சத்திய சோதனை




(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘உன் கோத்திரம் என்ன என்று உன் தாயிடம் கேட்டுவா’ என்று குரு அனுப்பி வைத்ததும், ‘மகனே, உன் குலம் கோத் திரம் எதையும் நான் அறியேன். இளமையில் நான் பல இடங் களிலும் வேலை செய்து பிழைத்தபோது, உன்னைக் கருவுற்றேன். நீ பிறந்ததும், உனக்கு சத்யகாமன் என்று பெயரிட்டேன். ஜாபாலை மகன். இதையே உன் குருவிடம் சொல்லு’ என்று ஜாபாலை தன் மகனுக்கு அறிவித்தாள். அப்படியே அவன் முனிவரிடம் சொன்னான். சரி. இனி நீ ஜாபாலை சத்யாகமன் என அழைக்கப்படுவாய்’ என்று குரு தெரிவித்தார். வாழ்க்கை இருளில் ஆன்ம ஒளியோடு உண்மையைத் தேடித் தவமிருந்த முனிவர்கள் சத்தியத்தை கௌரவிக்கத் தவறியதேயில்லை.
சதானந்தத்துக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருந்தது. அவருடைய வாழ்க்கையில் மற்றும் ஒரு சோதனை!
சாதாரண மனிதனின் வாழ்விலும் எத்தனையோ சோதனை கள் குறுக்கிடத்தான் செய்கின்றன. சிரமங்களைச் சகித்துக் கொண்டு அவற்றில் வெற்றி பெறுவதோ, அல்லது அவற்றினால் அமுக்கி அழுத்தப்படுவதோ அவரவர் மனத்திண்மையைப் பொறுத்தது.
ச்தானந்தத்துக்கு மன உறுதி மிகுதியாக இருந்தது. வாழ்க்கை உலைக்களத்தில், அனுபவத் தீயில் காய்ந்து, சிந்தனை- பயிற்சி முதலிய சம்மட்டிகளினால் அடித்துத் தன்னையே ஒரு வாறு பதப்படுத்திக் கொண்டவர் அவர்.
அவ்வாறு அவர் தேர்ந்து தெளிவடைவதற்கு அவருடைய தாய் லட்சுமி அம்மாளும் முக்கிய காரணம்தான். அவளே அவருக்கு நல்லாசானாகவும், சிறந்த வழிகாட்டியாகவும், பக்க பலமாகவும் இருந்து வந்தாள். தன் மகன் நல்லவனாக வாழ வேண்டும், சான்றோனாகத் திகழவேண்டும், என்று அவள் ஆசைப் பட்டாள். பிள்ளைப்பிராயத்தில் சதானந்தம் பிழைகள் புரிந்த போது, பொய்கள் சொல்லத் துணிந்தபோது, அவள் அன்பினா லும் கண்டிப்புகளினாலும் திருத்தி, நல்வழிப்படுத்தத் தவறியதே யில்லை.
பொய் சொல்லக் கூடாது, எப்பொழுதும் சத்தியத்தையே கடைப்பிடிக்க வேண்டும் என்று அவள் தன் மகனுக்கு வற் புறுத்தி வந்தாள். நீதிக் கதைகளையும், பெரியோரின் வரலாறு களையும் அவள் அவனுக்கு எடுத்துச் சொல்லி, உண்மையின் உயர்வை இளம் உள்ளத்தில் நன்கு பதியவைத்தாள். அவதார புருஷர்களும் அருள் ஞானிகளும் தான் உயர்ந்த கொள்கைகளைக் கையாள முடியும் என்று எண்ண வேண்டியதில்லை; மக்கள் மத்தி யில், அவர்களோடு கலந்து, அவர்களில் ஒருவராக வாழும் மனிதனும் சத்தியம், அன்பு, அகிம்சை முதலிய சிறந்த பண்பு களை நன்கு அனுஷ்டிக்க முடியும் என்று கூறி, அவள் காந்திஜீயை அடிக்கடி உதாரணமாகக் காட்டி வந்தாள்.
இதனால் எல்லாம் சதானந்தத்தின் உள்ளம் நன்கு பண்பட்டு வந்தது. என்றாலும், அவ்வப்போது சிறு சிறு சபலங்கள் அவரை வழி விலகத் தூண்டுவதும் உண்டு. மனிதன் பலவீனங்கள் உடையவன் தானே ?
பிறகு அவருடைய மனமே அவரைக் குறை கூறி, அமைதி யற்றுத் தவிக்கச்செய்யும். அவர் தன் பிழைக்காக உளமாற வருந்தி, உண்மையை அறிவித்துப் பரிகாரம் தேடிகொண்ட பின்னரே, இயல்பான அமைதியையும் மனமகிழ்ச்சியையும் அடைவார்.
பள்ளிப் பருவத்தில் சதானந்தம் செய்த குற்றம் ஒன்று என்றும் அவர் நினைவில் அழுத்தமாகப் பதிந்து கிடந்தது. அந் நாளையிலேயே, தாயின் உபதேசப்படி அவர் உண்மையை ஒப்புக் கொண்டு ஆவன செய்துவிட்ட போதிலும், அச் செயல் உறுத் தும் ஓர் அனுபவமாய் அவர் உள்ளத்தில் நிலைபெற்று நின்றது.
அப்போது சதானந்தத்துக்குப் பதிமூன்று வயது. அவன் படிப்பில் ஆர்வமும் ஆற்றலும் உடைய மாணவனாகத்தான் இருந்தான். ஆயினும், ஒரு பரீட்சையில் ஒரு பாடத்தில் கடுமை யான கேள்விகள் வரும் என்று அவனுக்குத் தெரிந்த போது, அவன் நேரிய வழியில் செல்லாமல், சுருக்கு வழியில் மிகுதியான மதிப்பெண்கள் பெற ஆசை கொண்டான். விடைகளை சாமர்த் தியமாக எழுதி எடுத்துச் சென்று, திறமையாகப் பார்த்தெழுதி, திருப்தி அடைந்தான். முடிவில், நல்ல மார்க்குகளும் பெற்று விட்டான்.
மிகப்பலர் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்தபோது, அவன் மிகுதியான மார்க்குகள் பெற்றுச் சிறப்பாக விளங்கு வதைக் கண்டு பலர் அவனைப் பாராட்டினார்கள். இயல்பாகவே அவன் திறமைசாலி என்பதையும், படிப்பில் அவன் காட்டும் ஊக்கத்தையும் உழைப்பையும் எல்லோரும் நன்கு அறிந்திருந்த தனால், யாரும் அவனை சந்தேகிக்கவில்லை.
பிறகு ஒரு நண்பனிடம் அவன் இதை விளையாட்டாகவும் பெருமையாகவும் சொல்லிக் கொண்டிருந்தது அவன் தாய் காதில் விழுந்தது. அவள் அவன் செய்தது குற்றம், அதை எண்ணிப் பெருமை கொள்வது தவறு என்று சுட்டிக் காட்டினாள். சத்தியத்தைப் பெரிதென மதித்த அவள் தன் மகனுக்கு இட்ட கட்டளை அவனுக்குக் கசப்பாகத் தான் இருந்தது. ஆனாலும் அவன் அதைச் செய்தே தீரவேண்டும்.
சதானந்தம் தயங்கித் தயங்கித் தன் ஆசிரியரை அணுகி னான்: தான் செய்த குற்றத்தையும், தாயின் கண்டிப்பையும், அவரிடம் ஒப்புக்கொண்டான். ‘நல்ல பையனான நீ இப்படி ஏமாற்றலாமா? உன் தவறுக்காக நீயே வருந்துவது சரி. இதைத் என்று தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்கவேண்டியது என் கடமை கூறி, அவர் அவனையும் அழைத்துக்கொண்டு போனார்.
தலைமை ஆசிரியரின் கண்டிப்பும் கடுமையான குணமும் பள்ளிக்கூடம் முழுவதும் பிரசித்தி பெற்றிருந்த விஷயம். அவர் முன் செல்கையிலேயே சதானந்தத்துக்கு உள்ளப் பதைபதைப் பும் உடல் நடுக்கமும் உண்டாயின. எனினும், ஒருவாறு உண் மையை ஒப்புக்கொண்டு, தன் தாயின் கருத்தையும் தெரிவித் தான். ‘என்னை மன்னியுங்கள். இனிமேல் நான் ஒருபோதும் இப்படிக் குற்றம் செய்யமாட்டேன்’ என்றும் சொன்னான்.
தலைமை ஆசிரியர் ‘ஊம்’ என்று உறுமினார். மௌனமாக அவனை நோக்கினார். அவர் என்ன தண்டனை தருவாரோ என்று அஞ்சி நின்றான் அவன்.
‘நீ செய்தது பெரிய தவறு. அதற்காக உன்னை பெயிலாக்க வேண்டும். இருந்தாலும், நீ உன் குற்றத்தை உணர்ந்து, உண் மையாகவே வருத்தப்படுகிறாய். உன் அம்மா நல்லவள், உன் தவறை எடுத்துக்காட்டி உன்னை நல்வழிப்படுத்தத் தயங்காதவள் என்று தெரிகிறது. அந்த அம்மாளுக்காகவும், நீ உன் தவறை எண்ணி வருந்துவதனாலும், இந்தத் தடவை உன்னை மன்னித்து விடுகிறேன். இனி இதுபோல் நடக்காதே!’ என்று கண்டிப்புக் குரலில் பேசினார் அவர்.
அன்றிலிருந்து சத்தியத்தின் மீது அவன் மிகுந்த பற்றுதல் கொண்டான்.
அதற்கு இப்போது ஒரு சோதனை வந்திருந்தது.
அன்பு, அகிம்சை, அறம் ஆகியவை மனிதருக்கு மாண்பு அளிக்கும். வாழ்க்கை இருளில் ஒளிதேடித் திரிந்து, மக்கள் அனைவருக்கும் வழிகாட்ட முன்வந்த உத்தமர்கள் புத்தர், ஏசு, வள்ளுவர் போன்ற அனைவரும் சத்தியத்தைச் சிறப் பித்துச் சொன்னார்கள்.
மனிதருள் உயர்ந்தோர் வகுத்துக் காட்டிய வழியில், கொள் கையில் உறுதியான பிடிப்புடன் வாழ்க்கை நடத்தத் துணிகிற சாதாரண மனிதரின் அன்றாட வாழ்வில் சிரமங்களும் தொல்லை களும் ஏற்படத்தான் செய்கின்றன. இதைச் சதானந்தம் நன்கு புரிந்துகொண்டார்.
ஆரம்ப நாட்களில், அவர் மனசில் இருந்திருக்கக்கூடிய சஞ் சலங்களும் சலனங்களும் அகன்று தெளிவு பிறப்பதற்கு அவரு டைய தாய் பெரிதும் உதவினாள்.
லட்சுமி அம்மாள் தன் வாழ்நாட்களில் வறண்ட கோடை வெயிலையே மிகுதியாக அனுபவித்திருந்தாள். எனினும் அவ ளுக்கு இயல்பாக ஏற்பட்டிருந்த தெய்வ பக்தியும், உயர் பண்பு களிடமுள்ள பற்றுதலும் அவளுக்கு மனநிறைவையும் அமைதியை யும் அளித்து வந்தன. உத்தமர்களின் வரலாறுகளையும், காந்திஜீ யின் சிந்தனைகளையும் அவள் தன் மகனுக்குச் சிறு பிராயம் முதலே கற்பித்து வந்தாள். அவனுடைய தந்தையின் விருப்பு வெறுப்பு கள் அவனிடம் படிந்துவிடலாகாது என அவள் கண்ணும் கருத்து மாகக் கவனித்தாள்.
சதானந்தத்தின் தந்தை மகாலிங்கம் நல்ல நிலையில் வாழ்ந்த வர் தான். ஏதோ ஒரு உத்தியோகமும் பார்த்து வந்தார். முரட்டுத்தனமும், அகங்காரமும், வாழ்க்கை இன்பங்களில் மித மிஞ்சிய நாட்டமும் கொண்டிருந்த அவர் கிடைத்த பணத்தை எல்லாம் கரியாக்கி வந்தார். சூதாட்டம், மதுக்குடி, மங்கையர் இன்பம் என்று அலைந்து திரிந்த அவர் சில சமயம், கண்டவர் அனைவரும் வெறுக்கத் தகுந்த விதத்தில், அருவருப்பாக நடந்து கொள்வது உண்டு.
சதானந்தத்துக்கு அத்தகைய நிகழ்ச்சிகள் எத்தனையோ தெரியும். அவற்றிலே ஒன்று, இப்போது நினைத்தால் கூட குமட் டல் வருகிற அளவுக்கு, அவன் உள்ளத்தில் அது உறைந்திருந்தது:
ஒருநாள் முன்னிரவு. அவன் திண்ணையில் ‘அரிக்கன் விளக்கு’ முன் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான். அவன் வீட்டின் முன்னே குதிரை வண்டி ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து அவன் அப்பா தான் இறங்கினார். அவர் நன்றாகக் குடித்திருந் தார் என்பதை அவருடைய தோற்றமும், உளறலும், தள்ளாட்ட நடையும் விளம்பரப்படுத்தின.
‘போடா…போடாங்கேன்…என்னடா ரூபா?’ என்று கத்தி னார். தொடர்ந்து சங்கீதம் என்ற நினைப்பில் ஊளையிட்டார்.
‘மேகம் திரண்டு வர்ருது
வெள்ளம் புர்ரண்டு வர்ருது
தண்ணி உருண்டு வர்ருது
தாகம் தணிஞ்சு வர்ரலே!’
தெருவில் வேடிக்கை பார்க்கும் கும்பல் கூடிவிட்டது. அவர் சில எட்டுகள் காலடி பெயர்த்து வைத்ததும், வாந்தி எடுத்தார். குடலைப் பிடுங்கும் நாற்றம்! சகிக்க முடியவில்லை சதானந்தத்துக்கு.
அவர் தள்ளாடி அதிலேயே விழுந்தார். பிரக்ஞை தவறி விட்டது. அநேகர் சேர்ந்து,அ அவரைத் தூக்கி, வீட்டினுள் எடுத்துச் சென்றார்கள். படுக்க வைத்தார்கள். வெளியே போனார்கள். இவருக்கு ஏன் இந்தக் கேடு ? கண்ணு மூக்கு தெரியாமல் குடிச்சிருக்காரு!’ என்று பல பல பேசி நடந்தார்கள். அதெல்லாம் சதானந்தம் காதில் விழுந்து, மனசில் தைத்தன. அவனுக்கு வெறுப்பு அதிகரித்தது.
அவன் தாய், தந்தையின் சட்டையை அகற்றி விட்டு, ஈரத் துணி கொண்டு அவர் உடம்பை சுத்தம் செய்தாள். மீண்டும் படுக்க வைத்தாள். அவர் கட்டையாகத்தான் கிடந்தார். அவனுக்கு அவன் அம்மா மீது மிகுந்த பரிவும் பாசமும் உண்டா யின.
அவன் சீக்கிரமே தூங்கிப்போனான். எவ்வளவு நேரம் சென் றிருக்கும் என்று தெரியாது. திடுக்கிட்டு எழுந்தான். காட்டுக் கூப்பாடும் சண்டையும் போல் ஒலிகள் அவன் காதில் பட்டு, அவனை எழுப்பி விட்டன. கவனித்தான். அவன் தந்தையின் குரல்தான். எவ்வளவு வெறித்தனமாக ஒலித்தது அது!
‘அப்படித்தான் குடிப்பேன். அது என் இஷ்டம். நீ யாருடீ என்னை அதிகாரம் பண்ண?’ இதையே அவர் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் அம்மாவை அடித்தது போல வும் தெரிந்தது. அவன் தாய்க்காக விம்மி விம்மி அழுதான். குடிவெறியால் மிருகமாக மாறிவிடும் தந்தையை வெறுத்தான்.
குடி, மனிதனை எவ்வளவு கேவலமாக ஆக்கிவிடுகிறது ! மது வின் உதவியால் மனிதன் எவ்வித இழிந்தவன் ஆகி விடுகிறான் ! இதை நன்கு உணர்வதற்கு அவனுக்கு நிறையவே வாய்ப்புகள் கிட்டின. அதனால்தான், மனிதன் மனிதனாக வாழவேண்டும் என விரும்பிய உத்தமர்கள் மதுக்குடியை வெறுத்து, அதை விலக்க வேண்டும் என்று சொன்னார்கள் ; அதனாலேயே காந்திஜீ யும் மது விலக்கைத் தீவிரமாக ஆதரித்தார் என்பதைச் சதானந் தம் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது.
அவன் தந்தை சீக்கிரமே செத்துப்போனார். அவர் சொத்து, பணம் எதுவும் விட்டுவைக்கவில்லை. அனைத்தையும் குடி, கூத்தி வகையராவில் தீர்த்துவிட்டுப் போயிருந்தார்.
பொருளாதார நோக்கிலும் மதுக்குடி மனிதரை நன்கு வாழ விடுவதில்லை. அது தனி நபர் வாழ்வையும், குடும்ப வாழ்வையும் சிதைத்துச் சீரழித்து விடுகிறது என்று கருதிய காந்திஜீயின் சிந்தனை உயர்வை சதானந்தம் அனுபவப்பூர்வமாக உணர்ந்து போற்றினார்.
குடியில் உல்லாசம் பெற விரும்பியவர்களுக்கு அவர் நல்லுரை கள் புகல்வது வழக்கம்.
அவருடைய நண்பர்களில் ஒருவர் ‘ஜாலியாகக் குடிப்பதை பெருமையாக மதித்து வந்தார். ஒரு சமயம் அவர் சதானந்தந் தைக் காண வருகையில் குடித்து விட்டு வந்தார்.
‘நண்பரே, குடிப்பது நல்லதல்ல: நீங்கள் ஏன் குடிக்கிறீகள்?’ என்று அமைதியோடு கேட்டார் சதானந்தம்.
‘அது என் இஷ்டம். அது எனக்கு சந்தோஷம் தருகிறது. நான் விரும்பும் இன்பங்களில் அதுவும் ஒன்று’ என்று நண்பர் வாதாடினார்.
சாதாரணமாகத் தொடங்கிய பேச்சு சூடான விவாத மாகத் திரிந்தது. ஒரு கட்டத்தில் நண்பரின் ஆத்திரம் அடக்க முடியாதது ஆயிற்று வாயை மூடு !’ என்று சொல்லி, அவர் சதானந்தத்தின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
சதானந்தம் மெலிந்தவரல்லர். கோழை இல்லை. எதிரே இருந்தவரை நையப் புடைக்கும் சக்தி அவரிடம் இருந்தது. ஆயினும் அந்த எண்ணம் அவருக்கு இல்லை. காந்திஜீயின் வரலாறும் மணி மொழிகளும் அவரை அமைதி நிறைந்த மனித னாக வளர்த்திருந்தன.
அவர் புன்னகை புரிந்தார். ‘நண்பரே, உமக்கு இன்பமும் சந்தோஷமும் உண்டாகும் என்றால், இந்தக் கன்னத்திலும் ஓங்கி அறைந்துகொள்ளலாம் ‘ என்று மறு கன்னத்தைக் காட்டினார் சதானந்தம்.
நண்பர் அதிர்ச்சியுற்றவர் போல் செயலிழந்தார். சதானந் தத்தின் அமைதி மலர்ந்த முகத்தையே சிறிது நேரம் பார்த் திருந்தார். பேசாது எழுந்து போனார்.
மறுநாள் அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. மன்னிப்புக் கோரி எழுதியிருந்தார். அறிவை இழக்கச் செய்யும் குடியை விட்டுவிட முயலுவேன் என்றும் அறிவித்திருந்தார் நண்பர்.
அப்பொழுதும் சதானந்தம் புன்னகை தான் புரிந்தார். பண்பட்டிருந்த அவர் உள்ளத்திலும் உளைச்சல் உண்டாக்கு வதாக இருந்தது அவருக்கு வந்திருந்த புதிய சோதனை.
3
சத்தியத்தைக் காப்பதற்காக அரசு துறந்து, நாட்டை இழந்து, மனைவியையும் மகனையும் அடிமைகளாக்கி விட்டு, சுடலை காத்து நின்ற மன்னன் அரிச்சந்திரன் தீயெழக் கண்டு ஓடிவந்து பார்த்த போது, தன் மனைவியே தங்கள் மகனின் உயிரற்ற உடலை எரிக்க முயல்வதை அறிந்தான். ஆயினும், கட்டணம் இல்லாமல் எரிமூட்டக் கூடாது என்று தடுத்தான். சத்தியம், தன்னைக் காதலிப்பவர்களை, வெகுவாகச் சோதனை செய்யும் இயல்புடையது.
சத்தியத்தை விடாது கைக்கொள்ள விரும்புகிற சாதாரண மனிதனும், வாழ்க்கையில் பல சோதனைகளையும் போராட்டங்களையும் அனுபவிக்கத்தான் வேண்டியிருக்கிறது. இதைச் சதானந்தம் உணராதவரில்லை,
அவருக்கு உறுதியான பலமாக இருந்து நல்வழி காட்டி வந்த தாய் லட்சுமி அம்மாள் இறந்து போன புறகு, அவர் தமது மனோ திடத்துடனும் கொள்கைப் பிடிப்புடனும்தான் முன்னே-ற வேண்டியிருந்தது. லட்சியப்பாதை-அது தனிநபர் தேர்ந்து கொண்டதாயினும், சமுதாயம் தனக்கென அமைத்துக் கொண்ட தாயினும், ஒரு நாட்டுக்கென்று தீர்மானிக்கப்பட்ட தாயினும்-கரடு முரடானதே, பண்படுத்தப்பட்ட வழவழப்பான சாலைவழி அல்ல என்பதை அவர் அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்வது வழக்கம்.
என்றாலும், வியாபார ரீதியில் செயல் புரிகிற இன்றைய மனிதர்கள் மத்தியில், பணத்தையும் பணம் சேர்க்கும் சுலப வழிகளையும் போற்றி வழிபடும் இந்த நாகரிக யுகத்தில், சத்தியத் தில் தீவிரமான பற்றுக் கொண்டு விட்ட சதானந்தம் எத்தனை யோ சங்கடங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருந்தது. சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் சகமனிதர்களும் அவரை, அவருடைய லாபத்துக்காக இல்லாது தங்களுடைய நன்மைக் காகப், பொய் சொல்லும்படி தூண்டியபோதும் அவர் தன்னம் பிக்கையோடும் மனஉறுதியோடும் மறுத்துவிட நேரிட்டது. அவ்வேளைகளில் அவருக்கு ஏற்பட்ட இடைஞ்சல்கள் பல:
ஒரு நிகழ்ச்சியை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். அவர் ஒரு பெரிய வீட்டின் சிறு பகுதியில் குடியிருந்தார். நாற்பது ரூபாய் வாடகை. ஒரு சமயம் வீட்டுச் சொந்தக் காரர் அவரிடம் சொன்னார்—‘‘வரி விதிக்கிறவர்கள் வந்து கேட் பார்கள். நீங்கள் எங்களுடைய உறவினர்கள் என்றும், வாடகை எதுவும் கிடையாது என்றும் சொல்லுங்கள் என்று” சதானந்தம் அதற்கு இசையவில்லை. நான் தான் வாடகை கொடுத்து வருகிறேனே ; நான் ஏன் பொய் சொல்ல வேண்டும் என்றார். உள்ளதைச் சொன்னால் அதிகமான வரி விதித்து விடுவார்கள்: எனக்கு ஒரு உதவியாக இதைச் செய்யுங்கள் என்று கோரினார் வீட்டுக்காரர். சதானந்தம் பிடிவாதமாக மறுக்கவும், போகிறது; குடக்கூலி பத்து ரூபாய் என்று சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார் அவர். நான் யாருக்காகவும் பொய் சொல்ல முடியாது; உள்ளதை உள்ள படியே சொல்லுவேன். பத்துரூபாய் தான் வாடகை என்று நான் சொல்ல வேண்டுமானால், நீங்கள் பத்து ரூபாய் மட்டுமே வாங்கிக்கொள்ள வேண்டும் என்று வாதாடினார். வீட்டுக்கார ருக்கும் அவருக்கும் தகராறு முற்றியது.
சதானந்தத்துக்குக் கல்யாணமாகி ஒரு வருஷம் தான் ஆகி யிருந்தது. அவர் தம் மனைவியையும் தமது வழியில் பழக்கு வதற்கு அரும்பாடு பட்டு வந்தார். இச் சந்தர்ப்பத்திலும் அவள் தன் சுபாவப்படி, ‘நீங்கள் வேண்டுமானால் அப்படிச் சொல்ல வேண்டாம். ஒன்றுமே பேசாமல் இருந்து விடுங்கள், நான் சொல்கிறேன். இதனால் நமக்கு என்ன கஷ்டம்?’ என்றாள்.
சதானந்தம் அவளுக்காக, அவளது அறியாமைக்காக. இரக்கப்பட்டார்: தமது கொள்கையில் விடாப்பிடியாக இருந் தார். வீட்டுக்காரர் ஆத்திரம் கொண்டு, வீட்டை உடனடி யாகக் காலிசெய்து விடவேண்டும் என்று கட்டளையிட்டார்.
அவருடைய மிரட்டலோ, மனைவியின் வேண்டுதலோ, சதானந்தத்தின் உறுதியைத் தளர்வுறும்படி செய்ய இயலவில்லை. அவர் தீவிர முயற்சி செய்து, ஒரு நண்பரின் துணையோடு, சிறிது தூரத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் குடிசை கட்டிக்கொண்டு, வீட்டைக் காலி செய்துவிட்டார்.
அவர் மனைவி பாக்கியம் அதற்காக அடிக்கடி அவரைக் குறை கூறி வந்தாள். இதர பல விஷயங்களிலும் அவள் முணுமுணுத்து முரண்டுவதும் உண்டு. ஆயினும், சதானந்தம் அன்போடும் பிரியத்தோடும் பொறுமையோடும் அவளுடன் பழகி அவளைத் தனக்கு ஏற்ற துணைவியாக மாற்றிக்கொண்டார்.
அவ்வப்போது சிறு சிறு பிணக்குகளும் குறைபாடுகளும் தலை காட்டாது போவதில்லை. குழந்தைகள் பிறந்து, குடும்பம் பெரி தான பின்னர் இவ்வித நெருக்கடிகளுக்குக் குறைவே கிடையாது.
ஆனாலும், சதானந்தம் மனம் சோர்வதே கிடையாது. உயர் கொள்கைகளிலிருந்து நழுவியதும் இல்லை.
அவர் வாழ்க்கையில் எதிர்ப்பட்ட பலப்பலச் சோதனை களிலும், இப்போது தலையெடுத்து அவருக்குப் பெரும் மன உளைச்சல் தந்துகொண்டிருந்தது தான் மகாப்பெரியது, கடுமை யானது என்று சதானந்தத்துக்குத் தோன்றியது:
4
‘கடவுள் சத்திய மயம் ‘ (GOD IS TRUTH) என்று எழுதி வந்த காந்திஜீ, சத்தியத்தின் மாண்பையும் சக்தியையும் உணர்ந்து கொண்ட பிறகு, ‘சத்தியமே கடவுள் ’ (TRUTH IS GOD) என்று எழுத முற்பட்டார்.
வெகு நேர மனக்குழப்பத்துக்குப் பிறகு சதானந்தம் ஒரு முடிவுக்கு வந்தார்.
அப்படி ஒரு முடிவுக்கு வரவேண்டியிருப்பதற்காக அவர் வேதனைப்படத்தான் செய்தார். இருந்தாலும் வேறு வழியில்லை. அவருடைய மனசாட்சி அந்த முடிவைத்தான் அவருக்கு வகுத்துக் காட்டியது. அவருடைய சத்திய வேட்கை அப்படிச் செய்யவேண்டியது அவர் கடமை என உணர்த்தியது.
அவரை சேர்ந்தவர்களுக்கு அவருடைய தீர்மானமான முடிவு அளவிலா வருத்தமும் துக்கமும் உண்டாக்கும். அவருடைய மனைவி அழுது புலம்பி என்றென்றும் அவரைக் குறை கூறிக் கொண்டே யிருப்பாள். அவர் மகள் தன்னுடைய வாழ்வே இருண்டுவிட்டது என்று சாம்பிக் குவிந்துகிடப்பாள். தனது வாழ்வைப் பாழ்பண்ணியது தன் தந்தையேதான் என்று புழுங் கிக் குமைந்து, அவரை வெறுக்கத் தொடங்கிவிடுவாள். இதை எல்லாம் அவர் சிந்திக்காமலில்லை.
பூத்துக்குலுங்கி மகிழ்வும் மங்களமும் நிறைந்த குடும்பமாகத் திகழவேண்டிய வீட்டில் களங்கமும் இருளும் துயரமும் ஏக்கமும் படிந்துவிடுமே-அந்த நிலைக்கு ஆளாகக் கூடியவள் தன் அருமை மகள் மரகதமாக இருக்கிறாளே—என்ற எண்ணம்தான் சதானந் தத்தின் மனசை உளைய வைத்தது.
மரகதம் நன்றாக வாழவேண்டும் என்றுதான் அவர் ஆசைப் பட்டார். அவளை முத்துசாமிக்குத் திருமணம் செய்து, தனிக் குடித்தனத்துக்கு வேண்டிய வசதிகள் பலவும் அமைத்துக் கொடுத்தபோது, அவளுடைய எதிர்காலம் ஒளியும் வளமும் நிறைந்ததாகவே இருக்கும் என்று எண்ணினார். முத்துசாமி நல்ல இளைஞன், உழைக்கும் ஆர்வமும் ஆற்றலும் உடையவன் என்றே பலரும் அபிப்பிராயப்பட்டார்கள். அவருக்கும் அவ் வாறே தோன்றியது.
பல மாதங்கள் வரை மரகதத்தின் வாழ்க்கை குளுமையும் னிமையும் பெற்றே விளங்கியது. மெதுமெதுவாகத் தான் முத்துசாமியின் உண்மை உருவம் சதானந்தத்துக்குப் புலப் படலாயிற்று:
பஸ் கண்டக்டர் பணி புரிந்து வந்த முத்துசாமி ஒழுங்காக வேலை செய்வதே கிடையாது. அலுவலுக்குப் போகாமல் வேறு எங்கோ போய் சில நண்பர்களுடன் பணம் வைத்துச் சீட்டாடிப் பொழுது போக்கும் வழக்கம் உடையவன் அவன். உழைத்துப் பாடுபடுவதை விட, உடல் உழைப்பு இல்லாமல் உல்லாச முறைகளிலேயே எளிதில் விரைவில் பணம் பண்ணிவிட வேண்டும் எனும் ஆசைபற்றி அலையும் எத்தனையோ பேர்களில் அவனும் ஒருவன். அதனால் அவன் குதிரைப் பந்தயம், சூதாட்டம் முதலியவைகளில் மிகுந்த உற்சாகம் காட்டி வந்தான். இவற் றினும் மேலாக இன்னொரு விஷயம் சதானந்தம் உள்ளத்தில் தைத்து இரத்தம் கசிய வைத்தது.
அவன் திருட்டுச் சாராயம் காய்ச்சி, கள்ளத்தனமாக விற்பனை செய்யும் குழுவிலும் முக்கியமான பங்கு ஏற்றிருந்தான்.
இவ் உண்மைகளில் சில மரகதம் மூலம் தெரிய வந்தன• பிறகு அவர் விசாரித்து அறிய முயன்றபோது எல்லா விவரங்களும் அம்பலமாயின.
சதானந்தம் முத்துசாமியிடம் நல்லுரைகள் புகன்றார்: மரகதத்துக்கு போதித்து அவனை நல்வழிப்படுத்த முயன்றார். அவன் திருந்துகிறவனாய் தோன்றவில்லை. மேலும் மேலும் நாசப் பாதையிலேயே முன்னேறிக் கொண்டிருந்தான்.
அவர் இறுதி முறையாக அவனுக்கு நல்ல வார்த்தைகள் சொன்னார். அவன் அவரை அலட்சியமாக மதித்தான். ‘என் போக்கில் தலையிடுவதற்கு நீர் யார்? நான் எப்படியும் வாழ்க்கை நடத்துவேன். என் இஷ்டம்போல் என்ன வேண்டுமானாலும் செய்வேன். உம் மகள் கஷ்டப்படவில்லை. அவள் என்னோடு இருப்பது உமக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளை அழைத்துக் கொண்டு போய் உமது வீட்டோடு வைத்துக்கொள்ளும்!’ என்று திமிராகப் பேசினான். இப்போது தயாரிப்பதை விட அதிக அளவில் சாராயம் காய்ச்சி விற்கப் போவதாகப் பெருமை வேறு பேசினான்:
அவன் போக்கு சதானந்தத்துக்குக் கசப்பு அளித்தது. மனித உருவில் நடமாடும் கயவன், ‘மக்கட் பதடி’ அவன்; அவனைச் சீர் திருத்துவது சாத்தியமில்லை என்று அவருக்கு நிச்சயமாகப்பட்டு விட்டது. சத்திய மார்க்கத்தில் செல்லும் தம்முடைய கடமை என்ன என்று அவர் சிந்தித்தார். அதனால் எழக்கூடிய விளைவுகள் அவருக்கு மனவேதனை தந்தன. எனினும் அவர் தம் கடமையைச் செய்யத் துணிந்தார்? சமூகத் துரோகியாய், தீமையான செயல் களைப் புரிந்துகொண்டு கெக்கலி கொட்டித் திரியும் வீணனை சட் டத்தின் கைகளில் அகப்பட வைத்து உரிய தண்டனை பெறும்படி செய்யவேண்டியது தான் என்று அவர் தீர்மானித்தார். அப்படி அகப்படக் கூடியவன் தன் மகளின் கணவன் தான் என்பதனால் அவர் கலக்கம் அடையவில்லை.
உரிய முறைகளின்படி ஆவன செய்து விட்டு அமைதியாக இருந்தார் அவர்.
மறுநாள் போலீசார் வந்து, பல இடங்களையும் சோதனை செய்து, திருட்டுச் சாராயம் தயாரிக்கும் சாதனங்களைக் கைப் பற்றிக்கொண்டு, முத்துசாமியையும் மற்றும் சிலரையும் கைது செய்து சென்ற செய்தி அவருக்குக் கிடைத்தபோது சதானந்தம் புன்னகை புரிந்துகொண்டார்.
‘அப்பா, என் குடி கெட்டுதே! என் வீட்டில் விளக்கு அணைஞ்சு போச்சே!’ என்று அழுது அடித்துக்கொண்டு மரகதம் வந்து சேர்ந்தபோதும் அவர் அமைதியாகத்தான் இருந்தார்.
சத்தியத்தின் சந்நிதியில், கடுமையான சோதனையில் வெற்றி பெற்று நிற்க முடிந்ததற்காக சதானந்தம் ஆத்ம திருப்தியே கொண்டார்.
– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.