கோயில் திருவிழா




வசன கவிதை நடையில் விரியும் சிறுகதைகள்.

தொழில் துறையில் நிகழ்த்திய சாதனைகளுக்காக , விருதுகள் பல வாங்கிய நடுத்தர வயது மாது மிடுக்கான பெண் தொழில் அதிபர் அல்லி ராணி , தன்னுடைய அழகு நிறைந்த புதல்வி பதின்பருவ மங்கை தென்றல் உடன் பூவனம் கிராமத்துக்கு கோயில் திருவிழா காண வருகை தந்திருந்தார்.
பரபரப்புக்கும் மும்முரமான பணிகளுக்கும் இடையே , இந்தப் பயணம் , புதுப்பித்துக் கொள்ள அவருக்குப் பெரிதும் உதவியது. புதல்வி தென்றலுக்கோ தன்னுடைய அப்பா உடன் இல்லையே என்ற பரிதவிப்பு . அதனால் , இந்தப் புதிய உலகைக் காண்பதில் , கண்டு களிப்பதில் துளியும் இல்லை ஆர்வம். என்றுதான் முடியும் தாய் தந்தையின் பிணக்கு என்று அவள் நெஞ்சுள் எண்ண அலை மோதியது.
அன்றைய நாள் விழாக் கோலம் , கடைகள், ஆட்டம் பாட்டம் பார்த்து திரும்பினர் தாயும் மகளும். பிற்பகல் வேளை .
அவர்கள், கிராமத்தில் தங்கி இருந்த இடம் – அல்லி ராணியின் ஒப்பந்தக்கார ர் ஜெகதீசனின் சிறிய மாளிகை . அவர் விருந்தோம்பல் பணிகளை சிறப்பாக செய்திருந்தார்.
அல்லி ராணி, “அழகான முகத்தை ஏன் உம்மென்று வைத்திருக்கிறாய் பெண்ணரசி” என்று தென்றலிடம் கேட்டுக் கொண்டே மாளிகைக்குள் நுழைகையில், ஜெகதீசன் புன்னகையுடன் வாசலில் நின்றிருந்தார்.
“என்ன ஒப்பந்தம் . முகம் கொள்ளாத புன்னகையும் மலர்ச்சியும் ஏனோ?“
“எனக்கு ஒப்பந்தங்களை அள்ளி வழங்கும் அம்மா அவர்களே உங்கள் மனம் குளிர, என் ஆட்கள் ஒரு வேலை செய்திருக்கிறார்கள் “
“அதுதான் தடபுடலாக எங்களைக் கவனிக்கிறார்களே அதற்கு மேலும் என்ன?“
“இந்த மாளிகையின் மாடிக்குச் சென்று பாருங்கள் உங்களுக்குத் தெரிந்திடும்”
அல்லி ராணி, தென்றலுடன் படிகளில் பைய நடந்து சென்றார் .
அங்கு அவர் கண்டதோ அதிர்ச்சி தரும் காட்சி –
வேட்டி சட்டை அணிந்த மூத்த குடிமகன் ஒருவர், நாற்காலியில் கட்டப்பட்டு அமர்த்தப்பட்டிருந்தார் ..
ஒப்பந்தம் பேசினார் –
“அம்மா, இந்த வெள்ளை நிறத் தலையர் ராஜப்பா என்கிற ராஜசேகர் உங்களுடைய ஆலைகளில் ஒன்றின் ஆலைக்கழிவு , நீர் ஆதாரத்தில் கலப்பது பற்றி வீதி நாடகம் போடுகிறார் மேடை நாடகம் போடுகிறார். பரப்புரை செய்கிறார் .. நீங்கள் இவரை என்ன செய்யச் சொல்கிறீர்களோ செய்து விடுவார்கள் நம் ஆட்கள்”
அல்லி ராணியின் முகம் மாறியது. தென்றல் கட்டுண்டு கிடப்பவரின் கட்டுகளை அவிழ்த்து அவரது முதுகை தன்னுடைய தளிர்க்கரத்தால் வருடி ஆசுவாசப்படுத்தினாள். தண்ணீர் புட்டியை அவருடைய கரங்களில் வைத்தாள். அல்லி ராணி உரத்த குரலில் பேசினார் –
“என்ன செயல் செய்து விட்டீர்கள்? அதுவும் என் பேரில் எனக்காக.. இந்த அடாத செயலால், தகாத செயலால் நான் மனம் இன்புறுவேன் என்று உமக்கு யார் சொன்னார்கள்? அந்த அளவுக்குப் பண்பற்றவளா நான்? ஆலைக் கழிவு சிக்கலில் எங்கள் நிர்வாகத்தின் மீது தான் தவறு. அவ்வாறு நடக்காமல் இருக்க நான் ஆவண செய்ய உள்ளேன். இவரைக் கடத்தி துன்புறுத்தி.. சேச்சே .. ஒப்பந்தம் ஐயா இவர் யார் என்று அறிவீரா? இவர் என் அம்மான்.. மாமா என் அன்னையின் உடன்பிறந்த தம்பி …தாய் மாமன்”
கண் இமைக்கும் பொழுதுக்குள் ஒப்பந்தமும் அவருடைய ஆட்களும் மறைந்து விட்டனர் அங்கிருந்து.
– கூண்டை விட்டு வெளியே வந்த பறவை, வசன கவிதை நடையில் விரியும் சிறுகதைகள்.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |