சனிப்பிணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 8, 2025
பார்வையிட்டோர்: 66 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ராமு நாடாரின் மளிகைக் கடையை விட்டுக் கிளம்பிய ஆராயி முறத்தையும் விளக்குமாற்றையும் தூக்கிநார்ப் பெட்டிக்குள் போட்டுக் கொண்டு சேரியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். பொழுது நன்றாக இருட்டி விட்டது. மேற்கேயுள்ள நெடுஞ்சாலையின் இருபுறமும் அந்த வருடம் விளையாமல் சாவியறுத்த வயல்களைத் தாண்டிக் கொண்டிருந்தாள். ஊர் பஞ்சம்போனபிறகு பெரும் பகுதியான குடும்பங்கள் சிந்தாமணிக்கும் தஞ்சாவூர் சீமைக்கும் போனது போக மிஞ்சிய ஆட்க ளில் சிலர் அங்கங்கே சிமெண்டு மடைகளின் மேல் உட்கார்ந்து வம்பளந்து கொண்டிருந்தனர். 

சாவகாசமாக இப்படிச் சிலர் உட்கார்ந்து வம்பளந்து கொண்டிருந்ததைப் பார்க்கப் பார்க்க, அவள் வேகம் இன்னும் அதிகரித்தது. அவள் போய்த்தான் வெள்ளைக் கிழவனுக்குக் கஞ்சி வைத்துக் கொடுக்க வேண்டும். வெள்ளையனுக்கு பக்கவாதம். எழுந்து நடமாட முடியாது. பத்து அடி நடப்பதற்குள் இரண்டு தடவையாவது விழுந்து விடுவான். காலையில் ஆராயி கிளம்பும் பொழுது அவனுக்குக் கொஞ்சம் கூழும் கருப்பட்டியும் கொடுத்து குடிக்க வைத்துவிட்டுத்தான் வந்தாள். ஓலைப் பாயை உதறி விரித்து கிழவனைப் படுக்க வைத்து விட்டுக் கூடையைத்திறந்து கோழி களை மேய்வதற்காக விரட்டி விட்டுத்தான் வந்திருந் தாள். கிழவன் உயிரோடிருக்கிறானா போய் விட்டா னா என்பதை அவள் போய்ப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். அவளுக்கு இப்படி கெட்டதாகவே நினைத்துப் பழக்கம். 

இதிலெல்லாம் தைரியமாக இருக்க அவளுக்குத் துணைக்கு இப்போது ஒரு தூணில்லை. ஒரு சிறு குச்சிகூட இல்லை. அவள் நாலையும் நினைத்து அடிக் கடி மனதைப்புரட்டிக் கொள்வாள். கடைசியில் அவள் நினைத்ததைப் போலெல்லாம் கெடுதியாக ஒன்றும் நடக்கவில்லையே என்பதில் பேரானந்தம் வரும். இதில் அவளுக்கு 60 வருஷம் சர்வீஸ். ஆராயி எட்டி நடை போட்டாள். அவள் மடியில் இரண்டு மூன்று அழுகல் தக்காளிப் பழங்களும் தலையிலிருந்த பெரிய நார்ப் பெட்டியின் மூலையில் கொஞ்சம் குறுணை அரிசியும் இருந்தது, அவளுக்கு அன்றைய இரவை ஒப்பேற்றப் போதுமான தைரியத்தை அளித்திருந்தது. ஊர் விளைந்திருந்தால் கதிரறுப்பிலும் களம் கட்டு கூட்டு வதிலும் கணிசமாக நெல் சேர்த்திருப்பாள். அதுவும் போக வடக்குத் தெரு பிள்ளைமார் வீட்டிலும் முஸ் லீம் வீடுகளிலும் அவ்வப்போது ரைஸ் மில்லிலும் அரைக்கும் அரிசியைத் தவிடுபுடைப்பதிலும் தினப்படிக் குச் சாப்பாட்டிற்குப் பார்த்துக் கொள்வாள். இந்தக் கொள்ளைப்பஞ்சத்தில்ரைஸ்மில்லே தூங்க ஆரம்பித்து விட்டது. பிள்ளைமார் வீட்டு நெல்லும், மலேயா சவராளிகளான முஸ்லீம்களின் வீடுகளிலும் கூட நெல் கொட்டியிருந்த மரசல்களில் அண்டும் அழுக்கும் தான் மிஞ்சியிருந்தன. 

அப்போதுதான் அவள் புதிய வேலை தேடலானாள். மளிகைக் கடை நாடார் கடையில் அரிசி வியாபாரம் அமோகமாக நடந்தது. கிராமத்து ஜனங்களுக்கேற்ற படி கல் நெல் எல்லாம் போக்கிச் சுத்தமான அரிசி போடுவது போல் பாவனை செய்து கொண்டிருந்தார். அங்கே இரண்டு மூன்று சேரிப் பெண்கள் உட்கார்ந்து அரிசி புடைப்பதும் கல் பொறுக்குவதுமான வேலையில் ஈடுபடச்செய்வதை பப்ளிக்காக எல்லோரும் பார்க் கும்படி செய்து வியாபார வேலைகளைக் காட்டிக் கொண்டிருந்தார் மளிகைக் கடைக்காரர். அதிலே ஒருத்தியாக ஆராயியும் ஒண்டிக் கொண்டாள். நட மாட்டமில்லா தகிழவனையும்வைத்துக்கொண்டுஏதோ அவள்பாடு இந்தப் பஞ்சகாலத்திற்குத் தேவலாம் என்று சொல்லி சேரியிலுள்ள மற்ற பெண்கள் ஆராயிக் கிழவியிடம் லேசாகப் பொறாமை கொண்டி ருந்தார்கள் என்பது கூட உண்மைதான். 

ஆனாலும் ஆராயி எப்போதும் வருத்தமாகவே இருப் பாள். வேலைசெய்யும் வயசுப் பெண்களைப் போல் அதிகமாய் வேலை செய்ய முடியாததைச் சொல்லிச் சொல்லிநாளைக்கு நீ வேலைக்குவரவேண்டாம்’என்று ஒவ்வொரு நாளும் மளிகைக் கடைக்காரர்சொல்வதும் மறுநாள் போய்க் கெஞ்சிக் கூத்தாடி ஒண்டிக் கொள் வதும் அவளுக்கு எப்போதும் ஒரு பயத்தை ஊட்டிக் கொண்டிருந்தது. சாகப் பிழைக்கக் கிடக்கும் கிழவ னுக்கு வாய்க்கு ருசியாக ஒன்றும் வாங்கிக் கொடுக்க முடிய வில்லையே என்று ஆராயி வருந்தினாள். போன மாசம் கால் ரூவாய்க்குத் ‘தொண்டனும்’சூடைமீனும் வாங்கி ஆக்கிப் போட்டதுதான். கிழவன் அன்றைக் குச் சிரித்துக் கிடந்தது போல் என்றைக்கும் இருந்த தில்லை. அப்படி இன்னொரு தடவை வாழைமீனாக வாங்கி ஆக்கிப் போட வேண்டுமென்ற ஆவல்’ அவளுக்கு மீன் கடைகளைப் பார்க்கும்போதெல்லாம் வரும். கிழவனுக்கும் வரவர போய்க் கொண்டிருக்கிறது. நாளும் ரொம்ப முடியாமல் அவளுக்கு ஒவ்வொரு அவன் உயிரோடு படுத்திருப்பது மிகுந்த ஆறுதலாக இருந்தது. 

ஆராயி தூரத்தில் வரும் போதே கிழவன் கோழி களைக்கூவிக் கூப்பிடும் குரலைக்கேட்டுக் கொண்டாள். இன்று அவளுக்கு மறுபடியும் ஒரு ஆறுதல். அவன் உயிரோடு தானிருக்கிறான். கண்டதை நினைத்துக் கொண்டு வரும்பொழுது ஒரு அசம்பாவிதமும் நடவாததுதான் ரொம்ப மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சிதான் அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும். 

கிழவி மெல்லக் குடிசைக்குள் வந்தாள். மூன்று கோழி களும் வந்து விட்டன. இன்னும் ஒரு விடைக் கோழி வந்து சேரவில்லை. அதற்குத்தான் கிழவன் குரல் கொடுத்துக் கொண்டே படுத்திருந்தான். நார்ப்பெட்டி யை இறக்கி ஒரு மூலையில் வைத்து விட்டு நிமிர்ந்த வளின் மடியை படீரென்று யாரோ சரசரவென்று இழுப்பது போல் இருந்தது. இருட்டில் நன்றாகக் கண்ணை இறுக்கிப் பார்த்தாள். அந்த விடலைக் குஞ்சுதான் மடியிலிருந்த அழுகல் தக்காளி பழங் களைக் கீழே தள்ளிவிட்டு ஒன்றைக் கொத்தியெறிய ஆரம்பித்துவிட்டது. 

கிழவி அவசரம் அவசரமாக மீதிப்பழங்களைப் பொறுக்கி மறுபடியும் மடியில் கட்டிக் கொண்டாள். 

அப்போது தான் கிழவன் வாயைத் திறந்தான் ‘சனியன் பகப் பூராவும் இப்படித்தானே அழிம்பு பண்ணுது” 

“வெடலைக்கு வீரம் இருக்குமில்ல. உன்னை மாதிரி அது என்ன கெழடா படுத்துக்கிடக்க’” என்று சொல்லி விட்டு, உட்கார்ந்து விடாமல் குடிசைக்கு வெளியே சேர்த்து வைத்திருந்த காட்டுக் கருவேல முள் விறகைப் பொறுக்கிக் கொண்டிருந்தாள். 

கிழவனுக்கு விடலைக் குஞ்சின் மேல் எப்போதும் ஒரு கண் உண்டு. கோழிக்குஞ்சு சாறு குடிச்சு ரொம்ப வரு ஷங்களாகி விட்டன. அதிலே அவனுக்கு எப்போதும் ஆசை. உடம்பு மோசமாக ஆக அந்த ஆசை அதிகரித் துக் கொண்டிருந்தது. கிழவி கைகளில் லேசான கீறல் களுடன் சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு உள்ளே வந்தவுடன் கிழவன் மீண்டும் பேச்சுக் கொடுத்தான். 

“அந்த வெடலையைப் புடிச்சு கூடைக்குள்ளே போடு. சனியன் இன்னும் இறக்கையை அடிச்சுகிட்டு மேலே விழுந்து கிட்டு இருக்கு. வேட்டியெல்லாம் சனியனாலே சீலைப்பேன் பத்திருச்சு.” 

கிழவி காதில் வாங்கிக் கொள்ளாமலேயே அடுத்த குடிசைக்குப் போய் ஒரு எருவாட்டியில் தீயெடுத்துக் கொண்டு வந்து அடுப்பைப் பற்ற வைத்தாள். அரிசியை அள்ளிப் போட்டு விட்டு, கோழிக்குஞ்சைப் பிடித்து கவிழ்த்திருந்த கூடைக்குள் தள்ளி விட்டாள். 

கிழவன் பெருமூச்சு விட்டுக் கொண்டே காரிக் காரித் துப்பிக் கொண்டிருந்தான். அவர்கள் அவ்வளவாகப் பேசிக் கொள்ள மாட்டார்கள். அப்படி அவர்களுக்குள் ஒரு சண்டையுமில்லை. அது அவர்கள் சுபாவம். 

கிழவி அடுப்புக்கு முன்னால் காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு பானையையும் அடுப்பையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்படி ஒன்றும் அவள் எதைப் பற்றியும் பிரமாதமாக நினைத்துக் கொண்டிருக்க வில்லை. லேசாக எதையோ மனதுக்குள் அசை போடுகிறாள். 

கூடைக்குள் போன வெடலைக்குஞ்சு படபடவென்று சிறகுகளை அடித்துக் கூடையை முன்னும்பின்னுமாகத் தள்ளிக்கொண்டிருந்தது. படுத்துக் கிடந்த கிழவனால் சும்மாஇருக்க முடியவில்லை’ என்றைக்கும்இல்லாமல் மறுபடி பேச்சுக்கொடுத்தான் “அழும்புஉள்ளேபோயும் ஓயலை. ஒருநாளைக்கு சூட்டான் போட்டாத்தான் சரி”, என்று சூசகமாகக் கிழவிக்குபுரிந்திருக்கும் என்று நினைத்துச் சொன்னான்.கிழவிக்குப்புரியவில்லையோ, காதில் விழவில்லையோ என்னவோ, கிழவி பேசாமல் அடுப்பையே பார்த்துக் கொண்டிருந்தாள். கிழவன் ஒருமுறை திரும்பிப் பார்த்து விட்டு உரக்க இருமி ஒரு முறை துப்பினான். 

கஞ்சியைக் குடித்து விட்டுப் படுத்துக் கொண்ட கிழவனும் கிழவியும் அதற்குப்பிறகுபேசிக் கொள்ளவே யில்லை. படுக்கும் போது கிழவிக்கு மளிகைக் கடைக் காரர் சொன்னது திடீரென்று ஞாபகத்திற்கு வரவே சற்று பயந்து போய் பெருமூச்சு விட்டுக் கொண்டாள். வயசுப்பெண்கள் மாதிரி தன்னால் அதிகமாகப் புடைத் தெடுக்க முடியாததை குறைசொல்லி நாளைக்கு நீ வேலைக்கு வர வேண்டாம் என்று முன்எப்போதும் இல்லாத கண்டிப்புடன் மளிகைக் கடைக்காரர் சொல்லியிருந்தார். 

நாளைக்கு நிஜமாகவே வேண்டாம் என்றால் எங்கே போவது என்ற வருத்தமும், கூடவே தன் மனம் எப் போதும்அப்படித்தான் நினைக்கும். ஆனால் அப்படி நடக் காதுஎன்று வேண்டுமென்றே அதிகமாகக் கவலைப்பட் டாள். அப்படி அவள் அதிகமாகக்கவலைப்பட்டவிஷயங் களெல்லாம் கடைசியில் சுமுகமாக நடந்தேறியிருப் பதாலேயே அப்படிக்கவலைப்பட ஆரம்பித்து நடுச் சாமத்தில் ஒப்பாரி கூட வைத்தாள். 

காலையில் வேலைக்குப் போன கிழவி மத்தியான வெயிலோடு குடிசைக்குத் திரும்பிவிட்டாள். அவள் அழுததெல்லாம் வீண். நிஜமாகவே கடைக்காரர் வேலைக்கு வைத்துக் கொள்ள மறுத்துக் கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட்டார். 

அன்று இரவு இரண்டு கிழங்களும் வெம்பட்டினி கிடந் தன. கிழவி அழுத கண்ணீரும் சிந்திய மூக்குமாயிருந்தாள். வெள்ளையன் மட்டும் பெரிய தைரியசாலி போல் அடிக்கொருதரம் இருமுவதும் சளியைத் துப் புவதுமாய் இரவைப் போக்கினான். 

காலையில் கூவுகின்ற கோழிகள் வழக்கமாய்க் கூவினா லும், கிழவி மனதில் ஒரு நம்பிக்கையை ஊட்டின அந்தக் கூவல்கள். எழுந்து போய் ரோடு முனையில் நின்று கொண்டு கீழக்கரைக்குப் போகும் சாலையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பக்கத்திலேயே அதிகமாகப் பணம் புழங்குமிடம் கீழக்கரை தான். அங்கேயுள்ள முஸ்லீம் பணக்காரர்களுக்கு இந்தச் சாலை வழியாகத்தினமும் கோழிகளை வாங்கிக் கொண்டு செல்லும் வியாபாரிகள் செல்வார்கள். 

அவர்களிடம் கோழிகளை விற்றால் நல்ல விலைக்குப் போகும் என்று நினைத்து வியாபாரியைத் தேடியே அவள் நின்று கொண்டிருந்தாள். கடைசியாக ஒரு வியாபாரியோடு அவள் சேரிக்குள் நுழையும் பொழுது நன்றாக விடிந்து விட்டது. 

 கிழவி கோழி வியாபாரியோடுதான் வருவாள் என்பதை உள்ளே படுத்திருந்த கிழவன் அறிந்து கொண்டான். கிழவி எல்லாக் கோழிகளையும் விலைக்கு விற்றுவிடப் போகிறாள் என்று தெரிந்து விட்டது அவனுக்கு. மெல்லப் படுக்கையிலிருந்து எழுந்து நகர்ந்து நகர்ந்து போய் அந்தக் கூடையைக் கிளப்பினான். அவன் எதிர்பார்த்தபடியே வெடலைக் குஞ்சு மட்டும் இறக்கையைப் படபடவென்று அடித்துக் கொண்டு வெளியே ஓடியது. இரண்டு கோழிகளும் பதுங்கிப் பதுங்கி வெளியே வருவதற்குள் அவைகளை உள்ளே தள்ளிக் கூடையை மூடிவிட்டு வந்து படுத்துக் கொண்டான். 

கிழவி வியாபாரியோடு சேரிக்குள் நுழையும் போதே வெடலை வெளியே வந்து மேய்வதைப் பார்த்து விட்டாள். வெடலையைப் பிடிக்க அவளும் வியாபாரி யும் படாதபாடு பட்டார்கள். கடைசியாக மற்றக் கோழிகளைக் கிழவன் எங்கே விட்டான் என்பதை அறிந்து கொள்ள குடிசைக்குள் வந்தவளுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. 

இரண்டு கோழிகளும் கூடைக்குள்ளேயே கிடப்பதைப் பார்த்து விட்டுக் கேட்டாள். 

“இது என்ன மூடினது மூடின்படி இருக்க மூஞ்சூறு எப்படி வெளியே போச்சு?” 

கிழவனுக்கு உள்ளுக்குள் உதைப்பு இருந்தாலும் அலட்சியமாகச் சொன்னான் “சனியன் படபட வென்று அடிச்சுக்கிட்டு தூங்க விடலை. தொலைஞ்சு போன்னு நான் தான் வெளியே பத்தி விட்டேன்.” 

அப்புறம் கிழவி பேசவில்லை. அதுவும் சரிதான், அப்புறம் ஒரு நாளைக்கு அது உதவும் என்று நினைத்துக் கொண்டாள். இரண்டு கோழிகளையும் விலை பேசிப் பிடித்துக் கொடுத்து விட்டு நார்ப்பெட்டியும் முறமுமாய் வெளியே புறப்பட்டாள். 

கிழவன் புரிந்து கொண்டான். கிழவி வெளியே கிளம்புகிறாள். அரிசி வாங்கிக் கொண்டு வருவாள்; யாரிடமாவது வேலையும் கேட்டு அதையும் பார்ப்பாள். இன்று அரிசி வருவதற்குள் குஞ்சை அடித்துப் போட்டு விட வேண்டுமென்று நினைத்தான். அந்த நினைவு வந்த மாத்திரத்தில் அவன் வேறு ஆளாகி விட்டான். நெஞ்செல்லாம் எச்சில் வழிந்தோடியது. மெல்ல நகர்ந்து வந்து வெடலைக்குக் குரல் கொடுத்தான். 

குடிசைக்கு வெளியே கிடந்த கற்களைப் பொறுக்கி வைத்துக் கொண்டான். வெகு நேரம் குரல் கொடுத் தும் வரவில்லை. கடைசியாக அதுவந்தது. எதையோ கொத்திக் கொண்டும் இங்கும் அங்கும் எதையோ கார்வார் செய்வது போலவும் வந்தது. கிழவனுக்கு வேகம் வந்து விட்டது. வலது கையில் வாதமில்லை. கற்களை எடுத்துக் குறி பார்த்தான். ஒன்று இரண்டென்று கற்கள் சிதறின. குறி தப்பிக் கொண்டேயிருந்தது. அவனுக்குப் பதட்டம் அதிகமாகி விட்டது. சற்றுப் பதறினான். நல்ல வேளை, அவன் தன் வீட்டுக் குஞ்சைக் குறிபார்க்கும் இந்தக் காட்சியைக் காணச் சுற்றிலும் யாருமில்லை, 

நன்றாகச் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுக் கடைசிக் கல்லைத் தன் பலங்கொண்ட மட்டும் வேகமாக வீசினான். வீசினவன் விழுந்தான், வேகத்தோடு உயிரையும் அப்படி வீசியிருக்கக் கூடாது. 

ஊர் கூடியது. கிழவி மாரில் அடித்துக் கொண்டு புலம்பினாள். நீட்ட நீட்டமாய் பச்சைக் கம்புகள் வந்தன. கிழவனைப் பாடையிலேற்றி நான்கு பேர் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். ஒரு வயதான ஆள் சொன்னார்; 

“இது என்ன மடத்தனமாயிருக்கு? சேரியிலே மத்தவ எல்லாம் இருக்கிறதா கிழவனோடேயே போறதா? சனிக்கிழமை செத்தவன் தனியாப் போவானா? யாரைக் காவு கொடுக்கப் போறீக? ஆராயிட்ட கேட்டு அவ வீட்ல சின்ன வெடலைக் குஞ்சைப் பிடிச்சுக் கட்டுங்கடா பாடையிலே” 

அங்கங்கே தேடி ஒரு வழியாக அந்த வெடலைக் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள். ஒருவர் அதை வாங்கிக் கழுத்தைப் பிடித்துக் கொண்டு ஒருமுறை சுற்றி விட்டார். சொடக் என்று ஒரு சப்தம் எல்லார் காதிலும் விழுந்தது. அப்புறம் அவர்கள் பார்த்ததுஒரு பாடையில் அவர்களுக்குத் தெரிந்த வாத நோயால் செத்துப் போன வெள்ளைக் கிழவன் பிணத்தையும் பிணத்தின் காலடியிலிருந்து ஒரு அரைஅடி தூரத்திலேயே அவனைப் போல் பிணமான வெடலைக் குஞ்சு ஒன்று தலைகீழாகத் தொங்கிக் கொண்டு சேரியின் தெற்கு மூலையை அடைந்ததையும் தான். 

– சாசனம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1991, அன்னம் பி.லிட், சிவகங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *