச.மு. டெலிகிறாமே (Telegram) தபால் பெட்டியிலெ ஏண்டா போட்டே? அதுக்கு ரூபா வாங்கிகிணு போகலே அம்மா கிட்ட? 

ச. உம்! சொன்னையா அப்பா அது எனக்கு? என்னா முட்டாளாயிருக்கரெ அப்பா? என்னப்பாது, இதுதானா நீ பாஸ் (pass) பண்ணது? எனக்கென்னமோ சந்தேகமா இருக்குதுப்பா! 

ச.மு. போ அதனப்பிரசங்கி! ரெகுலர் இடியட்! (regular idiot) வாய் மாத்திரம் இருக்குது! 

[சபாபதி கீழே இறங்கிப் போகும்பொழுது வழியில் சுந்தரமூர்த்திப் பிள்ளையைச் சந்திக்கிறான்.] 

சு. யாரப்பா அது? இது சபாபதி முதலியார் வீடுதானா? 

ச. ஆமாம். 

சு. அவர்தானே சபாபதி முதலியார்? 

ச. ஆமாம். 

சு. பி.ஏ.(B.A.) பாஸ் (pass) பண்ணி இருக்கிறாரல்லா இவரு? 

ச. அது மாத்திரமா? அல்லாபாசும் பண்ணி இருக்கிறாரு.

ச.மு.வாங்க! வாங்க! சார் (sir) 

சு. ஓ யூ (you) வா! ஹுவோ (who) வாட் ஓ! (what) ஐ தாட்டு (I thought) யூ, (you) வா! (உட்கார்ந்து நான் லிஸ்டெ (list) பார்த்தெ அப்பேன்,  அதிலெ சபாபதி முதலியார், பி.ஏ.(Sabapathy Mudaliar,B.A.) இண்ணு போட்டிருந்துதா, யாரோ இண்ணு பாத்தேன்! நீதானே? ரொம்ப சந்தோஷம் உன் வோட் (vote) நான் ஆஸ்க் (ask) பண்ணவே வேண்டிய தில்லையே- 

ச.மு. என்னா ஓட்டு? 

சு. இந்த முனிசிபல் பாலிடிலே (Municipal polity) நானும் ஒரு கமிஷன் (commission) ஆகலா மிண்ணு டிரை (try) பண்ரேன். 

ச.மு. இப்பொ முனிசிபாலிடி (Municipality) எல்லாம் பேர் மாத்திட்டாங்களே தெரியுமா? 

சு. ஆமாமாம்,இப்பொ, முனிசிபல் கோ – ஆபரேஷன் (Municipal co-operation) இண்ணு பேர் மாத்திட்டாங்க தெரியும். அப்பேன், உன் ஓட்டெ எனக்குக் கொடுக்கணும்; அதாம் கேக்க வந்தேன். 

ச.மு. எத்தனி ஓடு இருக்குது எனக்கு? 

சு. ஒண்ணுதாம்போலே இருக்குது. 

ச.மு. நான் ஒண்ணு யோசன பண்ரேனுங்க. இப்பொ நான் பாஸ் (pass) பண்ணப் பிறகு ரெஸ்பான்சிபல் (responsible) அதிகமா போச்சுங்க! படிச்சவங்களுக்குத் தான் நான் ஓட் பண்லாமிண்ணு இருக்கிறேன். நீங்க அவ்வளவா படிக்கலெபோலெ யிருக்குதே- 

சு. இல்லெ அப்பேன் தமிழ் நண்ணா படிப்பேன். இங்கி லீஷ் ஒக்காபிலரி (Egitsh vocabulary) வரைக்கும் எல்லாம் படிச்சிருக்கிறேன். 

ச.மு. கமிஷனர் (commissioner) ஆகணும் இண்ரைங்கனே, கமிஷன் இண்ணா என்னா தெரியுமா உங்களுக்கு? 

சு. கமிஷன் (commission) இண்ணா தரகு இண்ணு சொல்ராங்களே, அதுதானே? 

ச.மு. சரி, அந்த கமிஷன் commission) வாங்கத் தெரியுமா உங்களுக்கு? அதுக்கெல்லாம் மர்ச்சென்ட்ஸ் (merchants) ஆயிருந்தால் சரி, வாண்ட் ஸார்ட், (land lord) வீட்டு வரி வாங்கி சாப்பிடுகிற உங்களுக்கு என்ன தெரியும்? 

சு. அதெல்லாம் கத்துக்குவேம்பேன். நீ மத்திரம் உன் வோட் (vote)- 

ச.மு. அதெல்லாதே,ரோட் (road) எல்லாம் கிளீன் clean) பண்ணனும், சாக்கடை யெல்லாம் வாரணும், இதெல் லாம் உங்களாலே முடியாது; இதெல்லாம் முன்னே கத்துகினு வாங்க,அப்புறம் ஐ கிவ் ஒட்,யூமேக் அட் டெம்ட் (I give vote, you make attempt.) 

சு. வாட் ஐ மேக்கு (What I make) அப்பேன்! ஆல் யுவர் மேக்கே மேக்! (all, your make) நீங்கள்ளாம் மனசு வைச்சா தானே! – இப்போ கொஞ்சம் வேலெ யாயிருக்கராப்போலெ இருக்குது; நானு இன்னொரு வேளெ வர்ரேன் அப்பேன். 

ச.மு. வாங்க. 

[சுந்தரமூர்த்தி முதலியார் போகிறார்]

சபாபதி இரண்டு மூன்று தபால் காகிதங்களைக் கொண்டு வருகிறான் 

ச. தபால் வந்தது அப்பா. 

ச.மு. [மேல் விலாசங்களைப் பார்த்து] நான்சென்ஸ்! (nonsense! இத்தை யெல்லாம் யார் உன்னெ வாங்கச் சொன்னது? இந்த அட்ரெஸ் (addrss) எல்லாம் தப்பு? நேத்தே நான் சொன்னேனே! எனக்கு இனிமேலெ காயிதம் வந்தா எம்.ஆர்.ஆர்.வொய், சபாபதி முதலியார், எஸ்கொயர், ரூட் எம்.பி.(M. R. Ry. Sabapathy Mudaliar, Esquire, root M.P.) இண்ணு இருந்தாதான் வாங்கணும், இல்லாப்போனா அட்ரெஸ் (address) தப்பு இண்ணு வாபஸ் பண்ணணும்; இனிமேலே நியாபகம் வைச்சிக்கோ போ, பத்திரம். [சபாபதி போகிறான்] 

கு. எம்.பி.(M.P.) இண்ணா என்னா பிரதர் (brother)?

ச.மு. இதுகூடவா தெரியாது? அதுக்குத்தான் எதுக்கும் பாஸ் (Pass) பண்ணி யிருக்கணும் இண்ரது! எம்.பி. (M.P) இண்ணா மெட்ரிக் பாஸ் (Matric Pass) இண்ணு அர்த்தம். நான் அனுப்பின ன்விடேஷன் (invitation) லே கூடம் சபாபதி முதலியார் எஸ்கொயர் எம்.பி. (Sabapathy Mudaliar, Esquire, M.P.) இண்ணு போட்டிருந்தேனே பாக்கலே? 

மூன்று பாடகர்கள் வருகிறார்கள் 

மூவரும்: நமஸ்காரம். 

ச.மு. ஓ! ஆல் ரைட்! (Oh all right) வந்தைங்களா! சந்தோஷம். நீங்க உங்க வாத்யங்களெ யெல்லாம் அப்படி வைச்சூட்டு கீழேபோயிருங்க, நான் கூப்பிட ரப்போ வாங்க – அப்புறம் கூப்பிட்ரேன். இன்னம் கொஞ்சம் நேரம் பிடிக்கும் கச்சேரி ஆரம்பிக்க. 

[பாடகர்கள் வாத்தியக் கருவிகளை மூலையில் வைத்துவிட்டுப் போகிறார்கள்.] 

நான் வந்து ஆன்ட் நாச் பிரதர். (ant-nautch brother) நாழியாச்சி, நாம்போ போய் டிரெஸ் எக்சேன்ஜ் (dress exchange) பண்ணிகினு வரலாமா? நீங்களும் போயி சீக்கிரம் டிரெஸ் எக்சேன்ஜ் (dress exchange) பண்ணிகினு வாங்க. 

[குமரகுருவும் முருகேசமும் போகிறார்கள்.]

சபாபதி வருகிறான் 

ச.மு. சபாபதி! நீ இங்கே எல்லாம் தொடச்சிவை. பாய் எல்லாம் போட்டுவை. சாமான்களெ என்னமானா உடைக்கப் போரே பத்திரம்! 

[போகிறான்]

[உள்ளிருந்து] அடே சபாபதி, கடெ சாமானுக்கு லீஷ்டு (list) எழுதணும் ஒரு துண்டு காகிதம் கொண்டா. 

ச. துண்டு காயிதமா? – இங்கே எங்கே இருக்குது ? [தேடிப் பார்த்து] இதோ ஒண்ணு கெடக்குது. 

(சின்னசாமி முதலியார் வைத்துவிட்டுப்போன சாற்றுக்கவி காகிதத்தை எடுத்துக்கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வருகிறான்.) 

ஆ! பாத்தையா திருடன்! [மூலையிலிருக்கும் குழலை எடுத்து] நேத்தும்புடிச்சு அம்மா காணம் இண்ணு கோவிச்சிகினு இருந்தாங்களே, இந்த அடுப்பு ஊதாங்குழாயெ எவனோ திருடிகினு வந்து இங்கே ஒளிச்சி வைச்சிருக்கிறான்; ஆவட்டும் ஆவட்டும்! மின்னெ இத்தெ அம்மாகிட்ட கொடுத்தூடரேன். 

[உள்ளே கொண்டுபோய் வைத்துவிட்டு வந்து] 

வைச்ச திருடன் யாரிண்ணு பாக்கணும். 

[சாமான்களை யெல்லாம் துடைத்துக்கொண்டு வரும்பொழுது ஒரு நாற்காலியைக் கீழே தள்ளி உடைத்துவிடுகிறான்] 

ஐ ஐயொ! அப்பா வந்தா கோவிச்சிக்கும் – இதுக்கு ஒரு யுக்தி பண்ணனும். 

[அந்த உடைந்த நாற்காலியை அப்படியெ சரியாக இருப்பதுபோல் நிறுத்தி வைக்கிறான்.] 

சபாபதி முதலியார் வருகிறார். 

ச.மு சரி. [உடைந்த நாற்காலியின் மீது உட்கார அது கீழே விழுகிறது]

ச. என்னாப்பா! அந்த நாற்காலியை உடைச்சூட்டையே! அம்மா பாத்தா கோவிச்சிக்கி வாங்களே. 

ச.மு. நெவர்மைன்ட்! (never mind) இத்தெ எடுத்து பக்கத்து ரூம்லே போட்டுடு அம்மாகிட்ட ஒண்ணும் சொல்லாதே தெரியுமா? சரி – நீ போய் சீக்கிரம் அந்த ஐஸ் கிரீம் (ice cream) தயார் பண்ணு, தெரியுமா? ஜாக்கிரதெ, ஐசையும் (ice) உப்பையும் ஒண்ணா போட்டு, பாலெ வேறே உடனும், அப்புறம் சும்மா சுத்தணும், தெரியுமா? 

ச. தெரியும் தெரியும்பா. 

ச.மு. தெரியும் இண்ணு சொல்லிவுட்டு நீ என்னமான கெடுத்துவைப்பே. அந்த மூலையிலே உக்காந்துகிணு என் எதிர்க்கவே பிரிபேர் (prepare) பண்ணு. 

ச. அப்படியே ஆவட்டும்பா. 

[ஓர் மூலையில் உட்கார்ந்துகொண்டு, உப்பையும், ஐசையும் ஐஸ்கிரீம் மெஷினின் (ice cream machine) நடுவிலுள்ள துத்தனாக டப்பாவில் போட்டு, அதற்கு வெளியில் பாலை வார்த்து சுற்றுகிறான்.]

முருகேசம், ரங்கநாதம், நரசிம்மாசாரி முதலிய சிநேகிதர்கள் வருகிறார்கள். 

ச.மு. வாங்க! வாங்க! பிரதர்ஸ்! (brothers) 

[எல்லோரையும் கைலாகு கொடுத்து நல்வரவேற்கிறார்] 

ந. என்னா பிரதர், (brother) எக்சாமினேஷன் ரிசல்ட்ஸ் (examination results) இன்னும் பப்ளிஷ் (publish) பண்ணலையே, உங்களுக்கு மாத்திரம் என்னமா தெரிஞ்சுது? 

ச.மு. என் பிரதர் – இன்-லா (brother-in-law) பிரைவேட்டா (private) இன்குவை (enquire) பண்ணி எழுதனான் எனக்கு. 

உக்காருங்க பிரதர்ஸ்.(brothers) 

[எல்லோரும் உட்காருகிறார்கள்] 

பஸ்டு ஐடம் இன் தி புரோக்ராம் (first item in the programme) ரிப்ரெஷ்மென்ட்ஸ்! (refreshments) ஐஸ் கிரீம்! (ice-cream) 

மு. வெரி குட், பிரதர் (very good brother). 

ச.மு. ஏண்டா சபாபதி, தயாராச்சா? 

ச. இல்லேப்பா! – பால் கட்டவே யில்லேப்பா, பாலெல்லாம் வெளியிலே சிந்திப்போவுதப்பா! 

ச.மு. வாட் நான்சென்ஸ்! (what nonsense) பால் என்ன மாடா சிந்திப்போவும்? ஓட்டையா யிருக்குதா என்னா? 

[அருகில் போய்ப் பார்க்கிறார்] 

என்னாடா அது பாலெ வெளியிலெ ஊத்தனையே! தடிக்கழுதெ. 

[அவனை அடித்து]

பாலெ நடுவுலே அல்லவோ ஊத்தச் சொன்னேன்!

ச. இல்லேப்பா, பாலெ நடுவுலே ஊத்தனா- 

ச.மு. இன்னொரு வார்த்தெ பேசனா, ஓதைப்பேன் கழுதே! சொன்னபடி செய்! 

[சிநேகிதர்களிருக்குமிடம் போகிறார்] 

ச. உம் ! உம்! 

[அழுதுகொண்டே, பாலை எடுத்து உப்பும் ஐசும் போட்டிருக்கும் துத்தனாக டப்பாவில் வார்த்து சுற்றுகிறான்.] 

ச.மு. சீக்கிரம் நண்ணா சுத்து! பிரதர்ஸ் (brothers) நம்போ கொஞ்சம் பலஹாரம் முன்னே சாப்பிடலாம், அப்பறம் ஐஸ் கிரீம் (ice-cream) சாப்பிடலாம். [வெளியே பார்த்து) ஐயா! – அந்த நிமக்ஜான் முன்னே கொண்டாங்க.- 

கு. அதென்னா பிரதர் (brother) புது பலஹாரம்?

சு.மு. அல்லாம் பாத்து சொல்லுங்க. 

[ஒரு பிராம்மணன் உப்புமாவை தொன்னைகளில் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுக்கிறான்] 

கு. என்னா, பிரதர் (brother) உப்புமாவா யிருக்குதே?

ச.மு. உப்புமாவுதான், அதுக்கு வேறெ பேர் வைச்சேன்

மு. ஏன்? 

ச.மு. இந்த பிளான் (plan) சத்குண விலாச சபையிலிருந்து கத்துகினேன் பிரதர் (brother) – அங்கே ரிப்ரெஷ் மென்ட் (refreshment) சாப்பிடர மெம்பர் (member) இண்ணு ஓர்த்தர் இருக்கராரு, அவர் என்ன செய்ய ராருண்ணா, ஒரே பலகாரத்துக்கு வாரத்துக்கொருதரம் பேரெ சேன்ஜ் (change) பண்ராரு! அப்படி பேரெ மாத்தனா, டேஸ்ட் (taste) டிபர் (differ) ஆகுதாம் அத்தொட்டு சாதாரணமா உப்புமாவுண்ணா நண்ணா யில்லெ இண்ணு, வேறெ பேர் வைச்சேன். 

மு. ஆமாம் பிரதர், (brother) நீங்க சொல்ரது சரிதான், இதுலெ டேஸ்ட் (taste) டிபரன்டா (different) தான் இருக்குது, உப்பே யில்லெ இதுலே. 

ச. மு . ஏன் ஐயர்? உப்புமாவுலையா உப்பு போட மறந்து பூட்டைங்க ? தாலி கட்டர சம்பிரமத்லே, கலியாணத்தெ மறந்துபூட்டானாம்! உங்களுக்கு நல்ல பனிஷ்மென்ட் (punishment) பண்ணனும்! நெக்ஸ்ட் டைம் (next time) நானு உப்புமாவு ஆர்டர் (order) பண்ணா, உப்பு டபிலர் (double) போட்டுக் கொண்டாரணும், காபகம் வைச்சிகுங்க – அடே, சபாபதி! ஐஸ் கிரீம் (ice-cream) கட்டிச்சாடா? 

சு. இல்லேப்பா! இன்னம் கட்டலே! 

கு. பரவாயில்லே பிரதர். (brother) அதெ அப்படியே லிக்விட் (liquid) ஆ சாப்பிட்டாக்கூட நண்ணா யிருக்கும் பிரதர். 

ச.மு. ஆனா ஐயர், அதோ அந்தப் பாலே ஆளுக்கு கொஞ்சம் தொன்னையிலே வாத்து கொடுங்கையா 

[ஐயர் அப்படியே செய்கிறார்; எல்லோரும் ருசி பார்த்து காரி உமிழ்கிறார்கள்.] 

என்னா பிரதர் (brother) சமாசாரம்? நண்ணா யில்லையா என்னா? 

கு. இல்லே பிரதர் (brother) கொஞ்சம் உப்பு அதிகமா யிருக்குது. 

ச.மு. ஐஸ் கிரீம் (ice-cream) லே கொஞ்சம் உப்பு அதிகமா யிருக்குதா! அதுலே யார் உப்பெ போட்டது ? 

[தானும் கொஞ்சம் ருசி பார்த்து]

து ! து! – அடே, சபாபதி இங்கே வாடா, இதுலெ யார்டா உப்பெ போடச் சொன்னது உன்னே? – 

ச. இல்லேப்பா, நீ கோவிச்சிக்காதேப்பா. நான் வெளியிலே பாலெ வாத்து சுத்தனனா, அப்புறம் நீ அது தப்பு, நடுவுலே பாலே வாக்கணும் இண்ணு சொன்னையே, அப்பவே நடுவுலே உப்பும் ஐசும் போட்டிருக்குதே இண்ணு சொல்லலாம் இண்ணு வாயெடுத்தேன். அதுக்குள்ள பேசனா ஓதைப்பேன் இண்ணு சொன்னையா? அத்தொட்டு பேசாதிருந்தூட்டேம்பா – நானு என்ன செய்யரதப்பா? 

சு.மு. இப்போ என்ன செய்யரது பிரதர்ஸ் (brothers) – அவன் சொல்ரதும் கொஞ்சம் வாஸ்தவம்தான். எம் பேர்லேயும் கொஞ்சம் மிஸ்டேக் (mistake) இருக்குது: போனா போவுது, இத்தெயெல்லாம் கீழே கொண்டும் பூடு – கீழே வைச்சூட்டு, அந்த பாடகருங்க வந்தாங்களே, அவங்களெ மெத்தமேலே வரச்சொல். 

[சபாபதி ஐஸ்கிரீம் மெஷினில் (ice cream machine) இருந்ததை யெல்லாம் கடத்தில் கொட்டிவிட்டு மெஷினைக் கீழே கொண்டு போகிறான்.] 

கு. இந்த பாடகர் யாரு பிரதர்? (brother) புதுசா இருக்குது? 

ச.மு. நாகசர ஐயர் இண்ணு தஞ்சாவூர் ஜில்லாவிலிருந்து வந்திருக்கிறாரு, அங்கேயெல்லாம் ரொம்ப நொடோ ரியஸ் (notorous) பேர் போனவர். இங்கே பாடனாகா மூணு தெருவுக்கு அப்பாலெ கேக்கும் ரொம்ப கிளெவர் (clever) மான், (man) ஒரு கச்சேரிகி, கல்கண்டு மாத்தரம் பத்து பலம் சாப்பிடராரு.– 

சபாபதி பாடகர்களை அழைத்துக்கொண்டு வருகிறான். 

நா.ஐ. ஆரம்பிக்கலாமா? 

ச.மு. உம் – ஆரம்பிங்க ஆரம்பிங்க. 

[நாகேஸ்வர ஐயர் தம்புருவை எடுத்துக்கொண்டு வந்து ஸ்ருதி செய்கிறார்.] 

கோ.ரா. என் புள்ளாங்கொழல் – காணோங்க! 

[தேடுகிறான்] 

ச. என்னா ஐயா தேடரைங்க! 

கோ.ரா. புள்ளாங்கொழல் – இங்கே தான் வைச்சேன்.

ச. என்னமா யிருக்கும் அது? 

கோ.ரா. மூங்கில் கொழாயாட்டம் இருக்கும். 

ச. [ஒரு புறமாக சபாபதி முதலியாரிடம்] இந்தாப்பா நேத்தும்புடிச்சி அம்மா அடுப்பு ஊதர கொழாயெ நான் தான் திருடிகினேன் இண்ணு சொல்லிகிணு இருந்தாங்களே! அத்தெ ருடன் ஆசாமியெ கண்டு புடிச்சூட்டேம்பா – இவர்தாம்பா, திருடிகினு போயி இண்ணைக்கு கொண்டாந்து இங்கே வைச்சூட்டாரு. நானு எடுத்துகினு போயி அம்மாகிட்ட கொடுக்க வச்சிருக்கேம்பா. 

சு.மு. வாட் நான்சென்ஸ் (what nonsense!) அதுவா அடுப்பு ஊதர கொழா! கொண்டு வாடா போயி சீக்கிரம். 

[சபாபதி போகிறான்] 

ஐயா, கோபிநாத் ராவ். உங்க கொழல் வருது பயப் படாதைங்க, அத்தெ எங்க மதர் (mother) பாக்கணும் இண்ணாங்களாம். எப்படி வாசிக்குது இண்ணு அதுக்காக என் வேலெக்காரன் கீழே கொண்டுபோய் கொடுத்தானாம்.- 

சபாபதி குழலைக் கொண்வந்து கொடுக்கிறான்.

நா.ஐ. பிள்ளெ, இப்படி வந்து உக்காருங்க. 

ச.மு. என்னா அவருக்கு? 

நா.ஐ. அவருக்கு கண் கொஞ்சம் மத்திபம். 

ச.மு. ஓ! ஐசி! (Oh I see !) அதாம் கடம் வாசிக்கிறார்.

கோ.பி. அந்த கடத்தெ கொஞ்சம் கொண்டாரச் சொல்லுங்க.

நா.ஐ. அப்பா,அந்த கடத்தெ கொஞ்சம் கொண்டாப்பா. 

ச. என்னாத்தெ? 

நா.ஐ. அந்த கடத்தெ. 

ச. கடமிண்ணா? 

நா.ஐ. அந்த பானேடப்பா. 

ச. பானையா? அதென்னாத்துக்கு உங்களுக்கு? 

ச.மு. அடே! அதனப்பிரசங்கி! எல்லாத்துக்கும் குறுக்கே பேசிக்கினு! – கொண்டாந்து குடு மின்னே. 

ச. இப்பவே நானு சொல்லிட்டேம்பா, அத்தெ அவரு ஓடைச்சாரு இண்ணா, அப்புறம் ரொம்ப கஷ்டம். 

[கொண்டுவந்து கொடுக்கிறான்] 

நா.ஐ. என்ன ராகம் பாடலாம்? 

ச.மு. சொல்லுங்க பிரதர்ஸ் (brothers) என்னாராகம் வேணும்?

கு. ரூபகம் பாடச் சொல்லுங்க. 

நா.ஐ. அது – தாளம் – ஆச்சே? 

ச.மு. ஓ! -அவரு நீங்க என்னா தாளம் பாடரது இண்ணு கேட்டைங்க இண்ணு நெனைச்சாப்போலே இருக்குது, ஐயா. நரசிம்மாசாரி, நீங்க சொல்லுங்க என்னா ராகம் பாடணும். 

க. தேசிகர் தோடி பாடச் சொல்லுங்க. 

ச.மு. என்னா ஐயா, இதுலே கூடமா வடகலெ தென்கலெ சண்டெ? ஐயா, நீங்கள் தேசிகர் ராகம் ஒண்ணும் பாடத் தேவலே, மணவாளமாமுனி ராகமா ஏதாவது பாடுங்கோ! 

நா.ஐ. கல்யாணி பாடரேனுங்க. 

ச.மு.சரிதான். 

[கலியாணி ராகம் ஆலாபனை செய்து பிறகு அதில் பல்லவி பாடுகிறார்] 

ஐயா, தாளத்தெ கொஞ்சம் கவனியுங்க. 

கோ.பி. இந்த கடம் என்னமோ பளுவா யிருக்குதே. 

நா.ஐ. கொஞ்சம் இழுத்துப் போடுங்க. 

ச. வாணாம்! வாணாம்! 

ச.மு. அடே! பேசாதிரு, இதிலே எல்லாம் தலெ நொழைச்சிக்காதே. 

[கோவிந்தபிள்ளை கடத்தின் மீது பலங்கொண்டு முத்தாயிப்பு கொடுக்க, கடம் உடைந்து உள்ளே யிருக்கும் உப்பும். பாலும், ஐசும அவர் மீதெல்லாம் விழுகிறது] 

கோ.பி. இதென்னாவுங்க!– 

ச. நானு அப்பவே சொல்லலே வேணாம் இண்ணு! ஒடஞ்சா கஷ்டமிண்ணு சொல்லலே? 

ச.மு. அடே! தடிக்கழுதெ! என்னாடா செய்தே! இதிலெ ஏண்டா இத்தையெல்லாம் ஊத்தனே? 

ச. இல்லேப்பா, நானு கீழே கொண்டுபோய் ஊத்திவுடலாமிண்ணு பாத்தேன், இதுக்குள்ளே நீ அவர்கிட்ட கொடுக்கச் சொன்னையா, உடனே கொடுத்துட்டேம்பா! அதுக்குத்தான் மொதல்லேம்புடிச்சி மொள்ளமா அடிங்க மொள்ளமா இடிங்க, இண்ணு அவர் கிட்ட சொல்லிகினு இருந்தேன். 

ச.மு. இந்த இடியட்டே (idiot) என்னா செய்யரது பிரதர்? (brother) அப்புறம் உனக்கு செய்யவேண்டிய வேலெ செய்யரேன், இப்போ கீழே போயி, நல்ல பானையா ஒரு பானெயெ வாங்கிகினு வா [சபாபதி கீழே போகிறான்] அது வரவரைக்கும் கொஞ்சம் கச்சேரியெ நிறுத்தி எங்க தமிழ் வாத்தியார் எம்பேர்லெ ஒருசாத்துகவி பாடி யிருக்கராரு, அதெ படிப்போம் – எங்கே அவர் வரலே இன்னம்? பரவாயில்லே – நரசிம்மாசாரி, நீங்க ராகத்தோட நண்ணா படிப்பைங்க – எங்கே அந்த சாத்துகவி எழுதன காயிதம்? அடே சபாபதி! இங்கே வா இப்படி. 

சபாபதி மறுபடி வருகிறான் 

எங்கேடா அந்த தமிழ் வாத்தியார் ஒரு காயிதம் வைச்சூட்டுப் போனாரே இங்கே? 

ச. அந்த காயிதமா? இதோ கொண்டாரேம்பா [போகிறான்]

ச.மு. ஒரு நிமிஷம் சும்மா இருக்கமாட்டேண்ரா! என்ன மானா தப்பு பண்ணிகினு இருக்கரான்! 

[சபாபதி மறுபடி வருகிறான்]

ச. இதோ அப்பா? 

ச.மு. அவர்கிட்ட குடு – நீங்க ராகத்தோடு படிங்க பிரதர். (brother). 

[சபாபதி கீழே போகிறான்] 

ந. [காகிதத்தைப் பார்த்து] இத்தெ என்னமா பிரதர் (brother) ராகத்தோடே படிக்கிறது – என்னமோ தப்பா யிருக்குது பிரதர் (brother). 

ச.மு. நீங்ககூட என்னா பிரதர், (brother) சபாபதியெப் போலே சொல்ரத்துக்கெல்லாம் குறுக்கா சொல்லிகினு இருக்கரைங்க — இருக்கரத்தெ ராகத்தோடே படிங்களேன். 

ந. உங்க இஷ்டம். 

[ராகத்துடன் பாடுகிறார்]. 

மஞ்சள் ஐந்து பலம், குங்குமம் பத்து பலம், வெற்றிலை நாலணா, பாக்கு அரைவீசை – 

ச.மு. என்னா பிரதர் (brother) இது? சாத்துக்கவியா இது? 

ந. அதுக்குதாம் அப்பவே சொன்னேன், ஏதோ தப்பா எழுதி யிருக்குதிண்ணு – ஓ! இந்த பக்கம் எழுதி இருக்கராரு – 
சபாபதி ஒரு கரிப்பானையைக் கொண்டு வருகிறான்.

ச. இந்த பானே தவிர வேற பானெ இல்லேப்பா!

ச.மு. ஏண்டா? கரிப்பானெயா கொண்டாரச் சொன்னேன்! 

ச. அவருக்கு கண்ணு தெரியாதப்பா!

ச.மு. போ வெளியே அதனப் பிரசங்கி! 

[அவனைப் பிடித்துத்தள்ள, பானை கீழே விழுந்து உடைகிறது] 

ஒரு தபால்காரன் வருகிறான். 

த. நாயினா தந்தி வந்திருக்குது. 

ச.மு. தந்தியா? கொண்டா இப்படி. 

(கையெழுத்துப்போட்டு அதை வாங்கிப் பிரித்துப் பார்க்கிறார். தபால்காரன் போகிறான்) 

மு.கி. என்னா பிரதர் (brother) விசேஷம்? 

ச.மு. மை மதர் இன் லா நியர் ரிலேடிவ் டைட் (my mother in-law near relative died) நான் உடனே புறப்பட வேண்டியதாயிருக்குது.- ஐயா, கொஞ்சம் கச்சேரியெ நிறுத்துங்க – நெக்ஸ்ட் டிரெயின் (next train) எப்பொ பொறப்படுது பிரதர்? (brother) 

மு. ஆறு மணிக்கு புறப்படுது. 

ச.மு. அப்போ நான் உடனே பாக் (pack) பண்ணணும். உங்களை யெல்லாம் டிஸ் அபாயின்ட் (disappoint) பண்ரது எனக்கு ரொம்ப வருத்தமா யிருக்குது பிரதர்ஸ் (brothers) ஆனாலும் இது ரொம்ப அர்ஜென்ட் மாடர் (urgent matter) நீங்கல்லாம் இப்போ தயவு செய்து டேக் லீவ் (take leave) பண்ணுங்க, இன்னொரு நாளைக்கி இந்த பார்டி (party) வைச்சிகலாம். 

[சபாபதி முதலியாரும் சபாபதியும் தவிர, மற்றவர்களெல்லாம் போகிறார்கள்] 

ச. என்னாப்பா சமாசாரம்? 

ச.மு. உடனே சாமான்களெல்லாம் பாக் (pack) பண்ணணும், – ஊருக்குப் போவணும். 

ச. ஏம்பா? 

ச.மு. இத்தெ யாரு கிட்டவும் சொல்லாதே இப்போ! தெரியுமா? – மச்சான் கிட்ட யிருந்து தந்தி வந்தது, நீ பாஸ் (pass) பண்ணதாக எழுதியனுப்பனனே அது தப்பு. பாஸ் (pass) பண்ணது பட்டணத்திலே யிருக்கிற பம்மல் சபாபதி முதலியார், எனக்கு சொன்னவங்க முன்னே தப்பா சொன்னாங்க, மன்னிக்கணும், இண்ணு தந்தி கொடுத்திருக்கிறான். 

ச. அட்டெ! அப்பவே நெனைச்சேம்பா. 

ச.மு. எனக்குக்கூடம் சந்தேகமாயிருந்துது, என்னமா பாஸ் பண்ணோம் இண்ணு; இப்போ இன்னம் ஒரு மாசம் பட்டணத்துலேயே இருக்கக்கூடாது. இவ்வளவு தூரம் எல்லோருக்கும் சொல்லி கில்லி, பார்ட்டி யெல்லாம் கொடுத்த பிற்பாடு, ரொம்ப வெட்கக்கேடா போகும்.

ச. ஆமாம்பா – இத்தெயெல்லாம் நெனைச்சிகினா எனக்கே சிரிப்பாயிருக்குதுப்பா. ஏம்பா, இத்தெ யெல்லாம் ஒரு நாடகமா போட்டா நண்ணாயிருக்காதாப்பா!

ச.மு. அப்படிதான் எனக்கும் தோணுது – நீ போயி சீக்கிரம் பாக் (pack) பண்ணு. 

ச. [கொஞ்சதூரம் போய் திரும்பிவந்து] ஏம்பா, அப்படி போட்டா அதுக்கு என்னாப்பா பேர் வைப்பே? 

ச.மு. எம்பேர்தான் வைக்கலாமிண்ணு யோசிக்கிறேன். 

ச. ஏம்பா,எம்பேர் கொஞ்சம் வையேம்பா? 

ச.மு. சத்! நான்சென்ஸ்! (nonsense) அதெல்லாம் ஒதவாது எம்பேர்தான் வைக்கணும். 

ச. ஆனா – சபாபதி இண்ணு வை அப்பா, யாரு எப்படி ஓணுமிண்ணாலும் நெனைச்சிகட்டும்பா.

[போகிறான்] 

ச.மு. அவன் சொல்ரதும் ஒரு யுக்திதான்! 

நாடகம் முற்றிற்று.

– சபாபதி முதற்பாகம், நாடகப் பேராசிரியர் ப.சம்பந்த முதலியார், பி.ஏ.பி.எல். அவர்களால் இயற்றப்பட்டது, நான்காம் பதிப்பு, 1956.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *